privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைபெண்குருதியில் மலர்ந்த மகளிர் தினம் - திருச்சி

குருதியில் மலர்ந்த மகளிர் தினம் – திருச்சி

-

திருச்சி

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் – 8

அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி திருச்சி செவனா ஹோட்டலில், பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் அரங்குக் கூட்டம் நடைபெற்றது.

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8கூட்டத்திற்கு தலைமை வகித்த பெண்கள் விடுதலை முன்னணியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் அம்சவள்ளி பேசும் போது

“இன்று மகளிர் தினம் என்பதையே காதலர்தினம் போல பெண்களுக்கு ஏதோ ஒரு பரிசு கொடுத்து வாழ்த்து கூறுவது என்பது போலவும் கோலப்போட்டி, சமையல் போட்டி, அழகி போட்டி என பெண்களின் சிந்தனை திட்டமிட்டு திசை திருப்பப்படுள்ளது.

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8ஆனால் உண்மையில் மார்ச் 8 என்பது 10 மணி நேர வேலைக்காகவும், வாக்குரிமைக்காகவும், உழைப்புக்கேற்ற கூலிக்காகவும் உழைக்கும் பெண்கள் ரத்தம் சிந்தி வென்றெடுத்த இந்த உரிமைகள்தான் இன்று பல நாடுகளில் ஏற்றுக் கொண்டு சட்டமாக்கப்பட்டுள்ளது,

ஆனால் போராடி பெற்ற அந்த உரிமைகள் இன்று பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது, திருப்பூர் ஈரோடு போன்ற நகரங்களில் வேலைசெய்யும் இளம் பெண்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். திருச்சி போன்ற நகரங்களில் ஜவுளிக் கடையில் வேலை செய்யும் பெண்களின் அதிக நேர உழைப்பை சுரண்டியும் வேலைக்கேற்ற கூலியுமின்றி அடக்கப்படுகின்றனர்.

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8பெண்களின் மீதான அடக்குமுறைகள் வெளிப்படும் இடங்களிலெல்லாம் எமது பெண்கள் விடுதலை முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது” என்று பேசி,  டாஸ்மாக் சாராயக் கடைகளுக்கெதிரான தொடர் பிரச்சாரம், பெண்கள் மீதான பாலியல் வன்முறைக் கெதிரான இயக்கம், கந்துவட்டி கும்பலின் அராஜகத்துக் கெதிராக களத்தில் நின்று போராடிய அனுபவத்தை கூறினார்.

பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி மாவட்ட பொருளாளர், தோழர் பவானி பேசும் போது,

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் பல்வேறு இயக்கங்கள் எடுக்கப்படும் போது, பல தரப்பு பெண்களிடம் செல்கிறோம். பல குடும்பப் பெண்கள் தன் குடும்பம், வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு என இருக்கின்றனர். சமூகத்தின் மீது அக்கறை செலுத்துவதில்லை, அதைப்பற்றி நாம் பேசினாலும் தமக்கு விருப்பமில்லை என ஒதுங்குவது, கல்லூரி பெண்களிடம் கேட்டால் சிறுமிகள் முதல் பெண்கள் வரை நடக்கக் கூடிய பாலியல் வன்முறை பற்றி கூட தெரியாது என கூறுவது ஒரு கசப்பான யதார்த்தம். படித்த பெண்கள் கூட சமூக அக்கறையற்று இருப்பதற்க்கு காரணம், அரசே திட்டமிட்டு பெண்கள் அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே நுகர்வு வெறியையும், தொலைக்காட்சி மோகத்தையும் உருவாக்கி வருகிறது. இதைமாற்ற அமைப்பாய் சேர்ந்து போராடுவதே தீர்வு” என்றார்.

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8மனித உரிமைபாதுகாப்பு மைய தோழர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மீனாட்சி

“பெண்களுக்கு சட்டம் தான் பாதுகாப்பு என்கின்றனர். ஆனால் நிர்பயா வழக்கை எடுத்துக் கொண்டால் மக்கள் கடுமையான போராட்டம் நடத்திய பிறகுதான் குற்றவாளிக்கு தண்டனை என்பதே நிறைவேற்றப்பட்டது.

ஆண், பெண் எனும் பாகுபாடு இருக்கக்கூடாது என சட்டம் சொல்வது, நடைமுறையில் சாத்தியமாகியுள்ளதா?

பெண் கர்ப்பிணியாய் இருக்கும் போது அதிகமான வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது, இரவு நேரத்தில் வேலை செய்யக் கூடாது என சட்டம் இருக்ந்தாலும், நடைமுறையில் மீறப்படுகிறது. பெண்கள் 3 தடவைக்கு மேல கழிவறை செல்லக் கூடாது என முதலாளிகள் கொடுமைப்படுத்துவதற்கு சாதகமாகவே சட்டம் வளைகிறது. வழக்கறிஞர்கள், நீதிபதிகளிலும் கூடபாலியல் தொல்லை கொடுப்பவர்கள் உள்ளனர்.

சட்டங்கள் பெண்களுக்கான பாதுகாப்பை வழங்காது, அமைப்பாய் சேர்ந்து போராடுவதே தீர்வு”

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8மக்கள் கலை இலக்கியக் கழக சென்னை தோழர். கவிஞர் துரை.சண்முகம்

“பெண்கள் அன்றைக்கே போராடத்தை துவங்கிவிட்டனர், சோத்துக்காக மட்டுமல்ல தமது அனைத்து உரிமைகளுக்கும் சேர்த்தே போராடினர்.

முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டாமல் பெண்களுக்கு வாழ்க்கையில்லை, அதை நடைமுறையில் நிரூபித்தது ரசிய சோசலிசப் புரட்சி. பொதுவுடமை அகிலத்திலேயே பெண் பிரதி நிதிகளை தேர்ந்தெடுத்தக்கப்பட்டு, சமூகம் மாற ஆண்களோடு இணைந்து போராட பெண்கள் தயார் என தோழர் கிளாரா ஜெட்கின் அறிவித்தார்.

இன்றைய சூழலில் பெண்கள் இரவு முழுவதும் வேலை, மூலதனத்துக்காக உழைப்பை உறிஞ்சும் முதலாளிகள், பெட்ரோல் பங்கில் வேலை செய்பவர்கள் சோறு தின்னக் கூட நேரமில்லாத நிலை, வீட்டை விட்டு, குடும்பத்தைவிட்டு வெளியே சென்று தங்கி வேலை செய்யும் பாதுகாப்பற்ற நிலைமை என்பது இருக்கிறது. சுமங்கலி திட்டம், பாலியல் ரீதியாக துன்புறுத்தல், வயிற்றை கழுவதற்காக கடுமையான வேலைக்கு செல்லும் நிலையில் பெண்கள் உள்ளனர்.

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8உப்பளத்தில் வேலை செய்து பெண்கள் கை அறுபட்டு புண்ணாகி சோறு சாப்பிடக் கூட முடியாத அளவு துன்பம் உண்டு. இந்த நிலைமை குறித்து ஒரு பெண் கூறும்போது, உப்பளக்காரனுக்கு கட்டிக்கொடுத்த என் அருமை அம்மாவே, நான் இறந்தால் உடனே ஓடிவராதே, நான் உப்பிலேயே இருப்பதால் என் சவம் கெட்டுவிடாது என்று உணர்த்தியிருக்கிறார். இந்த சொற்கள் ஒவ்வொருவரையும் சிறிது நேரம் கண்ணில் ஈரம் கசிய வைத்தது,

சோவியத்தில் பெண்ணை உடலாலும், மூளையாலும் உழைப்பாலும் சமமான ஆரோக்கியமான ஒரு மனுசியாக உயர்த்தி ஏற்றம் பெற்றார்கள். இங்கே பெண்கள் சாமியார்களிடம் சென்று ஏமாந்து உடலையும் உயிரையும் பறிகொடுத்தது இருக்கிறது. சமீபத்திய சான்று குற்றவாளிகள் கூடாரமான அரவிந்தர் ஆசிரமம்.

ஆகவே ஓட்டு மொத்த கட்டமைப்பும் அரசு, நீதிமன்றம், காவல்துறை அனைத்தும் தகர்த்து எறியாமல், இச் சமூகத்தில் தீர்வு தேடுவது அப்பாவித்தனமானது, எனவே, புரட்சியை நோக்கி பயணிப்போம் என சூளுறைத்தார்.

நிகழ்ச்சியின் நடுவே, சட்டக்கல்லூரி மாணவியின் சிலம்பாட்டம், இளந்தோழர்களின் கவிதை வரிகள், புரட்சிகர பாடல்கள் என புதியவர்கள் தமது பங்களிப்பை வழங்கினர்.

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8ம.க.இ.க மையக் கலைக் குழுவினரின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8ஆணாத்திக்கத்தின் வெளிப்பாடுகள், ஒவ்வொருவர் வீட்டிலும் அன்றாடம் சந்திக்கும் சூழலை பாடல் மூலமாக உணர்வூட்டினர்.

இறுதியாக பெ.வி.மு தோழர் ஜெயமணி நன்றிஉரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8இந்த அரங்குக் கூட்டத்தை ஒட்டி கவிஞர் தோழர் துரை சண்முகத்தின் பெண்விடுதலைக்கு விதையூன்றும் வரிகளுடன் 20 ஆயிரம் பிரசுரங்கள் 600 சுவரொட்டிகள் , 30 பிளக்ஸ் சுவற்றில் ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டது.

கல்லூரி பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடகத்துறையினர், பிரமுகர்கள், அரசு அலுவலக ஊழியர்கள், போன்ற அறிவுத் துறையினர் இக்கூட்டத்திற்கு வந்து நிறைவுடன் வாழ்த்தினர். நமது பிரச்சார முயற்சியின் வெற்றியாக நிறைய புதியவர்கள் வந்தனர்.

குருதியில் மலர்ந்த மகளிர் தினம், மார்ச் - 8வீட்டில் மனைவியிடம் ஆணாதிக்க தன்மையை வெளிப்படுத்துபவர்களிடம் இந்த கூட்டம் மூலம் ஒரு குற்ற உணர்வை எற்படுத்தினோம் என்றால் அது மிகையல்ல.

ஆயினும் இது ஆணை மட்டும் திட்டித் தீர்க்கும் கூட்டமோ, பெண்ணை அரவணைத்து செல்லும் கூட்டமோ அல்ல. ஆண், பெண் இரு பாலாரையும் சேர்த்து கட்டிப் போட்டு வதைக்கும்  மறுகாலனியாக்க கொடுங்கரத்தை ஒடித்து ஒரு சேர போராட்டப் பாதையில் கரம் கோர்க்கும் நிகழ்வாக இந்த கூட்டம் அமைந்தது.

தகவல்:

பெண்கள் விடுதலை முன்னணி,
திருச்சி

வேலூரில் உழைக்கும் மகளிர் தினம்!

“வரலாற்றில் எல்லா இடங்களிலும் பெண்கள் தமது குழந்தைகளைப் பராமரித்தனர்.  கால்நடைகளில் பால் கறந்தனர், வயல்களில் உழவு வேலை செய்தனர், துணிகளை வெளுத்தனர், ரொட்டி சுட்டனர், வீட்டைச் சுத்தம் செய்தனர், துணிகளைத் தைத்தனர், நோயுற்றவர்களைப் பராமரித்தனர், மரணப் படுக்கையிலிருந்தவர்களின் அருகில் அமர்ந்து கண்ணீர் வடித்தனர், இறந்தவர்களைப்  புதைத்தனர்; பெண்களின்  இந்த அரும் பணிகள் இன்றும் உலகில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன”  – ரோஸலிண்ட் மைல்ஸ்.

பெண்கள் என்னதான் தங்களின் உழைப்பை பிறர் நலனுக்காக செலுத்தினாலும் சமூகத்தில் அவர்களுக்கான சமஉரிமை இன்னமும் கிடைத்த பாடில்லை. பெண்களுக்கான சமஉரிமை கிடைக்க வேண்டும் என விழைகின்ற ஒவ்வொரும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகையதொரு முயற்சி மக்கள் கலை இலக்கியக் கழகம வேலூர் கிளையின் சார்பாக மேற்கொள்ளப்பட்டது.

உழைக்கும் மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி அன்று பெண்கள் மட்டுமே பங்கேற்ற அறைக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வீடு வீடாகச் சென்று முதல் நாளே அழைப்பு விடுக்கப்பட்டது.

“உழைக்கும் மகளிர் தினம் கொண்டாட்ட நாள் அல்ல; அது ஒரு போராட்ட நாள். இந்நாளைப் பற்றி பெண்கள் அனைவரும் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்” என கூட்டத்திற்குத் தலைமை ஏற்ற தோழர் விஜயலட்சுமி கேட்டுக் கொண்டார்.

“பல்வேறு கட்சிகள் ஆண்-பெண் சமத்துவம் பற்றி பேசினாலும் அக்கட்சிகளிலேயே பெண்கள் பாகுபாடாக நடத்தப்படுவதும், தற்போதைய சூழலில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பதும், இன்றைய அரசும் சட்டங்களும் பணக்காரர்களை பாதுகாக்க துணை புரிவதும் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கின்றது” என தோழர் ஜெயா தனது உரையில் பதிவு செய்தார்.

“இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வேன் என வாக்குறுதி கொடுத்து பிரதமரான மோடியின் ஆட்சியில் பெண்கள் மீதான வன்முறைத்தாக்குதல்கள் முன்பை விட அதிகரிக்கவே செய்கின்றன. பாலியல் பலாத்தகாரங்கள் அதிகரித்துள்ளன. நகைக்காக பலர் குறிப்பாக மூதாட்டிகள் படுகொலை செய்யப்படுகின்றனர். குடும்பப் பெண்கள் தனது சொந்த குடும்பத்தினராலேயே வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். காதல் மணம் புரியும் இளம் பெண்கள் சாதி-மத வெறியர்களால் கௌரவக் கொலை செய்யப்படுகின்றனர். மோடி அரசில் இந்துத்துவா சக்திகள் தலைதூக்குவதால் இத்தகைய கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.

பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது பாலியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளதையும், பாலியல் கொடுமைகளைச் செய்வதில் காவல் துறையும் இராணுவமும் முன்னிலையில் இருப்பதையும் வர்மா குழ சுட்டிக் காட்டியிருப்பது இன்றும் தொடர்கிறது.

ஒரு ஆண் பிற பெண்கள் மீது வக்கிர புத்தி உள்ளவனாக, பாலியல் கொடுமை செய்பவனாக, ஆண் அதிக்கச் சிந்தனை கொண்டவனாக மாறுவதற்குமான அடிப்படை இன்றைய சமூக அமைப்பே காரணமாக இருக்கிறது.

பெண்கள் நாட்டின் கண்கள் எனக்கூறிக்கொண்டே கண்போல வளர்த்த மகள் வேற்று சாதிக்காரனை காதலித்ததற்காக ஒரு தந்தையே தனது மகளை கௌரவக் கொலை செய்வதற்கும் இன்றைய சாதிய சமூக அமைப்பே காரணமாக இருக்கின்றது.

இந்தியாவில் பெண்கள் நிலை மிக மோசமாக இருப்பதாகவும் அவர்களின் உணவு, கல்வி உள்ளிட்ட தேவைகளை அங்கீகரிப்பதில் இந்தியச் சமூகம் முனைப்பு காட்டாமல் இருப்பதாக ஜி 20 நாடுகள் மாநாட்டின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதும், நிர்பயா படுகொலையைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட “இந்தியாவின் மகள்” என்கிற ஆவணப்படத்தை இந்திய அரசு தடை செய்திருப்பதும் இந்தியாவின் நிலையை உறுதி செய்வதாகவே கருத வேண்டியுள்ளது.

உலக மயத்தின் விளைவுகள் கடுமையாகி வரும் இன்றைய சூழலில் பெண்கள் மீதான தாக்குதல்கள் மேலும் அதிகரித்து வருகின்றன.

எப்படி அன்று ரசியாவில் பெண்களுக்கு சம உரிமையை சோசலிச அரசு உறுதி செய்ததோ அதுபோன்றதொரு நிலைமை இந்தியாவில் வந்தால்தான் பெண்கள் தங்களுக்கான சமஉரிமையைப் பெறமுடியும்.

அத்தகைதொரு சமூகப்புரட்சிக்காக போராடும் போதே பெண்கள் தாங்கள் சமத்துவமாக நடத்தப்படுவதை உணர முடியும். எனவே பெண்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு ஆணும் பெண்ணும் சேர்ந்து போராடுவதும் அதற்காக மக்கள் கமிட்டிகளை அமைப்பதும் இன்றைய தேவையாக இருக்கின்றது” என தோழர் வாணி தனது சிறப்புரையில் பெண்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

“இன்றைய உணவு முறையால் சத்தான உணவு இன்மையால் பெண்கள் பலரும் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுவது போன்று அன்று இருந்ததில்லை” என 75 வயது மூதாட்டி தனது கருத்தை முன்வைத்தார்.

“தங்களுக்கு பொருளாதார வசதி இருந்த போதும் தனது கணவர் குடிகாரராக இருப்பதால் நிம்மதியான வாழ்க்கை தனக்கு இல்லை” என்பதை வேதனையோடு 45 வயது பெண் தனது சோகத்தை பகிர்ந்து கொண்டார்.

“ஆண் பிள்ளைகள் இருவர் தனக்கு இருந்த போதும் அவர்கள் சீரழிவுக்கு அடிமையாகிவிட்டதால் தன்னால் தனது மகன்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருப்பதை” மற்றொரு பெண் பதிவு செய்தார்.

“கூலி வேலையில் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்க்கையை நடத்தினாலும் ஏதோ சிறப்பாக வாழ்வதைப் போன்று ஒரு போலியான வாழ்க்கையை நடத்துவதாகவும் அதனால் பல்வேறு இன்னல்களுக்கு ஆட்படுவதாகவும்” மற்றொரு பெண் தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

பெண்கள் தங்களுக்கான பிரச்சனைகளிலிருந்து விடுபட வேண்டுமானால் அவர்கள் தங்களுக்கான விடிவை மட்டும் தனித்தனியாக தேடிக்கொள்ள முடியாது; மாறாக தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இச்சமூகத்தை மாற்றி அமைப்பதற்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே தங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கும் வழிகாண முடியும் என்பதை உணரும் விதமாக இவ்விழா அமைந்தது.

நிகழ்வின் இடையிடையே “பிள்ளைக் கறி தின்னும் அரசை….”, “இந்து என்று சொல்லாதே! பார்ப்பான் பின்னே செல்லாதே…..”, “தினம் சாதி வெறியிலே……..” போன்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடல்கள் பாடப்பட்ட போது பார்வையாளர் உற்சாகமடைந்தனர்.

தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
வேலூர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க