privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்மேக்கேதாட்டு அணை குடிநீருக்கா, முதலாளிகளுக்கா ?

மேக்கேதாட்டு அணை குடிநீருக்கா, முதலாளிகளுக்கா ?

-

வம்பர் 11-ம் தேதியன்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் (M.B.Patil) கரும்பு விவசாயத்தை விரிவுபடுத்துவதற்காகவும், பெங்களூரு மக்களின் குடிநீர் மற்றும் மின்சாரத் தேவைக்காகவும் மேக்கேதாட்டு (ஆடு தாண்டும் காவேரி) என்ற இடத்திலும், மைசூரின் சுற்றுவட்டாரப் பகுதியிலும் அணைகள் கட்ட இருப்பதாக அறிவித்தார். கர்நாடக வனப்பகுதியில் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் மேக்கேதாட்டு என்ற பகுதியில் 48 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட சமநிலை நீர்த்தேக்கமாகவும், இது கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு சமமான பெரிய அணையாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கினை தர மறுத்து வருகின்ற கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு, தஞ்சை டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் சதித்திட்டம்!

கர்நாடக அரசு இது போன்று மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டப்போவதாக அறிவிப்பது முதல் முறை அல்ல. 1967ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அவ்வப்போது அணை கட்டப்போவதாக அறிவித்து வந்துள்ளது. முக்கியமாக, 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கேட்டு கர்நாடக அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து மனு செய்து வந்துள்ளது. இந்தத் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், இத்திட்டத்திற்கு காவிரி தீர்ப்பாயம் அனுமதியளிக்கவில்லை என்பது உண்மையின் ஒரு பகுதிதான். அடர்ந்த காட்டில் 2500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பை இந்த திட்டம் மூழ்கடிக்கும், வனவிலங்குகளை பாதிக்கும் போன்ற பல காரணங்களால் வனத்துறையும் சுற்றுச்சூழல் துறையும் அனுமதியளிக்கவில்லை. இது ஒட்டுமொத்த கர்நாடக மக்களுக்கும் எதிரான திட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உண்மையை மறைத்துவிட்டு, தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதால்தான் அணை கட்டமுடியவில்லை என்று கன்னட மக்களிடம் பிரச்சாரம் செய்து கன்னட இனவெறியைத் தூண்டிவிடுகிறது, கர்நாடக அரசு.

பெங்களூரு நகரத்தின் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் என்ன?

  • பெங்களூருக்கு நாள்தோறும் காவிரியில் இருந்து எடுத்து வினியோகம் செய்யப்பட்டு வரும் 140 கோடி லிட்டர் நீரில் 52 சதவீதம் நீரை வீணடிப்பதாக இந்திய அரசும் மத்திய குடிநீர் கமிசனும் தொடர்ந்து கர்நாட அரசை எச்சரித்து வருகின்றன. இதற்கு காரணம் குடிநீர் வினியோகம் பன்னாட்டுக் கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான்.
  • குடிநீர் தட்டுப்பாடு யாருக்கு? கூலி ஏழைத் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், வியாபாரிகள், ஆசிரியர்கள் போன்ற கீழ்த்தட்டு மக்களுக்குத்தான் குடிநீர் தட்டுப்பாடு. மால்கள், ஸ்டார் ஓட்டல்கள், பன்னாட்டுக் கம்பெனிகள், உல்லாச சுற்றுலா விடுதிகள், ஐ.டி. கம்பெனிகளுக்குத் தான் முன்னுரிமை கொடுத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சமச்சீர் குடிநீர் வினியோகம் செய்தாலே பெங்களூரு மக்களுக்கு முழுமையான குடிநீர் வழங்க முடியும்.
  • பெங்களூரு மாநகர எல்லைக்குள் சிறிதும் பெரிதுமாக 2789 ஏரிகள் உள்ளன. இவற்றிற்கு நீர்வரும் வழிகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 99% ஏரிகள் சாக்கடைகளாகவும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கழிவுகள் கொட்டும் இடங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. பல நூற்றுக்கணக்கான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
  • கர்நாடகாவின் தேம்ஸ் நதி என்றழைக்கப்படும் ஆர்க்காவதி ஆறும் பெங்களூரு நகர ஏரிகளின் நீரையும் சுத்திகரித்து வினியோகிக்கும் திட்டத்தை சீரியமுறையில் செயல்படுத்தவில்லை. இதற்கான நிதி ஒதுக்கீடும் மிகக் குறைவு.
  • கேளிக்கைப் பூங்காக்கள், செயற்கை கடல், கோல்ப் மைதானங்கள், இரவு நேர கிளப்புகள், நட்சத்திர விடுதிகள், குதிரைப் பந்தய மைதானங்களுக்கு பல லட்சம் லிட்டர் நீர் தினந்தோறும் வாரி இறைக்கப்படுகிறது.

மொத்தத்தில், கார்ப்பரேட் முதலாளிகள், மேட்டுக்குடி மக்களுக்கான மேற்கண்ட நடவடிக்கைகளை அரசு நிறுத்தாமல், காவிரியில் இருந்து நீரைக் கொண்டுவருவதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை என்று கர்நாடகத்தில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முக்கியமாக, குடிநீரை அதிக அளவில் கொண்டுவருவதால், அதே அளவுக்கு கழிவு நீரும் வெளியேறும். இதனை மேலாண்மை செய்வது மேலும் சிரமமான விசயமாக இருக்கும் என்று பலர் தெரிவிக்கின்றனர். இத்தனையையும் மீறிதான் பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக காவிரி நீரைக் கொண்டுவர இருப்பதாக கர்நாடக அரசு பொய் பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வருகிறது.

[நோட்டிசை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்]

மின்தடை உழைக்கும் மக்களுக்கு! உல்லாச வாழ்க்கை மேட்டுக்குடி மக்களுக்கு!

மேலும், பெங்களூரு நகரத்தின் மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கர்நாடக அரசு கூறுகிறது. மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவது யார்?

  • கார்ப்பரேட் கம்பெனிகள், உல்லாச விடுதிகள், மால்கள், ஸ்டார் ஓட்டல்கள் இவை ஒருநாளுக்குப் பயன்படுத்தும் மின்சாரத்தை கொண்டு ஒட்டுமொத்த கர்நாடக மக்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்க முடியும். ஆகையால், மின்பற்றாக்குறை என்பது ஒரு மோசடி பிரச்சாரம்.
  • தற்போது கர்நாடக அரசு அமைக்க இருக்கும் மின்நிலையங்கள் கூட கார்ப்பரேட் ஆலைகள்தான் செய்ய இருக்கின்றன. மின்சாரத்தை முழுமையாக தனியார்மயமாக்குவதே கர்நாடக அரசின் குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.

கரும்பு விவசாயத்தை விரிவுபடுத்துவது யாருக்காக?

எம்.பி.பாட்டீல் கரும்பு விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் உதவும் என்று கூறியுள்ளார். சுமார் 4.5 லட்சம் ஹெக்டேர் கரும்பு விவசாயம் விரிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். இத்திட்டத்தினால் கரும்பு விவசாயிகள் நன்மை பெறப்போவதில்லை. ஏற்கனவே, கரும்பு விவசாயிகள் தற்கொலையில் கர்நாடக மாநிலம் முதலிடம் வகிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், கரும்பு விவசாயத்திற்கு போதுமான நீர் இல்லை என்பதல்ல. மாறாக, கரும்புக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பதே முக்கியமான காரணம்.

அடுத்து, கரும்பு விவசாயிகளுக்கு உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் உரிய வகையில் வழங்கப்படவில்லை. சர்க்கரை ஆலை முதலாளிகள் கர்நாடக விவசாயிகளை கசக்கிப் பிழிவதும், அதற்கு எதிராக விவசாயிகள் நடத்தியப் போராட்டங்களும் நாடறியும். மேலும், கரும்பு விவசாயத்தில் மூலம் சர்க்கரை ஆலை முதலாளிகள் மட்டுமல்ல, கரும்பிலிருந்து மின்சாரம், எரிசாராயம் தயாரிக்க இருப்பதாகவும் கர்நாடக அரசு கூறியுள்ளது. இதன் மூலம், பல ஆயிரம் கோடி ரூபாய் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகை செய்து வருகிறது.

