privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஎபோலா வைரசால் வேட்டையாடப்படும் ஆப்ரிக்கா !

எபோலா வைரசால் வேட்டையாடப்படும் ஆப்ரிக்கா !

-

ப்பிரிக்க நாடுகளை ஏகாதிபத்திய சுரண்டலும், அதன் காரணமாக வறுமையும், உள்நாட்டு போர்களும் ஒரு புறம் வதைத்துக் கொண்டிருக்க, மறுபுறம் கொடிய ஆட்கொல்லி நோய்கள் கொத்துக் கொத்தாக மக்களை கொன்றழித்துக் கொண்டிருக்கின்றன.

எபோலா என்னும் கொடிய உயிர்க்கொல்லி இரத்த ஒழுக்கு தொற்று நோய் டிசம்பர் 2013 முதல் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின்படி கினியா, சியரா லியோன், லைபீரியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இன்று வரை சுமார் 12,008 பேர் எபோலாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5,078 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

லைபீரியா - புதைக்கும் குழு
லைபீரிய அரசின் சுகாதரத்துறை குழு ஒன்று எபோலாவால் கொல்லப்பட்டவர்களின் உடல்களை எரிக்கும் காட்சி (ஆகஸ்ட் 22, 2014)

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான டாக்டர்களை கொண்டிருந்த நாடுகளில் சுகாதார ஊழியர்களும் கூட எபோலா, லஸ்ஸா போன்ற வைரஸ்களால் கொல்லப்படுவதன் மூலம், கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் எபோலாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளனர்.

எபோலா மட்டுமின்றி லஸ்ஸா, லுஜோ, மஞ்சள் காய்ச்சல், ஹண்டா போன்ற பல்வேறு வகையான வைரஸ்கள், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ரத்த ஒழுக்கு நோயை உருவாக்குகின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் எபோலாவைப் போலவே லஸ்ஸா வைரசும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மேற்காப்பிரிக்காவில் ஏழை நாடான சியரா லியோனில் லஸ்ஸா வைரசினால் ஆண்டுக்கு சுமார் 5,000 பேர் கொல்லப்படுகின்றனர். 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாட்டில் 150-க்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர். அதாவது 40,000 பேருக்கு 1 மருத்துவர். சீனாவில் 500 பேருக்கு 1 மருத்துவர், இந்தியாவில் 1,500 பேருக்கு 1 மருத்துவர், அமெரிக்காவில் 350 பேருக்கு 1 மருத்துவர் என்பதுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். லஸ்ஸா போன்ற வைரஸ், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் நோயாளிகளிடமிருந்து தொற்றும் அபாயத்தால் அங்கு சுகாதாரத்துறையில் வேலை செய்ய பலர் முன்வராத நிலை ஏற்பட்டுள்ளது.

ஷேக் உமர் கான் என்ற டாக்டர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக லஸ்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் பார்த்து காப்பாற்றி வருகிறார். மகேரா கிராமத்தின் ஒரு ஏழைக் குடும்பத்தில் பத்து குழந்தைகளில் ஒருவராக பிறந்த கான் சிறுவயது முதலே டாக்டராக விரும்பியிருக்கிறார். படித்து பட்டம் பெற்ற பின் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கெனெமாவின் அரசு மருத்துவமனையில் இரத்த ஒழுக்கு நோய் மருத்துவ நிபுணராக பணியாற்றி வந்தார்.

டாக்டர் ஷேக் உமர் கான்
டாக்டர் ஷேக் உமர் கான்

எபோலா நோய் தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து, டாக்டர் கான் எபோலா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்துள்ளார். லஸ்ஸா வைரஸ் தொற்று நோய்க்கு சிகிச்சையளித்து வந்த அனுபவமும் நோயாளிகள் மீதான அவருடைய அக்கறையும் சில நோயாளிகள் குணமடைந்து சாதாரண நிலைக்கு திரும்ப உதவியிருக்கின்றன. சியரா லியோன் அரசு அவரை தேசத்தின் நாயகனாக அறிவித்தது.

கட்டுப்பாட்டு வரம்புக்கு அப்பாற்பட்டு எபோலா பரவிக்கொண்டிருப்பதால், உலகெங்கும் எபோலா நோய் பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உலக அளவிலான மருத்துவ அவசரநிலையை அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து நோய் தொற்று மேற்கத்திய நாடுகளுக்கு பரவி விடக்கூடாது என்பது இதன் முதன்மையான நோக்கங்களில் ஒன்று. என்ன இருந்தாலும் மேற்குலகின் உயிர் ‘மகத்தானதல்லவா’! ஆனால் கிழக்கின் உயிரை வதைக்கும் மேற்குலகின் பொருளாதார ஆக்கிரமிப்பு வைரசை தடுத்து நிறுத்த இப்போது சோசலிச முகாம் ஏதும் இல்லை.

இக்கொடிய தொற்று நோய்கள் மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்க நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க (Quarantine) அங்கே போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. சியரா லியோன் மட்டுமின்றி லிபீரியாவில் அதிக பட்சமாக 2,704 பேர் இந்நோய் தாக்கி கொல்லப்பட்டுள்ளனர். கினியாவில் 981 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லிபீரியாவின் தலைநகரிலேயே கூட பள்ளிகளின் வகுப்பறைகள் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளன என்பதையும், நாட்டின் மொத்த மக்கள் தொகையான 42 லட்சம் பேருக்கு 52 மருத்துவர்கள் (80,000 பேருக்கு 1 மருத்துவர்) மட்டுமே உள்ளனர் என்பதையும் கொண்டு அந்நாட்டின் சுகாதாரத்துறையின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

எபோலா தமது நாடுகளுக்கு பரவக்கூடாது என்ற அளவில் மட்டுமே பிற உலக நாடுகள் இப்பிரச்சனையைப் பார்க்கின்றன. பெயரளவில் மட்டுமே எபோலாவை எதிர்த்து போராடுவதற்காக மருத்துவ குழுக்களையும், உதவியையும் அனுப்பி வருகின்றன.

எபோலா போன்ற வைரஸ்களை உயிரியல் ஆயுதங்களாக பயன்படுத்தி பேரழிவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதால், அமெரிக்கா உயிரியல் ஆயுத முறியடிப்பு என்ற அளவில் மட்டுமே இப்பிரச்சினையை பார்க்கிறது. ஏற்கனவே சியரா லியோனில் லஸ்ஸா வைரசைக் கொண்டு அமெரிக்க இராணுவமும், பல்கலைக்கழகங்களும் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. எழவு வீட்டிலும் ஆதாயம் இல்லாமல் இல்லை!

எபோலா வைரஸ்
எபோலா வைரஸ் (மாதிரிப்படம்) – நன்றி : http://conorhearn.com/

எபோலா வைரஸ் ஒரு ஆர்.என்.ஏ வகை வைரஸ் ஆகும். 1976-ல் முதன்முதலில் ஆப்பிரிக்காவின் காங்கோவில் எபோலா நதிக் கரையில் இருந்து பரவிய ரத்த ஒழுக்கு நோயின் காரணியாக இந்த வைரஸ் கண்டறியப்பட்டதால் எபோலா என்று பெயர் சூட்டப்பட்டது. எபோலா வைரசில் ஐந்து வகைகள் இருக்கின்றன. இன்று வரை கிட்டத்தட்ட 42 முறை இந்நோய் பரவி பலரை பலிகொண்டுள்ளது.

