privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஇந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் - மேட் இன் அமெரிக்கா!

இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் – மேட் இன் அமெரிக்கா!

-

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்திலுள்ள அம்பரப்பர் மலையில்தான் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைய உள்ளது. இதற்காக மலையின் பக்கவாட்டில் இரண்டு கிலோ மீட்டர் நீள குகைப்பாதை வெட்டி அதற்குள் 130 மீ நீளம் 26மீ அகலம் 30 மீ உயரத்தில் ஒரு குகையை அமைத்து, அதனுள் உணர்கருவியை வைத்து ஆய்வுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், குகைக்கு வெளியில் 66 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தமிழக அரசு ஒதுக்கிக் கொடுத்துள்ளது. இதில் முள்வேலி அமைத்து நீர் தேக்க தொட்டி, துணை மின்நிலையம், 300 குடும்பத்திற்கு தேவையான குடியிருப்புகள், ஆய்வு செய்யவரும் மாணவர்கள், விஞ்ஞானிகளுக்கு தனித்தனி விடுதிகளும், அலுவலகங்களும் அமைய உள்ளன. இன்றுவரை தமிழக மாசுக்கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிபெறாத நிலையிலும், ஆரம்பகட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவையிலுள்ள சலீம்-அலி என்ற பறவைகளைப் பற்றி ஆய்வு நிறுவனம் மூலம் சுற்றுச்சூழல் அறிக்கை தயாரித்து, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஐ.என்.ஓ திட்டப் பணியிடம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இந்திய நியூட்ரினோ ஆய்வகம் அமையும் இப்பகுதிவாழ் மக்களின் நீண்ட்நாள் கோரிக்கைகளில் சாக்குலூத்து மெட்டுசாலை மற்றும் ராமக்கல் மெட்டுசாலை ஆகியவை முக்கியமானவை. இந்த சாலைகள் அமைக்கப்பட்டால் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் கேரள எஸ்டேட்டுகளுக்கு, வெறும் 6 கிலோமீட்டரில் சென்றுவிடலாம். நூற்றுக்கணக்கான விவசாயிகளும், ஆயிரக்கணக்கான கூலி விவசாயிகளும் பயன்பெறும் இத்திட்டத்திற்கு வனத்துறை இன்றுவரை அனுமதி தர மறுத்து வருகிறது. “வனவிலங்குகள் அழிந்து விடும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி” என்று காரணம் சொல்கிறார்கள். ஆனால் 6 கிலோமீட்டர் சாலை அமைத்து மக்களுக்கு உதவ மறுக்கும் அரசின் கொள்கைகள் இதே வனப்பகுதியில் 5,000 டன் வெடிமருந்தை பயன்படுத்தும் நியூட்ரினோ ஆய்வகம் திட்டத்திற்கு அனுமதியளித்திருக்கின்றன.

மக்கள் கேள்விகளும் – விஞ்ஞானிகளின் பதிலும்

lbne-collabபெரும் பொருள் செலவிலான இந்த ஆய்வின் மூலம் “பிரபஞ்சம் உருவான விதம், அதன் வயது போன்ற நுணுக்கமான கேள்விகளுக்கு துல்லியமான விடை கிடைக்கும். நிலநடுக்கம், சுனாமி அபாயங்களை முன்னரே தெரிந்துகொள்ளலாம். நம் நாட்டின் மாணவர்கள் ஆராய்ச்சிப் படிப்பில் முன்னேறலாம். உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் மதிப்பு உயரும். உலக வரைபடத்தில் பொட்டிப்புரம் கிராமம் முக்கிய இடம் பெறும்’’ என்று நியூட்ரினோ ஆய்வுத்திட்ட விஞ்ஞானிகள் விளக்கக் கூட்டத்தில் கூறுகிறார்கள்

