privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்உதயமானது ஐ.டி துறை யூனியன்

உதயமானது ஐ.டி துறை யூனியன்

-

250 பேர் வந்திருந்தனர்! வந்திருந்தவர்களில் கணிசமானவர்கள் ஐ.டி. ஊழியர்கள்.

‘தொழிற்சங்கம் என்பது அழுக்கில் வேலை செய்யும் ஆலைத் தொழிலாளர்களுக்கானது; உரிமைகளைக் கோரி போராடுவதும், அடக்குமுறைக்கு எதிராக ஆர்த்தெழுவதும் படிக்காதவர்கள் செய்யும் வேலை – இப்படி சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இவர்கள். பலர் சமூகத்தின் அங்கமாக தம்மை உணர்ந்து பழக்கப்படாதவர்கள். இப்போது இரண்டாம் முறையாகப் பிறந்துள்ளார்கள், சமூக மனிதர்களாக!!

புஜதொமு ஐ.டி ஊழியர்கள் பிரிவு கூட்டம்
சமூக மனிதர்களாக!

டி.சி.எஸ் வேலை நீக்க நடவடிக்கை செய்தியை தமிழ் இணைய உலகில் முதன் முதலாக நாங்கள் வெளிக் கொண்டு வந்து தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வந்தோம். இதன் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்திற்கான அறிவிப்பை 7-ம் தேதி தான் வெளியிட்டோம். ஐ.டி துறை ஊழியர்களின் பணி பாதுகாப்பையும், பணியிட உரிமைகளையும் உறுதி செய்ய தொழிற்சங்கமே தீர்வு என்று வினவு மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சார்பில்  பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்தோம்.  மூன்றே நாட்களில், பல்லாயிரம் ஐ.டி ஊழியர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய முடிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தொழிலாளர்கள்தான்.

இதன் தொடர்ச்சியாக புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் சோழிங்கநல்லூரிலிருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் உள்ள படூரில் கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை 10-ம் தேதி ஏற்பாடு செய்திருந்தது.

டி.சி.எஸ் லேஆஃப் - புஜதொமு கூட்டம்
எச்.ஆர் உளவாளிகளை எச்சரிக்கும் வாயில் பேனர்

செங்கொடியைக் கண்டும் கேட்டுமிராத ஐ.டி காரிடரில் வந்திறங்கினர் பு.ஜ.தொ.முவின் தொழிலாளர்கள். பிரச்சாரம் சோழிங்கநல்லூரில் துவங்கியது. இதற்காக கும்மிடிப்பூண்டி, பட்டாபிராம் பகுதிகளில் வேலை செய்யும் பு.ஜ.தொ.மு தொழிலாளர்கள் தங்களது இரவு ஷிப்டுகளுக்குப் பிறகு ரயில் நிலையத்திலேயே ஓரிரு மணிநேரம் படுத்து தூங்கி விட்டு, சோழிங்க நல்லூர் வந்தார்கள். அதிகாலையில் அரைத்தூக்கத்திலாழ்ந்த படி பேருந்தில் சென்று கொண்டிருந்த ஐ.டி ஊழியர்களை, தட்டி எழுப்பினார்கள். போலீசின் தொந்திரவுகள், அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகளை விநியோகித்து விட்டு, அங்கிருந்த படியே அடுத்த ஷிப்டிற்கு சென்றார்கள்.

ஐ.டி ஊழியர்களின் குடியிருப்புப் பகுதிகளில் பிரச்சாரம், அவர்கள் செல்லும் பேருந்துகளிலும் மின்சார இரயில்களிலும் பிரச்சாரம், ஐ.டி துறையினர் புழங்கும் இணையம், சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸப்பில் பிரச்சாரம், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பிரசுரங்கள், பல நூறு போஸ்டர்கள் என்று மூன்றே நாட்களில் இந்தக் கலந்துரையாடல் கூட்டம்  ஐ.டி துறையினரிடையே முக்கிய பேசு பொருளாக்கப்பட்டது.

இந்தப் பிரச்சாரத்தின் உச்சகட்டமாக, சனவரி 9-ம் தேதி காலையில் சிறுசேரி சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பாதுகாப்பு அரணுக்குள் பதுங்கிக் கொண்டிருக்கும் டி.சி.எஸ் நிறுவனத்தின் வாயிலில் நடைபெற்றது மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் மற்றும் பு.ஜ.தொ.மு தோழர்களின் பிரச்சாரம். தொழிற்சங்கம் என்ற சொல்லையே உச்சரிக்கக் கூடாது என்று தடை செய்யப்பட்டிருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்றழைக்கப்படும் கார்ப்பரேட்டுகளின் கர்ப்பகிரகத்தினுள் செங்கொடி நுழைந்தது. அந்த பிரச்சாரம் ஊழியர்களிடம் தோற்றுவித்த முக்கிய விளைவு – நம்பிக்கை, தைரியம்.

திட்டமிட்டபடி 10-ம் தேதி மாலை கலந்துரையாடல் கூட்டத்தைத் துவக்கினர் பு.ஜ.தொ.மு தோழர்கள்.

கூட்டத்திற்கு நேரடியாக வந்தவர்களைத் தவிர, பல ஊர்களில் இருந்தும் தொலைபேசியில் அழைத்து ஆதரவு அளித்தவர்கள் பலர். கூட்ட மேடையிலேயே இரண்டு ஐ.டி ஊழியர்கள் தாம் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியில் இணைவதாக அறிவித்தனர். கூட்டத்திற்கு வந்தவர்களில் மேலும் பலர் சங்கமாக இணைய முன்வந்து தங்கள் பெயர்களையும் தொடர்பு எண்களையும் அளித்துச் சென்றுள்ளனர்.

”ஐ.டி ஊழியர்களாவது, சங்கம் கட்ட முன்வருவதாவது” என்ற பொதுப்புத்தியின் அவநம்பிக்கை குரல் ஜனவரி 10-ம் தேதியோடு நொறுங்கி விழத் துவங்கியிருக்கிறது. என்றாலும், இதைத் துவக்கி வைத்ததை எமது சாதனையாக மட்டும் நாங்கள் பார்க்கவில்லை. ஐ.டி துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரள்வது ஒன்றே அவர்களது எதிர்காலத்தையும் வேலையையும் காப்பாற்றும் என்ற எதார்த்தமான முடிவை நோக்கி அவர்களைத் தள்ளியது நாங்கள் அல்ல – – அந்தப் பெருமை டிசிஎஸ் மற்றும் ஐ.டி கார்ப்பரேட்டுகளையே சாரும்.

பு.ஜ.தொ.மு-வின் மாநில பொருளாளர் விஜயகுமார்
பு.ஜ.தொ.மு-வின் மாநில பொருளாளர் விஜயகுமார்

கலந்துரையாடல் கூட்டத்தை பு.ஜ.தொ.மு-வின் மாநில பொருளாளர் விஜயகுமார் ஒருங்கிணைத்து நட்த்தினார். அறிமுக உரையாற்றிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் இந்திரா ஐ.டி துறையில் நிகழும் ஒடுக்குமுறைகளையும் அதை எதிர்த்து முறியடிப்பதற்கு ஊழியர்களுக்கு இருக்கும் சட்ட பூர்வமான வாய்ப்புகளைக் குறித்தும் விளக்கி பேசினார். தொடர்ந்து புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் ஐ.டி பிரிவு துவங்கப்பட்டதை அறிவித்த தோழர் விஜயகுமார், அதற்கான நிர்வாக குழு ஏற்படுத்தப்பட்டு அதன் அமைப்பாளராக தோழர் கற்பகவிநாயகம் தெரிவு செய்யப்பட்டிருப்பதையும் அறிவித்தார்.

தோழர் கற்பக விநாயகம்
பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவின் அமைப்பாளர் தோழர் கற்பக விநாயகம்

அதைத் தொடர்ந்து உரையாற்றிய கற்பகவிநாயகம் தனது 17 ஆண்டு கால ஐ.டி துறை வாழ்க்கை குறித்தும் அதில் தான் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்தும் பேசினார். தனித்தனியாக தீர்வை தேடுவதால் பலனில்லை என்றும் சங்கமாக சேர்வதன் மூலம் மட்டுமே தீர்வுக்கான வழிபிறக்கும் என்பதையும் தனது அனுபவத்தின் வாயிலாக எடுத்துக் கூறினார். சட்டப்பாதுகாப்புகளே இல்லாத காலத்தில் 33 வயதான வ.உ.சி தொழிலாளர்களை அமைப்பாக்கி போராடியதை நினைவு கூர்ந்த அவர் அந்த பாரம்பரியத்தை வரித்துகொண்டு நம்மாலும் அதை செய்துகாட்ட முடியும் என்று பேசினார்.

அடுத்து பேசிய மனநல மருத்துவர் ருத்ரன் ஐ.டி துறை ஊழியர்கள் எதிர்கொள்ளும் மனநலம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும், சங்கமாக சேர்வது எப்படி அதிலிருந்து விடுவிக்கும் என்பது பற்றி விளக்கி பேசினார்.

டி.சி.எஸ் லேஆஃப் - புஜதொமு கூட்டம்
டாக்டர் ருத்ரன் உரை

மேலும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மீனாட்சி, மில்டன், பார்த்தசாரதி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் கூட்டத்தில் உரையாற்றினர்.

டி.சி.எஸ் லேஆஃப் - புஜதொமு கூட்டம்
ஊழியர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் மூத்த வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ்

கலந்துரையாடல் நிகழ்வுக்கு வந்திருந்த ஐ.டி துறை ஊழியர்களின் சந்தேகங்களைப் போக்கும் வகையில் அவர்களது கேள்விகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் விளக்கமளித்தார். ஊழியர்கள் தங்கள் கேள்விகளை படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்க, அதில் சட்டரீதியான கேள்விகளை சாராம்சமாக தொகுத்துக் கொண்டு அவை குறித்த விளக்கங்களை வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் அளித்தார். ஐ.டி தொழிலாளர்கள் கேட்டிருந்த சந்தேகங்களில் தொழிற்சங்கம் குறித்தும் பு.ஜ.தொ.மு குறித்தும் தொழிற்சங்கம் துவங்குவது குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பு.ஜ.தொ.முவின் மாநில பொருளாளர் விஜயகுமார் பதிலளித்து பேசினார்.

உடனடியாக என்ன செய்வது என்பதைக் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது, ”நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்குப் பயந்து ராஜினாமா கடிதம் கொடுக்காதீர்கள். தொழிற்சங்கத்தில் சேருங்கள்” என்பதே ஊழியர்களுக்கு பு.ஜ.தொ.மு கூறும் செய்தி என்பதை வலியுறுத்தினார்.

வழக்கறிஞர் தோழர் மீனாட்சியின் நன்றி அறிவித்தலுடன் கூட்டம் நிறைவு பெற்றது. வந்திருந்த ஐ.டி தொழிலாளர்கள் நம்பிக்கை மின்னும் கண்களோடு புறப்பட்டனர்.

நுழைவாயிலைக் கடந்த ஐ.டி ஊழியர் ஒருவர் அங்கே வைக்கப்பட்டிருந்த “HR SPIES WILL BE STRICTLY DEALT WITH” என்ற அறிவிப்பை மகிழ்ச்சியோடு தனது நண்பரிடம் சுட்டிக்காட்டினார் –

“மச்சி, ஹெச்சார் ஆளுங்க இங்க நம்ப வந்ததை பார்த்தா தூக்கிர மாட்டானுங்க?” என்றார் ஒருவர்.

“இனிமேட்டு கைவைக்க யோசிப்பானுங்கடா.. அப்டியே வச்சாலும் பெர்பாமென்சுக்காக இல்லாம இதுக்குத் தான் போச்சின்னு வீரமா சொல்லிக்கலாம் இல்ல? விட்றா பாத்துக்கலாம்” என்றார் இன்னொருவர்.

வேலை போய்விடும் என்ற அச்சத்தை விடுவதுதான், வேலையைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழி என்பதை ஊழியர்கள் உணரத் தொடங்கியிருப்பதே இக்கூட்டத்தின் முக்கிய வெற்றி.

– வினவு செய்தியாளர்கள்

குறிப்பு: கலந்துரையாடல் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் காணொளிப் பதிவுகளும், எழுத்து வடிவமும் வினவு தளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

பத்திரிகை செய்திகள்