கம்யூனிச அகிலத்தின் 150-ஆவது ஆண்டு நிறைவு : மூலதனத்தின் சர்வதேசியத்திற்கு முறிவு மருந்து பாட்டாளி வர்க்க சர்வதேசியமே!

“உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்!” – மார்க்சும் எங்கெல்சும் 1848-ல் பிரகடனப்படுத்திய இந்த முழக்கத்தை அன்று ஒருசில குரல்கள்தான் எதிரொலித்தன. ஆனால் 1864 செப்டம்பர் 28-ம் நாளன்று பெருவாரியான மேற்கு ஐரோப்பிய நாடுகளது பாட்டாளிகள்  கைகோர்த்து நின்று இந்த முழக்கத்தை எதிரொலித்தார்கள். ஆம்! அன்றுதான் முதல் கம்யூனிச அகிலம் என்றறியப்படும் அனைத்துலகத் தொழிலாளர் சங்கம் நிறுவப்பட்டது. இம்முதலாவது அகிலம் தொடங்கி இன்று 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

ஐரோப்பாவில் முதலாளிகளது கொடிய சுரண்டலும் அடக்குமுறையும் நிலவிய காலம் அது. தொழிலாளர்களின் போராட்டங்களை உள்ளூர் கருங்காலிகளைக் கொண்டு ஒடுக்கிய முதலாளிகள், பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வருவோரைக் குறைந்த கூலிக்கு அமர்த்திக் கொண்டு தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களை உடைக்கவும் செய்தனர். இதற்கெதிராக பிரான்சு மற்றும் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் தங்களது இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து வர்க்க அடிப்படையில் ஒற்றுமையைக் கட்டிக் கொண்டு போராடினர். இதன் தொடர்ச்சியாக, அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தை உருவாக்க ஐரோப்பிய நாடுகளது தொழிலாளர் வர்க்கப் பிரதிநிதிகளுக்கும், முற்போக்கு – சோசலிச சிந்தனையாளர்களுக்கும் அழைப்பு விடுத்தனர்.

அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தின் தொடக்கவிழா கூட்டம்.

1864 செப்டம்பர் 28-ம் நாளன்று, இலண்டன் – செயின்ட் மார்ட்டின் அரங்கத்தில் நடந்த அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தின் தொடக்கவிழா கூட்டம்.

உலக நிகழ்வுகளையும் பாட்டாளி வர்க்கப் போராட்டங்களையும் உன்னிப்பாகக் கவனித்து வந்த கார்ல் மார்க்ஸ், பிரிட்டனிலுள்ள முற்போக்காளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் இதர நாட்டு தொழிலாளர் குழுக்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அதனாலேயே அவர் இலண்டன் – செயிண்ட் மார்ட்டின் அரங்கத்தில் நடந்த அனைத்துலகத் தொழிலாளர் சங்கத் தொடக்கக் கூட்டத்துக்கு ஜெர்மன் தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதியாக அழைக்கப்பட்டார். அக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழு, எல்லோரையும் விட கூடுதலான தகுதியுடையவராக கார்ல் மார்க்சைத் தெரிவு செய்து, அகிலத்தின் அடிப்படையான திட்டத்தையும், அதன் கொள்கை மற்றும் அமைப்பு விதிகளையும் வகுத்துக் கொடுக்குமாறு பணித்தது.

முதல் அகிலத்தில் கற்பனாவாத சோசலிஸ்டுகள், சார்ட்டிஸ்டுகள், இத்தாலிய தேசியவாதிகளான மாஜினிகள், குட்டி முதலாளிய புருதோனியவாதிகள், அராஜகவாத பக்கூனியவாதிகள், பிளாங்கியவாதிகள் – என பல்வேறு தரப்பினரும் இருந்தபோதிலும், மூலதனத்தின் ஆதிக்கத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள் வர்க்க ரீதியில் ஐக்கியப்பட்டு நின்றனர். “தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே முதற்கடமை” என்று போதித்த கார்ல் மார்க்ஸ், அரசியல் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியம் குறித்தும், அனைத்து ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை விடுதலை செய்ய வேண்டிய கடமை குறித்தும் உணர்த்தினார். முதலாவது அகிலத்தை உருவாக்கிக் கட்டியமைப்பதிலும், ஏறத்தாழ 80 லட்சம் பேரை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த அதனை போர்க்குணமிக்க தொழிலாளி வர்க்க அமைப்பாக வளர்த்தெடுப்பதிலும் மார்க்ஸ் மிக முக்கிய பங்காற்றினார்.

