privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்மலியானா படுகொலை வழக்கு : முசுலீம்களோடு நீதியையும் கொல்கிறார்கள்

மலியானா படுகொலை வழக்கு : முசுலீம்களோடு நீதியையும் கொல்கிறார்கள்

-

த்திரப்பிரதேசத்தின் ஹாசிம்புரா மற்றும் மலியானா கிராமங்களில் 1987 மே 18 முதல் 23 வரை இந்துவெறியர்களும் அரசும், போலீசும், பிரதேச ஆயுதப் படை(PAC) எனும் துணை ராணுவப்படையும் கைகோர்த்துக் கொண்டு முஸ்லிம்கள் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனமான நரவேட்டையானது, நாட்டையும் மக்களையும் உலுக்கிய ஒரு கொடூர நிகழ்வாகும். 1987 மே 23-ம்தேதியன்று மலியானா கிராமத்தில் 73 முஸ்லிம்கள் பிரதேச ஆயுதப்படையினராலும், இந்துவெறி பாசிச பயங்கரவாதிகளாலும் சுட்டுக் கொல்லப்பட்டும் தீயிட்டு எரிக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் 28 ஆண்டுகளுக்குப் பின்னரும் குற்றவாளிகளைத் தண்டிக்கக்கூட இந்திய அரசும் நீதித்துறையும் முன்வரவில்லை.

08-maliana-survivorsஉ.பி.யின் மீரட் மாவட்டத்திலுள்ள ஹாசிம்புராவில் 42 அப்பாவி இசுலாமியரைப் பச்சைப் படுகொலை செய்த பிரதேச ஆயுதப் படையினர், மீரட்டின் அருகிலுள்ள மலியானா கிராமத்தைச் சுற்றிவளைத்தனர். குடியிருப்புகளை விட்டு எவரும் வெளியேறிச் செல்ல முடியாதபடி இந்துவெறி குண்டர்கள் தடுப்பரணாக நின்றனர். அன்று தொழுகை முடிந்து வெளியே வந்த இசுலாமியரைக் குறிவைத்த ஆயுதப் படையினர், கண்ணிமைக்கும் நேரத்தில் 20-க்கும் மேற்பட்டோரைச் சுட்டுக் கொன்றனர். பீதியில் மிரண்டு சிதறி ஓடியவர்களைத் துரத்திச் சுட்டுக்கொண்டே சென்றது ஆயுதப்படை. மொட்டை மாடிகளில் இருந்து பறந்து வந்த தோட்டாக்கள் தப்பியோடியவர்களைக் குறிவைத்துத் தாக்க, அவர்கள் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மாண்டு போயினர். அதைத் தொடர்ந்து இந்துவெறி குண்டர்கள் வீடுகளின் மீது மண்ணெண்ணையை ஊற்றி ஒளிந்திருந்த மக்களை உயிருடன் எரித்துக் கொன்றனர். அவர்களது கையில் அகப்பட்டவர்கள் அரிவாளால் வெட்டப்பட்டு எரியும் நெருப்பில் தூக்கிவீசப்பட்டனர்.

இப்படுகொலையை மறைக்க, கொல்லப்பட்டவர்கள் அனைவரும் மூட்டைகளாகக் கட்டப்பட்டு காசியாபாத்தின் மேல்கங்கையாற்றிலும், ஹிண்டான் நதியிலும் வீசப்பட்டனர். இருப்பினும், கொல்லப்பட்டோரின் பிணங்கள் சாட்சியங்களாக அடுத்த இரண்டு நாட்களில் ஆறுகளில் மிதக்கத் தொடங்கின. இறந்து போனவர்கள் 73 பேர் என அன்றைய உ.பி. அரசு தெரிவித்தாலும், நூற்றுக்கும் மேற்பட்ட பிணங்களைப் பார்த்ததாக மீனவர்களும் கிராம மக்களும் உறுதிப்படுத்தினர்.

“எங்கள் கிராமத்தைச் சுற்றிலும் இந்துக்கள் நிறைந்த கிராமங்கள் உள்ளன. அவர்கள் கிராமத்தின் ஐந்து நுழைவுப் பாதைகளிலிருந்தும் தாக்கினர். இதனால் நாங்கள் எந்தத் திசையிலும் தப்பியோட முடியாதபடி சிக்கிக் கொண்டோம். அவர்கள் எனது கால்களையும் கைகளையும் அடித்து உடைத்து விட்டனர். அவர்கள் எனது பெற்றோரை கட்டிலில் கட்டிப்போட்டு உயிரோடு எரித்துக் கொன்றதை நான் பார்த்தேன்” என்று மிரட்சியுடன் கூறும் முகம்மது நவாப், “பிரதேச ஆயுதப் படையையோ, போலீசையோ குற்றம் சாட்டினால் இந்தப் படுகொலை பற்றி விசாரணையோ, நீதியோ கிடைக்காது என்று ஆட்சியாளர்கள் எங்களை எச்சரித்தார்கள். படுகொலைகளுக்குப் பிறகு போலீசார் தயாரித்த முதல் தகவல் அறிக்கையில் இப்படுகொலையை முன்னின்று நடத்திய ஆயுதப் படையினரின் பெயர் திட்டமிட்டு மறைக்கப்பட்டது. 95 இந்துமத வெறியர்கள் குற்றவாளிகளாகவும், கலவரத்தை நேரில் பார்த்த 75 இசுலாமியர்கள் சாட்சியங்களாகவும் சேர்க்கப்பட்டு போலீசாரால் தயாரிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் நாங்கள் கையெழுத்திடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டோம்” என்கிறார்.

இப்படுகொலைகளைக் கண்டித்து பொதுக்கருத்தும் பொதுமக்கள் நிர்ப்பந்தமும் வலுத்ததால், அன்றைய உ.பி. முதல்வர் வீர்பகதூர் சிங், ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.எல்.சிறீவத்சவா தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார். அக்குழு மீரட் நகரத்தில் தனது விசாரணையைத் துவக்கிய சமயத்தில், இப்படுகொலையின் மிக முக்கிய சாட்சியான ரிக்சா தொழிலாளி மாஷால்லா மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், போலீசாரால் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டு சிறைக் கொட்டடியில் கொலை செய்யப்பட்டார். சிறீவத்சவா குழுவின் விசாரணையின்போது அவர் உயிரோடிருந்தால், பிரதேச ஆயுதப் படையினரின் கொலைவெறியாட்டம் அம்பலமாகியிருக்கும் என்கிறது “சனநாயக உரிமைக்கான மக்கள் அமைப்பு” வெளியிட்டுள்ள அறிக்கை. சிறீவத்சவா குழு தனது அறிக்கையை 1989-லேயே சமர்ப்பித்த போதிலும், அது இன்றுவரை வெளியிடப்படாமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகிறது.

08-maliana-cow1987 முதல் இன்றுவரை, ஒப்பிற்கு கூட அரசு தரப்பில் வழக்குரைஞர் நியமிக்கப்படாததால், இவ்விசாரணை ஓரடிகூட முன்னே நகரவில்லை. வழக்கு விசாரணை 2010-ல் மீரட் நகர நீதிமன்றத்திற்கு வந்தபொழுது, முதல் தகவலறிக்கை காணாமல் போய்விட்டதாக போலீசார் தெரிவித்தனர். முதல் தகவலறிக்கை இல்லாததைச் சாக்காக வைத்து இவ்வழக்கை மேற்கொண்டு விசாரிக்க மறுத்தது மீரட் அமர்வு நீதிமன்றம். முதல் தகவலறிக்கையில் ஆயுதப் படையினர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படாமல் தப்புவிக்கப்பட்டதைப் போலவே, இப்போது முதல் தகவல் அறிக்கையையே காணவில்லை என்று கூறி, அதில் குற்றம் சாட்டப்பட்ட இந்துவெறி குண்டர்கள் தப்புவிக்கப்பட்டுள்ளனர்.