ஆனால் பகுதிவாழ் மக்களோ, “இப்பவே அடிவாரக் காடுகளை வேலிபோட்டு அடைத்து விட்டார்கள். ஆடு, மாடு மேய்ச்சல் பறிபோய்விட்டது. காட்டுக்குள் போனால் வனத்துறை அதிகாரிகள் விரட்டுவார்கள், ஆடு மாடு வளர்க்கவே முடியாது. நாளைக்கு வெடிவைத்து மலையைத் தோண்டினால் நிலத்தடி நீரோட்டம் மாறிவிடும். பாறை தூசிகளால் பயிர்களும் நாசமாகிவிடும். கிராம மக்களின் சுகாதார வாழ்வு சீர்கேடாகி விடும். பிழைப்புக்கு வழியில்லாத ஊரில் எப்படி குடியிருக்க முடியும்?” என்று பீதியில் உறைந்து மவுனமாகி நிற்கிறார்கள்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ, “மூன்று வருடம், நடக்கும் சுரங்கக் கட்டுமான வேலைகளால் இப்பகுதியின் பல்லுயிர்வளம் சிதைந்து போகும். 5000 டன் வெடிமருந்துகளை பயன்படுத்துவதால் பாறை அடுக்குகளில் அதிர்வு ஏற்பட்டு 15 கி.மி சுற்றளவிலுள்ள (இடுக்கி, பெரியாறு, வைகை அணை உட்பட) பல அணைகள் சேதமடையும். மேலும், எதிர்காலத்தில் இம்மலைக்குகையை அணுக்கழிவுகளை பாதுகாக்கும் இடமாக மத்திய அரசு பயன்படுத்தும் அபாயமும் உள்ளது.” என்று எதிர்கால ஆபத்துகளை பட்டியலிடுகிறார்கள்.

ஃபெர்மிலேப் கண்காணிப்பகம்
ஃபெர்மிலேப் கண்காணிப்பகம்

மேற்கண்ட சந்தேகங்களுக்கு பதிலாக விஞ்ஞானிகள் தரப்பில், ‘’பொட்டிப்புரம் மலையில் கிரானைட் பாறைகள் இருப்பதால் பெரும்பாறைகளாக எடுக்கும் வகையில்தான் குகை வெட்டும் பணி இருக்கும். மேலும் நவீன தொழில் நுட்பக் கருவிகளையும் பயன்படுத்துவதால் பெரும் சப்தமோ, நில அதிர்வோ ஏற்படாது. இது கடினப் பாறையாக இருப்பதால் அதனுள் நீரோட்டம் இருக்க வாய்ப்பே இல்லை. இது ஒரு அடிப்படை ஆராய்ச்சிதான். இதில் அணு சம்பந்தமானது எதுவும் இல்லை. அணுக்கழிவு, அணுக்கதிர் வீச்சு என்பதெல்லாம் பொய், புரளி. மக்கள் பயப்படத்தேவை இல்லை. வேலிக்கு வெளியே ஆடுமாடு மேய்ப்பதில் நாங்கள் தலையிடமாட்டோம்.’’ என்று வாக்குறுதி தருகின்றனர்.

மக்கள் மத்தியில் இவ்வளவு ஆரவாரம் நடந்துகொண்டிருந்தாலும் மத்திய- மாநில அரசுகள் இதில் தலையிடாமல் ஒதுங்கி நிற்கின்றன. ‘மக்களின் முதல்வர்’ மீண்டும் அரியணை ஏறுவதற்காக பல்வேறு மாநில அரசுத் திட்டங்கள் காத்துக்கிடக்கும் போது, நியூட்ரினோ திட்டவேலைகள் மட்டும் தொடங்கிவிட்டன. அம்மாவோ அமைதி காக்கிறார்.

ஆனால் சி.பி.ஐ, சி.பி.எம்.கட்சியினர் இத்திட்டத்திற்கு திடீர் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். அடுத்த நாளே இவர்களின் ‘அறிவியல் இயக்கம்’ விஞ்ஞானிகளைக் கூட்டிவந்து ஊர்ஊராக விளக்கக்கூட்டம் நடத்தத் தொடங்கி விட்டது.

ஃபெர்மிலேப் இந்திய விஞ்ஞானிகளுடன் கலாம்.
ஃபெர்மிலேப் இந்திய விஞ்ஞானிகளுடன் கலாம்.

“தோழர்களே’ தலையிடுவதால் காரியம் இல்லாமல் இருக்குமா?” என்ற கேள்வியுடன் நாம் விசயத்தை தோண்டித் துருவியதில் கிடைத்த தகவல்களை தொகுத்து தருகிறோம்.

நியூட்ரினோ துகள்:

நவீன அறிவியலின்படி அணுவினுள், நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் ஆகிய மூன்று துகள்களோடு கூடவே இருக்கும் ஒரு நுண்துகளுக்கு ‘என்ரிகோ பெர்மி’ என்ற இத்தாலிய விஞ்ஞானி 1933-ம் ஆண்டு ‘நியூட்ரினோ’ எனப் பெயரிட்டார். (இவருக்கு “அணுகுண்டின் தந்தை”  – Father of Atom bomb என்ற பட்டமும் உண்டு).  ரேமண்ட் டேவிஸ் என்ற அமெரிக்க விஞ்ஞானி அண்ட வெளியிலிருந்து வந்து சேரும் நியூட்ரினோக்களை அடையாளம் காணும் பணிக்காக 2002-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

நியூட்ரினோ என்பது ஒரு மின்னூட்டமில்லாத நுண்துகள். எனவே பிற துகள்களின் மீது எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தாது. ஒளியின் வேகத்துக்கு இணையாக பயணம் செய்யும் நியூட்ரினோதுகள் அனைத்து பருப்பொருள்களையும் எளிதாக ஊடுருவி பாய்ந்து விடுகிறது. அண்ட வெளியிலிருந்து ஒரு நொடிக்கு பல லட்சம் கோடி நியூட்ரினோக்கள் பூமியை நோக்கி வருவதாகவும், நம் உடலையும் கூட, ஒவ்வொரு நொடியும் எண்ணற்ற நியூட்ரினோக்கள் (எவ்வித பாதிப்புமில்லாம்ல) ஊடுருவிச் செல்வதாகவும் நவீன அறிவியல் கூறுகிறது.

ராபர்ட் வில்சன்
ராபர்ட் வில்சன்

இதன் எதிர்வினையற்ற தன்மையாலும், பிற காஸ்மிக் கதிர்களின் இடையூறாலும் இதனை கண்டறிவது சவாலானதாக உள்ளது. எனவே காஸ்மிக் கதிர்கள் ஊடுருவ முடியாத மலைக்குகைக்குள் ஆய்வகம் அமைத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர், விஞ்ஞானிகள். நியூட்ரினோ குறித்த இவ்வகை ஆய்வுகள் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மன், ஜரோப்பா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இவ்வரிசையில் இந்தியாவும், சமீபத்தில் சீனாவிலும் சேர்ந்துள்ளன.

நார்வே நாட்டின் இயற்பியல் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்துவரும் திரு விஜய் அசோகன் என்பவர், “உலகின் பல நாடுகளில் இயங்கி வரும் நியூட்ரினோ ஆய்வின் ஒரு அங்கமாகவே இந்திய நியூட்ரினோ ஆய்வு நடக்க உள்ளது. இதற்காக அமெரிக்காவின் ‘ஃபெர்மிலேப்’ உடன் இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது.” என்று இந்தத் தகவலை வெளிப்படுத்துகிறார்.

ஆனால், INO விஞ்ஞானிகளோ, “ஃபெர்மிலேப் க்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. இது இந்திய விஞ்ஞானிகள் மட்டுமே செய்லபடும் திட்டம்’’ என்று இரண்டு வரி பதிலைச் சொல்லி, இதை இல்லவே இல்லை என மறுத்து வருகிறார்கள்.

