privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பெப்சியில் இருப்பது சூரியூர் இரத்தம் - நேரடி ரிப்போர்ட்

பெப்சியில் இருப்பது சூரியூர் இரத்தம் – நேரடி ரிப்போர்ட்

-

சூரியூர் பெப்சி ஆலை
“எங்க ரத்தத்தை உறிஞ்சிட்டியளாடா பாவிகளா”

“எங்க ரத்தத்தை உறிஞ்சிட்டியளாடா பாவிகளா” என்று மனம் நொந்து சாபமிடுகிறார் அந்த பாட்டி.

“பெப்சி குடிக்கிறவிங்கள பாத்தா வெறுப்பா இருக்கு சார்”

“விவசாயிகளா சேந்து பெப்சி கம்பெனிய சீல்வைக்கணும்; இல்லைனா நாங்க சாகணும்; இரண்டுல ஒன்னுதான்” கோபத்தில் கொந்தளிக்கிறார்கள் இளைஞர்கள்.

நிரம்பிய கிணறு
தரை மட்டம் வரை நிரம்பியிருக்கும் கிணறு (படம் விளக்கத்துக்காக மட்டும்… தனியார் நீர்க்கொள்ளையால் தமிழக கிராமங்களில் இத்தகைய கிணறுகள் அருகிப் போய்க் கொண்டிருக்கின்றன)

யார் இவர்கள்? எதற்காக பெப்சியை எதிர்க்கிறார்கள்? பெப்சி குடிப்பது பாவச்செயலா? பாவச்செயல் தான். நீங்கள் சூரியூரை பார்த்தால் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வீர்கள்.

சூரியூர், திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமம். நிலத்தடி நீர்வளம் மிக்க பகுதி. ஆற்று கால்வாய்கள் ஏதும் இல்லாத நிலையில், கிணற்று பாசனத்தை மட்டுமே கொண்டு முப்போகம் விளையும் பூமி.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை சூரியூரின் கிணறுகளில், முதலிரண்டு படிகளை தாண்டினால் தண்ணீரை தொட்டுவிடலாம். அவர்களின் பார்வையில் கிணறுகள் என்றால் குனிந்து தண்ணீர் மொள்ள முடியும் இடங்கள்தான். ஆற்று பாசனமோ, கால்வாயோ இல்லாத நிலையில் கிணறுகள் தான் இவர்களுக்கு சோறு போடும் தெய்வங்கள் என்பதால் கிணற்றின் மீது நெருக்கம் அதிகம்.

மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. பெப்சி நிறுவனம் இந்த ஊரை குறிவைக்கும் வரை.

“2009 லாஸ்டுல வந்தாங்க சார். ஏதோ பாட்டில் கம்பெனி ஆரம்பிக்க போறதா ஆரம்பத்துல சொன்னாங்க. பாட்டில் கம்பெனிதானேனு நாங்களும் பெருசா எடுத்துக்கல. நாங்கதான் முள்ள கிள்ள வெட்டி சரிபண்ணி சர்வே எடுக்க கூட நின்னோம். ஒருநாள் ஓரமா ஒரு குடிசைய கட்டிட்டு போர் போட்டாங்க. அந்தத் தண்ணிய எடுத்து டெஸ்டுக்கு அனுப்புவாங்கனு எங்களுக்கு சத்தியமா தெரியாது சார். அடுத்து சுத்தி காம்பவுண்டு போட்டுட்டாங்க. அடுத்தடுத்து மூணு போர் போட்டாங்க. பெரிய பெரிய மிஷின், கட்டிடம் எல்லாம் வந்தது. கம்பெனிய ரன் பண்ண ஆரம்பிச்சப்புறம் தான் சார் உண்மையே தெரிய வந்துச்சி” ஒட்டகம் கூடாரத்திற்குள் மூக்கை நுழைத்த கதையை சொல்கிறார்கள் ஊர்மக்கள்.

