privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்பட்ஜெட் : இந்தியாவைக் கொள்ளையடிப்போம் !

பட்ஜெட் : இந்தியாவைக் கொள்ளையடிப்போம் !

-

மோடி அரசின் 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, “எட்டு சதவீத வளர்ச்சியைச் சாதிக்கக்கூடிய புத்திசாலித்தனமான, புதுமையான, ஆக்கபூர்வமான பட்ஜெட்” என இந்தியத் தரகு முதலாளிகளும், ஊடகங்களும் புல்லரித்துப் போய் புகழ்ந்துள்ளன. “இந்தியாவில் அபரித வளமாக உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால், தொழிற்சாலைகள் வர வேண்டும். தொழிற்சாலைகள் வர வேண்டுமென்றால் சாலை, ரயில் போக்குவரத்து, விமான சேவைகள், மின் நிலையங்கள் அடங்கிய அடிக்கட்டுமானத் துறையில் காணப்படும் தேக்கத்தை உடைக்க வேண்டும்” என்ற உபாயத்தோடு மோடி அரசு தமது பட்ஜெட்டைத் தயாரித்திருப்பதாகத் தரகு முதலாளிகளும் ஊடகங்களும் பட்ஜெட்டைப் பிரித்து மேந்து, அதில் புதைந்துள்ள வளர்ச்சியின் இரகசியத்தைக் கண்டுபிடித்துக் கூறி வருகின்றனர்.

“இதென்னடா, கொக்கு தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிக்கும் கதையாக மோடியின் உபாயம் இருக்கிறது” என வாசகர்கள் கருதலாம். அப்படி “சீப்பாக” மோடியின் புத்திசாலித்தனத்தை யாரும் எடை போட்டு விடக்கூடாது என்பதற்காகவே, “இந்த பட்ஜெட்டைப் புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் பொருளாதார ஞானம் இருக்க வேண்டும்” என தினமணி ஆசிரியர் வைத்தியநாத அய்யர்வாள் “சீரியசாக” தலையங்கம் தீட்டி, சாதாரண வாசகர்களைத் திகிலடைய வைக்கிறார். அய்யர்வாள் குறிப்பிடும் இந்தப் பொருளாதார ஞானம் எப்படிபட்டது தெரியுமா?

08-budget-giveaways“கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வருமான வரியை அடுத்த நான்கு ஆண்டுகளில் படிப்படியாக 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறைக்கப் போவதாக பட்ஜெட்டில் அறிவித்திருப்பதை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட அதீதமான சலுகை என வாய் புளித்ததோ மாங்கா புளித்ததோ என்ற கணக்கில் விமர்சிக்கிறார்கள். ஆனால், இது சலுகையல்ல” எனக் குறிப்பிடும் வைத்தியநாத அய்யர் உள்ளிட்ட பொருளாதார புலிகள், “ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வருமான வரி அதிகமாக இருக்கிறது. வரி அதிகமாக இருப்பதால்தான் வரி ஏய்ப்பும் அதிகமாக நடைபெறுகிறது. வரியைக் குறைத்துவிட்டால் வரி ஏய்ப்பும் குறைந்துவிடும் எனக் கணக்கு போட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. மேலும், வரி குறைவாக இருந்தால்தான், முதலீடு அதிகமாக வந்து வேலைவாய்ப்பும் பெருகும்” என வாதிட்டு ‘ஞானசூன்யங்களுக்கு’ விளக்கியுள்ளனர்.

வரியே இல்லாவிட்டால் வரி ஏய்ப்பே இருக்காது என்பதை இந்தப் புலிகள் அடுத்த முறை நமக்கு விளங்க வைக்கக்கூடும். அதனால்தான் என்னவோ, கார்ப்பரேட் நிறுவனங்களும் பன்னாட்டு ஏகபோக குழுமங்களும் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதைக் கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது தடுப்பதற்காக முந்தைய காங்கிரசு ஆட்சியில் தயாரிக்கப்பட்ட பொது வரிஏய்ப்பு தடுப்புச் சட்டத்தை (General Anti Avoidance Rules) இந்த பட்ஜெட்டிலும் அமலுக்குக் கொண்டுவராமல், அதனை நடைமுறைப்படுத்துவதை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திப் போட்டிருப்பதாக அறிவித்துவிட்டது, மோடி அரசு.

பொதுப் பணத்தை, நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்களை, பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் படையல் போடுவதன் வழியாக ‘வளர்ச்சியை’க் கொண்டுவருவதுதான் குஜராத் மாடல். இதனை இந்த பட்ஜெட் வழியாக நாடு முழுவதும் காங்கிரசை விஞ்சிய வெறியோடு நடைமுறைப்படுத்தத் துணிந்திருக்கிறார், மோடி. இந்த பட்ஜெட், அடிக்கட்டுமானத் துறை வளர்ச்சி எனத் திரும்ப திரும்ப பேசுவதை நாட்டின் பொதுச் சொத்துக்களுக்கு நேரவுள்ள கேடு என்றுதான் நாம் பொருள் கொள்ள வேண்டும்.

