privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விதாலியறுக்கும் தனியார் பள்ளி வேண்டாம் !

தாலியறுக்கும் தனியார் பள்ளி வேண்டாம் !

-

அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கக்கோரி சைக்கிள் பேரணிவிழிப்புணர்வு பிரச்சாரம்

அரசுப்பள்ளிக்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம்விருத்தாசலம் மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும், மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும் இணைந்து, நலிந்து வரும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பெற்றோர்களுக்கு அரசுப் பள்ளிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சைக்கிள் பேரணி நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கம்மாபுரம் வட்டத்தைச் சேர்ந்த பள்ளிகளுக்கு தே.பவழங்குடியிலிருந்து கருவேப்பிலங்குறிச்சி வரை உள்ள கிராமங்களில் 19-05-2015 செவ்வாய் கிழமை அன்று சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.

காலை 9.00 மணிக்கு தே.பவழங்குடி திருவள்ளுவர் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் இருந்து பேரணி தொடங்கியது. மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலைமதி வாழ்த்துரை வழங்கினார். கம்மாபுரம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பஞ்சநாதன் பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.

பேரணி கீரமங்கலம் வழியாக சென்ற பொழுது அப்பகுதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ம.தமிழ் செல்வி பேரணியை வரவேற்று அனைவருக்கும் மோர் வழங்கினார். அங்கிருந்து புறப்பட்டு காவனூர் கிழக்கு, மேற்கு, அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் லட்சுமி, ரேகா, மோகன்தாஸ் பேரணிக்கு வாழ்த்துரை வழங்கினர். பின்பு, கொடுமனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, தேவங்குடி அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி, மருங்கூர் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி , சி.கீரனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி , மே.பாலையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் வழியாக சென்ற சைக்கிள் பேரணி மதியம் 2.00 மணி அளவில் வல்லியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சென்றடைந்தது.

அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாக சைக்கிள் பேரணி
அரசுப் பள்ளியில் பிள்ளைகள சேர்க்க வலியுறுத்தும் பேனர்கள் வைத்தும் பறை இசை முழங்கிய படி, மைக் செட் அமைத்து கோஷங்கள் எழுப்பி, பேரணி சென்ற பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

அங்கு அனைவரும் மதிய உணவு சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்விற்கு பிறகு 3.15-க்கு புறப்பட்டு கார்மாங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நேமம் வழியாக மாலை 5.00 மணிக்கு கருவேப்பிலங்குறிச்சி சென்றடைந்து நிறைவு பெற்றது.

பேரணியை மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க அமைப்பாளர் தே.பவழங்குடி திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளி சிறுதொண்ட நாயனார் ஏற்பாடு செய்து நடத்தினார். பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை உணவு, மதிய உணவு அனைத்தும் அவரே ஏற்பாடு செய்து வழங்கினார். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. பொன்னிவளவன் பேரணி செல்லும் பாதையை திட்டமிட்டதுடன் பேரணியில் ஆர்வத்துடன் பங்கேற்றார். அனைத்து பள்ளிகளிலும் அப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு குளிர்பானம் வழங்கினர்.

அரசுப் பள்ளிக்கு ஆதரவாக சைக்கிள் பேரணி
அரசுப் பள்ளிக்கு ஆதரவான தனியார் பள்ளிகளுக்கு எதிரான கோஷங்கள் “ஆகா அரசு பள்ளி”, “ஐயோ தனியார்பள்ளி”, “தாலி அறுக்கும் தனியார் பள்ளி”, “அனைத்தும் இலவசமாய் வழங்குது அரசு பள்ளி” அனைத்தும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அப்பகுதி அரசுப் பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் மாலை பேரணியில் பங்கேற்றனர்.

அரசுப் பள்ளிக்கு ஆதரவாக சைக்கிள் பேரணி
“கிராமத்திற்கு ஆறு தனியார் பள்ளிகளில் இருந்து வெவ்வேறு ஊர் வேன் பஸ் வருது. கவுரத்திற்காக தனியார் பள்ளி என மன நிலை மாறிவிட்டது”

பேரணியை நடத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே கம்மாபுரம் பகுதி தொடக்கக் கல்வி அலுவலரை மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க தலைவர் வை.வெங்கடேசன், சிறுதொண்ட நாயனார் ஆகியோர் நேரில் சந்தித்து விழிப்புணர்வு பேரணியில் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டனர். உதவி தொடக்க கல்வி அலுவலர் திருமதி. ராஜேஸ்வரி, “நாங்கள் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் செய்கிறீர்கள். கண்டிப்பாக அனைவரும் கலந்து கொள்வாம்” என கூறினார். அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் பேரணியை வரவேற்று வாழ்த்துரை வழங்கினர்.

அரசுப் பள்ளிக்கு ஆதரவாக சைக்கிள் பேரணி
நமது பிரசுரத்தையும், கோஷத்தையும் கேட்ட கிராமத்து மக்கள் இதுதான் சரியான முடிவு என ஆதரித்தார்கள்.

பேரணிக்கு 2 நாட்களுக்கு முன்பே பேரணி செல்லும் பகுதி கிராம மக்களிடம் பேரணி பற்றி விளக்கி கலந்து கொள்ள அழைப்பு விடுத்து, துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

பேரணியின் முன்புறம் Tata ace வாகனத்தில் முன்புறம் மற்றும் பக்கவாட்டு இருபுறத்திலும் அரசுப் பள்ளியில் பிள்ளைகள சேர்க்க வலியுறுத்தும் பேனர்கள் வைத்தும் பறை இசை முழங்கிய படி, மைக் செட் அமைத்து கோஷங்கள் எழுப்பி, பேரணி சென்ற பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

அரசுப் பள்ளிக்கு ஆதரவாக சைக்கிள் பேரணி
“ஆகா ஓகோ அரசுப்பள்ளி அய்யோ அய்யோ தனியார் பள்ளி” என்பதற்கான தாளம் ராகமாக மாணவர்களிடம் எதிரொலித்தது.

