privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இலக்கு வைத்து அரசு நடத்தும் கொலைகள்

இலக்கு வைத்து அரசு நடத்தும் கொலைகள்

-

“டாஸ்மாக்” – சாராயக் கடைகளுக்கு, மின்வாரியம் வசூல் மையங்களுக்கு, “பிரீமியம்” ரயில்களுக்கு இவ்வளவு தொகை கல்லாக் கட்ட வேண்டும்” என்று தான்தோன்றித்தனமாக ஒரு இலக்கு வைத்து அரசே கொள்ளையிடுவது – வழிப்பறி செய்வது பற்றிய செய்தி விமர்சனம் எழுதுவதற்கு எண்ணினோம்; ஆனால், இத்தனை நாட்களில் இத்தனைப் பேரைக் கொல்வது என்பதாக அரசே இலக்கு வைத்து கொலை செய்யும் ஒரு அதிர்ச்சிச் செய்தி வந்திருக்கிறது.

வம்பர் 8 அன்று, சட்டிஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டம், பென்டாரி என்ற கிராமத்தில் நடந்த குடும்பக் கட்டுப்பாடு கருத்தடை சிறப்பு முகாமில், 83 பெண்களுக்கான அறுவைச் சிகிச்சை செய்ததில் 13 பெண்கள் மரணமடைந்தார்கள். அடுத்த இரண்டு நாட்களில் அதே மாவட்டத்தில் உள்ள குவரெல்லா கிராமத்தில் நடந்த கருத்தடை சிறப்பு முகாமில், 56 பெண்களுக்கான அறுவைச் சிகிச்சை செய்ததில் ஒரு பழங்குடிப் பெண் மரணமடைந்தார். இவ்விரு முகாம்களிலும் மேலும் பல பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அம்மாநிலத்தின் வெவ்வேறு மருத்துமனைகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பென்டாரி படுகொலைகள்
பென்டாரி கிராமத்தில் நடந்த கருத்தடை அறுவை சிகிச்சைக்குப் பின் உயிருக்குப் போராடும் நிலையில் பிலாஸ்பூர் மருத்துவமனையில் கிடத்தப்பட்டுள்ள இளம் தாய்மார்கள்.

“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்ற வசனம் எல்லா சந்தர்ப்பவாதக் குரூரங்களையும் அரசியல் கிரிமினல் குற்றங்களையும் நகைச்சுவை வேடிக்கையாக்கித் தட்டிக்கழிக்கும் தப்புவிக்கும் விசயங்களாக்கி விட்டதைப்போல, நமது மக்களின் அன்றாடச் சாவுகள் சகஜமாகிவிட்டன. பிழைகளோடு எழுதப்பட்ட காகிதத்தைக் கசக்கிக் கிழித்துக் குப்பைத்தொட்டியில் போடுவதைப் போல இந்தச் சாவுச் செய்திகள் துச்சமாக மதிக்கப்பட்டு, மறந்து போய்விடுகின்றன.

உணர்வுகள் மரத்துப்போன இந்தத் “தேசத்தில்” மக்கள் உயிர்களுக்கு இவ்வளவுதான் மதிப்பு! ஆனால், உணர்வுகள் இன்னமும் மரத்துப்போகாத கொஞ்சம் பேருக்கு இந்த சட்டிஸ்கர் மாநிலச் சாவுச் செய்திகள் நெஞ்சைப் பதற வைக்கிறது!

கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் டாக்டர் குப்தா
கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் டாக்டர் குப்தா

ஏனென்றால், இச்சாவுகள் ஏதோ மருத்துவச் சிகிச்சையின்போது, “கிரிமினல்” அலட்சியத்தால்  நேர்ந்துவிட்ட தவறுகள் அல்ல. இவ்வாறான “சாவுகள்” நிகழ்வற்கான எல்லா காரணிகளையும் -அடிப்படைகளையும் மருத்துவ மற்றும் அரசு நிர்வாகமே உருவாக்கி வைத்திருந்தது; இவ்வாறு நிகழ்வதற்கான சாத்தியங்கள் மனித மதிப்பீட்டிற்கு, அதுவும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்தினரின் மதிப்பீட்டிற்கு அப்பாற்பட்டதும் அல்ல. ஆகவே, தெரிந்தே நிகழ்த்திய இச்சாவுகளை ஏன் இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொலை என்று சொல்லக்கூடாது! அதுவும், இவ்வளவு காலத்துக்குள் இவ்வளவு கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்து செய்து முடித்த கொலைகள் என்று ஏன் சொல்லக் கூடாது!

பிலாஸ்பூரில் சிறப்பு முகாம்களில் நடத்தப்பட்ட கருத்தடை அறுவைச் சிகிச்சைகள், மக்கட்தொகையை எதிர்காலத்தில் கட்டுப்படுத்துவது என்ற நோக்கில் மட்டுமல்ல, அங்கு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படும் பெண்களைக் கொலை செய்வதன் மூலம் மக்கள் தொகையைக் குறைப்பதும் நடந்திருக்கிறது. இன்னும் பலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். “அங்கு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்ட பெண்களில் எல்லோரும் செத்து விடவில்லை; ஆகவே, இப்படி நடக்கும் என்பது  தங்களுக்குத் தெரியாது, நேர்ந்துவிட்ட சாவுகளுக்குத் தாங்கள் பொறுப்பல்லவென்றும்” அச்சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்தவர்கள் வாதாடவும் கூடும்.

ஆனால், கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் குறித்த முந்தைய அனுபவங்கள் அடிப்படையில் விதிக்கப்பட்ட தடைகள்,நெறிமுறைகள், வழி காட்டுதல்கள்  எல்லாவற்றையும் இலக்கு ஒன்றையே குறியாக வைத்து பிலாஸ்பூர் சிறப்பு முகாம்களில்  மீறப்பட்டுள்ளன. இந்த வகையில் அதிகாரிகள், ஆட்சியாளர்களோடு கூட்டுச்சேர்ந்து, தொழில்முறை “தர்மங்களை-நெறிமுறைகளை” மீறி மருத்துவர்கள்   நடந்து கொண்டுள்ளார்கள். அரசு விருதுகளையும் பதவி உயர்வுகளையும் பரிசுத்தொகைகளையும் குறிவைத்து போலி மோதல்களை (“என் கவுண்டர்களை”) அரங்கேற்றும் இராணுத்தினர், துணை இராணுவத்தினர், போலீசைப்போல இம்மருத்துவர்கள் கொலைகாரர்களாகச் செயல் பட்டிருக்கிறார்கள்.

சட்டிஸ்கர் பவன் ஆர்ப்பாட்டம்
இலக்கு வைத்து நடத்தப்பட்ட கருத்தடைக் கொலைகளை எதிர்த்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களும் மகளிர் அமைப்புகளும் இணைந்து டெல்லியிலுள்ள சட்டிஸ்கர் பவன் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டம்.

“ஓர் உதவியாளரை வைத்துக்கொண்டு ஒரு மருத்துவர், மூன்று ‘லேப்ரோஸ்கோப்’ கருவிகளைக் கொண்டு ஒருநாளைக்கு முப்பதுக்கும் மேலாக கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் நடத்தக்கூடாது. மேலும் சில அறுவைச் சிச்சை மருத்துவர்களையும் உதவியாளர்களும் ‘லேப்ரோஸ்கோப்’ கருவிகளும் இருந்தாலும் ஒரு முகாமில் ஒருநாளைக்கு ஐம்பதுக்கும் மேலாக கருத்தடை அறுவைச் சிகிச்சைகள்  நடத்தக்கூடாது” என்று உச்சநீதிமன்றம் 2008-ஆம் ஆண்டு தடை விதித்திருக்கிறது. (ஏற்கெனவே, இவ்வாறான பல கொலைகள் நடந்திருப்பதால்தான் உச்சநீதி மன்றம் தடை விதிக்க நேர்ந்திருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள்!)

