privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்தீஸ்தா நேர்காணல் : மோடியின் குற்றம் மறுக்க முடியாத ஆதாரம்

தீஸ்தா நேர்காணல் : மோடியின் குற்றம் மறுக்க முடியாத ஆதாரம்

-

Teesta-Setalvadஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களுக்கு அஞ்சாமல் 2002 குஜராத் இனப்படுகொலைக்கு எதிராக போராடி வரும் தீஸ்தா சேதல்வாத் சென்னை வந்திருந்த போது வினவு செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலின் 3-ம் பகுதி.

மதவெறியருக்கெதிரான நீண்ட போராட்டத்திற்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?

மதவாதத்துக்கு எதிரான எங்கள் போராட்டத்தை 1985-86 வாக்கிலேயே தொடங்கி விட்டோம். அந்த நேரத்தில்தான், பாபர் மசூதியின் கதவுகள் திறந்து விடப்பட்டிருந்தன; ஷா பானு வழக்கு தொடர்பான அடிப்படைவாத பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. இரண்டுமே சரிசமமான வெறித்தனம் கொண்டவை.

நான் அப்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வேலை செய்து வந்தேன். ஜாவித், சாய்நாத், குமார் கேட்கர் உள்ளிட்ட நாங்கள் சிலர் சேர்ந்து மதவாதத்துக்கு எதிரான பத்திரிகையாளர்கள் என்ற அமைப்பை தொடங்கினோம்.

பால் தாக்கரே
“முஸ்லீம்களை தாக்குவதற்கு இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்” – பால் தாக்கரே

தாக்கரே போன்றவர்கள், “முஸ்லீம்களை தாக்குவதற்கு இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்” என்றும், “காஷ்மீர் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட வேண்டும்” என்றும் பேசிய வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மராத்தி நாளிதழ்களில் பேனர் தலைப்பு செய்திகளாக வெளியாகின. ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலிருந்து 110 பத்திரிகையாளர்களின் கையொப்பங்களை சேகரித்து, “இத்தகைய ஊடக துஷ்பிரயோகங்களை தடுக்க வேண்டும்; ஊடகங்கள் வெறுப்பு பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படக் கூடாது; முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுங்கள்” என்று மாநில அரசிடம் மனு கொடுத்தோம்.

அதைத் தொடர்ந்து, அத்வானியின் ரத யாத்திரை, 1992-93 மும்பை வன்முறைகள் நடந்தன. அது கொடூரமானதாக இருந்தது. மொத்த நகரமும் இரண்டாக பிளவுபட்டதோடு தெருக்களில் மரணம் கோர தாண்டவமாடியது. இசுலாமிய சமூகத்தைப் பற்றி மிக நச்சுத்தனமான கருத்துக்கள் பேசப்பட்டன.

அப்போது ஜாவித் சண்டே அப்சர்வரிலும், நான் பிசினஸ் இந்தியாவிலும் வேலை செய்து கொண்டிருந்தோம்.

மும்பை கலவரங்கள் தொடர்பாக நான் பிசினஸ் இந்தியாவின் இரண்டு இதழ்களுக்காக அட்டைப் படக்கட்டுரைகளை தயாரித்தேன். காணாமல் போனவர்கள், குடும்பங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதில் உள்ள பிரச்சனைகள் பற்றி தொடர்ந்து எழுத விரும்பினேன். ஆனால், வெகுஜன ஊடகங்கள் ஒரு பிரச்சனையை இறுதி வரை முழுமையாக பின்தொடர விரும்புவதில்லை. பரபரப்புக்காக ஓரிரு பெரிய கட்டுரைகள் வெளியிடுவதை ஏற்றுக் கொள்வார்கள். அதற்கு மேல் போனால் அனுமதிக்க மாட்டார்கள்.

மத வன்முறைக்கான சூழல் உருவாவதை கவனிப்பது, வன்முறைக்கான முன் தயாரிப்புகளையும், வன்முறையின் விளைவுகளையும் பற்றி எழுதுவது என்று செயல்பட விரும்பினோம், நாங்கள். அதனால்தான், வேலையை விட்டு விலகி, “கம்யூனலிசம் காம்பட்” இதழை தொடங்கினோம்.

2002 குஜராத் இனப்படுகொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிக்கப்பட்ட பெண்கள் எப்படி இருக்கிறார்கள்?

