privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்லெனினை சந்திக்க வேண்டுமா ? போராடுங்கள் !

லெனினை சந்திக்க வேண்டுமா ? போராடுங்கள் !

-

ஏப்ரல் -22 | லெனின் பிறந்த தினம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கோவை

போராட்டப் பந்தலே.., கொண்டாட்டத் திடலாய்..!

“போராட்டமே மகிழ்ச்சி” என்றார், பேராசான் மார்க்ஸ். போராட்டமும் கொண்டாட்டமும் ஒருங்கே அமைந்தால், சொல்லவொண்ணா மகிழ்ச்சிதான். மார்க்ஸ் போராட்டமே மகிழ்ச்சி எனக் கூறியது, கம்யூனிஸ்டுகளுக்கு; கலை இரவு நடத்தும் கோமாளிகளுக்கல்ல.

ஏப்ரல் 22 லெனின் பிறந்தநாள்
போராட்டமும் கொண்டாட்டமும் ஒருங்கே – சி.ஆர்.ஐ பம்ப்ஸ் முன்பு லெனின் பிறந்தநாள் கொண்டாட்டம்

கோவை சி‌.ஆர்‌.ஐ கம்பெனி கதவடைப்பு செய்து கிட்டத்தட்ட 29 நாட்களாகின்றன. கதவடைப்பு செய்த மறு கணமே அங்கு போராட்டம் என அமர்ந்த தொழிலாளிகள் இன்று வரை போராட்டத்தைத் தொடர்கின்றனர். இடையில் 10 தொழிலாளிகளை பணி நீக்கம் வேறு செய்திருக்கிறார்கள் அவர்களும் போராட்டப் பந்தலில் தொடர்கின்றனர். இப்படியான தொடர்ச்சியான போராட்டம் ஒன்றை வேறு எந்த தொழிற்சங்கமும் இது வரை சந்தித்ததில்லை.

ஏப்ரல் 22 லெனின் பிறந்தநாள்
முதலாளித்துவ நச்சுக் கிருமி சி‌.ஆர்‌.ஐ சவுந்திரராஜனுக்கு ஆன்டி வைரசாக (Anti-Virus) பு.ஜ.தொ.மு.

இதை விட அவமானகரமான விசயம் இன்னொன்று உள்ளது; தமிழகத்தின் தொழில் முனையங்களில் முக்கியமானது கோவை. இங்கு பல பத்தாண்டுகளாக சங்கம் வைத்திருக்கும் போலி கம்யூனிஸ்டுகள் ஒரு கம்பெனி முதலாளியின் பெயர் போட்டு போஸ்டர் போடவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ துணிவதில்லை.

அது சரி, போலிகளின் பத்திரிகை ஆண்டு மலர்களில் விளம்பரங்களில் ஜொலிக்கும் முதலாளிகளின் பெயர்கள், சுத்தி அரிவாளுடன் போஸ்டரில் வந்தால் முதலாளிகளுக்கு அசிங்கம் அல்லவா….? அவ்வளவு அக்கறை இவர்களுக்கு.

ஏற்கெனவே இதே சி‌.ஆர்‌.ஐ கம்பெனியின் வேறு யூனிட்டில் சங்கம் தொடங்க முயற்சித்த சி‌.ஐ‌.டி‌.யு வை விசிறியடித்தார் முதலாளி சவுந்திரராஜன். கோவையில் இருக்கும் டெக்ஸ்மோ போன்ற இதர பம்பு தொழிற்சாலை தொழிலாளிகளே பார்த்து பரிதாபப் படும் அளவுக்கு கொத்தடிமை போல தொழிலாளிகளை நடத்துபவர் சவுந்திரராஜன்.

ஏப்ரல் 22 லெனின் பிறந்தநாள்
“போங்கடா டேய், நாங்க ஐ‌.டி துறையிலேயே சங்கம் தொடங்கிட்டோம்.”

