privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

அது என்னா சார் எச்சி பாரத்து ?

-

முந்தைய நாள் பெய்த மழையால் அரும்பாக்கம் சகதிக் காடாகியிருந்தது. எலும்பும் தோலுமாய்த் தெரிந்த சிவலை நிற கோமாதா நடு சாலையில் வாலை உயர்த்தியவாறே நின்றாள். மெல்ல நடுமுதுகை கீழ் அழுத்தி வாலை விடைத்தவாறே மேலுயர்த்தி… “சொத்” என்று கருப்பு நிறத்தில் போட்டாள் சாணியை. மனிதச் சரக்கை விட நாற்றம்; நேற்று தின்ற லிங்கா போஸ்டராக இருக்க வேண்டும்.

அரும்பாக்கம்
“இன்னாத்த கீய்ச்சாங்க.. தோ ரோடு எப்டி இருக்குன்னு பாத்தீங்கள்லே?”

“யேய்.. பாடு சனியனே.. மூதேவி.. ______.. நாளிக்கு வாடி உன்னை பிரியாணி போடறேன்…….” கருஞ்சாணி சகதிக் கூழில் விழுந்து மொத்தமாக தனது கால்சட்டையில் தெறித்த ஆத்திரத்தில் கோமாதாவின் தாயை ஒருவர் சந்தேகித்துக் கொண்டிருந்தார். நல்ல வேளையாக ஹெச். ராஜா அந்த இடத்தில் இல்லை.

வினவு தளத்தின் செய்தியாளர் குழுவாக அரும்பாக்கத்தில் இருந்தோம். மத்திய அரசின் செயல்பாடுகள் பற்றி மக்களின் கருத்தை அறிந்து வருவதும், சமீப காலமாக மோடி முன்னெடுத்து வரும் ஹிந்துத்துவ செயல்திட்டங்களை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதும் திட்டம். பல வீடுகளில் குடும்பத்தினர், பொது இடங்களில் குழுமியிருந்த மக்கள், அனைத்து பிரிவினர் என்று பார்த்தோம். அதில் சில உரையாடல்கள்……….

முதலில் பேருந்துக்காக காத்து நின்ற சுகுமார் என்பரை அணுகினோம் –

“மத்திய அரசு கேஸ் மானியத்தை வங்கிக் கணக்கில் போடுவோம்னு சொல்லுதே அது பற்றி…?”

”எனுக்கு அப்பயே தெரியும் சார், இவன் பிராடுன்னு.. ஆனா எல்லாரும் சொன்னாங்களேன்னு தாமரைக்கி ஓட்டு போட்டேன். அது இன்னா சார் மானியம்னா பிச்சையா சார்? வர்தா வர்லையான்னு தேவ்டு காக்னுமா? மன்சன் வேற வேலைக்கு போவத் தாவலை?”

“அது மட்டும் இல்லைங்க, வெளி நாட்ல லட்சக்கணக்கான கோடி ரூபா கருப்பு பணம் பதுக்கி வச்சிருக்காங்கன்னும், நான் ஆட்சிக்கு வந்தா அதை மீட்டு வந்து தலைக்கு இவ்ளோன்னு பிரிச்சி எல்லாரோட வங்கி கணக்குலேயும் போடுவேன்னு சொன்னாங்களே. வங்கி கணக்கு இருந்தா அதுக்கும் பிரயோஜனப் படும் இல்லையா?”

“பணமா போடுவான்? நல்ல கொழச்சி நாமத்த வேணா போடுவான் சார்”

“சுவச்ச பாரத் மாதிரி வித்யாசமான திட்டங்கள்…” இடைமறித்தார்.

”அது இன்னா சார் எச்சி பாரத்து?”

அரும்பாக்கம்
”எனுக்கு அப்பயே தெரியும் சார், இவன் பிராடுன்னு.. ஆனா எல்லாரும் சொன்னாங்களேன்னு தாமரைக்கி ஓட்டு போட்டேன்.”

