privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைமாணவர் - இளைஞர்தமிழுரிமை காக்க சென்னை பு.மா.இ.மு சைக்கிள் பேரணி - படங்கள்

தமிழுரிமை காக்க சென்னை பு.மா.இ.மு சைக்கிள் பேரணி – படங்கள்

-

முதல் மொழிப்போர் தியாகி நடராசனுக்கு நினைவேந்தல்
(1939 சனவரி 15 )

சென்னையில் பு.மா..மு தோழர்கள் சைக்கிள் பேரணி

1938, ஏப்ரல் – 21-ம் தேதி முதல் சென்னை மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இந்தியை கட்டாயப்பாடமாக்கினார் சென்னை மாகாண முதல்வர் பதவிக்கு கொல்லைப்புற வழியாக வந்த பார்ப்பன நரி ராஜாஜி. இந்தி – சமஸ்கிருத திணிப்பை முறியடிக்கும் வகையில் சோமசுந்தர பாரதியார், தந்தை பெரியார், கி.ஆ.பெ விசுவநாதம் போன்றவர்கள் ’’இந்தி எதிர்ப்பு தலைமை வாரியத்தை’’ அமைத்து இந்தியை கற்றுத்தரும் பள்ளிகள் முன்பு மறியல் போராட்டங்களை தீவிரமாக நடத்தினர். இந்தப் போராட்டங்களில் மக்கள், தமிழறிஞர்கள், பெண்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறை சென்றார்கள்.

சென்னையில் நடந்த ஒரு மறியல் போரட்டத்தில் ஈடுபட்டதற்காக நடராசன், தாளமுத்து உள்ளிட்டு இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கில் சிறையிலடைக்கப்பட்டார்கள். அதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நடராசன் 1939 சனவரி 15-ம்தேதி உயிரிழந்தார். இவர்தான் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் மொழிப்போர் தியாகி. அவரைத் தொடர்ந்து மார்ச் -12-ம் தேதி தாளமுத்துவும் தியாகியானார். அரசின் அடக்குமுறையை எதிர்த்து நின்ற இந்த வீரர்கள் தங்கள் உயிர்த் தியாகத்தால்  ராஜாஜி அரசை பணிய வைத்தனர். இந்தித் திணிப்பு கைவிடப்பட்டது.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்மீண்டும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி தலைமையில் ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத – இந்தி ஆதிக்க பண்பாடடு படையெடுத்து வருகிற இத்தகைய சூழலில் இதை வெட்டி வீழ்த்த மொழிப்போர் தியாகிகள் நினைவை நெஞ்சில் ஏந்தி வீறுகொண்டு எழவேண்டியுள்ளது. அதோடு,

  • தமிழ் தேசிய இனத்தின் கடவுள் – ஆன்மீக மறுப்பு, வேத, வைதீக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி எதிர்ப்பு பாரம்பரியத்தை போர்வாளாக ஏந்துவோம்!
  • மீண்டும் படையெடுத்து வருகிற ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத – இந்தி ஆதிக்க பண்பாட்டை போரிட்டு வீழ்த்துவோம்!
  • ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக தமிழ் நாட்டை கட்டியமைப்போம்!

ஆகிய முழக்கங்களையும் தமிழக மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்த்து தட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இதை செய்யும் பொருட்டு மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் கடந்த ஜனவரி 10-ம் தேதி முதல் தமிழக அளவில் பேருந்து, ரயில்களில் பிரச்சாரம், மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் பிரச்சாரம் என பல்வேறு வடிவங்களில் முழுவீச்சில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

