privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்மண்ணைப் பறித்து மக்களைக் கொல்லும் தேசத்துரோகி !

மண்ணைப் பறித்து மக்களைக் கொல்லும் தேசத்துரோகி !

-

தேசத்துரோகி! இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகளை, அவர்களது வாழ்வாதாரமான விளைநிலத்தை, பன்னாட்டு, கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் பிடுங்கிக் கொடுக்கும் மோடியை வேறெப்படி அழைப்பது?

தேச துரோகி மோடி
விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி, இந்த தேசத்துக்கு இழைக்கப்படும் துரோகமன்றி வேறென்ன?

பனியா, மார்வாரி தரகு முதலாளிகளின் எச்சில் காசில் பதவியைக் கைப்பற்றிய மோடி, மே 26-ம் தேதியன்று பிரதமர் நாற்காலியில் அமர்ந்தவுடன், இந்த நிலப்பறி சட்டத்தை இயற்றுவதற்கான வேலைகளைத்தான் தொடங்கியிருக்கிறார். காங்கிரசு கூட்டணி அரசால் 2013-இல் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல், மறுகுடி அமர்வு, மறுவாழ்வுச் சட்டத்தை (Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 – LAAR) திருத்துவதற்காக, மாநில வருவாய்த்துறை அமைச்சர்களின் கூட்டத்தை, ஜூன் 27 அன்றே கூட்டியிருக்கிறது மோடி அரசு. பின்னர் டிசம்பர் 2014 – இல் இதற்கான அவசரச் சட்டம். தற்போது கடும் எதிர்ப்புக்கிடையிலும் அதை நாடாளுமன்றத்தில் நிரந்தர சட்டமாக நிறைவேற்ற முயற்சிக்கிறது மோடி அரசு. இந்தச் சட்டத்தின் தேவை என்ன?

கிராமப்புறத்திலோ, நகர்ப்புறத்திலோ சிறுதொழில் ஒன்றை நடத்த விரும்பும் தொழில்முனைவர் தனக்குத் தேவையான நிலத்தை தனது சொந்த முயற்சியில்தான் வாங்கிக்கொள்கிறார். விற்க விருப்பமில்லாத ஒரு விவசாயியின் நிலத்தை அவர் கட்டாயப்படுத்தி அபகரித்தால் அது குற்றம் என்பதுதான் சட்டத்தின் நிலை. சாலைகள், துறைமுகங்கள், மருத்துவமனைகள் போன்ற சமூகத்தின் பொதுத் தேவைகளுக்காக நிலத்தைக் கையகப்படுத்த வேண்டியிருக்கும்போது, விற்க விருப்பமில்லாதவராயினும் பொதுநன்மை கருதி விற்க வேண்டியிருக்கிறது. சாலைகள் முதல் பொதுத்துறை ஆலைகள் வரையிலானவற்றுக்கு முன்னர் இப்படித்தான் நிலம் கையகப்படுத்தப்பட்டது – அதுவும் ஒரு காலனிய காலச் சட்டத்தின் கீழ். அச்சட்டப்படி பொதுநலனுக்காக நிலம் இழந்த பலர் இன்னமும் நிவாரணம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

தமிழகம் - நிலம் கைப்பற்றல்.
சென்னைக்கு அருகில் கும்மிடிபூண்டி வட்டத்தில் அமைந்துள்ள கண்ணன் கோட்டை கிராமத்தில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி பயிர்களை அழித்து, நிலங்களை கையகப்படுத்தியது தமிழக அரசு.

ஆனால், தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய கடந்த 15, 20 ஆண்டுகளில், கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனையே பொதுநலன் என்று சித்தரித்து, விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் நிலங்களை காலனியச் சட்டத்தின் கீழ் பிடுங்கி அவர்களுக்கு வழங்கத்தொடங்கியது அரசு. மத்திய – மாநில அரசுகள் நடத்திய இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக, நாடெங்கும் மக்கள் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தினர். தொழில் தொடங்கி வேலைவாய்ப்பு தரப்போவதாக கூறிக்கொண்டு பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்துக் கொண்ட அம்பானி, அதானி, டாடா போன்ற தரகு முதலாளிகள், அவற்றை ரியல் எஸ்டேட்டுகளாக்கி விற்றிருப்பதும் வேறு பல முறைகேடுகளும் மறுக்கவியலாதபடி அம்பலமாகின. இதன் விளைவாக வேறு வழியின்றி காங்கிரசு கூட்டணி அரசு புதியதொரு சட்டத்தை (LAAR – 2013) இயற்ற வேண்டியிருந்தது.

இச்சட்டத்தின்படி, ஒரு பகுதியில் தனியார் முதலாளிகள் நிலம் வாங்கு வதாக இருந்தால் நில உடைமையாளர்களில் 80% பேர் விற்கத் தயாராக இருக்கவேண்டும். அரசுத்துறை-தனியார்துறை கூட்டுத் திட்டங்களாக இருந்தால் 70% பேரின் சம்மதம் வேண்டும். அப்பகுதி உள்ளூராட்சி மற்றும் கிராமசபையின் ஒப்புதலைப் பெறவேண்டும். கிராமப்புற நிலங்களுக்கு சந்தை விலையைப் போல 4 மடங்கும், நகர்ப்புற நிலங்களுக்குச் சந்தை விலையைப் போல 2 மடங்கும் ஈட்டுத்தொகை தரப்படவேண்டும்.

கோண்டு இன மக்கள்
மோடி அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த நகலை எரிக்கும் நியம்கிரி பாதுகாப்பு சமிதி என்ற அமைப்பைச் சேர்ந்த கோண்டு பழங்குடியின மக்கள்.

குறிப்பிட்ட பகுதியில் விளைநிலங்களைக் கையகப்படுத்துவதனால் அப்பகுதியில், விவசாயப் பொருளாதாரத்தைச் சார்ந்து வாழும் நிலமற்ற விவசாயிகள், கைவினைஞர்கள், உதிரி தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்படும் வாழ்வாதாரப் பாதிப்பு (social impact assessment) மதிப்பிடப்பட்டு அவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படவேண்டும்.

அப்பகுதியில் சுற்றுச்சூழல் எவ்வளவு பாதிக்கப்படும் (environmental impact assessment) என்பதும், விவசாயத்தின் மூலம் கிடைத்து வந்த வேலைவாய்ப்பு எவ்வளவு, அந்த இடத்தில் தொடங்கப்படும் தொழிலால் கிடைக்கக் கூடிய வேலைவாய்ப்பு எவ்வளவு என்பதும் மதிப்பிடப்பட வேண்டும். ஒரு போகத்துக்கு மேல் விளையும் நிலத்தை, (மிகவும் விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் தவிர) கையகப்படுத்தக் கூடாது. பயன்பாட்டுக்கு 5 ஆண்டுகளுக்குள் கொண்டுவரவில்லையானால், உடைமையாளர் வசமே நிலத்தைத் திருப்பித் தரவேண்டும். இந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஏமாற்றும் அதிகாரிகளுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடரலாம்.

நெடுஞ்சாலை, ரயில்பாதை, அணுசக்தி, இராணுவம் உள்ளிட்ட 13 வகையான அரசின் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தினால், அவற்றுக்கு மேற்கூறிய நிபந்தனைகள் பொருந்தாது என்றும் அச்சட்டம் விதிவிலக்களிக்கிறது.

மக்கள் சொத்தை ஆக்கிரமித்துத் தின்றே ருசி கண்டுவிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இச்சட்டப்படி நிலம் வாங்குவது கட்டுப்படியாகவில்லையாம். இச்சட்டத்தின் கீழ் நிலம் வாங்கக்கூடாது என்று கட்டுப்பாடாக இருந்த முதலாளிகள், ‘செயல்படாத’ மன்மோகன்சிங்கை இறக்கி விட்டு, அந்த இடத்தில் ‘செயல்படும்’ ரவுடியை அமர்த்தினார்கள். உடனே செயல்பட்டு விட்டது மோடி அரசு.

தற்போது மோடி கொண்டுவந்திருக்கும் சட்டம், 13 துறைகளுக்கு காங்கிரசு அரசு அளித்திருந்த விதிவிலக்குகளை “சற்றே” அதிகரிப்பதாக சொல்லிக் கொண்டு, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் விதிவிலக்கு பட்டியலில் கொண்டு வந்து, அதன் மூலம் “விதி” என்ற ஒன்றே இல்லாமல் செய்து விட்டது.

ஜந்தர் மந்தர் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மோடி அரசு கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தங்களை எதிர்த்து டில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

மோடியின் சட்டப்படி, அரசுத்துறைகளுக்கு மட்டுமின்றி, எந்தவொரு தனியார் முதலாளிக்காக நிலத்தை கையகப்படுத்துவதாக இருந்தாலும், உடைமையாளராகிய விவசாயியின் ஒப்புதலை அரசு கேட்கவே தேவையில்லை. அப்பகுதியைச் சேர்ந்த நிலமற்ற கூலி விவசாயிகள், கைவினைஞர்கள் போன்றோருக்கு நிவாரணம் தரத் தேவையில்லை. சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் பரிசீலிக்கத் தேவையில்லை. 3 போகம் விளையும் நிலமானாலும் அதனைக் கையகப்படுத்துவதற்குத் தடையில்லை. கையகப்படுத்திய நிலத்தை 20 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தாவிட்டாலும் திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை.

“தனியார்” என்பதை ஒரு தொழில் நிறுவனம் என்று 2013 சட்டம் வரையறுத்திருந்தது. மோடியின் சட்டப்படி தனியார் என்பது நபராகவோ, தன்னார்வ நிறுவனமாகவோ கூட இருக்கலாம். அது மட்டுமல்ல, தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளையும் கூட “பொதுத் தேவை” என்று வரையறுத்து, அவர்களுக்கு விளைநிலத்தைப் பிடுங்கிக் கொடுக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக் கொள்கிறது.

நிலத்தின் சந்தை விலையைத் தீர்மானிப்பது உள்ளிட்டு, இந்த சட்டத்தை அமலாக்கும் அதிகாரம் பெற்ற மத்திய, மாநில அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டோர் வழக்கு தொடுக்க முடியாது. அரசின் அனுமதி பெறாத பட்சத்தில் அதை எந்த நீதிமன்றமும் விசாரிக்க கூடாது.

– இவைதான் மோடி கொண்டு வந்திருக்கும் சட்டத்தின் சரத்துகள். இதனை “சட்டம்” என்ற பெயரால் அழைப்பதே அயோக்கியத்தனமானது. மன்னர்களும் இளவரசர்களும் தம் கண்ணில் படும் அழகிய பெண்களை அந்தப்புரத்துக்குத் தூக்கி வரச்சொல்லி, இதற்காகவே நியமித்து வைத்திருக்கும் தனிப்படைக்கு ஆணையிடுவார்களாம். அப்படி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நிலத்தைக் கைப்பற்றித் தரும் தனிப்படைதான் மோடி அரசு.

2013 சட்டம் விதிக்கும் நிபந்தனைகள் காரணமாக, பல இலட்சம் கோடி முதலீடு தேங்கி நிற்கிறதாம். இந்த சட்டம் நிறைவேறிவிட்டால் தொழில்துறை வளர்ந்து கோடிக்கணக்கில் வேலைவாய்ப்பு கிடைக்குமாம். இதனை எதிர்ப்பவர்கள் கார்ப்பரேட்டுகள், உள் கட்டுமானம் ஆகிய சொற்களையே கெட்ட வார்த்தைகள் ஆக்குகிறார்கள் என்று சீறுகிறார், அமைச்சர் அருண் ஜெட்லி.

ஜெட்லி கூறுவது கலப்படமற்ற பொய். சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக நாடெங்கும் ஒதுக்கப்பட்ட பெரும்பகுதி நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக்கப்பட்டு விட்டன. மும்பை தொழில் வளர்ச்சிக் கழகத்திடம் மட்டும் 2.5 இலட்சம் ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு மாநில அரசிடமும் குவிந்திருக்கும் பல இலட்சம் ஏக்கர் நிலத்தில் தொழில் தொடங்க ஆளில்லை. சி.பொ.ம. என்ற பெயரில் மகாராட்டிராவில் 2006-ஆம் ஆண்டிலேயே 1250 ஹெக்டேரை வளைத்துப் போட்டு, அதில் தொழில் தொடங்காத முகேஷ் அம்பானி, அங்கே மேலும் 35,000 ஹெக்டேர் கேட்கிறார். டில்லி, மும்பை தொழில் தாழ்வாரம் என்ற பெயரில் 10 இலட்சம் ஏக்கர் நிலத்தை வளைப்பதற்கான வேலைகளை மத்திய அரசு செய்து வருகிறது. நொய்டா பகுதியில் நிலம் கையகப்படுத்தியபோது விவசாயிகளுக்கு ஒரு சதுர மீட்டர் நிலத்துக்குத் தரப்பட்ட விலை ரூ.820. பின்னர் அது கைமாற்றி விற்கப்பட்ட விலையோ ச.மீட்டருக்கு 35,000 ரூபாய். ஆறு வழிச்சாலை, கிராமப்புற வீடுகட்டும் திட்டம், அடிக்கட்டுமானங்களை நிறுவுதல் என்ற பல பெயரில் தரகு முதலாளிகளுக்கு நிலத்தையும் கொடுத்து, தொழில் வாப்பையும் அரசுதான் ஏற்படுத்திக் கொடுக்கிறதேயன்றி, முதலாளிகள் சொந்தமாக எதையும் செய்யவில்லை.

ஆங்கிலத் தொலைக்காட்சியில் இச்சட்டத்தை ஆதரித்து வாதாடும் ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்த சேஷாத்திரி சாரி, “மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 15% கூட பங்களிக்க முடியாத விவசாயத்தைப் பிடித்துக் கொண்டு தொங்கினால் வளர்ச்சியை எப்படி சாதிக்க முடியும்? வறுமையை எப்படி ஒழிக்க முடியும்” என்று பார்ப்பனக் கொழுப்பு வழியப் பேசுகிறார்.

இடுபொருள் விலையை அதிகரித்து, கொள்முதல் விலையைக் குறைத்து, பாசன வசதியை அழித்து எல்லாத் திசைகளிலிருந்தும் தாக்கி விவசாயியை வறுமையில் தள்ளிவிட்டு, பிறகு அவர்களையே குற்றம் சாட்டுகிறார்கள் இந்தக் கிரிமினல்கள். 50% க்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பளித்து சோறு போட்டு வரும் விவசாயம் அழிந்தால், இந்த நாடே உணவுப் பாதுகாப்பை இழந்து கப்பலை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கவேண்டி வரும். விவசாயிகள் நாடோடிகளாக, நகர்ப்புறங்களில் அலைந்து மடிய வேண்டிவரும்.

தனியார்மய-தாராளமயக் கொள்கையின் கீழ் இவர்கள் முன்வைக்கும் வளர்ச்சியென்பது வேலைவாய்ப்பை வழங்காத வளர்ச்சி. அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளின் காலை நக்கும் வளர்ச்சி. மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு என்பது வேலைவாய்ப்பை பெருக்குவதுமில்லை, வறுமையை ஒழிப்பதுமில்லை. ஆற்றுமணலையும், தாது மணலையும், கிரானைட்டையும் கொள்ளையடித்து விற்பதுகூட மொத்த உள்நாட்டு உற்பத்தியை கூட்டத்தான் செய்கிறது. நிலக்கொள்ளையும் அத்தகையதுதான். இங்கிலாந்தில் விபச்சாரம் மற்றும் போதை மருந்து வியாபாரத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் புரள்வதால், அதையும் மொ.உ.உற்பத்தியில் (0.7 சதவீதம்) சேர்த்துக் கொண்டு விட்டது பிரிட்டிஷ் அரசு. மொ.உ.உற்பத்தியை உயர்த்த மோடி முன்வைக்கும் பாதையும் அத்தகையதுதான்.

நிலப்பறி சட்டத்தின் காரணமாக, டில்லி சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் தோற்றபோதிலும், பிற மாநிலத் தேர்தல்களிலும் மக்களின் இந்தக் கோபம் பிரதிபலிக்கும் என்று தெரிந்திருந்த போதிலும், தனது கூட்டணிக் கட்சிகளே இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையிலும், அம்பானி, அதானிகளின் ஆசையை நிறைவேற்றித் தருவது எப்படி என்ற கோணத்தில்தான் தனது வியூகங்களை வகுத்து வருகிறது மோடி அரசு.

குஜராத் இனப்படுகொலையின்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக மோடி வெளிப்படுத்திய வன்மத்தைக் கண்டோம். இந்நாட்டின் விவசாயிகள் மீதும் உழைக்கும் வர்க்கத்தின் மீதும் பார்ப்பனப் பாசிசக் கும்பல் கொண்டிருக்கும் துவேசத்தையும் வெறுப்பையும் இச்சட்டத்தில் காண்கிறோம். இது விவசாயிகளுக்கு எதிராகத் தொடுக்கப்படும் இன அழிப்புக்கு நிகரானதொரு தாக்குதல். விவசாயிகளையும் இந்த நாட்டையும் பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால், வெறி பிடித்த இந்த மிருகத்தை வீழ்த்துவதொன்றுதான் வழி.
_______________________________________
புதிய ஜனநாயகம், மார்ச் 2015 தலையங்கம்
_______________________________________

  1. இங்கு இருக்கும் மக்களுக்கு ஒரு குற்றவாளியை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. விளம்பர வெளிச்சத்தில் ஓட்டு போட்ட மக்கள் தங்கள் கோவன துணி கூட களவாடப்பட்டு, அகோரிகளை போல திரியும் காலமும் வரும்.

  2. நெற்பயிரின் மீது நிற்கும் கனரக வாகனத்தை பார்க்க வயிறு எரிகிறது. விவசாயிகளின் வயித்தெரிசல் சும்மா விடாது. விளை நிலத்தையெல்லாம் அழித்து அரிசிக்காக கையேந்தும் போது தான் தெரியப்போகிறது விளை நிலங்களின் அருமை. வருங்கால தலைமுறகள் நம்மை காறித்துப்பும். இன்னும் மீதி வருடங்களில் நம் கோமணமும் உருவப்படும். நாடோடியாக பரதேசியாக விவசாயிகள் திரியும் போதுதான் தெரியப்போகிறது விவசாயத்தின் அருமை.

  3. எங்க ஊருபக்கமெல்லாம் விவசாய நிலமெல்லாம் வீடாவும் செங்கல் சூளையாவும் மாறிப்போச்சு எங்க வீட்டுக்கு பின்னடியே இருந்த 20 ஏக்கர் நெல் விளையும் பூமி அதன் அடையாளத்தே தொலைச்சிருச்சு பள்ளிக்கூடத்துக்கு அந்த வயக்காட்டு வ்ழியா நடந்து போன வாய்க்காலயும் வரப்பயும் தேடினாலும் கிடைக்கது ,பள்ளிக்கூடத்துல இருந்த கிணத்துல நீர் இறைத்து காய்கறி செடிகளையும் வளர்த்த இடமெல்லாம் எங்க போச்சுனே தெரியல கிணத்த கானவும் இல்ல அங்க இப்ப இருக்கிற எச் எம் ட கிணத்த எங்கனு கேட்டா அதெல்லம் மூடி பல வருசம் ஆச்சுங்கிறார்,எங்க ஊருல சினிமா தேட்டர் இல்ல 5 கிமி தள்ளி இருக்கிற தேட்டருக்கு வயக்காட்டு வ்ழியா நடந்தே போவோம் போகும் போது அரில சிந்துன நெல்லுகள பொருக்கிட்டே போயி சாரத்த அவுத்து அதுலயே பொருக்குன நெல்ல தட்டி வித்து சினிமா பார்ப்போம் தின்னுறதுக்கு முறுக்கு வாங்க காசும் மிச்சம் இருக்கும் அனா இப்பெல்லாம் வயல் வழியா நடக்கனுமுனாலே பாலைவனத்துல கால் வச்சது மாறி இருக்குது 30 ரூபாக்கு கீழ விக்கிற விலைல அரிசி வாங்கி சோறு பொங்குனா மூக்க பொத்திக்கிட்டுதான் திங்க வேண்டி இருக்குது ,கன்மாயெல்லாம் மேடாகி போச்சு ஆத்துல எல்லாம் மணலே இல்லாம குண்டும் குழியுமா இருக்குது ஆத்தங்கரை மரத்துல பிளாஸ்டிக் பைகளும் தொங்கிட்டு கிடக்குது ஆத்துக்குள்ள வாட்டர் பைகளும் குவாட்டர் பாட்டில்களும் கிடக்கிறத பாத்த மனசுக்கு கஸ்டமா இருக்கு முன்னாடியெல்லாம் கிணத்து தரைய பாக்க முங்கு நீச்சல் போட்டு போகனும் இப்ப கிணத்து அடில புல்லு முளைச்சு கிடக்குது இப்பவே எங்க ஊரு பெரிய குப்பை கிடங்கு மாறி போயிருச்சு எதிர் கால சந்ததிக்கு நாம பெரிய குப்பத்தொட்டியா உள்ள பாலைவனத்தைதான் நாம விட்டுட்டு போகப்போறமோ அப்பிடினு பயமா இருக்குது அடே பாவி அரசுகளா இத்தோட விட்டுடுங்கடா இனியும் விவசாயத்த அழிச்சி என்னடா சாதிக்க போறிக காரும் ,கம்புயூட்டரும்,செல்போனும் ,வயிரு நிறைய சோறு தின்னாதான்டா பயன்படுத்த முடியும் சக்கம்மா சொல்லுறா கெட்ட காலம் பொறக்குது கெட்ட காலம் பொறக்குது மனிசன மனுசனே சோத்துக்கு வ்ழி இல்லாம அடிச்சி திங்கிற காலம் வரப்போகுது முழிச்சுக்குங்கபா சீக்கிரம்…

    • அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியினால் விவசாயம் பாதிக்கப்படுவதை தவிர்க்க, அதே அறிவியலை கொண்டு தீர்வு ஏதாவது முயலலாமா?

      துபாய் போன்ற பாலைவன நாட்டில் அந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் குடிநீர் தேவைக்கும் கடல்நீரையே சுத்திக்கரித்து பயன்படுத்துகிறார்கள். மேலும் மக்கள் குளித்த தண்ணீர் அனைத்தும் அந்த ஊரின் மரங்கள் வளர்க்க பாய்ச்சப்படுகிறது.

      இது போன்று தமிழ்நாடு முழுதும் ஒரு பக்கம் கடற்கரை உள்ளதால் அந்த கடல்நீரை சுத்திக்கரித்து குடிநீருக்கும் பயிர்கள் வளர்ச்சிக்கும் பயன்படுத்தினால் என்ன?

      • /அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியினால் விவசாயம் பாதிக்கப்படுவதை தவிர்க்க, அதே அறிவியலை கொண்டு தீர்வு ஏதாவது முயலலாமா?/
        அய்யா அறிவாளி கக முதல்ல தீர்வு என்ன அப்பிடினு சொல்லுங்க அந்த தீர்வு சரியாக இருந்தால் மத்தத பார்க்கலாம் துபாய்ல கடல் நீரை குடிநீர் ஆக்குகிறார்கள் என்றாலும் கூட அதே துபாய்க்காரன் சோத்துக்கும் துணிக்கும் மற்ற விவசாய நாடுகளைத்தான் சார்ந்து வாழ்கிறான் என்பதை மறந்து விட்டு பேசாதீர்கள் முதலில் விவசாயத்தை அழிப்பதனால் ஏற்ப்படும் எந்த விளைவையும் சரி கட்ட முடியும் என்று நிரூபித்த பின்பு மற்றதை பற்றி பேசுங்கள்…

        • தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் ஜோசப்.
          விவசாயத்தை அழிக்கச் சொல்லவில்லை.
          அறிவியல் மூலம் விவசாயம் மேலும் வளர, நீர்வளம் நிறைய, என்ன வழி என்று யோசிக்கலாம் என்று தான் கூறினேன்.

          அறிவியல் தொழில்நுட்பம் என்று தான் கூறினேன். நஞ்சு கலந்த பூச்சி மருந்துகளையும், ஜெனடிக் மாறுபாடுகளை கொண்ட பயிர்களையும் பயன்படுத்த சொல்லவில்லை.

          கடல்நீரை குடிநீராக்குவதை போல அதே வழியில் வறண்ட பூமிகளுக்கு கடல் நீரிலிருந்து நல்ல நீரை உருவாக்கி பயன்படுத்த முடியுமா என்று தான் கேட்கிறேன். துபாயில் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த குடிநீருக்கும் கடல் நீரை குடிநீராக மாற்றி பயன்படுத்துகிறான். நாம் வானத்தை பார்த்தும் கர்நாடக/கேரளத்தை பார்த்தும் தண்ணீருக்காக ஏங்கி கொண்டிருக்கிறோம்.

          யோசிக்கலாமே நண்பரே. நம்மை போன்ற ஒவ்வொருவரும் யோசித்தால் ஒரு தீர்வு நிச்சயம் கிடைக்கும். தீர்வு இல்லாத பிரச்சினை என்று ஒன்று உலகில் இல்லவே இல்லை.

          இப்போது வெளிநாடுகளில் பூச்சிமருந்துகள் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விளையும் பொருட்களை அதிக விலை கொடுத்து மக்கள் வாங்குகிறார்கள் தெரியுமா?
          பிராய்லர் கோழியில் ஊசி போட்டு விரைவில் வளர வைப்பதால் மகப்பேறு பிரச்சினைகள், தைராய்டு, உடல் எடை கூடுதல் போன்ற பிரச்சினைகள் எற்படுகிரதால் மருத்துவர்கள் நாட்டுக்கோழியை உண்ண சொல்கிறார்கள்.

          இயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களுக்கும் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழங்களுக்கும் சுவையில் வித்தியாசம் தெரிவதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். அதனால் கார்பைடு கள் பழங்களை புறக்கணிக்கின்றனர்.

          பெப்சி கோக் போன்ற உடலுக்கு கேடானவற்றை பருகுவதை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வருகிறார்கள்.

          இயற்கை வழியில் வளரும் பயிர்கள் தான் ஆரோக்கியமானவை என்பதை மக்களிடம் தெளிவாக கொண்டு செல்ல வேண்டும். பிரச்சாரம் சரியாக இருந்தால் தானாக மக்களின் டிமாண்ட் இயற்கை வழியில் வளரும் பயிர்களின் மேல் திரும்பும்.

          அறிவியல் தவறல்ல. ஆனால் அதனை தவறான வழிகளில் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
          அறிவியல் மூலம் ஆக்கபூர்வமாக, மக்கள் பயனடையும் வழிகளை கண்டுபிடித்தால் தவறில்லையே.

          • நண்பர் கற்றது கையளவு,

            //பெப்சி கோக் போன்ற உடலுக்கு கேடானவற்றை பருகுவதை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வருகிறார்கள்.//

            சும்மா அடிச்சு விடக் கூடாது. பெருந்துறையருகே புதுசா ஒரு கோக்கு (பெப்சியா கூட இருக்கலாம்.) கம்பெனி தொறக்க போராங்களாமே. உமக்குத் தெரியுமா? மக்களெல்லாம் குடிக்கறதா குறைத்திருந்தால் இருக்குற கம்பனிகளும் மூடப்பட்டிருக்குமே. லாஜிக்கே இல்லையே.

          • நண்பர் கற்றது கையளவு,

            அறிவியல் கண்டுபிடிப்புகலெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இந்த கட்டுரையின் பேசுபொருளுக்கு உங்களது பதில் என்ன? நிலக் கையகபடுத்தும் சட்டத்தின் மீதான திருத்தங்களின் மீதான உங்களது பார்வை என்ன?

            மோடியரசின் இந்த நடவடிக்கைகள் மக்களுக்கு விரோதமானவை என்று நாங்கள் சொல்கிறோம். உங்களது நிலைமை என்ன?

