privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்போபால் - இராணிப்பேட்டை : முதலாளித்துவ கொலைகள் !

போபால் – இராணிப்பேட்டை : முதலாளித்துவ கொலைகள் !

-

போபால் முதல் இராணிப்பேட்டை வரை – முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதாயக் கொலைகள்!

சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் நெடுஞ்சாலையில், பாலாறும் பொன்னை ஆறும் பாந்து நீரூட்டும் கிராமங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது இராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை. அங்கு, தை மாத அதிகாலைகளில் நமது உடலைத் தழுவி நுரையீரலை நிறைக்கும் குளிர் காற்றில் சாவின் வாடை விடாப்பிடியாக வீசுகிறது. அந்த வாடை கொல்லப்பட்ட 10 தொழிலாளர்களின் கொலைக்கு மட்டுமின்றி, அந்தப் பகுதியே சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பதன் சாட்சியமாக உள்ளது.

இரசாயன கழிவு
பல்வேறு நச்சு இராசயனப் பொருட்கள் நிரம்பியுள்ள கழிவில் நடப்பதற்கே திணறும் மீட்புக் குழுவினர்.

ஜனவரி 30 நள்ளிரவில் இராணிப்பேட்டை ஆர்.கே. லெதர்ஸ் ஆலையை ஒட்டிக் கட்டப்பட்டிருந்த சிப்காட் பொதுச் சுத்திகரிப்பு நிலையத்தின் தொட்டி உடைந்து, ஆயிரம் டன்னுக்கும் அதிகமான சகதி சுனாமியாக சாடி வெளியானது. ஒரு ஆள் உயரத்துக்கு பாய்ந்து வந்த அந்தச் சகதி ஆர்.கே. லெதர்ஸ் ஆலையினுள் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரவு பாதுகாவலரை மூழ்கடித்து, தூங்கிக் கொண்டிருந்த வட மாநிலத் தொழிலாளர்களில் 9 பேரை பலி வாங்கியது. என்ன நடந்தது என்று அறிந்து கொள்ளும் முன்னரே, சகதியின் அழுத்தத்தால் மூச்சுத் திணறி, இரசாயனத்தின் அரிப்பால் அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

தோலின் கழிவுகள், அதிலிருந்து ஊறி வெளியாகும் குரோமிய உப்புகள், உலோக ஹைட்ராக்சைடுகள், கரிமக் கழிவுகள், சாயப் பொருட்களின் கசடுகள் போன்றவற்றால் நிரம்பியிருந்தது, அந்தச் சகதி. ஓட முனைந்திருந்தாலும் முடியாதபடி ஹைட்ரஜன் சல்ஃபைடு என்ற விஷவாயு அவர்களது மூச்சை நிறுத்தியிருக்கும். போபால் முதல் ராணிப்பேட்டை வரை எல்லா இடங்களிலும் மனித உயிர்களைக் காவு கொள்வது, ரசாயனக் கழிவு என்பதை விட, முதலாளிகளின் இலாபவெறி என்று கூறுவதே பொருத்தமானது.

வடமாநிலத் தொழிலாளர்களின் சடலங்கள்
தோல் ஆலை முதலாளிகளின் ஆதாயத்திற்காகக் கொல்லப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்களின் சடலங்கள்

எந்த குரோமியம் உப்பாலும் பதப்படுத்த முடியாத ஒரு தோல் உண்டென்றால், அது இந்த முதலாளி வர்க்கத்தின் தோல்தான். இந்தப் படுகொலை நடந்த அன்று மாலையே, சென்னை வர்த்தக மையத்தின் குளுகுளு அரங்குகளில் பன்னாட்டு தோல் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. தமது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் தோல் ஆலை முதலாளிகள் வர்த்தக பேரங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். அநியாயமாக 10 உயிர்கள் கொல்லப்பட்ட அதிர்ச்சியோ, வருத்தமோ கடுகளவும் அவர்களிடம் தென்படவில்லை.

பத்து தொழிலாளர்கள் மரணம் குறித்து தமிழக அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது போலக் காட்டும் பொருட்டு, வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கும் பொறுப்பிலிருந்த 3 இயக்குனர்கள் கைது செய்யப்பட்டனர்; இந்த சாவுகளுக்கு நேரடிப் பொறுப்பேற்க வேண்டிய இலஞ்சப் பேகளான மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகளில் 3 பேர் மட்டும் கணக்கு காட்டுவதற்காகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். ஃபாக்டரி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மற்ற அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. யாரும் குற்ற வழக்கில் கைது செய்யப்படவில்லை.