கொலைகாரனின் வீச்சரிவாள் ‘ஃபெர்மிலேப்’

வில்சன் ஹால்
வில்சன் ஹால்

சிகாகோ நகரில் சுமார் 68,000 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்துள்ள ‘ஃபெர்மிலேப்’தான், உலகின் முன்னணி நியூட்ரினோ ஆய்வகம். ‘அணுகுண்டின் தந்தையான என்ரிகோ ஃபெர்மி என்ற விஞ்ஞானியின் நினைவாகத்தான் அமெரிக்கா தனது தேசிய ஆய்வகத்திற்கு ‘ஃபெர்மிலேப்’ – எனப் பெயர் சூட்டியுள்ளது. ஹிரோசிமா, நாகசாகியில் விசிய அணுகுண்டு தயாரிக்க, அமெரிக்க செயல்படுத்திய ‘மன்ஹட்டன் திட்டத்தின்’ திட்டத்தலைவராக இருந்தவர் டாக்டர்- ராபர்ட். ஆர்.வில்சன். பெர்மிலேப் –ன் முகப்பு அடையாள கட்டிடம் இவரது பெயரால் ‘வில்சன் ஹால்’ என அழைக்கப்படுகிறது.

அமெரிக்க அரசின் பில்லியன் (100 கோடி) டாலர் முதலீடு, 1000-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், உலகெங்கிலுமிருந்து வரும் பல்லாயிரக் கணக்கிலான ஆய்வு மாணவர்கள், விடுதிகள், சூப்பர்மால், கோல்ஃப் மைதானம், கார்ப்பரேட் அலுவலக வசதி, தொழில்வர்த்தக உறவு, பட்ஜெட் நிதிக்குழு என பகாசுரக்கம்பெனிகளின் கட்டுமானத்துடன் இயங்கும் நிறுவனம்தான் ஃபெர்மிலேப். தனது ஏகாதிபத்திய நோக்கத்தை கச்சிதமாக சாதித்துக் கொள்ள அமெரிக்கா ஏந்தியிருக்கும் ஒரு நவீன அறிவியல் கருவி இது.

நியூட்ரினோ ஆய்வில் ஃபெர்மிலேப்!

ஃபெர்மி லேப் வான் பார்வை
ஃபெர்மி லேப் வான் பார்வை

உயர் ஆற்றல் இயற்பியல் (High Energy physics) என்ற இயற்பியல் துறையின் பல்வேறு ஆய்வுகள் ஃபெர்மிலேபில் நடந்து வந்தாலும், நியூட்ரினோ ஆய்வுதான் பிரதானமாக உள்ளது. 1950 முதல் நியூட்ரினோ ஆய்வில் ஈடுபட்டுவரும் ஃபெர்மிலேப், நியூட்ரினோ ஆய்வுக்குரிய பல உயர்தொழில்நுட்பக் கருவிகளை வடிவமைத்து, சோதனை செய்து வருகிறதுத. ஆனாலும் நியூட்ரினோ பல செயல்பாடுகளை இன்னமும் துல்லியமாக கண்டறிய முடியவில்லை.

நியூட்ரினோக்களில், எலக்ட்ரான் நியூட்ரினோ, மியுவான் நியூட்ரினோ (muon), டவ் நியூட்ரினோ என்று மூன்றுவகை உண்டு ஒரு உணர்கருவியில் எலக்ட்ரான் நியூட்ரினோ தன்னை வெளிப்படுத்திவிட்டு போகும் பாதையின் இடையிலேயே மியூவான் நியூட்ரினோவாக மாறிவிடுகிறது. பிறகு எலக்ட்ரான் நியூட்ரினோவாக பழைய நிலைக்கு திரும்பிவிடுகிறது. இந்த நிலையற்ற தன்மையினால்தான் நியூட்ரினோவை துல்லியமாக மதிப்பிட முடியவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

எனவே நியூட்ரினோ ஆய்வை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுப்பதற்காக LBNE (Long baseline Neutrino Exporiment) என்ற புதியதிட்டத்தை ஃபெர்மிலேப் வகுத்துள்ளது. அதாவது, அண்டவெளியிலிருந்து வரும் நியூட்ரினோக்களுக்கு மாற்றாக, செயற்கையாக நியூட்ரினோக்களை உற்பத்தி செய்வது, (Neutrino Factry) இந்த நியூட்ரினோக்களை கற்றையாக, அடர்த்தியானதாக மாற்றுவது (Neutrino beam), இவ்வாறு அடத்தியூட்டப்பட்ட நியூட்ரினோக்களை உலகின் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள உணர்கருவிகளில் (Observatory) செலுத்தி ஆய்வுகள் செய்வது. இதுதான் LBNE ன் சுருக்கமான திட்டவிளக்கம்.

