privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தொழில் தகராறு சட்டம் ஐ.டி. நிறுவனங்களுக்குப் பொருந்துமா ? நீதி மன்றம் உத்தரவு !

தொழில் தகராறு சட்டம் ஐ.டி. நிறுவனங்களுக்குப் பொருந்துமா ? நீதி மன்றம் உத்தரவு !

-

தொழில் தகராறு சட்டம், ஐ.டி. நிறுவனங்களுக்குப் பொருந்துமா? சென்னை உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

மது நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கிய பின்னர் தொடங்கப்பட்ட கார்ப்பரேட் மென்பொருள் நிறுவனங்களில் தொழில் தகராறுகள் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்கள் எவையும் பின்பற்றப்படுவதே இல்லை. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எந்த சமயத்திலும் வேலையில் இருந்து நீக்கப்படலாம் என்கிற அச்சத்தில் தான் பணிபுரிகின்றனர். வருடாந்திர அப்ரைசல் என்கிற வெளிப்படைத்தன்மையற்ற நடைமுறையின் மூலம் ‘திறனற்றவர்கள்’ என்கிற முத்திரை குத்தப்படுகின்றனர். கடும் மன அழுத்தத்திலும், 10 மணி நேரத்துக்கும் மேலாகப் பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுகின்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சங்கம் அமைக்கும் உரிமையும் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றது.

டி.சி.எஸ் பிரச்சாரம்
கடந்த ஜனவரி 10-ம் தேதி டி.சி.எஸ் நுழைவாயில் முன்பு பு.ஜ.தொ.மு நடத்திய பிரச்சாரம் (கோப்புப் படம்)

“முந்நூறு பேருக்கும் அதிமான ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதாக இருந்தால் அரசின் அனுமதி பெற்றாக வேண்டும்” என்ற சட்டத்தை ஐ.டி. நிறுவனங்கள் மதிப்பதேயில்லை.கொத்துக் கொத்தான வேலைநீக்கங்கள் ஐ.டி நிறுவனங்களில் சகஜமாகி விட்டன. இத்தகைய சட்டவிரோத வேலைநீக்கத்தை எதிர்ப்பவர்கள் குறித்த விபரங்கள் நாஸ்காம் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட எவருக்கும் பிற ஐ.டி நிறுவனங்களிலும் வேலை கிடைக்காது என்பதால், ஐ.டி.ஊழியர்கள் இத்தகைய சட்ட விரோத வேலைநீக்கங்களை எதிர்க்கத் துணியாமல் சகித்துக் கொள்கின்றனர்.

இந்தச் சூழலில், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் ( TATA CONSULTANCY SERVICES ) என்ற நிறுவனம் கடந்த 2014 டிசம்பர்  மாத இறுதியில் 25 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்க முடிவெடுத்து, அதற்கான தயாரிப்புகளை செய்யத் தொடங்கியது. 3 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம் தொடர்ந்து 30 ஆண்டுகளாக இலாபத்தில்தான் இயங்கி வருகின்றது. தனது லாபத்தினை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்ட ஊழியர்களை நீக்கிவிட்டு, புதிய ஊழியர்கள் 55 ஆயிரம் பேரை மிகக்குறைந்த ஊதியத்தில் நியமிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

பு.ஜ.தொ.மு பிரச்சாரம்
சோழிங்கநல்லூர் சிக்னலில் பு.ஜ.தொ.மு தொழிலாளர்களின் பிரச்சாரம் (கோப்புப் படம்)

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக சுமார் 20 ஆண்டுகளாகப் போராடி வருகின்ற “புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி” ( NDLF ) தொழிற்சங்கம், டி.சி.எஸ். ஊழியர்களது வேலை நீக்கப் பிரச்சினையில் தலையிட்டுப் போராடத் தொடங்கியது. இதற்கென பு.ஜ.தொ.மு ஐ.டி.ஊழியர்கள் பிரிவு தொடங்கப்பட்டது. “சட்ட விரோதமான வேலை நீக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டுமானால் சங்ககமாகத் திரளுவதுதான் தீர்வு” என்பதை உணர்ந்த நூற்றுக்கணக்கான ஐ.டி. ஊழியர்கள் பு.ஜ.தொ.மு.வில் இணைந்து வருகின்றனர்.

டி.சி.எஸ் நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சசிரேகா என்ற பெண்மணி இந்த அநீதிக்கு எதிராக தனிப்பட்ட முறையில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியபோது, “தொழிற் தகராறு சட்டம் தம்மைக் கட்டுப்படுத்தாது” என்று வாதிட்டு, ஐ.டி ஊழியர்களது சட்டபூர்வ உரிமைகளை மறுத்தது, டி.சி.எஸ்.

மென்பொருள் நிறுவனங்கள் செயல்படும் தொழிற்பூங்காவின் கட்டுமானம் அனைத்தையும் அரசு தான் செய்து கொடுத்தது. அரசு செலவில் மலிவான கட்டணத்தில் மின்சாரம், குடிநீர், சாலைவசதி ஆகியவற்றை அனுபவிப்பதுடன். பல ஆயிரம் கோடிகளுக்கு வரிச்சலுகையும் பெற்றுள்ளன டி.சி.எஸ் போலவே எண்ணற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மென்பொருள் மட்டுமல்லாது ஏனைய தொழில்களிலும் ஈடுபட்டு வரும், எண்ணற்ற சலுகைகளை அனுபவிக்கும் இத்தகைய கார்ப்பரேட்கள் இங்குள்ள சட்டங்கள் எதையும் மதிப்பதே கிடையாது. சட்டங்களை மதிக்காத கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தான் சமூகத்தின் சொத்துக்களான நிலம், நீர் ஆகிய அனைத்தையும் வாரி இறைக்கிறது, அரசு.

தொழிற் தகராறு சட்டம்
“தொழிற் தகராறு சட்டம் தம்மைக் கட்டுப்படுத்தாது” என்று வாதிட்டு, ஐ.டி ஊழியர்களது சட்டபூர்வ உரிமைகளை மறுத்தது, டி.சி.எஸ்.

25 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கப் பிரச்சினையில் அரசு தலையிட்டு, சட்டவிரோத வேலை நீக்கத்தை தடுத்திடுமாறும், டி.சி.எஸ் ஊழியர்கள் தொழிலாளர் நலச்சட்டங்கள் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பெறுவதை உறுதி செய்யுமாறும், 25 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் என்பது “தொழில் தகராறு சட்டம் 1947” அட்டவணை V- ன்படி தொழிலாளர் விரோதப் போக்கு என அறிவிக்குமாறும், ஐ.டி. ஊழியர்களை அச்சுறுத்தும் நாஸ்காம் கருப்புப் பட்டியலைத் தடை செய்யுமாறும், டிசிஎஸ் நிர்வாகத்தால் பாதிப்படைந்த ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கிடுமாறும் “புஜதொமு- ஐ.டி. ஊழியர்கள் பிரிவு” சார்பில் கடந்த ஜனவரி 21 அன்று தமிழக அரசிடம் மனு கொடுக்கப்பட்டது. அம்மனு மீது அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொழிலாளர்களது நலன்களைக் காப்பதற்காக போடப்பட்ட சட்டங்களும், அவற்றை நடைமுறைப்படுத்த தொழிலாளர் துறையும் இருந்தபோதிலும் அவர்களைப் பணி செய்ய வைப்பதற்குக் கூட நாம் நீதிமன்றம் சென்று உத்தரவு வாங்க வேண்டிய நிலைதான் உள்ளது.

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு சங்கத்தின் கோரிக்கைகளை செயல்படுத்துமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி பொது நல வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்தோம். அவ்வழக்கில் பு.ஜ.தொ.மு தொழிற்சங்கத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்புவும், வழக்கறிஞர் எஸ்.பார்த்தசாரதியும் வாதாடினர். பொது நல வழக்காக இதனைக் கருத முடியாதென முடிவு செய்த தலைமை நீதிபதியின் முதன்மை அமர்வு , “ஐ.டி. நிறுவனங்களுக்கு தொழில் தகராறு சட்டம் பொருந்துமா இல்லையா என்பதை அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளது.

கற்பகவிநாயகம்
பு.ஜ.தொ.மு ஐ.டி. ஊழியர் பிரிவு அமைப்பாளர் கற்பகவிநாயகம்

இதனை அடுத்து கீழ்க்காணும் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவெடுக்குமாரு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

1) தமிழ் நாட்டிலுள்ள ஐ.டி. நிறுவனங்களை இந்திய தொழில் தகராறு சட்டங்கள் கட்டுப்படுத்தும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

2) எந்த ஐ.டி. நிறுவனமும் நினைத்த நேரத்தில் லே-ஆப் செய்வதை சட்ட விரோதம் என அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3) அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் சங்கம் அமைக்கும் உரிமையைத் தடுக்கும் ஐ.டி. நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) பணி நீக்கம் செய்யப்பட்ட டி.சி.எஸ் உள்ளிட்ட அனைத்து ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கும் உரிய நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும்

தொழிலாளர் நலச் சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஐ.டி நிறுவனங்களை வலியுறுத்துவதற்கும், இது குறித்து , அரசுக்கு அழுத்தம் தருவதற்கும் ஐ.டி ஊழியர்கள் சங்கமாக ஒன்றுபடுவது முன் நிபந்தனையாக உள்ளது.

எனவே சட்டபூர்வ உரிமைகளை வென்றிட அனைத்து ஐ.டி.ஊழியர்களும் தங்களை எமது பு.ஜ.தொ.மு சங்கத்தில் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இது தொடர்பான பத்திரிகை செய்திகள்

[செய்திகளை பெரிதாகப் படிக்க படத்தின் மீது சொடுக்கவும்]

சு. கற்பகவிநாயகம்,
அமைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு

தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com