முதல் கம்யூனிச அகிலம்

முதல் கம்யூனிச அகிலம் என்றறியப்படும் அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தின் தொடக்கவிழா நிகழ்ச்சியை அறிவிக்கும் துண்டுப் பிரசுரம்.

வேலை நிறுத்த உரிமை, எட்டுமணி நேர வேலை, பிற தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு தருதல் என்பதோடு அகிலம் தன்னை வரம்பிட்டுக் கொள்ளவில்லை.

  • பாரிஸ் நகர பித்தளைத் தொழிலாளர்களின் போராட்டம், ஜெனிவா கட்டிடத் தொழிலாளர் போராட்டம், பெல்ஜிய நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் போராட்டம் ஆகியவற்றை ஆதரித்துப் போராடியதோடு, ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தின் வேலைநிறுத்தங்களை உடைக்க முயற்சிக்கும் முதலாளிகளுக்கு எதிராக லண்டன் மற்றும் எடின்பர்க் நகரங்களில் தொழிலாளர்களை அணிதிரட்டிப் போராடியதிலும் அகிலம் முக்கிய பங்கு வகித்தது.
  • உழைக்கும் வர்க்கப் பெண்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் குரலெழுப்பியது.
  • அயர்லாந்து விடுதலைப் போராளிகளுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டபோது, அரசியல் கைதிகளைத் தூக்கிலிடுவதை எதிர்த்து அவர்களின் மனித உரிமைகளுக்காகப் போராடியது.
  • போலந்தின் விடுதலையையும், இத்தாலியின் ஐக்கியத்தையும் ஆதரித்ததோடு, அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்க லிங்கன் தலைமையில் நடந்த போருக்கு ஆதரவாக தொழிலாளர்களைத் திரட்டி வேலை நிறுத்தப் போராட்டங்களையும் நடத்தியது.

தொழிலாளர்கள் தங்களது அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற மார்க்சின் கருத்து 1871-ல் பாரிஸ் கம்யூனில் முதன்முதலாக செயல்வடிவம் பெற்றது.

உலகில் முதன்முதலாக தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க இப்புரட்சியில், பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காகக் கண்டறியப்பட்ட அரசியல் வடிவமே கம்யூன் என்று அகிலத்தின் கூட்டமொன்றில் மார்க்ஸ் உரையாற்றினார். அந்த உரையின் விரிவாக்கம்தான் பின்னர் “பிரான்சில் உள்நாட்டுப் போர்” எனும் நூலாக வெளிவந்தது. ஏற்கெனவே உள்ள அரசு எந்திரத்தை தொழிலாளி வர்க்கம் அப்படியே எடுத்துக் கொண்டு தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளவே முடியாது என்ற மிக முக்கியமான உண்மையை பாரிஸ் கம்யூன் எடுத்துக் காட்டியுள்ளதாக மார்க்ஸ் உணர்த்தினார்.

1872 -ல் ஹேக் நகரில் நடந்த மாநாட்டின்போது, அராஜகவாதிகளுக்கும் மார்க்சியவாதிகளுக்குமிடையிலான சித்தாந்தப் போராட்டத்தில் முதலாவது அகிலம் பிளவுபட்டது. இருப்பினும்,

“மார்க்சின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக முதலாவது அகிலம் அமைந்துள்ளது … இந்த அகிலம் ஒன்பது ஆண்டுகளே நீடித்தது என்றாலும், எல்லா நாடுகளது பாட்டாளிகளிடம் அது உருவாக்கிய உயிர்த்துடிப்புள்ள ஐக்கியமானது இன்றும் நீடித்து நிலவி வருகிறது என்பதோடு, முன்னெப்போதையும் விட வலிமையாக இருக்கிறது. ஒரே படையாக, ஒரே கொடியின் கீழ் திரண்டு நிற்கிறது…”

என்று மார்க்சின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் உணர்ச்சி பொங்க உரையாற்றிய எங்கெல்ஸ் குறிப்பிட்டார்.

முதலாவது அகிலம் பிளவுபட்டு செயலிழந்த பின்னர்,  1889-ல் பாரிஸ் நகரில் எங்கெல்சும், சோசலிசத் தலைவர்களான ஆகஸ்ட் பெல், வில்லியம் லீப்னெக்ட் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற 18 நாடுகளின் சோசலிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் நடத்திய கூட்டமே இரண்டாவது அகிலத்தின் தொடக்கமாக அமைந்தது.

