privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்சி.ஆர்.ஐ சட்ட விரோத கதவடைப்பு - உறுதியாக தொடரும் போராட்டம்

சி.ஆர்.ஐ சட்ட விரோத கதவடைப்பு – உறுதியாக தொடரும் போராட்டம்

-

சின்னவேடம்பட்டி சி‌.ஆர்‌.ஐ பம்ப்ஸ் கதவடைப்பு செய்து 35-வது நாளை எட்டிவிட்டது. ஆனாலும் தொழிலாளர்கள் போராட்டம் வர்க்கக் கோபத்துடன், எழுச்சியுடன் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சி‌.ஆர்‌.ஐ கம்பெனியைச் சுற்றியுள்ள 20 ஊர்களில் வீடு வீடாக பிரச்சாரம் தினமும் தொய்வில்லாமல் நடக்கிறது. கம்பெனி கேட் முன்பு தினசரி சமையல் செய்து தொழிலாளர்கள் தங்களது சலிப்படையாத, அஞ்சாத நடவடிக்கைகள் மூலம் கோவையில் புரட்சிகர நடவடிக்கைகளின் மையப் புள்ளியாக தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். செங்கொடி வரலாறு திரும்பவும் நிகழ்த்தப்படுகிறது.

சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கதவடைப்பு எதிர்ப்புப் போராட்டம்
தொழிலாளர்கள் போராட்டம் வர்க்கக் கோபத்துடன், எழுச்சியுடன் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

சி‌.ஆர்‌.ஐ முதலாளியை பணிய வைக்க முடியாது என்று சந்தேகம் எழுப்பியவர்கள் இப்போது சற்றே மாற்றி பேசுகிறார்கள்.

கோவை நகரம் முழுவதும் பேசப்படும் அளவுக்கு போராட்டம் வீச்சாக நடக்கிறது. பல்லாயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள், நூற்றுக் கணக்கான சுவரொட்டிகள், தொழிலாளர்கள் அணிந்து கொண்டு செல்லும் முழக்கங்கள் பொறித்த மேலங்கிகள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சி‌.ஆர்‌.ஐ முதலாளி சௌந்திரராஜனின் வீட்டுக்கே சென்று பாட்டாளி வர்க்கத்தின் வீரப்புதல்வர்கள் துண்டுப்பிரசுரம் கொடுத்து அலற வைத்துள்ளனர். சி‌.ஆர்‌.ஐ முதலாளி மார்ச் 26-ம் தேதி முதல் இரண்டு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் வைத்து நடமாடிக் கொண்டுள்ளார்.

சின்னவேடம்பட்டி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்க, சரவணம்பட்டி காவல் துறை எழுத்து பூர்வமாக மறுத்தது. பின்னர், மீண்டும் சரவணம்பட்டி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டோம். அதனையும் மறுத்து எழுத்து பூர்வமாகக் கொடுத்தார்கள். மீண்டும், “மே தினத்தை நடத்தி முடித்து மே 5-ம் தேதி சரவணம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். கொடுக்காவிட்டால் தடையை மீறுவோம்” என அறிவித்தோம். கடைசியில், 2-ம் தேதி இரவு 10 மணிக்கு சரவணம்பட்டி எல்லைக்குள் வேறு ஓர் இடத்தில் அனுமதி தருவதாக வாய்மொழி தகவல் கொடுத்தார்கள்.

சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கதவடைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்
“மே தினத்தை நடத்தி முடித்து மே 5-ம் தேதி சரவணம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். கொடுக்காவிட்டால் தடையை மீறுவோம்”

ஒரே நாளில் பிரசுரம், சுவரொட்டி அடித்து, பரவலாக ஒட்டி பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். சத்திய மங்கலம் ரோட்டில் பல்லாயிரம் மக்கள் பார்வையிட, மழை கொட்ட, பாட்டாளி வர்க்கத்தின் கம்பீரத்துடன் ஆர்ப்பாட்டம் அரங்கேறியது. அங்கே வந்த காவல் துறையின் குரூரமான ஆத்திரமூட்டல்களுக்கு நடுவே, அவர்களை சமாளித்து ஆர்ப்பாட்டத்தை துவங்கினோம்.