சூரியூர் பெப்சி ஆலை
பெரிய பெரிய மிஷின், கட்டிடம் எல்லாம் வந்தது. கம்பெனிய ரன் பண்ண ஆரம்பிச்சப்புறம் தான் சார் உண்மையே தெரிய வந்துச்சி

பெப்சி நிறுவனம் தனது டீலராக இருக்கும் எல்.ஏ பாட்டிலர்ஸ் (LA Bottlers Pvt Ltd ) மூலம் இந்தப் பகுதியில் செயல்பட்டு வருகிறது. திருச்சி முன்னாள் எம்.பி அடைக்கலராஜிற்கு சொந்தமானது இந்நிறுவனம். நாளொன்றுக்கு சுமார் 90 லட்சம் லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறது. இதற்காக சூரியூர் கிராமத்தில் மட்டும் ஒவ்வொன்றும் பல ஆயிரம் அடிகள் ஆழமுள்ள 6 ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டன. பக்கத்து ஊராட்சியில் ஐந்து ஆழ்துளை கிணறுகள் இறக்கியிருக்கிறது நிறுவனம். இந்த ஆலையிலிருந்துதான் பெப்சி பாட்டில்கள் வெளியூருக்கு அனுப்பப்படுகின்றன. இது தான் சூரியூர் தண்ணீர் களவாடப்பட்டு கோலாவாக மாற்றப்பட்ட கதை.

சூரியூர் பெப்சி ஆலை
சூரியூர் தண்ணீர் களவாடப்பட்டு கோலாவாக மாற்றப்பட்ட கதை

பெப்சி நிறுவனம் மற்ற ஆலைகளைப்போல இதிலும் லாபம் சம்பாதித்தது. அடைக்கலராஜின் எல்.ஏ பாட்டிலர்ஸ் நிறுவனத்திற்கு தரகு பணம் குவிந்தது. பெப்சிக்கு மாமா வேலை செய்து கூவி விற்ற சச்சின், டோனி போன்ற தேசபக்தர்கள் கொழுத்தார்கள். பெப்சியை பருகியவாறே தேசபக்தி ஊளைச்சத்தமிடுகிறது, மேட்டுக்குடிவர்க்கமும் பெருகியது. வளர்ச்சி கோசமும் விண்ணை முட்டியது. இந்தக் கூச்சல்களின் நடுவே சூரியூருக்கு நடந்தது குறித்து யாரும் கவலைகொள்ளவில்லை. அவர்கள் கவலை கொள்ளும் அளவிற்கு சூரியூர் தலால் வீதியிலும் அமைந்திருக்கவில்லை.

சூரியூர் பெப்சி ஆலை
கூச்சல்களின் நடுவே சூரியூருக்கு நடந்தது குறித்து யாரும் கவலைகொள்ளவில்லை

பெப்சி நிறுவனம் செயல்பட ஆரம்பித்த பிறகு அந்தப் பகுதியின் நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றது. 30 அடியில் கிடைத்த தண்ணீர் இப்பொழுது 300 அடியை தாண்டி சென்றுவிட்டது. ரத்தம் உறிஞ்சப்பட்டு சாவின் விளிம்பில் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றன விவசாய கிணறுகள். மக்களின் வாழ்க்கையும் தான். இதை வளர்ச்சி என்கிறார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள். பகற் கொள்ளை என்கிறார்கள் சூரியூர் மக்கள்.

சூரியூரின் பல விவசாய கிணறுகளுக்கு சென்று வந்தோம். எல்லாமே பேய் கிணறுகளாக காட்சியளிக்கின்றன. பல கிணறுகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. 2009 வரை அந்தக் கிணறுகளில் தண்ணீர் நிறைந்திருந்தது என்று கூறினால் எவரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு கொடூரமாக இயற்கையை வல்லுறவுக்கு உள்ளாக்கியிருக்கிறது பெப்சி நிறுவனம்.

சூரியூர் பெப்சி ஆலை
எல்லாமே பேய் கிணறுகளாக காட்சியளிக்கின்றன. பல கிணறுகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை

“இந்த கிணத்துல தான் சார் மூணு வருசத்துக்கு முந்தி குதிச்சி விளையாடுவோம். சின்ன குழந்தைகள கூட பயமில்லாம கிணத்துல போட்டுட்டு குதிச்சி தூக்கியாருவோம். இப்போ எட்டி பாக்க எனக்கே பயமா இருக்கு” சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டிருக்கும் கிணற்றை காட்டி பேசுகிறார் இளைஞர் சிவகுமார்.

இது வெறுமனே கிணற்றைவிட்டு பிரியமுடியாத மக்களின் பாச பிரச்சனையல்ல. அன்றாட வாழ்க்கை பிரச்சனை.

சூரியூர் பெப்சி ஆலை
கிணற்றைவிட்டு பிரியமுடியாத மக்களின் பாச பிரச்சனையல்ல. அன்றாட வாழ்க்கை பிரச்சனை.

