privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்மக்கள்நலன் – மருத்துவம்ஜோசப் கண் மருத்துவமனை வழக்கு - எட்டாண்டு போராட்டம் !

ஜோசப் கண் மருத்துவமனை வழக்கு – எட்டாண்டு போராட்டம் !

-

ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட மூவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றுத் தந்த மக்கள் உரிமைப் பாது காப்பு மையத்தின் பொது நல வழக்கு!

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை வழக்கு
ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட மூவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றுத் தந்த மக்கள் உரிமைப் பாது காப்பு மையத்தின் பொது நல வழக்கு!

திருச்சி ஜோசப் கண்மருத்துவமனையின் பெரம்பலூர் கிளை சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் என்ற பெயரில் 2008-ம் ஆண்டு 66 ஏழை மக்களின் பார்வையைப் பறித்த சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமுடியாது. அந்த கொடூர நிகழ்வின் குற்றவாளிகளுக்கெதிரான வழக்கின் தீர்ப்பு 22.04.2015 அன்று திருச்சி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் வழங்கப்பட்டது.

மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் நெல்சன் ஜேசுதாசன், நிர்வாக அதிகாரி கிறிஸ்டோபர் தாமஸ், பெரம்பலூர் மருத்துவமனை நிர்வாக அதிகாரி மருத்துவர் அசோக் ஆகிய மூவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. இதில் நெல்சன் ஜேசுதாசன் 2013-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயாவிடம் “தனியார் நிறுவனங்களில் சிறந்த நிர்வாகி” என்ற விருது பெற்றவர். கிரானைட் மாஃபியா- நரபலி நாயகன் பி.ஆர். பழனிச்சாமி “சிறந்த ஏற்றுமதியாளர்” விருதை ஜனாதிபதியிடம் பெறும் போது, 66 பேரின் கண்களைப் பறித்த இவருக்கு மாநில அளவு விருது கூட கிடைக்காமல் போனால் எப்படி? என்ற உயரிய நோக்கில் ஊழல் ராணி அளித்த சிறிய விருதுதான் இது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நால்வரை, “அவர்கள் மீதான குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை” என்று சொல்லி விடுவித்து விட்டார் தலைமைக் குற்றவியல் நடுவர் ஸ்ரீதர். இதில் மூன்று பேர் பெண் மருத்துவர்களாவர். அவர்களின் கவனக்குறைவு குறித்து விசாரித்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளார். “அதனிடம் நன்னடத்தைச் சான்று பெற்ற பின்னரே மருத்துவத் தொழிலைத் தொடர வேண்டும்” என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை வழக்கு
“இந்தத் தீர்ப்பு ஏழை மக்களை வஞ்சிக்கும் வகையிலானது”

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடாக ரூ. 2,30,000 முதல் 5,80,000 வரை வயது மற்றும் வருவாய் அடிப்படையில் நிர்ணயித்து, “மருத்துவமனை நிர்வாகம் இடைக்காலமாக தந்த ஒரு லட்சத்தை கழித்துக்கொண்டு மீதித் தொகையை 7.5 சத வட்டியுடன் ஒரு மாதத்திற்குள் தர வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

தீர்ப்பை மாலை 3 மணிக்குத்தான் நீதிபதி அறிவித்தார் என்றாலும் காலையில் நீதிமன்றம் தொடங்கிய போதே மருத்துவமனை தரப்பு வழக்கறிஞரிடம், “ குற்ற விசாரணை முறைச் சட்டம் 398-ஐப் பார்த்துக்கொள்ளுங்கள், கடைசி நேரத்தில் கஷ்டப்பட வேண்டாம்” என்று அக்கறையுடன் டிப்ஸ் கொடுத்தார். அப்போதே தண்டனை உறுதி என்பதும், ஆனால் 3 ஆண்டுக்கு குறைவான தண்டனைதான் என்பதும் உறுதியானது. அந்த வகையில் மருத்துவமனை தரப்பில் பிணை எடுப்பதற்கான முழு தயாரிப்புடன் வந்திருந்தனர். வழக்கைத் தொடர்ந்து கண்காணித்து வந்த பத்திரிகையாளர்கள், மற்றும் தொலைக்காட்சி நிருபர்களும் குழுமியிருந்தனர்.

சி.பி.ஐ போலீஸ் மற்றும் அரசு வழக்கறிஞர்
சி.பி.ஐ போலீஸ் மற்றும் அரசு வழக்கறிஞர்

தீர்ப்பை அறிவித்தவுடன், “இந்தத் தீர்ப்பு ஏழை மக்களை வஞ்சிக்கும் வகையிலானது” என்பதை உணர்ந்த நாம், உடனடியாகவே அதே நீதிமன்ற வாயிலிலேயே இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணைச்செயலரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞருமான தோழர் வாஞ்சிநாதன் இதற்குத் தலைமை தாங்கினார். பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் உறவினர்கள் 40 பேருடன் திருச்சி மக்கள் உரிமைப்பாதுகாப்பு மைய வழக்கறிஞர் தோழர் சங்கர், செயற்குழு உறுப்பினர்கள், விருத்தாசலம் வழக்கறிஞர்கள் மற்றும் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக்கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி போன்ற அமைப்புகளின் தோழர்களும் கணிசமாகத் திரண்டிருந்தனர். ஏழை மக்களுக்கெதிரான நீதித்துறையின் போக்கை எதிர்த்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

“66 பேரின் கண்ணைப் பறித்த கொடுமையை மோட்டார் வாகன விபத்து போன்ற ஒரு கவனக் குறைவு என்பதாக வகைப்படுத்தி இந்திய தண்டனைச் சட்டம் 338-ன் படி வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. 6 நிமிடத்தில் ஒரு அறுவை சிகிச்சை, அத்தனை பேருக்கும் நோய்த்தொற்று ஏற்படும் படி ஒரே கையுறை… என்று மருத்துவ நெறிமுறை எதையுமே மதிக்காமல் நிர்வாகத்தின் லாப வெறிக்கேற்பவும் ஏழை மக்களை கிள்ளுக்கீரையாகக் கருதியும் செய்த தவறை மிகச் சாதாரணமான கவனக்குறைவாகப் பார்த்து வழங்கிய இந்தத் தீர்ப்பை ஏற்க முடியாது; உயர்நீதி மன்றத்திலும் மக்கள் மன்றத்திலுமான எமது போராட்டம் தொடரும்” என்று அறிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஜோசப் கண் மருத்துவமனை தீர்ப்பு
“66 பேரின் கண்ணைப் பறித்த கொடுமையை மோட்டார் வாகன விபத்து போன்ற ஒரு கவனக் குறைவு என்பதாக வகைப்படுத்தி தீர்ப்பு”

மருத்துவமனை நிர்வாகம் மட்டுமின்றி நீதிமன்றமும் ஏழைகளை ஏளனமாகப் பார்ப்பது கண்டிக்கப்பட்டது. “இதுவே பணக்காரர்கள், அரசியல்வாதிகளின் கண்கள் பறிபோயிருந்தால் தீர்ப்பு இப்படி வந்திருக்குமா? மருத்துவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பார்களா? 66 பேரை நடை பிணமாக்கிய வழக்கில் இவ்வளவு குறைந்த தண்டனையும் அற்பமான நட்ட ஈடும் அறிவிக்கப்பட்டிருக்குமா?” என்கிற கேள்விகளை எழுப்பி இந்த தீர்ப்பின் வர்க்க சார்பு கண்டிக்கப்பட்டது. அத்துடன்,  “மக்களின் உயிருடன் அலட்சியமாக விளையாடும் மருத்துவர்களை தண்டிக்க எந்த சட்டமும் இல்லை” என்பதை சுட்டிக்காட்டி அத்தகைய சட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் நடைபிணமாக வாழும் தங்கள் வாழ்க்கையின் அவலங்களை வேதனையுடன் விவரித்து பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தனர். பெண்கள் கண்ணீர் விட்டு கதறினர்.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை தீர்ப்பு
பெண்கள் கண்ணீர் விட்டு கதறினர்.

இதற்கிடையில் அனைத்து ஆவணங்களையும் தயாரித்துக்கொண்டு எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு பிணைகேட்டனர். நாம் வெளியில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விளைவாக நீதிபதி பிணை தர மறுத்துவிட்டு, “அம்மாவே ஜெயிலுக்கு போயிருக்காங்க இவங்களுக்கென்ன?” என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். குற்றவாளிகளின் தரப்பு அத்துடன் நின்று விடாமல் திருச்சி மாவட்ட தலைமை நீதிபதியிடம் சென்று பிணைக்கு நின்றனர். அங்கும் PRPC வழக்கறிஞர் தோழர் சங்கர் சென்று அவர்களுக்கு பிணை கொடுக்கக் கூடாதென்று பேசினார். இதனால் அவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களிடம், மேல்முறையீடு செய்து விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும், குறைந்த தண்டனை பெற்றவர்களுக்கு கூடுதல் தண்டனை கிடைக்கச் செய்யவும், இழப்பீட்டுத் தொகையை உயர்த்திப் பெறவும் முயற்சிக்கலாமென்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தோம்.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை தீர்ப்பு
“மக்களின் உயிருடன் அலட்சியமாக விளையாடும் மருத்துவர்களை தண்டிக்க எந்த சட்டமும் இல்லை”

இந்த மருத்துவ மனைகள், இலவச கண் சிகிச்சை முகாம் என்ற பெயரில் கூட்டம் கூட்டமாக மக்களைத் தேடிப்பிடித்து கொண்டு வந்து சோதனைச்சாலை எலிகளைப் போல கொடுமைப்படுத்துகின்றனர். ஆனால், உண்மையில் இது இலவசமுமில்லை. சேவையும் இல்லை. அரசு, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கத்தை அமைத்து, அதன் தலைவராக உள்ள மாவட்ட ஆட்சியர் மூலம் இத்தகைய முகாம்களை நடத்த அனுமதித்து ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் நிதி உதவியும் செய்கிறது. அந்த நிதியையும் பெற்றுக்கொண்டு மக்களை இப்படி புழு, பூச்சிகளைப் போல நடத்தும் திமிர் இந்த தனியார் மருத்துவ மனைகளுக்கு எப்படி வருகிறது?

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை
மக்களின் உயிரையும் கூட தனியார் முதலாளிகளிடம் பணயம் வைப்பதுதான் இதற்கு அடிப்படை.

மக்களுக்கு மருத்துவம் வழங்கும் தனது பொறுப்பை தட்டிக்கழித்து அரசு, தனியாரிடம் தள்ளி விடுவதால்தான் மருத்துவத்திலும் தனியாரின் மனிதத் தன்மையற்ற கொள்ளை அரங்கேறுகிறது. முதலாளிகளுக்கு வரியைக்குறைப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்து கொடுப்பது, விவசாயிகளின் நிலத்தையும் பறித்துக்கொடுப்பது என்று சேவை செய்யும் அரசு, மக்களின் உயிரையும் கூட தனியார் முதலாளிகளிடம் பணயம் வைப்பதுதான் இதற்கு அடிப்படை.

தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் உரிமைப்பாதுகாப்பு மையம் தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை பெருமுயற்சியெடுத்து ஒன்று சேர்த்து ஒரு பொது நல வழக்கு போட்டிருக்க வில்லையென்றால் இந்த அளவுக்கு கூட மக்களுக்கு நிவாரணம் கிடைத்திருக்கப் போவதில்லை. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கப் போவதுமில்லை. ஆனால், இந்த குறைந்த பட்ச காரியத்தை சாதிக்கவே நாம் 8 ஆண்டு கால நீண்ட போராட்டத்தை நீதி மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நடத்த வேண்டியிருந்தது. சொல்லப்போனால், மலையைக் கிள்ளி எலியைப் பிடித்துள்ளோம் என்பதுதான் நிலைமை.

பாதிக்கப்பட்ட மக்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

முதலாளிகளுக்காகவே இயங்கும் இந்த அரசையும் நீதிமன்றம் உள்ளிட்ட அதன் எந்த அங்கத்தையும் நம்புவதால் ஆகப் போவது ஒன்றுமில்லை. மொத்தத்தில் தனியார் மயத்தை ஒழிக்காமல் மக்களுக்கு வாழ்வில்லை என்பதையே இத்தீர்ப்பு உணர்த்துகிறது.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுபாப்பு மையம்,
தமிழ்நாடு.

பேச-94432 60164.