privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்டிவிஎஸ் ஐயங்காரின் ஆக்சில் இந்தியாவுக்கு ஆப்பு

டிவிஎஸ் ஐயங்காரின் ஆக்சில் இந்தியாவுக்கு ஆப்பு

-

14 பேர் சஸ்பென்சனை விலக்கிக் கொண்ட Axles India நிறுவனம்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கு அருகில் டி.வி.எஸ் குழுமத்தின் கனரக வாகனங்களுக்கு பின் அச்சு இருப்பகம் (Rear Axle Housing) தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது.

axle-india1983-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆக்சில்ஸ் இந்தியா நிறுவனம் திருப்பெரும்புதூரிலும் ஒரு ஆலையை இயக்கி வருகிறது. இந்தியாவில் டாடா, அசோக் லேலண்ட், வால்வோ ஐச்சர், டானா இந்தியா, சுவராஜ் மாஸ்தா, மகிந்த்ரா, டைம்லர் இந்தியா போன்ற நிறுவனங்களுக்கும், அமெரிக்காவின் டானா நிறுவனத்துக்கும் பொருட்களை உற்பத்தி செய்து அனுப்பி வருகிறது.

செய்யாறு ஆலையில் பெரும்பான்மை தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள பிழைப்புவாத சங்கமான ஐ.என்.டி.யு.சி (I.N.T.U.C)-யில் இருந்து விலகி புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில்  (பு.ஜ.தொ.மு – NDLF) 2009-ம் ஆண்டு மே மாதத்தில் இணைந்தனர்.

பதறிப்போன நிர்வாகம் தொழிலாளர்களை மிரட்டி மீண்டும் ஐ.என்.டி.யு.சி-யில் இணைக்கும் வேலையைச் செய்தது. ஆனால் 25 நிரந்தரத் தொழிலாளர்கள் பயப்படாமல் துணிச்சலுடன் நிர்வாகத்தின் மிரட்டலை எதிர்கொண்டனர். இதன் காரணமாக சங்க முன்னணியாளர்கள் 6 பேரை பணிநீக்கம் செய்து தனது ஆண்டைத்தனத்தை வெளிக்காட்டியது நிர்வாகம்.

பணிநீக்கத்தை சட்ட ரீதியாக எதிர்கொண்டு வரும் தொழிலாளர்கள், ஆலையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த, நிரந்தரம் செய்யப்படாமல்  தொழில் பழகுநர்களாக (அப்ரண்டீஸ்) வேலை செய்து வந்த 100-க்கும் மேற்பட்டவர்களை ஆட்குறைப்பு செய்த போது, அது சட்ட ரீதியாக தவறு என தொழிலாளர்களுக்கு விளக்கினர். அதை அங்கீகரித்த தொழில் பழகுநர்  தொழிலாளிகள் பு.ஜ.தொ.மு-வில் இணைந்தனர்.

அதன் பிறகு,  அந்த தொழில் பழகுநர்  தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்தாலும், தொழிலாளர் ஒற்றுமையை சகித்துக் கொள்ள முடியாத நிர்வாகம், தொழிலாளர்களை ஜாம்ஷெட்பூர், பிதாம்பூர் ஆகிய இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்தது. அதை எதிர்கொண்டு முறியடித்தனர் தொழிலாளர்கள்.

மேலும், ஆலை சார்ந்த பகுதி கிராமங்களில் பிரச்சாரம் செய்வது, தெருமுனைக்கூட்டம் நடத்துவது என்ற வேலைகளையும் தொடர்ச்சியாக தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஆலை சார்ந்த கிராமங்களில் நிர்வாகம் அம்பலப்பட்டு போயுள்ளது.

இந்நிலையில் ஜி.எஸ்.எச் (GSH) தொழிலாளர்களுக்கு ஆதரவாக பு.ஜ.தொ.மு ஆகஸ்ட் 15 அன்று நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு தோள் கொடுத்தனர் ஆக்சில்ஸ் இந்தியா தொழிலாளிகள் 14 பேர். இதுதான் தருணம் என்று கருதிய நிர்வாகம் 14 பேரை 25-8-15 அன்று தற்காலிக பணிநீக்கம் செய்தது

அன்றிலிருந்து ஆலையில் வேலை செய்யும் பு.ஜ.தொ.மு தொழிலாளிகளிடம், “என்.டி.எல்.எஃப்-ல் இருந்தா உங்களுக்கும் வேலை போய்விடும். ஒழுங்கா ஐ.என்.டி.யு.சி –யில் சேர்ந்து விடு” என பயமுறுத்தி வருகிறது நிர்வாகம். அதற்குத் துணை நின்றனர், கருங்காலிகளான ஐ.என்.டி.யு.சி கிளை நிர்வாகிகள். இந்த பயமுறுத்தலுக்கு 40 பேரில் 10 பேர் மட்டுமே பணிந்தனர். 30 பேர் ’‘வேலையை விட்டு எடுத்துவிடுவேன்-ன்னு சொல்லாதே, முடிந்தால் செய்து பார்’’ என்று நிர்வாகத்தின் முகத்தில் அறையும் விதமாக உறுதியாக நின்றனர்.

இதற்கிடையில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதொழிலாளர்களுக்கு உள்விசாரணை நடைபெற்று வந்தது. “உள்விசாராணை இயற்கை நியாயத்திற்கு உட்பட்டு நடத்தப்படவில்லை” என தொழிலாளர்கள் தரப்பில் வேலூர் தொழிலாளர் அலுவலகம் சமரசம்-2 முன்பாக தொழிற்தாவா எழுப்பப்பட்டது.  அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையாணையும் பெறப்பட்டது. விழி பிதுங்கிய நிர்வாகம், “தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் வழக்கிற்கு குந்தகம் இல்லாமல்  விலக்கிக் கொள்ளப்பட்டது” என்று 09-02-2015 முதல் வேலைக்கு ஆஜராக உத்தரவிட்டது.

இதன் மூலம் 10-02-2015 முதல் உற்சாகமாக வேலைக்கு ஆஜரானார்கள் 14 தொழிலாளிகள். இந்நிகழ்வு, “பு.ஜ.தொ.மு போன்ற புரட்சிகர தொழிற்சங்கத்தில் சேர்ந்து போராடுவதுதான் உரிமைகளை காத்துக் கொள்வதற்கான வழி” என்ற நம்பிக்கையை  மற்ற தொழிலாளர்கள் மத்தியில் விதைத்துள்ளது.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம்