privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

மோ(ச)டி!

-

modi-black-money“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியைக் குறைப்போம், ஊழலை ஒழிப்போம், கருப்புப் பணத்தை மீட்போம்” என நரேந்திர மோடி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும் மார்தட்டி வந்தார். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்கள்தான் என்ற பழமொழிக்கேற்ப, தேர்தல் சமயத்தில் மோடி ஆரவாரமாக அறிவித்த இந்தச் சவடால்கள் அனைத்தும் இப்பொழுது பல்லிளித்துவிட்டன.

ஆட்சியைப் பிடித்த மறுகணமே ரயில் கட்டண உயர்வை அறிவித்துப் பொதுமக்களைத் திடுக்கிட வைத்த மோடி, இதுவும் போதாதென்று இன்னொரு இடியை இப்பொழுது மக்களின் தலையில் இறக்கி வைத்திருக்கிறார். டீசல் விலையை சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இனி எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ள அனுமதித்திருக்கிறது அவரது அரசு. அதாவது, டீசலுக்கு இனி ஒரு பைசாகூட மானியம் கிடையாது என்பதுதான் இந்த இடியின் பொருள்.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ந்துவரும் நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு, உள்நாட்டில் டீசல் விலையைக் குறைத்த கையோடு, அதன் விலையைத் தீர்மானிக்கும் உரிமையை அதிகார வர்க்கத்திடம் ஒப்படைத்து, மக்களை முட்டாளாக்க முனைந்துள்ளது, மோடி அரசு. “மழை பெய்யும்பொழுது தெருவில் சாக்கடையைத் திறந்துவிடும் தந்திரம் இது” என இந்த முடிவைச் சாடியிருக்கும் இந்து நாளேடு, “அடுத்து உணவு மானிய வெட்டா?” என்ற பாரதூரமான கேள்வியை முன்வைத்திருக்கிறது.

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை நூறு நாட்களில் மீட்டுக் கொண்டு வருவோம்” எனச் சவால்விட்டார், ராஜ்நாத் சிங். “அப்படிக் கொண்டுவரப்படும் கருப்புப் பணத்திலிருந்து ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்ச ரூபாய் பணத்தைப் போடுவோம்” என்ற வாக்குறுதியையும் அள்ளிவீசியது, பா.ஜ.க.

மோடியின் நூறு நாள் ஆட்சியில் ஒரு பைசா கருப்புப் பணம்கூட மீட்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, அவரது அரசு, “வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்க முடியாது. அப்படி அறிவிப்பதை இந்திய அரசு பல்வேறு நாடுகளோடு செய்து கொண்டுள்ள இரட்டை வரி தடுப்பு ஒப்பந்தம் தடுக்கிறது” எனக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது.

“கருப்புப் பணத்தை மீட்பதற்கு ஏற்ப சட்டத் திருத்தங்களைக்கூட எனது அரசு மேற்கொள்ளும்” என நாடாளுமன்றத்தில் சவடால் அடித்தவர் மோடி. இரட்டை வரி தடுப்பு ஒப்பந்தத்தில் திருத்தங்களைச் செய்து கருப்புப் பண கும்பலின் பெயர்களை வெளியிட முடியாமல் அவரைத் தடுப்பது எது? 10,000 கோடி ரூபாய் கருப்புப் பணத்தைக் கொட்டி அவரைப் பிரதமர் நாற்காலியில் அமரவைத்த கார்ப்பரேட் கும்பலா, வெறும் காகிதச் சட்டமா?

“தம்மிடமுள்ள கருப்புப் பண பேர்வழிகளின் பட்டியலில் உள்ள பெயர்களைச் சட்டப்படி ஆராயாமல் வெளியிடுவது அவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாகும்” என்று கேவலமான முறையில் வாதாடியுள்ள மோடி அரசு, “கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டால் சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள் இந்தியாவின் ரேட்டிங்கைக் குறைத்துவிடும். அதனால் கருப்புப் பண பேர்வழிகளின் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்றத்தின் உத்தரவை மாற்ற வேண்டும்” எனக் கோரியிருந்த மோடி அரசு, இப்பொழுது தன்னை யோக்கியவானாகக் காட்டிக்கொள்ளும் தந்திரத்தோடு 700-க்கும் மேற்பட்ட பேர்களைக் கொண்ட பட்டியலிலிருந்து மூன்று பேரின் பெயரை மட்டும் உச்சநீதி மன்றத்திடம் தெரிவித்திருக்கிறது. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத வீரம்தான் இது! மோடி, காங்கிரசை விஞ்சிய கயவாளி மட்டுமல்ல; அப்பாவி ரசிகனின் தலையைத் தடவ பஞ்ச் டயலாக்குகளை எடுத்துவிடும் விஜய், அஜித் போன்ற சினிமா கழிசடைகளைவிடக் கேவலமான பிறவி என்பதை பா.ஜ.க. அரசு அடித்துள்ள இந்த பல்டி எடுத்துக்காட்டவில்லையா?
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014
_______________________________

  1. ஊழல் புரையோடிப்போன நாடு, மேல் மட்டத்திலிருந்து அடிமட்டம் வரைக்கும் திருடர்கள், பணபலத்தால் எதையும் சாதிக்க முடிகின்ற நிலை, அயோக்கியனை பாதுகாக்கும் ஓட்டைகள் நிறைந்த சட்டம், அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கும் கறுப்புப்பண முதலாளிகள், இந்த லட்சணத்தில் யாருடைய பணத்தை யார் காட்டிக்கொடுப்பார்கள் ? அப்படியே தெரிந்தாலும் என்ன சாதிக்க முடியும் ? கருப்புப்பண பதுக்கல் பெருச்சளிகளுக்கு எதிராக யாராலும் ஒரு துரும்பை கூட கிள்ளி போட முடியாது. வழக்கம் போல எழைகள் மிகவும் ஏழைகளாகி நடுத்தெருவுக்கு வருவார்கள், பணமுள்ளவன் பெருக்கி மேலும் பணக்காரனாவான், கறுப்பு பணத்தையும் பதுக்குவான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க