உலகப் புகழ் பெற்று சீனா வரை சென்றிருப்பதோடு வித விதமான விளம்பர வசனங்களால் தொலைக்காட்சிகளையும் நிரப்புகிறது சி‌ஆர்‌ஐ பம்ப்ஸ். ஆனால் இந்த புகழுக்குப் பின்னர் நிறைந்திருக்கும் தொழிலாளிகளின் சோக கீதம் யாரும் அறியாதது. அந்த சோக கீதத்தை போர் நாதமாக மாற்றியது பு.ஜ.தொ.மு. கோவையின் எட்டுத் திக்கும் H1N1 இன்ஃபுளூயன்சா வைரஸ் கிருமி பற்றி விழிப்புணர்வுப் பதாகை வைத்திருக்கும் முதலாளித்துவ நச்சுக் கிருமி சி‌.ஆர்‌.ஐ சவுந்திரராஜனுக்கு ஆன்டி வைரசாக (Anti-Virus) பு.ஜ.தொ.மு வந்து வாய்த்திருக்கிறது.

“ஐயையோ, சி‌.ஆர்‌.ஐ கம்பெனியா அங்கெல்லாம் சங்கம் தொடங்க முடியாது” என்று பதறியவர்கள் கண்ணெதிரேயே அதே சி‌.ஆர்‌.ஐ யில் சங்கம் தொடங்கி வருடம் நான்காகிறது.

இப்போது உரிமைக்கான போராட்டம் ; வர்க்கப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 29 நாள் போராட்டமேல்லாம் சி‌.ஐ‌.டி‌.யு கனவிலும் நினைத்துப் பார்த்திராத ஒன்று. 29 நாட்கள் இங்கு முதலாளியையும் கம்பெனியையும் எண்ணி மன நெருக்கடி, நண்பர்களின் கேள்விகள், குடும்பத்தாரின் கேள்விகள், உறவினர்களின் கேள்விகள், அவ நம்பிக்கைப் பேச்சுக்கள் என எரியும் தீப்பிழம்பின் நடுவினில் எரியாத கற்பூரத் துண்டுகளாய் தொழிலாளிகள். அவர்களுக்கு ஒரே ஒரு உற்ற துணையாய் வழிகாட்டும் சங்கமான பு.ஜ.தொ.மு.

ஏப்ரல் 22 லெனின் பிறந்தநாள்
எரியாத கற்பூரத் துண்டுகளாய் தொழிலாளிகள். அவர்களுக்கு உற்ற துணையாய் வழிகாட்டும் பு.ஜ.தொ.மு.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சின்னியம்பாளையம் தியாகிகள், ஸ்டேன்ஸ் மில் தியாகிகள் போன்ற பல தீரர்களின் போர்க்குணத்தை வரித்துக் கொண்ட சங்கமாய், முதலாளிகளை நடுநடுங்க வைக்கும் சங்கமாய், நக்சல்பாரி சங்கமாம் பு.ஜ.தொ.மு இந்த போராட்டத்தை சிறிதும் உணர்வு குன்றாமல் தலைமையேற்று நடத்தி வருகிறது.

வரலாற்றை சில சமயம் முன்கர்த்த வேண்டியிருக்கிறது என்பது ஆசான் லெனினின் கூற்று. அதன்படி பார்த்தால், காலங்காலமாக பொருளாதார வாதத்திலும் ஓட்டுச் சீட்டு அரசியலிலும் மூழ்கிக் கிடந்த தொழிலாளிகளை, அரசியலற்று இருந்த தொழிலாளிகளை, கோவைத் தொழிலாளர் சமூகத்தை புதியதொரு வடிவத்துக்கு போர்க்குணம்மிக்க போராட்டங்களுக்கு இழப்புகளுக்கு அஞ்சாத போராட்டங்களுக்கு நாங்கள் வடித்துக் கொண்டிருக்கிறோம். ஆம்., நாங்கள் வரலாற்றை முன்னகர்த்திக் கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டப் பந்தலில் தான் உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஆசானாகிய தோழர் லெனின் பிறந்த நாளை கோவையின் ஒட்டு மொத்த பாட்டாளி வர்க்கத்தின் ஒரே பிரதிநிதியான பு.ஜ.தொ.மு புரட்சிகர உத்வேகத்துடன் உற்சாகத்துடனும் கொண்டாடியது.

ஏப்ரல் 22, லெனின் பிறந்தநாள்
தோழர் லெனின் பிறந்த நாளை கோவையின் ஒட்டு மொத்த பாட்டாளி வர்க்கத்தின் ஒரே பிரதிநிதியான பு.ஜ.தொ.மு புரட்சிகர உத்வேகத்துடன் உற்சாகத்துடனும் கொண்டாடியது.