பெப்சியின் எல்.ஏ பாட்டிலர்ஸ் நிறுவனம் தண்ணீரை உறிஞ்ச ஆரம்பித்த பிறகு தங்கள் கிணறுகளில் நீர்மட்டம் குறைகிறது என்பதை கண்கூடாகக் கண்டார்கள் விவசாயிகள். ஆனால் கையைபிசைவதை தவிர வேறுவழி அப்போது தெரியவில்லை. ஓரிருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என்று போராட்டங்கள் ஆரம்பித்தனர். ஆயினும் எந்த பலனும் இல்லை.

கிணற்றின் முக்கால்வாசி வரை இருந்த தண்ணீர் படிப்படியாக கீழே சென்றது. ஒரு கட்டத்தில் தண்ணீர் முற்றாக காலியாகிவிட்டது. தண்ணீர் ஊறுவதற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியாக போர் போட்டால் தான் பயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கும் தள்ளப்பட்டார்கள்.

சூரியூர் பெப்சி ஆலை
ஒரு கட்டத்தில் தண்ணீர் முற்றாக காலியாகிவிட்டது. தண்ணீர் ஊறுவதற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது

“அந்த கம்பெனி வந்தபிறகு தான் சார் இப்படி இருக்கு. மொதல்ல கெணதத 30 கெசம் வெட்டினேன். அப்புறம் 3 போர் போட்டேன். எல்லாம் பெயிலிரு. மொதல்ல அங்கன 350 அடி, அப்புறம் இதுல 150 அடி. எல்லாம் பெயிலிரு சார்.“ என்று வேதனையை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் விவசாயி சேகர். 45 வயதான சேகரின் குடும்பம் இவரது விவசாய வருமானத்தைதான் நம்பி உள்ளது. “இதுக்கு மேல வேற வேலைக்கு போக முடியாது. வேற எதுவும் தெரியாது. விவசாயம் தான் தெரியும்”.

பெப்சியின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க கிணறுகளை மென்மேலும் ஆழப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் விவசாயிகள். மீண்டும் மீண்டும் போர்வெல் நிறுவனத்தை அணுகினார்கள்.

முதல் சுற்றில் கையில் இருந்த சேமிப்பு பணத்தை செலவழித்தவர்கள், அடுத்த சுற்றிற்கு நகைகளை அடகுவைக்க ஆரம்பித்தார்கள். அடுத்த தவணைக்க்கு கடன் வாங்குவதை தவிர வழியில்லை. இன்று ஊரில் பெரும்பாலானவர்கள் கடனாளிகள்.

சூரியூர் பெப்சி ஆலை
இன்று ஊரில் பெரும்பாலானவர்கள் கடனாளிகள்.

“3 லட்சம் செலவு பண்ணியிருக்கேன் சார். பொண்டாட்டி நகைய அடகுவெச்செதுல 1 லட்சம் கெடச்சிது. 1.5 லட்சம் கடன் வாங்கியிருக்கேன். இத நம்பி தான் கடன் வாங்கியிருக்கேன்”, நெற்கதிர்களை காட்டியபடி பேசுகிறார் சேகர்.

ஊரில் பெரும்பாலன் பெண்களின் நகைகள் அடகுக்கடைகளில் தான் உள்ளது. நம்மிடம் பேசிக்கொண்டிருக்குபோதே சீத்தா என்ற வயதான் அம்மா உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார்.

சூரியூர் பெப்சி ஆலை
“நகைய மட்டுமாப்பா அடகு வைச்சோம். கறக்குற மாட்டையும் வித்துட்டோமே. பாவிப்பய நல்லா இருப்பானா”

“நகைய மட்டுமாப்பா அடகு வைச்சோம். கறக்குற மாட்டையும் வித்துட்டோமே. பாவிப்பய நல்லா இருப்பானா. இதோ (செயினை பிடிச்சி காண்பிக்கிறார்) இது கூட கவரிங் தான்.” என்று கண்கலங்கினார்.

இவரது மகன்கள் விவசாயத்துடன் சேர்த்து கம்பி கட்டும் வேலைக்கும் செல்கிறாரகள். “இப்படி வேற வேலைக்கு போனாதான் வாங்குன கடன அடைக்க முடியும்”.

