privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஈரோடு மின்சார கட்டண கருத்து கூட்டத்தில் பெரும் கலகம்

ஈரோடு மின்சார கட்டண கருத்து கூட்டத்தில் பெரும் கலகம்

-

சென்னை, நெல்லையைத் தொடர்ந்து ஈரோட்டிலும் அம்பலப்பட்டது மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் ‘கருத்துக் கேட்புக் கூட்டம்’ எனும் நாடகம்!

“மொத்தத்தில், மின்சார ஒழுங்கு முறை ஆணைய கருத்துக் கேட்புக் கூட்டம் நம் அமைப்புகளின் பிரச்சாரக் கூட்டமாக மாறியிருந்தது. இனி வரும் கருத்துக் கேட்புக் கூட்டங்களுக்கு ஆணையம் பிரச்சாரம் செய்யவில்லையென்றாலும் நாம் பிரச்சாரம் செய்யலாமென தீர்மானித்துள்ளோம். மண்டப வாடகை, மைக்செட் செலவில்லாமல் பிரச்சாரம் செய்யவும் அதிகாரிகளை எதிர்க்கும் போர்க்குணத்தை மக்களிடம் பரப்பவும் வாய்ப்பாக அமையும் அல்லவா?”

இது சென்ற ஆண்டு (2013) திருச்சியில் நடந்த மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் கருத்துக் கேட்பு கூட்டம் பற்றி வினவில் வெளியான  கட்டுரையின் இறுதியில் நாம் தெரிவித்திருந்த கருத்து.

இதனால்தானோ என்னவோ இந்த ஆண்டு இந்த கருத்து கேட்பு கூட்டத்தை திருச்சியில் வைக்காமல் தவிர்த்துள்ளது ஆணையம். ஆனாலும் என்ன? எந்த ஊரில் வைத்தாலும் உழைக்கும் மக்களும் தோழமை அமைப்புகளும் இருக்கத்தானே செய்கின்றன. 31.10.2014 அன்று ஈரோட்டில் வைத்திருந்த கூட்டத்தை விளம்பரம் செய்து நடத்த தீர்மானித்தோம். ஈரோடு, கரூர், கோவை, நாமக்கல்,திருச்சி பகுதி தோழர்கள் இணைந்து கருத்து கேட்பு கூட்டத்தை ‘சிறப்பாக்க’ முடிவு செய்து களமிறங்கினோம். 350 சுவரொட்டிகள் மூலம் ஈரோடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சாரம் செய்தோம். 3000 பிரசுரங்கள் அச்சிட்டு பகுதி மக்கள், விசைத்தறி தொழிலாளர்கள், பேருந்து பயணிகள் மத்தியில் கருத்தைப் பரப்பியதுடன் கருத்து கேட்பு கூட்டத்திற்கு வந்து ஆணையத்தின் கார்ப்பரேட் ஆதரவு – மக்கள் விரோத போக்கை கண்டிக்க அழைத்திருந்தோம்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் - கருத்துக்கேட்பு கூட்டம்

முன்னதாக நமது நெல்லை மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களும், சென்னை பு.மா.இ.மு தோழர்களும் இந்த வேலையை சிறப்புற செய்து ஆணையத்திற்கு நெருக்கடி கொடுத்திருந்தனர். நமது புதிய ஜனநாயகம், வினவு தளத்தில் வந்த கட்டுரைகளுடன் தமிழ்நாடு மின்துறைப்பொறியாளர் அமைப்பின் தலைவர் திரு. சா.காந்தி அவர்கள் தற்போது தொகுத்துத் தந்த பிரசுரம் மற்றும் கட்டுரைகளும் நமக்கு கை கொடுத்ததன.

மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென மின்வாரியமே கோராத நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தன் முனைப்புடன் கட்டண உயர்வை அறிவித்து மக்களிடம் கருத்து கேட்டது. இணையத்தில் வெளியிட்டிருந்த இந்த கட்டண விவரத்தைப்பற்றி இணையத்தின் மூலம் கருத்து தெரிவிக்க அக்டோபர் 23-ம் தேதி வரை காலக்கெடு தந்து அதன் பின் நேரடியாக மக்களிடம் கருத்து பெறுவதற்காக மாநிலத்தில் 3 இடங்களில் மட்டும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது.

இணையத்தில் கட்டண விவரத்தைப் பார்க்கவும் இணைய வழியில் தங்கள் கருத்தைப் பதிவு செய்யவும் எவ்வளவு மக்கள் தயாராக இருக்கின்றனர் என்பது வாசகர்கள் அறியாததல்ல. மேலும், மாவட்டத்திற்கு ஒரு இடத்தில் கூட்டம் நடத்தினாலே அங்கு வந்து கருத்து தெரிவிக்க வசதியும் விழிப்புணர்வும் இல்லாத மக்களுக்கு 10 மாவட்டத்திற்கு ஒரு இடத்தில் கூட்டம் நடத்தினால் எத்தனை பேர் வந்து கருத்து தெரிவிப்பார்கள்? 10 ரூபாய்க்கு இலவச திட்டங்களை அறிவிக்க 30 ரூபாய் செலவில் விளம்பரம் செய்யும் அரசுகள் இதனால்தான் உரிய விளம்பரமே செய்யாமல் கூட்டத்தை நடத்தின. இவற்றிலிருந்தே இது கண்துடைப்பு நாடகம் என்பதையும் ஒரு சடங்குக்காக கூட்டம் நடத்திவிட்டு மக்களிடமிருந்து கருத்து கேட்டுத்தான்- மக்களின் ஒப்புதலுடன்தான் மின் கட்டணத்தை உயர்த்தினோம் என்று ஏய்க்கவே இந்த கூட்டங்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆனால், சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டது என்பார்களே அது இந்த ஆண்டு ஒழுங்கு முறை ஆணையத்தின் கூட்டங்களுக்கு அப்படியே பொருந்தும். சென்னை, நெல்லை, ஈரோடு என நடத்திய 3 கூட்டங்களிலும் தலையிட்டு ஆணையத்தின் மக்கள் விரோதத் திட்டத்தை நமது அமைப்புகள் அம்பலப்படுத்தின.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தனியார் மின் முதலாளிகளின் கொள்ளைக்கு ஆதரவாகவே இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது; அதற்கேற்பவே செயல்படுகிறது; அவ்வாறே செயல்பட்டுத் தீரும் என்பதை தமிழக மக்களுக்கு தெளிவாக உணர்த்தியது ம.க.இ.க மற்றும் தோழமை அமைப்பினரின் இந்த அம்பலப்படுத்தல். அது மட்டுமல்ல; ஆணைய உறுப்பினர்களின் வாயாலேயே அதை ஒத்துக்கொள்ளவும் வைத்தார்கள் எமது தோழர்கள். ஆம், சென்னையில் தோழரின் கேள்வியை நைச்சியமாக தவிர்த்து, நெல்லையில் பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடி, ஈரோட்டில் வரலாறு காணாத வகையில் இரவு 9 மணி வரை கூட்டத்தை நடத்தியும் ஜகா வாங்க முடியாமல் இறுதியில் உண்மையை ஒத்துக்கொண்டு கையெடுத்துக்கும்பிட்டு கதறியது இந்த ஆணையம்.

தோழர்கள் துவக்கத்திலேயே எழுப்பிய அர்த்தமுள்ள கேள்வி : “இந்த கூட்டத்தில் பெரும்பாலோர் கட்டணத்தை ஏற்றக் கூடாதென்று கூறினால் உயர்த்தாமல் விடப் போகிறீர்களா?” என்பதுதான். இந்த கூட்டங்களில் பேசிய யாரும் கட்டணத்தை ஏற்றிக்கொள்ளுங்கள் என்று கூறவில்லை. இருந்த போதும் மின் கட்டண உயர்வு முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்று என்பதால் மக்களின் கருத்து கட்டண உயர்வைத் தடுத்து நிறுத்தவில்லை. இந்த மாதம் 15-ம் தேதி முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டது.

ஆனால், ஆணையம் போன்ற அதிகார வர்க்க கும்பலிடம் கைதொழுது நின்று காரியம் சாதிக்கலாமென்ற மக்களின் அறியாமையை இந்த கூட்டங்களின் வாயிலாக நாம் தகர்த்தெறிந்துள்ளோம். ‘இவ்வாறுதான் பேச வேண்டும்’, ‘அதிகாரிகளின் மனம் கோணாமல் கோரிக்கை வைக்க வேண்டும்’ என்கிற கேடுகெட்ட சட்டவாத வரம்புகளை மீறியே ஆக வேண்டுமென மக்களுக்கு உணர்த்தியுள்ளோம். தோழர்கள் பேசியதற்காக ஆணையத்திடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டவர்கள் கூட இறுதி கட்டத்தில் தோழர்களுடன் சேர்ந்து கலகம் செய்த அரிய காட்சியை அரங்கேற்றினோம்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் - கருத்துக்கேட்பு கூட்டம்

மற்ற எல்லா இடங்களையும் விட அதிக எண்ணிக்கையில் ஈரோடு கூட்டத்திற்கு பொது மக்கள் கருத்து தெரிவிக்க திரண்டனர். கோவை மாவட்ட சிறு தொழில் முனைவோரும் ஈரோடு, பள்ளிப்பாளையம் விசைத்தறி உரிமையாளர்களும் உணர்வு பூர்வமாக பங்கெடுத்துக் கொண்டதுடன் உரிய புள்ளி விவரங்களுடன் ஆணையத்திடம் கேள்வியெழுப்பினர். தாங்கள் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் தொழிலாளர்கள் பலரையும் அழைத்து வந்திருந்தனர். விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கணிசமாக திரண்டு வந்திருந்தனர். அந்த வகையில் அரங்கம் நிரம்பி வழியும் அளவுக்கு நிறைந்திருந்தனர்.

காலையில் வந்த கூட்டம் குறைந்த போது மாலையில் மேலும் அதிகமான மக்கள் வந்து அரங்கை நிறைத்தனர். அந்த வகையில் சுமார் 1600 பேருக்கு மேல் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 130 பேர் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டு கருத்து தெரிவித்தனர். வழமையாக மாலைக்குள் முடியும் கூட்டம் இரவு 9 மணி வரை நடந்து முடிந்தது. அது மட்டுமல்ல, நெல்லையில் பதில் சொல்ல முடியாமல் திணறிய அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்ட ஆணைய அதிகாரிகள், பதில் சொல்லும் நிகழ்ச்சியையே கடைசியாக தள்ளிப் போட்டு விட்டனர். பெயர் பதிவு செய்திருந்த 130 பேரிடமும் கருத்து கேட்ட பின்னரே தங்கள் கருத்தைப் பேசுவதென மாற்றிக்கொண்டனர். ஆனாலும் பதில் கூறும் நெருக்கடியை தள்ளிப் போட முடிந்ததே தவிர, தவிர்க்க முடியவில்லை. மாறாக, ஏராளமானோர் ஆணையத்தின் யோக்கியதையை சந்தி சிரிக்க வைக்கவே இந்த நடைமுறை உதவியது. பேசிய பலரும் மக்களுக்கு விரோதமாகவும் முதலாளிகளுக்கு கைக்கூலிகளாகவும் செயல்படும் ஆணையத்தை வறுத்தெடுத்தனர்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் - கருத்துக்கேட்பு கூட்டம்

நமது தோழர்களுக்கு முன்னதாக பேசிய 25 பேரும், எல்லா விலைவாசியும் ஏறியுள்ள இன்றைய நிலையில் மின் கட்டணத்தை ஏற்றுவதும் தவிர்க்க முடியாததுதான். ஆனால், பார்த்து- கொஞ்சம், கொஞ்சமாக ஏற்றுங்கள்; இடி போல இறக்காமல் மெல்ல மெல்ல (வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல) ஏற்றுங்கள் ; எங்களுக்கு மட்டுமாவது ஏற்றாமல் விட்டு விடுங்கள்… என்றவாறு இறைஞ்சினர்.

அடுத்ததாகப் பேசிய கோவை பு.ஜ.தொ.மு தோழர் இராமசாமியோ, “மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடிய பெரியார் பிறந்த இந்த மண்ணில்தான் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தைக் குறைத்துவிடும் என்ற மூட நம்பிக்கை அதிகமாக உள்ளது. மற்ற இரு கருத்துக் கேட்பு கூட்டங்களை விட இங்குதான் மக்கள் எதிர்பார்ப்புடன் பெருமளவில் திரண்டுள்ளீர்கள். ஆனால், நாங்கள் மின் கட்டணத்தை குறையுங்கள் என பேச வரவில்லை.” என்று அதிரடியாகவே ஆரம்பித்தார்.