இந்த மரணத்துக்கு நேரடி பொறுப்பேற்க வேண்டிய ஆர்.கே. லெதர்ஸ் நிறுவன முதலாளி கைது செய்யப்படவில்லை; அவர் மீது வழக்குகூடப் பதிவு செய்யப்படவில்லை. சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைக்கப்பட்ட 86 ஆலைகளுக்கு மின்னிணைப்பு தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறது. பத்து உயிர்கள் மடிந்து, பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியான பிறகும், இது குறித்து அரசும், முதலாளிகளும் இவ்வளவு அலட்சியம் காட்டுகிறார்களென்றால், உயிரோடு இருக்கும் தொழிலாளர்களை இவர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.

வடமாநிலத் தொழிலாளர்களின் வாழ்க்கை

இராணிப்பேட்டையில் ரூ 1,500 – மாத வாடகையில் ஒரு அறையைப் பிடித்து அதில் 4 பேரைத் தங்க வைக்க முடியும். ஒருவருக்கு ஒரு நாளைக்கான செலவு ரூ 15-க்கும் குறைவுதான்.
கொல்லப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருந்த ஆர்.கே. லெதர்ஸ் முதலாளி இந்தப் பணத்தைக் கூட செலவு செய்யத் தயாரில்லை. அதனால்தான் அந்த தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள்ளாகவே தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். 10 – அடிக்கு 10 – அடியை விடக் குறைவான அளவில் அங்கே 4 அறைகள், அதில் ஒன்றில் “EB அறை” என்று எழுதப்பட்டு மின் கருவி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறைகளுக்குள்தான் கொல்லப்பட்ட 10 பேரும் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அறை வாடகை கொடுக்கத் தயாராக இல்லாத முதலாளிகள், அவர்கள் வேலை செகிறார்களா என்று கண்காணிப்பதற்கு மட்டும் பெரும் செலவில் ஆலை முழுவதும் காமெராக்களை ஆங்காங்கே பொருத்தியிருக்கிறார்கள்.

தொழிலாளர்கள் அறையிலிருந்து சில அடிகளில் இருக்கிறது ஆலை. உள்ளே இரசாயன பதப்படுத்தலுக்கான உருளைகளை இயக்கும் வேலை, அவர்களுடையது. வேலை நேரத்துக்குப் பிறகு அங்கேயே தூங்க வேண்டியிருப்பதால், அம்மோனியா, ஃபார்மிக் அமிலம், சாயங்கள், உப்புகள் மற்றும் பதப்படுத்தப்படும் தோலின் நாற்றம் 24 மணி நேரமும் அவர்களைச் சூழ்ந்திருக்கிறது.

2 உருளைகளை இயக்கும் ஒரு நாள் வேலைக்கு மாதச் சம்பளம் ரூ 5,000. கூடுதலாக ஒரு உருளை, கூடுதலாக 4 மணி நேரம் என 16 மணி நேரம் உழைத்து மாதம் ரூ. 10,000 வரை அவர்கள் சம்பாதிக்கிறார்கள். அதில் ரூ. 9,000-ஐ மேற்கு வங்கத்தில் காத்திருக்கும் குடும்பத்தினருக்கு அனுப்பி விட்டு எஞ்சிய தொகையில் அரிசி வாங்கி, கோதுமை மாவு வாங்கி, பருப்பு வாங்கி சமைத்துச் சாப்பிட்டுக் கொள்கிறார்கள்.

இரசாயனக் கழிவுகளால் நீரும், நிலமும், உடலும், வாழ்வும் அரிக்கப்பட்ட உள்ளூர் தொழிலாளர்கள், ஆலைகளில் உருளைகளை இயக்கும் வேலையைச் செய்ய மறுக்கவேதான், வடஇந்தியத் தொழிலாளர்களை வரவழைத்து அவர்களுக்கு ‘வேலை வாய்ப்பை’ வழங்கியிருக்கிறார்கள் ராணிப்பேட்டை முதலாளிகள். மனிதர்கள் அழிந்தாலும், மண் அவிந்தாலும் அவர்களுக்கு வேண்டியது லாபம். மேலும் லாபம்!

சங்கம், 8 மணி நேர வேலை, வார விடுமுறை, சேம நலம், மருத்துவ வசதி, பாதுகாப்புக் கருவிகள் போன்ற எதுவும் கிடையாது. இருந்தும் எந்த விதத் தொல்லையும் இல்லாமல் முதலாளிகளைப் பாதுகாத்து வருகிறது தொழிலாளர் நலத்துறை.

இலாபம் முதலாளிக்கு, கழிவு அரசாங்கத்துக்கு!

தோல் ஆலைக் கழிவு நீர்
பாலாற்றில் கொட்டப்படும் தோல் ஆலைக் கழிவு நீர். (கோப்புப் படம்)

இராணிப்பேட்டையில் தோல் பதனிடும் ஆலைகளின் இரசாயனம் கலந்த கழிவு நீர் நிலத்தையும், நீரையும் கேட்பாரின்றி நஞ்சாக்கி வந்தன. இவற்றுக்கெதிரான பல போராட்டங்களுக்குப் பிறகு, 1990-களில் சிப்காட்டில் உள்ள 80-க்கும் மேற்பட்ட ஆலைகள் உமிழும் கழிவுகளைச் சுத்தம் செய்ய ரூ 2.6 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

தோலைப் பதப்படுத்தி விற்று இலாபம் பார்ப்பவர்கள் முதலாளிகள். ‘மாசு படுத்துபவர்தான் காசு கொடுக்க வேண்டும்‘ என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பெல்லாம் இருக்கிறது. ஆனால், வேலூர் முதல் திருப்பூர் வரை எந்த இடத்திலும் முதலாளிகள் கழிவுநீரைச் சுத்திகரிப்பதில்லை. அப்படியே ஆற்றில் விடுகிறார்கள். சுத்திகரிக்க காசில்லை என்கிறார்கள். உடனே அரசு பணம் தருகிறது. ராணிப்பேட்டை சுத்திகரிப்பு நிலையத்துக்கான செலவில் 50% அரசு மானியம், 25% வங்கிக் கடன்; 25% மட்டுமே தோல் ஆலை முதலாளிகளின் காசு.

இப்படி மக்கள் வரிப்பணத்தில் சுத்திகரிப்பு நிலையத்தைக் கட்டியது மட்டுமின்றி, அதனை இயக்கும் பொறுப்பை, மக்கள் பணத்தில் மஞ்சள் குளிக்கும் இந்தத் தனியார் முதலாளிகளின் கூட்டமைப்பான ராணிப்பேட்டை சிட்கோ கழிவு நீர் சுத்திகரிப்பு நிறுவனத்திடமே ஒப்படைத்திருக்கிறது அரசு. அயோக்கியத்தனம் இதோடு முடியவில்லை.

ஒவ்வொரு ஆலை முதலாளியும் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தான் ஆனுப்பும் கழிவு நீரின் அளவுக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். 1000 கிலோ தோலை பதப்படுத்திய கழிவுநீரை அனுப்புவதற்கு உரிமத்தை வாங்கி வைத்திருக்கும் ஒரு ஆலை முதலாளி, 5000 கிலோ தோலை பதப்படுத்தி 5 மடங்கு கழிவு நீரை அனுப்புவார்.

சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்வாகத்தைக் கவனிக்கும் இயக்குநர்களான முதலாளிகளோ, கழிவு நீர் அளவை மானிகளைச் செயலற்றதாக்கி வைத்து, எல்லாம் சரியாக நடப்பதாகப் பொய்க்கணக்கு காட்டுவார்கள். இதை நேரில் வந்து கண்காணிக்க வேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளோ தங்களுக்கு வரவேண்டிய லஞ்சப்பணத்தைத் தவிர வேறு எதையும் கண்டுகொள்வதில்லை.

அன்று நடந்த படுகொலையின் பின்புலம்

பளபளக்கும் தோல்கள்
தமிழகத்தின் நீரையும், நிலத்தையும் நஞ்சாக்கி தொழிலாளர்களைச் செல்லரித்து உற்பத்தி செய்யப்படும் பதனப்படுத்தப்பட்ட தோல்கள் பயன்படுவது யாருக்கு?

பத்து உயிர்களைக் காவு வாங்கிய அந்த தொட்டி உடைந்தது ஏன்? சுத்திகரிப்பு நிலையத்தில் ஆலைகளிலிருந்து வந்து சேரும் கழிவுநீரை 20 மணி நேரம் வரை சேமித்து ஒருபடித்தானதாக மாற்றும் தொட்டியானது சமன் செயும் தொட்டி (equalization tank) என்று அழைக்கப்படுகிறது. அந்தத் தொட்டியில் எந்திரங்களால் இயக்கப்படும் கலக்கிகள் மூலம் கழிவுகள் கீழே படிந்து விடாமல் தடுப்பதும், சல்ஃபைடுகள் ஆக்சிஜன் ஏற்றம் செய்வதும் நடக்க வேண்டும்.

சிப்காட் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை விதிப்படி கையாளாமல், சமப்படுத்தல் தொட்டியிலிருந்து எடுத்த இரசாயன சகதியை தேக்கி வைப்பதற்கு, முறையான அனுமதிகள் இன்றி சட்டவிரோதமாக ஒரு தொட்டியைக் கட்டியிருக்கின்றனர் அதை நிர்வகித்த முதலாளிகள்.

அந்தத் தொட்டியில் நிரப்பப்பட்டிருந்த இரசாயனக் கழிவு சகதியின் அழுத்தம் தாங்காமல்தான் பக்கச் சுவர் உடைந்து பல நூறு டன் அளவிலான இரசாயனக் கழிவு சுனாமியாக வெளியேறி தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களின் உயிரைப் பறித்திருக்கிறது.

தோல் கழிவுகளை தேக்கி வைக்கும் அல்லது சுத்திகரிக்கும் பகுதிகளில் உருவாகும் ஹைட்ரஜன் சல்ஃபைடு வாயு, தேய்த்து வைத்த பித்தளைக் குடத்தை சில மணி நேரத்தில் பச்சையாக்கி விடும்; புதிதாக வாங்கி மாட்டும் வெள்ளிக் கொலுசை ஓரிரு நாட்களில் கருப்பாக்கிவிடும்; சிப்காட் பகுதி மண்ணில் இருக்கும் குரோமியத்தின் அளவு, தொழிற்சாலைக் கழிவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 மடங்குக்கும் அதிகமாக உள்ளது. அப்படியானால் இது, இந்த வட்டாரத்தில் வசிக்கும் மக்களின் உடலில் எத்தனை வகையான நோகளை தோற்றுவிக்கும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளலாம்.

இரசாயனக் கழிவுகள் தோற்றுவிக்கும் இந்த அழிவுகளைப் பற்றியெல்லாம் நம்மைக் காட்டிலும் தோல் ஆலை முதலாளிகளுக்கு நன்றாகத் தெரியும். தெரிந்தேதான் இந்த நச்சுக் கழிவுகளை அவர்கள் சுத்திகரிக்காமல் வெளியேற்றுகிறார்கள். சுத்திகரிப்பதற்கு ஆகும் செலவைத் தவிர்த்தால் கூடுதல் இலாபம் என்ற ஒரு காரணத்தை தவிர இதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.

போபால் முதல் இராணிப்பேட்டை வரையில் எங்கே இது போன்ற மரணங்கள் நேர்ந்தாலும், அவற்றை முதலில் “விபத்து” என்று சொல்லி மடையடைக்கப் பார்க்கிறார்கள். இராணிப்பேட்டையில் நடந்துள்ள முறைகேட்டைப் போல மறைக்க முடியாத குற்றமாக இருக்கும் பட்சத்தில், குற்றமுறு அலட்சியம் என்ற குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செகிறார்கள். குடந்தை பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் கொல்லப்பட்ட நிகழ்வைப் போன்ற சாவுகளாக இருந்தால், கொலைக்குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றம் என்று போலீசு வழக்கு பதிவு செகிறது.

ஆனால் உண்மை என்ன? கிரிமினல் சட்ட மொழியில் சொல்வதென்றால் இவை அனைத்தும் ஆதாயத்துக்காக செயப்படும் கொலைகள்.

வேலூர் மாவட்டத் தோல் ஆலைகள் – வரலாறு

20-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் காலனிய ஆட்சியாளர்களின் தேவைக்காக கன்றுக்குட்டி தோலை சுண்ணாம்பிலும், மரச் சாறுகளிலும் பதப்படுத்தி அனுப்பும் வியாபாரத்தை வட ஆற்காடு மாவட்டத்தின் இசுலாமிய வியாபாரிகள் செய்து வந்தனர். அதில் வெளியான மக்கும் தன்மையுடைய விலங்கு மற்றும் தாவரக் கழிவுகளை இயற்கை செரித்துக் கொண்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இலாப வீதத்தை பல மடங்கு பெருக்க குரோமியம் உப்புகள், இரசாயன உப்புகள் மற்றும் பிற வேதிப் பொருட்களைப் பயன்படுத்தித் துரிதமாகத் தோல் பதனிட்டு, உலகளாவிய அளவில் சந்தைப்படுத்தும் வணிகம் வளர ஆரம்பித்தது. ஐரோப்பிய நாடுகளில் நீரையும், நிலத்தையும் பாழாக்கும் இரசாயன கழிவுகளுக்கு எதிர்ப்பு வலுக்கவே, இந்தத் தொழில் இந்தியா போன்ற நாடுகளின் தலையில் கட்டப்பட்டது.

“இந்தியாவிலிருந்து பச்சைத் தோல் மற்றும் அரை பதப்படுத்தப்பட்ட தோல்களின் ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும். முழுமையாக செம்மைப்படுத்தப்பட்ட நிலையில்தான் தோலை ஏற்றுமதி செய்ய வேண்டும். அப்போதுதான் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும், நாட்டுக்குத் தேவையான அன்னிய செலாவணி கிடைக்கும்” என்று இந்திய அரசு 1972-ம் ஆண்டு முடிவு செய்தது.

அதை ஒட்டி 1970-களில் ராணிப்பேட்டையில் இப்போதைய சிப்காட் வளாகம் ஆரம்பிக்கப்பட்டது. குரோமிய உப்பு கொண்டு தோல்களை செம்மைப்படுத்தும் ஆலைகளும் செயல்பட ஆரம்பித்தன. பேரழிவு தொடங்கியது.

என்ன ஆதாயம்? யாருக்கு ஆதாயம்?

யாருடைய ஆதாயத்துக்காக? தோல் தொழிற்சாலை முதலாளிகளின் ஆதாயத்துக்காக! லஞ்சப் பேய்களான அதிகாரிகள், ஓட்டுப் பொறுக்கிகளின் ஆதாயத்துக்காக! இவர்கள் மட்டுமல்ல; இவர்களைவிட முக்கியமாக, இந்த தோல் பொருள் விற்பனையில் கொள்ளை இலாபமீட்டும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதாயத்துக்காக!

ஆம். மண்ணையும், நீரையும் நஞ்சாக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரங்களை அழித்து, தொழிலாளர்களை கொத்தடிமைகளாகச் சுரண்டி நடத்தப்படும் இந்தத் தோல் துறையின் உற்பத்தி நம் நாட்டுக்கானது அல்ல. மேற்கத்திய மேட்டுக்குடியினர் பயன்படுத்தும் செருப்புகளையும், மேல் அங்கிகளையும், அலங்காரப் பொருட்களையும் தயாரிப்பதற்காகத்தான் தோல் ஏற்றுமதி நடக்கிறது. இதன் மூலம் கிளார்க்ஸ், ஹூகோ பாஸ், ஹஷ் பப்பீஸ், மார்க்ஸ் – ஸ்பென்சர், ரீபோக், டாமி ஹில்ஃபிகர், கோச், கெஸ் உள்ளிட்ட பன்னாட்டு வணிக முத்திரை நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. அவர்களுக்குப் பதப்படுத்தப்பட்ட தோலை ஏற்றுமதி செய்யும் உள்நாட்டு முதலாளிகளும் லாபமடைகின்றனர்.

“தோல் துறையின் மூலம் நாட்டுக்குத் தேவையான அந்நியச் செலாவணி கிடைக்கிறது” என்றும், “ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது” என்றும், இலாப வேட்டைக்கான இந்த நடவடிக்கைகளை புனிதப்படுத்தி எந்திரங்கள், இரசாயனங்கள் இறக்குமதி செய்து கொள்ள வரிச்சலுகை, வருமான வரிச்சலுகை, தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு மானியங்கள் என்று மக்களின் வரிப்பணத்தால் முதலாளிகளைக் குளிப்பாட்டுகிறது, அரசு.

தோல் தொழிற்சாலைகள் அளிக்கும் வேலைவாய்ப்பு என்பது, கழிவு நீரால் பாலாற்றையும் குடிநீரையும் பாசன நீரையும் விளைநிலத்தையும் காற்றையும் நஞ்சாக்கி, விவசாயத்தை அழித்து, இலட்சக்கணக்கான விவசாயிளை வேலையற்றவர்களாக்கிவிட்டு, சில ஆயிரம் பேருக்கு வழங்கப்படும் வேலை வாய்ப்பு. அதுவும், இரசாயனக் கழிவுகளால் அரித்துத் தின்னப்படுவதற்கு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு. ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி என்பது முதலாளிகள் ஈட்டும் கொள்ளை இலாபம்.

பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகளின் இலாப வேட்டைக்கு நமது மண்ணையும் மக்களையும் இப்படி இரையாக்குவதைத் தீவிரப்படுத்துவதற்குத்தான் “மேக் இன் இந்தியா” என்று கூவுகிறார் மோடி. இராணிப்பேட்டை போல இன்னும் எத்தனை சாவுகளை இந்தியா உருவாக்க வேண்டும்?

– அப்துல்
______________________________
புதிய ஜனநாயகம், மார்ச் 2015
______________________________