நரோடா பாட்டியாவைச் சேர்ந்த பெண்கள் தினக் கூலி வேலை செயபவர்கள்; குல்பர்க் சொசைட்டியில் பாதிக்கப்பட்டவர்கள் போல நடுத்தர வர்க்கத்தினர் இல்லை; சர்தார்புரா போன்ற இடங்களில் செய்ததை போல அவர்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர முடியாது. அவர்கள் திரும்பி அதே பகுதிக்குத்தான் போக வேண்டும்; மாயா கோத்னானி இப்போது பிணையில் வெளிவந்துள்ள அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.

2002 கலவரத்திற்கு பிறகு அகதி முகாமில் இருக்கும் முசுலீம் மக்களின் குழந்தைகள்!
2002 கலவரத்திற்கு பிறகு அகதி முகாமில் இருக்கும் முசுலீம் மக்களின் குழந்தைகள்!

அவர்கள் தினமும் காலையில் வேலைக்குப் போகும் போது கிண்டல் செய்து அச்சுறுத்தப்படுகின்றனர். எப்போதெல்லாம் விஷயம் கைமீறி போகிறதோ, அப்போது அவர்களுடன் போலீஸ் நிலையத்துக்குச் சென்று புகார் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வதுதான் எங்களால் முடிந்த சிறிய உதவி. ஆனால், அவர்கள்தான் அந்த தினசரி சித்திரவதையை அனுபவிக்கின்றனர்.

உச்சநீதிமன்றம் குஜராத் படுகொலை வழக்குகளை விசாரிக்க ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து, நீதிபதி ஜோஸ்னா யக்னிக்கை நீதிபதியாக நியமித்து, விசாரணையை கண்காணித்து வந்தது. நரோடாபாட்டியாவில் பாதிக்கப்பட்டு பிழைத்திருப்பவர்களிடம் பேசினால் அந்த நீதிபதி பற்றி மனமுருகி பேசுவார்கள். ஏனென்றால், வழக்கு விசாரணையின் போது எதிர் தரப்பு வக்கீல் அவர்களை துன்புறுத்துவதை அவர் அனுமதிக்கவில்லை.

நீதிமன்ற விசாரணைகளில் தலித் பெண்கள், தலித் உழைப்பாளிகள் சாட்சிக் கூண்டில் நிற்கும் போது இந்த அமைப்பு அவர்களை துன்புறுத்துகிறது. நீதிமன்ற சூழலே அவர்களுக்கு பகையானதாக உள்ளது. ஆனால், ஜோஸ்னா யக்னிக், ஒரு கேள்விகூட வரம்பு மீறுவதை அனுமதிக்கவில்லை. பெண்கள் சாட்சி சொல்ல தைரியம் பெற்றனர்; தமது தாய்களுக்கு, தமது மகள்களுக்கு நடந்த பாலியல் வன்முறைகளை குறித்துக் கூட பேசினர். நீதிமன்றம் அளித்த தைரியத்தில்தான் அவர்களால் பேச முடிந்தது.

மோடியை விடுவிக்கும் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு ஜாகியா ஜாஃப்ரி எப்படி உணர்கிறார்?

2003-ல் குற்றப் பதிவு செய்ய ஜாகியா ஜாஃப்ரிக்கு நாங்கள் உதவிய போது, உளவுத்துறை அறிக்கைகளிலிருந்து ஆதாரங்களையும், மறு முறையீட்டுக் கட்டத்தின் போது போது சிறப்பு புலனாய்வு குழுவின் ஆவணங்களையும் திரட்டினோம். மோடி மீது வழக்கு தொடருவதற்கு போதுமான ஆதாரங்கள் அவற்றில் இருந்தன.

அதிகாரபூர்வ பதிவுகளின் படி கோத்ராவின் ஆட்சியர், அப்போது உள்துறை அமைச்சக பொறுப்பை வைத்திருந்த மோடிக்கு கோத்ரா நிகழ்வைப் பற்றி தகவல் தெரிவித்திருக்கிறார். அவர் உடனடியாக விஸ்வ இந்து பரிஷத் தலைவர் ஜெய்தீப் படேலை அழைக்கிறார். (காவல் துறை ஆலோசனை கூட்டத்தை கூட்டவில்லை). அது தொடர்பான தொலைபேசி அழைப்பு பதிவுகள் உள்ளன. பின்னர் ஜெய்தீப் படேல் கோத்ராவுக்கு செல்கிறார். சுகாதாரத் துறை அமைச்சர் அசோக் பட்-ம் கோத்ராவுக்கு போகிறார்.

