privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஎபோலாவுக்கு எதிராக கியூப மருத்துவர்களின் போர்

எபோலாவுக்கு எதிராக கியூப மருத்துவர்களின் போர்

-

6000-க்கும் மேற்பட்ட மக்களை இதுவரையிலும் பலிவாங்கியிருக்கிறது எபோலா காய்ச்சல். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் அரசுகள் இந்த கொள்ளை நோயை எப்படி கையாளுகின்றன; என்ன வகையான மருத்துவ உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கின்றன போன்ற கேள்விகள் நமக்குள் இயல்பாக எழுகின்றன.

கியூப மருத்துவர்கள்
சியரா லியோனுக்கு வந்து இறங்கும் கியூப மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும். (படம் : நன்றி theguardian.com)

சர்வதேச நாடுகள் உதவி செய்கின்றன என்பது பொதுவான உண்மை என்றாலும் கியூபா அதில் முதன்மை பங்கு வகிக்கிறது. 1.1 கோடி மக்கள் தொகை கொண்ட சிறிய நாடான கியூபா தனது நாட்டின் மருத்துவர்கள் 456 பேரை எபோலா பாதித்த நாடுகளின் மக்களிடம் பணியாற்ற அனுப்பி உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய வளர்ந்த நாடுகள் பெயரளவுக்கு மட்டுமே சில உதவிகளை செய்கின்றன. பிரிட்டன் 30 மருத்துவர்களை மட்டும் அனுப்பி உள்ளது. அமெரிக்க மருத்துவர்கள் 10 பேருக்கும் குறைவாக விருப்பம் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகமாக தேவைப்படுகிறவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் என்று கூறுகிறது, உலக சுகாதார நிறுவனம்.

மாறாக, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஏதோ கலகம் ஏற்பட்டிருப்பதை போன்ற பாவனையில் பெருமளவுக்கு ராணுவத்தை அனுப்பி வைத்திருக்கின்றன அமெரிக்காவும், பிரிட்டனும்.

கியூபா மருத்துவர்கள் சிலருக்கு எபோலா தொற்றி பாதித்த பின்னரும் அவர்கள் தொடர்ந்து களத்தில் மக்களிடையே பணியாற்றி வருகிறார்கள். ஆனால், உலகின் பேரபாயமாக எபோலா எடுக்கவிருந்த அவதாரத்துக்கான சாத்தியங்கள் குறைந்து இருப்பதை அடுத்து மேற்கு ஊடகங்கள் இந்த பிரச்சினையில் கொண்டிருந்த ஈடுபாடு வற்றி உள்ளது.

கியூபாவின் மருத்துவக்குழு சியரா லியோன் வந்த போது அந்த நாட்டின் அதிபர் எர்னஸ்ட் பாய் கொரொமா நேரில் சென்று வரவேற்றார். இக்கட்டான நேரத்தில் தமது மக்களை காப்பாற்ற வந்த கியூபாவின் மருத்துவர்களை அவர் பாராட்டினார்.

கியூபா மருத்துவர்களின் மெச்சத்தகுந்த பணியை அமெரிக்காவும் வேறு வழியில்லாமல் பாராட்டியுள்ளது. கியூபாவின் மக்கள் அரசாங்கத்தை தூக்கியெறிய முப்பது வருடங்களாக முயன்று வரும், தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்கு சேவை செய்து வரும் அமெரிக்கா தேசங்கடந்த பொதுநலத் தொண்டில் கியூபாவின் முழங்கால் அளவுக்கு கூட வளரவில்லை என்பது தான் உண்மை.

மேற்கத்திய நாடுகளில் எபோலா பற்றிய அறிதல் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு அமெரிக்க மதப் பிரச்சாரகர்களுக்கு எபோலா காய்ச்சல் பாதித்த பிறகுதான் ஏற்பட்டதாக கூறுகிறார், ஊடகவியலாளர் ஆன்ட்ரி கெரிலொ. ஒரு பக்கம் எண்ணற்ற கருப்பின ஆப்பிரிக்கர்கள் தங்கள் படுக்கைகளில் வேதனையால் நெளிந்து கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் இரண்டு வெள்ளை அமெரிக்கர்களின் துயரை மிகுதியாக செய்தியாக்குவதன் நிர்ப்பந்தம் தன்னை மிகவும் வருத்தியதாக குறிப்பிடுகிறார், ஆன்ட்ரி.

மேற்கத்தியர்கள் பாதிக்கப்பட்டவுடன் அவசர அவசரமாக ஒரு சோதனை மருந்து கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

கியூப மருத்துவர்கள்
ஹவானாவில் கியூப மருத்துவர்கள் (படம் : நன்றி theguardian.com)

“எபோலாவால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வெறும் எண்ணிக்கைகளாக சுருங்கி விட ஓரிரு மேற்கத்தியர்களின் பாதிப்பு மட்டும் விலாவரியான முக்கியத்துவம் பெறுவது ஏன் என்பது குறித்த உணர்வு நமக்கு இருக்க வேண்டும்” என்று கூறுகிறார் ஆன்ட்ரி. மேற்கத்திய நாடுகளின் கவனம் முழுக்க தமது எல்லைகளை இந்த வைரஸ் தொற்று தொட்டு விடக்கூடாது என்பதில் தான் இருக்கிறது.

வளர்ந்த நாடுகள் துரிதகதியில்  செயல்பட்டிருந்தால் மேற்கு ஆப்பிரிகாவின் கினி நாட்டில் ஆரம்ப நிலையிலே எபோலாவை கட்டுப்படுத்தியிருக்க முடியும். லைபீரியாவுக்கும், சியரா லியோனுக்கும் அது பரவிடாமல் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்று எபோலா நோய் தொற்று கடுமையாக பரவியிருக்கும் நிலையில் சியரா லியோனுக்கு மட்டுமே 10,000 மருத்துவர்கள் தேவைபடுகிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

கியூபாவின் உலக மக்கள் நலன் சார்ந்த பணி எபோலா நோய் ஏற்படுத்தியிருக்கும் இப்போதைய நெருக்கடியில் மட்டும் வெளிப்படவில்லை. 2010-ம் வருடம் லத்தீன் அமெரிக்காவின் ஹைத்தியில் புயல் வீசி மக்கள் பாதிக்கப்பட்ட போதும் கியூபா மருத்துவர்கள் பிரதிபலன் பாராத மருத்துவ உதவிகளை செய்தார்கள். 40%  மக்களை தமது மருத்துவத்தால் ஆற்றுப்படுத்தினர். ஹைத்தியில் ஒரு நீடித்த அரசு சுகாதார அமைப்பு ஏற்படவும் துணை நின்றார்கள்.

1960-ம் ஆண்டில் சே குவேரா ‘ஒவ்வொரு மருத்துவரும் தமது தொழில்நுட்ப அறிவின் மூலம் மக்களுக்கும், புரட்சிக்கும் பணியாற்ற வேண்டும்’ என்று வழிகாட்டிய நெறியை பின்பற்றி ஒழுகுகிறார்கள் கியூபா மருத்துவர்கள்.

1960-களில் காங்கோ மற்றும் தென்னாப்பிரிக்க நாட்டு மக்களின் விடுதலைக்கு துணை நின்றார் சே குவேரா. அதன் காரணமாக ஆப்பிரிக்க மக்களின் நேசத்துக்கு உரியவரானார், சே. 1970-களில் கியூபாவுக்கு ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவு மேலும் வலுப்பட்டது. அங்கு இடதுசாரி  குடியரசுகள் ஏற்பட்டன.

லைபீரியாவுக்கு புறப்படும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய இரண்டு கியூப மருத்துவர்கள், மேற்கு ஆப்பிரிக்க பணிக்கு போவதற்கு கடும் போட்டி நிலவுவதாக கூறினர். “என்னுடைய சக மருத்துவர்கள் போகும் போது நான் ஏன் போகக் கூடாது” என்று சிலர் கேட்கின்றனர் என்கிறார் மருத்துவர் அட்ரியன் பெனிடஸ்.

அவருடன் இருந்த மருத்துவர் லியனார்டோ ஃபெர்னாண்டஸ் உதவி செய்தே தீர வேண்டும் என்று தன்னார்வலர்கள் உணர்வதாக கூறினார். “நாம் முழுவதுமாக புரிந்து கொள்ளாத ஒன்றை எதிர்த்து நாம் போராடுகிறோம் என்று தெரிகிறது. என்ன நடக்கலாம் என்று தெரிகிறது (இறந்தும் போகலாம்). ஆனால், இது எங்கள் கடமை. இப்படித்தான் நாங்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம்” என்கிறார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இத்தகைய மருத்துவர்களின் மருத்துவப்பணியை நேரடியாக கண்ணுறும் மக்கள் ‘புரட்சி வாழ்க’ என்று முழக்கங்களுடனான சுவரொட்டிகளை ஒட்டுகிறார்கள். அமெரிக்காவின் செவிகளில் இந்த முழக்கம் எட்டாமல் இல்லை. 40 கோடி டாலர் உதவியை அமெரிக்கா செய்ய முன்வந்துள்ளது. ஜப்பான் 4 கோடி டாலரை அளிக்கிறது. எனினும் மக்கள் உண்மையான ஆபத்துதவிகளை அடையாளம் காணத் தெரியாதவர்கள் அல்லர்.

2005-ம் வருடம் காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது கியூபா 2,400 மருத்துவர்களை அனுப்பி உதவி செய்தது. காயமடைந்தவர்களில் 70 சதவீதம் பேருக்கு அவர்கள் சிகிச்சை அளித்தார்கள். கியூபாவின் சர்வதேசிய மருத்துவம் (Cuban Medical Internationalism) என்ற நூலின் ஆசிரியர் ஜான் கெர்க் என்பவர் கியூபா மருத்துவர்களால் உலகில் லட்சக்கணக்கானவர்கள் காப்பாற்றப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். 33 நாடுகளில் 30 லட்சம் மக்களுக்கு இலவச கண் சிகிச்சை செய்துள்ளார்கள் கியூபா மருத்துவர்கள்.

2005-ம் வருடம் லத்தீன் அமெரிக்க மருத்துவப் பள்ளியை (Latin American Medical School) நிறுவிய கியூபா ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க நாடுகளின் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவப் படிப்பை சொல்லிக் கொடுக்கிறது. இது வரையிலும் 23,000 மருத்துவர்கள் தேர்ச்சி பெற்று வெளியே சென்று உலகின் ஏழை மக்களுக்கு பணியாற்றுகிறார்கள்.

அமெரிக்கா கியூபா மீது பொருளாதார தடையை விதித்திருக்கிறது. 1960-களில் அமெரிக்க தொழில் நிறுவனங்களை கியூபாவில் தேசிய உடைமையாக்கி, இன்றுவரை அவற்றின் ஆதிக்கத்தை அனுமதிக்காத ஆத்திரத்தில் அமெரிக்கா இருக்கிறது. வெளியே மனித உரிமை மீறல் என்று பொய்யுரைக்கிறது. அமெரிக்க அணி நாடுகளைத் தவிர்த்து பல்வேறு நாடுகள் கியூபா மீதான பொருளாதாரத் தடையை நீக்க  ஐ.நா.வில் வாக்களித்தாலும் எந்தப் பயனுமில்லை. ஐ.நா என்பது அமெரிக்கவிற்கான உலக தூதராக இருக்கும் வரை கியூபாவின் நிலைமை சிக்கலாகத்தானிருக்கும்.

பொருளாதாரத் தடையை விலக்கினால் இன்னும் லட்சக்கணக்கான மக்களுக்கு கியூபாவால் உதவி செய்ய முடியும்.

நமது ஊரில் ப்ளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் படிக்க விழையும் மாணவர்கள் எதிர்காலத்தில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்க்க இருப்பதாக கூறுவதை ஒவ்வொரு வருடமும் கேட்கிறோம். ஆனால், அப்படி சொல்லிய வண்ணம் செயல்படுகிறவர்களை நாம் பார்த்ததில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மார்க்ரெட் சான், உலகில் ஏழை மக்கள் மருத்துவம் படிக்க வழிவகை செய்திருக்கும் ஒரே நாடு கியூபா என்று புகழ்கிறார். கியூபாவின் ஐம்பதாயிரம் மருத்துவர்கள் உலகம் முழுவதிலும் 60 ஏழை நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நாட்டில் மழை ஏன் பொழிகிறது என்றால் ”இங்கு நல்லவர்கள் கொஞ்சம் பேராவது இருப்பதால் தான்” என்று சிலர் சொல்வது நமது காதில் அடிக்கடி விழுகிறது. இந்த உலகம் ஏன் கொள்ளை நோயால் கொல்லப்படவில்லை என்றால் உலகம் முழுவதும் கியூபா மருத்துவர்கள், இருக்கும் இடம் தெரியாமல் செய்து வருகின்ற தொண்டூழியத்தால் தான் என்று கூறுவது மிகையாகுமா?

– சம்புகன்.

மேலும் படிக்க