privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மதுவை தடை செய்ய மக்களிடம் மனு !

மதுவை தடை செய்ய மக்களிடம் மனு !

-

வீட்டுக்கு ஒரு குடிகாரனை உருவாக்கும் அரசின் திட்டம் நிறைவேறும் நாள் நெருங்குது!
விதியை நொந்து புலம்பும் மக்கள் வீறுகொண்டு எடுத்து வைக்கும் அடுத்த அடிக்காக தமிழகம் ஏங்குது!

“தாயி உங்களுக்கு கோடி புண்ணியம்மா நானும் குடிகாரன்தான் ஆனா ரொம்ப மோசமா போகுதம்மா நாட்டு நிலம, எப்படியாவது இதை நிறுத்தணும்மா”

70 வயது முதியவரின் வார்த்தைகளில் கிடைத்த உற்சாகத்தோடும் தமிழகத்தை பீடித்துள்ள இந்த சீரழிவை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற உத்வேகத்தோடும்  டாஸ்மாக்கிற்கு எதிரான எமது பிரச்சார இயக்கம் தொடர்ந்தது.

“மனு கொடுத்தாச்சு போஸ்டர் ஒட்டியாச்சு, தெருமுனைப் பிரச்சாரம் உள்ளிட்ட வகையிலும் செய்தாயிற்று, அரசு அசைவதாக தெரியவில்லை. இரையை விழுங்கிய மலைப்பாம்பை போல அசைவின்றி கிடக்குது, சொரணையுள்ள நாம் சும்மா இருக்கக் கூடாது”

என்ற உறுதியோடு பிரச்சார இயக்கத்தை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து துவங்கினோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஆட்சியரிடம் ஆயிரக்கணக்கில் மனுகொடுத்தும் பலன் இல்லாத நிலையில் மீண்டும் நூற்றுக் கணக்கான மனுக்கள் தயார் செய்து கொண்டு ஆட்சியர் அலுவலகம் சென்றோம், அதிகாரிகளிடம் கொடுக்க அல்ல,

“இந்த இழி நிலைக்கு காரணமே இந்த அரசும் அதிகாரிகளும் தான் இவர்களை நம்பிப் பயனில்லை; உழைக்கும் மக்களாகிய நீங்கள் ஒன்றிணைந்தால்தான் நாட்டு நடப்பை உணர்ந்து களத்தில் இறங்கிப் போராட முன் வந்தால்தான் நம்மைப்பிடித்த இந்த டாஸ்மாக் பீடையை ஒழிக்க முடியும். ஆகவே, போராட வாருங்கள்”

என மக்களிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டன.

pevimu-tasmac-campaign-collector-office-2மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த மக்கள் மனுக்களை பெற்று ஆர்வமாக படித்து பரிசீலிக்க துவங்கினர்.

இந்த செய்தி தினகரன் பத்திரிகையில் மட்டும் வெளியானது. மற்றவர்கள் படம் எடுத்தனர், ஆனால் என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை, செய்தி போடவில்லை (அம்மாவின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்ற எண்ணமாக இருக்கலாம்).

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், நீதிமன்றம், கல்லூரிகள், விடுதிகள், பேராசிரியர்கள் சிக்னலில் காத்திருக்கும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடமும் பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டப்பட்டது.

மக்களின் பல்வேறு அனுபவங்களை இதன் மூலம் பெற முடிந்தது. தார்மீக ஆதரவு, வாழ்த்து, நிதிஉதவி என மக்கள் பலவகைகளில் ஆர்வமுடன் வரவேற்று உதவினர்; டாஸ்மாக்கின் ஆதரவாளர்கள் உட்பட அம்மா விசுவாசிகளையும் சந்திக்க முடிந்தது. அம்மா, அம்மா என்றும் மக்கள் முதல்வர் என்றும் பேசுகின்றார்களே, அந்த அம்மா, தமது தமிழக பிள்ளைகளுக்கு என்ன ஊட்டுகிறார் என்பதை தெளிவுபடுத்தும் விதமாக தோழர் முகிலன் வரைந்த ஓவியம் (தமிழனை மடியில் கிடத்தி சாராயம் ஊட்டும் ஓவியத்தை) பெரிய சுவரொட்டியாக தயாரித்து நகர் முழுவதும் ஒட்டப் பட்டது.

