privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்வரலாற்றுப் பார்வையில் தாலி - சிறப்புக் கட்டுரை

வரலாற்றுப் பார்வையில் தாலி – சிறப்புக் கட்டுரை

-

‘ஆமா..நல்லா வேலை செஞ்சு தாலியத்தே…போவியா” –

கரிசல் வட்டாரங்களில் ஆத்திரத்தில் மக்களிடம் புழங்கும் வசவு, இது. தாலியின் மதிப்பு ‘மயிர்’ என ஏசுவதன் ‘இடக்கரடக்கலாக’வோ, இளக்காரமாகப் பேசும்போது, ‘ஆமா..ஒன் தாலி’ என்றோதான் இருக்கிறது. ஆனால் பேனைப் பெருமாளாக்கி, பெருமாளைப் பெத்த பெருமாளாக்கும் இந்துவெறிக்கும்பலோ ‘தாலி’ பற்றிப் பேச நினைத்த புதியதலைமுறைத் தொலைக்காட்சியின் மீது ‘வீரமாக’க் குண்டு வீசி, பெரியார் திடலில் உருட்டுக்கட்டையால் அடிவாங்கிச் சுருண்டிருக்கிறது.

தாலி - இந்து கலாச்சாரமா?
இந்துவெறிக்கும்பலோ பெரியார் திடலில் உருட்டுக்கட்டையால் அடிவாங்கிச் சுருண்டிருக்கிறது.

இந்து வானரப்படைகள் வெளியிட்டிருக்கும் வெளியீடுகளில் “எது இந்துக்கலாச்சாரம்” எனப் பார்த்தால் நெற்றியில் பொட்டுவைப்பதில் தொடங்கி கோலம் போடுவது, பூவைப்பது என அப்பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது. ஒன்றை நன்றாகக் கவனியுங்கள். இந்தப் பட்டியலை முழுக்கப் பெண்களுக்காகவே ஒதுக்கி இருப்பது தெரியும். அப்பட்டியலில் தாலியும் இருக்கின்றது.

உண்மையில் தாலி புனிதமானதா? அடிமைச் சின்னமா? தமிழர்களின் கலாச்சாரமா? கற்பின் சின்னமா? என்பதைப் போன்ற பல கேள்விகளுக்கு விடை கண்டாக வேண்டியுள்ளது.

இதனை அலசுவதற்கு முன், கால தேச வர்த்தமானத்தைக் கணக்கில் எடுத்தபடி, திருமணம் காலந்தோறும் மாறி வருவதையும் மனதில் கொள்வது நல்லது. உதாரணமாக, 1990-களின் கடைசி வரை, ‘தாலிகட்டிய பின்னர்தான் திருமண வரவேற்பு’ என்று இருந்த நிலை மாறி, தாலிகட்டு சடங்குக்கு முந்தைய நாளே பெண்ணும் மாப்பிள்ளையும் வீடியோ ஒளிவெளிச்சத்தில் நனைந்தபடி நிற்பது என்ற மாற்றம் நடந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன் திருமணங்களோ பல நாட்களாக நடந்திருக்கின்றன.

தாலி இந்து கலாச்சாரமா?
“சங்க காலத்தில் தாலிகட்டு இல்லை, 11-ம் நூற்றாண்டுக்குப் பிந்தைய வழக்கம் அது”

இதில் தாலி கட்டுவது தமிழர் திருமணத்தில் எப்போது ஆரம்பித்தது என்பதைப் பற்றி ஒரு விவாதத்தை பேரா.ராசமாணிக்கனார் 1954-ல் நடத்தியுள்ளார். “சங்க காலத்தில் தாலிகட்டு இல்லை” என்பதும், 11-ம் நூற்றாண்டுக்குப் பிந்தைய வழக்கம் அது” என்பதும் அவரின் வாதம். பல்வேறு இலக்கியச் சான்றுகளை வைத்து அதனை நிறுவினார்.