            ஒட்டு மொத்த நாட்டை பாதிக்கும் இந்த நடவடிக்கைகளை ஒரேப் பிரச்சினையாக அல்லது ஒரேப் பிரச்சினையின் விளைவுகளாக நாங்கள் பார்க்கிறோம். தாங்கள் அதை தனித்தனிப் பிரச்சினையாக திரிக்கின்றீர்கள். அதற்க்கு ஆலோசனைகளை வழங்க அழைப்பு விடுக்கின்றீர்கள்.

            இந்த நடவடிக்கைகள் சரியென்றால் எப்படி சரியென்று விளக்க வேண்டும்.
            தவறு என்றால் அதை எப்படி தங்களைப் போன்ற நடுநிலையாளர்களின்(!) வழியில் தடுப்பது என்றும் அதை எவ்வளவு நாட்களில் அதை நாம் செய்ய முடியும் என்பதையும் விளக்க வேண்டும்.

            ஏனெனில் விவாதத்தில் வெற்றி பெறுவதோ அல்லது நானும் இரண்டு கருத்துக்களை சொல்கிறேன் என்பதோ பிரச்சினைகளுக்கத் தீர்வல்ல. வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பதில் சொல்லுங்கள்.

            —————–
            எங்களது நிலைமைத் தெளிவானது. அதாவது இந்த கட்டமைப்பில், இந்த போலிசு,இராணுவம்,நீதிமன்றம்,பாராளுமன்றம்,ஓட்டுக்கட்சிகள் …இன்னும் பிறவென்று இதுகாறும் சொல்லுக் கொள்ளப்பட்டு வரும் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம் என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்த அரசியலைப்பில் அனைத்து உறுப்புகளும் சிதைந்து ஆபரேஷன் செய்யக் கூட இயலாத நிலையில் உள்ளது என்றும் அனைத்து உழைக்கும் மக்களையும், குறிப்பாக இந்த பிரச்சினையில் அனைத்து விவசாயம் சார்ந்து உழைத்து வாழும் மக்களை சாதி மதம் கடந்து வர்க்கத்தின் அடிப்படையில் ஒன்றிணைத்து இந்த துரோகச் செயலை தடுப்பதே நம்முன்னே இருக்கும் ஒரே வழியென்றும் அறைந்து கூறுகிறோம்.

            நன்றி.

      • ககை

        துபாய் இயல்பிலேயே பாலைவன மணற்பாங்கான நாடு. அங்கே வாழ்ந்த மக்கள் தொகை எண்ணெய் வளம் கண்டுபிடிக்கும் முன் ஒரு கட்டுக்குள் இருந்தது. பெட்ரோல் பணம் வந்தவுடன் அவர்களுக்கு எல்லாவற்றிற்கும் வேலையாட்கள் தேவைப்பட்டிருக்கின்றனர். உள்ளூர் மக்களை விட வேலைசெய்ய வந்தவர்கள் பல மடங்கு இருக்கும். கூடுதலாக சில பத்தாண்டுகளாக சொகுசு பயணத்திற்கான நாடாகவும் மாறியிருக்கிறது. மேற்கத்திய மக்கள் தங்கள் நாடுகளில் வீட்டு வேலைக்கு ஆள்வைத்துக்கொள்ள முடியாத மற்றும் அங்கேயே உள்ள விடுதிகளில் சில வாரங்கள் வீட்டு வேலைகளில் இருந்த விடுபட்டு தங்க போதுமான வருமானமில்லாதவர்கள் துபாயில் உள்ள விடுதிகளில் வந்து தங்குவது பெருகிவிட்டது. துபாயில் இந்த எல்லா வித மக்களுக்குமான மற்றும் அவர்களின் ஆடம்பர தேவைகளுக்கான அதீத தண்ணீர் தேவை கடல் மட்டுமே பூர்த்தி செய்ய வரமுடியும். இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான செலவுகள் பெட்ரோலின் வருமானத்திலிருந்தே பெறமுடிந்தது என்பதை கவனிக்க வேண்டும்.

        தமிழகத்திற்கு கடல் நீர் சுத்திகரிப்பு வழியை பரிந்துரைப்பது மிகவும் வேதனையானது. மேலும் இதன் விலையை பராமரிப்பு செலவை யார் ஏற்பது, எப்படி பங்கிட்டுக்கொள்வது.

        அறிவியல் என்பதை பெரிய சுத்திகரிப்பு ஆலைகளல்ல. எளிய குளங்கள், ஏரிகள், ஆறுகள், கால்வாய்கள், கிணறுகள், தடுப்பணைகள், மரங்கள், காடுகள் ஆகியவைகள் தான் உன்மையான அறிவியல்.

        மேலும் விவாதிப்போம்.

        • உண்மை தான்.

          ஏரிகளும் ஆறுகளும் கிணறுகளும் வற்றிப்போனதால் இந்த நிலைமை.
          இதை தவிர்க்க என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டுமோ, அத்தனையும் எடுக்க வேண்டும்.

          விவசாயத்தில் அறிவியலின் துணை கொண்டு இயற்கையாக மகசூலை பெருக்க என்ன வழி என்று நம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும்.

          • அண்ணன் ககை விஞ்ஞான ஆராய்ச்சி பத்தி பேசறதால நானும் எனக்கு தெரிஞ்ச விஞ்ஞான அறிவ வச்சு பதில் சொல்லலாமுனு நினக்கிறேன் ஏன்பா ஆறு குளம் ஏரி எல்லாம் வத்தி போச்சு அப்பிடினு பாத்தாக்க உலகம் வெப்பமாகுது அப்பிடிங்கிறாங்க நம்ம பூமிய சுத்தி உள்ள காற்று மண்டலத்துல 98% சூரியனில் இருந்து வர்ற வெப்பத்த பிரதிபலிக்குற வாயுக்களும் 2% சூர்ய வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ளும் பசுமைக்குடில் வாய்க்களும் இருக்கு இந்த பசுமைக்குடில் வாய்க்கள் இல்லை என்றால் பூமி ஒரு பனிப்பந்தாகத்தான் இருக்கும் இந்த 2% பசுமைக்குடில் வாயுக்களால்தான் பூமி உயிர் வாழ்வதற்க்கு ஏற்ற சூழ்நிலையில இருக்குது ஆனா பாருங்க இந்த பசுமைக்குடில் வாயுக்கள் 2% லருந்து 4% ஆக அதிகரிச்சுருச்சாம் இதனால் பூமி யின் சராசரி வெப்பம் 1.5 டிகிறில இருந்து 4.5 டிகிறியா அதிகரிச்சுருச்சு இதனால பூமியின் இயற்க்கை சூழலில் பெறும் மாற்றம் ஏற்ப்பட்டு விட்டது என் கிறார்கள் விஞ்ஞானிகள் இதை கட்டுப்படுத்தனுமுனு கூட ஒரு கூட்டம் போட்டானுக கோப்ப காகன் அப்பிடின்ற இடத்துலனு நினைக்கிறேன் ,அதுல அமெரிக்காகாரந்தான் அதிகமான கேஸ வெளியிட்றான் அப்பிடினுகூட சொன்னாங்க வடையும் டீயும் சாப்பிட்டுட்டு ஒரு முடிவும் எடுக்காம விட்டுட்டானுகனு நினைக்கிறேன் இதை சரி செய்ய என்ன ஆராய்ச்சி பன்னிட்டு இருக்காகனு எனக்கு தெரியல அனா பாருங்க அமெரிக்காகாரன் பூமிய விட்டு எஸ்கேப் ஆகுற ஆராய்ச்சிகள பேஸா பன்னிட்டு இருக்கான் செவ்வாயில தன்னி இருக்கா காத்து இருக்குதானு பாக்குறான் ராக்கட்ட விட்டு இப்ப கூட சொல்லுறாங்க செவ்வாய் கிரகத்துல வீடு கட்டி தங்கப்போறத இந்தியால கேரளாக்கார பணக்கர பொன்னு கூட செவ்வாய் கிரகத்துக்கு பயனம் போறதா பேசிக்கிறாங்க அது உண்மையோ வதந்தியோ தெரியல சூரியன்ல இருந்து வர்ற நியூட்ரினோ துகள்ள அனு குண்டு செய்யலாம இல்ல ஏற்க்கன்வே வச்சுருக்க அனு குண்ட செயலிளக்க செய்ய முடியுமா நியுட்ரினோ வ வச்சு பூமிய துளைச்சுட்டு கம்யூனிகேசன் பண்ணலாமா அப்பினு எல்லாம் ஆரச்சி செய்ய்ரதா கேள்விப்பட்டு இருக்கேன் அனா விவசாயத்த மேம்படுத்த, உலக மக்களின் உணவு தண்ணீர் தேவைகளை எப்பிடி பூர்த்தி பன்னலாமுனு ஆராச்சிகள பன்றாங்களா தெரியல ,கடல்நீரை சுத்திகரித்து பயண்படுத்தலாமுனு யோசனை பண்ணாலும் அதை வச்சு விவசாயமெல்லாம் பன்ன முடியும் அப்பின்டினு இதுவரை யாரும் சொல்ல நான் கேள்விப்பட்டது இல்லை குடிக்க வேணா யூஸ் பன்னலாம் துன்னுறதுக்கு எல்லாம் அரிசி கொண்டுவர முடியாது என்பதுதான் நிலமை அதனால் இந்த நிலமையில விவசாயத்தயோ காடுகளையோ அழிக்காம காப்பாத்துறதுதான் நல்ல வழி இருக்கிற நீர் ஆதாரங்கள் காப்பாற்ற இதுதான் சிறந்த வழி இத விட்டுட்டு இருக்கிறதையும் விட்டுட்டு கடல சுத்தம் பண்ணலாம கழிவு நீர சுத்தம் பண்ணலாம,நெல்லையும் கோதுமையும் பாலைவணத்துல தண்ணி இல்லாம விளைய வைக்கலாமானு அப்பிடினு ஆராய்ச்சி பன்றதெல்லாம் சுத்த மடத்தனுமுனு தோனுது நீங்க என்ன நினைக்கிறீங்க

          • க கை,

            முதலில் /அறிவியலின் துணை கொண்டு இயற்கையாக மகசூல்/ பெருக்கும் வழி ‘ஆராய்ச்சியாளர்கள்’ கண்டுபிடிக்கட்டும். பிறகு விளைநிலங்களை சிமென்டினால் மூடிவிடலாம். ஆனால் முதலில் விளைநிலங்களை மூடிவிட்டு பிறகு மகசூல் பெருக்கும் வழி கிடைக்காமல் போனால் நமது கதி அதோகதியாகி விடாதா. தயவு செய்து யோசியுங்கள். நன்றி.

            ஏரிகளும் ஆறுகளும் கிணறுகளும் வற்றிப்போனதற்கு என்ன காரணங்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இதை தவிர்க்க என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். முடிந்த வரை விரிவாக எழுதுங்கள். நன்றி.

            • க கை,
              /ஏரிகளும் ஆறுகளும் கிணறுகளும் வற்றிப்போனதற்கு என்ன காரணங்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இதை தவிர்க்க என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்./ என்று கேட்டிருந்தேன்.

              /முடிந்த வரை விரிவாக எழுதுங்கள்./ என்றும் சொல்லியிருந்தேன்.

              ஒரு நாளில் எவ்வளவு விரிவாக எழுத முடியுமோ அவ்வளவு இருந்தால் போதும். இப்போது பல நாட்கள் ஆகிவிட்டன. விரிவான பதில் எழுதிக் கொணடிருக்கிறீர்களா இல்லை பதில் கொடுக்க விருப்பமில்லாமல் விட்டுவிட்டீர்களா.

      • ககை

        இன்று நமது நீர்நிலைகள் பெரும்பாலானவைகளின் நீர் குடிப்பதற்கு தகுதியில்லாத வண்ணம் மாசுபட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவு நீரை சுத்திகரித்து அப்படி செய்யும் போதே மேலும் மாசுபாட்டையும் உருவாக்கி சிறிது நீரை பாட்டிலில் கேன்களில் அடைப்பது அறிவியல் என்கறீர்கள்.

        நமது எல்லா நீர்நிலைகளையும் அதன் இயற்கையான தூயநிலைக்கு மறுபடியும் கொண்டு செல்வதுதான் உன்மையான அறிவியல் என்று நான் சொல்கிறேன். இந்த மாற்றம் அல்லது இந்த அறிவியல் நமது சமூகம் பொதுவுடமையை ஏற்றுக்கொள்வதால் மட்டுமே சாத்தியமாகும் என்பதையும் கூறிவிடுகிறேன்.

        மேலும் விவாதிப்போம்.

    • பி ஜோ,

      ஒரு சேர 20 வரிகளுக்கும் மேலாக நீங்கள் எழுதியிருப்பதை நான் பார்ப்பது இது தான் முதல் முறை. சிறப்பு.

      கிட்டத்தட்ட உங்கள் கிராம அனுபவத்தைப்போன்றது தான் எனது கிராம அனுபவமும் (ஆனால் கீழே விழுந்து கிடக்கும் நெல்லை பொறுக்க வேண்டிய அளவுக்கு வறுமையில் நாங்கள் இருக்கவில்லை என்பதையும் மறக்காமல் கூறிவிடுகிறேன்.) 30 வருடத்தில் என்னென்ன மாற்றங்கள். ‘அறிவியலின்’ கொடைகள். உணர்ச்சி பூர்வமாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

  4. பின் குறிப்பு இப்ப 1 வது படிக்கிற பையன் கிட்ட அடேய் நாங்க முன்னல்லாம் நாங்க கன்மாய்ல ஆத்துல கிணத்துல எல்லாம் குளிப்போம் அப்பிடினு சொன்ன போங்க அங்கிள் டர்டி வாட்டர் இதுலயா குளிச்சீங்க பொய் சொல்லாதிக அப்பிடிங்கிறார் அவனுக்கும் எனக்கும் ஒரு தலை முறைதான் இடைவெளி அதாவது 30 வருசம் அதுலயே இவ்வளவு மாற்றங்கள் நிச்சய இந்த மாற்றத்த சந்திக்காத எந்த ஊரும் இருக்காதுனு நம்புறேன் இதுல விவசாய நிலத்தை எல்லாம் அழிச்சி வளர்ச்சிய கொண்டு வரேன் அப்பிடினு கார்,கம்புயூட்டர்,செல்போன்,கம்பெனினு கொண்டு வந்தாலும் அதெல்லாம் பயன்படுத்தி சொகுசா வாழ முடியாது சோறு துன்னாம, பாத்துக்குங்கப்பா அவ்வளவுதான் சொல்ல முடியும்

  5. இப்போ எல்லா விவசாய சங்கங்களும் கர்நாடகா அணை கட்டுராங்கன்னு போராட்டம் நடதுரான்கலாம் நிலமே இருக்கபோவதில்லை அப்புறம் என்ன தண்ணி.

  6. இங்கன ஒரு அண்ணன் மெயில்ல ஒரு கேள்விய கேக்குறாரு எங்க ஊரப்பக்கம் எல்லாம் நல்ல விலை கிடைச்சா நிலத்த குடுத்துட்டு போயிடலாமே அப்பிடினு ,2 நாளைக்கு முன்னாடி ரேசன் கடைல அரிசி வாங்க நின்னுட்டு கியூல முன்டி அடிச்சதுல ஒரு பெரியவர் கிழ விழுந்துட்டாரு அவர தூக்கி சோடா வாங்கி குடுத்து என்ன பெரியவரே நீங்களும் இப்பிடி வாலிப பசங்களோட போட்டி போடுதீரே முடியுமா உம்மால. அவர் அட போப்பா முதல்ல வாங்குனாதான் கொஞ்சமாவது நல்ல அரிசியா கிடைக்கும் நான் 3 ஏக்கர் வயக்காடு வச்சு இருந்தேன் ஆடையும் கோடையும் நெல்லு விளையும் மூனாவது போகமா பயிறு பச்சையெல்லாம் போட்டு நல்லாதான் இருந்தோம் மழை தண்ணி இல்ல முன்ன மாறி விளைச்சலும் இல்ல பொண்னுக்கு கல்யானம் பன்றதுக்கு சென்டு 2000 ரூபாய்னு கோழிப்பண்ணைக்காரனுக்கு வித்துட்டு ரேசன் அரிசி வாங்கி துன்னுறேன் என்ன பன்ன எல்லா என் நேரம் அப்பிடினு அலுத்துக்கிட்டாரு இவர மேரி எத்தன பேரு ரேசன் கடையில கீயுல நிக்காகலோ தெரியல இந்த மாறி சட்டம் போட்டு விவசாய நிலத்தெல்லாம் அழிச்சுட்டு தீப்பெட்டி ஆபிஸோ ,கோழிப்பன்னையோ ,கம்பூட்டர் கம்பெனியோ கொன்டு வந்தா வேலை கிடைக்கும் மாசமான எதோ சொற்ப்பமான சம்பளம் கிடைக்கும் ஆனா இந்த ரேசன் அரிசியாவது கிடைக்குமானு யோசிங்க மக்களே…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க