தோழர் விளவை ராமசாமி

“ஆணையம் ஏற்கனவே மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என திட்டமிட்டுக் கொண்டுதான் கூட்டத்தை நடத்துகிறது. நம்மை ஏமாற்றவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. நஷ்டம் என்று மக்கள் மேல் கட்டணத்தை சுமத்துகிறார்கள். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் தங்கள் சம்பளம் போன்ற அனைத்து சலுகைகளையும் குறைவில்லாமல் அனுபவித்து வருகின்றனர். நஷ்டம் ஏன் அடைந்தது என்று அதிகாரிகள் இங்கு தெளிவாக சொல்லவேண்டும். முறையான பதில் சொல்லாமல் இவர்களை இங்கிருந்து வெளியே விடக் கூடாது” என்றார். அது வரை பேசிய யாரையும் இடைமறிக்காத ஆணையம், தோழர் பேசிக் கொண்டிருந்த போது இடைமறித்து நிறுத்த முயன்றனர். ஆனால், மக்களோ “அவரைப் பேச விடு” என்று அதிகாரிகளுக்கெதிராக ஆவேசப்பட்டனர். வேறுவழியில்லாமல் அதிகாரிகள் அனுமதித்தனர்.

பிறகு பேசிய பலரும் மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்று பேசினர். இதில் போலி கம்யூனிஸ்ட் அமைப்புகளாகிய CPM, இந்திய மாதர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்றும் நஷ்டத்தை ஈடுகட்ட வேறு வழிகளில் முயற்சிக்கலாம் என்றும் ஆலோசனைகள் வழங்கினர். ஆனால் தனியாரிடம் அதிக விலைக்கு கொள்முதல் செய்ததும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் மின்சாரம் வழங்கியதும்தான் இந்த நட்டத்திற்குக் காரணம் என்ற உண்மையை வாய்தவறிக் கூட பேசவில்லை.

அடுத்தாக மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர் ஆனந்த், ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தீர்மானித்து விட்டு கருத்துக் கேட்பு என்று சொல்லி மக்களை ஏமாற்றும் ஆணையத்தின் செயலை கடும் ஆவேசத்துடன் கண்டித்தார். இவர்களை நம்பி நாம் இங்கு வருகிறோம், இவர்களோ நம்மை ஏமாற்றுகின்றனர். எனவே, இன்று இவர்களை ஓட ஓட விரட்டவேண்டும். அப்போதுதான் மக்களை ஏமாற்ற நினைக்கும் போது அவனவன் நினைத்துப் பார்ப்பான் என்றதும் அதிகாரிகள் முகத்தில் ஈயாடவில்லை.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் - கருத்துக்கேட்பு கூட்டம்

அடுத்ததாக பேசிய விவசாய சங்கத்தை சேர்ந்த ஒருவர் எனக்கு முன்னால் பேசியவர்கள் அதிகாரிகளை ஆத்திரமுட்டும் வகையில் பேசியிருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றார். உடனே மக்கள் தரப்பிலிருந்து, “ பேசியது சரிதான், நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டாம்” என்றனர்.

பிறகு பேசிய ஈரோடு பு.ஜா.தொ.மு தோழர். புஷ்பராஜ் கட்டண உயர்வால் விவசாயிகள், தொழிலாளர்கள் படும் பாதிப்பை பேசினார். இறுதியாக நஷ்டம் எப்பொழுது ஏற்பட்டது, எதனால் ஏற்பட்டது? என்று வினவினார். கூடுதலாக 1994 – 95 ம் ஆண்டு 347 கோடி உபரியாக மின்வாரியம் வைத்திருந்தது. ஆனால் ஆணையம் உருவாக்கப்பட்ட பிறகு 2007 – 2008 ல் 3512 கோடி நஷ்டம் எப்படி வந்தது என்றும் கேள்வியெழுப்பினார்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் - கருத்துக்கேட்பு கூட்டம்

அடுத்ததாகப் பேசிய மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் சாருவாகன் “1998-ல் துணைமின் உற்பத்தியாளர்களிடம் மின்சாரம் வாங்க யூனிட் ரூ.3.41 என்று விலை நிர்ணயித்து 13 ஆண்டுகாலம் நீடிக்கக் கூடிய ஒப்பந்தம் போடப்பட்டது. இது 2008ல் அவசரமாக ரத்து செய்யப்பட்டு, பிறகு அதே நிறுவனங்களிடம் யூனிட்டுக்கு ரூ. 7.91 என்று விலை நிர்ணயித்து 15 ஆண்டுகள் நீடிக்கும் படி ஒப்பந்தம் போட்டது ஏன்? இதனால் 700 கோடி அளவில் நஷ்டம் ஏற்படுத்தியது ஏன்? டாடா நிறுவனத்துடன் 2.41க்கு மின்சாரம் வாங்குவது என்று போட்ட ஒப்பந்த்தை மீறி இன்றுவரை கூடுதல் கட்டணம் கொடுத்து மின்சாரம் வாங்குவதால் 1000 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்படுத்தியது ஏன்?” என்று நஷ்டத்திற்கான காரணத்தை பட்டியலிட்டு கேள்வியெழுப்பினார்.

erode-electricity-meeting-10

இதனை மக்கள் கைதட்டி வரவேற்று ஆமோதித்தனர். அதிகாரிகளோ கூட்டத்தின் போக்கு கண்டு திகைத்தனர்.

பிறகு பேசிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் சேக்,

erode-electricity-meeting-11

“லாபம் வரும்போது, அதற்கு தாங்கள்தான் காரணம் என்று பெருமை பேசி லாபத்தில் இன்செண்டிவ்,போனஸ் என்று எடுத்து கொண்டு நன்றாக அனுபவித்த அதிகாரிகள், தன் திறமையின்மையால் நஷ்டம் உண்டாகும் போது அதை ஏன் மக்கள் தலையில் சுமத்த வேண்டும்? நியாயமாகப் பார்த்தால் இவர்களது சொத்தை பறிமுதல் செய்துதானே நஷ்டத்தை அடைக்க வேண்டும்? மேலும் தனியார் மின் உற்பத்தி முதலாளிகள் கொழுப்பதற்காக பொதுத்துறை நிறுவனத்தை திட்டமிட்டே அழித்து தேசத்திற்கே துரோகம் செய்யும் இவர்களை ஏன் தேச துரோக வழக்கில் கைது செய்யக் கூடாது?” என்றதும் கூடியிருந்த மக்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

அடுத்ததாக நாமக்கல் தோழர்.சத்தியா பேசும் போது, “மக்கள் இவர்களை நம்பி ஏமாந்தது போதும். இனி நாம் இவர்களை எதிர்த்துப் போராட அணிதிரள்வதன் மூலம்தான் எதையும் சாதிக்க முடியும்” என்றும், “ஆணையம் தனியாருக்கு சேவை செய்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது” என்றும் அம்பலப்படுத்தினார்.

erode-electricity-meeting-12

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர். ஓவியா பேசும் போது “ஒவ்வொரு முறையும் கூட்டம் நடத்துகிறார்கள், நாமும் சென்று எதிர்ப்பு தெரிவிக்கிறோம், ஆனால் கட்டணத்தை உயர்த்தி கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்கு அந்த தைரியம் எப்படி வந்தது? நாம் இவர்களை நம்பும் வரைதான் நம்மை ஏமாற்றுவார்கள், இவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்துகொண்டு விட்டால் இவர்களை அகற்றி விட்டு அந்த இடத்தில் நமக்கான நிர்வாகத்தை ஏற்படுத்தலாம்” என்றார்.

தோழர் ஓவியா

கோவை பு.மா.இ.மு தோழர் பாபு பேசிய போது இந்த மூன்று தெய்வமும் நம்மை ஏமாற்றுவதற்காகவே இங்கு வந்திருக்கிறார்கள், இவர்கள் தனியாருக்குதான் சேவை செய்வார்கள். நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய MP, MLA –க்களுக்கு கூட இவர்களை கேள்வி கேட்க அதிகாரம் இல்லை. இந்த தெய்வங்கள் எடுப்பதுதான் முடிவு. இவர்கள் கோவையின் சிறு தொழில்களை அழிக்க முடிவு செய்து விட்டார்கள்.. அதற்காகத்தான் இந்தக் கட்டண உயர்வு. இவர்களை நாம் இது போன்ற கூட்டங்களால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. இந்த கட்டமைப்பே தனியாருக்கானதுதான், நமக்கில்லை இதை நொறுக்கும் போது மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றார்.