மோடி அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்த வருமான வரிச் சலுகையின் மதிப்பு மட்டும் 62,399 கோடி ரூபாய். இதோடு, சுங்க வரி மற்றும் கலால் வரிகளில் அளிக்கப்பட்ட சலுகைகளையும் சேர்த்துக் கணக்கிட்டால், கடந்த ஆண்டு மைய அரசுக்கு ஏற்பட்ட வரி இழப்பு 5,48,451 கோடி ரூபாய். அரசுக்குச் சேர்ந்திருக்க வேண்டிய இந்தப் பிரம்மாண்டமான தொகையில் பெரும்பகுதியைச் சுருட்டிக் கொண்டவர்கள் இந்தியத் தரகு முதலாளிகள், பன்னாட்டு ஏகபோக முதலாளிகள் மற்றும் புதுப் பணக்காரர்கள்தான். 5,48,451 கோடி ரூபாய் பெறுமான இவ்வரிச் சலுகைகள் இந்த பட்ஜெட்டிலும் தொடர்கின்றன. ஆனாலும், இந்தியத் தரகு முதலாளிகளும், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் அடிக்கட்டுமானத் துறையில் முதலீடு செய்வதற்குத் தமது பணப்பெட்டியைத் திறந்து வைக்கவில்லை. அந்தப் பொறுப்பையும் மோடி அரசே தனது கையில் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் மட்டும் மக்களின் வரிப் பணத்திலிருந்து 70,000 கோடி ரூபாய் அடிக்கட்டுமானத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டங்களில் அரசின் கூட்டாளியாக பங்கேற்கும் தனியார் முதலாளிகளுக்கு குறைந்த வட்டியில் நீண்ட காலக் கடன்களை அளிப்பதற்காக 20,000 கோடி ரூபாய் முதலீட்டில் தேசிய முதலீட்டு நிதியமொன்றை உருவாக்கப் போவதாகவும் பட்ஜெட்டில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

அடிக்கட்டுமான திட்டங்கள் அனைத்தையும் அரசு – தனியார் கூட்டின் (Public – Private Partnership) வழியாகத்தான் நிறைவேற்ற வேண்டும்; அதன் வழியாகத்தான் வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற கொள்கையில் மன்மோகன் சிங்குக்கும் மோடிக்கும் இடையே கடுகளவுகூட வேறுபாடு கிடையாது. எனினும், இத்திட்டங்களுக்கான தேவையான நிதியை, கடனை ஏற்பாடு செய்து கொடுப்பதோடு அரசு ஒதுங்கிக் கொள்ளக்கூடாது. இத்திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்படும் இடர்ப்பாடுகள், சவால்கள் அனைத்தையும் அரசுதான் பொறுப்பேற்றுச் சமாளிக்க வேண்டும் என பட்ஜெட்டில் அறிவித்து, காங்கிரசையும் விஞ்சி நிற்கிறார் மோடி.

இந்தப் பொறுப்பினை நிறைவேற்றும் நோக்கில்தான், விவசாயிகளின் சம்மதமின்றி அவர்களின் நிலங்களை அபகரித்துக் கொள்ள வசதியாக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது மோடி அரசு. இதனின் தொடர்ச்சியாக காண்டிராக்டு சட்டத்திலும் திருத்தங்களைச் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது. மேலும், அடிக்கட்டுமானத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவது என்ற போர்வையில் அதில் பங்கேற்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசின் அனுமதிகளைப் பெறுவதற்குக் காத்திருக்கத் தேவையில்லை என்ற விதத்தில் அரசு-தனியார் கூட்டுத் திட்டங்களில் புதிய நடைமுறையைப் புகுத்தப் போவதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

“இந்தியாவில் தயாரிப்போம்” (மேக் இன் இந்தியா) திட்டம் மூலம் இந்தியாவை உலகின் உற்பத்தி மற்றும் தொழில் கேந்திரமாக மாற்றப் போவதாகச் சவால் அடித்து வருகிறார், நரேந்திர மோடி. ஆனால், அவரது பட்ஜெட்டோ, தொழிலே தொடங்காமல், பெரிய முதலீடும் செய்யாமல், நிலம், நிலக்கரி உள்ளிட்ட இந்தியாவின் வளங்களைக் கேட்பாரற்றுக் கொள்ளையடிக்கும் வாப்பை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதாவது, “மேக் இன் இந்தியா” என்ற முகமூடி கிழிந்து, “லூட் இந்தியா” (Loot India இந்தியாவைக் கொள்ளையடிப்போம்) என்ற உண்மை அம்பலத்திற்கு வந்துவிட்டது.

இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சம் கி.மீ. தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைப்பது, ஒரு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவது, ஒரு இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் ஐந்து மெகா மின் திட்டங்களை அமைப்பது, நகர்ப்புறங்களில் 2 கோடி வீடுகளும், கிராமப்புறங்களில் நான்கு கோடி வீடுகளும் கட்டிக் கொடுப்பது என்பவை யாவும் பி.பி.பி. வழியாகத்தான் நிறைவேற்றப்படும் என்பதால், பொதுப் பணத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் பெரும் கறி விருந்து படைக்க மோடி அரசு தயாராகி விட்டது என்றே கூறலாம்.

– திப்பு
_________________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
_________________________________

  1. இந்தியாவைக் கொள்ளையடிப்போம் !

    ”நீ அவல் கொண்டுவா, நான் உமி கொண்டுவருகிரேன் ஊதி ஊதி சாப்பிடலாம்.”

    என்பது போல் பொதுச்சொத்தை கொள்ளையடிப்பதற்கு பெயர், அரசு – தனியார் கூட்டு (Public – Private Partnership).

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க