privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாஏழை கிறித்தவ பெண்களை கொன்ற பாக் இசுலாமிய மதவெறி !

ஏழை கிறித்தவ பெண்களை கொன்ற பாக் இசுலாமிய மதவெறி !

-

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஒரு கணவன் — மனைவி இணை குரானின் சில பக்கங்களை எரித்தனர் என்று குற்றம் சுமத்தப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டு உள்ளனர். முல்லா ஒருவர் மசூதியின் ஒலிபரப்பிகள் வழியே அந்த கணவன் — மனைவிக்கு எதிராக மக்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டுள்ளார். ஷாபாஷ் மசீஹ் மற்றும் ஷாமா பிபி என்ற பெயர் கொண்ட அவர்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள். அடித்தட்டு மக்கள் பிரிவை சேர்ந்த அவர்கள் செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கொல்லப்பட்ட செங்கல் சூளை.
கொல்லப்பட்ட செங்கல் சூளை.

கணவருடைய தந்தையின் இறப்பை தொடர்ந்து தேவையற்றதாக தான் கருதிய சில காகிதக் கட்டுகளை ஷாமா எரித்துள்ளார். அதில் ‘எரிந்த’ குரானின் சில பக்கங்களை கண்ட அண்டை வீட்டார் ஒருவர் புகார் கொடுத்தது இந்த கொடூர சம்பவத்துக்கு மூலமாக இருந்துள்ளது. தங்களுக்கு ஆபத்து சூழ்ந்து இருப்பதை உள்ளுணர்ந்தனர் ஷாபாஷும் ஷாமாவும்.

தங்கள் முதலாளி முகமது யூசுஃப் குஜ்ஜாரிடம் சென்று வேறிடம் தாங்கள் செல்ல இருப்பதை கூறிய போது அவர் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் அனுமதிக்க முடியும் என்றுள்ளார். பிறகு இருவரையும் வெளியே விடாமல் செங்கல் சூளையிலேயே இரண்டு நாட்கள் அடைத்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் குரானை எரித்த ஷாமாவின் ‘பாவம்’ ஊர் முழுவதும் பரவியது. முல்லா ஒருவரின் தூண்டுதலின் படி நூறு பேருக்கு மேல் அங்கு திரண்டு வந்து அவர்களை அடித்து, உதைத்து பிறகு கால்களை உடைத்து, செங்கல் சூளையில் எரிந்து கொண்டிருந்த தீயில் வீசியெறிந்துள்ளனர். அவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகள் தற்போது அநாதையாகி உள்ளன.

ஷாபாஷையும், ஷாமாவையும் எரித்துக் கொன்றதன் பின்னணியில் தாலிபான் வகை பயங்கரவாத அமைப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய மதவாதக் கருத்தியலுக்கு பலியான ஒரு சமூகப் பகுதியின் நடவடிக்கையாக இது இருக்கிறது. மதவாதிகள் எந்த மதமாக இருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும் அவர்கள் நடவடிக்கையில் பேதம் இருப்பதில்லை என்பதை இந்த சம்பவம் முகத்தில் அறைந்து சொல்கிறது. பாகிஸ்தானின் சட்ட விதிகளில் தெய்வநிந்தனை (blasphemy) என்பது மரணதண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றம் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. மதவாதிகளோ அந்த சட்டம் கூட தேவையில்லை என்று அப்பாபாவிகளுக்கு தாமதியாமல் தண்டனை வழங்குகிறார்கள். அந்த வகையில் பாகிஸ்தானின் தெய்வநிந்தனை சட்டம் இஸ்லாமிய மதவாதிகளுக்கு மிகுந்த கடன்பட்டிருக்கிறது.

இதே மாகாணத்தின் இட்டான் வாலி என்ற கிராமத்தில் 2007-ம் வருடம் தண்ணீர் பகிர்ந்து கொள்வதில் அசியா பீபிக்கும் ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு வாய்த் தகராறு ஏற்பட்டது. அந்த முஸ்லிம் பெண்மணி நபிகள் நாயகத்தை அசியா பீபி தூற்றினார் என்று புகார் தொடுக்க அவருக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. அசியா பீபி குடும்பம் அந்த கிராமத்தின் ஒரே கிறிஸ்தவக் குடும்பம் என்ற காரணத்தால் அவருக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்க அந்தக் கிராமத்திலிருந்து எவரும் முன்வரவில்லை.

அப்போது அந்த கிறிஸ்தவ பெண்மணிக்கு ஆதரவாக ஒரு குரல் பாகிஸ்தானின் முஸ்லிம் பெரும்பான்மை சமூகத்திலிருந்து எழுந்தது. பாகிஸ்தானின் தெய்வநிந்தனை சட்டத்தை திருத்த வேண்டும் என்று ஒலித்த அந்த குரலுக்கு உரியவர் பஞ்சாப் மாகாண கவர்னர் சல்மான் தஸீர். 2011-ம் வருடம் மெய்க்காப்பாளர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் 26 குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தது.

சல்மான் தஸீருக்கு முன்னதாக தெய்வநிந்தனை சட்டம் கூடாது என்று சொன்ன பாகிஸ்தானின் சிறுபான்மை துறை அமைச்சர் ஷாபாஸ் பற்றி என்பவரும் கொல்லப்பட்டார். இதில் மிகக் கொடுமை என்னவென்றால் அசியா பீபியின் முறையீட்டை விசாரித்த லாகூர் உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பை வழங்கியது. தனது தீர்ப்பில் அசியா பீபியின் மரணதண்டனையை உறுதி செய்தது. மரணத்துடன் போராட அந்த ஏழைக் குடும்பத்தை மேலும் நிர்ப்பந்தித்துள்ளது பாகிஸ்தான் நீதி அமைப்பு. மனித உரிமை ஆர்வலர்களின் ஆதரவுடன் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார், அசியா பீபி.

ஆவேசமடையும் முஸ்லிம்கள்
ஆவேசமடையும் முஸ்லிம்கள்

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களின் தொகை இரண்டு சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. சிறுபான்மை சமூகம் என்றழைப்பதற்குரிய நிலையை எய்தாத ஒரு நுண்ணிய சிறுபான்மை பிரிவு என்ற நிலையில் இருக்கிறார்கள். மேலும் மேலும் தேய்ந்து வரும் இந்திய பார்சிக்களுடன் ஒப்பிடத்தக்க அளவில் தான் கிறிஸ்தவர்கள் பாகிஸ்தானில் இருக்கின்றனர்.பாகிஸ்தானில் முதல் கிறிஸ்தவ தேவாலயத்தை லாகூரில் கட்ட அக்பர் அனுமதி வழங்கினார். எனினும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஆங்கிலேய காலனியாக்கத்துடன் தான் முழுமை பெற்றது.

இந்தியா — பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்துக்களும், சீக்கியர்களும் பெருமளவுக்கு பாகிஸ்தானிலிருந்து வெளியேறிய போது பார்சிக்களும், கிறிஸ்தவர்களும் பாகிஸ்தானிலேயே தங்கினர். அவர்கள் இரண்டு தரப்பிலுமே சிறுபான்மையினராக கருதப்படுகின்ற வாய்ப்பே உள்ள நிலையில் புலம்பெயர்வை தவிர்த்தனர். மேலும் பாகிஸ்தான் அனைத்து மதங்களை பின்பற்றுவோருக்கும் சம உரிமையும், வழிபாட்டு உரிமையும் அளிக்கும் என்ற ஜின்னாவின் பிரகடனத்தை ஆறுதலாக பார்த்தார்கள்.

இந்த இரண்டு சமூகமும் தமது பலவீனமான சமூக இருப்பு காரணமாக தீங்கற்ற சமூகங்களாகவே கருதப்பட்டு வந்தன. பாப்ஸி சித்வாவின் ஐஸ் கேண்டி மேன் (Ice-candy Man) நாவல் இந்த இரு சிறுபான்மை சமூகமும் வதந்திகள் பேயாக உலவிய பிரிவினை காலகட்டத்தில் மக்களுக்கு உயிர்ச் சேதம் நேராமல் உதவியதை அழகுற படம் பிடித்திருக்கும். முல்லாக்கள் ஆதிக்கத்தில் இருந்து பாகிஸ்தானின் முஸ்லிம் பெரும்பான்மை சமூகம் விடுபட்டால்தான் அங்கே உண்மையான ஜனநாயகத்திற்கான போராட்டம் மலரும். அதுவரை கிறித்தவர்கள் மட்டுமல்ல முசுலீம் உழைக்கும் மக்களும் வெறு வேறு காரணங்களால் ஒடுக்கப்படுவர்.  சமூகப் பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்ப மதம் பயன்படுவது பாகிஸ்தானிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

– சம்புகன்

மேலும் படிக்க