பேரணியில் எழுப்பப்பட்ட அரசுப் பள்ளிக்கு ஆதரவான தனியார் பள்ளிகளுக்கு எதிரான கோஷங்கள் “ஆகா அரசு பள்ளி”, “ஐயோ தனியார்பள்ளி”, “தாலி அறுக்கும் தனியார் பள்ளி”,  “அனைத்தும் இலவசமாய் வழங்குது அரசு பள்ளி” அனைத்தும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

6-ம் வகுப்பு மாணவன் ரீத்திஷ் பல தாளங்களில் தப்பு அடித்து சைக்கிளில் வந்த மாணவர்களை உற்சாகப் படுத்தினார். “ஆகா ஓகோ அரசுப்பள்ளி அய்யோ அய்யோ தனியார் பள்ளி” என்பதற்கான தாளம் ராகமாக மாணவர்களிடம்  எதிரொலித்தது. கிராமங்கள் தோறும் அரசுப்பள்ளி மாணவர்கள் நமக்காக ஆதரவு பேரணியா என மகிழ்சியோடு பார்த்தனர். கூடவே சில மாணவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

அரசுப் பள்ளிக்கு ஆதரவாக சைக்கிள் பேரணி
கிராமங்கள் தோறும் அரசுப்பள்ளி மாணவர்கள் நமக்காக ஆதரவு பேரணியா என மகிழ்சியோடு பார்த்தனர்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ”சார் நாங்கள் நல்லாதான் சொல்லி கொடுக்கிறோம். இந்த கிராமத்திற்கு ஆறு தனியார் பள்ளிகளில் இருந்து வெவ்வேறு ஊர் வேன் பஸ் வருது. கவுரத்திற்காக தனியார் பள்ளி என மன நிலை மாறிவிட்டது. பிள்ளைகளை பற்றி பெற்றோர்கள் கவலைப் படாமல் சுமார் 80 கி.மீ. தூரம் சென்று படித்து வர அனுப்புகிறார்கள். பணம் கட்ட முடியாமல் பாதியில் திரும்பி இங்கே மீண்டும் சேர்ப்பது நடக்கிறது. நாங்கள் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த முயற்சி எடுக்கிறோம். நாளுக்கு நாள் சேர்க்கை குறைந்து வருகிறது.

ரேசன் கடையில் அரிசி மண்ணெண்ணெய் போட்டா சில மாணவர்கள் அன்றைக்கு வரமாட்டார்கள். வெளியூருக்கு மரம் வெட்ட குடும்பத்தோடு போகும் போது பிள்ளைகளை கூட்டிட்டு போய்விடுவாங்க. நாங்க வருகை பதிவேடை பராமரித்து அடுத்த வகுப்பிற்கு ஏதோ சொல்லி கொடுத்த அனுப்புவோம். சில நேரம் சில மாணவர்கள் வந்த பிறகு பாடம் நடத்தலாம் என காத்திருப்போம். வீட்டில் அப்பா அம்மாவோடு சண்டை, குடித்துவிட்டு ரகளை, அதனால் தலை சீவாமல் வருவார்கள். நாங்கள் இதை கடந்து பாடம் சொல்லி கொடுக்க தயாராக இருக்கிறோம். அரசு பள்ளிக்காக நீங்கள் சைக்கிள் பேரணி நடத்துவது, இவ்வளவு சிரமப்படுவது எங்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது” என எலுமிச்சை பழச்சாறை அனைவருக்கும் வழங்கி சொந்த வீட்டு விசேசம் போல் கவனித்தார்கள்.

அரசுப் பள்ளிக்கு ஆதரவாக சைக்கிள் பேரணி
தனியார் பள்ளிகளின் மோகம் அதன் சாயம் வெளுத்து வருகிறது என்பதற்கான ஆதாரம் தான் நமது பிரச்சாரத்தின் இந்த பிரதிபலிப்பு.

நமது பிரசுரத்தையும், கோஷத்தையும் கேட்ட கிராமத்து மக்கள் இதுதான் சரியான முடிவு என ஆதரித்தார்கள். தனியார் பள்ளிகளின் மோகம் அதன் சாயம் வெளுத்து வருகிறது என்பதற்கான ஆதாரம் தான் நமது பிரச்சாரத்தின் இந்த பிரதிபலிப்பு. சைக்கிள் பேரணி நடத்துவது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் அதற்கு நல்ல பலன் இருக்கிறது.

அரசுப் பள்ளிக்கு ஆதரவாக சைக்கிள் பேரணிபேரணியில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தை சேர்ந்த அன்பழகன், ஆடியபாதம் ஆகிய இருவரும் அனைவருக்கும் குளுகோஸ் வழங்கினார். மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலாளர் விருத்தாசலம் வழக்கறிஞர் புஷ்பதேவன், மாவட்ட இணைச் செயலாளர் சிதம்பரம் வழக்கறிஞர் செந்தில், பொருளாளர் செந்தாமரைகந்தன், அசோக், செல்வம், செல்வகுமார், வேலுமணி, ஆச்சி குமார், பழனி, அறிவரசன், தெய்வக்கண்ணு, ஆனந்தகுமார் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

(வை.வெங்கடேசன்)
தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம்