privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்சர்க்காரும், சட்டமும் யாருக்கு ? வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்

சர்க்காரும், சட்டமும் யாருக்கு ? வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்

-

காட்டுமன்னார்குடி வட்டம் காவாலக்குடி கிராமத்தின் வெள்ளாற்று படுகையில் 10 ஆண்டுகளாக மணல் அள்ளியதால் ஆறு இறால் குட்டை போல் மாறி நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து விவசாயம் பாதிப்படைந்தது.

காவலக்குடி குவாரி முற்றுகை
மணல் குவாரியை மூடக் கோரி மக்கள் போராட்டம் (கோப்புப் படம்)

அதே வெள்ளாற்றுப் படுகையைச் சேர்ந்த கார்மாங்குடி கிராமம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் சேர்ந்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உதவியுடன் அப்பகுதியில் இயங்கி வந்த சட்ட விரோத மணல் குவாரியை முற்றுகையிட்டு மணல் அள்ளுவதை நிறுத்தியதை அறிந்த காவாலக்குடி, சாந்திநகர் மக்கள் தங்கள் பகுதி குவாரியை முற்றுகையிட்டு குவாரியை தற்காலிகமாக மூடினர்.

ஆனால், அப்பகுதி மக்களின் மீது “அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக” PWD செயற்பொறியாளர் வெற்றிவேல் கொடுத்த பொய்ப் புகாரை ஏற்று காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது; மேலும் கு.வி.மு.ச 107 சட்டப்பிரிவின் கீழ் சார் ஆட்சியர் விசாரணை நடந்து வருகிறது.

இதனைக் கண்டித்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக 24-2-2015 காலை 11 மணி அளவில் “சர்க்காரும், சட்டமும் யாருக்காக?” என்ற கேள்வியுடன் வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் காவாலக்குடி, சாந்திநகர் பகுதி மக்களை ஒருங்கிணைத்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சிதம்பரம் பகுதி மாவட்ட இணைச்செயலாளர் வழக்கறிஞர் சி.செந்தில் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம்
காவாலக்குடி, சாந்திநகர் மக்கள் தங்கள் பகுதி குவாரியை முற்றுகையிட்டு குவாரியை தற்காலிகமாக மூடினர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு, கடலூர் மாவட்டச் செயலாளர் செந்தில், கடலூர் மாவட்ட பொருளாளர் செந்தாமரைகந்தன் மற்றும் உறுப்பினர்கள் முஜிபூர் ரஹ்மான், செல்வக்குமார், ஜோதி ராமகிருஷ்ணன் மற்றும் சாந்தி நகர் காவாலக்குடி கிராமத்தை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.

மக்களை அச்சுறுத்தும் வகையில் காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் காலை 11 மணிக்கு ஆரம்பித்து மதியம் 01.00 வரை முழக்கங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட கிராம மக்களின் கண்டன உரைகளுடன் எழுச்சியோடு நடைபெற்றது.

முன்னதாக காவல்துறை டி.எஸ்.பி சுந்தரவடிவேல், “ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி உண்டு. ஆனால் மைக்செட் வைக்கக் கூடாது” என நிபந்தனை விதித்தார் அதை மீறி தான் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வெள்ளாறு பாதுகாப்பு இயக்கம்
காவல்துறை டி.எஸ்.பி சுந்தரவடிவேல், “ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி உண்டு. ஆனால் மைக்செட் வைக்கக் கூடாது” என நிபந்தனை விதித்தார் அதை மீறி தான் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கண்டன உரைகள் :

வழக்கறிஞர் செந்தில், கடலூர்

ஏற்கனவே 100 அடி ஆழம் இருந்த போர் இன்று அளவுக்கதிகமாக மணல் அள்ளியதால் 200 அடி போட்டாலும் தண்ணீர் கிடைக்கவில்லை. ஏற்கனவே மின்சார பிரச்சனையால் விவசாயிகள் சரியாக தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்; இருக்கும் நிலத்தடி நீரையும் நாம் இழக்க முடியாது.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக 107 பிரிவில் வழக்கு போடச் சொல்லி யார் காவல்துறையிடம் புகார் கொடுத்தது?

ஆர்.டி.ஓ.-வைப் பார்க்க காலை 10 மணிக்கு வரவழைத்து மாலை 4 மணி வரை காத்திருக்க வைத்து மக்களை அலைக்கழிக்கிறார்கள்.

அதிகாரிகள் யாரும் சட்டத்தை மதிக்காதபோது நாம் ஏன் சட்டத்தை மதிக்க வேண்டும்

செங்குட்டுவன், காவலக்குடி வெள்ளாறு பாதுகாப்பு இயக்கம்

அமைதிப்பேச்சு வார்த்தைக்கு வந்தால் ஆர்.டி.ஓ, “ஊருக்கு ஏதாவது செய்கிறோம். மணல் அள்ள விடுங்கள்” என்று கேட்கிறார். இவர் என்ன லஞ்சப் பணத்தை வைத்து எங்கள் ஊருக்கு நல்லது செய்யபோகிறாரா?

இந்த PWD இன்ஜினியர், 500 லோடு மணல் எடுத்துவிட்டு 100, 150 லோடு என்று கணக்கெழுதுபவர், எங்கள் மீது பணிசெய்யவிடாமல் தடுத்ததாக பொய் வழக்கு போட வைத்தார்.

“ஆற்றில் டெட்பாடி கிடக்கிறது” என்று அதை ஒரு கொலை வழக்குகாக புகார் செய்ய காவல் நிலையம் சென்றால், “அது என் எல்லை இல்லை” என பேசும் ஆய்வாளர் மணல் பிரச்சனை என்றவுடன் உடனே வழக்கு போடுகிறார்.

இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். சட்ட விரோத மணல் குவாரியை மூடும் வரை போராட்டம் தொடரும்.

கலையரசன், மனித உரிமை பாதுகாப்பு மையம், சிதம்பரம்

ஆற்றில் விதிமுறைகளுக்கு மீறி மணல் அள்ளப்படுகிறது. இதனைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் மணல் கொள்ளைக்கு துணை போகிறார்கள். மக்கள் தன்னெழுச்சியாக தங்கள் வாழ்வதாரத்திற்காக போராடினால் “பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக” வழக்கு போடுகிறார்கள் என்றால் சட்டமும், சர்க்காரும் யாருக்காக என்று தெரிவதற்காக இந்தக் கண்டன ஆர்பாட்டம். இந்த வழக்குகளுக்கெல்லாம் பயந்து இந்த வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் பின்வாங்காது.

வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள்

கோபாலகிருஷ்ணன் ஆசிரியர் ஓய்வு (சாந்தி நகர்), வெள்ளாறு பாதுகாப்பு இயக்கம்

மணல் அள்ளுவதால் ஊருக்கு பாதிப்பு என்று போராடினால் ஊரில் பிரிவினைவாதிகளை வைத்து மணல் அள்ள வேண்டும் என்று போராட வைத்து பொய் வழக்கு போடுகிறார்கள். கொள்ளைக்காரனுக்கு அதிகாரிகள் துணை போகிறார்கள்.

“இன்னும் கொஞ்சம் மணல் தான் அள்ள வேண்டும், அள்ள விடுங்கள்” என PWD அதிகாரி கோட்கிறார். மக்களை போராட தூண்டியதாக என் மீது பொய் வழக்கு போட்டு என்னை அழைத்துச் சென்ற போலீஸ், மக்கள் ஒன்று திரண்டவுடன் என்னை இறக்கி விட்டுச் செல்கிறார்கள். நான் என்ன கொள்ளையா அடித்தேன்?

மணல் கொள்ளை அடித்தவனை விட்டுவிட்டு போராடும் மக்கள் மீதும், துணை நின்ற வழக்கறிஞர்கள் மீதும் வழக்கு போடுகிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மணல் குவாரியை மூடும் வரை போராடுவோம்.

