privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்கோவை போலீசுக்கு பு.மா.இ.மு எடுத்த ஜனநாயக வகுப்பு

கோவை போலீசுக்கு பு.மா.இ.மு எடுத்த ஜனநாயக வகுப்பு

-

கோவை நகரம் நாளுக்கு நாள் முற்றி வரும் மக்கள் போராட்டங்களை தினந்தோறும் எதிர் கொண்டு வருகிறது. தன்னியல்பில் பாசிசமயமாகி வரும் அரசக் கட்டமைப்பில் இதர மாவட்டங்களுடன் ஒப்பு நோக்கின் இன்னும் ஒரு படி மேலே இருக்கும் நகரம் இது. இந்துத்துவ சில்லறை லெட்டர் பேட் அமைப்புகளின் கொட்டம் வேறு ஒரு பக்கம். புரட்சிகர அமைப்புகள் இத்தகைய அசுத்தங்களை அகற்றி புதுக் குருதி ஏற்றும் வேலையை செய்து வரும் வேளையில், அதற்கு அவ்வப்போது எதிர் வரும் வேகத் தடைகளை அகற்றும் தருணங்கள் சுவாரசியமானவை.

கடந்த வாரம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த நமது தோழர்கள் கோவை அரசுக் கலைக் கல்லூரியில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். கலைக் கல்லூரி கோவையின் மையப் பகுதியில் இருக்கிறது. மாணவர்கள் இளைஞர்களின் பிரதான பிரதேசமாதலால் இதயத்தின் இடது வெண்ட்ரிக்கிள் போல எப்போதும் துடிப்புடன் இருக்கும் பகுதி.

வழக்கம் போல் சிறிய தட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் உறுப்பினர் அட்டைகள் சகிதமாக மாணவர்களுடன் அரசியல் பேசியவாறு காலையில் துவங்கிய வேலை மதியம் வரை சுமுகமாகவே போனது.

மதியம் 12:30 போல ஒரு ஆட்டோ ஓட்டுனர் நம்மை அணுகி, ஆஞ்சநேயர் கோவிலில் பிரசாதம் வாங்கும் உடல் மொழியில் மிக பவ்யமாக, “ஒரு நோட்டீஸ் தருவீங்களா…?” எனக் கேட்டார். அப்போதே பட்சி சொல்லிற்று; ஒன்றிற்கு இரண்டாகக் கொடுத்து அனுப்பினோம்.

சரியாக 3 நிமிடங்களில் 5 காக்கி போலீஸும் ஆறேழு மஃப்டி போலீஸும் (ரகசிய போலீசாமா…!) ஸ்பாட்டுக்கு வந்து எங்களை  மறித்து நின்றனர்.

போலீஸ் : “என்ன பண்ணிக்கிட்டுருக்கீங்க…? இங்க இதெல்லாம் செய்யக் கூடாது.”

புமாஇமு : “ஏன் செய்யக் கூடாது..?”

போலீஸ் : “பர்மிஷன் வாங்காம இதெல்லாம் செய்யக் கூடாது.”

புமாஇமு : “யார்கிட்டயும் பர்மிஷன் வாங்கத் தேவையில்ல சார்.”

போலீஸ் : “நீங்க மாணவர்களை பிரெய்ன் வாஷ் பண்ணுறீங்க”

புமாஇமு : “நாங்க ஒண்ணும் சாதி மத பிரச்சினைய கிளப்பல…. சார்.”

போலீஸ் : “நீங்க வந்தா எல்லா கட்சிக் காரங்களும் கேட்பாங்க…! த.மா.கா கேட்டாங்க., அவங்களுக்கும் நாங்க விடல. அதனால நீங்களும் பண்ணக் கூடாது; பொது மக்களுக்கு இடையூறு ஆகுது”

புமாஇமு : “என்ன இடையூறு ஆகுது..? இப்ப நீங்க வந்தவுடன் தான் இங்க கூட்டம் அதிகமாகியிருக்கு மக்கள் இங்க என்னவென்றே வேடிக்கை பார்க்கறாங்க…! நாங்க இதுவரை எங்களிடம் பேசுகின்ற மாணவர்களிடம் தான் பேசுறோம். யாரையும் கட்டாயப் படுத்தல.”

