privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்டி.சி.எஸ் ஆட்குறைப்பு - புதிய ஜனநாயகம் கட்டுரை

டி.சி.எஸ் ஆட்குறைப்பு – புதிய ஜனநாயகம் கட்டுரை

-

டி.சி.எஸ் நிறுவன ஆட்குறைப்பு : சுதந்திர சந்தையின் தேர்க்காலில் பலியான கனவுகள்!

“நான் ஒரு சீனியர் மானேஜர். நான் சொல்கிறேன். ஊழியர்களை வெளியேற்ற டி.சி.எஸ். உயரதிகாரிகள் பின்பற்றும் நடைமுறை மிகவும் நியாயமற்றது. தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுபவரும், வாடிக்கையாளர்களின் பாராட்டைப் பெற்றவருமான ஒரு மூத்த ஊழியரை வெளியேற்றுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள். நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இப்போது நிர்வாகம் என்னை மிரட்டுகிறது. அவர்களுடைய அடுத்த குறி நானோ என்று பயமாக இருக்கிறது. பல பேரை வேலையை விட்டுத் தூக்கும் வேலையைச் செய்து செய்து என் மன நிம்மதியே போ விட்டது.”

“உங்கள் துன்பம் எனக்கு புரிகிறது. அனுதாபப்படுகிறேன். ஆனால் சகோதரா, இதுதான் சுதந்திரச் சந்தையின் விதி. இந்த எதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். யாரும் இதை மாற்ற முடியாது.”

– இவை சமீபத்தில் இணைய நாளிதழ் ஒன்றில் வெளியான வாசகர் கடித விவாதங்கள். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் அறிவித்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கான எதிர்வினைகள்.

“பணித்திறன் குறைந்தவர்கள்” என்று மதிப்பீடு செய்யப்படும் ஊழியர்கள் வெளியேற்றப்படுவதும், ராஜினாமா செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுவதும் ஐ.டி. ஊழியர்கள் அனுபவித்திராத புதிய விடயங்கள் அல்ல. ஒரு வகையில் அது அவர்களுக்குப் பழகியிருக்கும் நியதி. ஆனால், திறமைசாலிகள் என்று பாராட்டப்பட்டவர்களும், பத்து ஆண்டுகளுக்கு மேல் விசுவாசமாக உழைத்து இடைநிலை நிர்வாகப் பதவிகளில் அமர்ந்திருப்பவர்களும் கொத்துக் கொத்தாகத்  தூக்கியெறியப்படுவது அவர்களிடையே அதிர்ச்சியைத் தோற்றுவித்திருக்கிறது.

சுமார் 3.13 இலட்சம் பேர் பணியாற்றும் டி.சி.எஸ். நிறுவனத்திலிருந்து 25,000 பேர் ஆட்குறைப்பு செய்யப்படவிருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து, வெளியேற்றப்படுவோரின் எண்ணிக்கையை டி.சி.எஸ். மறுத்தது. “எங்களைப் போன்ற திறனை முன்னிறுத்தும் நிறுவனங்களில் தரமேம்பாட்டுக்காக ஊழியர் எண்ணிக்கை குறைக்கப்படுவதில் அதிசயமில்லை” என்றும் கருத்து சொல்லும் அளவுக்கு இது முக்கிய விசயமில்லை” என்றும் மிகத் திமிராகவும் பதிலளித்தது.

டி.சி.எஸ் லே ஆஃப்
“வேலை நீக்கம் என்ற முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்க, ஐ.டி நிறுவனங்களின் ஊழியர்கள் சங்கமாக அணிதிரள வேண்டும்” என்ற பதாகைகளுடன் சென்னை – சோழிங்கநல்லூர் சந்திப்பில் அணிதிரண்டிருந்த பு.ஜ.தொ.மு.வைச் சேர்ந்த தோழர்கள்

சர்வதேச அளவில் 4 இலட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ள ஐ.பி.எம். நிறுவனம், அவர்களில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் ஆட்குறைப்பு செய்யவிருக்கிறதென்று ஜன-26 அன்று போர்ப்ஸ் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. “வதந்திகளுக்கெல்லாம் நாங்கள் பதிலளிக்க முடியாது” என்று மட்டுமே ஐ.பி.எம். இதற்குப் பதிலளித்திருக்கிறது.

விப்ரோ நிறுவனத்தின் சி.இ.ஓ. சி.டி.குரியன் “நாங்களும் டி.சி.எஸ். செய்வதையே செய்ய விரும்புகிறோம்” என்று அறிவித்திருக்கிறார். 1.4 இலட்சம் ஊழியர்களை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஒரு இலட்சமாக குறைக்கவிருக்கிறது விப்ரோ. யாகூ, எச்.பி., எச்.சி.எல், டெல், சிஸ்கோ, ஆல்டிசோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பை நடத்தி வருகின்றன.

கிரிசில் (CRISIL) என்ற தரநிர்ணய நிறுவனத்தின் ஆவின்படி, இந்தியாவில் ஐ.டி. துறையில் பணியாற்றுவோர் சுமார் 31 இலட்சம் பேர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 இலட்சம் பொறியியல் பட்டதாரிகள் புதிதாக வேலைவாய்ப்பு சந்தைக்குள் வருகிறார்கள். 2013-14 இல் பொறியாளர் உள்ளிட்டு மொத்தமாக வேலை கிடைக்கப் பெற்றவர்கள் 1.05 இலட்சம். 2017-ம் ஆண்டிற்குள் ஐ.டி. வேலைவாய்ப்பு ஆண்டுக்கு 55,000 – ஆக குறைந்து விடும் என்று கூறுகிறது கிரிசில். அதாவது 12 பொறியாளரில் ஒருவருக்குக்கூட வேலை கிடைப்பது அரிது என்பதே இதன் பொருள்.

சிறுசேரி டி.சி.எஸ் நுழைவாயிலில் பிரச்சாரம்
சென்னை – சிறுசேரியில் அமைந்துள்ள டி.சி.எஸ் அலுவலகத்தின் நுழைவாயிலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பு.ஜ.தொ.மு மற்றும் தோழமை அமைப்பினர்.

“கத்தி எடுத்தவனுக்குக் கத்தியால்தான் சாவு!”

நடைபெற்று வரும் இந்த ஆட்குறைப்பு, வேலையில் இருக்கும் இளைஞர்களையும் அச்சத்துக்குள்ளாக்குகிறது. இந்த அச்சம், அவர்களை மேலும் கசக்கிப் பிழிவதற்கான வாய்ப்பை நிர்வாகத்துக்கு வழங்குகிறது. கல்விக் கடன் வாங்கி பொறியியல் பட்டம் பெற்று, ஐ.டி. துறை என்ற பொன்னுலகத்துக்குள் நுழைந்துவிட வேண்டுமென்றும், அப்படியே ஆன்சைட் வாய்ப்பைப் பெற்று ஒரு முறையாவது அமெரிக்காவைத் தரிசித்துவிட வேண்டுமென்றும் கனவு கண்டு கொண்டிருக்கும் மாணவர்களையும் அவர்களுடைய பெற்றோரையும் ஆட்குறைப்பு குறித்த செய்திகள் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் மோகன்தாஸ் பய்.
வேலைநீக்க நடவடிக்கைகளை இரக்கமின்றி நியாயப்படுத்திய இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் மோகன்தாஸ் பய்.

தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் மூலம் தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் பெருகி மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற நம்பிக்கையை, நடுத்தர வர்க்கத்தினரின் மத நம்பிக்கையாகவே உருவாக்குவதிலும், அவர்கள் வழியாக சமூகம் முழுவதற்கும் இக்கருத்தைப் பரப்புவதிலும் ஐ.டி. துறை வேலைவாய்ப்பு பெரும்பங்கு வகித்து வந்திருக்கிறது. மலையை அறுத்து கிரானைட்டாக ஏற்றுமதி செவதையும், ஆற்றைச் சூறையாடி பலமாடி கட்டிடம் கட்டுவதையும், நிலத்தடி நீரை பாட்டிலில் அடைத்து விற்பதையும் கிராமப்புற மக்கள் சோற்றுக்காக நகரம் நோக்கி ஓடுவதையும் “முன்னேற்றம்” என்று கூசாமல் பேசுகின்ற துணிச்சலை நடுத்தர வர்க்கத்துக்கு வழங்குவதில், ஐ.டி. சம்பள மயக்கமும், அமெரிக்க மோகமும் ஆற்றியிருக்கும் பங்கு மகத்தானது.