முருகானந்தம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

சட்டம் சட்டம் என்று பேசும் அரசு மூன்று அடிக்கு அனுமதி வாங்கி 35 அடி மணல் அள்ளுபவனை ஒன்றும் கேட்காமல் போராடும் மக்களை மட்டும் சட்டத்தைக் காட்டி மிரட்டுகிறார்கள். எனவே, இந்தச் சட்டத்தை நம்பி இனி பயனில்லை. மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்தால்தான் இந்த அநீதிகளுக்கு முடிவுகட்ட முடியும்.

வெங்கடேசன், விவசாயிகள் சங்கம், கூடலையாத்தூர்

அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் மணல் கொள்ளையை தடுக்கவில்லை. ஆனால் நாங்கள் போராடினால் பொய் வழக்கு போடுகிறார்கள். 2020-ம் ஆண்டில் நிலத்தடி நீர் வெகுவாக குறையும் என அதிகாரிகளே கூறிவிட்டு மணல் அள்ளச் சொல்லுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. உயிர் போனாலும் விடமாட்டோம்.

வழக்கறிஞர் ராஜு, மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மாநில ஒருங்கிணைப்பாளர்

vellaru-kavalakudi-demo-1பொதுப்பணித்துறை தான் மணல் அள்ளுகிறது என்பது பொய்.

“குத்தகைதாரர் அனுமதிக்கப்பட்ட அளவை விட எல்லை தாண்டி மணல் எடுக்கிறார்கள்” என கூறினால், “அது PWD துறை அதிகாரிகளின் தொழில் நுட்பம் சார்ந்த விஷயம்” என கோட்டாட்சியர், சார் ஆட்சியர் கூறுகிறார். ஒரு வழக்கறிஞரான எனக்கு தெரிந்த விஷயம் உங்களுக்கு, அதிகாரிகளுக்கு தெரியாதா?

வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிக்க உத்தரவு போட்டுவிட்டு ஆற்று மணலை கொள்ளையடிக்கிறார்கள். அதிகாரிகள் துணையோடுதான் கிரானைட் ஊழல், தாதுமணல் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை இவை அனைத்தும் நடைபெறுகின்றன.

அரசியலமைப்பு சட்டம் தோற்றுப் போய்விட்டது. போராட அனுமதி இல்லை, பேச அனுமதி இல்லை, என்ன ஜனநாயகம்?

ஆற்றில் தண்ணீர் விட்டால் மணல் அள்ள முடியாது என்பதற்காக ஆற்றுக்கு தண்ணீர் வராமல் கடலுக்கு தண்ணீரை திருப்பும் PWD பொறியாளர் வெற்றிவேல் சோற்றில் உப்புபோட்டு தின்கின்றாரா?

பென்னிகுயிக் என்ற ஆங்கில பொறியாளன் தன் சொந்தக் காசைப் போட்டு தமிழனுக்கு அணை கட்டினார். அவர் பொறியாளர்.

வரவு கணக்கு பாராமல் மக்களுக்கு பணி செய்ய அதிகாரிகள் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதிகாரி என்றால் சகாயம் போல் இருக்க வேண்டும். ஜெயாவை, தமிழக அரசை எதிர்த்து நின்று விசாரணை நடத்துகிறார். இங்குள்ள ஆட்சியர், சார் ஆட்சியர் மேலிடம் என சொல்லி மணல் கொள்ளைக்கு துணை போகிறார்கள்.

“எங்களால் நேர்மையாக இருக்க முடியவில்லை, மக்களுக்கு எதிராகத் தான் செயல்பட முடியும்” என்றால் பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்கள் பணிக்கு வாருங்கள்.

திறமையானவர்கள், தைரியமானவர்கள், நேர்மையானவர்களாக இருக்கும் அதிகாரிகள் மட்டுமே மக்களுக்கு பயன்படுவார்கள்.

சகாயத்தால் கிரனைட் கொள்ளைக்கு காரணமான அதிகாரிகள், கொள்ளையர்களை தண்டிக்க முடியாது. ஆனால் மக்களுக்கு ஆதாரத்துடன் அடையாளம் காட்ட முடியும்.