எவ்வளவு செலவு செய்து போர் போட்டாலும் பெப்சியுடன் போட்டியிட முடியுமா? எவ்வளவு தோண்டியும் தண்ணீர் இல்லை. போர் போட வசதியில்லாதவர்களின் நிலைமையோ இன்னும் மோசம்.

“செலவழிக்க பணமுமில்ல. நட்ட நாத்தை மாட்டைவுட்டு மேயவுட்டேன். வேறவழி ? “ நம்மை கேட்கிறார் சின்ன சூரியூரை சேர்ந்த துரைராஜ். இந்த வருடம் மழையை நம்பி நெல் நடவு செய்திருக்கிறார். .

சூரியூர் பெப்சி ஆலை
“செலவழிக்க பணமுமில்ல. நட்ட நாத்தை மாட்டைவுட்டு மேயவுட்டேன். வேறவழி ? “

“சுத்தி 3000 ஏக்கர்ல விவசாயம் நடக்குது தம்பி. 3 வருசமா மழை பெய்யாதப்ப கூட மூணு போகம் விளைஞ்ச இடம். எல்லாம் கெணத்து பாசனம் தான். இப்போ ஒரு போகம் கூட இல்லை. பெப்சி கம்பெனியால 5 கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்க பாதிக்கப்பட்டிருக்கோம். எல்லோருக்குமே விவசாயம். நான் 10 ஏக்கர் வெச்சிருக்கேன். முன்னாடி வருசத்திற்கு கொறஞ்சது 5 லட்சம் கெடைக்கும். இப்போ 10,000, 20,000 கெடைக்குறதே கஷ்டமாக இருக்குது. சாப்பாட்டுக்கு கிடைப்பதே கஷ்டமா இருக்கு. சாவியாக அறுத்து வைக்கிறோம்.” என்று ஆதங்கத்துடன் பேசுகிறார் பெப்சிக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் அந்த பெரியவர்.

“ஒரு சீசன் அறுத்து என்ன செய்வீங்க. குடும்பத்தை பாப்பீங்களா? பிள்ளைகள படிக்க வைப்பீங்களா? உழுதகூலி கொடுப்பீங்களா? உரம் வாங்கி போடுவிங்களா? யூரியா இப்போ 750 ரூவா. அதுவும் கெடைக்காம அதிக காசு கொடுக்குறோம். பெப்சி கம்பெனிய உடனே மூடணும். மூடலைனா வெவசாயம் பண்ண முடியாது. போராடுவோம். ” தீர்க்கமாக சொல்கிறார் சேகர்.

சூரியூர் பெப்சி ஆலை
இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற நிலையில் மெல்ல மெல்ல போராட்டங்களை ஆரம்பித்தார்கள் விவசாயிகள்.

இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற நிலையில் மெல்ல மெல்ல போராட்டங்களை ஆரம்பித்தார்கள் விவசாயிகள். அதிகார வர்க்கங்கள் பெப்சிக்கு ஆதரவாக செயல்பட்டார்கள். அந்த அனுபவத்தை நம்மிடம் பகிந்துகொண்டார் போராட்டத்தில் முன்னணியில் நிற்பவர்களில் ஒருவரான ராஜேந்திரன்.

“நாங்க எல்லாம் கிராம மக்கள், பாமர மக்கள். சட்டதிட்டம் தெரியாது. அதிகாரிங்ககிட்ட போய் சொன்னோம்னா யாருமே செவிக்கு எடுத்துக்கிறது கெடையாது. கலெக்டரை எத்தனையோ தடவை நேருல பாத்து பேசிட்டோம். உங்களுக்குக்கு நல்ல தீர்வு கிடைக்கும்னு சொல்லுவாங்க. நாங்களும் அதை அப்படியே நம்புறது. அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதி எல்லாமே பொய். அவங்க யாருக்குமே இந்த கம்பெனிய நிப்பாட்டனும்னு எண்ணம் இல்லை.

எந்த கோர்ட்டுக்கு போறது. எந்த கோர்டுக்கு போனாலும் ஜட்ஜையும் வெலைக்கு வாங்கிருதான், வக்கீலையும் விலைக்கு வாங்கிருதான். ஒரு வாரம் போயி நேருல பாப்போம். அவ்வளவு அருமையா பேசுவாங்க. மறுவாரம் போனா கம்பெனிக்கு சார்பா பேசுவாங்க. கம்பெனியோட பணம் இந்த அளவுக்கு வேலை செய்யுது.

சூரியூர் பெப்சி ஆலை
சட்டத்தை மயிரளவுக்கு கூட மதிக்காத எல்.ஏ பாட்டிலர்ஸ் மற்றும் பெப்சி நிறுவனம் இரவோடிரவாக மேற்கூரையை உடைத்து மீண்டும் போர்வெல்களை இயக்கியிருக்கிறார்கள்.

சென்னைக்கு போனாலும் சரி, மதுரைக்கு போனாலும் சரி நம்பிக்கையோட போவோம். அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரியாம இருக்கு, நாம சொன்னோம்னா சரியான் தீர்வு கொடுத்திருவாங்கனு போவோம். உள்ள போய் கேட்ட உடன எங்கள ஒரு மாதிரி பாப்பாங்க. எங்கள கணிச்சிட்டு, எப்படி சமாதானப்படுத்தி அனுப்புறதுனுதான் பாப்பாங்க. அந்த வழிமுறைதான் நடக்குதே ஒழிய நியாயமான பதிலே வல்ல. எங்கள் ஏமாத்துறதுதான் நடந்திட்டிருந்தது. எந்த அதிகாரியுமே முன்வந்து மக்கள் பாதிக்கப்படுறாங்க, தண்ணியில்லை கம்பெனிய நிப்பாட்டனும்னு நினைக்கவே இல்லை.

பல முறை போராடிட்டோம். போலீசு எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்குற மாதிரி கொடுத்திட்டு இருப்பாங்க. கூட்டம் கொறய கொறைய, சமைக்க லேடிசுங்க போயிருவாங்கல்ல, உடனே போலீசு நம்மள ரவுண்டி கட்டிருவாங்க. அவ்வளவு பேரயும் அரெஸ்ட் பன்னிருவாங்க,.

பத்திரிகை காமிராகாரங்க இத சுத்தி சுத்தி எடுப்பாங்க. நிறைய பேரு காமிரால எடுத்துட்டாங்க, செய்தி வெளியே போயிரும்னு நாங்க நினைப்போம். மாவட்ட லெவல்ல கூட செய்தி வாராது.

தொடர்ந்து ஒரு நாலு ஐந்து தடவை போராடியிருக்கோம். உண்ணாவிரதம், முற்றுகை போராட்டம் நடத்தியிருக்கோம். சித்திரை வெயில்ல பொழுதுக்கும் சோறு தண்ணி இல்லாம 2000 மக்களுக்கு மேல தெரண்டு போனாம். அதிகாரிகளும் தெரண்டு வந்தாங்க. இன்னைக்கு கலைஞ்சி போங்க உங்களுக்கு தீர்வு கிடைக்கும்னு சொன்னாங்க. எந்த தீர்வும் கிடைக்கல. நாங்க சோர்ந்து போயிட்டோம். போராட்டத்தை விட்டுட்டாலும் பொழைக்க வேறு வழியில்லை. “

மக்கள் போராட்டத்தின் விளைவாக சில மாதங்களுக்கு முன்னர் மூன்று போர்களுக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால் சட்டத்தை மயிரளவுக்கு கூட மதிக்காத எல்.ஏ பாட்டிலர்ஸ் மற்றும் பெப்சி நிறுவனம் இரவோடிரவாக மேற்கூரையை உடைத்து மீண்டும் போர்வெல்களை இயக்கியிருக்கிறார்கள். கதவு சீலை உடைக்காமல் சட்டத்தை காப்பாற்றுகிறார்களாம்.

இந்த ஊரின் எல்லையில் இருக்கும் மற்றொரு கிராமத்தில் 5 போர்களை போட்டிருக்கிறார்கள் எல்.ஏ பாட்டில்ஸ் நிறுவனத்தினர்.

“கலெக்டர் உள்ளிட்ட எல்லா அதிகாரிகளுக்கும் இது தெரியும். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. எல்லோரும் அவங்களுக்குதான் சப்போர்ட். பணத்தை வெச்சி எல்லாரையும் வெலைக்கு வாங்குறான்.”

“ரோட்டை மறிப்போம், போலிஸ் எங்கள விரட்டுவாங்க. ஓடி வந்துருவோம். இதுவே தொடர்கதையாக் இருந்தது. கலெக்டர பாத்து மனு கொடுத்தோம். பாக்குறேனு சொன்னாங்க. அந்த கலெக்டரும் மாறிட்டாங்க. புது கலெக்டர்கிட்டேயும் மனுகொடுத்திருக்கோம் இவங்களும் பாக்குறேன்னு சொன்னாங்க. எல்லா வழிலயும் போராடி பாத்தோம்“.என்கிறார்கள் ஊர்மக்கள்.