ஆனால், பென்டாரி என்ற கிராம சிறப்பு முகாமில் ஒரே நாளில் 5 மணிநேரத்தில் 83 பெண்களுக்கும், குவரெல்லா கிராம சிறப்பு முகாமில் ஒரே நாளில் 56 பெண்களுக்கும்  ஒரே உதவியாளரை வைத்துக்கொண்டு ஒரே மருத்துவர் ஒருநாள் விட்டு ஒரு நாள் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். இரத்தப் போக்கோ, தொற்றோ ஏற்படக்கூடாது என்பதற்காக சிறுதுளைபோட்டு அறுவைச் சிகிச்சை செய்யும் ‘லேப்ரோஸ்கோப்’ முறையைப் பயன்படுத்தினாலும், குறித்த நேரத்தில் இத்தனை பேருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது என்பதால் அக்கருவியைக் கொதிநீரில் கழுவிக்கூட (அப்படி ஒருமுறை செய்வதற்குக் குறைந்தது 20 நிமிடம் பிடிக்கும்) அடுத்தடுத்த பெண்களுக்குப் பயன்படுத்தவில்லை.

மூன்றாண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்டு பாழடைந்த மருத்துவமனைக் கட்டிடத்தில், படுக்கை வசதிகள் ஏதுமின்றி, தரையில் கிடத்தி, நஞ்சாகிப்போன ‘லேப்ரோஸ்கோப்’ கருவியை வைத்துத்தான் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதனால், அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்ட பெண்களுக்கு இரத்தப் பெருக்கு ஏற்பட்டது; சீழ்கட்டியது, வலியால் துடிதுடித்துப்போன அவர்கள் ஒவ்வொருவராக மாண்டுபோனார்கள். காலாவதியாகிபோன மற்றும் கலப்பட மருந்துகளே கொடுக்கப்பட்டன. அதன் பிறகு நடந்த விசாரணையில் மருந்துக் கொள்முதலில் ஊழல்கள் நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறன.

08-state-murdersஏன் இவ்வளவு முறைகேடுகள்? ஏன் இவ்வளவு அவசரம்? ஏதுமறியாத ஏழைப் பெண்கள் இப்படிக்கொல்லப்படுவது நிற்குமா? அறிவிக்கப்படாத அரசிதழான “தி இந்து” எழுதுகிறது, “கருத்தடை செய்து கொள்ளும் பெண்களுக்கு ஈட்டுத்தொகைகள் வழங்குவதும் மற்றும் மருத்துவர்களுக்கு அறுவைச் சிகிச்சை எண்ணிக்கைகளுக்கேற்ப ஊதியமளிப்பதும், கருத்தடை இலக்குகளை எட்டுவதற்கான உயிர்க் கொல்லி நிர்ப்பந்தம் இருக்கும் வரை விதிகள் மீறப்படுவதும், மரணங்கள் நிகழ்வதும் வருத்தமளிக்கும் வகையில் நீடிக்கும்.  இதை மேலும் மோசமாக்குகிறது குழந்தைகள் பிறப்பு, பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பதின்மர்களின் ஆரோக்கியம் குறித்த 2020 ஆண்டுக்குள் ‘ஆயிரமாண்டுகளின் வளர்ச்சி இலக்கு’.

இதைச் சாதிப்பதற்கான  வழிவகையாகக் கருத்தடைக்கு மாறுபாடுகளின்றி அரசாங்கம் கவனம் செலுத்துவது இருக்கிறது. ‘உயர் கவனத்துக்குரிய பதினோரு மாநிலங்களின்’ முதலமைச்சர்களுக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநல மத்திய அமைச்சகம் 2014, அக்டோபர் 20 அன்று அனுப்பிய கடிதத்தில் இது தெளிவாகத் தெரிகிறது. இம்மாநிலங்களில் கருத்தடை செய்து கொள்ளும் பெண்களுக்கு ஈட்டுத் தொகையும் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களுக்கு ஊதியமும்   அதிகரிக்கப்பட்டன. வேறுபிற கருத்தடை முறைகளோடு ஒப்பிடும்போது அறுவைச் சிகிச்சை செய்யும் எண்ணிக்கை ஏற்கெனவே நமது நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது. கருத்தடை அறுவைச் சிகிச்சைக்காகப் பெண்களைத் திரட்டுமாறு அங்கீகரிக் கப்பட்ட சமூக சுகாதார ஊழியர்களை (ஆஷா)  நிர்ப்பந்திக்கும்போது, அதன் பொருள் இதுதான்: இம்மாநிலங்களில் பாதுகாப்பான கருத்தடைமுறைகள் குறித்த ஆலோசனைகளும் தகவல்களும் குறைவான அளவிலேயே வழங்கப்படும்.”