ஏற்கனவே நியூட்ரினோ தொழிற்சாலைகளும், நியூட்ரினோ பீம்களும் தயார்நிலையில் உள்ளன. இவற்றிலிருந்து 700 கி.மீ. தூரத்திலுள்ள உணர்கருவிக்கு அடர்த்தி நியூட்ரினோக்களை அனுப்பி வெற்றிகரமாக 5000, 10,000 கி.மீ தூரத்துக்கு சோதித்தறிந்துள்ளனர். இதனை மேலும் வீரியப்படுத்தி LBNE திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

ஃபொமிலேப்பும் – இந்தியாவும்

மேற்கண்ட அதிநவீன திட்டத்தை செயல்படுத்த அமெரிக்க தேசிய ஆய்வுகழகமான பெர்மிலேப், உலக நாடுகளின் விஞ்ஞானிகள், ஆய்வு நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

ஃபெர்மி லேபில் இந்திய ஆராய்ச்சி மாணவர்கள்
ஃபெர்மி லேபில் இந்திய ஆராய்ச்சி மாணவர்கள்

இந்தியாவின் டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் இந்துபல்கலைக்கழகம், கொச்சி, ஹைதராபாத், ஜம்மு பல்கலைக்கழகங்கள் மற்றும் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம், தவிர ஹைதராபாத் ஐ.ஐ.டி.யும், இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் கடந்த 2009 முதல் இணைந்துள்ளன. டாக்டர் கிரி, குரோவர் குமார், ராஜிவ், மொகந்தா, ருக்மணி போன்ற 13 இந்திய இயற்பியல் விஞ்ஞானிகளும் இணைந்துள்ளதாக ஃபெர்மிலேப் இணையதளம் கூறுகிறது.

மேலும், ஆகஸ்ட் 2014 நிலவரப்படி இந்த கூட்டு ஆய்வுத்திட்டத்தில் இந்தியா உட்பட இத்தாலி, பிரிட்டன், ஜப்பான், அமெரிக்கா ஆகிய 5 நாடுகளும், பல நாடுகளைச் சேர்ந்த 525 விஞ்ஞானிகளும், 190 ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்துள்ளதாக அந்த இணையதளம் தெரிவிக்கிறது.

இதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தின் கீழ் பரஸ்பர ஒப்பந்தப்படி சில இந்திய விஞ்ஞானிகள் பெர்மிலேப்பில் சில ஆண்டுகள் தங்கியிருந்து படிப்பும், பயிற்சியும் பெற்று வருகிறார்கள். இதுபோல ஃபெர்மிலேப் விஞ்ஞானிகளும் இந்திய ஆய்வகத்தில் பணிபுரியவும் இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது.

ஐ.ஐ.எஃப்.டி குழு
ஐ.ஐ.எஃப்.டி குழு

இதன் ஒரு அங்கமாகத்தான் டெல்லி பல்கலைக்கழகத்தின் தலைமையில் இந்திய நியூட்ரினோ திட்டத்திற்காக பெர்மிலேப் ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்க கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள அதே பல்கலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களும் இந்திய நியூட்ரினோ ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த LBNE திட்டத்தை அடுத்த வருடத்திற்குள் முடிப்பதற்கான P5 (Particle Physics Project Priortization Panel ) என்ற செயல்திட்டத்தை அமெரிக்க அணுசக்திதுறை கடந்த 2014 தயாரித்து வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த மொத்த நீண்டகாலத் திட்டத்தின் ஒரு அங்கமாகத்தான் இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சி நடக்கவுள்ளது. இதற்காக டெல்லி பல்கலைக்கழகம் பெர்மிலேப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆராய்ச்சி நிறுவனங்களும் இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திலும் (INO) ஈடுபட்டு வருகின்றனர்.

