privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்பா.ஜ.க - அகாலிதளக் கூட்டணி: அருவருப்பான அதிகார போதை!

பா.ஜ.க – அகாலிதளக் கூட்டணி: அருவருப்பான அதிகார போதை!

-

ஞ்சாபின் அகாலி தள அமைச்சர் பிக்ரம் சிங் மஜிதியா-வுக்கும் போதை மருந்து குற்றக் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதாக அண்மையில் மத்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, பஞ்சாபில் போதை மருந்து பெருக்கத்துக்கும், அதில் ஆட்சியாளர்களின் பங்கு குறித்தும் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு, ஓட்டுக்கட்சிகள் நடத்திய போராட்டங்களும் பேரணிகளும் இன்னுமொரு கேலிக்கூத்தாகவே முடிந்துள்ளன.

பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர்சிங் பாதலுடன் பா.ஜ.க.வின் மைய அமைச்சர் நிதின் கட்காரி
பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர்சிங் பாதலுடன் பா.ஜ.க.வின் மைய அமைச்சர் நிதின் கட்காரி

பஞ்சாபில் ஓட்டுக்கட்சிப் பிரமுகர்கள் மட்டுமின்றி, அதிகார வர்க்கம், போலீசு, எல்லைப் பாதுகாப்புப்படை  அடங்கிய ஒட்டுமொத்த அரசு எந்திரமே போதை மருந்து குற்றக் கும்பலின் கூட்டாளியாக உள்ளது. பிரபல பாடகர் மக்கான், குத்துச் சண்டைவீரர் விஜேந்தர் சிங், முன்னாள் டி.எஸ்.பி. ஜெக்திஷ்சிங் போலா முதலானோரும் போதை மருந்து கடத்தில் ஈடுபட்ட கனடாவைச் சேர்ந்த சில சீக்கியர்களும் ஏற்கெனவே கைதாகியிருப்பதும், ஓட்டுக்கட்சிப் பிரமுகர்களும் போலீசு அதிகாரிகளும் அவர்களின் கள்ளக் கூட்டாளிகளாக இருப்பதும் நாடெங்கும் நாறிப்போயுள்ளது.

பஞ்சாபைச் சீரழிக்கும் மிகப் பெரிய சமூக பிரச்சினையாக வளர்ந்துள்ள போதை மருந்து பழக்கத்துக்கு எதிராக நிற்பதாக நாடகமாடும் காங்கிரசு, அகாலி தளம், பா.ஜ.க. ஆகிய கட்சிகளோ போதை மருந்து இரகசிய உலகப் பேர்வழிகளின் திரைமறைவுக் கூட்டாளிகளாகவே உள்ளனர். போதை மருந்தால் வரும் கள்ளப் பணத்தைத் தேர்தலில் வாரியிறைக்கின்றனர். தேசியம், தேசிய ஒருமைப்பாடு, பயங்கரவாத எதிர்ப்பு என்று கூப்பாடு போட்டுக்கொண்டு, பஞ்சாப் இளைஞர்களின் வாழ்வையே சீரழித்துள்ளனர்.

இப்போது மீண்டும் போதை மருந்து விவகாரத்தில் அகாலிதள அமைச்சரின் தொடர்பு அம்பலமானதும்,  அமைச்சர் பிக்ரம் சிங் மஜிதியா பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகளான காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் போராட்டங்களை நடத்தின. அதேசமயம், போதை மருந்துகளற்ற பஞ்சாபை உருவாக்குவோம் என்ற முழக்கத்துடன் அமைச்சர் பிக்ரம் சிங் பதவி விலக வேண்டுமென்று  கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வும் போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்தி, தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொள்ள முயற்சித்தது.