ம.பொ.சி. இதனை மறுத்து, “சிலப்பதிகாரத்தில் வரும் மங்கல அணி என்பது தாலிதான், எனவே சிலப்பதிகார காலத்திலேயே தாலி இருந்தது” என்றும் அடித்துப் பேசிக் கொண்டிருந்தார். பெரும்பாலான தமிழறிஞர்கள் ராசமாணிக்கனாரின் கருத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

விவாதம், “எப்போது தாலி நுழைந்தது” என்பதோடு முடிந்துபோனது. யாரும், “தாலி ஏன் திருமணத்தில் நுழைந்தது” என்பதை விளக்கவில்லை. இதனைப் பின்னர் பார்ப்போம். அதற்கு முன், திருமண முறைகளையும், தாலியைப் பற்றி பொதுப்புத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைகளையும் பார்த்து விடுவோம்.

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கருநாடகம் ஆகிய நான்கு மாநிலங்களில் வாழும் மக்களின் பண்பாடுகளுக்கிடையே பல ஒற்றுமைகள் இருப்பதால், இந்த ஆய்வுக்கு இம்மாநில மக்களிடையே நிலவிய, நிலவுகின்ற திருமண முறைகளைக் கணக்கிலெடுத்துக் கொள்வோம்.

‘பொய்யும் வழுவும் தோன்றிய’ பின் ‘ஐயர் யாத்தனர் கரணமென்ப’ எனத் தொல்காப்பியர் உரைத்த திருமணம், பெரும்பான்மை மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. பார்ப்பனர், வேளாளர் போன்ற ஆதிக்கத்தின் உச்சியில் இருந்தவர்களுக்கே உரித்தது ‘விவாகம்’. மந்திரச்சடங்குகள் இடம்பெறும் விவாகத்தை சூத்திரத் தமிழர்களும், நாயர் உள்ளிட்ட பார்ப்பனரல்லாத மலையாளிகளும் செய்திட அனுமதி இல்லை.

தாலி நமது கலாச்சாரமா?
பார்ப்பனர், வேளாளர் போன்ற ஆதிக்கத்தின் உச்சியில் இருந்தவர்களுக்கே உரித்தது ‘விவாகம்’.

பின்னர் எந்த மணமுறை அனுமதிக்கப்பட்டது? “சம்பந்தம்” அனுமதிக்கப்பட்டது.

‘சம்பந்தம்’ என்பது என்னவென்றால் மணமகன் சார்பில் புதுச்சேலை ஒன்று தரப்படும். அதைப் பெண்வீட்டார் பெற்றுக்கொண்டு பெண் அணிந்து கொள்வது, இதுதான் சம்பந்தம். இதுதான் மொத்தமாகவே திருமணம்.

பல்வேறு சாதிகளிடையே இதற்குள் சில சில வேறுபாடுகள், உதாரணமாக மாப்பிள்ளையே பெண்ணிடம் சேலையை அளிப்பது போன்ற வழக்கங்கள், இருக்கலாம்.

இன்னமும் பெண்வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் ‘சம்பந்தி’ என்றே அழைக்கின்றனர். சம்பந்த திருமணம் மறைந்து விடாமல் நிச்சயதார்த்தம் எனப்பெயர் மாறி அதன் பின்னொட்டாக அய்யர் வைத்து சடங்கு செய்வதும் சென்ற நூற்றாண்டில் சேர்ந்து கொண்டது.

தற்போது நடப்பிலுள்ள பெரும்பாலான திருமண வகைகளில் தாலி முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தாலியைப்பற்றிப் பொதுப்புத்தியில் சொல்லப்பட்டுள்ளவைகளைப் பார்ப்போம்.

1. தாலிகற்பின் அடையாளம்.

தாலி அகற்றும் நிகழ்ச்சியை கி.வீரமணி அறிவித்த நாளிலிருந்தே தினமணியில் தொடங்கி சரத்குமார் வரைக்கும் சவுண்ட் விடாத ஆட்களே இல்லை.