ஊத்திக் கொடுப்பதும் சீரழிப்பதுமா அரசின் வேலை நாட்டையும் வீட்டையும் கெடுக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடு! என்ற வாசகத்துடனான் பதாகைகள், சுவரொட்டிகள் மக்களிடம் வரவேற்பையும், அதிமுகவினருக்கு கடுப்பையும் ஏற்படுத்தியது. ஒரு அதிமுக இளைஞர் போன் மூலம் சுமார் 10 நிமிடத்துக்கு மேலாக தனது ஆதங்கத்தைக் கொட்டினார்.

“அம்மா செய்த சாதனைகள் இலவச திட்டங்களைப் பற்றி பேசாமல் டாஸ்மாக்கை மட்டும் பேசுகிறீர்களே, இது நியாயமா?” என்றார்.

“சாராயத்தின் மூலம் தமிழ்ச் சமுதாயமே சீரழிவது தெரியலையா? மக்களை விட இந்த மாமிச மலை மீதுதான் உங்களுக்கு அக்கறையா?” என கேட்டதும் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு தொடார்பு எல்லைக்குள் அவர் வரவே இல்லை!

கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி பெற பெண் தோழர்கள் காவல்நிலையம் சென்றபோது குரலை தாழ்த்திய ஏட்டையா, “குடிகாரர்களின் பஞ்சாயத்தை சமாளிக்கவே முடியல; ஏதாவது செய்யுங்க” எனக் குமுறினார்.

“நீங்க கேட்ட தேதியில் வேறுயார் கேட்டாலும் அனுமதி இல்லைன்னு சொல்லிட்டேன். நீங்க நடத்துங்க” என தன்னால் முடிந்த ஆதரவை தெரிவித்தார்.

22.12.2014 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்!
ஊரு தாலிய அறுத்த காசில் ரேசன் அரிசி இலவசம்!

என்ற மகஇக மையகலைக் குழுவின் பாடலுடன் ஆர்ப்பாட்டம் துவங்கியது. உழைக்கும் மக்கள் பார்வையாளர்களாக நின்று கவனித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை தோழா. நிர்மலா தலைமை யேற்று நடத்தினார். மக்களிடம் பிரச்சாரத்துக்கு சென்றபோது கிடைத்த ஆதரவும் கருத்துக்களும் தொடர்ந்து போராட ஊக்கமளித்ததாக விளக்கினார்.

pevimu-tasmac-campaign-demo-07

அடுத்து பேசிய தோழர்.ஜெயமணி

“குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் நாட்டையும் வீட்டையும் கெடுக்கும் என பாட்டிலில் சின்னதாக எழுதிவைத்தால் போதுமா? மனிதன் குடித்தபிறகு மிருகமாக மாறுகிறானே தனது தாரத்துக்கும் மகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறி சீரழிக்கிறானே, கெட்டது அவன் மகளல்ல, இந்த சமூகத்தின் மானமும், மரியாதையும் அல்லவா? இந்த இழிநிலையை ஏற்படுத்திதான் அரசு சம்பாதிக்க வேண்டுமா? இந்த மானக்கேட்டை எதிர்த்து முறியடிக்க வேண்டாமா?ஆபாசச் சீரழிவைத் தூண்டும் செல்போன் இன்டர்நெட், உள்ளிட்டவையில் பரவும் இந்த வைரசை அழிக்க வேண்டாமா?” என்று எளிய கேள்விகளை பேசியதுடன் “டாஸ்மாக்கை மூடும் வரை போராடுவோம்”

என முழங்கினார்.

“உயிர் காக்கிற கருவி இல்லாம குழந்தைகள் சேலம் தர்மபுரியில் சாகுது! பத்துமாதம் கருவை சுமந்த தாய்மார்கள் பிரசவத்தில் தனது குழந்தையைப் பார்க்காமலே உயிரிழந்த சம்பவம் சட்டிஸ்கரில் நடக்குது! பார்வை குறைபாட்டை சரிசெய்ய மருத்துவமனை சென்ற பஞ்சாபிகளை முழு குருடாக்கிய கொடுமைகள் சொல்லி மாளாது; இதையெல்லாம் கவனிக்காத மத்திய மாநில அரசுகள் தன் மக்கள் வேட்டியிழந்து, மானமிழந்து குடிகெடுத்து குடும்பத்தை தெருவில் நிறுத்தச் செய்யும் டாஸ்மாக் விற்பனையை பெருக்க முயற்சிக்கிறது. இந்த ஆட்சியாளார்கள், அதிகாரிகளை எதைக்கொண்டு அடிப்பது?”

என ஆவேசமாக சாடினார் தோழர் அம்சவள்ளி.

“கவர்மெண்டு தண்ணிய ஊத்திவிட்டு காசுபாக்குது, போலீசு வாய ஊதச்சொல்லி காசு புடுங்குது. இந்த புடுங்கி அரசுகளிடமிருந்து மக்களை மீட்பது அவசர, அவசிய பணியாக உள்ளது. மனித இனத்துக்கே பெரும் கேடு விளைவிக்கும் இந்த போதை பழக்கம் சோமபானம், சுராபானம் என்ற பெயரில் இராமன் காலத்து இதிகாச குப்பை களிலேயே காணப்படுகிறது. குடிகெடுப்பதை பார்ப்பனன் அப்பவே செய்யத் துவங்கி விட்டான். ஆனா எல்லா பானத்தையும் விட இந்த அம்மா பானம் ஏற்படுத்தும் விளைவு மோசமானது. நம்மை குடிகாரர்களாக்கி சீரழித்து சிந்திக்க வக்கற்றனவாக மாற்றுகிறது. இதன்மூலம் நாட்டை சுரண்டவும் கொள்ளையிடவும் வழிசெய்கிறது. இதனை வீழ்த்தி முறியடிக்க வேண்டும்”

என மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தை சேர்ந்த தோழர் ராஜா சிறப்புரையாற்றினர். இறுதியாக தோழர்.பவானி நன்றியுரையாற்றினார்.

ம.க.இ.க மையக்கலைக்குழு தோழர்களின் புரட்சிகர பாடல்கள் மக்களின் உணர்வை தூண்டும் படியும், சிந்திக்க வைக்கும் வகையிலும் அமைந்தது.

தகவல்:
பெண்கள் விடுதலை முன்னணி,
திருச்சி கிளை.

  1. மக்கள் மதுவை கைவிடவேண்டும். தங்களின் குழந்தைகள் மற்றும் கணவன்மார்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி மதுவை மறக்கடிக்க வேண்டும். ஆனால் அரசால் மதுவை ஒழிக்க முடியாது. மதுவிலக்கு கொண்டுவந்தால் கள்ளசாராயம் பெருக்கெடுத்து ஓடும். இதனால் விஷ சாராயம் அதிகரிக்கும். சாவு அதிகரிக்கும். பிற மாநிலங்களுக்கு சென்று மது குடித்துவிட்டு வருவார்கள். அரசுக்கு வருவாய் இழப்பு! வருமானம் முழுவதும் போலிசுக்கு போகிறது. ஆகையால் மக்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி மதுவை கைவிட செய்யவேண்டும். மது விலக்கு கொண்டுவருவதை தவிர்த்து மக்களை அதிலிருந்து விடுவிக்க வேண்டும்.

  2. எல்லா மாநிலங்களிலும் மது விலக்கு கொண்டு வந்தா துபாய் போய் குடிப்பானுங்களோ? நீங்க பாருங்க உண்மையை ஒத்துகிறீங்க.இந்த அரசால் இதை செய்ய முடியாது என்பதை. உங்க மன தெகிரியத்தை பாராட்டி மிலிட்டரி சரக்கு ஒரு பாட்டில் உங்களுக்கு ப்ரீயா கொடுக்க சொல்றேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க