பாக்டீரியா முதல் மனிதன் ஈறாக அனைத்து உயிர்களும் செல்களால் ஆனவை. ஒரு செல் என்பது, தன்னை நகலெடுத்து பல்கிப் பெருகுவதற்கும், பாரம்பரிய பண்புகளை சந்ததிகளுக்குக் கடத்துவதற்கும், அதாவது தன்னிசையாக இயங்குவதற்கு தேவையான அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு முழுமையான அமைப்பாகும். முதலில் ஒரு செல் உயிரி தோன்றி அதுவே பின்னர் பரிணாம வளர்ச்சியடைந்து பல்வேறு உயிர்களாக வளர்ச்சியடைந்திருக்கிறது.

செல்கள் உருவாவதற்கு முன்னர், முதலில் புரோட்டின்களும் நியூக்ளியோ அமில மூலக்கூறுகளும் இணைந்து உயிருள்ளவற்றிற்கும் உயிரற்றவற்றிற்கும் இடைப்பட்ட ஒரு அமைப்பு உருவானதாக என நவீன அறிவியலாளர்கள் நிரூபித்திருக்கின்றனர். இவ்வமைப்பை கொண்டவை தான் வைரஸ் எனப்படுவன.

வைரஸ்கள் என்பவை மரபுப் பண்புகளை கொண்ட ஒரே ஒரு டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ வை சுற்றி புரோட்டின் உறை சுற்றப்பட்ட எளிய அமைப்பாகும். இவை தனித்து இயங்க முடியாது, இவை பாக்டீரியாக்கள், தாவரங்கள், விலங்குகள் போனற பிற உயிர்களின் செல்களில் உட்புகுவதன் மூலம் மட்டுமே இயங்க முடியும். நமது மனித செல்லை விடவும், ஒரு செல் உயிரியான பாக்டீரியாவை விடவும் 100 மடங்கிற்கும் மேல் சிறியவையாக இருக்கும் வைரஸ்களை உயிருள்ளனவையாக தான் ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர். மரபியலின் படி ஆர்.என்.ஏ-வை மட்டும் கொண்டவை ஆர்.என்.ஏ வைரஸ், டி.என்.ஏ- வை மட்டும் கொண்டவை டி.என்.ஏ வைரஸ் என வகைப்படுத்தப்படுகின்றன.

மற்ற உயிரணுக்களுடன் தொடர்பு ஏற்படும் போது வைரஸ்கள் தமது டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ வை அந்த செல்லின் உட்செலுத்தி மரபணுவை மாற்றுகின்றன. பின்னர் அந்த செல்லில் இருக்கும் என்சைம்கள், அமினோ அமிலங்களையும், பிற மூலக்கூறுகளையும் பயன்படுத்திக் கொண்டு வைரசின் மரபணுக்கள் தம்மை பிரதியெடுத்துக்கொள்கின்றன. இதற்கான காலம் அடைகாக்கும் காலம் (Incubation Period) எனப்படுகிறது. இவ்வாறு பல்கிப்பெருகிய பிறகு அந்த செல்லை உடைத்துக் கொண்டு வெளியே வந்து மற்ற செல்களை தாக்குகின்றன. இவ்வகையில் உடல் முழுவதும் வைரஸ் தொற்று வேகமாக பரவுகிறது.

எபோலா வைரஸ் உள்ளமைப்பு
எபோலா வைரஸ் உள்ளமைப்பு (நன்றி : http://conorhearn.com/)

ஒவ்வொரு வைரசும் ஒரு குறிப்பிட்ட வகையிலான செல்களில் குடியேறி பல்கிப் பெருகுகின்றது. உதாரணமாக போலியோ வைரஸ் நரம்பு செல்களையும், எயிட்ஸ் (HIV) வைரஸ் நோயெதிர்ப்பு உயிரணுக்களான ரத்த வெள்ளை அணுக்களையும் தாக்குகின்றன.

நமது நோய் எதிர்ப்பு அமைப்பானது இரு அம்சங்களை, கட்டங்களைக் கொண்டது. முதலாவது உள்ளார்ந்த நோயெதிர்ப்பு (Innate Immune System). இது வெளியிலிருந்து வரும் பொதுவான நோய்க்கிருமிகள் மற்றும் உடலுக்கு ஒவ்வாத வெளி மூலக்கூறுகள் எதுவாயினும் அவற்றை தாக்கி அழிக்கின்றன. இரண்டாவது தகவமைத்துக் கொள்ளும் நோயெதிர்ப்பு (Adoptive Immune System). இது குறிப்பிட்ட நோய்க்கிருமிகள், வெளி மூலக்கூறுகளின் பண்புகளையும், அவற்றை எதிர்த்து போராடும் வழிமுறைகளையும் தனது நினைவகத்தில் வைத்துகொண்டு மேம்படுத்திக் கொள்ளும். ஆயினும் வைரஸ்களின் மரபணுக்கள் பிறழ்வு (Mutate) மூலம் தொடர்ந்து தம்மை தகவமைத்துக் கொள்வதால் நோயெதிர்ப்பு சக்தியையும் மீறி நமக்கு அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படுகிறது.

ஒன்றோடொன்று ஊடாடி இணைந்து செயலாற்றும் நோயெதிர்ப்பு அமைப்பின் முக்கிய முன்னணிப் படையணியாக இரத்தத்தில் உள்ள ஏழு வகையான இரத்த வெள்ளை அணுக்கள் செயலாற்றுகின்றன. இந்நோய்யெதிர்ப்பு செயல்பாடானது ஒரு மூலக்கூறு உடலுக்கு சொந்தமானதா (Self Molecule) அல்லது வெளியிலிருந்து வந்துள்ளதா என்பதை தீர்மானிப்பதிலிருந்து துவங்குகிறது. வைரஸ் அல்லது பாக்டீரியா நமது உடலை தாக்கும் போது அவற்றின் மேலுள்ள புரோட்டின்களை கொண்டு அது வெளியிலிருந்து வந்த தாக்குதல் என வகைபிரித்து இரத்த வெள்ளை அணுக்களுக்கு செய்தி அனுப்பப்படும். உடனடியாக அவை அந்த பாக்டீரியாவை அல்லது வைரஸ் தாக்குண்ட செல்களை கொன்றழிக்கும் வேலையை துவங்கி விடுகின்றன. நோயெதிர்ப்பு அமைப்பின் செல்கள், நோய்க் கிருமிகளையும், அவற்றால் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கும் சீர்செய்யும் நடவடிக்கைகளில் இறங்கும்போது அப்பகுதியில் அழற்சி ஏற்படும், உடல் வெப்பநிலை உயரும். இதைத் தான் நாம் காய்ச்சலாக உணர்கிறோம்.

மத மூடநம்பிக்கைகளால் பரவும் எபோலா
மத மூடநம்பிக்கைகளால் பரவும் எபோலா

எபோலா வைரஸ் உடலில் நுழைந்த உடன் முதலில் உடலில் நோய்க்கிருமிகளின் ஊடுறுவலுக்கு எதிரான படை அணியில் முதல் வரிசையில் இருக்கும் பலவகையான நோயெதிர்ப்பு உயிரணுக்களை குறிவைக்கிறது. பின்னர் இரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் பரவுகிறது. நோயெதிர்ப்பு அமைப்பை செயலிழக்க வைத்த பின் இரத்த நாளங்களை உள்ளிருந்தே அரித்து தின்கிறது. இதனால் இரத்த நாளங்களுக்குள் கட்டிகள் உருவாகின்றன. மேலும், அட்ரினலின் சுரப்பியையும் இந்த வைரஸ் தாக்குவதால் உடலின் ரத்த அழுத்தமும் பாதிக்கபடுகிறது.

அதன் பின் முதலில் சாதாரணக் காய்ச்சல் போல் ஆரம்பிக்கும் இந்நோய் படிப்படியாக தலைவலி, வாந்தி, மயக்கம், மூட்டுவலி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும். மேலும் மூச்சு விடுவதில் சிரமம், தசை வலி மற்றும் ரத்தப்போக்கு இருக்கும். சிலருக்கு வியர்வை நாளங்களில் இருந்து உடலின் அனைத்து துளைகளின் வழியாகவும், உடலினுள்ளும் ரத்தக் கசிவு ஏற்படலாம்.

