privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்மனித உரிமை போராட்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டாமா ?

மனித உரிமை போராட்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டாமா ?

-

மனித உரிமை பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை
11ம் ஆண்டு விழா நிகழ்வுகள்

னித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளையின் 11-ம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் மடீசியா, மீனாட்சி அரங்கத்தில் 6.12.2014 மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக் கிளைச் செயலர் லயனல் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார்.

மனித உரிமை தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ளவும், மனித உரிமைக்கான போராட்ட உணர்வைத் தூண்டும் விதமாகவும் இந்த நிகழ்வு நடந்தது.

லயனல் அந்தோணி ராஜ்
லயனல் அந்தோணி ராஜ்

“கடந்த 10 ஆண்டுகளில் மனித உரிமைப் பிரச்சனைகள் இந்தியச் சமூகச் சூழலிலும் தமிழக அரசியல், சமூக சூழலிலும் மிகக் கடுமையானதாக மாறி வருகின்றன. மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மனித உரிமைக்கான போராட்டம் முன்னை விட அத்தியாவசியமாகிறது.

சுவரொட்டி ஒட்டக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. சமீபத்தில் ம.உ.பா.மை. ஒட்டிய சுவரொட்டிக்காக வழக்குப் போட்டுள்ளதாக போலீசு தெரிவித்தது. அ.தி.மு.க.வினர், சாதி அமைப்புகள், மத அமைப்புகள், சினிமாக்காரர்கள் என்று பலதரப்பினரும் சுவரொட்டி ஒட்டுகின்றனர், ஆனால் போலீசு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ‘சுவரொட்டி ஒட்டுவதற்கு முதலில் காவல் உதவி ஆணையர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாநகராட்சியிடம் அனுமதி பெற்று மீண்டும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்றுத் தான் சுவரொட்டிகள் ஒட்ட வேண்டும்’ என்கிறார்கள். பொதுக் கூட்டங்களுக்கு நீதிமன்றத்திலே அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் ம.உ.பா. மையம் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. ஜெயா மீதான தண்டனையை வரவேற்றும், கிரானைட், தாது மணல், ஆற்று மணல் கொள்ளை, கல்வி தனியார் மயம், மதுரைப் பல்கலைக் கழகத்தில் நடந்த ஊழல் முறைகேடுகள் என பல பிரச்சனைகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்திருக்கிறோம்.

தொடக்கத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தில் பலரும் உறுப்பினர்களாகச் சேர்ந்தார்கள். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இதில் உறுப்பினராக இருப்பது பயன்படும் எனக் கருதுகிறார்கள். இது உறுப்பினர்களைப் பாதுகாக்கும் அமைப்பு அல்ல, மக்களுக்காகப் போராடி வருகிற அமைப்பு. சட்டபூர்வமாகவும், சட்டத்திற்கு வெளியேயும் போராடும் அமைப்பு. போராடத் தயாராக இருப்பவர்கள் இதிலே உறுப்பினராகச் சேருங்கள்”

என அறைகூவி லயனல் அந்தோணி ராஜ் உரையாற்றினார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு விவகாரம் பற்றி மக்கள் கலை இலக்கிய கழக மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன்.

தோழர் மருதையன்
தோழர் மருதையன்

அவரது சிறப்புரையிலிருந்து சில கருத்துக்கள்….

“அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்குப் பிரச்சனை இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இல்லை. ஆனால் தமிழக அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருக்கின்ற பிரச்சனை. 2006-ம் ஆண்டு தி.மு.க அரசு கொண்டு வந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை எதிர்த்து மதுரை மீனாட்சி கோயில் பட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள். அர்ச்சகராகப் பயிற்சி பெற்ற, தகுதி உள்ள மாணவர்களுக்குப் பணி வழங்குவதற்கு எதிராக நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளார்கள். இதனால் தகுதி பெற்ற அர்ச்சக மாணவர்கள் தெருவில் நிற்கிறார்கள்.

இந்தப் பிரச்சனை இப்போது உச்ச நீதிமன்றத்தில் இறுதிக் கட்ட விசாரணையை எட்டி இருக்கிறது. சில ஆண்டுகளாக போக்குக் காட்டி வந்த இந்த வழக்கு டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி தொடக்கத்தில் முடிந்துவிடும் எனக் கருதுகிறேன். இந்த வழக்கில் மனித உரிமை பாதுகாப்பு மையம், அர்ச்சக மாணவர்கள் சார்பில் ஒரு தரப்பினராக இணைந்துள்ளது. ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கையை முன் வைத்த பெரியாரின் தற்போதைய வாரிசுகள் இதில் தலையிடவில்லை. தி.க. தலையிடவில்லை. தி.மு.க. தலையிடவில்லை. மாணவர்கள் தற்போது அனாதையைப் போல் கேட்பாரில்லாதவர்களாக இருக்கிறார்கள். திராவிட வாரிசுகள், பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாரும் இதை செய்வதற்குத் துப்பில்லை.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதற்கு மிகுந்த செலவு ஆகிறது. வழக்கறிஞர்களுக்கு மிகுந்த அளவு பணம் தரவேண்டும். நடிகர்கள் கால்சீட் போல் வழக்குக்கு ஆஜராவதற்கு வழக்கறிஞர்கள் பணம் கேட்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது உடனே பணத்தைத் திரட்டிக் கொண்டு ஓட வேண்டும். திட்டமிட்ட முறையில் கூட உச்சநீதிமன்றம் செயல்படுவதில்லை. கீழமை நீதிமன்றத்தைவிட தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு வருகிறது உச்ச நீதிமன்றம். இதுவரை இவ்வழக்கில் 20 தடவை வாய்தா வாங்கி யிருக்கிறார்கள். ஆனால் தற்போது தமிழக அரசு நீதிமன்றத்துக்கு வெளியே முடித்துக் கொள்கிறோம் என்று பேசிவருகிறது. அதன் அர்த்தம் ஆகம விதிப்படி உள்ள கோயில்களைத் தவிர அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிற கோயில்களில் பணி நியமனம் என்கிறார்கள். அர்ச்சக மாணவர்களைச் சங்கத்தை விட்டு விலகிவிடுமாறு மிரட்டினார்கள். அவர்களையும் நாம் தொடர்ச்சியாகப் பாதுகாக்க வேண்டியதிருந்தது.

சமீபத்தில் வீரமணி கருவறை நுழைவுப் போராட்டம் அறிவித்தார். ஆனால் போராட்டம் நடைபெறவில்லை. இந்த வழக்கில் இவர்கள் அனைவரும் கள்ள மவுனம் சாதித்து வருகிறார்கள். தங்கள் சொத்துக்களை, அரசியலைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அமைதியாக இருக்கிறார்கள். இதை மக்கள் கண்டித்துப் போராட முன்வர வேண்டும்.

பெரியார் 1972-ல் கருவறைப் போராட்டம் அறிவித்தார். அதன் பின் கருணாநிதி சட்டம் கொண்டு வந்தார். ஆகம விதிப்படி தகுதியுள்ளவர்கள் அர்ச்சகராவதற்குப் பதில் வாரிசு அடிப்படையில் 70% அர்ச்சகராக உள்ளனர். இதைக் கண்டித்து அரசு நீதிமன்றத்திற்குப் போயிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.

தில்லைக் கோயிலை அறநிலையத்துறை எடுக்க உத்தரவு வாங்கிக் கொடுத்தோம். இது 2009-ம் ஆண்டு வழக்கு. பார்ப்பன நீதிபதியிடம் விசாரணைக்கு வந்தது. இந்த நீதிபதி தான் சேது சமுத்திரத் திட்டத்திற்குத் தடைவிதித்தவர். ஜெயாவுக்கு ஆதரவாக பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு வழங்கியவர். தில்லை வழக்கில் எங்களால் முடிந்த வரை போராடிப் பார்த்தோம். கட்டபஞ்சாயத்துப் போல சொத்து தீட்சிதர்களுக்குப் போனது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கில் தமிழக அரசு எதிரிகளுக்குத் துணை போகிறது. இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக நாம் போராடுவதற்குக் காரணம் தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு மரபு உள்ளது. அந்த மரபின் தொடர்ச்சியாகத் தான் நாம் இதை எதிர்த்துப் போராடி வருகிறோம். இந்த மரபைத் தான் ஒழித்துவிடத் துடிக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பல்.

தற்போது தருண் விஜய்க்குத் தமிழ் மீது திடீர்க் காதல். நடிக்கிறார்கள். திருவள்ளுவரைப் பிரபலப்படுத்துவது, தமிழ் பற்றிப் பேசுவது. இதெல்லாம் செய்கிறார். ஆனால் தருண் விஜய் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தார். சமஸ்கிருதத்தை ஏற்க மறுப்பவர்களைத் தேச விரோதிகள் என்றார்.

சமீபத்தில் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தி வருகிறார்கள். ராஜராஜ சோழனுக்கு விழா எடுக்கிறார்கள். ராஜராஜன் தான் பார்ப்பனர்களைக் கொண்டு வந்து குடியமர்த்தி பார்ப்பனியம் தழைத்தோங்க வழி வகுத்தான். பெரியார் சிலையை உடைத்தது போன்ற பல தருணங்களிலும் நாம் போராடி வந்திருக்கிறோம். பெரியார் சிலையை உடைத்த போது இராமனை செருப்பால் அடித்தோம்.

சமீபத்தில் பா.ஜ.க மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதி ராமனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் முறைகேடாகப் பிறந்தவர்கள் என்றார். நாம் கேட்க வேண்டும் ராமன் யார்? அவன் அப்பன் யார் என.

பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்கப் போகிறோமா? அல்லது சரணடையவா? அனைத்து சாதியினரும் அர்ச்சகர் வழக்கில், பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வேறு எதுவும் செய்ய வேண்டாம். வழக்கிற்கு வக்கீல் வைத்தால் போதும். எங்களுக்கு நீதிமன்றத்தில் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் போராடாமல் தோற்கக்கூடாது என்பதால் போராடி வருகிறோம்.”

தாதுமணல் கொள்ளை” ஆவணப்படம் வெளியிடுவதற்கு முன்பாக அதைக் காட்சிப் பதிவு செய்த போது எதிர்கொண்ட சவால்கள் மற்றும் பிரச்சனைகளைப் பற்றி ம.உ.பா. மையத்தின் மாவட்டத் துணைச் செயலர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசியதாவது,

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

“கிரானைட் கொள்ளையைப் போல் தாது மணல் கொள்ளை குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் அறிக்கை தருகிறார். உடனே உண்மையறியும் குழு அமைத்து விசாரணைக்குச் செல்கிறோம். கடற்கரைப் பகுதி முழுக்க அழிவு. வைகுண்டராசன் ஆட்கள் எங்களைப் பின்தொடர்வது, மிரட்டுவது தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருந்தது.

பெரியதாழையில் வைகுண்டராசனின் சகோதரர் சுகுமாரன் கடல் நீரைத் திருடி, கடலை ஆக்கிரமிப்பு செய்திருந்தார். அங்கே இருந்த தூண்டில் வளைவுப் பாலத்தை அழித்துவிட்டார். தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடத்தினோம். அதில் வந்து ரவுடித்தனம் செய்து கூட்டத்தைக் கலைக்கப் பார்த்தார்கள். எஸ்.பி, டி.ஐ.ஜியிடம் பேசினோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நமது தோழர்கள் கம்பு, தடி என களத்தில் இறங்கிய பின் தான் போலீசு வந்து அவர்களை அப்புறப்படுத்தியது.

சமீபத்தில் வைகுண்டராசன் மீது சி.பி.ஐ. லஞ்ச வழக்கு போட்டுள்ளது. அதற்காகத் தூத்துக்குடியில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இந்த பிரச்சனையில் நாம் தலையிட்டதிலிருந்து விலகிக்கொள்ள எவ்வளவு பணம் வேண்டும் எனக் கேட்கிறார்கள். ஒருவர் பிரச்சாரத்தின் போது ரூ 25,000/- நன்கொடை தந்தார். அவர் நோக்கம் சந்தேகத்திற்கு உரியதாக இருந்ததால் அதை திருப்பித் தந்தோம். பணம் தருவது அல்லது போலீசு, ரவுடிகளை வைத்து மிரட்டுவது என்று செயல்படுகிறார் வைகுண்டராசன். அவருடைய உருட்டலுக்கும், மிரட்டலுக்கும் பயப்படாத, பணத்திற்கு மசியாத ஆட்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் நாம் கடைசி வரையில் செயல்படுவோம்.”

தாது மணல் கொள்ளை” ஆவணப்படத்தை தோழர் மருதையன் வெளியிட, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலர் திருநாவுக்கரசு அவர்கள் பெற்றுக் கொண்டார்.

“தாது மணல் கொள்ளை” ஆவணப்பட வெளியீடு
“தாது மணல் கொள்ளை” ஆவணப்பட வெளியீடு

தாதுமணல் – கிரானைட் – ஆற்றுமணல் கொள்ளை : சகாயம் குழு விசாரணையை முடக்கும் அரசு! தீர்வு என்ன?” என்ற தலைப்பில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு பேசியதாவது,

“கொசு கடித்தால் அனிச்சைச் செயலாக அதை அடிக்கிறோம். அதுபோலத்தான் நமது பிரச்சனைகளுக்கு உடனே எதிர்வினை ஆற்ற வேண்டும். நம்மைப் பாதிக்கின்ற பல்வேறு பிரச்சனைகளுக்காக நாம் ஏன் போராடவில்லை. அதற்குத் தான் இந்தக் கூட்டம். ஒருவர் பிச்சை எடுக்கிறார் என்றால், ஒரு பிரச்சனைக்குப் போலீஸ் வழக்குப் பதியவில்லை என்றால், ஒரு பெண் தீக்குளிக்க முயன்றால் நாம் ஏன் என்று கேட்க வேண்டும்.

தோழர் சி ராஜூ
தோழர் சி ராஜூ

சகாயம் ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார். 23 ஆண்டுகள் சர்வீஸில் 22 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். நாங்கள் அவரை நாமக்கல் கலெக்டராக இருந்த போது சந்தித்திருக்கிறோம். ஒரு தொழிற்சாலையில் நடந்த தீ விபத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் 7 பேர் இறந்து போனார்கள். உடனே நாங்கள் ‘தேர்தலுக்குத் தேவையற்ற பிணங்கள்’ என்று சுவரொட்டி ஒட்டினோம். கலெக்டர் சகாயத்தை சந்தித்து பீகார் தொழிலாளர்கள் பிணங்களை அவர்கள் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உத்தரவு பெற்றுத் தந்தோம். ஆனால் இயற்கை வளக் கொள்ளையில் சகாயம் என்ன செய்ய முடியும்?

ஒவ்வொரு ஊழலிலும் நாம் அதன் மதிப்பைச் சொல்ல முடியும். ஆனால் வைகுண்டராசன் கொள்ளை எவ்வளவு, அதன் மதிப்பு எவ்வளவு எனச் சொல்ல முடியாது. இதைச் சொல்லத்தான் சகாயம். ஆனால், இதைச் சொல்லவிடக் கூடாது என நினைக்கிறார்கள். அதனால்தான் தடைபோடுகிறார்கள்.

உமாசங்கர் ஐ.ஏ.எஸ். எல்காட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த போது சில மின்னணுப் பொருட்கள் வாங்குகிறார். ஆனால் அதில் ராஜாத்தி அம்மாள் தலையிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு சிபாரிசு செய்கிறார். அதை உமாசங்கர் புறக்கணித்தார். மாறன் சகோதர்களை என்.எஸ்.ஏ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார். எவ்வளவு கொள்ளை, திருட்டு, யார் உடந்தை என வாக்கு மூலம் தாக்கல் செய்தார். அதன் விபரங்களை ம.உ.பா.மையம் வாங்கி வழக்குப் போட்டோம்.

சகாயமும் எந்த உண்மையையும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக மதுரையோடு நிறுத்துகிறார்கள். ஆற்று மணல், தாது மணல் கொள்ளைகளை விசாரிக்க விடாமல் முடக்குகிறார்கள். ஒருவேளை சகாயம் கொள்ளைகள் குறித்து நடவடிக்கைக்குப் பரிந்துரை கொடுப்பார். ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை. ககன்தீப்சிங் பேடி அறிக்கையைத் தந்தார். அரசு வெளியிடவில்லை. நீதிமன்றத்திற்குச் சென்றால் மதுரையில் வெளியிட நீதிமன்றம் உத்திரவிட்டது. சென்னை நீதிமன்றம் வேண்டாம் என்றது.

சகாயம் குழு விசாரணை செய்ய வேண்டும் என்று டிராபிக் ராமசாமி ஒரு வழக்குத் தொடுத்தார். அதன் அடிப்படையில் விசாரிக்க குழு நியமித்தது நீதிமன்றம். ஆனால் தமிழக அரசு அதை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்றது. ஆனால் தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. மீண்டும் மேல் முறையீடு செய்தார்கள். ஆனால் ரூ 10,000/- அபராதம் போட்டது உயர் நீதிமன்றம். சகாயம் மதுரைக்கு வருவதற்கு ரயிலில் இடம் கூட ஏற்பாடு செய்து தரவில்லை தமிழக அரசு. சென்னையிலிருந்து காரில் வந்துள்ளார். நீதிமன்றத்தில், தான் எந்த மாவட்டத்தில் எந்தப் பிரச்னையைப் பற்றி விசாரிக்க வேண்டும் எனக் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். மதுரையை மட்டும் பார்த்தால் போதும் என்று இப்போது சொல்லிவிட்டது உயர் நீதிமன்றம்.

மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆண்டு விழாஆற்று மணலை பொதுப்பணித்துறை மட்டும் தான் அள்ளுகிறது என்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு முழுக்க முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் பினாமிகள் தான் அள்ளுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இவற்றையெல்லாம் இயற்கை வளக் கொள்ளைகள் எனப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் போலீஸையும் கூட்டிக் கொண்டே திருட வருவது போலத்தான், சுற்றுச் சூழல் ஆணையம், அனைத்து அரசு அதிகாரிகள், காவல் துறை ஆகியவர்களின் துணையோடு தான் கொள்ளை நடக்கிறது. கல்வி விசயத்தில் தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு ஆதரவாக சிங்காரவேலர் கமிட்டி செயல்படுகிறது.

ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்கிறார்கள். அதற்குச் சுற்றுசூழல் துறை அனுமதி அளிக்கிறது. மேலும் எதிர்த்தால் பசுமைத் தீர்ப்பாயம் போங்கள் என்கிறார்கள். அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. அவர் மணல் கொள்ளையின் கூட்டாளியாக இருப்பார். அங்கே வழக்கைப் பதிந்து விட்டு வழக்குப் போட்டவர் காசை வாங்கிக் கொண்டு கழண்டு கொள்கிறார். வக்கீல் தனியாக வாதாடிக் கொண்டிருக்கிறார். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை எத்தனையோ பேரை வாழ வைத்திருக்கிறது. ராஜாவிலிருந்து அதைப்பற்றி எழுதிய ஊடகங்கள் வரை நீதிமன்றம், அரசு, அதிகாரவர்க்கம் அனைத்தும் மக்களுக்கு எதிராக இருக்கிறது. சகாயம் இன்று செய்யவேண்டியது இதுதான். விசாரணையை முடக்க நினைக்கும் அனைவரையும் அம்பலப்படுத்துவதுதான். அவர்களைத் தண்டிக்க நாங்கள் போராடுகிறோம் என அவரிடம் தெரிவிக்க வேண்டும்.

ஆற்று மணல் கடத்தலில் கூட ‘லஞ்சம் வாங்கியவர்களைக் கைது செய்’ என எங்கள் பகுதியில் சுவரொட்டியைத்தான் முதலில் ஒட்டினோம். மணல் கொள்ளை விசயத்தில் மக்கள் போராட வருகிறார்கள். சிறுவர்கள் கூட கூரையை எரித்து துணிச்சலோடு போராடினார்கள். அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்களும் கட்சியைத் தாண்டி போராட்டத்திற்கு வந்தார்கள். நாம் போராடாமல் இருப்பதற்கு எவ்வளவு விலை வேண்டும் என்கிறார்கள். அதற்கு ஒரே விலை தான் உள்ளது. அது மக்கள் விடுதலை மட்டும் தான். நாங்கள் புரட்சிகர பாரம்பரியம் உள்ள அரசியலால் வழி நடத்தப்படுகிறோம். அது தான் அவர்களை அச்சுறுத்துகிறது. அவர்களைத் தொடர்ந்து அச்சுறுத்துவோம்”

எனக் கூறி முடித்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கு : தண்டனை ஜெயலலிதாவுக்கா? தமிழ்ச் சமுதாயத்துக்கா? என்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் உரையாற்றினார். (அந்த உரையின் சுருக்கத்தை தனிப் பதிவாக வெளியிடுகிறோம்).

மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆண்டு விழா

தோழர் மருதையன் உரைக்குப் பின்னர் மையம் வீதி நாடக இயக்கத்தின் சார்பில் ‘கௌரவக் கொலை’ நாடகம் நிகழ்த்தப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இறுதியாக வாஞ்சிநாதன் நன்றி தெரிவிக்க கூட்டம் நிறைவடைந்தது.

கூட்டத்திற்குப் பெருந்திரளாக இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், வங்கிப் பணியாளர்கள், விவசாயிகள், பட்டறைத் தொழிலாளர்கள், தோழமை அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அரங்குக்கு வெளியே திரையில் நிகழ்ச்சிகள் திரையிடப்பட்டது. அங்கும் நூற்றுக் கணக்கில் மக்கள் இறுதிவரை இருந்து கூட்டத்தைச் சிறப்பித்துப் புதிய புரிதலுடன் சென்றனர்.

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
மதுரை மாவட்டக் கிளை

பேச : 94434 71003, 98653 48163

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க