”எச்சி இல்லை, சுவச்ச – அதாவது தூய்மை இந்தியா. சினிமா ஸ்டாருங்க கூட கைல விளக்குமாத்தோட நின்னு போட்டோ எடுத்து…. நீங்க பேப்பர்ல பார்க்கலை? கோடிக்கணக்குல செலவு செஞ்சி விளம்பரம் கூட செய்யறாங்களே சார்”

”இன்னாத்த கீய்ச்சாங்க.. தோ ரோடு எப்டி இருக்குன்னு பாத்தீங்கள்லே? எவனுமே சரியில்ல சார். நான் எம்.ஜி.ஆர் ரசிகன். இத்தினி வருசமா ரெட்டெலைக்குப் போட்டவன் இந்த தபா மாத்தி தாமரைக்கி போட்டேன். இனிமே ஓட்டே போடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் சார்”

”சரி சார் இப்ப பா.ஜ.க கட்சி அமைச்சர்கள் கூட்டங்கள்லே என்ன சொல்றாங்கன்னா.. இந்தியாவோட அத்தனை பிரச்சினைகளுக்கும் முசுலீம்கள் தான் காரணம், ராமனை தேசிய நாகனா ஏத்துக்காதவங்க விபச்சார விடுதில பிறந்தவங்க, பகவத் கீதை தான் தேசிய நூல், தாஜ்மகால் ஒரு சிவன் கோயில் அதனால அதை இடிச்சிட்டு திரும்ப கோயில் கட்டுவோம் – இப்படில்லாம் பேசறாங்க. அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?”

”கீய்ச்சாங்க. அந்தக் காலத்துலயே சாஜகான் கோடி கோடியா செலவு பண்ணி தாஜ் மகாலை கட்டிருக்கான் சார். இப்ப அதுமாதிரி ஒன்ன யார்னால கட்ட முடியும்? அதெல்லாம் சும்மா சார். அதாவது…. சில பேரு கடவுள் இருக்குன்றான். சில பேரு இல்லேன்றான்.. நான் இன்னா சொல்றேன், ஏதோ ஒரு சக்தி இருக்கு. அவ்ளோ தான். முசுலீம்னா இன்னா சார்? அவுனுக்கு அல்லா சாமி, எனுக்கு முருகன் சாமி. அவ்ளோ தான் சார். நான் கூட பாருங்க கிருஷ்ணனை வித்து தான் பொழக்கிறேன். சாமியா சார் முக்கியம்? மன்சன் தான் சார் முக்கியம். இவுனுங்கோ இப்டி பேசும் போது எல்லாரும் கேட்னு சொம்மாவா இருந்தானுங்க? செருப்பாலயே போட்ருக்க வோணாம்? அயிஞ்சி போய்டுவான்க சார்”

வெள்ளி இழையில் ராதா கிருஷ்ணன் படம் பதித்து கண்ணாடியால் மூடப்பட்ட நினைவுப் பரிசு ஒன்றைக் காட்டினார். சுமார் தனியார் நகைக்கடை ஒன்றில் இருந்து இது போன்ற நினைவுப்பரிசுகளை வாங்கி அலைந்து திரிந்து விற்பவர். பேச்சினூடாக அவர் செல்ல வேண்டிய பேருந்து வரவும் அவசரமாக கிளம்பினார். நாங்கள் அருகே இருந்த மாநகராட்சிக் கழிவறையை நெருங்கினோம்; அதன் சுற்றுப்புறத்தை பெருக்கிக் கொண்டிருந்தார் ஒருவர்.

துப்புரவுத் தொழிலாளி
”எவன் வந்தான்.. நானே தான் பெருக்கினு இருக்கேன்”

”என்னண்ணே தூய்மை இந்தியா திட்டத்தில் இருந்து யாரும் இந்தப் பக்கம் கழிவறை சுத்தம் செய்ய வந்தாங்களா?”

”எவன் வந்தான்.. நானே தான் பெருக்கினு இருக்கேன்”

”ஆமாண்ணே.. இந்த மோடி கட்சிக்காரங்க முசுலீம்கள் இந்தியாவுக்கு வந்ததுனால தான் தீண்டாமையே வந்திச்சின்னு சொல்றாங்களே.. இங்க வர்ற பாய்ங்க உங்களோட எப்படிப் பழகுறாங்க?”