தாலி - நமது கலாச்சாரமா?
தாலி அகற்றும் நிகழ்ச்சியை கி.வீரமணி அறிவித்த நாளிலிருந்தே தினமணியில் தொடங்கி சரத்குமார் வரைக்கும் சவுண்ட் விடாத ஆட்களே இல்லை.

”தாலி இல்லைன்னா ‘ஒருவனுக்கு ஒருத்தி’ங்கிற கற்பு என்னாகுறது” என்றெல்லாம் பேசினார்கள். தாலி என்பது கற்பின் சின்னம் என்று மக்களும் நம்புகின்றனர். கற்புக்கும் தாலிக்கும் தொடர்பு ஏதும் கிடையாது. சான்றாகச் சில சாதிகளில் 100 ஆண்டுகளுக்கு முன் நடப்பில் இருந்த திருமண முறைகளைப் பார்ப்போம். (அவற்றில் சில மாற்றங்கள் வந்திருந்தபோதும் சில மரபுகள் தொடர்வதாகக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.)

மலையாளக் கம்மாளர், கணக்கன், பணிக்கன், தோல்கொல்லன், மண்ணான் போன்ற சாதிகளில் வீட்டில் மூத்த அண்ணன் மட்டுமே ஒரு பெண்ணுக்கு தாலி கட்டுவான். அவனின் தம்பிகளும் அப்பெண்ணோடுதான் (அதாவது அண்ணியோடு) உறவு வைத்துக்கொண்டு வாழ்வார்கள். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளிடையே எவ்வித பேதமும் பார்ப்பதில்லை.

தாலி நமது கலாச்சாரமா?
ஆக கற்புக்கும் தாலிக்கும் தொடர்பு இல்லை. கற்பின் வரையறை கூட சாதியைப் பொறுத்து மாறுபடுகிறது.

அனுப்பர், கம்மா, காப்பிலியர், வல்லம்பன் ஆகிய சாதிகளில் உறவு விட்டுப்போகக் கூடாது (நிலம் போய் விடக் கூடாது என்பதன் வேற்றுவடிவம்) என்பதற்காக பருவ வயதை அடையாத சிறுவன் குமரிப்பெண்ணுக்குத் தாலி கட்ட வைக்கப்படுகிறான். அச்சிறுவன் வயதுக்கு வரும் வரை அவனுடைய சித்தப்பனோ, தந்தையோ, அல்லது நெருங்கிய உறவினரோ அப்பெண்ணோடு உறவுகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம். அக்குழந்தைகள், தாலி கட்டிய சிறுவனுக்குப் பிறந்தவர்களாகக் கருதப்படுவர். (தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் – 7 தொகுதிகள் – எட்கர் தர்ஸ்டன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வெளியீடு )

ஆக கற்புக்கும் தாலிக்கும் தொடர்பு இல்லை. கற்பின் வரையறை கூட சாதியைப் பொறுத்து மாறுபடுகிறது.

2. கட்டிய புருஷனின் உயிருக்கு ஆதாரம்தாலி என்பதைப் போன்ற புனிதபிம்பங்கள் தொடர்ச்சியாகப் போதிக்கப்பட்டு வருவதால் சமூகத்தில் பலரும் ‘தொட்டுத் தாலிகட்டிய புருஷனையே எதிர்த்துப் பேசலாமா?’ என்பதைப் போன்ற அடிமைச் சிந்தனைகளைப் பரப்பி வருகின்றனர். மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதை மட்டுமே திருமணம் என்பதான பாவனையை சினிமாவும் சீரியலும் முன்னிறுத்துகின்றன. ஆனால் பல சாதிகளின் திருமணச் சடங்கில் மாப்பிள்ளை தாலி கட்டுவது கூட இல்லை. யார் தாலி கட்டுவார்கள்?

