privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்மணிப்பூரில் தொடரும் ஐரோம் சர்மிளாவின் போராட்டம்

மணிப்பூரில் தொடரும் ஐரோம் சர்மிளாவின் போராட்டம்

-

ணிப்பூரில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமலில் இருக்கும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக்கோரும் ஐரோம் சர்மிளாவின் உண்ணாநிலை போராட்டம் பதினைந்தாம் ஆண்டை எட்டியுள்ளது.

ஐரோம் சர்மிளா
ஐரோம் சர்மிளா (படம் : நன்றி http://indianexpress.com )

கடந்த நவம்பர் 6-ம் தேதியன்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தியுள்ளன. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட மனித உரிமை ஆர்வலர் மருத்துவர் பினாயக் சென் “ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் ஜனநாயகத்தின் சாரத்தையே அழிக்கிறது, நியாயத்தின் பாதையை தடுக்கிறது. மணிப்பூரில் இரண்டு தலைமுறையினர் சுதந்திரத்தின் பொருள் தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டார்.

2000-ம் ஆண்டு நவம்பர் 2 அன்று மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கிலுள்ள மலோன் எனுமிடத்தில் பேருந்துக்காக நின்றிருந்த அப்பாவி பொதுமக்கள் பத்து பேரை அசாம் துப்பாக்கி படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமது அன்றாட வேலைகளுக்காக போய்க் கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள். கொல்லப்பட்டவர்களில் 1988-ம் ஆண்டில் சிறார் வீரதீர செயல்களுக்கான தேசிய விருதைப் பெற்ற 18 வயது சினம் சந்திரமணி சிங்கும், அவரது சகோதரர் ராபின் சிங்கும், ஒரு 68 வயது மூதாட்டியும் அடக்கம்.

அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவின் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய கையெறிகுண்டு தாக்குதலுக்கு பதிலடியாக அப்பாவி பொதுமக்கள் மீது இப்படுகொலை நடத்தப்பட்டது.

ஐரோம் சர்மிளா
ஐரோம் சர்மிளாவின் அறைச் சுவரை மக்கள் அவருக்கு பரிசாக அளித்த போஸ்டர்கள் நிரப்பியிருக்கின்றன (படம் : நன்றி : http://indianexpress.com )

1958-ம் ஆண்டு நாகாலாந்தில் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டத்தை கொண்டுவந்தது இந்திய அரசு. பின்னர் அதை படிப்படியாக வடகிழக்கின் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தியது. இச்சட்டம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஒடுக்குவதற்கு காலனியாதிக்கவாதிகள் கொண்டுவந்த 1942-ம் ஆண்டின் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டத்திற்கு ஒப்பானது.

இச்சிறப்பு அதிகாரச்சட்டம் அமுலில் இருக்கும் பகுதியில் இராணுவத்தின் அதிகாரிகள் மட்டுமல்ல சாதாரண படை வீரர்கள் கூட, பொது அமைதியைப் பாதுகாப்பதற்காக, முன் அனுமதியின்றி எவரையும் சோதனையிடவும், சட்டத்தை மீறுபவர்களாகத் தாம் சந்தேகிக்கும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் அதிகாரத்தை வழங்குகிறது. அத்துப்பாக்கிச் சூடு மரணத்தை விளைவிப்பதாகக்கூட இருக்கலாம். இச்சட்டம் அமலில் உள்ள பகுதியில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய்கள் மீதான குற்றங்களை விசாரிக்கவோ, வழக்கு தொடுக்கவோ, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ முடியாது. இதற்கு மைய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் எனச் சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மலோன் படுகொலைகள் நடந்த மூன்றாம் நாளே, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நிபந்தனையின்றி முற்றிலுமாக விலக்கக் கோரி, உண்ணநிலைப் போராட்டத்தை துவங்கினார்,ஐரோம் சர்மிளா. இன்றும் போராட்டம் தொடர்கிறது.

ஐரோம் சர்மிளா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 309-ன் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி தற்கொலைக்கு முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றம்; அதற்கு ஓராண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். ஐரோம் சர்மிளாவை கைது செய்து  மருத்துவமனையில் அடைத்து வைத்து வலுக்கட்டாயமாகத் திரவ உணவை மூக்கின் வழியாகச் செலுத்தி வருகிறது மணிப்பூர் அரசு. ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டதும், அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவார். உடனே, அரசு அவரை மீண்டும் கைது செய்து மருத்துவமனை சிறையில் அடைத்துவிடுகிறது. தற்போது அந்தச் சட்டப்பிரிவு நீக்கப்பட்டாலும் ஐரோம் சர்மிளா மீது வேறு ஏதாவது பிரிவின கீழ் வழக்கு போடுவார்கள். அரசின் நோக்கம் அவர் உயிர் துறக்க கூடாது என்பதல்ல, இராணுவத்தின் அதிகாரம் கேள்விக்கு அப்பாற்பட்டது என்பதே!