முருகன் மில் கிளைத் தலைவர் தோழர் ரங்கசாமி யின் தாமிரக் குரலில் துவங்கிய முழக்கம் சத்தி ரோட்டின் இரு முனைகளிலும் எதிரொலித்தது.

தோழர் ரங்கசாமி
தோழர் ரங்கசாமி

சி‌.ஆர்‌.ஐ கிளைத் தலைவர் மூர்த்தி கூட்டத்திற்கு தலைமை தாங்கி தாங்கினார்.

தோழர் மூர்த்தி
தோழர் மூர்த்தி

மாவட்டத் தலைவரும், சி‌.ஆர்‌.ஐ கிளைச் செயலருமான தோழர் குமாரவேல் தனது உரையில் 1980-லிருந்து 90-கள் வரையிலான சி‌.ஆர்‌.ஐ பம்ப்ஸ்-ன் வரலாற்றையும், அது தொழிலாளர்கள் உழைப்பின் மூலம் பெற்ற பிரம்மாண்ட வளர்ச்சியையும் விவரித்தார்.

தோழர் குமாரவேல்
தோழர் குமாரவேல்

“முதலில் சைக்கிளிலும், பழைய ஸ்கூட்டரிலும் ராஜேந்திரா இண்டஸ்ட்ரீஸ் க்கு வந்து கொண்டிருந்த முதலாளி சௌந்திர ராஜன் முதல் இதர டைரக்டர்களான வேலுமணி ராஜேந்திரன், கதிர்வேல் போன்றோர் எப்படி ஆரம்ப காலம் முதலே தொழிலாளிகளை சுரண்டிக் கொழுக்கத் துவங்கினர்” என்பதையும், பின்னர், ராஜேந்திரா இண்டஸ்ட்ரீஸ் சி‌.ஆர்‌.ஐ பம்ப்ஸாக பரிணாம வளர்ச்சியடைந்தையும் அந்த வளர்ச்சியின் பின்னுள்ள கொத்தடிமைக் கூடாரத்தையும் விலாவாரியாக கூறினார்.

அதே சமயம், “கம்பெனி கூட்டங்களில் முதலாளிகள் எப்படி சி‌.ஆர்‌.ஐ குடும்பம், சி‌.ஆர்‌.ஐ குடும்பம் என குரு பட பாணியில் சொல்லி சொல்லியே ஏய்த்தனர்” என்பதையும் கூறினார்.

தோழர் விளவை ராமசாமி
“கதவடைப்பு மூலம் நம் குடும்பங்கள் நசுக்கப்பட்டால், நம் குழந்தைகளின் எதிர்காலம் இல்லாமல் செய்தால், அவன் என்ன செய்கிறானோ அதனை அப்படியே அவனுக்கு ஏற்படுத்த வேண்டும்.”

அடுத்து, மாநிலத் துணைத் தலைவர் விளவை இராமசாமி சி‌.ஆர்‌.ஐ முதலாளிக்கு சவால் விட்டுப் பேசினார். “சி‌.ஆர்‌.ஐ முதலாளி முட்டாள்தனமாக கதவடைப்பு செய்துள்ளார். தொழிலாளர்களை பற்றி தவறான மதிப்பீட்டில் கதவடைப்பு செய்துள்ளார்.

  • கதவடைப்பு என்பது குண்டு வெடிப்புக்கு இணையானது.
  • 100 தொழிலாளர்கள் குடும்பங்களை அழிக்கும் செயல்தான் கதவடைப்பு.
  • கதவடைப்பு என்பது பெண்களிடம் செய்யும் செயின் பறிப்புக்கு இணையான திருட்டு ஆகும்.
  • கதவடைப்பு என்பது தொழிலாளிக்கு எதிராக முதலாளி செய்யும் யுத்தம்.
  • கதவடைப்பு என்பது தொழிலாளர்கள் குடும்பங்களை பட்டினி போடுவது, கதவடைப்பு என்பது வயிற்றில் அடிப்பது ஆகும்.

தனி ஒரு முதலாளிக்கு எதிராக நாம் நடத்தும் போராட்டம் நாளை நாட்டில் உள்ள அனைத்து முதலாளிகளுக்கு எதிராகவும் நடத்த வேண்டும். அதற்கான பயிற்சியை இங்குதான் நாம் பெறுகிறோம்.

முதலாளியின் கொடுமைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க நாம் ஆர்ப்பாட்டம் நடத்தும் போது காவல்துறை பதறுகிறது. தடுப்பதற்கு பல்வேறு வழிகளில் சூழ்ச்சி செய்கிறான். எனவே, தொடர்ந்து மக்களிடம் போய்க் கொண்டே இருக்க வேண்டும். இதுவே நமது வெற்றிக்கு அடிப்படை.

கோவை சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கதவடைப்பு
“முதலாளியின் கொடுமைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க நாம் ஆர்ப்பாட்டம் நடத்தும் போது காவல்துறை பதறுகிறது. “

கதவடைப்பு மூலம் நம் குடும்பங்கள் நசுக்கப்பட்டால், நம் குழந்தைகளின் எதிர்காலம் இல்லாமல் செய்தால், அவன் என்ன செய்கிறானோ அதனை அப்படியே அவனுக்கு ஏற்படுத்த வேண்டும்.

சௌந்திர ராஜன் தனது மகளுக்கு ஆயிரம் பவுன் நகை போட்டு ஜூன் மாதம் திருமணம் செய்யப் போகிறார். ஆயிரம் பவுன் யாருடையது? நம் ரத்தம், நம் உழைப்பு. எனவே, இதனை அனுமதிக்க முடியாது.

கோவை சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கதவடைப்பு
“சௌந்திர ராஜன் தனது மகளுக்கு ஆயிரம் பவுன் நகை போட்டு ஜூன் மாதம் திருமணம் செய்யப் போகிறார். ஆயிரம் பவுன் யாருடையது?”

ஜனநாயக முறையில் கதவடைப்புக்கு எதிராக மாவட்ட ஆட்சித் தலைவர் முதல் தொழிலாளர் துறை, தொழிற்சாலைகள் ஆய்வாளர், தமிழக முதலமைச்சர் என எல்லோருக்கும் சட்டப்படி மனு கொடுத்தாகி விட்டது. அவர்கள் அனைவரும் மௌனமாக உள்ளனர். ஆனால், நாம் மௌனமாக இருக்கக் கூடாது. முதலாளி மகள் திருமணத்தை எப்படி நடத்துவார் என ஒரு கை பார்ப்போம்.

நம் போராட்டம் எம்‌.எல்‌.ஏ ஆவதற்கோ எம்‌.பி ஆவதற்கோ இல்லை. இந்த மண்ணை விடுவிக்க நடத்துகிறோம். மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனையால் வழி நடத்தப்படுகிறோம். எனவே இறுதி வரை போராடுகிறோம். சமரசமில்லாமல் போராடுவோம்.

இது போன்ற போர்க்குணமிக்க போராட்டங்களை கோவையில் இதுவரை யாரும் நடத்தவில்லை. நாம் தான் புதுப் பாதை அமைக்கிறோம்.

கோவை சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கதவடைப்பு
இது போன்ற போர்க்குணமிக்க போராட்டங்களை கோவையில் இதுவரை யாரும் நடத்தவில்லை. நாம் தான் புதுப் பாதை அமைக்கிறோம்.

இத்துணை வருடமாக கம்யூனிஸ்டு கட்சி வைத்திருக்கும் போலிகள் யோக்கியதை என்னவென கூற ஒரு சம்பவத்தை கூறலாம். சி‌.ஆர்‌.ஐ யின் சரவணம்பட்டி யூனிட்டில் ஒரு முறை முதலாளி “கூர மேல சோத்தப் போட்டா ஆயிரம் காக்க” என தொழிலாளர்களை இழிவு படுத்தி பேச ரோசத்தால் உந்தப்பட்ட தொழிலாளிகள் எரிகிற கொள்ளிக்கு பயந்து ஊது குழலிடம் உதவி கேட்டாற் போல் சி‌.ஐ‌.டி‌.யு.-விடம் தஞ்சமடைய, அவர்கள் இவர்களை வைத்து முதலாளியிடம் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு கலைந்து விட்டனர்.