அரசியல் கட்சிகள் முதல் அதிகாரிகள், நீதிமன்றங்கள் வரை அனைத்து நிர்வாக அமைப்பும் சீர்கெட்டு போயுள்ள நிலையில் மக்கள் போராடுவதை தவிர வேறு வழியில்லை. மணல் கொள்ளைக்கு எதிராக எங்கு மக்கள் போராட்டம் நடந்தாலும் அவர்களுக்கு நாங்கள் துணை நிற்போம்.

***

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

கண்டன ஆர்ப்பாட்டத்தை காண வந்து உரைகளை கேட்ட அதிகாரிகள் அவமானத்தால் சுவர்களுக்கு பின் பதுங்கி நின்றனர். மக்கள், கருத்துகளை ஆரவாரத்துடன் வரவேற்று கைத்தட்டினர்.

பொதுவில் இந்த ஆர்ப்பாட்டம், “அரசியல் அமைப்பின் தோல்வியையும், மக்கள் ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே உரிமைகளை பெறமுடியும்” என்பதையும் உணர்த்துவதாக அமைந்தது.

பாதுகாப்புக்கு வந்த காவல் துறையினர் உரையை கவனமாக கேட்டனர்.

அருகில் இருந்த கடைக்காரர்கள், “பட்டா கொடு, அத கொடு என அனைத்து கட்சினரும் புலம்புவதைதான் இது வரை கேட்டு வந்தோம். முதல் முறையாக நல்ல பேச்சை கேட்டோம்” என கருத்து தெரிவித்தனர்.

RDO விசாரணைக்கு வந்து இருந்த 20 நபர்களுடன் காவாலக்குடி, சாந்தி நகர் கிராம மக்கள் அனைவரும் அங்கேயே தங்கி விட்டனர். மணல் அள்ள வேண்டும் எனச் சொன்ன வி.சி உட்பட 20 பேரும் “107 வழக்கு விசாரணைக்கு ஜாமீன் கொடுக்கப் போகிறோம்” என தயாராக வந்து இருந்தனர்.

நமது வழக்கறிஞர்கள், “காவாலக்குடி மக்கள் மூலம் அவர்களுக்கும் நாம் சேர்த்து வழக்கு நடத்தலாம். RDO விடம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டோம் என ஜாமீன் கொடுத்தால் வரும் காலத்தில் போலீசார் உங்களுக்கு சிக்கல் கொடுப்பார்கள்” என தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வி.சி பேச்சை கேட்டுக் கொண்டு மணல் குவாரியின் அரவணைப்பில் ஜாமீன் கொடுத்து விட்டு சென்று விட்டனர்.

பின்னர், நம் தரப்பில் RDO-விடம், “நாங்கள் வழக்கை நடத்துகிறோம். எங்களுக்கு வழக்கு விபர நகல் கொடுங்கள்” எனக் கேட்டோம். இதனால் விசாரணையை வரும் 10-03-2015-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

“மணல் கொள்ளை தொடர்பாக தாங்கள் நேரில் வந்து விசாரித்து நடவடிக்கை எடுங்கள், நாங்கள் என்ன குற்றம் செய்தோம்?  எங்கள் வீட்டு ஆம்பளைகளை ஏன் அலைய வைக்கிறீர்கள். இது தொடர்ந்தால் இனிமேல் எங்கள் பிணத்தின் மீது ஏறி தான் மணல் அள்ள முடியும்” என பெண்கள் சார் ஆட்சியரிடம் மனு கொடுத்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

சிதம்பரம் சார் ஆட்சியர் அரவிந்த், “ஒன்னும் கவலைப் படாதீர்கள். இப்பதான் மனு எடுக்கலையே” என சமாதானம் சொன்னார்.

பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறையினர், பொதுப் பணித்துறை பொறியாளர் என அதிகாரிகளை கடுமையாக அம்பலபடுத்தி வருவதை  கீழ்நிலை ஊழியர்கள் வரவேற்கின்றனர். சேத்தியாத்தோப்பு காவல் துறையினர், “பொதுப்பணித் துறை பொறியாளர் வெற்றிவேல் கொடுத்த புகார் மனுவை நாங்கள் மேல் விசாரணையின்றி முடித்து விட்டோம். கவலை வேண்டாம்” என கூறிச் சென்றனர்.

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
விருத்தாச்சலம்