சூரியூர் பெப்சி ஆலை
“3 வருசமா மழை பெய்யாதப்ப கூட மூணு போகம் விளைஞ்ச இடம். எல்லாம் கெணத்து பாசனம் தான். இப்போ ஒரு போகம் கூட இல்லை.”

“அதிகாரிகள் என்ன சொன்னாங்க”

“போராடும் போது வருவாங்க. எங்ககிட்ட மூடிருவோம்னு சொல்லிட்டு கம்பெனிக்குள்ள போறதுதான் தெரியும். திரும்பி வரும்போது அடுத்த மாசம் பாக்கலாம், அடுத்த வாரம் பாக்கலாம்னு எதையாவது சொல்லிட்டு கிளம்பிருவாங்க. இது முன்னாடி இருந்த இன்ஸ்பெக்டருக்கு மட்டும் 30 லட்ச ரூபாயும், ஒரு காரும் லஞ்சமா கொடுத்திருக்காங்க.”

இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்நிறுவனத்தைல் பற்றி விசாரித்த போது முறையான அனுமதியில்லாமல் இந்நிறுவனம் செயல்படுவது தெரிய வந்திருக்கிறது. பாட்டில் தயாரிப்பதற்கான நிறுவனம் என்ற பெயரில் தான் அனுமதி பெற்றிருக்கிறார்கள் என்று கிராம மக்கள் கூறுகின்றனர். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமமும் காலாவதியாகிவிட்டது. இந்த நிறுவனத்திற்கான உரிமையை ரத்து செய்து அப்பகுதி ஊராட்சி ஒன்றியத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒரு வழக்கு நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ளது.

சட்டவிரோதமாக செயல்படும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை போராடும் இளைஞர்கள் மீது பொய் வழக்கு போட்டிருக்கிறது. மக்களை பிளக்கும் வேலையில் ஈடுபட தொடங்கியது பெப்சியின் எல்.ஏ பாட்டிலர்ஸ் நிறுவனம். பணத்தால் அடிக்க வேண்டியவர்களை பணத்தால் அடித்தது. பெரும்பான்மையானவர்கள் அதற்கு மசியவில்லை.

“என் மேல கேஸ் இருக்கு சார். வாய்தாவுக்கு அலைஞ்சிட்டு இருக்கேன்.

பணம் இருக்குறவன் தான் சார் பணத்துக்கு ஆசைப்படுறான். என் மேல இருக்குற கேச வாபஸ் வாங்கிக்குறோம். ஒன்ரை லடசம் பணமும் தரோம்னு பேரம் பேசுனாங்க. என் தம்பிக்கு போன் போட்டு கம்பெனிக்கு வரச்சொன்னாங்க. வாங்குறவன் நிறைய பேரு இருக்கான், அவன்கிட்ட கொடுனு சொல்லிட்டேன். காசு பணம் எப்பனாலும் சம்பாரிச்சிறலாம் சார். ஊர் அழிஞ்சி நான் மட்டும் எப்படி சார் நல்லா இருக்க முடியும்? அதனால வேணாமுனுட்டேன். கேஸ் போட்டுக்கோனுட்டேன்” என்று கூறும் சிவகுமார் இன்று வரை வாய்தாவுக்கு அலைந்து வருகிறார்.

“லாரில லோடு போகும் போது பெட்டிகளை கீழ தள்ளிவிட்டுட்டு எஸ்.சி மக்கள் திருடிட்டாங்கனு சொல்லி சாதி பிரச்சனை பண்ண பாத்தாங்க. எங்க ஊருகாரங்க யாரும் நம்பல. அவங்கள எங்களுக்கு தெரியும் சார். இப்படி எல்லாம் பண்ணமாட்டாங்க”, சிவகுமார்.

சூரியூர் பெப்சி ஆலை
காசு பணம் எப்பனாலும் சம்பாரிச்சிறலாம் சார். ஊர் அழிஞ்சி நான் மட்டும் எப்படி சார் நல்லா இருக்க முடியும்?