போலீஸ் : “இல்லைன்னா இல்ல தான். நீங்க பண்ணக் கூடாது.”

புமாஇமு : “இல்லைன்னு எந்த செக்சன்ல் சொல்லிருக்குன்னு தெளிவா சொல்லுங்க சார். பொத்தாம் பொதுவா இல்லைன்னு சொன்னாலாம் நாங்க போக முடியாது. இது எங்க உரிமை.”

சி‌ஆர்‌பி‌சி, சி‌பி‌சி என நாம் பேசத் துவங்க இவங்க ஏதோ நமக்கு சம்பந்தமில்லாததை பேசுறாங்க போல “என்னமோ போடா மாதவா” என்ற தொனியில் சட்டம்&ஒழுங்கு காவல் துறையினர் பேந்தப் பேந்த விழித்தவாறே நின்றிருந்தனர்.

சீனியர் போலீஸ் சிரிப்பு போலீஸாக மாறியது கண்டு அறச் சீற்றம் கொண்டார் ஒரு பெண் போலீஸ்,

“என்னம்மா ரொம்ப ஓவரா பேசிக்கிட்டே போற., சொன்னா கேக்க மாட்டியா நீ.” என்று கூறியவாறே தோழர்களை போட்டோ எடுக்க முனைந்தது போலீஸ்.

புமாஇமு : “நிறுத்துங்க.. ஃபோட்டோ எடுக்காதீங்க….” எனத் தடுக்கையில்,

அந்த போலீஸ், “ஏய், என்ன” எனக் கூற, அவ்வளவு தான் ஆக்ரோஷமானார்கள் தோழர்கள்.

புமாஇமு : “என்ன ‘ஏய்’ னு சொல்ற.,? எங்கள பார்த்தா எப்பிடி தெரியுது? நாங்க உங்கள போட்டோ எடுத்தா சும்மா இருப்பியா…?”

என நமது தோழர் எகிற, அவர்களும் பதில் பேச நமது தோழரும் ஏகத்துக்கும் எகிறத் துவங்க சுற்றியிருந்த மாணவர்களோ படு உற்சாகத்துடன் இதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நிலைமை கை மீறுவதை உணர்ந்த காக்கிகள் பின் வாங்கினர். சமாதானமாக பேச முயன்றனர். “இன்ஸ்பெக்டர் கூப்ட்டாரு” என காக்கிகள் கிளம்பிவிட்டனர். ஆனாலும் மஃப்டி போலீஸ்கள் விடாமுயற்சியுடன் சிலர் தன்மையாகவும் நாசூக்காக பேசியும் அங்கேயே உலாத்திக் கொண்டும் இருந்தனர் சூடுபட்ட பூனைகளாக.

புமாஇமு : “சார்., நாங்க கிளாஸ்க்குள்ள போயி பசங்கள டிஸ்டர்ப் பண்ணல. வெளிய நின்னுதான் பேசுறோம். உள்ளயே இந்த வேலைய செஞ்சுகிட்ருக்க பி‌ஜெ‌பி ய நீங்க எதுவும் கேட்கல ஆனா எங்கள கேட்குறீங்க..?”

(இப்படியான சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே மறு புறம் மாணவர்கள் ஆர்வமாக வந்து உறுப்பினரானார்கள்)

போலீஸ் : “அவங்க பண்ணது புகாரா வரலயேப்பா.. நீங்க செய்றது தான் வந்திருக்கு.”

புமாஇமு : “யார் அப்படி புகார் சொன்னாங்க…?”

போலீஸ், “பசங்க தான்” எனக் கூறினர். எந்த பசங்க எனும் போது கூற மறுத்து விட்டார்.

கோவை அரசுக் கலைக் கல்லூரியில் கணிசமான அளவு தி.க. வினரும் ஏ‌.பி.வி.பி. யினரும் இருக்கின்றனர். இதில் ஏ‌.பி.வி.பி. யினரின் சில்லுண்டித்தனங்கள் மோசமானவை.

