privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்காக்கி விசப்பூச்சிகள் !

காக்கி விசப்பூச்சிகள் !

-

ரக்கமற்ற கொடூரர்கள், போலீஸ் சீருடை அணிந்த மிருகங்கள், வழக்கிலிருந்து தப்பிக்கும் வழி தெரிந்தவர்கள் – இவை புதுச்சேரி போலீசார் ஆறு பேரின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்து உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் கூறியுள்ள கருத்துக்கள்.

காவி விசப்பூச்சிகள்
14 வயது பள்ளிச் சிறுமிகளை வன்புணர்ச்சிக்குள்ளாக்கி, அவர்களை விபச்சாரத்திலும் தள்ளிய கொடூர மிருகங்கள்.

14 வயது பள்ளிச் சிறுமிகளை வன்புணர்ச்சிக்குள்ளாக்கி, அவர்களை விபச்சாரத்திலும் தள்ளிய இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், கான்ஸ்டபிள்கள்தான் அந்தக் குற்றவாளிகள். இவர்கள் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதமே சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டனர். ஆனால் கடந்த 6 மாதங்களாக இவர்களைப் பிடிக்க முடியவில்லையென்று கதையளந்து வந்தது புதுவை போலீசு. தற்போது நீதிமன்றம் இவர்களுக்கு முன்ஜாமீன் மறுக்கவே, வேறு வழியின்றி இவர்களைத் தலைமறைவுக் குற்றவாளிகள் என்று அறிவித்து, பிடித்துக் கொடுக்கும் பொதுமக்களுக்கு பரிசு என்றும் அறிவித்திருக்கிறது, இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி.

சென்ற ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியன்று, புதுச்சேரியில் 14 வயதான இரண்டு மாணவிகள், தங்களை ஒரு கும்பல் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளியிருப்பதாகக் கூறி, குழந்தைகள் ஹெல்ப்லைன் என்ற அமைப்பிடம் தஞ்சம் புகுந்தனர். போலீசு அதிகாரிகளும் விபச்சாரத் தரகர்களும் அடங்கிய ஒரு கும்பல், தங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து, வல்லுறவு கொண்டு அதனை வீடியோ எடுத்து, இணையத்தில் பரப்புவோமென மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதுடன், சக மாணவிகளையும் அழைத்து வரவைத்து, அவர்களையும் விபச்சாரத்தில் தள்ளியிருப்பதாகப் புகார் செய்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்கு குழந்தையும் பிறந்து அது காப்பகத்தில் இருக்கிறது.

இப்புகார் மீது போலீசு நடவடிக்கை எடுக்காததால், மகளிர் நலத்துறையிடம் அச்சிறுமிகள் புகார் செய்தனர். பின்னர் பல்வேறு அமைப்புகள் போராடின. வேறுவழியின்றி சி.பி. சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. யோக்கிய சிகாமணிகளாக சித்தரிக்கப்படும் சி.பி.சி.ஐ.டி. போலீசோ, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 15 போலீசாரின் குற்றங்களை மறைத்து, அவர்கள் விபச்சாரக் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்தனர் என்று மட்டும் வழக்குப் பதிவு செய்தது. 15 போலீசாரின் புகைப்படங்களைச் சிறுமிகளிடம் காட்டியதாகவும், தங்களை வல்லுறவு செய்த போலீசார் என்று அவர்களில் யாரையும் அச்சிறுமிகள் அடையாளம் காட்டவில்லையென்றும் சொல்லி, குற்றவாளிகளைத் தப்பவைக்க முயன்றது. இதனை நிராகரித்த உயர்நீதிமன்றம், அடையாள அணிவகுப்பு நடத்துமாறு உத்தரவிட்டது. பிறகு, 8 போலீசாரை அச்சிறுமிகள் அடையாளம் காட்டினர். இவர்களில் 6 பேர்தான் இப்போது தலைமறைவாம்!

ஆறு பேரில் ஒருவனான ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ராஜாராமன், அந்தியூர் விஜயா வல்லுறவு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, பின்னர் மேல் முறையீட்டில் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டவன். போலீசின் குற்றத்தை போலீசே விசாரிக்கும் இந்த நாடகத்தில் நாளை இவர்களும் விடுவிக்கப்படலாம்.

கோவையில் ஒரு மார்வாடி சிறுமியை வல்லுறவு செய்து கொன்ற ஓட்டுனருக்கு என்கவுன்டர் என்றால், இந்தக் காவல் நாய்களை என்ன செய்வது? நினைக்கவே நெஞ்சு நடுங்கும் குற்றத்தைக் கூசாமல் செய்திருக்கும் அருவருக்கத்தக்க இந்த விசப்பூச்சிகளை என்றைக்கு நசுக்குவது? கிரிமினல்களின் பிறப்பிடமான போலீசு நிலையத்தைக் காவல் நிலையம் என்றும், காக்கி உடைக் கிரிமினல்களைச் சட்டம் – ஒழுங்கின் காவலர்களென்றும், இன்னமும் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்களே, அத்தகைய குற்றக் கூட்டாளிகளை என்ன செய்வது?
______________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
______________________________