  1. கோமட்டி, கப்பேரர், குருபர், யாடர் ஆகிய சாதிகளில் புரோகிதன் தாலியைக் கட்டுவான்.
  2. படகர் சாதியில் நான்கைந்து மனைவியை உடைய பெரிய மனிதர் வந்து பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவார்.
  3. காடர், காட்டுப்பட்டர், கோட்டை வெள்ளாளர், தொட்டியர், ஊராளி, வலையன் ஆகிய சாதிகளில் மணமகனின் உடன்பிறந்தவளோ, தாயோ தாலியைக் கட்டுவர்.
  4. புலையன் சாதியில் மணமகனும் அவன் தோழனும் சேர்ந்து பெண்ணுக்கு தாலி கட்டுவர்.
  5. உப்பரர் சாதியில் பெண்ணின் ஊரைச் சேர்ந்த சீர்க்காரி என்பார் தாலி கட்டுவாள்.
  6. நாட்டுக்கோட்டைச் செட்டிகளில் தாலியை மண நாளன்று மணமகளின் கோவிலைச் சேராத பெரியவர் ஒருவரும், பெண்ணின் நாத்தனாரும் கட்டுவர்.

ஆக தாலி கட்டும் முறை கூட சாதிக்கு சாதி மாறுபடுகிறது. புருஷனுக்கும் தாலிக்கும் சம்பந்தமும் இல்லை.

3. தாலிஇந்துக்களின் கலாச்சாரமா?

தாலி இந்து கலாச்சாரமா?
தாலி கட்டும் முறை கூட சாதிக்கு சாதி மாறுபடுகிறது. புருஷனுக்கும் தாலிக்கும் சம்பந்தமும் இல்லை.

தாலி கட்டும் வழக்கம், இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பது அர்த்தமற்றது. வேண்டுமானால் தென்னிந்தியாவிலுள்ள பல சாதிகளிலும் பல மதப்பிரிவைப் பின்பற்றுவோரிடமும், சுருக்கமாகச் சொன்னால் திராவிட மக்களின் ஒரு பகுதியினர் தாலிகட்டலை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்று கூறலாம்.

தக்ணி இசுலாமியர் பிரிவில் தாலிக்கு மாற்றாக கருப்புப் பாசிமணிமாலை அணிவிக்கின்றனர். தூதே குலர், மாப்ளா, மரக்காயர், கொடிக்கால் லெப்பை பிரிவு இசுலாமியர்களும் தாலி கட்டுகின்றனர். வெள்ளை யூதர்கள் தாலி கட்டுகின்றனர். மின்னுகெட்டு எனும் மின்னு (தாலி) கட்டும் வழக்கம் சிரியன் கத்தோலிக்க மதப் பிரிவினரிடம் உள்ளது.

தாலி கட்டுதல் என்பது தென்னிந்தியாவின் பரவலான பழக்கம் எனச் சொல்லலாமே தவிர இந்துக்களின் பழக்கம் என்பது பச்சைப் பொய்.

4. தாலிஎல்லா இந்துக்களும் கட்டுகின்றனரா?

திருமணத்தன்று தாலி கட்டுவது என்பது 2 நூற்றாண்டுகளாகத்தான் வழக்கத்துக்கு வந்துள்ளது. பல சாதிகளில் பெண் வயதுக்கு வரும் முன்னரே பெண் வீட்டாரோ, அல்லது உறவினரின் மகன்,மகள் இவர்களை வைத்தோ கட்டுத்தாலி கட்டுவது என்பது வழக்கம். தாலி என்பதன் பொருள் தொங்குதல் என்பதே. காத்து கருப்பு அண்டாமல் இருக்கட்டும் என நரிப்பல் போன்றவற்றை சிறுவர் கழுத்திலோ இடையிலோ கட்டித் தொங்கவிடுவது போன்ற வழக்கம்தான் இது. கோலாயன் சாதியில் தந்தையே தன் மகளின் கழுத்தில் கெட்டுத்தாலியைக் கட்டுவார்.