அவ்வமைப்பின் முன்னணியினர்

  • தமது வகுப்பு மாணவர்களின் ஃபோனை வாங்கி கனவு பெண்ணை கண்டுபிடிக்க இந்த நெம்பருக்கு அழையுங்கள் என அலைபேசி கம்பெனிகள் செய்யும் மாமா வேலையை போன்றே ‘உறுப்பினர் ஆகணுமா, இந்த நெம்பருக்கு கூப்பிடுங்க’ என விளம்பரம் செய்யப்பட்டிருக்கும் பி‌ஜே‌பி யின் நெம்பருக்கு இவர்களே மிஸ்டு கால் கொடுப்பது
  • வகுப்பில் மிக சொற்பமாக இருக்கும் இஸ்லாமிய மாணவர்களை மிக மோசமாக கிண்டல் செய்வது
  • கல்லூரிக்குள்ளேயே ஆங்காங்கே கூட்டங்களை போட்டு மினி மதவெறி ஷாகா நடத்துவத
  • இதை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரு சில மாணவர்களையும் அடக்குவது

என்பன போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது போன்று மத முனைவாக்கம் (Polarizing) செய்து கொண்டிருக்கும் உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பின் தொடுப்புகளை (Outfits) மிக மென்மையாக கையாள்கிறது பார்ப்பன ஏவல் துறை. இதன் எதிர்முனையாக இருக்க வேண்டிய தி.க. வினரோ, பு.மா.இ.மு வளர்ச்சியை பார்த்து ஏக்கப்பெருமூச்சு விடுகின்றனரே அன்றி, காவிக்கூட்டத்தை எதிர்த்து ருத்ர தாண்டவம் ஆடுவதில்லை.   இப்படியான நிலைமை இங்கிருக்கிறது.

சுமார் இரண்டு மணி நேரம் நம்மிடம் என்ன பேசியும் முடியாமல், மஃப்டிகளும் போலீஸ்களும் கிளம்பும் போது அதில் ஒரு பெண் காக்கி “வாங்க சார்., நாம HOD கிட்ட புகார் எழுதி வாங்கிட்டு இவங்கள பாத்துக்கலாம்” என அப்பட்டமாக கூறுகிறார். ஒரு பொய்ப் புகார் எழுதி வாங்கப் போவதை அப்படி கூறிவிட்டு போகிறார்.

நாமும், “நீங்க முடிஞ்சத பாத்துக்கங்க சார்” எனக் கூறி அவர்களை வழியனுப்பி விட்டு வந்து நமது வேலையை தொடர்ந்தோம். அதன் பின்னர் பல மாணவர்கள் மிக ஆர்வமாக உறுப்பினராக இணைந்தனர். அது வரை, நாம் யாரு என்ன விஷயம் எனப் பேசியவாறு சேர்க்க வேண்டியிருந்தது. ஆனால் இதன் பின் வேலை கொஞ்சம் எளிதாகியது என்னவோ நிஜம்.

ஒரு முதுகலை மாணவர் வந்து “எனக்கொரு கார்டு போடுங்க..” என உரிமையாகக் கேட்டார்.

“என்னங்க., நோட்டீஸ் படிச்சிங்களா..? எதுவுமே கேட்கலயே நீங்க…” என நாம் கூறுகையில் அதற்கு அவர்,

“ரோட்டுல நின்னு மாணவர்கள் உரிமைக்காக போலீஸ் கிட்ட அரசியல் பேசுறீங்க….! இத விட என்ன வேணும். இன்னைலேர்ந்து நானும் புமாஇமு உறுப்பினர்” எனக் கூறினார்.

அதன் பின், மாலை ஆறு மணி வரை தொடர்ந்து நடைபெற்று முடிவடைந்தது உறுப்பினர் சேர்க்கை. இது தொடரும்….

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை

பு.மா.இ.மு போராட்டம்
சென்னை ராயபுரத்தில் மாணவர் உரிமைக்காக போராடும் பு.மா.இ.மு (கோப்புப் படம்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க