மக்களின் போராட்டம் மேலும் தீவிரமாகியது. மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தின் வழிகாட்டுதலில் நடந்த கார்மாங்குடி மணல் குவாரி முற்றுகை போராட்ட விடியோக்கள் மக்கள் மத்தியில் திரையிடப்பட்டது. கார்மாங்குடி மக்களே நேரடியாக அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அரசு அதிகாரிகளை துணிச்சலாக எதிர்கொள்வது போன்றவை சூரியூர் மக்களை ஈர்த்தது.

சூரியூர் பெப்சி ஆலை
இது ஒரு தற்காலிகமான வெற்றி என்றாலும் சூரியூர் மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும், பிற ஜனநாயக சகதிகளும் மக்களை சந்தித்து நம்பிக்கையூட்டி பேசினார்கள். குடியரசு தினத்தன்று ரேசன் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. அதற்கு மறுநாள் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டங்களில் நூற்றுக்கணக்கான மக்களோடு பு.மா.இ.மு தோழர்களும் கலந்துகொண்டு கைதானார்கள்.

முறையான அனுமதி பெறவில்லை என்ற காரணத்திற்காக நிறுவனத்திற்கு தற்காலிகமாக சீல் வைத்துளளது அரசு. இது ஒரு தற்காலிகமான வெற்றி என்றாலும் சூரியூர் மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. நாளையே தனது பணபலத்தின் மூலம் மேற்படி அனுமதிகளை அந்நிறுவனம் பெறக்கூடும். ஆக முறையான அனுமதி இருக்கிறதா இல்லையா என்பதல்ல பிரச்சனை. சட்டவாதத்திற்குள் நின்று சூரியூர் மக்களின் நியாயத்தை பேசமுடியாது.

இயற்கைவளங்கள் மக்களுக்கே சொந்தம். அதை கொள்ளையிட துடிக்கும் ஏகாதிபத்தியங்களையும், தரகு முதலாளிகளையும் வீழ்த்த மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பதே இதற்கான தீர்வு. கிடைத்திருக்கும் இந்த அவகாசத்தில் சூரியூர் மக்கள் அடுத்த போராட்டத்திற்கு ஆயத்தமாக வேண்டும். இது வரை நடந்த போராட்டங்கள் அரசு, அதிகாரவர்க்கம், போலீசு, நீதிபதிகள் குறித்த நல்ல படிப்பினையை மக்களுக்கு வழங்கியுள்ளது. இவர்களை அவர்களை நம்பி இனியும் பயனில்லை என்பதை உணர்ந்துள்ளார்கள். மக்கள் தாங்களாக பெப்சி நிறுவனத்தை இழுத்து மூடும் நாளை எதிர்நோக்கியுள்ளாரகள்.

நாம் சந்தித்த இளைஞர்களின் வார்தைகள் இதற்கு கட்டியம் கூறுகின்றன.

“விவசாயிகளா சேந்து கம்பெனிய சீல்வைக்கனும் இல்லைனா நாங்க சாகணும் இரண்டுல ஒண்ணுதான்”

“நாம ஏண்டா சாகணும். அவனுங்கள் இழுத்து மூடுவோம்.”

அங்கிருந்து கிளம்பும்போது நமக்கு வழிக்காட்டியா வந்த இளைஞரிடம் கேட்டோம்.

“பெப்சி குடிக்கிறவங்கள பாத்தா உங்களுக்கு என்னனே தோனுது?”

“எங்க ஊர்ல இப்போ யாரும் குடிக்குறதில்ல” என்று கூறிவிட்டு அமைதியானவர்… “எங்க ஊரு தண்ணிய நாங்க தான் குடிக்கமுடியல. நீங்களாச்சும் குடிச்சுக்கோங்கடா” வெறுமையான சிரிப்புடன் ஆற்றாமை, கோபம், விரக்தி கலந்து வெளிவந்த இந்த வார்த்தைகளை கேட்ட பிறகு எதுவும் பேசமுடியவில்லை.

இனி பெப்சியை எங்கு பார்த்தாலும் இந்தக் குரல் தான் கேட்கும்.

சூரியூர் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் பெப்சி கோக் குடித்து தேசத்துரோகி ஆகப்போகிறோமா? இல்லை சூரியூர் மக்களுடன் கரம் கோர்க்க போகிறோமா?

சூரியூர் பெப்சி ஆலை
சூரியூர் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் பெப்சி கோக் குடித்து தேசத்துரோகி ஆகப்போகிறோமா? இல்லை சூரியூர் மக்களுடன் கரம் கோர்க்க போகிறோமா?

– வினவு செய்தியாளர்கள்