  • மே முதல்நாளை அனைத்துலகத் தொழிலாளர் தினமாக அறிவித்தது,
  • மார்ச் 8-ம் நாளை அனைத்துலகப் பெண்கள் தினமாக அறிவித்தது,
  • 8 மணி நேர வேலை நேரத்திற்கான கோரிக்கை முதலானவற்றுடன்

அனைத்துலகத் தொழிலாளர் வர்க்கப் பணியை, தோழர் எங்கெல்சை கௌரவத் தலைவராகக் கொண்டிருந்த இரண்டாவது அகிலம் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றது.

எங்கெல்சின் மறைவுக்குப் பின்னர் 1914-ல் முதல் உலகப் போர் தொடங்கியபோது, “தந்தையர் நாட்டைக் காப்போம்” என்று தத்தமது நாடுகளது அரசுகளின் தேசியவெறி, ஆக்கிரமிப்புப் போர் நடவடிக்கைகளை ஆதரித்து சந்தர்ப்பவாத சகதியில் இரண்டாவது அகிலம் மூழ்கியபோது, ஏகாதிபத்தியப் போர்களுக்குத் தொழிலாளி வர்க்கத்தைப் பலியிடுவதை எதிர்த்து பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை தோழர் லெனின் உயர்த்திப் பிடித்தார். முதலாளித்துவ தேசியவாதமா, பாட்டாளி வர்க்க சர்வதேசியமா என்று இந்த அகிலம் பிளவுபட்டதால், 1916-ல் இரண்டாம் அகிலம் கலைக்கப்பட்டது. காவுஸ்த்கி, பெர்ன்ஸ்டைன் முதலான சந்தர்ப்பவாதிகளுக்கும் குறுகிய தேசியவெறியர்களுக்கும் எதிராகப் போராடிய லெனின், உலகை மறுபங்கீடு செய்வதற்கான  ஏகாதிபத்திய யுத்தத்தை உள்நாட்டு விடுதலைக்கான யுத்தமாக மாற்ற வேண்டுமென உணர்த்தினார். ஏகாதிபத்திய யுத்தத்தில், தமது தந்தையர் நாட்டை ஆதரிக்காத எவரும் தேசத் துரோகிகள் என்று பிரச்சாரம் நடந்து வந்த நிலையில், அதற்கெதிராக எதிர்நீச்சல் போட்டு பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசக் கடமையை உணர்த்தி லெனின் முன்வைத்த பாதையின் வெற்றியை ரஷ்ய சோசலிசப் புரட்சி பறைசாற்றியது.

கம்யூனிச அகிலம்

1919-லிருந்து 1943 வரை கம்யூனிச அகிலத்தின் சார்பில் பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்ட “கம்யூனிச அகிலம்” எனும் அரசியல் கோட்பாட்டு இதழ்.

பின்னர், 1919-ம் ஆண்டில் தோழர் லெனின் தலைமையில் மூன்றாவது கம்யூனிச அகிலம் மாஸ்கோவில் நிறுவப்பட்டது.

  • அனைத்துலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான போர்த்தந்திரத்தை வகுத்துக் கொடுத்து, ஏகாதிபத்திய நாடுகளிலுள்ள பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்துக்கும் காலனி, அரைக்காலனி மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களது விடுதலைக்கும் வழிகாட்டியது.
  • லெனின் மறைவுக்குப் பின்னர் தோழர் ஸ்டாலின் தலைமையில் இயங்கிய மூன்றாவது அகிலம், பல்வேறு நாடுகளிலும் கம்யூனிஸ்டு கட்சிகளைத் தொடங்கவும் வளரவும் உதவியதோடு, ஐரோப்பாவில் இட்லரின் பாசிச ஆக்கிரமிப்புக்கு எதிராக நாடுகளின் சுதந்திரத்தையும் மக்களின் விடுதலையையும் இலட்சியமாகக் கொண்டு செயல்படவும், பாசிசத்துக்கு எதிராக ஐக்கிய முன்னணியைக் கட்டியமைத்துப் போராடவும் அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்துக்கு வழிகாட்டியது.
  • அனைத்துலக பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பொதுத் திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு நாட்டின் தனிச்சிறப்பான நிலைமைகளையும், அந்நாட்டின் அரசியல்-சமூக வளர்ச்சியின் நிலைமையையும் வர்க்க முரண்பாடுகளையும் கணக்கில் கொண்டு வழிகாட்டுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாகவும், சோவியத் ரஷ்யா மீதான பாசிச இட்லரின் ஆக்கிரமிப்புப் போரைத் தொடர்ந்து போர்ச்சூழல் காரணமாக வழிகாட்டுவதிலும் முடிவெடுப்பதிலும் உள்ள இடர்ப்பாடுகள் காரணமாகவும், அனைத்துலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பொதுவழியை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த நாடுகளின் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் பருண்மையான நிலைமைகளுக்கேற்ப இதனைச் செயல்படுத்த வேண்டுமென்ற வழிகாட்டுதலுடன் 1943 மே 15-ம் நாளன்று இந்த அகிலம் கலைக்கப்பட்டது.

