privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்டி.டி.கே : ஆணுறையில் இலாபம் - தொழிலாளியிடம் நட்டமா ?

டி.டி.கே : ஆணுறையில் இலாபம் – தொழிலாளியிடம் நட்டமா ?

-

டி.டி.கே பி.டி.எல் (TTK – PDL) நிறுவன தொழிலாளர்கள் போராட்டம்

டி.டி.கே
டி.டி.கே

50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் டி.டிகே பி.டி.எல் நிறுவனம் தனது பன்னாட்டு கூட்டு நிறுவனமான RB (ரென்கிட் பென்கிசர்) உடன் லாபம் சுவீகரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையின் விளைவாக சென்னை பல்லாவரத்தில் உள்ள அதன் தொழிற்சாலையை சட்டவிரோதமாக இழுத்து மூடி, தொழிலாளர்களின் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

டிடிகே நிறுவனம் 1952-ல் காண்டம் இறக்குமதி செய்து விற்கும் நிறுவனமாக துவங்கப்பட்டு, 1963-ல் எல்.ஆர்.சி (LRC) என்ற லண்டன் ரப்பர் கம்பெனி கூட்டுடன் காண்டம் உற்பத்தி செய்து விற்கும் நிறுவனமாக மாறியது. 1976-ல் ஏற்றுமதி நிறுவனமாக வளர்ந்தது. இதற்காக அதிக திறன் கொண்ட தொழிற்சாலைகளை ஆரம்பித்தது. அதை முதலில் சென்னையில் உருவாக்கி வளர்த்து பிறகு விருதுநகரிலும் நிறுவியது.

இந்தக் காலகட்டங்களில் உற்பத்தியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் உழைப்பால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. காண்டம் உற்பத்தியில் தேர்ந்த அனுபவம் பெற்ற முன்னணி தொழிலாளர்களுடன் 1990-களுக்குப் பிறகு வந்த தொழிலாளர்களும் இணைந்து புதிதாக உருவாக்கப்பட்ட மினி ஆட்டோமேடிக் பிளாண்டில் (சிறு தானியங்கி ஆலை – மேப் – map) தேர்ச்சி பெற்று, தொடர்ந்து உன்னத நிலையை எட்டியதன் விளைவாக இங்கு பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் விருதுநகரிலும் தொழிற்சாலைகளை உருவாக்கி உற்பத்தி துவங்கப்பட்டது. மேலும் தொடர்ந்து 1992-ல் தர நிர்ணய விருதும், 1994-ல் சர்வதேச அளவிலான டெண்டர் வணிகத்திலும் 1998-ல் ஒரு பில்லியன் அளவைத் தாண்டும் அளவிற்கும் டி.டி.கே நிறுவனம் வளர்ந்தது.

மேலும் 1999-ல் சேதாரம் இல்லாத உற்பத்தி இலக்கை எட்டும் ஜப்பானிய உற்பத்தி முறையான முழுமையான உற்பத்தித் திறனும் பராமரிப்பும் (Total Productivity and Maintenance) என்ற முறையில் 2001-ல் ஈ.எம்.எஸ் (EMS)-ஐ அடைந்தது. 2003-ல் புதுச்சேரியில் மிடி ஆலையை உருவாக்கியது. எக்சலன்ஸ் அவார்ட் (Excellence award) II பிரிவும், 2004-ல் டி.பி.எம் II பிரிவு விருதும், 2005-ல் டி.பி.எம் I பிரிவு விருதும் வாங்கியது. 2006-ல் ஐ.எஸ்.ஓ 14001-2004 வாங்கப்பட்டது. 2009-ல் டி.பி.எம் சிறப்பு விருது வாங்கியது. 2011-ல் உலகத் தரம் (World Class) விருதுக்கு முயன்றது.

இதுவரை நடந்தவைகளில் தொழிலாளர்களின் சீரிய உழைப்பையும் ஈடுபாட்டையும் நிர்வாகம் மறுக்க முடியாது. இந்த முன்னேற்றத்திற்காக கட்டாய மிகை நேர உழைப்பு கொடுக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டனர். பல வருடங்களாக வேலை முடித்து வீடு திரும்ப முடியாமல் பாடுபட்டனர்.

1990-லிருந்து 2011 வரை மேற்கொண்ட புதிய முத்திரை உற்பத்தி அனைத்திலும் வளர்ந்ததற்கு தொழிலாளர்களின் அயராத உழைப்புதான் காரணம்.

நிறுவனத்தின் காண்டம் உற்பத்திக்குத் தேவையான ஆலைகளை உருவாக்குவது, வளர்ப்பது, பரிசோதனை செய்வதற்கான மின்னணு எந்திரங்களை உருவாக்குவது, ஃபாய்லிங் மெசின்களை (Foiling machines) உருவாக்குவது என இந்த உற்பத்திக்குத் தேவையான தொழில் நுட்ப இயந்திரங்கள் அனைத்தும் தொழிலாளர்களின் உழைப்பால் உருவாக்கி வளர்க்கப்பட்டது. நிறுவன வளர்ச்சியின் ஒவ்வொரு ஆரம்பமும் முதலில் சென்னையில் துவங்கப்பட்டு முன்னேற்றம் கண்ட பிறகு விருதுநகர், புதுச்சேரிக்கு உற்பத்தி செய்ய கொண்டு சென்ற வரலாற்றையும் நிர்வாகம் நன்கு அறியும்.

1990-க்குப் பிறகு நிர்வாகம் செய்த வளர்ச்சிக்கு பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்றுதான் செய்தது, இந்தக் கடனை அடைத்து தொடர்ந்து கம்பெனி நல்ல நிலையில் லாபத்தில் இயங்கிக் கொண்டு இருந்தது.

இந்நிலையில் டி.டி.கே குழுமத்துக்கும் ரென்கிட் பென்கிசர் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு கம்பெனி போர்டுக்கு போனது. டி.டி.கே குழுமம் தனது நிலைப்பாட்டில் விட்டுக்கொடுக்காமல் முரண்டு பிடித்ததால் வழக்கு உயர் நீதிமன்றத்திற்குப் போனது. அங்கும் ஆர்.பி.யின் கோரிக்கையை டி.டி.கே குழுமம் ஏற்காததால் நிறுவனத்தை யாராவது ஒருவர் எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் வழி காட்டியது. அதன்படி ஆர்.பி – டி.டிகே.வுக்கு இடையேயான முரண்பாடு முடிவுக்கு வந்ததின் அடிப்படையில் டி.டி.கே. குழுமம் நிறுவனத்தை 2014 பிப்ரவரியில் எடுத்தது.

ஆர்.பி டி.டி.கே பிரச்சினை வரும் வரை ஒவ்வொரு மாதமும் 50 மணி நேரம் முதல் 150 மணி நேரம் வரை ஓவர் டைம் செய்துள்ளனர், தொழிலாளர்கள். இதுவரை தொழிலாளர்கள் தங்கள் சர்வீசுக்கு இணையான நாட்கள் ஓவர் டைம் செய்துள்ளனர். இப்படி இரட்டிப்பு சர்வீசோடு கடுமையாக உழைத்த தொழிலாளர்களை இந்த கம்பெனியை நம்பி வாழ்க்கையை நடத்தி வந்தவர்களை நடுத் தெருவில் நிறுத்துவதற்கு ஒப்பான ஒரு நிலைமையை நிர்வாகம் அறிவித்துள்ளது.

1990-க்குப் பிறகு வந்த ஒவ்வொருவரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் குக்கிராமங்களிலிருந்து பள்ளிக் கல்வியை முடித்த கையோடு வந்து 15-லிருந்து 20 வருடம் சர்வீஸ் செய்து நிரந்தரமாகி உள்ளனர். மேலும் 15-லிருந்து 20 வருடங்கள் சர்வீஸ் செய்ய வேண்டியவர்களாகவும் இருக்கின்றனர். இந்த வேலையை நம்பி எல்லோரும் குடும்பமாகவே சென்னையில் அக்கம், பக்கம் வந்து தங்கியுள்ளனர். குடும்பம், வீடு, வாசல், பிள்ளை என உருவாகிக் கொண்டிருக்கிற நேரம் இது. இந்த நிலையில் நிர்வாகம் தொழிலாளர்களை வேலையிலிருந்து வெளியேற்றுவது என்பது அவர்களது வாழ்க்கையைப் பறித்து இரண்டும் கெட்டானாக தெருவில் நிற்க வைத்துவிடும்.

 [நோட்டிசை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

ஆர்.பி – (ரென்கிட் பென்கீசர் – Renkitt Bengiser), டி.டி.கே குழுமம் இரண்டு முதலாளிகளுக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டபொழுது நிறுவன முதலாளி டி.டி. ரகுநாதன்  அனைவரையும் பொறுமை காக்கும்படியும், கைவிட மாட்டோம் எனவும் வாக்குறுதி கொடுத்துச் சென்றார். இன்று நிர்வாகம் நடத்துவதில் இயலாமை உள்ளதாக புதிதாக உருவாக்கப்பட்ட விருதுநகர் மற்றும் புதுச்சேரிகளில் உற்பத்தியினைத் தொடர்ந்து செய்து கொண்டு சர்வதேச அளவில் டி.டி.கே குழுமம் வளர அடிப்படையாக இருந்த பல்லாவரம் தொழிற்சாலையின் தொழிலாளர்களை எந்த வேலையும் கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.

தொழிற் சங்கத்தின் துணை விதி 19(சி)-ன் படி 22.12.2013இல் நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழு மூலம் ச. நாச்சியப்பன் தலைவராகவும், ர. ரெங்கநாதன் துணைத் தலைவராகவும், இல. பழனி பொதுச் செயலாளராகவும், பா. கல்யாணசுந்தரம், ந. ஸ்ரீதர் இணைச் செயலாளர்களாகவும், ப. நெடுமாறன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தின் பழைய நிர்வாகிகளாக இருந்த பு. ஸ்ரீதர் தலைவராகவும், திருமதி. லட்சுமிபாய் துணைத் தலைவராகவும், வே. புருஷோத்தமன் பொதுச் செயலாளராகவும், சக்திவேல், சுரேஷ் இணைச் செயலாளர்களாகவும், ஏ. வெங்கடேசன் பொருளாளராகவும் செயல்பட்டு வந்தனர். இவர்கள் முறையாக சங்கத்தின் பொறுப்பையும் ஆவணத்தையும் ஒப்படைக்காமல் மறுத்து வந்தனர்.

இவர்கள் 2012 செப்டம்பரில் நடந்த தேர்தல் மூலம் சங்கத்தின் பொறுப்புக்கு வந்தார்கள். 2013 ஆகஸ்டுடன் இவர்களது பதவிக் காலம் முடிவு பெற்றது. இவர்கள் மூலம் தொழிலாளர்களின் எந்தப் பிரச்சினைக்கும் முறையான செயற்குழு, பொதுக் குழு போட்டு விவாதித்து நடைமுறைப் படுத்தவும் இல்லை. தீர்க்கப்படவும் இல்லை.

ஒரு பக்கம் கூட்டு நிறுவனங்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டு தொழிலாளர்களுக்கு நிர்வாகம் நெருக்கடியைக் கொடுத்தது.  தொழிற்சங்க நிர்வாகிகளுடன் முறையாக பேசாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து, இவர்களால் ஏற்பட்ட முரண்பாட்டை பயன்படுத்தி இவர்களுடன் தனியாக பேச்சு வார்த்தை நடத்தி, ஆலையை மூடப் போவதாக அறிவித்து, தொழிலாளர்களை வி.ஆர்.எஸ் (V.R.S)-ல் போகும்படி செய்தது. தொழிற் தகராறுகள் சட்டம் 1947-ல் அட்டவணை V -ல் கூறப்பட்ட அனைத்து வகை தொழிலாளர் விரோதப் போக்குகளையும் நிர்வாகம் பிரயோகித்து வந்தது.

சங்கத்தின் துணை விதிப்படி தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுடன் பேசாமல் காலாவதியான சங்க நிர்வாகிகளுடன் பேசுவதன் மூலம் தொழிலாளர்களை அச்சுறுத்தி, பணிய வைத்து வி.ஆர்.எஸ் (VRS – Voluntary Retirement Scheme – விருப்ப ஓய்வுத் திட்டம்) என்ற பெயரில் சி.ஆர்.எஸ் (CRS – Compulsory Retirement Scheme – கட்டாய ஓய்வுத் திட்டம்) கொடுத்து அனுப்பியுள்ளது. இது சம்பந்தமாக நிர்வாகம் சங்கத்து நிர்வாகிகளுடன் சட்டப் படியான எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை.

தொழிலாளர்களை சி.ஆர்.எஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்புவதற்கு பழைய நிர்வாகிகளை சட்ட விரோதமான வழிமுறைகளை நிர்வாகம் பயன்படுத்தியுள்ளது. இவ்வாறு நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படுவதன் மூலம் தாங்கள் பலன் அடையும் நோக்கத்திலேயே இவர்கள் செயல்பட்டனர்.

தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் தொலைபேசி மூலம் பல நாட்கள் ஒரு தொழில் முறை தரகரைப் போல,

‘கம்பெனி ஓடாது என நிர்வாகம் அறிவித்துவிட்டது. நமது நிறுவனத்தின் கார்ப்பரேட் வைஸ் பிரசிடெண்ட் அறிவித்து விட்டார்கள், கிடைப்பதை இப்போதே வாங்கிவிட்டால் தப்புவீர்கள், இல்லையென்றால் ஒன்றுமில்லாமல் போக வேண்டியதுதான், 01-02-2015 முதல் கம்பெனிக்குப் பூட்டு போட்டு விடுவார்கள். இதை உங்கள் நன்மைக்காக சொல்கிறோம், வி.ஆர்.எஸ் வாங்கி விடுங்கள்’ என ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவரின் மனைவிக்கும் போன் மூலம் பேசியதோடு வீடுகளுக்கு நேரில் சென்று அச்சுறுத்தியும் உள்ளனர். முதலில் 33 பேரையும், 30-01-2015 பிற்பகல் 5 மணியிலிருந்து இரவு 10 மணிக்குள் 91 தொழிலாளர்களையும் வி.ஆர்.எஸ் மூலம் வெளியேற்றிவிட்டனர்.

மேலும் 30-01-2015 வி.ஆர்.எஸ்-ல் சென்ற 91 நபர்களிடம் எதுவும் எழுதப்படாத நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்து மட்டும் வாங்கி சங்கத்தை கலைக்க இவர்கள் முயற்சி செய்தனர். இதை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். பொதுக்குழு போட்டது போன்ற பொய்யான ஆவணத்தைத் தயாரித்து சங்கத்தின் நிதியைக் களவாட முயற்சி செய்தனர். இவர்கள் தொடர்ந்து தொழிலாளர்களைக் குழப்பிக் கொண்டு இருந்தனர்.

இப்பொழுது நிறுவனத்தில் 62 தொழிலாளர்கள் உள்ளனர். நிர்வாகம் தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து உளவியல் ரீதியான டார்ச்சர்களைக் கொடுத்தது. எந்த வேலையும் கொடுக்காமல் உட்கார வைத்தது.

2014 அக்டோபர், நவம்பர் மாத சம்பளத்தை நிறுத்தியது, கேண்டீனை மூடியது, மேற்கண்டவைகளுக்கு நிர்வாகம் எந்தவிதமான சட்டப்பூர்வமான அனுமதியும் பெறவில்லை. தொழிலாளர்களுக்கு முன் அறிவிப்பும் செய்யவில்லை. சங்கத்தின் புகாரின் அடிப்படையில் தொழிற்சாலை ஆய்வாளர், தொழிலாளர் துறை இணை ஆணையர் சமரசம் (2) ஆகியோரின் உத்தரவின் பேரில் சரி செய்யப்பட்டு சுமூக நிலைக்கு நிர்வாகம் வந்தது.

அடுத்த கட்டமாக நிர்வாக ரீதியிலான பணியாளர்களைத் தனது பிற கிளையான விருது நகர், புதுச்சேரிக்கு தற்காலிகமாக போகுமாறு கட்டாய இடமாற்றத்தினை செய்து அனுப்பியது. நிறுவனத்தின் ஒவ்வொரு அறையையும் பூட்டு போட்டு பூட்டி வைத்துள்ளது. இப்போது கழிவறைக்குக் கூட பூட்டு போட்டு பூட்டியுள்ளது நிர்வாகம்.

 [நோட்டிசை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

கேன்டீனில் வழங்கப்படும் உணவு பேருந்து நிலையத்தில் நடத்தப்படும் சுகாதாரமற்ற ஒரு ரோட்டோரக் கடையிலிருந்து வாங்கி வழங்கப்படுகிறது. இந்த உணவு போதிய அளவும் இல்லை. இவர்கள் கொடுக்கும் டீ, டிபன், உணவு போன்றவைகளை உட்கொள்ளுவதால் தொழிலாளர்களுக்கு செரிமான குறைவு, தொண்டை எரிச்சல், ஒவ்வாமை போன்ற உடல் ரீதியான தொந்தரவுகளைக் கொடுக்கிறது. டீயில் சாக்ரீன் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு தொழிலாளர்கள் குடிக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்குகிறது. இதனால் இவர்கள் கொண்டு வரும் உணவுகள் தொழிலாளர்களால் தவிர்க்க முடியாத போது மட்டுமே உட்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. தினமும் பாதி வீணாகப் போகிறது. இதன் மீது நிர்வாகத்திடமிருந்து ஒரு நியாயத்தைக் கோரிப் பெற இயலாத நிலையில் குமுறிக் கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்கள் வெறுப்போடு வெளியேறுவதற்கு இதுவும் ஒரு பிரதான காரணமாக இருந்தது.

பல்லாவரம் தொழிற்சாலையில் ஆர்டர் இல்லை, ஆலையை மூடப் போகிறேன் என இந்தக் கம்பெனிக்கு சம்மந்தமில்லாத தனது வேறு கம்பெனியின் எம்.டி.யாக உள்ள திரு கல்யாணராமன் மூலம் தொழிலாளர்களுக்கு மிரட்டல் விட்ட நிர்வாகம், விருதுநகர், புதுச்சேரி தொழிலாளர்களைக் கூட்டி அழைத்து தனக்கு ஆர்டர் வரவுகள் அதிகரித்துக் கொண்டுள்ளது. “தொழிலாளர்கள் ஒத்துழைக்கவில்லையானால் நாங்கள் அந்த ஆர்டர்களை வாங்கி நடத்த முடியாமல் போய்விடும், எனவே, தொழிலாளர்கள் தங்கள் உற்பத்தி இலக்கை உயர்த்தி பொறுப்புடன் வேலை செய்ய வேண்டும்” எனக் கோரியுள்ளது.

தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சு வார்த்தையைத் துவங்கி இடைக்கால ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என அறிவித்த நிர்வாகம் தனது முடிவை மாற்றியதற்கான சட்டப்படியான ஆதாரங்கள் எதையும் காட்டவோ கொடுக்கவோ இல்லை, 180 பேருக்கு மேல் தொழிலாளர்கள் உள்ள ஆலையை 15 லிருந்து 20 ஆண்டுக்குள் பணித் தொடர்ச்சி உள்ளவர்களைத் தொழிலாளர் துறை அரசு செயலரிடம் அனுமதி பெற்று மட்டுமே இந்த முடிவை எடுக்கமுடியும். இதனைத் தொழிலாளர்களுக்கும் காட்டவேண்டும் என சட்டம் கூறுகிறது. இவை எதையும் நிர்வாகம் கடைபிடிப்பதாக இன்று வரைக்கும் தெரியவில்லை, வி.ஆர்.எஸ்-க்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் கடைப்பிடிக்கவில்லை.

தனது மூன்று ஆலைகளிலும் ஆட்குறைப்பு செய்யப் போவதாக அறிவித்த நிர்வாகம் பல்லாவரம் கிளையில் மட்டும் இதனை முனைப்புடன் செயல்படுத்துவதற்கான காரணம் கூறப்படவில்லை.

தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஆன சமசர பேச்சுவார்த்தை ஒன்று நிலுவையில் இருக்கும்போது நிர்வாகம் மூடப் போவதாக அறிவித்தது.

1947 தொழிற் தகராறு சட்டப்படி இதுபோன்ற நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ள முடியாது.  எனவே, சுமுகமான முறையில் சம்பள உயர்வு பேச்சு வார்த்தையை முடித்து நிறுவனத்தை நடத்த ஆவன செய்ய வேண்டும்.

1990 முதல் நிர்வாகம் சிறந்த நிர்வாகிகளைக் கொண்டு சர்வதேச அளவில் இத்தனை அவார்டுகளைப் பெறும் அளவிற்கு வளர்ந்தது, அதே போன்று மீண்டும் தகுதி வாய்ந்த நிர்வாகிகளை உருவாக்கி இந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.

குறிப்பு : டி.டி.கே. குழும நிறுவனம் என்பது டி.டி.கிருஷ்ணமாச்சாரி என்பவரின் குடும்ப நிறுவனம் ஆகும். இவர் சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சராகவும் மற்றும் இந்திய சாசன வரைவுக் குழுவின் முக்கிய அங்கத்தினர்களில் ஒருவராகவும் இருந்து செயல்பட்டவர். இவர் குடும்பம் 28 வகையான தொழில்களை இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் நடத்தி வருகிறது.

தகவல்

இல. பழனி,
பொதுச் செயலாளர்,
டி.டி.கே. பிடிஎல் தொழிலாளர் சங்கம்.
(முன்னர் – டிடிகே எல்.ஐ.ஜி. லிட்., தொழிலாளர் சங்கம்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க