நீலச்சாயம் வெளுத்துப் போச்சு டும்..டும்…டும்

டாக்டர் G.ராஜசேகரன்
டாக்டர் G.ராஜசேகரன்

டாக்டர் G.ராஜசேகரன் என்பவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து பின்பு பாபா அணு ஆராய்ச்சி நிலையத்திலும், டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிலைத்திலும் பயிற்சி பெற்று, 1976-ல் சிகாகோ பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னையிலுள்ள இந்திய கணித அறிவியல் துறையில் விரிவுரையாளராக பணிபுரிந்தவர்.

இவர் கடந்த 2003 ஜூன் 5-11-ம் தேதிகளில் அமெரிக்காவின் கொலம்பியா யுனிவர்சிட்டியில் நடந்த “சர்வதேச நியூட்ரினோ தொழிற்சாலைகள்’’ (ஆங்கிலம்) குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ‘இந்திய நியூட்ரினோ ஆய்வுத்திட்டம்’ குறித்த 5 பக்க அறிக்கை வாசித்துள்ளார்.

இது, பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையை தேர்வு செய்வதற்க்கு முன்பு சிங்காரா மற்றும் டார்ஜலிங் ஆகிய இடங்கள் பரிசீலனையில் இருந்த போது தயாரித்த அறிக்கை.

அதில், இந்திய நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் என்பது “எதிர்காலத்தில் நியூட்ரினோ தொழிற்சாலைகளிலிருந்து பெறப்படும் அடர்த்தியூட்டப்பட்ட நியூட்ரினோக்களை பெறும் நோக்கத்தோடுதான் 30-50 டன் எடையுள்ள உணர்கருவி அமைக்கப்படுவதாகவும், LBNE திட்டத்திற்கு ஒத்துழைப்பாக இருக்கும்” என்று மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இந்திய – அமெரிக்க கூட்டு முயற்சியை விளக்கும் காட்சித் திரை படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மேலும் நியூட்ரினோ தொழிற்சாலைகள் அமையும் இடங்களான ஃபெர்மிலேப், CERN, KEK (ஜப்பான்) ஆகியவற்றிலிருந்து ஐ.என்.ஓ அமைவிடம் எத்தனை கிலோ மீட்டர் தூரம் என்பதை வரைபடமாகவும் வெளிப்படுத்தி உள்ளார். இதைவிட வெளிப்படையான ஒப்புதல் வாக்கு மூலத்தை யார் தர முடியும்?

நியூட்ரினோ ஆராய்ச்சியால் யாருக்கு பயன்?

“நிலநடுக்கம், சுனாமிகளை முன்னறிந்து பேராபத்தை தடுக்கலாம், உலக நாடுகள் பொட்டிப்புரத்தை திரும்பிப் பார்க்கும்” என்று இந்திய விஞ்ஞானிகள் ஜோசியம் சொல்கிறார்கள். ஆனால் அமெரிக்க கப்பல் படைப் பிரிவு கற்றைகளைப் பயன்படுத்தி, 400 கி.மீ.தூரத்திலுள்ள ஆணு ஆயுத நீர்மூழ்கி கப்பலுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வெற்றிகரமாக சோதித்துவிட்டார்கள். தகவல் தொடர்புதுறையில் ஈடுபட்டுள்ள பன்னாட்டுக் கம்பெனிகள் இப்போதே அங்கு ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார்கள்.

