privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மணல் கொள்ளையரை விரட்டிய களத்தூர் கிராம மக்கள் !

மணல் கொள்ளையரை விரட்டிய களத்தூர் கிராம மக்கள் !

-

இலஞ்சம் கொடுக்க வந்த ஆற்றுமணல் கொள்ளையர்களை விரட்டியடித்த களத்தூர் கிராம மக்கள்!

பாலாறு ஆந்திராவில் தொடங்கி, வேலூர், காஞ்சிபுரம்  மாவட்டங்களை கடந்து செல்கின்ற மிகநீண்ட ஆறு.

இன்று தமிழகத்தில் ஆற்றுமணல் கொள்ளையை அரசே ஏற்று நடத்துகிறது. வேலூர் மாவட்டம் களத்தூர் மற்றும் சங்கரம்பாடி கிராமத்தில் மணல்குவாரி தொடங்க அரசு உத்திரவிட்டு ஒருவருடம் ஆகிறது. கடந்த ஒருவருடமாக இப்பகுதியில் மணல் எடுப்பதற்காக பல்வேறுகட்ட முயற்சிகளை அரசும், மணல்கொள்ளையனும் செய்து வருகின்றனர். இப்பகுதியில் மணல்அள்ள குவாரி எடுத்துள்ள கொள்ளையன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மச்சான் பாஸ்கரன் என்பவராவர்.

பாலாறு மணல்
வாலாஜாபாத்தை அடுத்த வள்ளிமேட்டில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ள மணல். (படம் : நன்றி தினமணி)

வேலூர் மாவட்டத்தில் சங்கரம்பாடி, களத்தூர் பகுதியை தவிர, பாலாற்றின் மற்ற இடங்களில் குவாரி அமைத்து, 3 அடிக்கு என்று சொல்லி, 50 அடிவரை மணல் எடுத்துள்ளார்கள், மணல்கொள்ளையர்கள். இந்த இடங்களில் மணல் சரிந்து இன்றுவரை பலபேர் உயிரிழந்துள்ளனர்.

மணல் அள்ளியதால் குடிதண்ணீரின் சுவையும் மாறியுள்ளது. 30 அடியில் கிடைத்த தண்ணீர் இன்று 100, 150 அடிக்கு மேல போர் போட்டால்தான் தண்ணீர் கிடைக்கிறது.

மணல் அள்ளுவதால் நீர்வளம், விவசாயம், மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதை குறித்தும், ஆற்றுமணல் கொள்ளையடிப்பதைத் தடுத்துநிறுத்தக் கோரியும் வேலூர்மாவட்ட ஆட்சியர் நந்தகோபாலிடம் பலமுறை மனு கொடுக்கப்பட்டது. மனுவை இவரிடம் கொடுப்பதும், குப்பைத்தொட்டியில் போடுவதும் ஒன்றுதான் என்கிற வகையில் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக, மணல் அள்ளுவதற்காக சங்கரம்பாடி மக்களுக்கு இலஞ்சம் கொடுத்து ஊழல்படுத்தும் வேலையை முன்நின்று வழிநடத்துகிறார், ஆட்சியர். சங்கரம்பாடி கிராமத்தில் ஒருகுடும்ப அட்டைக்கு தலா ரூ.10,000 கொடுத்து, மக்களை ஊழல்படுத்தும் வேலையில் சங்கரம்பாடியின் முன்னாள் தலைவர் வேதாந்தம், தற்போதைய தலைவர் கோபால், துணைத்தலைவர் சுப்பிரமணி ஆகியோர் இதற்கு உடந்தையாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி-11 அன்று காலை 10.30 மணிக்கு பி.டபிள்யூ.டி அதிகாரிகள் ஆற்றை அளவெடுக்க வந்தபோது, களத்தூர், சங்கரம்பாடி, சித்தனகால், பனப்பாக்கம், அவலூர், சிறுநாவல்பட்டி ஆகிய கிராமமக்கள் அதிகாரிகளை சிறைபிடித்து, ஆற்றை அளவெடுப்பதை தடுத்து நிறுத்தினர். மாலை 6 மணிக்கு மேல் வந்த ஆர்.டி.ஓ மக்களிடம் பேசி, “ஆற்றுமணலை எடுக்க மாட்டோம்” என உறுதி கூறி அதிகாரிகளை மீட்டார்.

இப்படி போராடிய மக்கள் பலர்மீது போலீசு பொய்வழக்கு போட்டுள்ளது. களத்தூர் கிராமமக்களின் வீட்டிற்கு சோதனை என்ற பெயரில் இரவில் போலீசு வந்து தொந்தரவு தருகிறது. இதையும்மீறி அந்த கிராமமக்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி – 18 அன்று மணல்கொள்ளையன் களத்தூர் கிராம மக்களிடம் வந்து “சங்கரம்பாடி கிராமத்தில் மணல் எடுப்பதால் உங்களுக்கு என்ன நட்டம்?” எனக் கேட்டு, ஒரு குடும்ப அட்டைக்கு ரூ 25,000 தருவதாகவும், வீட்டிற்கு போர் போட்டு தருவதாகவும், சாலைவசதி செயது தருவதாகவும் ஆசை வார்த்தைகளைக் கூறி, மக்களை ஊழல்படுத்த முயற்சி செய்தான்.

“பணம்தேவையில்லை, இந்த ஊருக்கே தாய் போன்ற பாலாற்று மணலை காப்பாற்றுவதுதான் எங்களை வேலை” என்று பதிலடி கொடுத்து விரட்டியடித்தனர், களத்தூர் கிராம மக்கள்.

10 வருடங்களுக்கு முன்தான் இந்த பகுதியில் மணல் அள்ளப்பட்டது. ஒருமுறை மணல் எடுத்தால், மீண்டும் மணல் அப்பகுதியில் அள்ளக்கூடாது என்கிறது சட்டம். எந்தச்சட்டத்தையும் அரசும், போலீசும், மணற்கொள்ளையனும் மதிப்பதில்லை. போராடுகின்ற மக்கள்மீதுதான் பல்வேறு பொய்வழக்கு போட்டு ஒடுக்குகின்றன, அரசும், போலீசும். களத்தூர் கிராம மக்கள் அவர்களின் சொந்த அனுபவத்தில் அரசும், போலீசுமம் நமக்காக இல்லை என்பதை உணர்ந்துள்ளனர். மக்கள் போராட்டம்தான், நம் ஆற்றையும், நம் நாட்டையும் காப்பற்றும்.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க