கொல்லப்பட்ட சடலங்களின் பிரேத பரிசோதனை இந்துத்துவா கும்பலின் முன் திறந்த வெளியில் நடத்தப்படுகிறது. குழந்தைகள், பெண்கள் உடல்கள், சிதைக்கப்பட்ட சடலங்களை பயன்படுத்தி உணர்ச்சிகளை தூண்டிவிட்டனர். பிரேத பரிசோதனை திறந்தவெளியில் செய்யப்படுகிறது என்று மோடிக்கும் தெரியும்.

பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. உடல்களை அகமதாபாதுக்கு எடுத்துச் செல்லும்படி உத்தரவிடப்படுகிறது.

இவை அனைத்தும் வழக்கு தொடுப்பதற்கு போதுமான ஆதாரங்கள். இது தொடர்பான வழக்கு இப்போது குஜராத் உயர் நீதிமன்றத்தில் உள்ளது. அதை விசாரிக்க எந்த நீதிபதிக்கு தைரியம் உள்ளது என்று தெரியவில்லை.

நேற்று நீங்கள் காவல்துறை உயரதிகாரி ஸ்ரீகுமார் பற்றி பேசினீர்கள். சஞ்சீவ் பட் அளித்த வாக்குமூலத்தின் முக்கியத்துவம் என்ன?

சஞ்சீவ் பட் மகத்தான தைரியத்தைக் காட்டியுள்ளார். முதலமைச்சர் வீட்டில் பிப்ரவரி 27 மாலை நடந்த கூட்டம் தொடர்பான விஷயத்தில் அவருடையது முக்கியமான சாட்சியமாக இருக்கும்.

ஸ்ரீகுமார், ராகுல் சர்மா 2002 முதலே ஒரு நிலைப்பாடு எடுத்து நானாவதி கமிஷன் முன்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். ஆனால் சஞ்சீவ் பட் 2002-ல் பேசவில்லை.

சஞ்சீவ் பட்
சஞ்சீவ் பட்

2009-ம் ஆண்டு சிறப்பு விசாரணை குழு விசாரணை நடந்த போது, பிப்ரவரி 27 அன்று முதலமைச்சர் வீட்டில் நடந்த கூட்டம் பற்றி ஹரேன் பாண்டியா தீர்ப்பாயத்திடம் கூறியிருந்ததை முன்னிட்டு உளவுத்துறை அதிகாரிகளின் வாக்குமூலங்களை சிறப்பு விசாரணைக் குழுவின் மல்ஹோத்ரா பதிவு செய்யும் போது நவம்பர் 2009-ல்தான் முதல் முறையாக சஞ்சீவ் பட் தனது வாக்குமூலத்தை கொடுத்தார்.

அது வரை பேசாததற்கான அவரது விளக்கம் என்னவென்றால், “கேள்வி கேட்கப்படும்போது மட்டும்தான் ஒரு காவல்துறை அதிகாரி பேச வேண்டும்” என்பது. அதை குறை சொல்ல முடியாதுதான். ஸ்ரீகுமார், ராகுல் சர்மா போன்றவர்கள் அதை ஒரு தார்மீக பிரச்சினையாக, அரசியல் சட்ட பிரச்சனையாக பார்த்தனர். சஞ்சீவ் பட்டைப் பொறுத்த வரை தேவைப்படும்போது அவர் அதைச் செய்தார்.

குஜராத் இனப்படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய மதிப்பீடுகள் வேறுபடுவதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

எங்கள் கணக்குப்படி காணாமல் போனவர்களையும் சேர்த்தால் 1900-2000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் குற்றப்பத்திரிகை வாரியான எண்ணிக்கையை தொகுத்திருக்கிறோம்; ஒரு மாதத்துக்குள் அவற்றை வெளியிடுவோம்.

இந்த ஆதாரபூர்வமான தகவலை, நாடாளுமன்றத்தின் முன்னும் வைக்க விரும்புகிறோம். இது தொடர்பான வரலாற்றை நேர் செய்ய வேண்டும்.

– தொடரும்