அதன் ஒரு வடிவமாக, சென்னையில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் ஜனவரி – 15 அன்று மாலை 5 மணியளவில் மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள முதல் மொழிப்போர் தியாகி நடராசன் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்அன்று ‘தமிழர் திருநாள் ’ என்று அழைக்கப்படும் பொங்கல். அரசு விடுமுறை நாள். சென்னையிலிருந்து சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்றுவிட்டனர். எஞ்சிய சென்னை வாசிகள் பொங்கலை கொண்டாட தயாரானார்கள். தொலைக்காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் மக்களை வீட்டிற்குள்ளேயே சிறைபிடிக்க காத்திருந்த நாள். ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி தமிழ் மொழியையும், தமிழரின் வாழ்வையும், தமிழரின் பண்பாட்டையும் தாக்கி அழிக்க ஆரிய – பார்ப்பனக் கூட்டம் மீண்டும் படையெடுத்து வரும் போது தமிழக மக்கள் அமைதியாக இருக்கும் சூழலை உடைத்தெரிந்து வீறுகொண்டு எழவேண்டும் என்ற போர்க்குணத்தோடு, பு.மா.இ.மு வைச் சார்ந்த தோழர்கள் சென்னையில் சைக்கிள் பேரணியை நடத்தினர்.

ஜனவரி 15 -ம் தேதி விடியற் காலையில் பொழிந்த கடும் பனியையும் பொருட்படுத்தாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து  சைக்கிள்களை மதுரவாயல் – நொளம்பூர் பகுதியில் குவித்தனர். தீவிரமாகிவரும் மறுகாலனியாக்க சூறையாடல்களால் அன்றாடம் வாழ்வை இழந்து, பொங்கல் களையிழந்து கிடந்த உழைக்கும் மக்கள் வாழும் நொளம்பூர் பகுதியில் பு.மா.இ.மு தோழர்களின் சைக்கிள் பேரணி களைகட்டத் தொடங்கியது.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்காலை முதல் சைக்கிள்களில் செங்கொடி கட்டுவது, மொழிப்போர் தியாகிகளின் படங்களை கட்டுவது, சைக்கிள்களை வரிசைப்படி தயார் நிலையில் வைப்பது என உடம்பில் செஞ்சட்டை, தலையில் தொப்பி, கழுத்தில் முழக்க அட்டை, கையில் அமைப்பு பெயர் எழுதிய கைப்பட்டை சகிதமாக மாணவ – மாணவிகள் இப்பணியில் ஈடுபட்டனர். புத்தாடை இன்றி – பொலிவிழந்து அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருந்த அப்பகுதி மக்களும், இளைஞர்களும், இளம்பெண்களும் பு.மா.இ.மு தோழர்களின் உற்சாகமான தயாரிப்பை பார்த்து ’’இங்க என்னப்பா செய்றீங்க, காலையிலிருந்து எதோ கும்பல் கும்பலா வேலை செய்றீங்க’’ என்று ஒருவர் வியந்து கேட்க, அவருக்கு ஒரு தோழர் விளக்கி சொன்னார்.

அடுத்து கம்பீரமாக எழுப்பப்பட்ட பறை முழக்கம், இந்த நாள் நிகழ்ச்சி எதற்காக என்பதை ஊர்முழுக்க அறிவிப்பதாக இருந்தது. சுமார் காலை 9.30 மணியளவில் நொளம்பூர் பகுதியின் வீதிகளில் பறை அடித்து முதல் மொழிப்போர் தியாகி நடராசனுக்கு நினைவேந்தல் சைக்கிள் பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு மக்களை அணிதிரட்டினர். பொங்கலை பொருட்படுத்தாமல் அப்பகுதி மக்கள் திரண்டனர். காலை 10 மணியளவில் ம.க.இ.க. சென்னைக் கிளை செயற்குழு உறுப்பினர் தோழர் வாசு தலைமை தாங்க, பு.மா.இ.மு வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தொடக்க உரையாற்ற, பு.மா.இ.மு சென்னை மாநகரக் கிளை இணைச் செயலாளர் தோழர். மருது முழக்கம் எழுப்ப, பறை ஓசை கம்பீரமாக எழும்ப புமாஇமு வின் செஞ்சட்டை அணிந்த சுமார் 35 தோழர்கள் சைக்கிளில் அணிவகுத்துச் சென்றனர்.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்செங்கொடி ஏந்திய ஒரு தோழர் வழி காட்டியாக சைக்கிளில் முன்செல்ல, புமாஇமுவின் மாணவிகள் பின் தொடர… செங்கொடி, பதாகை ஏந்திய சைக்கிள்களிலும் ஒன்றன்பின் ஒன்றாக நொளம்பூர் பகுதியிலிருந்து ஆற்று பாலம் வழியாக சாரை சாரையாக மதுரவாயல் பைபாஸ் வந்தது பேரணி.

ஜனவரி – 15 முதல் மொழிப்போர் தியாகி நடராஜன் நினைவுநாள் மட்டும்தான் என்றாலும், பிரதான சாலைகளில் நேரடியாக அவர் நினைவிடம் உள்ள மூலக்கொத்தளம் செல்வதை தவிர்த்து, அவருக்குப் பின்னால் மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகளான விருகம்பாக்கம் அரங்கநாதன், கோடம்பாக்கம் சிவலிங்கம் ஆகியோர் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தி – அவர்கள் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திவிட்டு, இறுதியாக மொழிப்போர் தியாகி நடராஜன் நினைவிடத்திற்கு செல்லும் வகையிலும், இதனூடாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இந்தி – சமஸ்கிருத திணிப்புக்கு எதிரான கருத்துக்களை பிரச்சாரமாக கொண்டு செல்லும் வகையில் சைக்கிள் பேரணியை நடத்தும் வகையில் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் நெற்குன்றம் சக்திநகர், சிடிஎன் நகர், மேட்டுக்குப்பம், வழியாக சென்ற பேரணி செல்லும் வழியில் எல்லாம் மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதிகளில் பறை முழக்கம் எழுப்பி, கம்பீரமாக முழக்கமிட்டு, நோட்டீஸ் வினியோகித்து பின்னர் சைக்கிள் பேரணியின் அவசியத்தை வலியுறுத்தி ஒரு தோழர் பேசுவது என பிரச்சாரப் பயணம் ஒரு விருகம்பாக்கம் அரங்கநாதன் நினைவிடம் வரையில் ஒரு கட்டத்தை அடைந்தது.

அரங்கநாதன் நினைவிடத்தை நோக்கி பறை முழக்கத்துடன் சைக்கிள் பேரணி சென்றது, அப்பகுதி மக்கள் சாலைகளின் இரு புறம் நின்றும், மாடி வீடுகளில் இருந்தும் பேரணியை ஆதரித்தனர். அரங்கநாதன் உறவினர்களுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்துவிட்டு சென்ற பு.மா.இ.மு தோழர்கள், 1965 ஜனவரி 26 அன்று “தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!” என்று முழக்கம் எழுப்பியபடியே தீயிட்டுக் கொண்டு தியாகியான அரங்காநாதன் நினைவிடத்தை அடைந்தனர்.

புமாஇமு சென்னை மாநகரக் கிளை செயலர் தோழர் கார்த்திகேயன் மாலை அணிவித்து அரங்கநாதனின் தியாகத்தை விளக்கிப் பேசினார். இந்நிகழ்ச்சியை கேள்விப்பட்டு அங்கு வந்த அரங்கநாதனின் மூத்த மகன் திரு. அமுதவாணன் அவர்கள் புமாஇமு தோழர்களிடம் ’’ நான் தான் தியாகி அரங்கநாதனின் மூத்த மகன்’’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். உடனே தோழர்கள் அவரை அழைத்து பேச வைத்தனர்.

செஞ்சட்டை அணிந்த தோழர்களைப் பார்த்து அவர் ‘’ எனக்கு ரொம்ப பெருமிதமா இருக்கு. இதற்கு முன்னர் ஜனவரி 26-ம் தேதி எத்தனையோ கட்சிக்காரங்க வருவாங்க அப்பாவுக்கு மரியாதை செலுத்துவாங்க. அவர்கள் எல்லாம் அதை ஒரு சடங்காக செய்வார்கள். ஆனால், உங்களை எனக்கு இதற்கு முன்னால் தெரியாது, உங்கள் நோட்டீசை படித்தேன், பேரணியாக முழக்கமிட்டபடி வருவதை பார்த்தேன், அனைவரும் மாணவர்கள், பொங்கல் விடுமுறை என்று பாராமல் ஒவ்வொருவரும் மொழிப்பற்றோடு உணர்வுப்பூர்வமாக அணிவகுத்து வந்தது என்னை மிகவும் நெகிழச்செய்துவிட்டது. நான் உங்களிடம் தியாகி அரங்கநாதன் மகன் என்று சொல்லிகொள்வதில் பெருமைப்படுகிறேன். என் அப்பா தமிழுக்காக தீயிட்டுக்கொண்டபோது நான் 7 வயது சிறுவன். எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் அதன்பின் என் அப்பா செய்த தியாகத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். மத்திய அரசு ஊழியரான என் அப்பா மறைவுக்குப் பின்னால் நாங்கள் பொருளாதார ரீதியாக எவ்வளவோ சிரமங்களை அனுபவித்தோம். ஆனால் என் அப்பாவின் தமிழ் மொழிப்பற்றையும், தியாகத்தையும் நினைக்கும் போது அதெல்லாம் எங்களுக்கு பெருமிதத்தைத்தான் கொடுத்தது. இன்று அவரைப்போலவே உங்களைப் பார்க்கிறேன். நான் என் அப்பாவைப்போல எப்போதும் உங்களுடன் இருப்பேன். உங்கள் பணிக்கு தலை வணங்குகிறேன்’’ என்று உணர்வுபூர்வமாக பேசினார்.

நாம் எதிர்பார்க்காமலேயே நமது நிகழ்ச்சிக்கு வந்து தியாகி அரங்கநாதனின் மகன் அமுதவாணன் உணர்வுப்பூர்வமாக பேசியது புமாஇமு தோழர்களின் பிரச்சாரத்திற்கு மேலும் வலு சேர்த்தது.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்

காலை 12 மணி

உச்சி வெயில் மண்டையை பிளந்தது. ஆனால் செஞ்சட்டை தோழர்கள் சோர்வடையவில்லை. அக்கம் பக்கம் வீடுகளில் கேட்டு தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு விருகம்பாக்கத்தில் இருந்து வடபழனி வழியாக சைக்கிள் பேரணி பிரச்சாரப் பயணம் முழக்கமிட்டவாறே தொடந்தது. புதிய புதிய தோழர்கள் முழக்கமிட்டார்கள், ஆங்காங்கே மக்களிடம் பேசினார்கள். அவ்வழியாகச் சென்ற மக்கள் யாரும், இதைப் பார்க்கத் தவற முடியாத அளவுக்கு இபிரச்சாரம் நடந்தது.

மக்கள் ஆங்காங்கே ’’என்ன இது, நீங்கெல்லாம் யாரு, எங்க போறீங்க” என்று கேட்டு கேட்டு தெரிந்துகொண்டனர். பிரசுரங்களை கேட்டு வாங்கி படித்தனர். சிலர் 4, 5 பிரசுரங்களை கேட்டு வாங்கிச் சென்றனர். ஒருவர் வடபழனியில் 10 பிரசுரங்களை வாங்கிச் சென்றிருக்கிறார். அடுத்து அவர் கீழ்ப்பாக்கம் கே.எம்.சி மருத்துவமனை அருகில் பேரணியை பார்த்துவிட்டு அருகில் வந்து “நான் உங்களை வடபழனியில் பார்த்தேன், அதோ அந்த பெண் தோழரிடம்தான் நோட்டீசு 10 வாங்கினேன். என் நண்பர்களுக்கு கொடுத்து விட்டுத்தான் வந்தேன். இங்கேயும் நீங்கள் இருப்பதை பார்த்ததும் உங்களிடம் பேச வேண்டும் என்று தோன்றியது” என்று கூறினார். இரு சக்கர வாகனங்களில் சென்ற பலர் தங்களுடைய வேகத்தை குறைத்துக்கொண்டு அருகில் வந்து நோட்டீசை பெற்றுக்கொண்டு எதற்காக பிரச்சாரம் என்று கேட்டுத் தெரிந்துகொண்டு சென்றனர்.

மதியம் 1.15 பேரணி

கோடம்பாக்கம் ரங்கராசபுரத்தை சென்றடைந்தது. மொழிப்போர் தியாகிகளில் மற்றொருவரான கோடம்பாக்கம் சிவலிங்கம் சனவரி – 25 -ம் தேதி தீயிட்டுக்கொண்டு தியாகியான இடம்தான் அது. 1965 ல், “என் தாய்மொழி தமிழை சாகடித்துவிட்டு, இந்தி ஆட்சிமொழியாகவிருந்த சனவரி 26 விடியற்காலை பொழுதில் நான் எப்படி விழிப்பேன்” என்று மனம் நொந்து 25 -ம் தேதி இரவு முழுவதும் தூங்காமல் வெதும்பிக்கொண்டிருந்த சிவலிங்கம் என்ற திருமணமாகாத இளைஞன் 26 -ம் தேதி விடியற்காலை 4 மணிக்கு, “தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!” என்று முழக்கமிட்டவாறே தன்னுடம்பில் தீயிட்டுக்கொண்டு தியாகியானார்.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்“அரங்கநாதனின் உயிர்த்தியாகத்திற்கு முன்னோடியாக இருந்தவர் இந்த சிவலிங்கம். அவர் தியாகத்தின் அடையாளமாக அன்றைக்கு தி.நகரில் ஒரு சுரங்கப்பாதைக்கு சிவலிங்கம் பாலம் என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு அவர் தியாகத்தின் தடம் அழிக்கப்பட்டதோடு சேர்த்து அந்த பாலத்திற்கும் துரைசாமி பாலம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டது ‘’ என்று அன்றைக்கு மேயராக இருந்தவர் புமாஇமு தோழர்களிடையே புலம்பி இருக்கிறார்.

மொழிப்போர் தியாகி சிவலிங்கம் தீயிட்டுக் கொண்ட கோடம்பாக்கம் பகுதியில் வாழும் மக்களுக்கு, இன்று அந்த தியாகத்தைப் பற்றி தெரியவில்லை. இதை நினைபடுத்தும் வகையில் கையில் எடுத்துச் சென்ற அவர் படம் அச்சிட்ட பேனரை வைத்து மலர் தூவி புமாஇமு சென்னை மாநகரக் கிளை இணைச் செயலர் தோழர் மருது உரையாற்றிய்னார். அங்கு 50-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் எனக் கூடியவர்கள் இந்நிகழ்ச்சியை வியந்து பார்த்தனர். அவர்கள் “இந்தப் பகுதி இப்படி ஒருவர் வாழ்ந்த பகுதியா? இதுநாள் வரை நமக்கு தெரியவில்லையே… ” என்று தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர். ஆட்டோ ஓட்டும் தொழிலாளி ஒருவர் நமது தோழர்கள் முழக்கமிடும்போது அவரும் சேர்ந்து கையை உயர்த்தி உணர்வுப்பூர்வமாக முழக்கமிட்டார். அங்கு கூடியிருந்த சிறுவர்களும் மாணவர்களும் ஆர்வமாக மொழிபோர் தியாகி சிவலிங்கம் வரலாற்றைக் கேட்டு தெரிந்துகொண்டனர்.

மதியம் 1.50 மணி

anti-hindi-rsyf-cycle-rally-25மதிய உணவு அருந்த வேண்டிய நேரம். 35 தோழர்கள். தொடர்ச்சியான பிரச்சாரத்திற்கிடையில் அதிகாலையில் எழுந்து தோழர்கள் சமைத்து கொண்டு வந்ததோ 15 பேருக்கான உணவு. விடுமுறை என்பதால் உணவு விடுதிகளும் இல்லை. அவ்விடத்தை விட்டுச் செல்லும் முன்பாக அங்கு கூடியிருந்த உழைக்கும் மக்களிடம் தோழர்கள் கடும் வெயில் ஏற்படுத்திய தாகத்தை தீர்க்க தண்ணீர் கேட்டனர். அம்மக்களோ தண்ணீரோடு சேர்த்து தங்கள் வீடுகளில் சமைத்திருந்த பொங்கலையும் கொடுத்து நெகிழச் செய்தனர். அவ்விடத்திற்கு அருகில் ஒரு குறுக்குச் சாலையில் தோழர்கள் அனைவரும் அமர்ந்து இருக்கும் உணவை பகிந்துண்ண ஏற்பாடு செய்ய… அருகில் பழ வியாபாரம் செய்துகொண்டிருந்த குடும்பம் ஒன்று தோழர்களிடம் விசாரித்துவிட்டு தாங்கள் வைத்திருந்த உணவையும் கொடுத்து சேர்த்து உண்ணுமாறு கோரியது. தோழர்களுக்கு உணவுப் பற்றாக்குறை தீர்ந்தது, உழைக்கும் மக்கள் காட்டிய வர்க்கப் பாசம் தோழர்களிடையே உற்சாமூட்டியது. சைக்கிள் பேரணியின்போது ஏற்பட்ட களைப்பைபோக்க புதிய தோழர்களின் புரட்சிகர கலை நிகழ்ச்சி சாலையிலேயே களைகட்டியது.

