privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்இரும்பை உருக்கிய கரங்கள் முதலாளித்துவத்தை வீழ்த்தாதா ?

இரும்பை உருக்கிய கரங்கள் முதலாளித்துவத்தை வீழ்த்தாதா ?

-

கழுத்தை இறுக்குது லாபவெறி! தொழிலாளி வர்க்கமே கொதித்தெழு!

“முதலீட்டாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், அவர்களது நலன்களைப் பாதுகாப்பதும் அரசின் கடமையாக உள்ளது. இல்லை என்றால் முதலீட்டாளர்கள் வேறு நாடுகளுக்குப் போய் விடுவார்கள். இதனடிப்படையில் முதலாளிகளுக்கு என்னென்ன தேவையோ அதை எல்லாம் செய்து தருவதுதான் அரசின் வேலை” என்று மோடி சொல்லி வருகிறார். இதனை ஒவ்வொரு நடவடிக்கையிலும் செய்து காட்டி வருகிறார். நவமபர் 24 முதல் நடைபெற்று வருகின்ற நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் தொழிலாளர் நலச்சட்டங்களை ஒழித்துக் கட்டுவதன் மூலமும், பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டினை அனுமதிப்பதன் மூலமும் முதலாளிகளின் மனதைக் குளிர வைப்பதற்கு எல்லாவித தயாரிப்புகளையும் செய்து வருகிறார் “மேககப்” மோடி.

capitalism-killsமோடி அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே தொழிலாளர் நலச்சட்டங்கள் சிலவற்றில் திருத்தம் செய்வதற்கு முடிவெடுத்தது. ஓவர்டைம் செய்வதற்கான வரம்புகளை தளர்த்துவது, பெண் தொழிலாளர்கள் இரவுப்பணி செய்வதற்கு இதுவரை இருந்து வந்த பாதுகாப்பு விதிகளை ஒழித்துக் கட்டுவது. எல்லாவித வேலைகளிலும் அப்ரன்டீஸ் தொழிலாளர்களை ஈடுபடுத்தி நிரந்தரத் தொழிலாளர்களை காவுகொடுப்பது, அரசாங்கத்துக்கு சட்டப்படியாக விபரங்களை தெரிவிக்கும் கட்டாயத்திலிருந்து முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பது போன்றவற்றை அறிவித்தார் மோடி. முதலாளிகளின் லாபவெறிக்கு இது போதாது என்பதால், மேக்-இன் இந்தியா என்ற திட்டத்தையும், “உழைப்பே வெல்லும்” என்கிற பெயரில் மற்றொரு திட்டத்தையும் அடுத்தடுத்து அறிவித்தார். இவை அனைத்துமே முதலாளிகளின் அகோரப்பசிக்கு தொழிலாளி வர்க்கத்தை பலியிடக் கூடிய நாசகாரத் திட்டங்களாகும்.

மேக்-இன் இந்தியா என்கிற பெயரில் எந்த நாட்டு முதலாளிகள் இந்தியாவில் தொழில் தொடங்கினாலும் அவர்களுக்கு தேவையான வரிச்சலுகைகள், கடன் வசதிகள், சர்வதேச தரம் வாய்ந்த உள்கட்டுமான வசதிகள் போன்றவற்றை செய்து தருவதோடு தொந்தரவு இல்லாத – மலிவான தொழிலாளர்களை சப்ளை செய்வதற்கும் உறுதியளித்துள்ளார். இது போதாது என்பதால் அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா போன்ற பலநாட்டு முதலாளிகளை நேரில் சந்தித்து உத்தரவாதம் அளித்து வருகிறார்.

தொந்தரவு இல்லாத, மலிவான தொழிலாளர்களை சப்ளை செய்வதற்கு வசதியாக தொழிலாளர் நலச் சட்டங்களை இன்னும் கூடுதலாக திருத்துவதற்கு கூடுதலாக உழைக்கிறார் மோடி. “உழைப்பே வெல்லும்” என்கிற பெயரில் இந்தியத் தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை மிகவும் மலிவான விலையில் முதலாளிகள் உறிஞ்சிக் கொழுப்பதற்கு திட்டம் போட்டுக் கொடுத்துள்ளார்.

எங்கும், எதிலும் அப்ரண்டீஸ் தொழிலாளர்களை திணித்து, நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக் கட்டும் சதித்தனத்தை ஊக்குவிக்கின்றனார். அப்ரண்டீஸ் என்றாலே குறைந்த செலவில், அதிக வேலை செய்வது என்பது உலகறிந்த உண்மை. இந்த லட்சணத்தில் அப்ரண்டீஸ் தொழிலாளர்களுக்கு தரப்படுகின்ற சம்பளத்தில் (ஸ்டைபண்டு என்கிற உதவித் தொகையில்) பாதித் தொகையை மத்திய அரசே முதலாளிகளுக்கு திருப்பித் தந்து விடுமாம். உழைக்கும் மக்கள் பயன்படுத்துகின்ற ரேசன் பொருட்களுக்கும், எரிவாயு சிலிண்டருக்கும் மானியம் தரமுடியாது என்று திமிர்த்தனம் செய்கின்ற அரசு, முதலாளிகளுக்கு செய்கின்ற சேவைகளைக் கண்டு நெஞ்சு கொதிக்கிறது.

இதோடு முடிந்து விடவில்லை மோடியின் முதலாளித்துவ சேவை. இனிமேல் முதலாளி எவனும் அரசு அதிகாரிகளைப் பார்த்து அச்சப்படத் தேவையில்லை. லஞ்சமும் கொடுக்கத் தேவையில்லை. ஏனென்றால், ஆலைகளைக் கண்காணிக்கின்ற பொறுப்பில் இருக்கின்ற தொழிற்சாலைகள் ஆய்வாளர்களது பல்லைப் பிடுங்கி விட்டார் மோடி. ஆலைப்பாதுகாப்பு ஏற்பாடுகள், தொழிலாளர் நிலைமைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு போன்றவற்றை ஆய்வு செய்வதும், தவறுகள் செய்கின்ற ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்பதும் இந்த ஆய்வாளர்களது அதிகாரங்கள். ஆலைகள் நடத்தவும் காண்டிராக்ட் தொழிலாளர்களைப் பயன்படுத்தவும் லைசன்ஸ் தருவது, 480 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவது போன்ற அதிகாரங்கள் கூட தொழிற்சாலைகள் ஆய்வாளருக்கு இருக்கின்றன. இதை எல்லாம் எந்த ஆய்வாளரும் பயன்படுத்துவதில்லை, ஆனால், தொழிலாளர்கள் போராட்டத்தின் மூலமாக இந்த உரிமைகளை நிலைநாட்டுவதற்கு வாய்ப்பு இருந்தது. அதற்கும் சாவுமணி அடித்துள்ளது மோடி அரசு.

இனிமேல் தொழிற்சாலை ஆய்வாளர் எந்த ஆலைக்கும் போக வேண்டியதில்லை. அவருக்கு தேவையான விபரங்களை முதலாளியே முன்வந்து தெரிவித்து விடுவார். முதலாளி சொல்லுகின்ற வாக்குமூலத்தை வாங்கி வைத்துக் கொள்வதை மட்டும் ஆய்வாளர் செய்தால் போதுமானது. எப்போதாவது, ஆயிரத்தில் ஒரு கம்பெனியை குத்துமதிப்பாக தேர்ந்தெடுத்து பார்வையிடலாம். அவ்வாறு போகின்ற கம்பெனிக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டுத்தான் போக வேண்டும் என்றெல்லாம் முதலாளிகளைப் பாதுகாத்து வருகிறது மோடியின் கேடி அரசு.

வாயைத் திறந்தாலே பொய்களை அள்ளி வீசுகின்ற முதலாளிகள், தங்களது கம்பெனியில் வேலை செய்கின்ற நிரந்தரத் தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் போன்ற விபரங்களையும், அவர்களது உழைப்புக்கேற்ற சம்பளம் தரப்படுகிறதா என்கிற விபரத்தையும் ‘நேர்மை’யாக தானாகவே முன்வந்து அரசுக்கு தெரிவித்து விடுவார்களாம்; அவர்கள்மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கேட்கின்ற லைசன்சை ஆன்-லைன் மூலமாக தருவதோடு, அவர்களுக்கு வேண்டிய சலுகைகளையும் அரசு செய்து கொடுத்து விடுமாம். முதலாளிகள் மீது மோடிக்கு எவ்வளவு கரிசனம்.

ஒட்டுமொத்த சமூகத்துக்கே எதிரியாக இருக்கின்ற முதலாளிகள் மீது காட்டுகின்ற அக்கறையை, நாட்டின் செல்வங்கள் அனைத்தையும் தங்களுடைய உழைப்பால் உருவாக்கி வருகின்ற தொழிலாளி வர்க்கத்தின் மீதும், ஏனைய உழைக்கும் மக்கள் பிரிவினர் மீதும் காட்ட மறுக்கிறது, அரசு. ஏனென்றால் இது முதலாளிகளின் அரசு. இதனால்தான் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகளை கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா ஆட்சியாளர்களும் தீவிரமாக நடைமுறைப்படுத்துகின்றனர்.

நாட்டின் அனைத்து வளங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சூறையாடி வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன் மூலம், அனைத்து தொழில்களிலும் தனியார் மூலதனம் நுழைந்து நாட்டையே கொள்ளையடிக்க ஏற்கனவே வழிவகுக்கப்பட்டுள்ளது. தற்போது, நட்டம் என்கிற பெயரில் தேசிய பஞ்சாலைக் கழகம் (என்.டி.சி), இந்துஸ்தான் ஃபோட்டோ பிலிம்ஸ் (ஊட்டி) உள்ளிட்ட 8 பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதற்கு அறிவிப்பும் வெளியிட்டுள்ளது, மோடி அரசு. இதன் தொடர்ச்சியாக நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இன்சூரன்சு, பாதுகாப்பு ஆகிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. செவ்வாய்கிரகத்தை ‘சுற்றிப் பார்க்க’ ராக்கெட்டை அனுப்பி கைதட்டி குதூகலிக்கிறார் மோடி. ஆனால், பொது மருத்துவத்தை தனியார் மயமாக்கியதன் விளைவாக, தருமபுரியில் பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டைப் போன்ற கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. ராக்கெட் விடத் தெரிந்த அரசுக்கு இலவச மருத்துவம் தருவதற்கு கசக்கிறது. தனியார்மயம் முதல் சட்டதிருத்தங்கள் வரை அனைத்தும் முதலாளிகளின் தேவைக்காகவே.

மற்றொரு புறத்தில், ஜெயாவின் பினாமி அரசு மக்கள் வாழ்வின் மீது கொடுந்தாக்குதல்களை நடத்தி வருகிறது. பால்விலை உயர்வும், மின்கட்டண உயர்வும் உழைக்கும் மக்கள் தலை மீது இடியாக இறங்கியுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதி காவிரி நீரின்றி தவித்துக் கிடக்கிறது. பன்னாட்டு முதலாளிகளோ பூமிக்கடியில் கொட்டிக் கிடக்கின்ற மீத்தேன் வாயு வியாபாரத்திற்காக பொன்விளைந்த தஞ்சை பூமியை பாலைவனமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

தெருவுக்கொரு சாராயக் கடையைத் திறந்து தாராள சப்ளை செய்து வருகின்ற அரசால், விவசாயிகளுக்கு தேவையான உரத்தை சப்ளை செய்ய முடியவில்லை. உரத் தட்டுப்பாடு காரணமாக எஞ்சி நிற்கும் விவசாயமும் அழிந்து கொண்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி பகுதியில் நீர்த்தேக்கம் கட்டுவதற்காக விளைநிலங்களை பறிமுதல் செய்து, நூற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறித்துள்ளது, அரசு. விவசாயத்தையே அழித்து விட்டு யாருக்காக நீர்த்தேக்கம் கட்டுகின்றனர்.

மறுகாலனியாக்க நடவடிக்கைகள் முதலாளிகளுக்கு சொர்க்கத்தையும், உழைக்கும் மக்களுக்கு நரகத்தையும்தான் உருவாக்கி வருகின்றன. முதலாளிகளது லாபவெறி தொழிலாளி வர்க்கம் மட்டுமின்றி அனைத்து உழைக்கும் மக்களது கழுத்தையும் இறுக்குகிறது. கழுத்தின் ஒரு முனை முதலாளிகளின் கையில், மற்றொரு முனையோ அரசின் கையில். இதை சகித்துக் கொண்டு செத்து மடிவதா தொழிலாளி வர்க்கம்? நம்முடைய உழைப்புச்சக்தியை ஒட்ட ஒட்ட உறிஞ்சிக் கொழுக்கின்ற முதலாளிகளின் அதிகாரத்தின் கீழ் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு கூலியடிமைகளாக  வாழப் போகிறோம்? முதலாளிகளுக்கு சொற்ப எண்ணிக்கையில் இருக்கின்ற ஆளும் வர்க்கம் மட்டுமே துணை நிற்கிறது. ஆனால் தொழிலாளி வர்க்கமோ விவசாயிகள், சிறுவணிகர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறுதொழில் புரிவோர் என பலகோடி உழைக்கும் மக்களின் துணையோடு நிற்கிறது. நாட்டில் உள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களது விடுதலை போராட்டத்துக்கு தலைமை தாங்குகின்ற பொறுப்பு தொழிலாளி வர்க்கத்துக்குத்தான் உள்ளது.

இரும்பை உருக்கி எந்திரங்கள் அனைத்தையும் படைக்கின்ற நம்முடைய கைகளுக்கு முதலாளித்துவம் போட்டிருக்கின்ற சுருக்குக் கயிற்றை அறுத்தெறிய முடியாதா? காட்டாற்றின் திசையையே மாற்ற வைக்கின்ற வலிமை படைத்த நம்மால் மூலதனத்தின் பாய்ச்சலைத் தடுத்து நிறுத்திடவும் முடியும். ஓடுகின்ற சக்கரங்கள் எல்லாம் நின்று விடும் – நம்முடைய கைகள் ஆணையிட்டால்!

ஓட்டுக் கட்சிகளாலும் அவர்களைச் சார்ந்த பிழைப்புவாத தொழிற்சங்கங்களாலும், தொழிலாளி வர்க்கத்து வழிகாட்டவோ, தலைமை தாங்கவோ முடியாது. 45,000 தொழிலாளர்களது வேலையைப் பறித்த நோக்கியா மூடப்பட்ட போது ஓட்டுக் கட்சிகளும், அவர்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் செய்த துரோகம் கண்முன்னே நிழலாடுகிறது. இதுபோன்ற எண்ணற்ற துரோகங்களே ஓட்டுக்கட்சிகளது வரலாறாக உள்ளது. கம்யூனிசம் என்கிற வாளேந்தி வருகின்ற புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தலைமையில் அணிதிரள்வோம். முதலாளித்துவ பயங்கரவாதத்தை வேரறுப்போம்.

தொழிலாளர்களே!

  • தொழிலாளர்களது குரல்வளையை நெரிக்கும் வகையில் தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்படுவதை முறியடிப்போம்.
  • வேலைநிரந்தரத்தை அடியோடு மறுத்து, சுரண்டலுக்கு அங்கீகாரம் தருகின்ற சட்டத் திருத்தங்களை எதிர்த்து முறியடிப்போம்!
  • உழைக்கும் மக்களை மரணக் குழியில் தள்ளி, முதலாளிகளை கொழுக்க வைக்கின்ற தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகளை முறியடிப்போம்.

தொழிலாளர் உதவி ஆணையர் – திருப்பெரும்புதூர்

கம்பெனிகள் பதிவுத்துறை – கோவை

அலுவலகங்கள் முன்பாக

முற்றுகைப் போராட்டம்.

17.12.2014 காலை 10 மணி

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
110/63, மாநகராட்சி வணிக வளாகம், 2-ம் தளம்,
என்.எஸ்.கே சாலை, கோடம்பாக்கம், சென்னை – 24
தொ.பே – 88075 32859, 94442 13318, 95977 89801