privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்இதர நாடுகள்மோடி அரசு: அதானி குழுமத்தின் ஏஜென்சி!

மோடி அரசு: அதானி குழுமத்தின் ஏஜென்சி!

-

“நாலும் உதிர்த்தவன்” என்பார்களே, அதற்கு எடுத்துக்காட்டு யார் என்று கேட்டால் நரேந்திர மோடி என்று தயங்காமல் சொல்லலாம். பதவியில் அமர்ந்த பின்னரும் அதானியின் எச்சில் காசில்தான் மோடி தன்னுடைய இமேஜைப் பராமரித்துக் கொள்கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் மோடி முழங்கினாரே, அத்தனையும் அதானியின் செலவுதான் என்கிறது அவுட்லுக் வார இதழ். “மாப்பிள்ளை அவருதான், ஆனா அவரு போட்டிருக்கிற சட்டை என்னுடையது” என்று சொல்லாமல் சொல்லியபடி மோடியின் கூடவே அமர்ந்திருந்தார் கவுதம் அதானி.

மோடி அரசு - அதானி குழுமத்தின் ஏஜென்சிஆஸ்திரேலியாவில் ஜி-20 நாடுகளின் கூட்டத்துக்குப் போவதாக மோடி சொல்லிக் கொண்டாலும், அங்கே குவீன்ஸ்லாந்தில் உள்ள கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்தை அதானிக்கு வாங்கித் தருவதும், அங்கே வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை ஏற்றுமதி செய்வதற்குரிய ரயில் வழித்தடம் மற்றும் துறைமுக வசதிகளை அந்த மாநில அரசைக் கொண்டே ஏற்பாடு செய்து தருவதும்தான் அவரது பயணத் திட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருந்திருக்கிறது. அதானி ஆஸ்திரேலியாவிலேயே சுரங்கம் வாங்கி விட்டதால், இந்தியா வல்லரசாகி விட்டது என்று மோடி பக்தர்கள் புளகாங்கிதம் அடையக்கூடும். யாருடைய காசைக் கொடுத்து சுரங்கத்தை வாங்கினார் என்பது முக்கியமல்லவா?

சுரங்கத்தை வாங்குவதற்கு பாரத ஸ்டேட் வங்கி, அதானிக்கு 6200 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறது. இத்தனை பெரிய தொகையை, அதுவும்  வெளிநாட்டில் சொத்து வாங்குவதற்காக, வேறு எந்த முதலாளிக்கும் எந்த இந்திய வங்கியும் கொடுத்ததில்லை. ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து, டாயிஷ் வங்கி, எச்.எஸ்.பி.சி., உள்ளிட்ட எந்த பன்னாட்டு வங்கியும் அதானிக்கு கடன் தர மறுத்த நிலையில்தான், பாரத ஸ்டேட் வங்கி கடன் கொடுத்திருக்கிறது. அதாவது கொடுக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது.

பன்னாட்டு வங்கிகள் அதானிக்கு கடன் தர மறுத்ததற்கு காரணம் என்ன? முதலாவதாக, இந்தச் சுரங்கமும் நிலக்கரியை ஏற்றுமதி செய்வதற்கான “அப்பாட் பாயின்ட்” துறைமுகமும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தக் கூடியவை. கிரேட் பாரியர் ரீஃப் என்ற உலகின் மிகப்பெரிய பவளப்பாறைத் தொடருக்கு இத்துறைமுகம் அழிவைக் கொண்டுவரும். குஜராத்தின் மாங்குரோவ் காடுகளை அழித்து கண்ட்லா துறைமுகத்தை உருவாக்கிய யோக்கியரே அதானி என்பதால், இந்த அச்சம் நியாயமானது. இரண்டாவதாக, நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கான செலவு அதிகமாக இருக்கும் என்பதால் இது இலாபகரமான தொழிலாக இருக்காது. மூன்றாவதாக, மிகவும் முக்கியமாக, அதானி நிறுவனத்தின் தற்போதைய மொத்தக் கடன் 81,122 கோடி ரூபாய். அதானி இந்தக் கடனை அடைப்பதற்கான வாப்பு கிடையாது. இந்தக் கடனுக்கு நிகரான சொத்து மதிப்பும் அதானிக்கு இல்லை. எனவே 6200 கோடி ரூபாயும் வாராக்கடனாக மாறும் வாய்ப்பே அதிகம் என்பது பன்னாட்டு வங்கிகளின் மதிப்பீடு. இக்காரணங்களால்தான் அவை கடன் தர மறுத்திருக்கின்றன.

அதானி, மோடி, ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்தை அதானிக்கு வாங்கித் தருவது தொடர்பாக குவீன்ஸ்லாந்து மாநில அதிகாரிகளோடு பேசி முடிக்கும் நரேந்திர மோடி. (உடன்) பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா மற்றும் கௌதம் அதானி.

இந்த காரண காரியங்களையெல்லாம் மீறி இவ்வளவு பெரிய தொகையைக் கடனாக கொடுத்திருக்கும் பொதுத்துறை வங்கி, என்ன நம்பிக்கையில் கடன் கொடுக்கிறோமென்று விளக்கமளிக்க வேண்டுமல்லவா? கடன் ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூச்சல் போட்டும்கூட விவரங்களைத் தர மறுக்கிறது ஸ்டேட் வங்கி. “வங்கிகள் கடன் கொடுப்பதையெல்லாம் பொதுமக்கள் விவாதத்துக்கா உட்படுத்த முடியும்?” என்று திமிராகக் கேட்கிறார் நிதியமைச்சர் ஜேட்லி.

மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா சமீபத்தில் பேசியிருக்கும் பேச்சே, ஜேட்லிக்கு உரிய பதிலாக அமைந்திருக்கிறது. சிறு, குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் தர மறுப்பதாகவும், கடன் வழங்குமாறு ரிசர்வ் வங்கி கொடுத்துள்ள  வழிகாட்டுதலைப் புறக்கணிப்பதாகவும், இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும் பதிலுக்குக் காத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். (தமிழ் இந்து, 20.11.2014)”இதற்கெல்லாம் பதிலளிக்கத் தேவையில்லை” என்பதுதான் ஜேட்லி ஏற்கெனவே அளித்திருக்கும் பதிலின் பொருள்.

அதானிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடன் என்பது இப்போது வெளியே தெரிகின்ற ஒரு சலுகை மட்டுமே. அங்கே ஆண்டொன்றுக்கு 60 மில்லியன் டன் நிலக்கரி எடுப்பது அதானியின் திட்டம். 2016-17-ம் ஆண்டில் இந்தியாவின் நிலக்கரிப் பற்றாக்குறை 185-265 மில்லியன் டன்னாக இருக்கும் என்பது இந்திய அரசின் மதிப்பீடு. அதானியின் நிலக்கரியை சர்வதேச சந்தை விலையில் இந்தியா இறக்குமதி செய்யும் என்பதை சொல்லத் தேவையில்லை. நிலக்கரியின் சர்வதேச சந்தை விலை குறைந்து போகும் பட்சத்தில், அதானி சொன்ன விலைக்கு இந்திய அரசு நிலக்கரியை வாங்கும். இது நடக்கவிருக்கும் கொள்ளையின் முழுப் பரிமாணம் அல்ல, ஒரு பரிமாணம் மட்டுமே.

2002-ல், குஜராத்தில் மோடியின் ஆட்சி துவங்கியபோது அதானி குழுமம் நடத்திய வணிகத்தின் மதிப்பு ரூ 3741 கோடி. 2014-ல் ரூ 75,659 கோடி. 20 மடங்கு வளர்ச்சி. அதானிக்கு குஜராத்தை திருடிக் கொடுத்த மோடி, அன்று முதல்வராக இருந்தார். இன்று பிரதமராகி விட்டதால் திருட்டு தேசியமயமாகியிருக்கிறது.

– தொரட்டி
_______________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
_______________________________