எபோலா வைரஸ் உடலில் நுழைந்த இரண்டு முதல் 10 நாட்களுக்குப் பிறகுதான் அதன் அறிகுறிகளே தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு 21 நாட்கள் வரைகூட அறிகுறிகள் தெரியாமல் இருக்கலாம். பல்லடுக்கு இரத்த சோதனைகளின் மூலம் மட்டுமே இந்நோயை கண்டறிய முடியும். அதற்குள் இந்த வைரஸ் உடல்முழுவதும் பரவி அபாயகட்டத்தை எட்டியிருக்கும்.

பாதிக்கப்பட்டவர்களின் வியர்வை, உமிழ்நீர், சளி, இரத்தம் போன்ற உடல் திரவங்களின் மூலம் பரவுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடமிருந்து சுமார் 7 வாரங்கள் வரை எபோலா மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.  இதனால் இந்த நோயை கண்டறிவதும், கட்டுப்படுத்துவதும் கடினமாயிருக்கிறது. குறிப்பாக இதை சாத்தியப்படுத்தும் மருத்துவ கட்டமைப்பு வசதிகளும், குறைந்தபட்ச விழிப்புணர்வும் ஏழைகளின் கண்டமான ஆப்பிரிக்காவில் இல்லை.

டாக்டர் கான்
டாக்டர் ஷேக் உமர் கான்

நம்மூர் போல ஆப்பிரிக்காவிலும், இறந்தவர்களின் உடலை குளிப்பாட்டும் வழக்கம் இருப்பதால், எபோலாவினால் இறந்தவர்களின் உடலில் இருந்தும் எபோலா பரவியுள்ளது. மட்டுமின்றி மக்களின் அறியாமை மற்றும் வேறு வழியில்லை எனும் நிலைமை காரணமாக பாரம்பரிய நாட்டுப்புற மருத்தவர்களிடம் – நம்மூர் சிவராஜ் வைத்தியர் போல – சென்று மருத்துவம் பார்க்கின்றனர். இதுவும் எபோலா பரவுவதற்கு ஒரு காரணம்.

மற்ற வைரஸ்களைப் போலவே எபோலா வைரசும் பல்கி பெருகும் போது தன்னைத்தானே மாற்றிக் கொள்கிறது. சியரா லியோனில் 200-க்கும் மேற்பட்ட எபோலா பாதிப்படைந்தவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து எபோலா வைரசின் ஆர்.என்.ஏ-வை படியெடுக்கும்  பணி நடத்தப்பட்டது. எபோலா குறுகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளாக மாற்றமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்விலும் டாக்டர் கான் முக்கிய பங்காற்றியுள்ளார்.

டாக்டர் கான் சிகிச்சையளித்து வந்த கெனெமா மருத்துவமனையில் மனிதர்களை கொன்று தின்பதாக புரளி கிளம்பியதையடுத்து அம்மருத்துவமனை தாக்குதலுக்குள்ளானது. கானுடன் வேலை செய்த சுகாதார ஊழியர்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளானதையடுத்து யாரும் அவ்வேலைக்கு வராததால் அம்மருத்துவமனையில் இரத்த ஒழுக்கு நோய்ப் பிரிவையே மூடிவிடும் நிலைக்குள்ளானது.

இத்தனை இடர்ப்பாடுகளுக்கும் மத்தியில் பின்னரும் கான் தனது வேலையை தொடர்ந்து செய்து வந்துள்ளார். இத்தனைக்கும் அவர் வறட்டுக் கோட்பாட்டுவாதியல்ல, மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிரம்பிய கான் தனது வாழ்க்கை பணியை மிகவும் நேசிப்பதாக கூறியிருந்தார். எபோலா போன்ற நோய்கள் தம்மையும் தாக்கக் கூடும் என்று அவருக்கு நிச்சயம் தெரியும். அவரே அதை கூறியிமிருக்கிறார். ஆனால் தான் இந்த வேலையை விட்டு சென்றால் வேறு யார் வந்து இதை செய்வார்கள் என்று மருத்துவராக தொடர்ந்து தனது கடமையை செய்து வந்திருக்கிறார்.