அதைத் தொடர்ந்து, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான ம.பி. மற்றும் ராஜஸ்தானில் ஓபியம் எனப்படும் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலைத் தடுத்தால்தான், பஞ்சாபிலும் தடுக்க முடியும் என்று அகாலிதளக் கட்சி எதிர்ப்போராட்டத்தில் இறங்கி பா.ஜ.க.வைச் சாடியது. சீக்கிய இனப் பெருமைக்கு இழிவுதரும் வகையில் சீக்கியர்களைத் தீவிரவாதிகளாகவும் போதைமருந்து கடத்தல்காரர்களாகவும் இழிவுபடுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டியது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிலிருந்து கடத்திவரப்படும் போதை மருந்துகளைத்  தடுக்க எல்லைப் பாதுகாப்புப் படை தவறிவிட்டது என்று கூறி எல்லைப் பகுதிகளில் அகாலிதளக் கட்சி ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அதை எதிர்க்கக் கிளம்பிய பா.ஜ.க.வோ, எல்லைப் பாதுகாப்புப்படை மீது வீண்பழி போடுவதாகவும், இது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரான செயல் என்றும் எதிர்க்குற்றம் சாட்டி தேசபக்த வேடம் போட்டு பேரணிகளை நடத்தியது. போதை மருந்து குற்றக் கும்பலின் கூட்டாளிகளான போலீசாரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் போதை மருந்துகளைக் கைப்பற்றி எரிப்பதாக புகைப்படங்களுடன் செய்திகளை வெளியிட்டுத் தம்மை யோக்கிய சிகாமணிகளாகக் காட்டிக் கொள்ளும் கேலிக்கூத்தும் அரங்கேறியது.

பஞ்சாப் போதை மருந்துபஞ்சாப் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும் போதைப் பொருள் உற்பத்தி நடக்கிறது என்றும், பாகிஸ்தான், ஆப்கானிலிருந்து போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை எல்லைப் பாதுகாப்புப் படை தடுக்கத் தவறிவிட்டது என்றும் அகாலிதளம் கட்சி கூறுவது உண்மைதான். அதேபோல, போதை மருந்து குற்றக் கும்பலுடன் அமைச்சர் பிக்ரம் சிங் மஜிதியா தொடர்பு கொண்டிருப்பதும் உண்மைதான். போதை மருந்து விவகாரத்தில் ஆட்சியாளர்களின் கள்ள உறவு அம்பலமாகியிருப்பது இப்போது முதன்முறையல்ல என்பதும் உண்மைதான். ஆனாலும், போதைமருந்து விவகாரத்தில் ஓட்டுக்கட்சி பிரமுகர்களின் தொடர்பு அம்பலமாகும்போது ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு அரசியல் ஆதாயம் தேடும் நாச்சண்டை மட்டும்தான்  தொடர்கிறதேயன்றி, பஞ்சாபைக் கவ்வியுள்ள போதை மருந்துப் பழக்கத்தைத் தடுக்க எந்த ஓட்டுக்கட்சியிடமும் உருப்படியான திட்டமோ, நடவடிக்கையோ இல்லை.

பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் அமைச்சரவையில் அவரது மகன் சுக்பீர் சிங் பாதல் துணை முதல்வராகவும் அகாலி தளக் கட்சியின் தலைவருமாகக் கோலோச்சுகிறார். சுக்பீர் சிங் பாதலின் மனைவியான ஹர்சிம்ரத் கவுல் மத்திய அமைச்சராக உள்ளார். அவரது தம்பியும், சுக்பீர் சிங் பாதலின் மைத்துனரும்தான் பிக்ரம் சிங் மஜிதியா. ஏற்கெனவே பஞ்சாபில் பாதல் குடும்ப ஆட்சியின் ஆதிக்கத்தாலும் ஊழல் – அதிகார முறைகேடுகளாலும் அக்கட்சியும் ஆட்சியும் அம்பலப்பட்டுப் போயுள்ள நிலையில், போதை மருந்து  விவகாரத்தை வைத்து அகாலி தளத்தைத் தனிமைப்படுத்தி தங்களைத் தூய்மையான, ஊழல் கறை படியாத மாற்றுத் தலைமையாகக் காட்டி அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க. முயற்சித்தது. இதற்காகவே பா.ஜ.க. தலைவரான அமித்ஷா, பஞ்சாபில் போதை மருந்து எதிர்ப்புப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டார்.

கடந்த சில மாதங்களாக அகாலி தளத்துக்கு எதிரான போக்கைக் கடைபிடித்த பா.ஜ.க. இப்போது திடீர் பல்டி அடித்துக் கூட்டணி உறவைத் தொடர்வதாக அறிவித்துள்ளது. பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கு மோடி அரசு “பத்ம விபூஷண்” பட்டம் அளிக்கிறது. பஞ்சாபில் போதை மருந்துக்கு எதிரான அமித் ஷாவின் பிரச்சாரப் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அகாலி தளத்துக்கும் பா.ஜ.க.வுக்குமிடையிலான கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என்று மைய அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சரான நிதின் கட்காரி பஞ்சாபுக்குப் பறந்து சென்று  அறிவிக்கிறார். பஞ்சாபின் அடிக்கட்டுமானத் துறை வளர்ச்சிக்கென்று ரூ. 18,000 கோடி மதிப்பில் திட்டங்களை அறிவித்து, பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங்குடன் கைகோர்த்துக் கொண்டு செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கிறார். பா.ஜ.க.வின் இந்தத் திடீர் பல்டிக்குக் காரணம் டெல்லி சட்டமன்றத் தேர்தல்தான்.

பஞ்சாபில் போதை மருந்து குற்றக் கும்பலுடன் தொடர்புடைய அகாலி தள அமைச்சர் பதவி விலக வேண்டுமென பிரச்சாரம் செய்யும் ஆம்ஆத்மி கட்சியும் காங்கிரசும், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் இதை வைத்து தங்களைத் தனிமைப்படுத்திவிடும் என்ற அச்சத்தாலும், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரத்துக்குக் கிடைத்துவரும் ஆதரவைக் கண்டும் பா.ஜ.க. அரண்டு போயுள்ளது. இதனாலேயே அகாலிதளத்துக்கு எதிராக முறுக்கிக் கொண்டிருந்த பா.ஜ.க. இப்போது வெட்கமின்றி கூழைக்கும்பிடு போட்டுக் கொண்டிருக்கிறது.

காங்கிரசும் ஆம் ஆத்மியும் டெல்லியிலோ அல்லது பஞ்சாபிலோ ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே அகாலி தளமும் பா.ஜ.க.வும் செயல்படுகின்றனவே தவிர, மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்து பஞ்சாபைப் பீடித்துள்ள போதை மருந்து பழக்கத்தை ஒழிக்க உருப்படியாக எந்த நடவடிக்கையும் அக்கட்சிகளிடம் இல்லை.

அகாலிதளம் பேசும் சீக்கிய இனப் பெருமையும், பா.ஜ.க. பேசும் தேசபக்தியும் சீக்கிய இன நலனுக்கானதல்ல; தேசிய நலன்களுக்கானதும் அல்ல. இருப்பினும் சீக்கிய இனப்பெருமையையும், தேசியம் – தேசபக்தியையும் காட்டி போதை மருந்து விவகாரத்தில் ஆட்சியாளர்களின் பங்கை மூடிமறைத்து, ஓட்டுக்கட்சிகளுக்கிடையிலான நாய்ச்சண்டையாக மாற்றி சீக்கியர்களை ஏய்ப்பதென்பது அகாலி தளத்துக்கும் பா.ஜ.க.வும் வசதியாக உள்ளது. ஆனால், பஞ்சாப் மாநிலமோ போதை மருந்தாலும், மறுகாலனியத் தாக்குதலாலும் மூர்க்கமாகச் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

– குமார்.
________________________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
________________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க