ஐரோம் சர்மிளா
ஐரோம் சர்மிளா (படம் : நன்றி http://indianexpress.com )

ஐரோம் சர்மிளா இம்பாலின் கீழ் நடுத்தர வர்க்க குடும்பத்தின் ஒன்பது குழந்தைகளில் கடைசி குழந்தையாக பிறந்தவர். சர்மிளாவின் தந்தை ஐரோம் நந்தா ஒரு கால்நடை மருத்துவ உதவியாளர். மற்ற மணிப்பூர் குழந்தைகளைப் போலவே மணிப்பூரின் நாயகர்கள் மற்றும் புரட்சியாளர்கள் பற்றிய கதைகளை கேட்டு வளர்ந்தார் ஐரோம் சர்மிளா. “நாங்கள் அரசுக்கு எதிராக போரிடும் புரட்சியாளர்கள் மற்றும் காணாமற்போனவர்களைப் பற்றி கதைகளை கேட்டு வந்தோம். அவர்களை நெருக்கமாக பழகியவர்கள் போல உணர்ந்தோம். சில நேரங்களில் நான் அவர்கள் எங்கள் வீட்டு புழக்கடையில் நடந்து போவது போல கற்பனை செய்து கொள்வேன்” என்று அவர் நினைவு கூர்கிறார். மணிப்பூரில் இராணுவத்தின் இருப்பை உணராத குடும்பமே இருக்க முடியாது.

மணிப்பூரின் மன்னனை 1891-ம் ஆண்டு போரில் வென்றதிலிருந்து அதை தனது ஆளுகைக்குட்பட்ட சமஸ்தானமாக பராமரித்து வந்தது பிரிட்டிஷ் அரசு. அதை எப்போதும் இந்தியாவுடன் இணைக்கவில்லை. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரிட்டன் வெளியேறிய பின் 1948-ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னரே மணிப்பூர் மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை தந்து பொதுத் தேர்தலை நடத்தியது.

1949 அக்டோபரில் மணிப்பூர் மன்னரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஷில்லாங்கில் அவரை வீட்டுக்காவலில் வைத்து, மணிப்பூரில் இராணுவத்தை குவித்து அவரை மிரட்டி இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தது இந்திய அரசு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும் கலைக்கப்பட்டன. இதுதான் மணிப்பூரை இந்தியா ஆக்கிரமித்ததன் சுருக்கமான வரலாறு.

ஐரோம் சர்மிளாவின் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்து வரும் கடந்த 15 ஆண்டுகளில் நிலைமை எந்த விதத்திலும் மேம்பட்டுவிடவில்லை. அவரது உண்ணாவிரதத்தைத் தூண்டிய படுகொலைகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அசாம் துப்பாக்கிப் படைப்பிரிவு இன்று வரை போராளிகளுடனான துப்பாக்கிச் சண்டைக்கு நடுவே சிக்கி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சாதிக்கிறது. இப்படுகொலைக்கான வழக்கு இன்னும் நீதிமன்ற வாசலையே எட்டவில்லை. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்தான் அக்குற்றவாளி சிப்பாய்கள் விசாரிக்கப்படுவதையும் தண்டிக்கப்படுவதையும் தடுத்து, அவர்களுக்குச் சட்டபூர்வ பாதுகாப்பை வழங்கி வருகிறது. டிசம்பர் 5 (2014) அன்று இப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கண்துடைப்பு நிவாரணமாக ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்க மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராணுவத்தில் இருக்கும் ஒரே காரணத்திற்காக வல்லுறவு குற்றவாளிகளுக்கும், பச்சைப் படுகொலை குற்றவாளிகளுக்கும், தண்டனையிலிருந்து விலக்குரிமையை (Impunity) சிறப்பு அதிகாரச்சட்டம் வழங்குகிறது.

“ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் பாதுகாப்பை வல்லுறவுக் குற்றவாளிகளுக்கு வழங்கக் கூடாது; வல்லுறவுக் குற்றமிழைக்கும் இராணுவத்தினரை, மற்றெல்லா குற்றவாளிகளையும் போல நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிக்க வேண்டும்” என்று கூறுகிறது பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து விசாரித்து அறிக்கை அளித்த வர்மா கமிசன். அந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஒரு பொதுநல வழக்கிற்கு பதிலளிக்கையில் 2007 முதல் 2012 வரையிலான 5 ஆண்டுகளில் மணிப்பூரிலிருந்து மொத்தம் 1671 போலி மோதல் கொலைப் புகார்கள் வந்துள்ளதாகவும், அவற்றில் 191 புகார்களை விசாரித்ததில், அனைத்தும் போலி மோதல் கொலைகள் என்பது உறுதியானது என்றும், மீதமுள்ள வழக்குகளை விசாரிக்கவிடாமல் அம்மாநில அரசு, பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டுவருவதாகவும் தேசிய மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

இவற்றில் ஆறு போலிமோதல் கொலைகளை வகைமாதிரியாக எடுத்துக் கொண்டு விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஹெக்டே கமிசன், அவை அனைத்தும் போலிமோதல் கொலைகளே என்றும் ஆயுதப்படையினர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்தது. அந்த அறிக்கையை குஜராத்தில் போலி மோதல்களுக்கு பேர் பெற்ற புகழ் மோடியின் தலைமையில் இயங்கும் இப்போதைய மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

இந்த முட்டுக்கட்டைகளையும் மீறி போலி மோதல்படுகொலைகள் விசாரணைக்கு வந்துவிட்டால், அவ்வழக்குகளை இராணுவமே விசாரித்துத் தீர்ப்பளிக்கலாம் எனச் சலுகை வழங்குகிறது, உச்ச நீதிமன்றம். உதாரணமாக, காஷ்மீர் பத்ரிபால் படுகொலையை விசாரித்த சி.பி.ஐ இராணுவத்தின் ஐந்து அதிகாரிகளை குற்றவாளிகள் என குற்றப்பத்திரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை கொண்டு மத்திய அரசும் இராணுவமும் விசாரணையை முடக்கி வந்தன. உச்சநீதிமன்றமோ குற்றவாளி இராணுவத்திடமே இப்படுகொலைகள் தொடர்பாக இராணுவ விசாரணையை நடத்திக்கொள்ள விட்டுவிட்டது. தனது உள்விசாரணையில் அதிகாரிகள் மீதான குற்றசாட்டுகளுக்கு ஆதரமில்லை என்று அவர்களை விடுவித்துவிட்டது இராணுவம்.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜீவன்ரெட்டி கமிசன், “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு இணையாக வேறு சட்டங்கள் இருப்பதால் இச்சட்டத்தை நீக்கிவிடலாம்” என 2005-ம் ஆண்டே அரசுக்கு அறிக்கை அளித்திருந்தது.

முன்னாள் இராணுவத் தளபதியும், இன்றைய வெளியுறவுத்துறை துணை அமைச்சருமான வி.கே சிங், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் இராணுவத்திற்கு எந்த சிறப்பான சலுகையையும் அளித்துவிடவில்லை என்றும் அச்சட்டம் இல்லையெனில் கிளர்ச்சியாளர்கள், பிரிவினைவாதிகளுக்கு எதிராக இராணுவத்தால் செயலாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இது இவருடைய கருத்து மட்டுமல்ல. எல்லா இராணுவ தளபதிகளும், ஆட்சியிலிருக்கும் அரசியல்வாதிகளும் இதைத்தான் கூறுகிறார்கள்.

ஆனால், இச்சட்டம் அமலில் இருக்கும் மாநிலங்களில் தீவிரவாதிகளைக் கண்டறிந்து சுட்டுக் கொல்வதைவிட, தான் சுட்டுக் கொல்லும் அனைவரையும் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளென முத்திரை குத்தி விடுகிறது, இராணுவம்.

“சிறப்பு அதிகாரச்சட்டம் ஒரு வெறுக்கத்தக்க சட்டம் என்றும் அதற்கு நாகரீக சமூகத்தில் இடமில்லை” என்றும் ப.சிதம்பரம் இப்போது கூறியுள்ளார். இதே ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது சிறப்பு அதிகாரச்சட்டத்தை நீக்குவதற்கு எம்முயற்சியும் எடுக்கவில்லை. பிப்ரவரி 6, 2013-ல் ஒரு கருத்தரங்கில் பேசிய சிதம்பரம், தற்போதைய மற்றும் முன்னாள் இராணுவ தளபதிகளுக்கு ஆய்தப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவதில் உடன்பாடு இல்லாத போது அரசு எப்படி சட்ட திருத்தத்தை கொண்டுவர இயலும் என்று கூறினார். எனில் இந்தியாவை ஆள்வது மக்கள் பிரதிநிதிகளா இராணுவமா?

இச்சட்டத்தை நீக்கக்கூடாது என்ற இராணுவத்தின் கருத்து தான் பா.ஜ.கவின் கருத்தும். மோடி அரசும் இக்கொடிய சட்டத்தை நீக்குவதைப் பற்றி பரிசீலிக்கக்கூட இல்லை. மாறாக, இந்திய சட்ட கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் தற்கொலை முயற்சி குற்றச் செயல் அல்ல என IPC 309 சட்டப்பிரிவை சட்ட புத்தகத்தில் இருந்து முற்றிலுமாக நீக்க மோடி அரசு முடிவெடுத்துள்ளது. இதுதான் ஐரோம் சர்மிளாவின் போராட்டத்துக்கு இந்த அரசு முன் வைத்திருக்கும் ‘தீர்வு’.

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் தேவை குறித்த பொது வாக்கெடுப்பை அச்சட்டம் அமுலில் உள்ள எந்த மாநிலத்திலும் நடத்த இதுவரை எந்த அரசும் முன்வரவில்லை.

இந்திய அரசியல் அமைப்பு என்பது மக்களுக்கு விரோதமானது, மக்களை ஒடுக்குவதற்கு ஆளும் வர்க்கங்களுக்கு அனைத்து ஆயுதங்களையும் வழங்குகிறது என்பதை நிரூபித்துக் கொண்டே தொடர்கிறது ஐரோம் சர்மிளாவின் போராட்டம்.

– மார்ட்டின்