பெங்களூரு மாஸ்டர் பிளான் 2031

பெங்களூரு மாஸ்டர் பிளான் 2031 என்ற பெயரில் நெதர்லாந்து கம்பெனி மூலம் பெங்களூரு நகர விரிவாக்கத் திட்டத்தை கர்நாடக அரசு போட்டு வருகிறது. இத்திட்டம் முழுவதும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனிலிருந்து போடப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆர்க்காவதி நதி முதல் மேக்கேதாட்டு வரை சுற்றுலா தளங்களையும் கேளிக்கை விடுதிகளை அமைப்பது, பெங்களூரு நகரத்தில் உள்ள உழைக்கும் மக்களையும் நடுத்தர மக்களையும் நகரத்தை விட்டு வெளியேற்றுவது என்பதைத்தான் திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த பெங்களூரு மாஸ்டர் பிளான் திட்டத்திற்கு கன்னட மக்கள் மத்தியிலேயே எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. இந்த வளர்ச்சிக்குத்தான் காவிரி நீரைக் கொண்டுவர கர்நாடக அரசு துடிக்கிறதே ஒழிய, உழைக்கும் ஏழை மக்களுக்கு நீரைக் கொண்டுவருவதற்காக அல்ல!

தொடரும் கர்நாடக அரசின் சதித்திட்டம்:

இவையெல்லாம் ஒரு புறமிருக்க, தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை உரிய வகையில் வழங்க கர்நாடக அரசு  ஒவ்வொரு ஆண்டும் மறுத்து வருகிறது. இந்நிலையில், உபரிநீரைத்தான் தேக்கி பெங்களூருவுக்கு கொடுக்க இருக்கிறோம் என்பதும் சுத்தப் பொய்! ஏற்கனவே, தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்கும் நீர் என்பது, மழைக்காலங்களில் அணைகள் நிரம்பி வழிந்தோடும் நீரைத்தான். இந்த நீரையும் நிரந்தரமாக தடுப்பதற்காகத்தான் தற்போது, மேக்கேதாட்டுப் பகுதியில் அணை கட்டும் பணியை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது.

தமிழகத்திற்கு தண்ணீரை தரக்கூடாது என்பதில் கர்நாடகா ஏன் இவ்வளவு உறுதியாக உள்ளது? தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுப்புத் திட்டத்தை அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது, கிரேட் ஈஸ்டர்ன் என்ற பன்னாட்டுக் கம்பெனி. இதற்கு மத்திய, மாநில அரசுகள் பக்கத் துணையாக இருந்து வருகின்றன. இந்த கிரேட் ஈஸ்டர்ன் கம்பெனிக்கு எதிராக காவிரி டெல்டா விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்கள் போராடுவதற்கு காரணமாக இருக்கும் கொஞ்ச நஞ்ச விவசாயத்தையும் ஒழித்தால்தான் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தங்குதடையின்றி அமுல்படுத்த முடியும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் இந்த கார்ப்பரேட் முதலாளிகளின் திட்டத்தின் ஒரு பகுதிதான் கர்நாடக வனப்பகுதியில் காவிரியின் குறுக்கே அணைகட்டும் திட்டமும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இந்த திட்டத்தை மறைக்கும் வகையில், குடிநீர் தட்டுப்பாடுதான் பிரச்சனை என்று பெங்களூரு மக்களிடம் கூறி, குடிநீர் கட்டணத்தை உயர்த்தியுள்ளது கர்நாடக அரசு. இதன் மூலம் காவிரியில் புதிதாக அணை கட்டி நீரை எடுப்பதுதான் தீர்வு என்ற ஒரு கருத்தை சதித்தனமாக திணித்து வருகிறது. கர்நாடக அரசின் இந்த சதித்திட்டத்தை பெங்களூரு மக்கள் புரிந்து கொண்டு, சமச்சீர் குடிநீர் வினியோகத்திற்காகப் போராட வேண்டும்.

உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார மன்றங்களைக் கட்டி எழுப்புவோம்!

மேலும், கார்ப்பரேட் முதலாளிகளின் மீத்தேன் எடுக்கும் திட்டம், அணை கட்டும் திட்டம் எல்லாம் கிராமப்புற விவசாயிகளை கூலி அடிமைகளாக பெங்களூர், சென்னை, ஒசூர் போன்ற நகரங்களை நோக்கி வீசியெறிவதாக உள்ளன. நகரத்தில் அவர்கள் அமைக்கும் நவீன தொழிற்சாலைகளுக்கு கொத்தடிமைகளாக குறைந்த கூலிக்கு இவர்களை சுரண்டுவதற்கான திட்டமாக உள்ளன. இதற்கேற்ப தொழிலாளர் சட்டங்களையும் ஒழித்துக்கட்டி மொத்த மக்களையும் நவீன கொத்தடிமைகளாக்குகின்றனர்.

மொத்தத்தில், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவது என்பது கார்ப்பரேட் முதலாளிகளின் பல்நோக்குத் திட்டமாக உள்ளது. இது கர்நாடக மற்றும் தமிழக மக்களின் வாழ்வை சூறையாடுவதாக உள்ளது என்பதை நாம் உணரவேண்டும். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள மோடி அரசு இதுபோன்ற மக்கள் விரோத, சுற்றுச்சூழல் விரோத திட்டங்களைத்தான் வளர்ச்சித் திட்டங்கள் என்று கூறிவருகிறார். இதற்காக சட்டரீதியாக உள்ள தடைகளை எல்லாம் நீக்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்கிறார். இத்திட்டங்களை எதிர்ப்பவர்களை கடுமையாக ஒடுக்கி வருகிறார். நீதிமன்றங்களும் இதுபோன்ற திட்டங்களுக்கு எவ்விதத் தடையும் விதிப்பதில்லை.

ஆக, இந்த அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் அடியாளாக மாறி பகிரங்கமாக நம்மை ஒடுக்க வருகிறது. இந்த சட்டமும் நீதியும் இனியும் மக்களைக் காக்கும் என நினைப்பது முட்டாள்தனம். இதற்கு ஒரிசாவின் போஸ்கோ, தமிழகத்தில் கூடங்குளம் என பல உதாரணங்கள் நம் கண் முன்னே உள்ளன. இந்தத் திட்டங்களை தடுப்பதற்கு ஒரு வழிதான் உள்ளது. இந்த அரசின் திட்டங்களுக்கு எதிராக போராடுவது ஒன்றே வழி.

  • கார்ப்பரேட் கம்பெனிகளை நமது மண்ணைவிட்டு விரட்டியடிக்கும் வகையில் வீறுகொண்டு போராட வேண்டும்.
  • ஒவ்வொரு ஊரிலும் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தை தூக்கியெறிய வேண்டும்.
  • அவர்களது கைக்கூலிகளான ரியல் எஸ்டேட் முதலாளிகள், புரோக்கர்கள், அரசு அதிகாரிகளை விரட்டியடிக்க வேண்டும்.
  • உள்ளூர் மக்கள் அதிகாரம் செலுத்தும் வகையில் உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார மன்றங்களைக் கட்டியமைக்க உழைக்கும் வர்க்கங்கள், மக்கள் ஓரணியில் திரண்டு போராடுவோம்!
  • மக்கள் எழுச்சியின் மூலம் இதனை சாதிப்போம்!

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசின் அணைகட்டும் திட்டம்:
தஞ்சை டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும்
கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கான சதித்திட்டம்
!

  • கர்நாடக வனப்பகுதியில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டமும் தஞ்சை டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன் எடுக்கும் திட்டமும் கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்காவே!
  • காவிரியின் குறுக்கே கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியை முறியடிப்போம்! தஞ்சை டெல்டாவில் மீத்தேன் எடுப்புத் திட்ட்த்தை தடுத்து நிறுத்துவோம்!
  • உண்மையான ஜனநாயத்திற்கான மாற்று அதிகார மன்றங்களைக் கட்டி எழுப்புவோம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 25-11-2014 மாலை 5 மணி
நகராட்சி அலுவலகம் முன்பு
, ஒசூர்.

ஒசூர் ஆர்ப்பாட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தருமபுரி-கிருஷ்ணகிரி-சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு: 97880 11784 – 97513 78495 – 99433 12467