என்ன பேச்சு வார்த்தை என்பது மதவெறியை எதிர்த்த வாறே சிவப்பு சிக்னல் போல பொட்டு வைக்கும் காரத் தம்பதியினரிடமும், சாதியை விமர்சித்த அதே வாயில் என் பெயர் யெச்சூரி எனக் கூறிக் கொள்ளும் பொச கெட்ட பொதுச் செயலர் சீதா ராமனின் வாரிசுகளிடமும் தான் கேட்க வேண்டும்.

விளைவு சங்கம் கலைக்கப்பட்டது. தொழிலாளிகள் மீண்டும் அந்த இருள் சூழ் நரகத்துக்குள்ளே. இது மட்டுமன்றி சின்னவேடம்பட்டி சி‌.ஆர்‌.ஐ தொழிலாளர்கள் பகுதியில் பிரச்சாரம் செல்லும் போதெல்லாம் சுத்தி அரிவாளையும், சிவப்பு வண்ணத்தையும் பார்த்து விட்டு விலகிப் போவோரிடமும் நக்கலுடன் பார்ப்பவரிடமும் தன்னிலை விளக்கம் கொடுத்து கொடுத்து பேச வேண்டிய நிலையை உருவாக்கி வைத்திருக்கிறது.

தொழிலாளிகளில் சிலரே, “தோழர் இந்த சுத்தி அரிவாள போடாம விட்டா மக்கள் இன்னும் அதிகமா நிதி தருவாங்க போலிருக்கு ஒவ்வொரு இடத்திலும் சொல்ல வேண்டியதா இருக்கு…. “நாங்க சி‌பி‌ஐ சி‌பி‌எம் இல்லைங்க. அவங்க போலி கம்யூனிஸ்டு. நாங்க உண்மையான கம்யூனிஸ்டுகள். நக்சல்பாரியின் வழித்தோன்றல்கள்னு சொல்லி சொல்லியே பேச வேண்டியதா இருக்கு தோழர்…” எனக் கூறுகிறார்கள்.

கோவை சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கதவடைப்பு
“நிலம் கையகப்படுத்தும் மசோதா, சாலைப் பாதுகாப்பு மசோதா என சகலமானவற்றிற்கும் போராடுவோம். இதில் வெற்றி உறுதி.”

கோயமுத்தூர் ஜெயிலின் கொள்ளளவே 2,000 பேர்தான். அங்கு ஏற்கெனவே பல்வேறு சமூகக் குற்றங்களில் தண்டனை பெற்றவர்கள் 1,500 பேர் வரை உள்ளனர். சி‌.ஆர்‌.ஐ அனைத்துக் கிளைத் தொழிலாளர்களும், கோவையின் இதர பாட்டாளிகளுமாய் 2,000 பேர் இணைந்து நின்று “கதவடைப்பை நீக்கு இல்லையேல் எங்களை சிறையில் அடை” என முழங்கினால் கதவடைப்பின் முதுகெலும்பு முறிக்கப்படும். இதன் மூலம் நமது அனைத்து அடிமைத்தனத்தையும் முறியடிக்க வேண்டும். எனவே அதற்கான பாதையில் நாம் அனைவரும் அணி திரள வேண்டும”

என அறைகூவல் விடுத்து தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக, சி‌.ஆர்‌.ஐ யின் கிளைத் துணைத் தலைவர் இராமசாமி, வர்க்கக் கோபத்துடனும் ஆற்றாமையுடனும் பேசியது அனைவரையும் நெகிழச் செய்தது. “நீ செய்தது நியாயமா…? என் குழந்தைகள் மனைவி எதிர்காலம் தெரியாமல் திணறிக் கொண்டிருக்க நீ சொகுசு பங்களாவில் உல்லாசமாக உலா வருகிறாயே…? உனக்கு மனசாட்சி இருந்தா ஏற்றுக்குவியா…? இத்தனை வருஷமா வேல செஞ்ச எங்கள வெளியே நிக்க வெச்சுட்டியே, நாங்க எங்க போவோம்..? போக மாட்டோம், கதவடைப்பு நீங்கும் வரையில் போராடியே தீருவோம்” என தனது வலி மிகுந்த உணர்ச்சிகளை எடுத்து வைத்தார்.

அத்தோடு கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டம் நிறைவுற்றது. போராட்டம் தொடர்கிறது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க