ஜப்பானிய விஞ்ஞானிகள், “எதையும் எளிதாக ஊடுருவிப் பாயும் நியூட்ரினோக்களை கொண்டு இதுவரை கண்டிராத அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கலாம்” என்று அறிவித்துள்ளனர். அதிநவீன நுண்ணோக்கி தயாரிப்பிலும், மருத்துவத்துறையில் பெரும்புரட்சி ஏற்படுத்தலாம்! பால்வெளியில் பிற உயிர்வாழும் கிரகங்களுக்கு தகவல் செய்திகளை அனுப்பி, புதிய கிரகங்களை கண்டறியலாம். என்று அடுத்தடுத்த புதிய இரைகளைத்தேடி, நாக்கை சுழட்டிக் கொண்டு பன்னாட்டுக் கம்பெனிகள் புறப்பட்டுவிட்டன.

இறுதியில் நியூட்ரினோ ஆராய்ச்சி என்பது ஏகாதிபத்தியங்களின் இராணுவ நலன்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களின் இலாப சுரண்டலுக்குமே பயன்படப் போகிறது. இதற்கு இத்தகைய பெரிய அளவு இந்திய மக்களின் பணத்தை செலவு செய்வது என்ன நியாயம்?

அடுத்த வேளை கஞ்சிக்கு ஆலாய்ப் பறக்கும் மக்களின் அடிப்படை வாழ்க்கைக்கு உத்தரவாதம் தர முடியாமல், அவர்களது வாழ்வாதாரங்களை அச்சுறுத்தி அமெரிக்க திட்டத்தின்படி விஞ்ஞானத்தை வளர்க்க சேவை செய்யப் புறப்பட்டிருக்கின்றனர் இந்திய அரசும், இந்திய விஞ்ஞானிகளும்.

கடந்த நூறு ஆண்டுகளாக நடத்தப்பட்ட அடிப்படை அறிவியல் ஆய்வுகள் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் எந்த விதமான மேம்பாட்டையும் கொண்டு வந்து விடாத நிலையில், அவர்களுக்குப் புரியாத, எதிர்காலத்தில் பலன் கிடைக்கும் என்று சொல்லப்படும் ஆய்வகளுக்காக அவர்களது வாழ்விடங்களை அழிப்பது எந்த வகையில் அறிவியல் பூர்வமானது?

அப்படியே, அடிப்படை அறிவியல் புரட்சிகள் நடந்தாலும், அதனால் சாதாரண மக்களுக்கு என்ன பலன் என்பதை யாரும் விளக்குவதில்லை. இன்றைய, சந்தைப் பொருளாதார கோட்பாடுகளின்படி இந்த ஆய்வுகளின், அறிவின்  இறுதிப்பலன் பன்னாட்டுக் கம்பெனிகளின் இலாப வேட்டைக்குத்தான் போய்ச் சேரும்; அவர்கள் சம்பாதிப்பதற்கு அறிவியல் சிகப்பழகு கிரீம், ஐ-ஃபோன் தொடு திரைகள் என திருப்பி விடப்படுமே தவிர, கிராமப்புற மக்களுக்கு தேவையான வாழ்வுக்கு போதுமான விவசாய நுட்பம்,  குறைந்த செலவில் வீடு கட்டுதல், வெப்ப மண்டல நோய்களை ஒழித்தல், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உறுதிப்படுத்துதல் போன்ற துறைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் என்ற நிலைதான் உள்ளது.

அமெரிக்க எஜமானின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் இந்திய அரசோ, தனது விசுவாசத்தை மேலும் வேகமாக வாலாட்டிக் காட்டுவதற்குத் தான் இந்திய நியூட்ரினோ திட்டத்தை இங்கு நிறைவேற்றத் துடிக்கிறது. ஒரு டாக்டர் பட்டத்திற்கு ஆசைப்பட்டு சில இந்திய விஞ்ஞானிகள் இதற்குப் பலியாகி கிடக்கின்றனர்.

இவ்வாறு அனைத்து வகையிலும் மக்கள் நலனைப் புறக்கணித்து விட்டு, அமெரிக்க விருப்பத்தின்படியிலான அறிவியல் வளர்ச்சிக்காக ஆய்வகம் அமைக்கிறார்கள்.

– மாறன், விவசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம் வட்டாரம்.