privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்TCS ஆட்குறைப்பு : சட்டத்தின் முன்னால் டாடா அதிகாரிகள்

TCS ஆட்குறைப்பு : சட்டத்தின் முன்னால் டாடா அதிகாரிகள்

-

டி.சி.எஸ் ஆட்குறைப்பு தொடர்பாக அந்நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளிடம் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.

கார்ப்பரேட் சட்டம்
“நாம செய்தோமா இல்லையா என்கிறது முக்கியம் இல்ல. நாம செய்யலைன்னு நிரூபிக்க வேண்டிய அளவு பணம் இருக்கா என்கிறதுதான் முக்கியம்”

சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட, உயர் ஊதியம் பெறும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து விட்டு, குறைந்த சம்பளத்திலான புதிய ஊழியர்களை எடுத்து பயன்படுத்திக் கொள்வதன் மூலம் லாப வீதத்தை அதிகரிக்க திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது டி.சி.எஸ். இது தொடர்பாக சென்னையில் தமிழக அரசு அதிகாரிகள் கேள்வி எழுப்பிய போது டி.சி.எஸ் அதிகாரிகள் தமது நிறுவனத்தில் சென்ற ஆண்டு பணிக்கு சேர்ந்தோர், பணியிலிருந்து விலக்கப்பட்டவர்களின் பட்டியலை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், உலக அளவில் 0.8% பேர் மட்டுமே வெளியேறியுள்ளதாகவும், யாரையும் கட்டாயப்படுத்தி வெளியேற்றவில்லை என்றும் சப்பைக் கட்டு கட்டியுள்ளனர் டி.சி.எஸ் அதிகாரிகள். இந்த புள்ளிவிபரங்கள் அனைத்தும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிந்த காலாண்டு தொடர்பானவை. டிசம்பரில் ஆரம்பித்து ஜனவரி, பிப்ரவரியில் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் ஊழியர்கள் பற்றி எந்த மூச்சும் விடவில்லை. அது பற்றிய கேள்வியை வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற டி.சி.எஸ்சின் அடாவடியை இந்திய சட்டங்கள், அதிகார வர்க்கம், நீதிமன்றங்கள் தம்மைப் போன்ற கார்ப்பரேட்டுகளை எதுவும் செய்து விடப் போவதில்லை என்ற ‘நம்பிக்கை’ என்றும் சொல்லலாம்.

இதே டி.சி.எஸ் அதிகாரிகள் தன்னை வேலை நீக்கம் செய்வதை எதிர்த்து ஒரு பெண் ஊழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து, வேலை நீக்கத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர். பெண் ஊழியர்கள் கர்ப்பமாக இருக்கும் போது வேலையை விட்டு நீக்கக் கூடாது என்ற விதியை பின்பற்றி தமது உத்தரவை ரத்து செய்திருக்கிறது டி.சி.எஸ்சின் மனித வளத்துறை.

மேலும் அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பதை தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். அதன்படி அந்த பெண் வேலையிழந்ததற்கு டாடா நிர்வாகம் பொறுப்பல்ல என்பதையும் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இன்டஸ்ட்ரியல் டிஸ்பியூட் சட்டமே தங்களுக்கு செல்லாது என்று ஆணித்தரமாக பேசியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் அந்தப் பெண்ணுக்கு வேலை திரும்ப கிடைத்ததற்கு டாடாவின் கருணை முகம் என்ற பிம்பத்தோடு கூடவே தங்களை விசாரிக்க முடியாது என்று நீதிமன்றத்தில் பேசியிருக்கிறது டி.சி.எஸ் நிர்வாகம்.

நிறுவனமும் ஊழியரும் சமரச உடன்படிக்கைக்கு வந்ததைத் தொடர்ந்து தனது வேலை நீக்கத்தை எதிர்த்து அந்த ஊழியர் தாக்கல் செய்திருந்த ரிட் மனு இனிமேலும் விசாரிக்கப்பட வேண்டியதில்லை என்று அறிவித்திருக்கிறார் நீதிபதி துரைசாமி.