erode-electricity-meeting-14

இறுதியாகப் பேசிய கரூர் தோழர், அதிகாரிகளும், ஆணையரும் எப்படி தனியாருக்காக சேவை செய்கிறார்கள் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இதுவரை காலமும் தன்னுடைய பொறுப்பு என்று கூறியவற்றையெல்லாம் தன்னால் கூட கட்டுப்படுத்த முடியாத ஆணையங்களிடம் ஒப்படைத்து தனது பொறுப்பை கைகழுவுகிறது. ஏற்கனவே அரசு நிறுவனம் BSNL அழிந்து இப்போது தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சேவை செய்யத் தொடங்கிவிட்டது. இதன் அடுத்த முயற்சிதான் மின்வாரிய நஷ்டம், கட்டண உயர்வு… என்பவை. இந்த அரசு முறைக்குள் நின்று இதற்குத் தீர்வு தேடுவது முட்டாள்தனம். இதற்கு வெளியிலிருந்து ஒரு புரட்சி மூலம்தான் தீர்வு காண முடியும் என்று முடித்தார்.

தோழர்களுக்கு இடையில் பேசிய அனைவரும் கூட கட்டண உயர்வை எதிர்த்துதான் கருத்தை பதிவு செய்தனர். கருத்து கேட்பு மாலை 7 மணிவரை நடந்தது. இது முடிந்ததும் பதிலளிக்க வந்த மின்வாரிய இயக்குநர் தங்களின் எதிர்கால திட்டம் பற்றியும் தாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம் என்ற வகையிலும் விளக்கமளித்துக் கொண்டு சென்றார்.

மக்களும் தோழர்களும் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் பேசியதால் இடை மறித்த தோழர்கள், “கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறுங்கள் தேவையில்லாதது எல்லாம் எதற்கு?” என்றனர். ஆனால், அவர் மீண்டும் நஷ்டத்திற்கான காரணத்தை சொல்லாமல் பேசவே தோழர்கள் மேடைக்கு அருகே சென்று மைக்கில், “நஷ்டத்திற்கான காரணம் என்ன? எப்பொழுதிலிருந்து நஷ்டம்? அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்” என்றனர்.

erode-electricity-meeting-16

ஏற்கனவே சென்னை, நெல்லையில் பதில் சொல்ல முடியாமல் திணறிய அதிகாரிகள் இந்த கூட்டத்திற்காக நிறைய குறிப்புகள் எடுத்து வந்திருந்தும் பதில் சொல்லத் திணறினர். பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் நிலக்கரியை வாங்கி இரயிலில் கொண்டு வந்ததே நட்டத்திற்குக் காரணம் என்றார். 7 ஆண்டுகளாக புதிதாக நாம் மின்உற்பத்தி செய்யவில்லை. தனியாரிடமிருந்தே மின்சாரம் வாங்கினோம் என்றார். இடைமறித்த தோழர்கள் 7 ஆண்டுகளாக ஏன் புதிதாக உற்பத்தி செய்யவில்லை? என்றதும் மக்கள் அனைவரும் பதில் சொல் என்று ஆவேசத்துடன் ஆர்ப்பரித்தனர். காவல்துறை இடையில் வந்து தோழர்களிடமும் மக்களிடமும் கெஞ்சி அமைதிப்படுத்தியது.

erode-electricity-meeting-17

கடைசிவரை மக்களின் கேள்விகளுக்கு பதிலே சொல்லவில்லை. இடையில் ஆணையர், மின்வாரிய இயக்குநரிடம் அதை ஏன் செய்யவில்லை? இதை ஏன் செய்தீர்கள் என்று சில கேள்விகளை எழுப்பி நாடகமாடினார். வாரிய அதிகாரியிடமிருந்து அப்போதும் பதில் இல்லை என்றதும் சரி ‘ரிட்டனாகக்’ கொடுங்கள் என்று சொல்லி நாடகத்தை அடுத்த காட்சிக்கு நகர்த்த முயன்றார். தோழர் சாருவாகன் இடைமறித்த போது அதிகாரிகள் தடுத்தனர். ஆனால் கூடியிருந்த மக்களோ, “அவரைப் பேசவிடு” என்றனர். “நம் கேள்விகளுக்கான பதிலை அதிகாரிகள் கூறமாட்டார்கள். நான் கூறுகிறேன்” என்று சொல்லி மின் வாரியத்தை ஒழித்துக் கட்ட அரசாங்கமும் அதிகார வர்க்கமும் மேற்கொண்டுள்ள சதிகளைப் பேசினார். அதிகாரிகள் எதுவும் செய்ய முடியாமல் பின்னால் நின்று புலம்பித்தள்ளினர்.

ஆணைய உறுப்பினர் ஒருவர், தான் இவற்றைக் குறித்துக் கொண்டதாகக்கூறி சமாதானப் படுத்த முயன்றார். அதன் பிறகும் தோழர்கள் கேள்வியெழுப்பி உங்கள் முடிவு என்ன என்ற பின், மற்றொரு ஆணைய உறுப்பினர், “1997-ல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட தனியார்மயம்- தாராளமயம்- உலகமயம் என்ற கொள்கைக்குப் பிறகே தனியார் துறை வளர்ந்தது. 15 வருடத்திற்கு பிறகு தற்போது பாதிப்பு தெரிந்தாலும் இதை எப்படி மாற்ற முடியும்? அதனால் இப்போது பேசிப் பயனில்லை. மேலும் இப்போது தொழிற்சாலைகள் பெருகி விட்டன. மின்சாரத்தின் தேவை அதிகமாகி உள்ளது” என்றார்.

“தங்கள் வாயாலேயே தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைதான் காரணம் என்று சொன்னதற்கு நன்றி” என்று தோழர்கள் கூறினர். உடனே சுதாரித்த ஆணைய உறுப்பினர், “நான் சாதாரண நபராகவே பேசினேன். பத்திரிக்கையில் எதுவும் போடாதீர்கள்” என கையெடுத்து கும்பிட்டார்.

அடுத்துப் பேசிய தோழர்கள் “பள்ளி, கல்லூரி மாணவர் நலனுக்காகத்தான் தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியதாக நீங்கள் கூறியது பொய். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கவே தனியாரிடம் மின்சாரம் வாங்குகீறிர்கள். அதில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டத்தான் இந்தக் கட்டண உயர்வு என்பதை நீங்களே உங்கள் வாயால் ஒத்துக்கொண்டீர்கள். இதுதான் மக்கள் உணர வேண்டியது” என்றார்.

erode-electricity-meeting-18

இதை மறுக்க முயன்ற ஆணையர், “29 கார்ப்பரேட் நிறுவனத்திற்கு மட்டும்தான் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. அது நாங்கள் எடுத்த முடிவில்லை. அரசு போட்ட ஒப்பந்தம். அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்” என்றார்.

இதைத்தான் காலையிலிருந்து எமது அமைப்புகளின் சார்பாக உணரவைக்க முயற்சித்தோம். அதிகாரிகள் தங்கள் வாயாலேயே ஒத்துக்கொண்டது நாங்களே எதிர்பார்க்காத்து. 1991-ல் உருவாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையும் காட் ஒப்பந்தமும்தான் இவர்களுக்கு முக்கியம். அதற்கு சேவை செய்யத்தான் இந்த ஆணையம். எனவே தனியார்மயத்தை ஒழிக்காமல் மின்கட்டண உயர்வைத் தடுக்க வேறு தீர்வில்லை என்று விளக்கினோம். கூடியிருந்த மக்கள் இதை கைதட்டி வரவேற்றனர். வேறு வழியில்லாமல் கூட்டம் முடிவதாக ஆணையம் அறிவித்தது.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்பது சட்டபடியே நம் நாட்டை தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு வழிவகுக்கும் ஒர் ஏற்பாடாகும். இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தவே ஒழுங்குமுறை ஆணையங்கள் கையில் அதிகாரத்தை ஒப்படைத்து விட்டு அரசாங்கம் தனது பொருப்பிலிருந்து நழுவிக் கொள்கிறது. பன்னாட்டு முதலாளிகளுக்கு ஏதுவாக சட்டங்களை மாற்றுகிறது. இந்த அமைப்பை வைத்துக்கொண்டு விலைவாசி உயர்வு உள்ளிட்ட எந்த வாழ்வாதார உரிமை பாதிக்கப்பட்டாலும் மக்களுக்கு தீர்வு கிட்டாது. ஏனென்றால் மக்கள் மீதான ஒடுக்குமுறை அனைத்தும் சட்டப் பூர்வமாகவேதான் அரங்கேறுகின்றன. எனவே, இந்த சட்டப்பூர்வ அமைப்புக்குள் நின்று இதற்கு தீர்வு தேடுவதில் அர்த்தமில்லை. இந்த கட்டமைப்பையே அடித்து நொறுக்குவதன் மூலமாக மட்டுமே, மக்கள் தங்களுக்கான சொந்த கட்டமைவை புத்தம் புதிதாக உருவாக்குவதன் மூலம் மட்டுமே மக்களுக்கான விடிவை உருவாக்க முடியும் என்பதை வந்திருந்த மக்களுக்கு உணர்த்தும் படி இருந்தது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையக் கூட்டம்

அந்த வகையில் இந்த ஆட்சியும் அதிகார அமைப்புகளும் மட்டுமே மக்களுக்கானவை என்றும், இந்த அமைப்பு முறைக்குள் நின்று இரைஞ்சுவதன் மூலமாக மட்டுமே ஏழைகள் தங்கள் வாழ்வை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மக்களிடம் உருவாக்கப்பட்டிருந்த அடிமை மனோபாவத்தை உடைத் தெரிந்துள்ளோம். இந்த அமைப்பு முறையே மக்கள் விரோதமானதுதான். அப்படி நரிகளுக்காக கட்டியமைக்கப்பட்ட ஆட்சியில் ஆடுகளுக்கு நீதி கிடைக்காது; இந்த ஆட்சியமைப்பிற்கு வெளியே மக்கள் திரள் போராட்டங்களினூடாகத்தான் நீதி பெற முடியும் என்பதை ஓரளவிற்கேனும் புரிய வைக்க முயற்சித்துள்ளோம்.

அடுத்த ஆண்டுகளில் ஒன்று இந்த கருத்துக்கேட்பு நாடகத்தை நடத்த பயந்து அடாவடியாக மின் கட்டணத்தை ஏற்ற வேண்டும். அல்லது, காவல் துறையின் கப்-சிப் தர்பாரை உருவாக்கி மக்கள் யாருமில்லாத அரங்கில் இந்தக் கூத்தை அரங்கேற்றுவதன் மூலம் இது ஜனநாயக ஆட்சியல்ல என்று அம்பலப்பட வேண்டும். இரண்டில் எதுவெனினும் அது மக்களுக்கும் சமூக மாற்ற அரசியலுக்கும் சாதகமானதே! இதுதான் மக்களை திரள் திரளாக அரசியல் படுத்தும் அரசியல் நடைமுறை. ஆளும் வர்க்க தீவிரவாத பூச்சாண்டிக்கு வாய்ப்பளிக்காமல் மக்களே தங்கள் சொந்த நடைமுறையிலிருந்து இது யாருக்கான ஆட்சி என்பதைப் புரிந்து கொள்ளச் செய்வதற்கான அரசியல் போராட்டம். இதன் போக்கில் மட்டுமே ஒரு கருத்து, சமுதாயத்தையே புரட்டிப் போடும் மாபெரும் ஆற்றலாக – புரட்சியாக மாறும் ரசவாதம் அரங்கேற முடியும். இதைக் கண்டுதான் ஆளும் வர்க்கம் குலை நடுங்குகிறது.

மாபெரும் ஓட்டுக்கட்சிகளை அசாதாரணமாகக் கையாளும் அதிகாரிகள் நமது விவசாயிகளும், தொழிலாளிகளும், மாணவர்களுமான எளிய தோழர்கள் பேசும் எளிய உண்மைகளைக் கண்டு அச்சமடைகின்றனர். அந்த வகையில் இந்த கூட்டங்களிலான நமது வினையை லெனின் கூறிய வார்த்தைகளைக் கொண்டு வர்ணிக்கலாம்- “மாபெரும் தொடக்கம்”.

செய்தி :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஈரோடு, கோவை, கரூர், நாமக்கல், திருச்சி மாவட்டங்கள்,
தொடர்புக்கு-9750304727