ஏப்ரல் 22 காலை எஸ்‌.ஆர்‌.ஐ, சி‌.ஆர்‌.ஐ, எம்பெஸ்ட், கௌரி மெட்டல் மற்றும் பெரோலிங்க்ஸ் கிளைகளில் வாயிற்கூட்டம் நடத்தி இனிப்பு வழங்கி துண்டுப் பிரசுரம் கொடுத்து கொண்டாடப்பட்டது. அதே போல் கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் சார்பில் முருகன், சி‌.எஸ்‌.டபில்யு கம்போடியா, ரங்கவிலாஸ் மற்றும் பங்கஜா மில் கிளைகளிலும் விழாக்கள் நடத்தப்பட்டது. இறுதியாக கடந்த 29 நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் சி‌.ஆர்‌.ஐ கம்பெனி முன்பு லெனின் பிறந்த நாள் போராட்டமாக நிகழ்த்தப்பட்டது.

சி‌.ஆர்‌.ஐ தொழிலாளர்கள் கதவடைப்புக்கு எதிராக கம்பெனி வாயில் முன்பு கொட்டகை அமைத்து வெயில் மழை என அனைத்தையும் எதிர்கொண்டு இம்மியளவும் அகலாமல் தங்களது போராட்டத்தினை நடத்திக் கொண்டுள்ளனர்.

ஏப்ரல் 22 லெனின் பிறந்தநாள்
போராட்டம் நடந்தும் உற்சாகம் குறையாமல் தோழர்கள் பாட்டாளி வர்க்கத்தின் வீரப்புதல்வர்கள் அணிதிரண்டனர்.

லெனின் உருவம் தாங்கிய மிகப்பெரிய விளம்பர பதாகை சி‌.ஆர்‌.ஐ கேட் முன்பு கட்டப்பட்டது. செங்கொடிகள் 29 நாட்களாக கம்பெனி முன்பு தொடர்ந்து பறந்து கொண்டிருக்கின்றன. 29 நாள் போராட்டம் நடந்தும் உற்சாகம் குறையாமல் தோழர்கள் பாட்டாளி வர்க்கத்தின் வீரப்புதல்வர்கள் அணிதிரண்டனர்.

கிளைத் தலைவர் தோழர் மூர்த்தி தனது தலைமையுரையில், “தோழர் லெனின் அவர்களிடம் கற்றுக் கொண்டு நமது போராட்டம் வெற்றி நடை போடும்” என்றார்.

கிளைச் செயலாளர் தோழர் குமாரவேல் தனது உரையில், “முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்கும் மாபெரும் ஆயுதம் லெனினியமே” என முழங்கினார்.

வாழ்த்துரை வழங்கிய பெரோலிங்க்ஸ் நித்தியானந்தன் லெனின் சிறப்புகளை பட்டியலிட்டு காட்டி அவ்வழியில் தங்கள் ஆலையில் நடந்த கதவடைப்பை முறியடித்ததை நினைவு கூர்ந்து உணர்வூட்டினார்.

தில்லைக் கோயில் போராட்டத்திற்கு சிறை சென்றதற்காக ரூட்ஸ் கம்பெனியின் எச்‌ஆர் “உன்னால் முடியும்” வசனப் புகழ் தன்னம்பிக்கை தகர டப்பா கவிதாசனால் பழிவாங்கப்பட்ட தோழர் கவியரசு முதலாளித்துவ பயங்கரவாதம் மனிதத் தன்மையற்றது என்பதை விளக்கினார்.

பங்கஜா மில் செயலாளர் தோழர் கோபால், “வெற்றி அடையும் வரை போராட்டம் தொடர வேண்டும்” என உற்சாகமூட்டினார். மாவட்ட அமைப்பாளர் தோழர் கோபிநாத் தனது பேச்சில் லெனின் சிறப்புகளை பட்டியலிட்டார்.