”நீங்க வேற சார், நம்ம ஆளுங்க கக்கூசுக்கு போயிட்டு என்னிய திரும்பிக் கூட பார்க்காம அப்டியே போயிடுவாங்க. இலவசம் தானே… எவன் சுத்தம் செஞ்சிருந்தா என்னான்னு நினைச்சிருப்பாங்க. அது அவங்க தப்பில்லே. நானும் கைநீட்டி கேட்க மாட்டேன், தந்தா சரின்னு வாங்கிக்குவேன். ஆனா, பாய்ங்க மட்டும் வந்தாங்கன்னா தவறாம ரெண்டு ரூபா கொடுத்துட்டு தான் போவாங்க.”

அவர் பெயர் ஈஸ்வரன். ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர். இரண்டு கால்களும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. நாற்பது வயதிருக்கலாம். இன்னமும் திருமணமாகவில்லை. இலவசக் கழிவறை என்பதால் பராமரிப்பு இல்லாமல் நாறிக் கொண்டிருந்த இந்தக் கழிவறையை கடந்தாண்டிலிருந்து இவரே பொறுப்புடன் பராமரித்து வருகிறார். ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறைக்கு இடையே ஆறுக்கு நான்கடியாக ஒரு சின்ன இடுக்கு உள்ளது. அதில் சாக்கை விரித்து அங்கேயே படுக்கை. கழிவறையை மிகத் தூய்மையாக பராமரித்து வருகிறார்.

அரசு பற்றி அரும்பாக்கம்கழிவறையைப் பயன்படுத்த கட்டணமில்லை என்றாலும், ஈஸ்வரனின் நிலையைப் பார்த்து பரிதாபத்தோடு சிலர் மட்டும் ஒன்றோ இரண்டோ ரூபாய்கள் கொடுத்துச் செல்கிறார்கள். அதில் அநேகர் “பாய்மாருங்க” என்றார். சராசரியாக ஒரு நாளைக்கு நூறு ரூபாய் வரை சில்லறை சேர்கிறது. இதில் மிச்சம் பிடித்து மாதம் ஆயிரம் ரூபாயை வீட்டுக்கு அனுப்புகிறார். பெரியளவில் அரசியல் தெரியவில்லை.

நாங்கள் ஈசுவரனைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது மாநகராட்சி துப்புறவுத் தொழிலாளி தனது டிரை சைக்கிளுடன் வந்து சேர்ந்தார். வயதானவர். நீல நிற சட்டையும் அரைக்கால் சட்டையும் அணிந்திருந்தார். முகத்தில் நக்கீரன் பத்திரிகைத் தாளை விட கொஞ்சம் தடித்த முகவுறை அணிந்திருந்தார். காலில் பிய்ந்து போன பிளாஸ்டிக் செருப்பு.

“என்னா பேட்டி எடுக்க வந்தீங்களா?”

” ஆமாண்ணே, மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற திட்டங்கள் பற்றி நேரடி ரிப்போர்ட் எடுக்க வந்தோம். இப்ப மோடி அரசு கோடிக்கணக்குல செலவு பண்ணி தூய்மை இந்தியான்னு ஒரு திட்டம் கொண்டாந்தாங்க இல்லையா, அதைப் பத்தி தான் ஈஸ்வரண்ணன் கிட்டே கேட்டுகிட்டு இருந்தோம்”

மாநகராட்சி துப்புரவு பணியாளர்
“ஒயுங்கா எங்களுக்கு சம்பளத்த குடுத்தா நாங்களே செய்வோமே? தோ கைல மாட்ற ஒறைல ஒன்னு கியிஞ்சி போயி ரெண்டு மாசமாகுது. இருக்கற இந்த ஒன்னை வச்சித் தான் கலீஜை வாரிக் கொட்டினு இருக்கோம்.”

“ஆமாமா.. கமலகாசன் போட்டோ கூட வந்திச்சி.. அதுக்கு கோடிக்கணக்குலயா செலவு பண்றாங்க?”