08-maliana-captionமுதல் தகவல் அறிக்கை இல்லாததைக் காரணம் காட்டியே விசாரணை முடக்கப்பட்டு வந்த சமயத்தில், இவ்வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. முதல் தகவலறிக்கைக்குப் பதிலாக, தனிநபர்களின் சாட்சியங்களை அடிப்படையாக வைத்து வழக்கை விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், ஆண்டுக்கு ஒரு சாட்சியம் என இரண்டாண்டுகளில் மொத்தம் இரண்டு பேரின் சாட்சியங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 75 பேரின் வாக்குமூலத்தைப் பதிவு இன்னும் எத்துணை ஆண்டுகளாகுமோ, தெரியவில்லை. கால்நூற்றாண்டிற்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற இவ்வழக்கில், இதுவரை 800 நாட்கள் விசாரணைக்காக அறிவிக்கப்பட்டு மொத்தத்தில் மூன்று பேரின் வாக்குமூலங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன.

இக்கொலைவெறியாட்டத்தில் தனது குடும்பத்தில் மூவரைப் பறிகொடுத்துள்ள முகம்மது யாகூப், “இன்றைய ஒட்டுமொத்த அரசியல் அமைப்பே கூட்டு சேர்ந்து கொண்டு எங்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை நீர்த்துப்போகவும், மறுக்கவும், தாமதிக்கவும் செய்கின்றன; அதுவும் நாங்கள் முசுலீம்கள் என்பதால் அவை திட்டமிட்டு நடத்தப்படுகின்றன” என்று குமுறுகிறார். அலாவுதீன் சித்திக் என்கிற அப்பகுதி வழக்குரைஞர், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் சார்பாக வழக்கை இன்றுவரை நடத்தி வருகிறார். “தேவையற்ற காரணங்களால் ஏற்படுகிற தாமதமே நீதியைச் சாகடிக்க வாய்ப்பாக அமைந்து விடுகிறது. இப்படுகொலை நடந்தபொழுது நேரில் கண்ட சாட்சியங்கள், இறந்தவர்களின் உறவினர்கள் – என சுமார் 25 முதல் 30 பேர் முக்கிய சாட்சிகளாக இருந்தபோதிலும், விசாரணை முடங்கிக் கிடக்கிறது. அரசு தரப்பிலும் ஒரு வக்கீல் கூட நியமிக்கப்படவில்லை” என விரக்தியுடன் கூறுகிறார்.

உ.பி. ஆட்சியாளர்களால் ஒரு புனிதப் பசுவாகப் பராமரிக்கப்படும் பிரதேச ஆயுதப் படை (PAC) என்ற துணை ராணுவப் படையானது, இந்துவெறியும் சாதிவெறியும் ஆணாதிக்க வெறியும் கொண்ட ஒரு சட்டபூர்வ வன்முறைக் கும்பலாகவே இன்னமும் நீடித்து வருகிறது. கைப்புண்ணிற்குக் கண்ணாடி தேவையற்றதைப் போல, பிரதேச ஆயுதப் படையினராலும் இந்துவெறி குண்டர்களாலும் நடத்தப்பட்ட இப்பச்சைப்படுகொலையில் ஒட்டுமொத்த விசாரணையும் திட்டமிட்டு ஒழிக்கப்பட்டு கொலைகாரர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். ஹாசிம்புரா வழக்கிலாவது “நீதி”விசாரணை நடத்தப்படுவதைப் போன்ற பாவனைகள் இருந்தன. ஆனால் மலியானா வழக்கு விசாரணையில், அந்த குறைந்தபட்ச பாவனைகூட இல்லாமல் கொலைகார ஆயுதப்படையினரும், காவிக் கிரிமினல்களும் தப்புவிக்கப்பட்டு, இந்தியாவில் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களல்ல என்பதை ஆட்சியாளர்கள் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

– அன்பு
____________________________
புதிய ஜனநாயகம், மே 2015
____________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க