ஓய்வு பெறும் வயதில் தான் எட்டிப்பிடித்த சம்பளத்தை, தன்னுடைய மகன் 25 வயதிலேயே பெற்றுவிட்டதை எண்ணிப் பெருமிதம் கொண்டிருந்தவர்கள், அந்தப் பிள்ளை 35 வயதில் கட்டாய ஓய்வளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவதைப் பார்க்கிறார்கள். இளைய தலைமுறையின் முன்னோடிகளாக நடுத்தர வர்க்கத்தால் போற்றப்படும் நாராயணமூர்த்தி போன்றோர் இதற்கு என்ன விளக்கம் வைத்திருக்கிறார்கள்? இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களில் ஒருவரான மோகன்தாஸ் பய், தற்போது நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் பற்றி தெரிவித்திருக்கும் கருத்தைப் பார்ப்போம்:

“இன்று வேலைநீக்கம் பற்றிப் புகார் செபவர்களுக்கு நவீன போட்டிப் பொருளாதாரம் பற்றித் தெரிவதில்லை; திறமைகளை இடையறாமல் மறுசீரமைப்பு செய்தால்தான் வளர்ச்சி என்பது சாத்தியம்… தொழில் நன்றாக இருந்த நாட்களில் இவர்கள் தகுதிக்கு அதிகமாக ஊதியம் வாங்கினார்களல்லவா? கத்தியெடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு. அதற்குத் தயாராக இல்லையென்றால் எப்படி? ஐ.டி. துறையிலிருந்து கொஞ்சம் ரத்தத்தை வெளியேற்றுவதுதான் இந்த துறைக்கு நன்மை பயக்கும்.” (நியூஸ் மினிட், ஜன 3, 2015)

“முதலாளித்துவம்”, “சுரண்டல்” என்பன போன்ற சோற்களைப் பொதுவாக ஐ.டி. துறை சார்ந்த புதிய நடுத்தர வர்க்கத்தினர் விரும்புவதில்லை. அவை தங்களைப் போன்ற திறமைசாலிகள் வாழ்க்கையில் முன்னேறியிருப்பதைக் காணப் பொறுக்காத வயிற்றெரிச்சல் பேர்வழிகளின் புலம்பல் என்றே அவர்களில் பலர் கருதிக் கொள்கின்றனர். அவர்களுக்கு முதலாளித்துவத்தின் உண்மைச் சொரூபத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் பய். மனிதவளம் என்று அழைக்கப்பட்ட ஐ.டி. ஊழியர்கள், இன்று வெளியேற்றப்படவேண்டிய கெட்ட ரத்தம் என்றும், குறைக்கப்பட வேண்டிய சதை (flab) என்றும் கரித்துக் கொட்டப்படுவது ஏன்?

மூத்த வழக்குரைஞர் பாலன் ஹரிதாஸ்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி. ஊழியர் பிரிவு தொடங்கப்பட்டதையொட்டி, சென்னை – சோழிங்கநல்லூர் அருகிலுள்ள படூரில் சனவரி – 10 அன்று நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் உரையாற்றிய மூத்த வழக்குரைஞர் பாலன் ஹரிதாஸ்.

அநீதியான இந்த ஆட்குறைப்பை எதிர்த்துப் போராட வேண்டும், சங்கம் அமைத்து உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்கிற அதே நேரத்தில், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையின் பின்புலத்தையும், இதற்கு வழிவகுக்கும் இந்தத் தொழிலின் தன்மையையும் இப்பிரச்சினைக்கு வெளியில் நின்று பார்ப்பதும் புரிந்து கொள்வதும் அவசியம்.

30 வயதில் ரிட்டையர்மென்டா?

இன்று ஆட்குறைப்பு செய்யப்படுவோரில் பலர் 6 முதல் 12 ஆண்டுகள் பணியாற்றிய இடைநிலை மேலாளர்கள். முன்னொரு காலத்தில் காம்பஸ் இன்டர்வியூவில் தெரிவு செய்யப்பட்டவர்கள். வெளியேற்றப்பட்டுவிடக்கூடாது என்ற அச்சத்தினாலேயே தீவிரமாக முயன்று தங்களது நிறுவனத்தின் கூம்பு வடிவ நிர்வாகக் கட்டமைவில் மேலே ஏறியவர்கள். பொறியாளர்களுக்கு வேலைகளை ஒதுக்கித் தருவது, மென்பொருளின் தரத்தைப் பரிசோதிப்பது, புதியவர்களைப் பயிற்றுவிப்பது போன்ற இவர்கள் செய்து வரும் பணிகளில் பல இப்போது தானியங்கிமயமாகி (automated) வருகின்றன. மேலும் இவர்கள் செய்து வரும் பணிகளை இவர்களை விடக் குறைவான ஊதியத்தில் செய்வதற்குத் தயாராக ஒரு பெரிய வேலையற்றோர் பட்டாளம் வெளியில் காத்திருக்கிறது. எனவே இவர்கள் வேண்டாத சதைப்பிண்டமாகிவிட்டார்கள்.

“இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்களின் சராசரி வயது 2007-08 இல் 25.5 ஆக இருந்தது, 2012-13 இல் 27.5 ஆக உயர்ந்து விட்டது. இதன் காரணமாக ஒரு சராசரியாக ஒரு ஊழியரின் ஊதியத்தின் அளவும் அதிகரித்து விட்டது” என்று தனது ஆய்வில் கவலை தெரிவித்திருந்தது பர்க்லேஸ் என்ற முதலீட்டு ஆலோசனை நிறுவனம். 1981-ல் தொடங்கப்பட்டு, 1999-ல் நாஸ்டாக்கில் பட்டியலிடப்படும் அளவுக்குப் பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்ட இன்ஃபோசிஸ் நிறுவனத்தில், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 2012-ல், “ஊழியரின் சராசரி வயது 27 ஆக இருப்பது அந்த நிறுவனத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல” என்று மதிப்பிடப்படுகிறதென்றால், ஐ.டி. நிறுவனங்களின் சராசரி ஓய்வு பெறும் வயது 30 என்றுதான் புரிந்து கொள்ளவேண்டும்.

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு
பு.ஜ.தொ.மு.வின் ஐ.டி ஊழியர் பிரிவு நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் மற்றும் ஐ.டி நிறுவன ஊழியர்கள்.

நாஸ்காம் தருகின்ற ஒரு புள்ளி விவரத்தைப் பார்ப்போம். நூறு கோடி டாலர் வருவாய் ஈட்டுவதற்கு இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு 2012-13 ஆம் ஆண்டில் 26,500 ஊழியர்கள் தேவைப்பட்டார்கள். 2013-14 ஆம் ஆண்டில் வெறும் 13,000 ஊழியர்களைக் கொண்டு அதே நூறு கோடி டாலர் ஈட்டியிருக்கின்றன ஐ.டி. நிறுவனங்கள் (NDTV, அக்-13). இது மட்டுமல்ல, இந்தியாவின் ஐ.டி. துறையில் புதிய ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தின் உண்மை மதிப்பு கடந்த 15 ஆண்டுகளில் இப்போதுதான் மிகவும் குறைவாக இருக்கிறது என்று மதிப்பிட்டிருக்கிறது கிரெடிட் சுயிஸ் என்ற முதலீட்டு நிறுவனம். ஆட்குறைப்பு, உழைப்புச் சுரண்டல் அதிகரிப்பு, ஊதிய வெட்டு ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் ஊழியர்கள் மீது ஏவப்படுவதை மேற்கூறிய தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இலாபவெறி, தானியங்கிமயம் என்ற கிடுக்கிப்பிடி!

“மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப ஊழியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளாமை, இலாப விகிதத்தின் வீழ்ச்சி” போன்ற நிர்ப்பந்தங்களின் காரணமாக வேறு வழியில்லாமல்தான் ஆட்குறைப்பு செய்யப்படுவது போன்ற ஒரு சித்திரத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் உருவாக்குகின்றன. அது உண்மையல்ல. டி.சி.எஸ். மிகையாக இலாபம் ஈட்டியிருக்கும் இந்தஆண்டில்தான் ஆட்குறைப்பும் கூடியிருக்கிறது. ஊழியர்களுடைய உழைப்பின் உற்பத்தித்திறன் அதிகரித்து வருவதுதான் ஆட்குறைப்புக்கும் வழிவகுத்திருக்கிறது.