மதியம் 2.20 மணி…

உணவு இடைவேளைக்குப் பின் சைக்கிள் பேரணி தொடங்கியது. அதுவரை இல்லாமல் இருந்த போலீசின் விசாரணையும் தொடங்கியது. பேரணி தொடங்கும் தருவாயில் போலீசார்…. “யார் நீங்கள்? என்ன செய்கிறீர்கள்? எங்கே செல்கிறீர்கள்?” என கேள்விகளை அடுக்கினார்கள்.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்சென்னை மாநகரக் கிளை இணைச் செயலர் அவருக்கு பதில் சொல்லி பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அந்த போலீசாரின் அனுமதிக்காக தோழர்களின் சைக்கிள் பேரணி காத்திருக்கவில்லை, பிரச்சாரப் பணி தொடர்ந்தது. பின்னர் போலீசாரிடம் பேசிய தோழர் சொன்னபோதுதான் தெரிந்தது, “அவர்கள் லிமிட்டில் எதாவது நிகழ்ச்சி செய்யப்போகிறோமா” என்பதை தெரிந்து கொள்வதற்காக தங்கள் கடமையாற்றினார்களாம்.

அவர்களை தாண்டிச் சென்ற புமாஇமு தோழர்கள்,

நெஞ்சிலேந்துவோம்! நெஞ்சிலேந்துவோம்!
மொழிப்போர் தியாகிகளின்
நினைவை நெஞ்சிலேந்துவோம்!
போர்வாளாக ஏந்துவோம்!

தமிழ்தேசியஇனத்தின்
கடவுள் மறுப்பு – ஆன்மீக மறுப்பு,
வேத, வைதீக – பார்ப்பன,
சமஸ்கிருத- இந்திஎதிர்ப்பு
பாரம்………பரியத்தை
போர்வாளாக ஏந்துவோம்!

போரிட்டு வீழ்த்துவோம்!
மீண்டும் படையெடுத்து வருகிற
ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக,
சமஸ்கிருத – இந்தி
ஆதிக்கபண்பாட்டை
போரிட்டு வீழ்த்துவோம்!

கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!
ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போரின்
தளப்பிரதேசமாக தமிழ்நாட்டை
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!

என்று கம்பீரமான முழக்கங்களுடனும், ஆங்காங்கே உரையாற்றிக் கொண்டும் சூளைமேடு, பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், வால்டாக்சு சாலை வழியாக சென்ற சைக்கிள் பேரணி மாலை சுமார் 4.30 மணிக்கு மூலக்கொத்தளம் பகுதியை சென்றடைந்தது. அப்பகுதி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து மாலை நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அணிதிரட்டல் செய்யும் விதமாக சுமார் 1 மணி நேரம் அப்பகுதியை பேரணியாக சுற்றி வந்தும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பறை அடித்து தெருமுனைப்பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் 100 க்கும் மேற்பட்ட மக்கள் கூடி நின்று கவனித்தனர்.

காலை 10 மணிக்கு சென்னையின் நுழைவு வாயில்களில் ஒன்றான மதுரவாயல் நொளம்பூர் பகுதியில் தொடங்கிய சைக்கிள் பேரணி விருகம்பாக்கம், கோடம்பாக்கம், புரசைவாக்கம் என சுமார் 20 கிலோமீட்டரை சோர்வறியாமல் கடந்து ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து இறுதியாக முதல் மொழிப்போர் தியாகிகள் நடராசன் – தாளமுத்து நினைவிடத்தை மாலை சுமார் 5.30 மணியளவில் சென்றடைந்தது. பு.மா.இ.மு வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் நிறைவுறையாற்றி பேரணியை முடித்து வைத்தார்.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்அதனைத் தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் முதல் மொழிப்போர் தியாகி நடராசனுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பு.மா.இ.மு சென்னை மாநகர பொதுக்குழு உறுப்பினர் தோழர் சாரதி தலைமை தாங்க, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் வெங்கடேசன் மாலை அணிவித்து உரையாற்றினார். இந்நிகச்சியில் ம.க.இ.க, பு.மா.இ.மு வைச் சார்ந்த தோழர்கள் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

முதல் மொழிப்போர் தியாகிகள் நடராசன் – தாளமுத்து நினைவிடத்தை சுற்றியுள்ள மக்கள் “பொதுவாக சனவரி – 25 அன்றைக்குத் தான் இங்கு கட்சிக்காரங்க வருவாங்க. அன்றைக்கு அரசே சுத்தம் செய்து மேடை போட்டுக்கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடத்துவாங்க. நீங்க இன்னா இன்னைக்கு வந்துகீறீங்க, இந்த எடத்த இவ்ளோ கஷ்டப்பட்டு கிளீன்பண்றீங்க” என்று ஆச்சரியமாக கேட்டனர்.

ஆம், காரணம் முதல் மொழிபோர் தியாகி நடராசன் நினைவுநாள் என்றைக்கு என்று அப்பகுதி மக்களுக்குக் கூட தெரியாத அளவில் தான் ஒரு சடங்காக இந்த அரசு அவர்களை நினைவுகூர்ந்து வருகிறது. அவர்கள் நினைவிடம் உள்ள சுடுகாட்டுப் பகுதி உண்மையில் மலக்காடாகத்தான் உள்ளது.  சுமார் 10 தோழர்களும், அப்பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் சிலரும் சேர்ந்து காலையில் இருந்து மிகவும் கடினப்பட்டுத்தான் அந்த நினைவிடம் உள்ள பகுதியை மனிதர்கள் செல்லும் பகுதியாக மாற்றினார்கள்.

anti-hindi-rsyf-cycle-rally-09தமிழ் மொழி, இனம், தமிழர்தன் வாழ்வைக் காக்கப் போராடிவர்களுக்கு அரசு செய்யும் மரியாதை இவ்வளவுதான்.  இந்த கேடுகெட்ட அரசு அவர்கள் நினைவிடத்தை பராமரிப்பதற்கும் இவ்வளவுதான் முக்கியத்துவம் தந்துள்ளது. மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தை மட்டுமின்றி அவர்கள் உயித்தியாகம் செய்து காத்து நின்ற தமிழ் மொழி, இனம், பண்பாடு ஆகியவற்றை அழிக்க தமிழகத்தின் மீது மீண்டும் படையெடுத்து வருகிற ஆரிய – பார்ப்பன கூட்டத்தை விரட்டியடிக்கும் போரில் உழைக்கும் மக்கள் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். அது ஒன்றாதான் சரியான வழி. மொழிப்போரில் உயிர்த்தியாகம் செய்த எண்ணற்ற தியாகிகளுக்கு நாம் செய்யும் உண்மையான நினைவேந்தலுமாகும்.

உழைக்கும் மக்களே, தமிழ் ஆர்வலர்களே, ஜனநாயக சக்திகளே,

வரும் 25-ம் தேதி மாலை 6 மணியளவில் கோடம்பாக்கம், காமராசர் காலனி 6 வது தெருவில் (பவர் அவுஸ் அம்பேத்கர் சிலை அருகில்) நடைபெற இருக்கும் மொழிப்போர் தியாகிகள் நினைவுநாள் கூட்டத்திற்கு அணிதிரண்டு வாருங்கள்.

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை