privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்திருவாரூர் கட்டிடம் இடிந்து 5 பேர் பலி - விபத்தா படுகொலையா ?

திருவாரூர் கட்டிடம் இடிந்து 5 பேர் பலி – விபத்தா படுகொலையா ?

-

திருவாரூர் மத்திய பல்கலைகழக கட்டிடம் கட்டும் போது இடிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் பலி, 16 பேர் படுகாயம். இது விபத்தா? இல்லை படுகொலையா?

திருவாரூர் நகரத்திற்கு அருகில் தமிழ்நாடு மத்திய பல்கலைகழகமும், கேந்திரிய வித்யாலயா பள்ளியும் 2009–ம் ஆண்டிலிருந்து இயங்கிவருகின்றன. இதில் பணிபுரியும் ஆசிரியர்கள், பேராசியர்கள், அலுவலர்களுக்கு குடியிருப்பு கட்டுமான பணிகள் நடந்துவருகிறது. 29-03-2015 ஞாயிறு காலை 8.50 மணியளவில் நாலாவது தளத்தில் இருந்த ஒரு தூண் முறிந்து மூன்றாவது தளத்தில் விழுந்தது. இதையடுத்து அனைத்து தளத்திலும் அமைக்கப்பட்ட சென்ட்ரிங் பலகைகள், கம்பிகள் அடுத்தடுத்து விழுந்தன. இதில் சென்ட்ரிங் பணியில் ஈடுபட்டிருந்த 21 தொழிலாளர்கள் சிக்கினர். அதில் 5 தொழிலாளர்கள் கொடூரமாக இறந்து போயினர். பலத்த காயமடைந்த 16 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இறந்தவர்களில் 2 தொழிலாளர்கள் தமிழ்நாட்டையும், 3 பேர் வடமாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.

திருவாரூர் கட்டிட இடிபாடு
இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.

“கான்கிரிட் போடப்பட்டு குறைந்தது 15 நாட்களுக்கு தண்ணீரால் நனைத்து இறுகச் செய்ய வேணடும்; ஆனால் இரண்டே நாளில் அவசர அவசரமாக, இரவு பகல் பாராமல் வேலை தொடங்கியது தான் இவ்விபத்திற்குக் காரணம்” என்று அங்குள்ள மற்ற தொழிலாளர்களும், மக்களும் கூறினர்.

அதுமட்டுமல்லாமல் தற்போது, “கட்டுமானத்திற்கு பயன்படுத்திய தண்ணீர் தரமற்றது, பயன்படுத்தக்கூடாது என்று தடைசெய்யப்பட்டு கடைசி நேரத்தில் அனுமதி வழங்கியதில் மர்மம் உள்ளது” என்று செய்திகள் வெளிவருகின்றன. எவ்வாறாயினும் இதுபோல் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அதிகாரிகளின் ஊழல், அலட்சியம், முதலாளிகளின் அவசரம் போன்றவையே காரணம் என்பது உறுதியாக தெரிகிறது. இதெல்லாம் விபத்து என்று சொல்வது அதற்கு காரணமானவர்களை தப்பிக்க வைக்கும் தந்திரமே, ஆகவே இது விபத்தல்ல படுகொலை.

சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து என்ற பெயரில் நடந்த கொலையோ, ஜேப்பியர் கல்லூரி விளையாட்டு அரங்கத்தை வேகமாக கட்டி பத்து பேரைக் கொன்றதையோ யாரும் மறந்துவிட முடியாது.

இந்த விபத்திற்கு காரணமாக மேற்பார்வையாளர்கள், பொறியாளர்கள, கீழ்நிலை ஒப்பந்தகாரர்களையே அரசு நிர்வாகம் கைது செய்துள்ளது. ஆனால், இதற்கு முக்கிய காரணியான அரசு அதிகாரிகளையோ, ஒப்பந்த உரிமை பெற்றுள்ள  நிர்வாகத்தின் அதிகாரிகளையோ கைது செய்யவில்லை. மாவட்ட ஆட்சியரோ ‘அரசு தன் கடைமையை செய்யும்’ என்பது போல பசப்புகின்றார்.

திருவாரூர் கட்டிட இடிபாடு
“இறந்தவரின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கினால்தான் சடலத்தை வாங்குவோம்” என்று மருத்துவமனைமுன்பு மறியலில் ஈடுபடும் வி.சி. கட்சியினரும், பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த மக்களும்.

மத்திய பல்கலைகழகம் வருவதற்கு முன்பு இப்பகுதியில் உள்ள கிட்டதட்ட 500 ஏக்கர் தியாகராஜா கோவில் நிலத்தில் விவசாயம் நடந்துவந்தது; அது அப்பகுதியை சேர்ந்த நீலக்குடி, தியாகராஜபுரம், சக்கரமங்களம் கிராமத்தை சேர்ந்த கிராம மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தது.

தற்போது, இந்த நிலங்கள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு மத்திய பல்கலைகழகம் கட்டப்பட்டுள்ளது. மக்களிடமிருந்து பிடுங்கப்பட்டு அலுவலர்களுக்கு கட்டிதரப்பட்டுள்ள சொகுசு மாளிகைளுக்கா ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் தியாகராஜபுர மக்களின் வீடுகளை விரட்டியடிக்கத்தான் அரசு முயல்கிறது.

அவர்கள் குடியிருக்கும் இடத்தையும் விட்டு விரட்டியடிக்க பல வித்தைகளை ‘மக்கள் நல அரசு’ முயற்சி செய்கிறது. அம்மக்கள் இங்கு குடியிருக்கவும் முடியாமல், வேறு இடம் செல்லவும் வழியில்லாமல், வேலையும் கிடைக்காமல் தவிக்கின்றனர். இவ்வாறு கூலி விவசாயிகளை விவசாயத்தை விட்டு ‘வளர்ச்சி’ என்ற பெயரில் விரட்டியடித்தது மட்டுமில்லாமல் இப்பொழுது கூலி தொழிலாளியாக்கி படுகொலையும் செய்கிறது, ‘வளர்ச்சி’.

திருவாரூர்
மக்களை விரட்டியடிக்கும்…

மார்க்சிய ஆசான்கள் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் பாட்டாளி வர்க்கத்தின் நிலையை  விளக்கும் போது “தொழிலாளியினது உற்பத்திச் செலவு அனேகமாய் முற்றிலும் அவரது பராமரிப்புக்கும் அவரது இன விருத்திக்கும் தேவையான பிழைப்புச் சாதனங்களுக்கு மேற்படாதபடி குறுக்கி விடுகிறது” என்று கூறினார்கள். ஆனால், இன்று அந்த குறைந்த பட்ச வாழும் உரிமை கூட கிடையாது என்று மஃபியா கும்பலைப் போன்று இந்த சமூக அமைப்பும் அதைக் காப்பாறும் அரசும் எழுந்து நிற்கிறது.

திருவாரூர்
…வளர்ச்சி

இந்த மாஃபியா கும்பலிடம் நீதி, நியாயம் எதிர்பார்க்க முடியுமா? இல்லை மனு கொடுத்தாலோ, ஓட்டுப்போடுவதாலோ தீர்க்க முடியுமா? மாஃபியா கும்பலாக மாறியுள்ள இந்த அரசையும் அதன் ஒட்டுண்ணிகளையும் விரட்டியடிப்பது ஒன்றே தீர்வு.

– பு.ஜ. செய்தியாளர்,
திருவாரூர்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் மத்தியப் பல்கலைக்கழக படுகொலை குறித்து சுவரொட்டி பிரச்சாரம் திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது

tvr-building-collapse-rsyf-poster

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருவாரூர்
தொடர்புக்கு – 99434 94590