தாலி நமது கலாச்சாரமா?
திருமணத்தன்று தாலி கட்டுவது என்பது 2 நூற்றாண்டுகளாகத்தான் வழக்கத்துக்கு வந்துள்ளது.

இவ்வாறு கட்டுத்தாலி கட்டும் மரபினர் திருமணத்தின்போது தாலி கட்டுவதில்லை. அதற்கு மாற்றான சடங்குகளைச் செய்த உடன் திருமணம் முடிந்துவிடுகின்றது. கீழ்க்கண்ட திருமண முறைகளை 100 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியர்கள் பின்பற்றியுள்ளனர்.

  1. விரும்பிய பெண்ணின் சேலையைக் கிழித்து அவளின் கழுத்தைச் சுற்றிக் கட்டிவிட்டு அவள் ஓடாமல் இருந்தால் அவனுக்கு சொந்தம் எனக் கைக்கோளர்களும், மணமக்களின் கைகளை அல்லது சில இடங்களில் சிறுவிரல்களை இணைத்து வைப்பது சில சாதிகளிலும், மணமகளின் கழுத்தில் குதிரையின் மயிர் ஒன்றினைக் கட்டி விடுவது பிரான்மலைக் கள்ளரிடத்திலும் வழக்கத்தில் இருந்தன.
  1. இருவருக்கும் பால்,சர்க்கரை,பழம் கலந்த இனிப்பு வழங்கப்படுதல்தான் பணிக்கரின் திருமணம்.
  1. இருவரின் கைகளை ஒன்றாகக் கோர்த்து அந்தக்கைகளின் மீது தண்ணீரை வார்ப்பர், கெலசியர்.
  1. மணமக்கள் தலையில் அரிசி தூவப்படுதல்தான் கொரகர் திருமணத்தில் முக்கிய சடங்கு.
  1. கோண்ட் சாதியில் பெண்ணின் இரு கரங்களிலும் 20 முதல் 30 பவுண்ட் எடையுள்ள 2 பித்தளை வளையல்கள் அணிவிக்கப்படும். திருமணம் முடிவடையும்போது வளையல்கள் கழற்றப்படும்.
  1. லம்பாடிகளில் கன்னிகள் மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை வளையல் அணிவதும், மணமானோர் முழங்கை முதல் தோள் வரை வளையல் அணிவதும் திருமண வழக்கம்.
  1. தோம்பர்களில் சாதிக்காய், அரிசி, செப்பு நாணயங்கள் முடியப்பட்ட துணி மணமக்கள் மீது போர்த்தப்படும்; இருவரின் சிறுவிரல்கள் இணைக்கப்பட்டு வீட்டுக்குள் நுழைவர்.
  1. கொல்லிமலை மலையாளி சாதியில் மணமகன் மரத்தாலான சீப்பை செதுக்கி வைத்திருப்பான். அதைப் பெண்ணின் கூந்தலில் செருகுவதுதான் திருமணம்.
  1. பைராகி சாதிக்கு திருமணமே கிடையாது. விரும்பியவர்கள் சேர்ந்து வாழலாம். காட்டுக்குறும்பரில் வெற்றிலை பாக்கு மாற்றினாலே அதுதான் திருமணம். இருளரிடத்தில் கறிவிருந்து மட்டுமே திருமணம்.
  1. முதுவர் சாதியில் திருமணம் செய்ய உள்ள இருவரையும் குகைக்கு அனுப்பி சிலகாலம் இருக்க செய்வர்.. அதன்பின் இருவருக்கும் பிடித்திருப்பின் திருமணம். இல்லாவிட்டால் வேறு ஜோடியைத் தேடவேண்டும்.

இவை சில உதாரணங்கள் மட்டுமே. தாலி இல்லாத திருமண முறைகளைப் பின்பற்றும் சாதிகளின் எண்ணிக்கை மட்டும் 70 க்கும் மேற்பட்டதாகும்.