கார்ப்பரேட் சட்டம்
“முதலில், எதுவும் முறைகேடாக நடக்கவில்லை என்று மறுப்போம். அதற்கு பிறகு ஏதாவது சரியாக நடந்திருப்பதை தூக்கிப் பிடிப்போம்”

‘தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தொழிலாளர் உரிமை சட்டங்கள் பொருந்தாது; சிறப்புப் பொருளாதார மண்டலத்தினுள் வேலையிழப்பு, பணிச் சூழல் குறித்த பிரச்சனைகளை கையாளுவதற்கான தொழில் தாவா சட்டம் செல்லுபடியாகாது; ஐ.டி ஊழியர்கள் தமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள சங்கமாக சேர முடியாது’ என்பன போன்ற பல கருத்துக்கள் திட்டமிட்டே ஐ.டி நிறுவனங்களால் ஊழியர்கள் மத்தியில் பரப்பப்பட்டு வந்திருக்கின்றன.

ஐ.டி நிறுவனங்கள் இப்படி பேசுவதற்கு அரசும் வழி அமைத்துக் கொடுத்திருக்கிறது. உண்மையில் ஐ.டி ஊழியர்களுக்குரிய உரிமைகள், பாதுகாப்பு அம்சங்கள் போன்வை குறித்து சட்டம் என்ன கூறுகிறது, அமலில் எப்படி இருக்கிறது அனைத்தையும் நாம்தான் தோண்டி எடுத்து போராட்டத்தின் மூலம் மீட்க முடியும்.

திருத்தப்படும் தொழிலாளர் நல உரிமைச் சட்டங்கள், ஐ.டி உள்ளிட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அளிக்கப்படும் விலக்குகள் என்று இவர்கள் ஊழியர்களை அடக்குவதற்கு அரசே வழி செய்திருக்கிறது. எனவே சட்டப் போராட்டத்தோடு, சங்கம் அமைத்து போராடுவதும் தேவையாக இருக்கிறது.

நிறுவனங்களால் வெளியேற்றப்படுவதை எதிர்த்தால் வேறு வேலை கிடைக்காது; நாஸ்காம் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுவோம் போன்ற பயங்களில் இருக்கும் ஊழியர்களின் நிலையை பயன்படுத்திக் கொண்டு, ஊழியர் நீக்கம் பற்றி “ஆதாரபூர்வ புகார்கள் இருந்தால் விசாரிக்கலாம்” என்று விளக்கமளித்திருக்கின்றனர் டி.சி.எஸ் அதிகாரிகள். இதுவும் கூட தன்னை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்ற கிராமத்து மைனர் பிள்ளை, ‘என்ன நடந்ததுன்னு சொல்லச் சொல்லு பார்க்கலாம்’ என்று பஞ்சாயத்தில் பேசுவதை போன்றதுதான்.

கார்ப்பரேட்டுகளுக்கு ஊழியம் செய்யும் அதிகார வர்க்கம் ஊழியர் உரிமை குறித்த குறைந்தபட்ச சட்டங்களை கூட  அமல்படுத்துவதை உறுதி செய்ய சங்கமாக அணி திரள வேண்டும். சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் மோடி அரசின் முயற்சிகளுக்கு எதிராக பிற துறை தொழிலாளர்களுடன் இணைந்து அரசியல் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு ஐ.டி துறை ஊழியர்கள் தம்மைப் போலவே இத்தகைய கார்ப்பரேட் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எதிர்கொண்டிருக்கும் ஆலைத் தொழிலாளர்களுடன் இணைந்து போராடுவதே பிரச்சனையின் தீர்வை நோக்கிய பயணத்தின் முதல்படியாக இருக்கும்.

இது தொடர்பான செய்திகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க