ஏப்ரல் 22 லெனின் பிறந்தநாள்
“வெற்றி அடையும் வரை போராட்டம் தொடர வேண்டும்”

இறுதியாக, பு.ஜ.தொ.மு மாநில துணைத் தலைவர் விளவை இராமசாமி “தோழர் லெனின் தூங்கவும் மாட்டார், மற்றவர்களையும் தூங்க விடமாட்டார். தொழிலாளர்கள் தங்கள் விருப்பப்படி பழைய வாழ்க்கையில் முதலாளிகளின் அடிமையாக வாழ அனுமதிக்காமல் தட்டி எழுப்புவார். கோவை பாட்டாளி வர்க்கத்தின் மரபுப்படி போராடும் சி‌.ஆர்‌,ஐ தொழிலாளர்கள் தோழர் லெனின் பிறந்த நாளை தங்கள் கம்பெனி முன்பு கொண்டாடுவதன் மூலம் சிறப்பு சேர்க்கின்றனர்.

ஏப்ரல் 22, லெனின் பிறந்தநாள்
தோழர் லெனின் தூங்கவும் மாட்டார், மற்றவர்களையும் தூங்க விடமாட்டார். தொழிலாளர்கள் தங்கள் விருப்பப்படி பழைய வாழ்க்கையில் முதலாளிகளின் அடிமையாக வாழ அனுமதிக்காமல் தட்டி எழுப்புவார்.

கடந்த 29 நாட்களாக கம்பெனி முன்பு கோடை மழை பல முறை கொட்டிய போதும், கோடை வெயில் கொளுத்திய போதும், கொசுக்கள் தொடர்ந்து கடித்த போதும் அஞ்சாமல் அசராமல் போராடும் கணங்கள் மகத்தானவை. இதற்கு ஈடு இணை இல்லை. நாம் உன்னதமானவர்கள், நமது போராட்டம் உன்னதமானது. ஆனால், சி‌ஆர்‌ஐ முதலாளி சவுந்திர ராஜனோ மிகவும் கேவலமானவர். முதலாளி மீதான நமது கோபத்தை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். முதலாளி நமது இளமைக் காலத்தை உறிஞ்சியதும் கடந்த காலத்தை களவாடிவிட்டான். கதவடைப்பு செய்து நிகழ்காலத்தை நாசம் செய்து விட்டான். நாளை எப்படி பிழைப்பது எனும் நிலைக்கு தள்ளி எதிர்காலத்தையும் சூறையாடுகிறான். நமது குடும்பத்தின் எதிர்காலம், குழந்தைகளின் எதிர்காலம் அனைத்தையும் பறித்தவனை பழிவாங்கியே தீர வேண்டும்.

நாம் இப்போது கம்பெனியை சுற்றியுள்ள சின்னவேடம்பட்டி உடையாம்பாளையம், மணியகாரன்பாளையம், சரவணம்பட்டி என பத்து ஊர்களில் மக்களிடம் வீடு வீடாக முதலாளியின் கொடூரத்தை விளக்கி துண்டுப் பிரசுரம் கொடுத்துள்ளோம். அடுத்து அவன் குடியிருக்கும் பீளமேடு, ஆவாரம்பாளையம் பகுதிகளிலும் களம் காண வேண்டும்.

உலக முதலாளிகளை நடு நடுங்க வைத்த தோழர் லெனின் பிறந்த நாளை கொண்டாடுவதன் மூலம் இந்த ஒரு முதலாளியை வீழ்த்த முடியும். நமது போராட்டத்தின் எல்லை எது? கால வரையறை என்ன? நமது போராட்டத்தின் எல்லை கதவடைப்பு நீங்கி கதவு திறக்க வேண்டும். எத்துணை நாள் ஆனாலும் அத்துணை நாளும் போராட வேண்டும். கோவையில் இது போல ஒரு போராட்டத்தை கடந்த ஆண்டுகளில் யாரும் நடத்த வில்லை. நாம் நடத்துகிறோம். இதன் மூலம் கோவையின் ஒட்டு மொத்த தொழிலாளர்களையும் தட்டி எழுப்புகிறோம். கோவைத் தொழிலாளர்களை ஏற்கெனவே செயல்பட்ட பொருளாதார வாதிகள் ஊமையாக்கி விட்ட்னர். அதன் ஒட்டு மொத்த சுமையை நாம் சுமப்பதால் நமக்கு சிறிது சிரமம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் நாம் வெல்வோம்.

முதலாளித்துவ கொடூரம் என்பது நமது புற அம்சம், நம்முடைய லெனின் சிந்தனை என்பது அக அம்சம். அக அம்சத்தை தோழர் லெனின் போதனைகளை படிப்பதன் மூலம் வலுவாக்குவோம். எத்தகைய புற நிலைமையையும் நமது புரட்சிகர சிந்தனையில் வலுவூட்டப் பெற்ற போராட்டத்தால் மாற்றி அமைக்க முடியும். இதுதான் தோழர் லெனின் நமக்கு காட்டிய வழி.

நமது கம்பெனியில் எஃகு என்பது புற அம்சம், அதை நமது உழைப்பு எனும் அக நிலையில் பம்புகளாக மாற்றி அமைக்கிறோம். எஃகு உலோகத்தை விட கடினமானவன் அல்ல நமது முதலாளி. அவன் கொடூரத்தை நாம் மாற்ற முடியும். நமது குடும்பத்தோடு குழந்தைகளோடு போராட்டத்தை விரிவு படுத்துவோம். நமக்கு வாழ்வு கிடைக்கும் வரை நீதி கிடைக்கும் வரை முதலாளி சவுந்திரராஜன் தூங்க அனுமதிக்கக் கூடாது. கம்பெனியை திறக்கா விட்டால் அவன் கோவை மண்ணில் நடமாடும் உரிமையை முடக்க வேண்டும். போலீசு ஜெயிலுக்கெல்லாம் குலையாது உறுதி; வெற்றிதான் இறுதி. இதுவே லெனின் போதனை” என முடித்தார்.

ஏப்ரல் 22, லெனின் பிறந்தநாள்
முதலாளி சவுந்திரராஜன் தூங்க அனுமதிக்கக் கூடாது. கம்பெனியை திறக்கா விட்டால் அவன் கோவை மண்ணில் நடமாடும் உரிமையை முடக்க வேண்டும்.

எஸ்‌.ஆர்‌.ஐ கிளைத் தலைவர் தோழர் துரை நன்றி கூறினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு, காரம், காபி வழங்கப்பட்டது. நிகழ்ச்சி நிறைவு பெற்றது. போராட்டம் தொடர்கிறது.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை

தோழர் லெனினின் 146-வது பிறந்தநாள் விழா மக்கள் கலை இலக்கியக் கழக தோழர்களால் 22-04-2015 அன்று மாலை 6 மணியளவில் சென்னை சேத்துப்பட்டு பகுதியில் நடத்தப்பட்டது. முன்னதாக, சுற்று வட்டாரப் பகுதிகளில் லெனின் பிறந்தநாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் லெனின் பிறந்தநாள் விழா.
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் லெனின் பிறந்தநாள் விழா.

விண்ணதிரும் பறையோசையோடு கூட்டம் தொடங்கியது. செஞ்சட்டை அணிந்த தோழர்கள் முழக்கமிட்டனர். ஆங்காங்கே இருந்த மக்கள் கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில் குவிந்தனர். தோழர் லெனின் படம் வைக்கப்பட்டு நடத்தப்பட்ட கூட்டத்துக்கு தோழர் காமராஜ் தலைமையேற்று நடத்தினார். தோழர் அஜிதா சிறப்புரையாற்றினார்.

ஏப்ரல் 22, லெனின் பிறந்தநாள்
விண்ணதிரும் பறையோசையோடு கூட்டம் தொடங்கியது.

“சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயாவின் பிறந்தநாளை அவரது கழகத் தொண்டர்கள் காலாண்டுக்கு மேலாக கொண்டாடிவரும் இந்நேரத்தில், தோழர் லெனினின் பிறந்தநாளைப் பற்றி நாம் ஏன் பேச வேண்டும்? அவர் சாதித்தது என்ன?

உலகப் பரப்பளவில் ஆறில் ஒரு பகுதியைக் கொண்டது ரஷ்யா. ஜார் மன்னனின் கொடுங்கோன்மை ஆட்சியிலிருந்து ரசியாவை மீட்டெடுத்து பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புரட்சியை சாதித்துக் காட்டியவர் தோழர் லெனின். சாதாரண விவசாயி கூட விமானத்தில் பறந்து உரம் வாங்கி வரும் நிலை ரசியாவில் இருந்தது. இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் அமைச்சர்களைக் கூட்டி ஆலோசனை கேட்கிறார்கள். ஆனால், பாட்டாளி வர்க்கத் தலைவர் லெனின் மக்களிடையே ஆலோசனை நடத்தி அதை திட்டமாக வகுத்து ஓராண்டுக்குள் ரசியநாடு முழுவதும் மின்சாரமில்லாத இடமே இல்லை என்ற நிலைமையே மக்களோடு சாதித்தார்.

ஏப்ரல் 22, லெனின் பிறந்தநாள்
பாட்டாளி வர்க்கத் தலைவர் லெனின் மக்களிடையே ஆலோசனை நடத்தி அதை திட்டமாக வகுத்தார்

எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியிலும், புரட்சி ஒன்றையே தனது லட்சியக் கனவாகக் கொண்டு புரட்சியை நடத்தி, உலகிலுள்ள மற்ற நாடுகளுக்கு பாட்டாளிவர்க்க தலைமையிலான ஆட்சிதான் மக்களாட்சி என்று அறுதியிட்டு உறுதியாக நிகழ்த்திக் காட்டியவர், தோழர் லெனின்” என்று தோழர் உரையாற்றினார்.

ஆர்.எஸ்.எஸ்-ஐ அம்பலப்படுத்தி பாடப்பட்ட எச்சரிக்கை பாடல் மக்கள் உணர்வை தட்டி எழுப்பியது. கம்யூனிசம் வெல்லும் என்ற பாடல் நம்பிக்கையூட்டியது.

நாம் லெனினுடைய வாரிசுகள், ரசியப் புரட்சியைப் போன்று பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான இந்தியப் புரட்சியை நடத்த வேண்டும் என்ற உணர்வை அளிக்கிறது, தோழர் லெனின் பிறந்தநாள்.

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் பிறந்த நாளில் உழைக்கும் மக்களின் அதிகாரத்தைக் கைப்பற்ற சூளுரைப்போம்!

ஏப்ரல் 22 புதுச்சேரி பு.ஜ.தொ.மு
‘படிப்பறிவற்ற அழுக்குச் சட்டையை அணிந்த இவர்களா தலைமையேற்கப் போகிறார்கள்’ – ஏளனம் பேசிய முதலாளித்துவ வர்க்கத்துக்கு பாடம் புகட்டினார் லெனின்.

ப்ரல்-22 : ‘மார்க்சியம் என்பது வெறும் வெற்று வார்த்தை; இது நடைமுறைக்கு பொருந்தாது. அடிமைகள் போல் வேலை செய்யும் இவர்களா ஆட்சியை நடத்தப் போகிறார்கள்’ என்றும், ‘படிப்பறிவற்ற அழுக்குச் சட்டையை அணிந்த இவர்களா தலைமையேற்கப் போகிறார்கள்’ எனவும் தொழிலாளர்களை ஏளனமாகப் பேசிய முதலாளித்துவ அறிவிலிகளுக்குப் பாடம் புகட்டி, மார்க்ஸ் சொன்னவை வெறும் வார்த்தை ஜாலங்களோ, கற்பனைக்கெட்டாத கதைகளோ அல்ல. அது அனைத்து ஜீவன்களையும் வாழவைக்கும், இயற்கைக்கும் ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் தேவையான உன்னதமான சமூகக் கட்டமைப்பு என்பதை நடைமுறையில் நிரூபித்துக் காட்டி ஒட்டு மொத்த உலக மக்களுக்கும் சொர்க்கத்தை மண்ணிலேயே படைக்கும் சக்தி பாட்டாளி வர்க்கம் மட்டுமே என்பதை உணர வைத்த கம்யூனிச ஆசான் தோழர் லெனின் பிறந்த நாள்.

ஏப்ரல் 22, லெனின் பிறந்தநாள்
ஒட்டு மொத்த உலக மக்களுக்கும் சொர்க்கத்தை மண்ணிலேயே படைக்கும் சக்தி பாட்டாளி வர்க்கம் மட்டுமே என்பதை உணர வைத்தார் கம்யூனிச ஆசான் தோழர் லெனின்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த தோழர். லெனினின் தேவை, இன்றைய அரசியல் சூழலில் எவ்வளவு இன்றியமையாதது என்பதை பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகத் திகழ்கின்ற தொழிலாளர்களுக்கு உணர்த்தும் வகையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செயல்படும் இணைப்பு சங்கங்களில் வாயிற்கூட்டங்கள் நடத்தி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப் பட்டது. தோழர் லெனின் உருவம் பொறித்த முகமூடி அணிந்து வாயிற்கூட்டங்கள் நடத்தப்பட்டது.

ஏப்ரல் 22, லெனின் பிறந்தநாள்
தோழர் லெனின் உருவம் பொறித்த முகமூடி அணிந்து வாயிற்கூட்டங்கள் .

ஒவ்வொரு ஆலை வாயிலிலும், முகமூடி அணியும் போதும், இனிப்புகள் வழங்கும் போதும், இதில் உள்ளவர் யார் என்பதை தொழிலாளிகள் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர். நாம் அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்துடன் இன்றைய அரசியல் சூழலில் அவரது தேவையை உணர்த்திப் பேசினோம். புதிதாக கட்டப்பட்ட சங்கங்களில் தோழர் லெனினைப் பற்றியும் இன்றைய அரசியல் சூழல் தொழிலாளர்களுக்கு எவ்வளவு அபாயகரமாக மாறியுள்ளதை அரசியல் ரீதியாக உணர்த்திப் பேசும் போது, அனைவரும் கவனத்துடன் கேட்டனர்.

ஏப்ரல் 22, லெனின் பிறந்தநாள்
இன்றைய அரசியல் சூழலில் லெனினின் தேவை

வாயிற்கூட்டங்களில் பேசிய தோழர்கள், “இன்று மக்களின் சொத்துக்களைச் சுரண்டிக் கொள்ளையடித்து சொத்துக்களைச் சேர்த்த ஓட்டுக் கட்சிக் கழிசடைகள் தமது சுயவிளம்பரத்திற்காக, அல்லக்கைகள் மூலமும் தனது சொந்தப் பணத்திலும், உயிரே, உடன்பிறப்பே என்றெல்லாம் சொல்லி மக்களே வெறுக்கும் வகையில் தங்களது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

ஏப்ரல் 22, லெனின் பிறந்தநாள்
தனிநபர் துதிபாடுவது என்ற அடிப்படையில் இல்லாமல், தோழர் லெனின் அவர்களின் பிறந்த நாளை, நாம் நினைவு கூர்கிறோம்.

இத்தகைய சூழ்நிலையில் மேற்கூறிய தனிநபர் துதிபாடுவது என்ற அடிப்படையில் இல்லாமல், தோழர் லெனின் அவர்களின் பிறந்த நாளை, நாம் நினைவு கூர்கிறோம். தோழர் லெனின் தலைமையிலான அழுக்குச்சட்டைக்காரர்களின் ஆட்சி உலகத்திற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. இன்றைய ஆட்சியின் மோசடிகளையும் மக்களுக்கு எதிரான தன்மையையும் ஒப்பீட்டு ரீதியில் உணர்ந்து கொள்வதன் மூலம் நமக்கான உண்மையான ஆட்சி முறை எந்தத் தத்துவத்தில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இவற்றை உணர்வதற்காகவே தோழர் லெனின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது என கூட்டத்தின் நோக்கத்தைப் பற்றி விளக்கிப் பேசப்பட்டது. தொழிலாளர்கள் அனைவரும் ஆர்வமுடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டு தோழர். லெனினைப் பற்றித் தெரிந்து கொண்டனர்.

ஏப்ரல் 22, லெனின் பிறந்தநாள்
சுரண்டலற்ற புதிய உலகம் படைக்க உறுதியேற்போம்

மேலும், உழைக்கும் மக்களுக்கு எதிரான, மக்களை ஆளும் தகுதியற்ற, நொறுங்கி விழும் இந்த அரசுக் கட்டமைப்பை அடித்து வீழ்த்தி மக்களுக்கே அதிகாரம் வழங்கும் அமைப்புக்களை நிறுவ பாட்டாளி வர்க்க ஆசான்கள் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோர் நமக்கு காட்டிய வழியில் சுரண்டலற்ற புதிய உலகம் படைக்க உறுதியேற்போம் என்ற அறைகூவலுடன் வாயிற்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்புக்கு: 95977 89801.