“ஆமாங்க”

”இன்னாத்துக்கு அத்தினி செலவு செய்யனும்? ஒயுங்கா எங்களுக்கு சம்பளத்த குடுத்தா நாங்களே செய்வோமே? தோ கைல மாட்ற ஒறைல ஒன்னு கியிஞ்சி போயி ரெண்டு மாசமாகுது. இருக்கற இந்த ஒன்னை வச்சித் தான் கலீஜை வாரிக் கொட்டினு இருக்கோம். இதெல்லாம் எங்களுக்கு செஞ்சி தந்தா நாங்களே பாத்துக்குவோமில்லே. பத்திரிகைல எழுது சார்.. எதுனா நடக்குதா பாக்கலாம்”

வீரய்யாவுடன் பேசி விட்டு அருகில் இருந்த தெருவில் நுழைந்தோம். நிறைய சிறுகடைகளும் மக்கள் நடமாட்டமும் மிகுந்த அந்தப் பகுதியின் சாலை ஏராளமான பொத்தல்களோடு மழை நீரும் சகதியுமாய்க் காட்சி தந்தது. செருப்புக் கடை ஒன்றின் முன் நின்று கொண்டிருந்த இசுலாமிய பெரியவரை அணுகினோம். அவர் ஷாகுல் ஹமீது. அறுபது வயது. பதினேழு ஆண்டுகள் சவுதியில் வேலை பார்த்து விட்டு ஐந்தாண்டுகளுக்கு முன் இந்தியா திரும்பியிருக்கிறார். இந்துத்துவ அரசியல் குறித்து பேச்சை ஆரம்பித்தோம்.

அரும்பாக்கம் பாய்
“எங்க தம்பி இந்து முசுலீம் பிரச்சினை இருந்தது? எல்லாம் அண்ணன் தம்பியாத்தேன் பழகிக்கிட்டிருந்தோம்.”

”அந்தக் காலத்துல எங்க தம்பி இந்து முசுலீம் பிரச்சினை இருந்தது? எல்லாம் அண்ணன் தம்பியாத்தேன் பழகிக்கிட்டிருந்தோம். எல்லாம் அரசியல் தம்பி. ஓட்டு வாங்கி ஜெயிக்க செய்யிற சூழ்ச்சி. இப்ப செயிச்சி என்னா செய்யிறாரு? நம்ம காசுல உலகமெல்லாம் சுத்திக்கிருக்காரு… அதானே?”

”அவர் இந்துத்துவா மட்டும் பேசலையே… கருப்புப் பணத்தை கொண்டாந்துருவோம்னு கூட சொன்னாரில்லையா?”

”எங்க கொண்டாந்தாய்ங்க? சும்மா சவுண்டு மட்டும் தான் விட்டாய்ங்க? இப்ப அவுக ஆட்சி தானே? அதிகாரம் அவுக கையில தானே இருக்கு.. எல்லம் பொட்டி தான் தம்பி. அவுகளுக்கு ரெண்டு பொட்டி வந்து சேர்ந்திருக்கும்.. அதான் இப்ப பேச்சு மூச்சையே காணல. சரிதானே தம்பி நான் சொல்றது?”

செருப்புக் கடை வியாபாரம் போதாமல் பக்கத்திலேயே ஒரு சின்ன மேசையைப் போட்டு அதன் மேல் கறிகாய்கள் கூறு கட்டி வைத்திருந்தார். பொட்டலம் பத்து ரூபாய். இடையிடையே கடந்து செல்லும் பெண்களில் சிலர் அந்தப் பொட்டலங்களைப் புரட்டிப் பார்த்துச் சென்றனர்.

“யாவாரம் முன்னெ மாதிரி இல்ல பாத்துக்கிடுங்க. இந்த மாதிரி எதுனா செய்தா தான் ஓட்ட முடியுது. நான் சவுதில சம்பாதிச்ச காசெல்லாம் பிள்ளைங்க கல்யாணத்துல போட்டு முடிச்சிட்டேன். இன்ஷா அல்லாஹ் அவங்க எந்த குறையும் இல்லாம இருக்காங்க. ஏதே வயசான காலத்துல நாம சாப்பிடக் கொள்ள சம்பாதிச்சா போதுமின்னு தான் பார்க்கிறேன்” எங்கோ பாங்கு ஒலிக்கும் சப்தம் கேட்க, அந்த திசை நோக்கித் திரும்பியவர்  நம்மிடம் திரும்பினார்.

”பாய்.. மோடி வந்த பின்னால வர்ற திட்டமெல்லாம் வித்தியாசமா இருக்குன்னு சொல்றாங்களே. இப்ப பாருங்க கேஸ் மானியத்தை பேங்க் அக்கவுண்ட்ல போடப் போறோமின்னு சொல்றாங்க…”

”என்னத்த வித்தியாசம்.. காலைல வீட்ல சம்சாரம் கூட வஞ்சிகிட்டு கெடந்தா. ஒரு மாசம் தருவான் ரெண்டு மாசம் தருவான்.. அதுக்கு மேல வருமின்னு என்னா கேரண்டி தம்பி? நமக்குத் தெரிஞ்ச ஆளு இந்தியன் பேங்குல மேனேஜரா இருக்காரு. அவரு என்னா சொல்றாருன்னா.. கவுருமெண்டு நாலு மாசம் காசு தருவான் அப்புறம் லேட்டா தருவான்.. அப்புறம் நிப்பாட்டுவான். மக்கள் எங்களைத் தானே வந்து மொய்க்கப் போறாய்ங்கன்றாரு.. காசு வரல்லேன்னு எவனாவது கல்லை விட்டு கண்ணாடிய ஒடைச்சிட்டா என்னா செய்யறதுன்னு பொலம்புறாரு… இதெல்லாம் தேவையில்லாத வேலை தம்பி. எதுக்கு இப்படி சுத்தி வளைக்கனும், எப்பயும் மாதிரி 450 ரூபாவுக்கே சிலிண்டரை கொடுத்துட்டுப் போக வேண்டியது தானே? முட்டாத்தனமான அய்டியாவா இருக்கே தம்பி. சரிதானே?”

பாயிடம் பேசிக் கொண்டிருந்த போது தலையில் ஸ்பீக்கர் கட்டிய ஆட்டோ ஒன்று தெருவில் நுழைந்தது. ஸ்பீக்கரில் இருந்து கண்டிப்பான குரல் ஒன்று நிதானமாக வழிந்து கொண்டிருந்தது. இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்களை ‘டிபிடிஎல்’ என்கிற மானிய ஒழிப்புத் திட்டத்தின் கீழ் உடனடியாக வரக் கோரிய ஸ்பீக்கர் குரல், அதற்க்கான இறுதிக் கெடுவாக ஜனவரி ஒன்றாம் தேதியை குறிப்பிட்டது. நாங்கள் ஆட்டோவில் இண்டேன் அதிகாரியைத் தேடினோம், ஓட்டுனர் மட்டுமே இருந்தார்.

”அண்ணே, மானியத் தொகையை வங்கிக் கணக்குல போடப் போறதா சொல்றாங்களே.. வங்கி கணக்கு இல்லாதவங்க என்னா செய்யனும்? வங்கிக் கணக்கு ஆரம்பிக்க குறைந்தபட்ச இருப்புத் தொகை இருக்கனுமே, மாசக் கடைசில மக்கள் என்னா செய்வாங்க?” ஆட்டோ ஓட்டுனர் ராஜூவிடம் வினவினோம்.

இண்டேன் அறிவிப்பு
“ஏதோ துட்டு வருதேன்னு நானும் ஒத்துகிட்டு வந்தேன். இங்க பாத்தா ஜனங்க ஆளாளுக்கு பிலுபிலுனு பிடிச்சிக்கிறாங்க. “

”அய்யோ சார்… காலைலேர்ந்து இதே தொண தொணப்பு சார். இண்டேன் கம்பேனி அதிகாரிகள் கூப்பிட்டு ’இந்தா மாதிரி ஸ்பீக்கர் கட்டிக்கினு இந்தா மாதிரி ஏரியாவுக்கு இன்ன நேரத்துக்கு ரவுண்ட் அடிச்சிட்டி வா’ அப்டினு சொன்னாங்க. வேற எந்த விவரமும் சொல்லலை. ஏதோ துட்டு வருதேன்னு நானும் ஒத்துகிட்டு வந்தேன். இங்க பாத்தா ஜனங்க ஆளாளுக்கு பிலுபிலுனு பிடிச்சிக்கிறாங்க. எனுக்கு பேங்குன்னா இன்னா தெரியும்… ரூல்சுன்னா இன்னா தெரியும் சொல்லுங்க சார்” ராஜூ சலித்துக் கொண்டார்.

”மக்கள் என்ன சார் செய்வாங்க. ஆமா, அதிகாரிகள் அடிப்படையான விவரங்கள் கூடவா சொல்லி விடலை?”

”அவனுக்கு இன்னா சார் ஜனங்க பத்தியா கவலை? ஜனவரிக்குள்ளே திட்டத்தை மாத்தனும்னு பாக்கறானே கண்டி எவன் செத்தா என்ன வாழ்ந்தா என்னா”

”நீங்க இந்த திட்டத்தில சேர்ந்தாச்சா?”

“இன்னும் இல்ல சார். எங்க ஏரியாவுல எல்லாரும் என்ன செய்யிறாங்கன்னு பார்த்துட்டு அப்பால சேர்லாம்னு இருக்கேன்”

“நாலஞ்சி மாசம் காசு கொடுத்துட்டு அப்புறம் அதை குறைச்சாலோ நிறுத்தினாலோ என்னா செய்வீங்க? சந்தை விலைக்கு வாங்க பழக்கப்படுத்திட்டு பின்னாடி காலை வாரி விட்டாங்கன்னா?”

“என்னா செய்ய முடியும் எல்லாம் அவன் கால்லே போய் விழ வேண்டியது தான்” இரண்டு கைகளையும் மேலே உயர்த்திக் காட்டினார்.

நாங்கள் ராஜூவைப் புகைப்படம் எடுத்து விட்டு ஆட்டோ அறிவிப்பை வீடியோவாகவும் பதிந்து கொண்டோம். நாங்கள் புகைப்படம் எடுப்பதையும், ராஜூவிடம் பேசியதையும் கண்ட பகுதிப் பெண்கள் எங்களை அதிகாரிகள் என்று கணித்து சூழ்ந்து கொண்டனர்.

அரசு பற்றி அரும்பாக்கம்”சார்.. வூட்டுக்காரர் வெளியூர்ல கீறாரு.. எப்டி அக்கவுண்டு தொறக்கணும்னு எனுக்குத் தெரியாதே சார்”

“இப்டி திடீர்னு வந்து ஒண்ணந்தேதிக்குள்ற மாத்துன்னா எப்டி சார் மாத்துறது? கைலேர்ந்து தொள்ளாயிரம் ரூபா போட்டா எப்ப சார் மிச்ச காச கொடுப்பீங்க?”

”சார் எனுக்கு பேங்குல போய் பாரம் பில் பண்ணவே தெரியாதே சார்”

“ஜனங்க பாடு ஒங்களுக்கு எங்க தெரியப் போவுது.. எல்லாம் வாரிக்கினு போய்டும் சார்”

”நீயே வூட்டுக்கு வந்து பாரு… எம்புருசங்காரன் மொண்டி சார்.. ஏன் சார் எங்கள அலைய வுடுறீங்க? நல்லா இருப்பீங்களா சார் நீங்க?”

ஆத்திரக் குரல்களிடம் நாங்கள் அதிகாரிகள் இல்லையென்பதையும், வினவு தளம் பற்றியும் விளக்கினோம். குரல்களின் தன்மை இப்போது மாறியது.

”சார் பத்திரிகைல இந்த அநியாயத்த எழுது சார். பால் வெலைய ஏத்தி இப்பல்லாம் நாங்க பாலே வாங்கறதில்ல சார். மண்டவெல்ல காப்பி தான். இப்ப கேசு வெலையும் ஏத்தினா இன்னாசார் பண்ண முடியும்? எப்டி சார் குடித்தனம் பண்ண முடியும்?”

அரசு பற்றி அரும்பாக்கம்

”இப்பயே ரெண்டு வேளை ஒலை போட்ட செலவுன்னு ஒரு வேளைக்கு ஒலை வச்சி நைட்டு வரைக்கும் அத்தையே துண்றோம்.. இனி சிலிண்டரு வெலையும் ஏத்தினா இன்னா சார் பண்ண முடியும்?”

அவர்களிடம் விடை பெற்று கிளம்பினோம். அவர்கள் தங்களுக்குள் ஆத்திரத்தோடு விவாதித்துக் கொண்டிருந்தனர்.

மோடியின் செயல்பாடுகள் மட்டுமின்றி மொத்தமாக அரசின் செயல்பாடுகளால் அதிருப்தியுற்றிருந்தனர். அடித்தட்டு மக்கள் மட்டுமின்றி நடுத்தர மற்றும் உயர்நடுத்தர வர்க்கத்தினரிடமும் இந்தக் கோபம் வெளிப்பட்டது. சிலர் மோடி என்றதுமே வசைபாடத் துவங்கினர்.

“கோட்சேவை பாராட்டிப் பேசினவன் நாக்கை அறுக்க வேணாம்? அதெப்படி சார் செத்தவனும் நல்லவன் அவனைக் கொன்னவனும் நல்லவனா இருக்க முடியும்? பார்லிமெண்டுக்கு போயிருக்கிற நம்மா என்னா மயித்தைப் புடிங்கிட்டு வாறாங்க” என்றார் சவரி முத்து. அறுபது வயதான இவர் பேப்பர் மில் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

முசுலீம் மக்களை தனிமைப்படுத்தி இந்து ஓட்டு வங்கியை வளர்க்கும் பாரதிய ஜனதாவின் திட்டத்தை மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்..

“எல்லாம் ஓட்டு வாங்கத் தான் பாஸ். ஆடுங்க முட்டிக்கிட்டு செத்தா ஓநாய்க்குத் தானே லாபம்? அவங்கவுங்க அவங்கவுங்க சாமிய கும்பிட்டு போறதிலே இவனுக்கு என்ன வலிக்குது? அவனும் நம்மளை மாதிரித் தானே பாஸ் கஷ்டப்படுறான்? மோடி வந்தா எதாவது டெவலப்மெண்ட் வரும்னு நினைச்சேன். டாக்ஸ் கம்மி பண்ணுவாப்லனு சொன்னாங்க. இப்ப பாத்தா தேவையில்லாத வம்பு இழுத்துகிட்டு இருக்காரு. இதெல்லாம் சரியில்ல பாஸ். சீக்கிரம் ஒழிஞ்சி போறதுக்கு வழி இது” ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் முப்பது வயது இளைஞர் செல்வகுமாரின் அங்கலாய்ப்பு இது.

அரும்பாக்கம் மத நல்லிணக்கம்
தாஜ்மகாலை சிவன் கோயில் என்றும் பாரதிய ஜனதா சொல்வதைக் கேட்டு பலரும் எள்ளி நகையாடினர்.

தாஜ்மகாலை சிவன் கோயில் என்றும் பாரதிய ஜனதா சொல்வதைக் கேட்டு பலரும் எள்ளி நகையாடினர். கருப்புப் பண விவகாரத்தில் பாரதிய ஜனதாவின் பல்டிகளைப் பார்த்து நடுத்தர வர்க்கம் ஏமாந்து போனது நன்றாகவே புலப்பட்டது. தாங்கள் நம்பவைத்துக் கழுத்தறுக்கப்பட்டதாக அவர்கள் உணர்வதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

என்றாலும், மக்களின் ஆத்திரமெல்லாம் ஓட்டுக் கட்சிப் போலி ஜனநாயகத்திற்கு மாற்று ஒன்றைத் தேடும் இல்லாமல் இலக்கில்லாத கோபமாகவே இருக்கிறது. சிலர் அரசியல் பற்றிப் பேச ஆரம்பித்ததும் சலிப்போடு ஒதுங்கிச் செல்ல முற்பட்டனர். விடாது நெருக்கிக் கேட்டால் அவர்கள் மோடியைப் புதிய ரட்சகராக எதிர்பார்த்து ஏமாந்தவர்களாக இருந்தனர். எப்படியிருந்தாலும், மக்களின் ஏமாற்றமும் அந்த ஏமாற்றம் விளைவித்த ஆத்திரமும் சரியான வழியில் நடத்திச் செல்லப்படுவதற்காக காத்திருக்கிறது.

– வினவு செய்தியாளர் குழு.