தானியங்கிமயம் (automation) மனித எந்திரமயம் (robotisation) செய்யற்கை நுண்ணறிவு (artificial
intelligence) என ஐ.டி. துறையே புதிய சட்டகத்துக்குள் நுழைந்து விட்டதாகவும் இதற்குரிய திறமைகளை வளர்த்துக் கொள்ளாதவர்கள் தேவையற்றவர்களாக மாறுவதைத் தடுக்கவியலாது என்றும் கூறுகிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். உண்மையில் கீழிருந்து மேல் வரை பல்வேறு பணிகளுக்குமான நிரல்களை (programmes) அன்றாடம் எழுதுகின்ற பல்துறைப் பொறியாளர்கள், தம் பணியின் ஊடாக, தம்மைத்தாமே தேவையற்றவர்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள். இந்த நிகழ்ச்சிப்போக்கு மற்ற உற்பத்தி துறைகளில் நடப்பதைக் காட்டிலும் விரைவாக ஐ.டி. துறையில் நடந்தேறுவதைத்தான் நாம் காண்கிறோம். பொதுவாக எந்த தொழிலானாலும், அதில் தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கவேண்டும். ஆனால், இந்த முன்னேற்றத்தின் ஆதாயத்தை முதலாளித்துவம் அறுவடை செய்து கொள்வதால், தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு முன்னிலும் அதிகமாக பணிச்சுமையைத்தான் கூட்டுகிறது. ஏராளமானோரை வேலையில்லாதவர்களாக்கி வெளியேற்றுகிறது.

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு“அமெரிக்க மூளையைவிட இந்திய மூளை மலிவு – இந்திய மூளையைவிட எந்திர மூளை மலிவு” என்ற முதலாளித்துவ இலாப-நட்டக் கணக்குதான் “தொழில்நுட்ப முன்னேற்றம்” என்று பெயரில் மோகன்தாஸ் பய் போன்றோரால் நியாயப்படுத்தப்படுகிறது. எல்.கே.ஜி. முதல் பொறியியல் பட்டம் வரை சுமார் 20 ஆண்டுகாலம் “படி, படியென்று படித்து”, வேலையில் அமர்ந்த 7,8 ஆண்டுகளிலேயே “லாயக்கில்லை” என்று துரத்தப்படும் ஒரு மனிதனின் வாழ்க்கையை முதலாளித்துவத்தின் இந்த இலாப – நட்டக் கணக்கு பொருட்படுத்துவதில்லை.

வேலையிலிருந்து துரத்துவது மட்டுமல்ல, பத்தாண்டுகள் உழைத்தவனுக்கு எந்தவித செட்டில்மென்டும் தராமல் வெளியேற்றுவதற்காகத்தான், பணித்திறன் குறைந்தவர் என்று முத்திரை, கட்டாய ராஜினாமா போன்ற வழிமுறைகள். மறுப்பவர்கள் நாஸ்காம் கருப்புப் பட்டியலைக் காட்டிப் பணிய வைக்கப்படுகின்றனர். இலாபத்தைத் தவிர வேறெந்த மதிப்பீடும் (value) இவர்களுக்கு கிடையாது என்பதே இவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.
மன்மோகன் சிங்குக்கே இதுதான் கதி!

இதனைப் புரிந்து கொள்ளாமல், ஹையர் அன்டு ஃபயர் (Hire and Fire) என்ற முதலாளித்துவத்தின் விதியை ஒப்புக்கொண்டு, “பணித்திறனற்றவர் (under performer) என்று முத்திரை குத்தாமல் வெளியேற்றினாலாவது, இன்னொரு நிறுவனத்தில் நாங்கள் வேலை தேடிக்கொள்ள முடியுமே” என்ற கோணத்தில் சிலர் அசட்டுத்தனமாக இறைஞ்சுகிறார்கள். தாங்கள் விரும்பிய வேகத்தில் புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்தாமல் தடுமாறிய குற்றத்துக்காக, ஆனானப்பட்ட மன்மோகன் சிங்கையே “அண்டர் பெர்ஃபார்மர்” என முத்திரை குத்தித்தான் வெளியேற்றியது, “நன்றி கெட்ட” கார்ப்பரேட் முதலாளி வர்க்கம். அவ்வாறிருக்க, ஐ.டி. ஊழியர்கள் எம்மாத்திரம்?

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு

இன்னொரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை கிடைத்துவிடும் என்று நம்பிக்கை வைப்பதற்குக்கூட அறிவு பூர்வமாக ஒரு அடித்தளம் இருக்க வேண்டும். டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற ஐ.டி. நிறுவனங்களின் 80% வருவாய் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் சார்ந்தே இருக்கிறது. தங்கள் நாட்டைக் காட்டிலும் மிகவும் குறைவான ஊதியத்தில் இந்தியாவில் ஊழியர்கள் கிடைக்கின்ற காரணத்தினால்தான், அமெரிக்க, ஐரோப்பிய தொழில் நிறுவனங்கள் இந்திய ஐ.டி. நிறுவனங்களிடம் பணிகளை அவுட் சோர்ஸ் செய்கின்றன.

நாராயணமூர்த்தி, டாடா, அசிம் பிரேம்ஜி ஆகியோருக்கும் கட்டிட வேலைக்கு ஆள் சப்ளை செய்யும் காண்டிராக்டர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. தமது வாடிக்கையாளர்கள் அவுட்சோர்ஸ் செய்யும் வேலைகளுக்கு, “நேரம், பொருட்செலவு, ஊழியர்களுக்கான ஊதியம்” ஆகியவற்றைக் கணக்கிட்டு இன்வாய்ஸ் போட்டு அமெரிக்க-ஐரோப்பிய கம்பெனிகளுக்கு அனுப்பி வைத்து, அந்தப் பணத்தில் பாதிக்குப் பாதி கமிசன் அடிப்பதுதான் இவர்கள் செய்து வரும் தொழில்.

இந்த முறையிலான ஒப்பந்தத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, இவர்களுடைய இலாபமடிக்கும் தொகையும் அதிகரிக்கும். இதுநாள்வரை ஏராளமாக ஊழியர்களைப் பணியமர்த்தியதற்குக் காரணம் இதுதான். மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 15 முதல் 20 சதவீதம் பேரை வேலையேதும் இல்லாமல் “பெஞ்சில்” அமரவைத்து, அவர்கள் பெயரிலும் கணக்கெழுதி பணம் வசூலித்து வந்தார்கள் இந்த நவீன இந்தியாவின் சிற்பிகள்.

நீலக்காலராக மாற்றப்படும் வெள்ளைக்காலர்கள்!

பு.ஜ.தொ.மு. - ஐ.டி ஊழியர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கற்பகவிநாயகம்.
பு.ஜ.தொ.மு. – ஐ.டி ஊழியர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கற்பகவிநாயகம்.

இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு வேலை கொடுக்கும் அமெரிக்க- ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மந்த நிலைமையிலிருந்து மீள முடியாத காரணத்தினால், அவை தமது இலாபத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, மேற்கூறிய ஒப்பந்த முறையை மாற்றுகின்றனர். “எத்தனை ஊழியர்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை; குறிப்பிட்ட வேலையை முடித்து தருவதற்கு இவ்வளவு தொகை” (outcome based pricing model)  என்று ஒப்பந்தம் போடுகின்றனர். ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் தனது இலாப விகிதத்தை அதிகரித்துக் கொள்ளவும், பாதுகாத்துக் கொள்ளவும் திட்டமிடும் ஐ.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் தானியங்கிமயமாதல் நடவடிக்கையிலும் இறங்குகின்றன.

இதுமட்டுமின்றி, முதலாளித்துவ உற்பத்தியின் தன்மை காரணமாக, வங்கிச் சேவை, காப்பீடு, கடன் வசூல், பயண முன்பதிவு என்பன போன்ற சேவைகள் மற்றும் அவற்றை நிர்வகிக்கும் முறைகள் ஒவ்வொன்றும்  ஒருபடித்தானவையாக (commoditization) மாறி வருகின்றன. ரவா, மைதா போன்றவை பல பிராண்டுகளில் சந்தைப்படுத்தப்பட்டாலும், அவற்றின் பயன்பாடு ஒன்றுதான் என்பதைப்போலவே, கிரிண்ட்லேஸ், ஸ்டான்சார்ட் என்று வங்கிகள் வேறாக இருப்பினும் அவை வழங்கும் சேவையும் அவற்றை நிர்வகிக்கும் முறையும் அநேகமாக ஒன்றுதான் என்பதால், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ். போன்ற எந்த நிறுவனம் அந்தப் பணியைக் குத்தகைக்கு எடுத்து செய்தாலும், “வேலையின் தரத்திலோ செய்யும் முறையிலோ பாரிய வேறுபாடு இல்லை. விலையில்தான் வேறுபாடு” என்ற நிலை ஏற்பட்டு விட்டது. எனவே, அடக்கவிலையைக் குறைப்பதொன்றுதான் (cost cutting) இலாபத்தை அதிகரிப்பதற்கான வழி என்பதால், தானியங்கிமயமாதல் தீவிரப்படுத்தப்படுகின்றது.