அகிலம் கலைக்கப்பட்ட போதிலும், கம்யூனிச ரஷ்யாவிலும் சீனாவிலும் முதலாளித்துவப் பாதையாளர்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய போதிலும், முதலாளித்துவ தேசியவெறிக்கும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்களுக்கும் எதிரான அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசிய உணர்வும் ஒற்றுமையும் இன்றும் நீடித்து வருகின்றன. கம்யூனிஸ்டுகள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்கிற முதலாளித்துவ அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் இந்தியா மட்டுமின்றி எல்லா நாடுகளிலும் இன்னமும் தொடர்கின்றன. ஆனால், 150 ஆண்டுகளுக்கு முன்னரே இத்தகைய அவதூறுகளை மறுதலித்து, கம்யூனிஸ்டுகளுக்கு தேசிய எல்லைகள் தடையாக இருப்பதில்லை என்பதை உணர்த்தி, “மூலதனத்தின் ஆதிக்கத்துக்கு எதிராக உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!” என்ற முழக்கத்துடன் அனைத்து நாடுகளிலுமுள்ள தொழிலாளர்கள் வர்க்க ரீதியில் சர்வதேச உணர்வுடன் ஓரணியில் திரண்டு நின்றார்கள்.

இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாக்கக் கொள்கைகளின் விளைவாக, மூலதனம், உற்பத்தி, சந்தை, உழைப்புப் பிரிவினை ஆகியன உலகமயமாகி வருவதன் விளைவாக, வெவ்வேறு தேசிய இனங்கள் – நாடுகளின் உழைக்கும் மக்கள் பிழைப்புக்காகத்தான் என்றாலும், பெருமளவில் இடம்பெயர்வதும் உழைப்புச் சந்தையில் ஒன்றுகுவிக்கப்படுவதும் நடக்கிறது. இது பாட்டாளி வர்க்க சர்வதேச ஒற்றுமையைத் துரிதப்படுத்துகிறது. ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு மாற்றாகவும் எதிராகவும் பாட்டாளி வர்க்க உலகமயமாக்கம்தான் ஒரே தீர்வாக முடியும். பாட்டாளி வர்க்க சர்வதேசியம்தான் பாட்டாளி வர்க்க உலகமயமாக்கத்துக்குப் பொருத்தமான அரசியலாகவும், பாட்டாளி வர்க்க ஐக்கியம்தான் அதற்கான அமைப்பாகவும் இருக்க முடியும்.

இன்று, உலக வர்த்தகக் கழகம், ஜி-7, ஜி-20, சார்க், ஏசியான் என்று பலதரப்பட்ட சர்வதேசக் கூட்டணிகளைக் கொண்டுள்ள ஏகாதிபத்திய மேலாதிக்கத்துக்கும் மறுகாலனியாதிக்கத்துக்கும் எதிராக அனைத்துலகத் தொழிலாளி வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான வாப்புகள் மேலும் விரிவடைந்துள்ளன. ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்க சுரண்டல்-ஒடுக்குமுறைக்கான ஆயுதமாக இந்தியா போன்ற துணை வல்லரசுகளும் பிராந்திய வளையங்களும் பயன்படுத்தப்படும் சூழலில், ஒரே பொருளாதார, தொழில் – வர்த்தக வளையத்தில் உள்ள எந்த நாட்டிலும் தேசிய இன விடுதலையோ, பாட்டாளி வர்க்கப் புரட்சியோ வெற்றிபெறவும் நிலைத்து நிற்கவும், மற்ற பிற நாடுகளது பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கங்களின் ஆதரவும் ஒருங்கிணைப்பும் இன்று தேவையாக உள்ளது.

ஏகாதிபத்திய மூலதனத்துக்கும், குறிப்பாக பன்னாட்டுத் தொழிற்கழகங்களுக்கும் எதிரான போராட்டங்களில் தேசிய எல்லைகளையும், தேசிய இன, மொழி, பிராந்திய அடையாளங்களையும் கடந்த பாட்டாளி வர்க்க அமைப்புகளும் இயக்கங்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டிய அவசியமும் எழுந்துள்ளது.

“உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!”

– குமார்.
__________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
__________________________________