அழிந்துவிடும் நிலையில் உள்ள பைகா பழங்குடி இனத்தவருக்கு கருத்தடை செய்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வினத்துப் பெண்ணுக்கு தடையை மீறி  அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு மாண்டுபோனதைப் பற்றிக் கேட்டதற்கு, அவள் ஒப்புதலோடுதான் செய்ததாக மந்திரி சொல்கிறார். இதிலிருந்தே தெரிகிறது, அப்பெண்ணுக்கு என்ன, எப்படிப்பட்ட ஆலோசனைகளும் தகவல்களும் வழங்கப்பட்டிருக்கும் என்பது!

இந்து ஏடு தரும் செய்தியிலிருந்தே தெரிகிறது: இத்தனை நாட்களில் இத்தனை பேரைக் கொல்வது என்பதாக அரசே இலக்கு வைத்து கொலை செய்தது என்பது கற்பனையோ அல்லது மிகையான குற்றச்சாட்டோ அல்ல, ஆதாரபூர்வமான உண்மைதான்!

பீகார் சிறப்பு முகாம் கோரக்காட்சி
பீகார் மாநிலத்தின் நேபாள எல்லையை ஒட்டியுள்ள கிராமத்தில் 2003-ல் நடந்த கருத்தடை சிறப்பு முகாமின் கோரக் காட்சி (கோப்புப் படம்)

‘உயர் கவனத்துக்குரிய பதினோரு மாநிலங்களில்’ ஒன்று தமிழ்நாடு என்பது மட்டுமல்ல, கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பெண்கள் மாண்டுபோவதில் நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதும் தமிழ்நாடுதான். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளிலும், பாலியல் குற்றங்களிலும் கூட  முதலிடத்தில் இருப்பதும் தமிழ்நாடு தான். கடந்த ஒரு மாதத்தில் 27 குழந்தைகளைப் பலிகொடுத்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த பச்சிளங் குழந்தைகள் மூச்சுத்திணறி மாண்டு போவதில் மேற்கு வங்கத்தை விஞ்சி முதலிடத்துக்குப் பாய்வதும் தமிழ்நாடுதான்.

40 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா நிறைவேற்றிய  உலகளாவிய மக்கள்தொகை வளர்ச்சியால் அமெரிக்கப் பாதுகாப்புக்கும் எல்லை தாண்டிய நலன்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள்” என்ற தேசியப் பாதுகாப்பு ஆய்வறிக்கை (NSSM 200) பின்வரும் செய்தியைச் சொல்லுகிறது. “அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு வளர்ச்சியடையாத நாடுகளின் கனிம வளங்கள் அதிகரித்த அளவில் தேவைப்படும். இந்நாடுகளில் ஏற்படும் மக்கள் போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக வளங்களையும் மூலாதாரங்களையும் அமெ ரிக்கப் பொருளாதாரம் பெறுவது தடைப்படக் கூடும். எனவே, இந்நாடுகளின்  மக்கள் தொகையைக் கட்டுக்குள்  வைத்திருப்பது அமெரிக்க நலன்களுக்கு முக்கியமானது” என்கிறது, அந்த அறிக்கை.

மக்கள்நலத் திட்டங்களைக் காட்டிலும் அதிகமாகக் கருத்தடைத் திட்டங்களுக்கு இந்திய அரசு செலவிட்டிருக்கிறது. ஏகாதிபத்திய மற்றும் கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் பொருளாதார நலன்களுக்காக  இலக்கு வைத்து நமது நாட்டுப் பெண்களின் கருப்பைகளை நச்சுக் கருவிகளைக் கொண்டு அறுக்கிறார்கள், அரசும் ஆட்சியாளர்களும்.

– பச்சையப்பன்
__________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
__________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க