இனி, வழமையான ஆளெடுப்பு முறைகளைக் கைவிட்டு, “ஜஸ்ட் இன் டைம்” (Just in time) என்ற முறைக்கு, அதாவது எந்தக் கணத்தில் தேவையோ அந்தக்கணத்தில் தேவைப்படும் ஆட்களை மட்டும் வேலைக்கு எடுத்துக் கொண்டால் போதுமானது என்று ஐ.டி. நிறுவனங்கள் கருதுகின்றன. தனித்திறன் வாய்ந்த சிலரை மட்டும் முறையாக பணியமர்த்திக் கொள்வது, எஞ்சியுள்ள ஆகப்பெரும்பான்மையான ஊழியர்களைப் பொருத்தவரை, “எக்ஸ்போர்ட் ஆர்டர் இல்லையென்றால் வேலை இல்லை” என்று கைவிரிக்கும் திருப்பூர் கம்பெனிகளின் வழிமுறைக்கு மாறத் திட்டமிடுகின்றன ஐ.டி. நிறுவனங்கள்.

நீலக்காலருக்கும் வெள்ளைக் காலருக்கும் இடையிலான வண்ண வேறுபாட்டை முதலாளி வர்க்கம் அகற்றி வருகிறது. காலைப்பொழுதில் நகர முச்சந்திகளில் கையில் தூக்குவாளியும், கண்களில் ஏக்கமுமாக வேலை தேடிக் காத்திருக்கும் கட்டிடத் தொழிலாளிகளையும் பொறியியல், நிர்வாகவியல் பட்டதாரிகளையும் பிரிக்கும் எல்லைக்கோடு மங்கி வருகிறது.

பணத்தை எண்ணுவதையும், பங்குச் சந்தையில் சூதாடி இலாபமீட்டுவதையும் தவிர வேறு வேலை தெரியாத முதலாளி வர்க்கம், தன்னுடைய இலாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காக, ஆகப்பெரும்பான்மையான உழைப்பாளிகளைத் தேவையற்றவர்கள் என்றும் திறமையற்றவர்கள் என்றும் முத்திரை குத்திக் கழித்துக் கட்டுகிறது. உடலுழைப்பாளிகளோ, மூளை உழைப்பாளிகளோ அனைவருக்கும் நேர்ந்து வருவது இதுதான். உண்மையில் இந்த சமூகத்துக்கு எந்த விதத்திலும் தேவைப்படாதவர்கள், முதலீட்டாளர்கள் என்று கவுரவமாக அழைக்கப்படும் முதலாளி வர்க்கச் சூதாடிகள்தான்.

பன்னாட்டு நிறுவன வேலை, அதிக ஊதியம், அமெரிக்கச் சார்பு, தமது தகுதி-திறமை குறித்த மயக்கம், சக ஊழியனைப் போட்டியாளனாகக் கருதும் மனோபாவம் ஆகியவற்றுக்கு ஆட்பட்டிருக்கும் ஐ.டி. துறையினரும், காம்பஸ் இன்டர்வியூவில் தெரிவு செய்யப்படுவதற்காகத் தவமிருக்கும் மாணவர்களும் உண்மையைக் கண் திறந்து பார்ப்பதற்கான வாய்ப்பை தற்போதைய ஆட்குறைப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தியிருக்கின்றன.
நாராயணமூர்த்தியும் பில் கேட்சும் இலட்சிய நாயகர்களாகக் கருதப்படும் சமூகத்தில் நாம் தேவையற்றவர்களாவதைத் தவிர்க்க முடியாது. அவர்களையும் அவர்களுடைய வர்க்கத்தையும் தேவையற்றவர்களாக்கும் ஒரு சமூக அமைப்பைப் பற்றி உடனே சிந்திக்குமாறு அவர்கள் நம்மை நிர்ப்பந்திக்கிறார்கள்.

-சூரியன்

________________________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
________________________________________