privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைபெண்பயந்து பயந்து வாழ்கிறோம் – மகளிர் தினம் நேரடி ரிப்போர்ட்

பயந்து பயந்து வாழ்கிறோம் – மகளிர் தினம் நேரடி ரிப்போர்ட்

-

மார்ச் 8 சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை பெண்கள் எப்படி பார்க்கிறார்கள்? கேள்விகளை சுமந்து கொண்டு கடற்கரைச் சாலையில் உள்ள சென்னை பல்கலைக் கழக வளாகத்தை அடைந்தோம்.

“நான் உண்மையா பேசணுமா? அல்லது சமூகம் ஏத்துக்கற மாதிரி பேசணுமா”

“வெளிப்படையாவே சொல்லுங்க”

“சரி சொல்றேன். இவங்க ரெண்டு பேரும் என் கூட வேலை செய்றவங்க”. படிப்பதற்கான மேசையில் உடன் உட்கார்ந்திருந்த இரண்டு இளைஞர்களை சுட்டிக் காட்டுகிறார்.

“நான் இவங்கள கூட்டிகிட்டு போய் எங்க வீட்டில இருந்து சேர்ந்து படிக்க முடியுமா? வீட்ல மாமியார் விடுவாங்களா? பக்கத்து வீட்டுக்காரங்க என்ன சொல்வாங்க? இதையெல்லாம் யோசிச்சுதான் நடந்துக்கணும். இதுதான் பெண்களோட நிலைமை”

அவர் சிந்துஜா. சென்னை பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தின் எதிரில் போடப்பட்டிருந்த கூடாரத்தில் 2 இளைஞர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

“நான் சொந்தமா தொழில் செய்றேன். இப்ப சட்டக் கல்வி படிக்கிறேன். எனக்கே இந்த நிலைமைன்னா மத்த பொண்ணுங்கள பத்தி யோசிச்சிக்கோங்க”. “பேரு சொல்றேன், ஃபோட்டோ எல்லாம் வேண்டாம், பிளீஸ்” என்று தனது சகாக்களுடன் படிப்பைத் தொடர்ந்தார்.

சென்னை பல்கலைக் கழகம்
“நான் உண்மையா பேசணுமா? அல்லது சமூகம் ஏத்துக்கற மாதிரி பேசணுமா”

“முன்ன விட பல வகையில முன்னேறியிருக்கோம். எங்க அம்மா காலத்தில எல்லாம், படிக்கக் கூட விட மாட்டாங்களாம். இப்ப படிக்க வர முடியுது. இன்னைக்கு பாருங்க, லீவு நாளானாலும் வீட்ல சொல்லிட்டு வந்து இங்க உக்காந்து படிச்சிட்டு இருக்கோம். அடுத்த தலைமுறைல இன்னும் மாறலாம். ஆனா,  இருட்டுறதுக்கு முன்னால வீட்டுக்கு போயிடணும். சில ஏரியால எல்லாம் தனியா போகவே முடியாது. நம்மதான் பத்திரமா இருந்துக்கணும்” என்று பெண்களின் பாதுகாப்பற்ற நிலையை இரு மாணவிகள் வெளிப்படுத்தினர்.

“அதைப் பத்தி எல்லாம் சொல்லத் தெரியாது.” “அய்யய்யோ ஃபோட்டோ எல்லாம் வேணாங்க. பேரு சொல்ல வேணாம்”, “இது பத்தி என்ன சொல்றதுன்னு தெரியலையே” “ஏதாவது சொல்லி சீக்கிரம் அனுப்புடீ” என்று தப்பித்தல்களுமாக பல உரையாடல்களுக்கு மத்தியில் சில எதிர்ப்புக் குரல்களும் வெளிப்பட்டன.

சென்னை பல்கலைக் கழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கும் ரேவதி, “சமீப காலமாக அதிகரித்திருக்கும் வல்லுறவுகளை எல்லா பெண்களும் சேர்ந்து எதிர்க்க வேண்டும். நமக்கு என்ன வந்தது என்று ஒதுங்கக் கூடாது. காதலித்தாள் என்பதற்காக தம் மகளையே அப்பாக்கள் கொலை செய்வது சகிக்க முடியாத காட்டுமிராண்டித்தனம். இப்படி எல்லாம் நடக்கறதுக்கு ஒட்டுமொத்த சமூகத்தைத்தான் குற்றம் சொல்லணும்.” என்கிறார்.

“இப்பல்லாம் நிறைய மாறியிருக்குதான், அதுக்காக சாதி மாறில்லாம் கல்யாணம் செய்ய முடியுமா. எப்படி பொண்ண வளர்த்திருக்காங்கன்னு திட்டுவாங்க. சொந்தக்காரங்க யாரும் நம்ம வீட்டுக்கு வர மாட்டாங்க” – என்றார் கணவருடன் உட்கார்ந்திருந்த மீனாட்சி.

சென்னை பல்கலை மாணவியர்
இத எப்படி சரி பண்ணலாம்னு ஈசியா கேட்டுடலாம். பதில் அவ்வளவு ஈசியா பதில் சொல்லிட முடியுமா

பி.பி.ஏ படிக்கும் ஆனந்தி – “ஆண்களோட நடத்தைய வெறுக்கறேன். ‘சுதந்திரமா’ பொது இடங்கள்ல எல்லாம் தப்பா நடந்துக்கறாங்க. அவங்க வீட்டில நடக்கறது வேறயா இருக்கும். வெளிய வரும்போது, ‘நம்ம இஷ்டப்படி நடக்கலாம். யார் பார்க்கப் போறாங்க’ன்னு நடந்துக்கறாங்க. இத எப்படி சரி பண்ணலாம்னு ஈசியா கேட்டுடலாம். பதில் அவ்வளவு ஈசியா பதில் சொல்லிட முடியுமா.”

எம்.சி.ஏ படிக்கும் காயத்ரி, “குழந்தைகள் உழைப்பு, பெண்கள் மீதான வன்முறைதான் நான் வெறுக்கற விஷயம். இதற்காக போலீஸ் அதிக பாதுகாப்பு கொடுக்கணும். பெண் போலீஸ் அதிகப்படுத்தணும். போலீசும் குற்றவாளியா இருக்கறது உண்மைதான். பெண்கள் வெளிய போற இடத்தில தனிப்பட்ட விபரங்கள யாருக்கும் சொல்லக் கூடாது. முன்பின் தெரியாதவங்கதான் நிறைய பாதிக்கிறாங்க. என்ன பண்றதுன்னே தெரியல..” என்று கையறு நிலையை வெளிப்படுத்தினார்.

எம்.காம் இறுதியாண்டு சரவணபிரியா, “டெல்லி பாலியல் வன்முறையால பசங்களை பிடிக்காமலே போகுது. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும். எல்லார் கூடவும் போலீஸ் போட முடியாது. பசங்க பொண்ணுங்கள பார்க்கிற பார்வை மாறணும். அவங்கள தாக்கறதுக்கான உரிமை பெண்களுக்கு வேணும்.

சென்னை பல்கலை மாணவியர்
நாங்களும் கத்தி வைச்சிருக்கோம். எங்களுக்கு எதாவது பிரச்சனை வந்திச்சின்னா நாங்க தாக்குவோம்.

தப்பா நினைச்சுக்கக் கூடாது, நாங்களும் கத்தி வைச்சிருக்கோம். எங்களுக்கு எதாவது பிரச்சனை வந்திச்சின்னா நாங்க தாக்குவோம். அவங்களும் போய் வெளில சொல்ல முடியாதுல்ல.

தொலைக்காட்சில ஆபாச பாடல்களை எல்லாம் தடை பண்ணணும். சினிமால ஆபாசமா வர்றத தடுக்கணும். வெளிநாட்டு கலாச்சாரம் உள்ள வர்றதாலதான் பிரச்சனை. டெல்லி சம்பவத்தில கூட இன்னும் தண்டனை கொடுக்கல. காதல் பண்றதாலேயே மகளை கொன்ன அப்பனுங்கள கொல்லணும். இதுக்கெல்லாம் உடனுக்குடன் தண்டனை வழங்கறதுதான் தீர்வு” என்று தனக்கு தெரிந்த தீர்வை முன்வைத்தார்.

பி.பி.ஏ படிக்கும் டெய்சி, “குடிக்கிறவங்க மேலதான் எனக்கு வெறுப்பு. பொண்ணுங்கள ஒரு மாதிரி பார்க்கிறது அடுத்த விஷயம். பசங்கள விட வயசானவங்க மோசமா இருக்காங்க.” என்றார்.

அரபி ஆசிரியர்
பெண்கள் மீதே பொறுப்பு

“ஒரு பெண் என்பவள் தாய் அந்தஸ்தில் இருப்பவள், அதை ஆண்கள் உணர வேண்டும். பெண்கள் ஒழுங்கான ஆடை அணிய வேண்டும். பெண்கள் தேவையில்லாம உடலை காண்பிக்கக் கூடாது. ஆண்கள் பெண்கள் மீது மரியாதையான பார்வை வைக்க பழகணும்.” என்று பெண்கள் மீதே பொறுப்பை சுமத்தினார் குல்ஃபினா பர்வீன் என்ற அரபி ஆசிரியர்.

கோவையைச் சேர்ந்த பொறியியல் பட்டம் படித்த தீபிகா, “பாலியல் தொந்தரவுதான் பிரச்சனையா இருக்கு. அந்த பிரச்சனை இல்லாம இருக்கணும். நம்ப வீட்டில எப்படி நடந்துக்கறோமோ அப்படித்தான் பொது இடத்திலயும் நடந்துக்கணும்னு ஆண்கள் நினைச்சுக்கணும்.” என்று சொன்னார்.

கோவை பொறியியல் மாணவி
நம்ப வீட்டில எப்படி நடந்துக்கறோமோ அப்படித்தான் பொது இடத்திலயும் நடந்துக்கணும்னு ஆண்கள் நினைச்சுக்கணும்

இப்படி படித்த மாணவிகள் தமது பாதுகாப்பின்மையையும், தமக்கு உரிமைகள் மறுக்கப்படுவதையும் எதிர்த்து பேசவும், நொந்து கொள்ளவும் செய்ய அதே கடற்கரை சாலையில் ஜூஸ் விற்றுக் கொண்டிருக்கும் அம்மா, “பொண்ணு நினைச்சா என்ன வேணாலும் செய்யலாம். காலையில 11 மணிக்கு கடை திறந்தா சாயங்காலம் 7 மணி வரை கடை போட்டிருப்பேன். நான் என் கொழந்தைகளுக்காகத்தான் எல்லாம் பாடுபடறேன்.” என்கிறார்.

பழச்சாறு கடை நட்த்துபவர்
கொழந்தைகளுக்காகத்தான் எல்லாம் பாடுபடறேன்

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் சுங்குவார்ச்சத்திரம், திருப்பந்தியூர் கிராமம். மல்லிகை, ரோஜா, குறிஞ்சி, செந்தாமரை, செம்பருத்தி, கஸ்தூரி, செண்பகம், மனோரஞ்சிதம், தாழாம்பூ என்று 17 மகளிர் சுய உதவி குழுக்களிலிருந்து செல்வி, வாசுகி, துளசி, லட்சுமி, சாந்தா, தேவகி, முனியம்மா, முத்து, பவானி, அமுதா, சுந்தரி ஆகியோர் ஒரு கூட்டத்துக்கு வந்து விட்டு ஊருக்குத் திரும்புகிறார்கள்.

சுயஉதவிக் குழு பெண்கள்
சுய உதவிக் குழு அரசியல்

“ஆம்பளைங்க தண்ணி போடறதுதான் பெரிய பிரச்சனையா இருக்கு. அத நிறுத்தச் சொல்லுங்க சார். நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம். குடும்பத்தில நிறைய சண்டை.

எங்க ஊர்ல சாராயம் காய்ச்சிறதை எடுத்தாந்து கோயிலாண்ட போட்டு போலீசுக்கு தகவல் கொடுத்துட்டு காத்திருந்தோம். காவலுக்கு இருந்தவங்க எதுக்கு இந்த கருமம்ணு சாராயத்தை தரையில் கொட்டிட்டாங்க. போலீஸ்காரன் வந்து, எங்க ஆதாரம்ணுன்னு எங்களையே கேட்கறான்.

எந்த ஒரு பிரச்சனைக்கு நாங்க பேச வந்தாலும், நீங்க பொம்பளைங்க ஏன் பேசறீங்கன்னு கேட்கறாங்க. கான்வென்டுக்கு 4 வயசு கொழந்தைய அனுப்பறோம். டிரைவரே குழந்தைய சீரழிச்சிட்டான்னு நியூஸ் வருது. பொம்பள பசங்க பயந்துகிட்டுதான் வெளிய போறாங்க”

“இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையே மகளிர் தினத்தன்று என்ன செய்வீர்கள்” என்று கேட்டோம்.

“மகளிர் தினத்த ஒட்டி சுத்துப் புறத்த சுத்தமா வச்சிக்கிறது எப்படி, கேன்சர் வராம பார்த்துக்கறது எப்படின்னு இன்னைக்கு கிளாஸ் எடுத்தாங்க. சாந்தோம் சர்ச்ல, கான்சர் பத்தி ஒரு டாக்டர் பேசினாங்க. சுத்துச் சூழல பத்தி பேசினாங்க, மரம் நடுறத பத்தி பேசினாங்க.

ஒவ்வொரு குழுவில இருந்தும் 2 பேரு வந்திருக்கோம். நாளைக்குதான் மகளிர் தினம். சாக்லேட் கொடுத்து இங்க நடந்ததை எல்லாம் சொல்ல மீட்டிங் போடுவோம். நாளைக்கு மீட்டிங் போட்டு சொல்லுவோம். கான்சர் விழிப்புணர்வு பத்தி பேசுவோம். செயல் விளக்கமா போட்டுக் காண்பிப்போம்.” என்று பெண்களை பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்பும் சுயஉதவிக் குழு அரசியலையும் புரிய வைத்தார்.

மெரீனா கடற்கரையில் துப்புரவு பணி செய்யும் தொழிலாளிகளிடம் பேசினோம்.
sanitary-workers-3

“இங்கயும் வேல செய்யணும். காலையில எழுந்தவுடன் ஒரு ஆபிஸ் படி பெருக்கணும். ஒரு ஆபிஸ் பெருக்கி துடைக்கணும். நம்ம வாழ்க்க முடிஞ்சி போச்சி. படிக்கிற குழந்தை வாழ்க்கை வீணா போகக் கூடாதுல்ல. இங்க 7 மணி வரைக்கும் பார்ப்போம். இந்த வேலை இல்லைன்ன எங்க கதி அவ்வளவுதான். எங்க கையில காசு இருக்கும் போது ஒருத்தருக்கொருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிப்போம்.

எக்ஸ்போர்ட்டுக்கு போகணும்னா காலைல 10 மணிக்கு போய் சாயங்காலம் வரணும். அந்த சம்பளமும் பத்தாது. இங்க காலையில 6 மணிலருந்து 2 மணி அல்லது 2 மணிலருந்து 10 மணின்னு இருக்குது. காலையில எந்திச்சி சாப்பாடு செய்றோம், வீட்டு வேல செய்றோம், 2 மணிக்கு கிளம்பி வர்றோம்.

ஏண்டா பொண்ணா பொறந்தோம்னு யோசிக்காத நாளே கிடையாது. இதை யோசிச்சி பி.பி அதிகமாகி கீழ மயக்கமாகியே விழுந்திருக்கேன்.

பொண்ணா இருந்து சொல்ல முடியாத கஷ்டம்லாம் இருக்கு. பாலியல் ரீதியான தொந்தரவு இருக்கும். இதே மாதிரி வேற இடத்தில வேல செய்றப்போ தொந்தரவு கொடுத்தாங்க. அதான் இந்த வேலைக்கு வந்தேன். எங்க போனாலும் பொம்பளைங்களுக்கு தொந்தரவு.
sanitary-workers-1இன்னைக்கு ஆபிஸ்ல பெருக்கும்போது கூட நடந்தது. நாலாவது மாடியில இருந்து பெருக்கிகிட்டே வர்றேன், கட கடன்னு படியேறி வர்றாங்க. அப்படியே போயிட்டு, அடுத்த மாடிக்கு போனா அங்கயும் வர்றாங்க. உயிரையும் மானத்தையும் கையில பிடிச்சிகிட்டு வேல செய்றோம்.

ஒரு தடவை ஸ்டீல் பட்டறைல வேல செய்யும் போது வெள்ளிக்கிழமை சம்பளம் கொடுக்க ராத்திரி 10 மணி ஆயிடிச்சி. பஸ்சுக்கு வெயிட் பண்ணிகிட்டு இருக்கும் போது 4 பேரு வந்தாங்க, தகாத முறையில பேசினாங்க. ஆட்டோ கூப்பிட்டு ஏறுங்கறாங்க. ஆட்டோக்காரண்ணன் பேசிகிட்டே, என்கிட்ட “போயிடு”ன்னு கண்ண காட்டினாரு. நான் போறப்ப, அந்த ஆளுங்க பின்னாலயே வந்தாங்க. இரண்டே முடிவு எடுத்தேன். போலீஸ் காரன் யாராவது எதிர்ல வந்தா சொல்லலாம், இல்ல பிரிட்ஜ்ல இருந்து கீழே விழுந்து செத்துடுவோம்னு.

அப்போ வந்த ஒரு அம்மாகிட்ட பேசி, “என்னை தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிங்க”ன்னு கேட்டு அவங்க என் தோளில கை போட்டு நடக்க ஆரம்பிச்சாங்க. அவங்க சொல்லி லாஸ்ட் பஸ்ல ஒரு அண்ணன் கூட வீட்டுக்கு வந்து சேர்த்து விட்டாங்க. பொம்பளையா பொறந்தா எல்லா துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கு.

இதனாலேயே ஒரு இடத்தில வேலைய எங்களால செய்ய முடியல. எங்கனாவது பாதுகாப்பு கிடைக்காதான்னு அங்கங்க இடத்த மாத்திக்கிறோம். பயந்து பயந்து வாழறோம். எத்தனையோ தடவை சாவறதுக்கு முயற்சி பண்ணி, குழந்தைகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அரசாங்கத்த டாஸ்மாக் கடைய மூடச் சொல்லு, நான் குடிக்கிறத நிறுத்தறேங்கறாங்க ஆம்பளைங்க. 7,000 ரூவா சம்பளம் வாங்கிட்டு வீட்டுக்கு 2,000 தரவா, 3,000 தரவான்னு யோசிக்கிறாங்க. மாசம் முழுக்க கடன் வாங்கி குடிச்சிர்றாங்க, சம்பளம் வாங்கினதும் அதை எல்லாம் கொடுத்துட்டு வீட்டுக்கு வெறுங்கையோட வர்றாங்க.

கொழந்தைங்கள எப்படி படிக்க வைக்கிறது சொல்லு. சமைக்கிறதுக்கு 300 ரூவா ஆகுது. நாங்கதான் வீட்லயும் வேல பார்த்துட்டு, வெளியிலயும் சொமக்கறோம். இந்த டாஸ்மாக்க மூடுனா பல குடும்பங்க பொழைக்கும் சார். அதைச் செய்யணும் சார். இருக்கிற கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்கணும்ல.

எங்க வீட்டுக்காரர் வேலைக்கு போறதில்ல. நான்தான் வேலைக்குப் போய் குடும்பத்த பார்த்துக்கணும். என் பையன் படிக்கிறான். குடும்ப கஷ்டத்த பார்த்து அவனும் வேலைக்கு போறான்.

வீட்டுக்காரரு குடிக்கு காசு கொடுத்தாலும், கொடுக்காட்டாலும் குடிப்பாரு. குடிக்கிறதுக்கு காசு வேண்டும். சாப்பாட்டுக்கு காசு இல்லாட்டாலும் குடி தினமும் வேண்டும். எங்கனா மூட்டை தூக்கப் போனா அந்தக் காச வீட்டில கொடுக்க மாட்டாரு. குடிச்சிட்டு சாப்பாட்டுக்கு வந்து சண்ட போடுவாரு. குடிக்கிறதாலதான பிரச்சனை.

நாங்க என்ன பண்றது. உயிரைத்தான் விடணும். கெவர்ன்மென்ட்தான் வைன் ஷாப்பை நடத்துறாங்க. குடி வருமானத்திலதான் இலவசம்னு சொல்றாங்க. எங்களுக்கு அப்படி என்ன இலவசமா தர்றாங்கன்னு எங்களுக்கு தெரியல. நாங்க எல்லாத்துக்கும் வரி கட்றோம்ல, அதெல்லாம் எங்க போகுது. அவங்களுக்குத்தான் அவங்க காசு எல்லாம் கேக்கறாங்க. எல்லா சொத்தும் அவங்க பேர்ல இருக்குது.

குடிய ஒழிக்க ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணியாச்சு. ஒழிக்கணும். சின்ன பசங்க குடிக்குதுங்க. மொதல்ல இந்த டாஸ்மாக்க ஒழிச்சுக் கட்டணும் சார். உள்ள போய் நாலைஞ்சு பாட்டில ஒடைச்சாத்தான் இதை நிறுத்த முடியும்.”

பல்கலை மாணவிகளிடமிருந்து ஆரம்பித்த நேர்காணல் நகர சுத்தி தொழிலாளிகளின் வார்த்தைகளுடன் முடிவடைந்தது. மகளிர் தினத்தின் சேதி என்ன என்பதை சுருக்கிச் சொன்னால் குடி, பாலியல் வன்முறை, பயந்து வாழும் பெண்கள் எனலாம். என்ன செய்யலாம்?

வினவு செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க