privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி தத்து விசாரிக்கக் கூடாது - PRPC

சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி தத்து விசாரிக்கக் கூடாது – PRPC

-

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
தமிழ்நாடு
எண்.50, ஆர்மேனியன் தெரு, கத்தோலிக் சென்டர் எதிரில், சென்னை – 600 001.
கை பேசி:  98428 12062,   94432 60164
——————————————————————————————————-
பத்திரிகைச் செய்தி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல் தத்து
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல் தத்து

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் பிணைக்காலம் முடிவடைவதை ஒட்டி, அவர்களது மனு ஏப்ரல் 17-ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தத்து அவர்களிடம் விசாரணைக்கு வருகின்றது.

ஏற்கெனவே திரு தத்து பிறப்பித்துள்ள பிணை உத்தரவு, சட்டத்துக்கும், மரபுகளுக்கும் முரணாகவும், ஒரு தலைபட்சமாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. மேற்கூறிய உத்தரவு தொடர்பாக அவர் மீது ஊழல் குற்றச்சாட்டும் உள்ளது. எனவே, இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து அவர் விலகிக் கொள்ள வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர்களின் ஆதரவுடன் குடியரசுத் தலைவரிடம் புகார் மனுவொன்றை அளிக்கவிருக்கிறோம்.

ஊழல், அதிகார முறைகேடுகள் ஆகியவற்றுக்காக, அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் குற்றம் சாட்டப்படுவதைப் போலவே, உயர்நீதிமன்ற நீதிபதிகளும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் குற்றம் சாட்டப்படுகிறார்கள். எனினும், “நீதிமன்ற அவமதிப்பு” என்ற அதிகாரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டும், “மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் இருந்தாலன்றி தங்களைப் பதவி இறக்கம் செய்ய முடியாது” என்ற அரசியல் சட்டப் பாதுகாப்பைப் பயன்படுத்திக் கொண்டும் பல நீதிபதிகள் கேள்விக்கிடமற்ற முறையில் ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நீதிபதி தத்து அவர்கள் வழங்கியிருக்கும் மேற்படி பிணை உத்தரவு கீழ்க்கண்ட காரணங்களினால் முறைகேடானதென்றும் சந்தேகத்திற்கிடமான நோக்கங்கள் கொண்டது என்றும் குற்றம் சாட்டுகிறோம்.

திரு தத்து, அரசியல் சட்டப்பிரிவு 136 வழங்கும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ஜெயலலிதா மற்றும் நால்வரின் பிணை மனுவை, முன்னுரிமை கொடுத்து விசாரித்திருக்கிறார். இது வெளிப்படையான முறை மீறலும் அதிகாரத்தை கேடாகப் பயன்படுத்துவதும் ஆகும்.

இந்த வழக்கில் எதிர் தரப்பான கர்நாடக அரசையும், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையையும் விசாரிக்காமலேயே, ஒரு தலைபட்சமாகவும் அவசரம் அவசரமாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக, பிணை மனுத் தாக்கல் செய்யப்பட்டால் பிணை வழங்குவதோடு அம்மனு மீதான விசாரணை முடிந்துவிடும். ஆனால், இவ்வழக்கில் தலைமை நீதிபதி தத்து, பிணை வழங்கிய பிறகும், பிணை மனு விசாரணையை நீட்டித்து, அடுத்தடுத்து உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார். இது குற்றவாளிக்குச் சாதகமானது.

ஜெயலலிதா மற்றும் நான்கு குற்றவாளிகளுக்குப் பிணை மறுப்பதற்கான காரணங்களை கர்நாடக உயர்நீதி மன்றம் தனது 40 பக்க உத்தரவில் தெளிவுபடக் கூறியிருக்கிறது. ஊழல் குற்றவாளிகள் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளில், பிணை வழங்கும்போது, அதற்கான காரணங்களைத் தெளிவாகக் கூற வேண்டுமென ஏற்கெனவே உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கிறது. இதற்கு மாறாக, கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதற்கான காரணம் எதையுமே கூறாமல், நான்கே வரிகளில் பிணை உத்தரவை வழங்கியுள்ளார் திரு. தத்து.

குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் கள்ளத்தனமாக கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறது ஜெயலலிதா அரசு என்று கூறித்தான் 2003-ல் வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம். தனக்கு விடப்பட்ட அச்சுறுத்தல்களால்தான் வழக்கிலிருந்து விலகியதாக, அரசு வழக்குரைஞர் ஆசார்யா வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறார். நீதிமன்றத்தை ஜெயலலிதா கடுகளவும் மதித்ததில்லை என்பதுதான் 18 ஆண்டு காலம் நடந்த இந்த வழக்கு கூறும் உண்மை. இங்ஙனம் நீதிமன்றத்தையே கேலிப்பொருளாக்கிய, நீதிமன்றத்தின் கருணைக்கு எந்த விதத்திலும் தகுதியற்ற குற்றவாளிகளுக்கு சலுகை காட்டியிருக்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து.

உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவும் மற்ற மூவரும் கோரியது பிணை மட்டுமே. ஆனால், அவர்களது மேல் முறையீட்டு மனுவை விரைந்து முடிக்க வேண்டும் என்ற உத்தரவை திரு தத்து பிறப்பித்திருக்கிறார். நூற்றுக் கணக்கான வழக்குகள், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, ஜெயலலிதாவுக்கு திரு தத்து வழங்கியிருக்கும் இந்த சிறப்பு சலுகை முறைகேடானது என்றும் இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்

இவை மட்டுமின்றி, திரு டிராபிக் ராமசாமி அவர்கள், “இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்னரே, திரு பாலி நாரிமனின் மகன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பதால், அவர் ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராவது பார் கவுன்சில் விதித்துள்ள நெறிகளுக்கு எதிரானது” என்று புகார் கொடுத்துள்ளார். மேலும், இதே பாலி நாரிமன் ஜெயல லிதாவுக்கு எதிராக அன்பழகனுக்காக ஆஜராகியுமிருக்கிறார். “இவ்வழக்கு தொடர்பாக உங்கள் மீது ஊழல் புகார் இருப்பதால் நீங்கள் இதனை விசாரிப்பதிலிருந்து விலகிக்கொள்ளவேண்டும்” என்றும், திரு தத்துவிடம் மனுக் கொடுத்துள்ளார். இவற்றுக்கு பதிலேதும் கூறாமலேயே, மேற்படி பிணை மனுவை திரு தத்து தொடர்ந்து கையாள்வது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை என்றும் விசாரிக்கத்தக்கது என்றும் கருதுகிறோம்.

இவை நாங்கள் மட்டும் கூறும் கருத்துகள் அல்ல. உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு ஆகியோர் மட்டுமின்றி, லைவ் லா.இன் போன்ற சட்டத்துறை சார்ந்த பத்திரிகைகளும் மேற்கண்ட தீர்ப்பை விமரிசித்திருக்கின்றன. கடந்த 3 மாதங்களில் நாங்கள் சந்தித்துப் பேசிய உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் பலரும் உச்ச நீதிமன்றத்தின் இந்த சீரழிந்த நிலை குறித்து கவலையும் கண்டனமும் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றம் சாட்டி மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தொடுத்திருக்கும் வழக்கு உச்ச நீதிமன்றத்திலேயே ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ளது.  “அமித் ஷாவை கொலைக்குற்ற வழக்கிலிருந்து விடுவித்ததற்குப் பரிசுதான் நீதிபதி சதாசிவத்துக்கு தரப்பட்டிருக்கும் கேரள ஆளுநர் பதவி” என்று ராமச்சந்திர குஹா குற்றம் சாட்டியிருக்கிறார். “கனிமவளக் கொள்ளையர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்திருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிகளும் சகாயம் குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று முன்னாள் நீதிபதி சந்துரு கருத்து தெரிவித்திருக்கிறார். முன்னாள் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் முதல் நீதிபதி கங்குலி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் வரையில் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டுகள் எவையும் விசாரிக்கப்படுவதில்லை.

ஒரு ஊழல் குற்றவாளி தொடர்பான வழக்கிலேயே இப்படியொரு முறைகேடான தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது, குடி மக்களாகிய நம் அனைவருக்கும் விடப்பட்டிருக்கும் அபாய எச்சரிக்கை. நீதித்துறை சுதந்திரம் என்பதை ஊழல் செய்வதற்கான சுதந்திரமாகப் பயன்படுத்தி வரும் நீதிபதிகள், மற்றெல்லாக் குற்றவாளிகளை விடவும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று கருதுகிறோம்.

நேர்மையான வழக்குரைஞர்கள் பலரும் தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்துகின்ற, ஆனால் பகிரங்கமாகச் சொல்லத் தயங்குகின்ற உண்மையை, நாங்கள் வெளிப்படையாக சொல்லியிருக்கிறோம். தமிழகம் முழுவதிலுமிருந்து சுமார் 1000 வழக்குரைஞர்கள் கையொப்பமிட்டு, குடியரசுத்தலைவருக்கு அளிக்கின்ற இந்த மனுவின் மூலம் நீதிமன்ற அவமதிப்பு என்பன போன்ற பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சாமல், மக்கள் மன்றத்தின் முன் இப்பிரச்சினையைக் கொண்டு வருகிறோம். டில்லி வழக்குரைஞர்களின் துணையுடன் உச்சநீதிமன்றம் முழுவதும் இப்பிரச்சினையைக் கொண்டு செல்லவிருக்கிறோம்.

ஊழலில் ஊறியவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், எந்தக் காலத்திலும் தங்களுக்கு எதிராக வாக்களிக்கப்போவதில்லை என்ற காரணத்தினால், உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எப்படி வேண்டுமானாலும் தீர்ப்பளிக்கலாம் என்ற ஆணவத்துடன், குடி மக்களை அச்சுறுத்துகிறார்கள். இதனை நாம் அனுமதிப்பது நாட்டுநலனுக்கே தீங்கானது. இத்தகைய தீர்ப்புகளையும் அவற்றை வழங்கிய நீதிபதிகளையும் மக்கள் மன்றத்தில் வைத்து நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். இவ்வாறு போராடுவது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை. நீதி என்ற பெயரில், அநீதிகள் அடுத்தடுத்து, கேள்விக்கிடமற்ற முறையில் அரங்கேறுவதை நாம் அனுமதிக்கக் கூடாது.

இவண்,

எஸ். ராஜு,
ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.