privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்மேக்கே தாட்டு அணை எதிர்த்து தஞ்சையில் ரயில் மறியல்

மேக்கே தாட்டு அணை எதிர்த்து தஞ்சையில் ரயில் மறியல்

-

காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக, தமிழக பாசன உரிமையை மறுக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டு என்ற இடத்தில் 48 டிஎம்சி (முல்லைப் பெரியாறு அணையைப் போல நான்கு மடங்கு, கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு இணையான கொள்ளளவு) கொள்ளளவு கொண்ட இரு அணைகள் கட்ட கர்நாடக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனைக் கண்டித்தும் மத்திய அரசு இம்முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரியும் நவம்பர் 22 அன்று டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு நடத்த விவசாய அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன. இக்கோரிக்கைகளை வலியுறுத்தும் வண்ணம் மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் தஞ்சையில் இரயில் மறியல் போராட்டத்தை அறிவித்தன.  மதிமுக உள்ளிட்ட அமைப்புக்களும இரயில் மறியல் போராட்டம்  நடத்துவதாக அறிவித்தன.

தஞ்சை ரயில் மறியல்
தஞ்சாவூர் ரயில் மறியல் போராட்டம் மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்புகளால் முன்னெடுத்து நடத்தப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் வியாபாரிகள் கடைகளை மூடி முழு அடைப்புக்கு  ஆதரவு தெரிவித்தனர். 100-க்கும் அதிகமான இடங்களில் சாலை மறியல்களும் தஞ்சாவூர், மன்னார்குடி, கீழ்வேலூர் நிலையங்களிர் ரயில் மறியலும் நடத்தப்பட்டன.

தஞ்சாவூர் ரயில் மறியல் போராட்டம் மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்புகளால் முன்னெடுத்து நடத்தப்பட்டது.

காலையில் தொடர்ந்து மழைபெய்து கொண்டிருந்த நிலையில், வைகோ வருகைக்காக தஞ்சை ரயில் நிலையத்தில்  அவரது கட்சியினர் காத்திருந்தனர். காலை 10.30-க்கு திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு வண்டியை மறிப்பது அவர்களின் திட்டம். வைகோ ரயில் நிலையத்துக்குள் நுழைந்த பிறகு வைகோவை வாழ்த்தி முழக்கமிட்டவாறு அவரது கட்சியினர் நின்றுகொண்டிருந்தபோதே சோழன் விரைவு ரயில் வந்து சத்தம் போடாமல் புறப்பட்டுச் சென்றுவிட்டது. ரயில் எந்தத் தடையுமின்றி கிளம்பிப் போன பிறகு, வெறும் தண்டவாளத்தில் வைகோ பத்திரிகையாளர்களுக்குத் தொடர்ந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.

இவ்வாறான குழப்பங்களும், கோமாளித்தனங்களும் நடக்கும் என எதிர்பார்த்து திட்டமிட்டிருந்தனர் நமது தோழர்கள். முன்கூட்டியே திட்டமிட்டபடி காலை 10 மணிக்கு தஞ்சையில் இருந்து புறப்படும் காரைக்கால்-திருச்சி பயணிகள் இரயிலை மறிப்பதற்கு இருபது தோழர்கள் பயணிகளோடு பயணிகளாக ஏறிக்கொண்டனர். பெட்டிக்குள் இருந்த பயணிகளிடம் நமது போராட்ட கோரிக்கைகளை விளக்கிக் கொண்டிருந்தபோது இரயில் புறப்பட்டது. ரயில் சிறிது தூரம் சென்ற பின் திட்டமிட்டபடி, தோழர்கள் சங்கிலியை இழுத்து இரயிலை நிறுத்தினர், இறங்கி ஓடிச்சென்று எஞ்சின் முன்பு நின்று ரயிலை மறித்து முழக்கங்களை எழுப்பினர். இருபது நிமிடம் தோழர்களின் முழக்கம் நாற்றிசையும் எதிரொலித்தது.

தஞ்சை ரயில் மறியல்
தோழர்கள் எஞ்சின் முன்பு நின்று ரயிலை மறித்து முழக்கங்களை எழுப்பினர்

அந்த எதிரொலி பேட்டி கொடுத்து போராட்ட சடங்கை  நடத்தி கொண்டிருந்த வைகோ மற்றும் ம.தி.மு.கவினரை எட்டியதும்,  அக்கட்சி தொண்டர்களும், பிற அமைப்பினரும் ஓடிவந்து தாமும் ரயிலின் முன் நின்று, எஞ்சின் மீது ஏறி புகைப்படம் எடுத்துக்கொள்ள போட்டி போட்டனர்.

அரைமணிநேர போராட்டத்துக்குப் பிறகு நமது தோழர்களை கைது செய்தது இரயில்வே பாதுகாப்புப்படை.  ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் வைகோ முழங்கிக் கொண்டு, பேட்டி கொடுத்துக் கொண்டிருந்ததார்.

நிலையத்துக்கு வெளியில் விடுவிக்கப்பட்டதும், தோழர்கள் நிலைய வாயிலில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தோழர் காளியப்பன் கர்நாடக அரசின் அணைகட்டும் முயற்சியின் பின்னே உள்ள தண்ணீரை கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு திறந்துவிடும் சூழ்ச்சியை அம்பலப்படுத்திப் பேசினார். தோழர்கள் போராட்டத்தை தொடர்வதென முடிவெடுத்து தஞ்சை இர்வின் பாலத்தில் சாலைமறியல் செய்தனர். 28 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியல்
தோழர்கள் போராட்டத்தை தொடர்வதென முடிவெடுத்து தஞ்சை இர்வின் பாலத்தில் சாலைமறியல் செய்தனர்

மகஇக, விவிமு தோழர்கள் திட்டமிட்ட முறையிலும் உறுதியாக நின்றும் ரயில்மறியலை வெற்றிகரமாக நடத்தினர். காலி தண்டவாள போராட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த ஓட்டுக் கட்சியினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும், விடாப்பிடியாக ரயிலை நிறுத்தி போராடியது தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், பத்திரிகையாளர்கள் அனைவரும் வைகோவை சுற்றியே செய்தியை ‘கவர்’ செய்தனர். ஒருசில பத்திரிகைகளே புரட்சிகர அமைப்புகள் நடத்திய தஞ்சை ரயில் மறியல் குறித்து சரியாக செய்தி வெளியிட்டிருந்தனர்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நடந்த மறியல் போராட்டம் – காணொளி

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பின்குறிப்பு – எலுமிச்சைசோறும் பிரியாணியும்

கைது செய்யப்பட்ட தோழர்களுக்கு காவல்துறை மதிய உணவு வழங்கியது. வழக்கம்போல இரண்டு கரண்டி அளவுள்ள எலுமிச்சை சோற்றுப் பொட்டலம் வழங்கப்பட்டது. சற்று நேரம் கழித்து ஒரு காவலர் வந்து, “கூடுதல் உணவு தேவையா?” என அக்கறையுடன் கேட்டார். ஒருநாளும் இல்லா திருநாளாக இப்படி பரிவோடு காவல்துறை அணுகுகிறதே என விசாரித்த போதுதான் வைகோவுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு அவர்களே பிரியாணி ஏற்பாடு செய்துகொண்டதால் போலீஸ் பொட்டலம் தேவையில்லாமல், மீந்து போய்விட்டது என்று தெரிய வந்தது.

tnj-rail-blockade-4

செய்தி, தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சாவூர்

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க