யாரும் செய்யத் தயங்கும் வேலையை அர்ப்பணிப்புடன் செய்து வந்த டாக்டர் கானுக்கும் எபோலா தொற்று ஏற்பட்டு அவர் கடந்த ஜூலை மாதம், தனது 39-வது வயதில் மரணமடைந்தார். கான் மட்டுமின்றி செவிலியர், ஆய்வக உதவியாளர் என இந்த ஆய்வில் பணியாற்றிய ஐவர் எபோலாவினால் உயிரிழந்துள்ளனர்.

எபோலாவை எதிர்த்து போரிடும் சுகாதரத்துறை ஊழியர்கள்
எபோலாவை எதிர்த்து போரிடும் மருத்துவப் பணியாளர்கள்

எபோலா பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் சராசரியாக 70%. இன்று வரை எபோலா போன்ற இரத்த ஒழுக்கு ஆட்கொல்லி நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலக சுகாதார நிறுவனம் Zmapp என்ற பரிசோதனை மருந்தை எபோலாவை குணப்படுத்த பயன்படுத்தலாம் என்றும் அறிவித்தது. ஆனால், இந்த மருந்து டாக்டர் கானுக்கு கொடுக்கப்படவில்லை. பரிசோதனை மருந்து டாக்டர் கானுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியாததால் அவருக்கு அதை கொடுக்கவில்லை என அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். அவரது குடும்பத்தினர் இது குறித்து தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

மனிதகுலத்தின் இயற்கை பற்றிய அறிவு பல மடங்கு அதிகரித்தாலும், மிக எளிய அடிப்படையான எபோலா போன்ற நோய்களிலிருந்து கூட ஆப்பிரிக்க மக்களை பாதுகாப்பதைக் செய்ய முடியவில்லை. முதலாளித்துவ லாப வேட்டை தீர்மானிக்கும் திசையில் விஞ்ஞான பணிகள் திசை திருப்பி விடப்படுவதே எபோலாவின் கொலை வேட்டை ஆரம்பித்ததற்கும், தொடர்ந்து பரவுவதற்கும் காரணம்.

நமது சகமனிதர்கள் அடிப்படையான மருத்தவ வசதிகளும், வாழ்க்கை வசதிகளும் இல்லாமல் வாழும் போது நுகர்வுக் கலாச்சாரத்தின் மூலம் எண்ணிறந்த வசதிகள் அத்தியாவசியமானதாக கொட்டப்படுகின்றன. ஒரு ஹாலிவுட் படத்திற்கும், வீடியோ விளையாட்டிற்கும் செய்யப்படும் கிராபிக்ஸ் செலவுகளை வைத்து பல ஊர்களுக்கு தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகளைச் செய்ய முடியும். இதுவே அமெரிக்காவின் போர்த் தளவாடங்களின் மதிப்பீட்டில் முழு ஆப்பிரிக்க கண்டத்திற்கே வாழ்வளிக்க முடியும்.

சரியாகச் சொன்னால் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளங்கள்தான், மேற்குலகின் பளபளப்பிற்கும், அடாவடிக்கும் காரணம்.

–    மார்ட்டின்.

  1. யாரும் செய்யத் தயங்கும் வேலையை அர்ப்பணிப்புடன் செய்து வந்த டாக்டர் கானுக்கும் எபோலா தொற்று ஏற்பட்டு அவர் கடந்த ஜூலை மாதம், தனது 39-வது வயதில் மரணமடைந்தார்– அவருக்கு எனது இதய அஞ்சலி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க