தாலியின் வரலாறு என்ன?

தாலி நமது கலாச்சாரமா?
பொட்டு கட்டுதல் எனும் சடங்கின் மூலம் கோவிலுக்கு சேவை செய்ய பெண்களை நேர்ந்துவிடும் சடங்கில் தேவதாசிப் பெண்டிருக்கு தாலி கட்டப்பட்டது.

“தென்னிந்தியாவில் ஆரம்பம் முதலே தாலி திருமணத்தின் முக்கியமான அம்சமாக இருந்தது கிடையாது. இவ்வழக்கம் முதன்முதலில் 11-ம் நூற்றாண்டில் முதலாம் ராசராசன் காலத்தில் இருந்து ஆரம்பித்தது” என்று கூறுகிறார், வரலாற்று அறிஞர் கே.கே.பிள்ளை.

பொட்டு கட்டுதல் எனும் சடங்கின் மூலம் கோவிலுக்கு சேவை செய்ய பெண்களை நேர்ந்துவிடும் சடங்கில் தேவதாசிப் பெண்டிருக்கு தாலி கட்டப்பட்டது. கோவில் நிலமெல்லாம் பார்ப்பன, வேளாளர்கள் அனுபவித்த காலத்தில் தேவதாசிகள் பொட்டு (பொட்டு – தாலி) கட்டியபோது அவர்களுக்கு மானியமாக நிலம் எழுதிவைக்கப்பட்டது. நிலத்தோடு தொடர்புக்குள்ளானது, பொட்டு எனும் தாலி.

தமிழ்ச் சமூகத்தின் இயக்கத்தில் ஒரு விசயத்தை உற்று நோக்கினால் பெண்களுக்கு விதிக்கப்பட்ட பல விசயங்கள் முதலில் தேவடியார்களிடத்தில் இருந்தே ஆரம்பமாவது தெரிய வரும்.

தாலியை முதலில் அணிந்தது அவர்களே..

அதே போல முகத்தில் மஞ்சள் பூசுவது அவர்களுக்கு மட்டுமான ஒன்றாக இருந்த்து.

முகத்தில் பவுடர் பூசுவதும் அலங்கரித்துக்கொள்வதும் அவர்களுக்கானதாக இருந்தது.

சமூகத்தின் அசைவியக்கத்தில் மெல்ல அது இல்ல மகளிரையும் வந்தடைந்துள்ளது. சான்றாக முகத்துக்குப் பூசும் மஞ்சளை விரலி மஞ்சள் என்பர். விரலி எனப்படுவது பொதுமகளிரைக் குறிக்கும்.

சமூகத்தில் தாலி வழக்கத்தில் இருந்திருக்குமேயானால் கம்பரின் ராமாயணத்தில் ராமன் சீதைக்கு தாலி கட்டி இருப்பான். ஆனால் அவன் கட்டவில்லையே!

கல்வெட்டு, செப்பேடுகளை உற்று நோக்கினால் விஜய நகரப் பேரரசுக்காலத்தின்போது மறவர் சீமைகளை ஆதிக்கம் புரிந்த சேதுபதிகளுக்கு ‘தாலிக்கு வேலி’ என்ற பட்டம் வருவது தெரியும். அதற்கு முன்பு இருந்த சோழர்கள் யாருக்கும் இப்பட்டம் இல்லை.

சோழர்களின் காலத்தில் இருந்துதான் சாதிகள் இறுக்கமாகி அவற்றுக்கிடையே வலங்கை, இடங்கை பூசல்கள் ஆரம்பித்து கிழக்கிந்தியக் கம்பெனியின் காலம் வரை அவை தொடர்ந்தன. பார்ப்பனர், வேளாளர்கள் தவிர்த்த ஏனைய விவசாயம் சார்ந்த சாதிகள் எல்லாம் வலங்கை எனவும், வணிகம், கைவினைத்தொழிலில் ஈடுபட்ட சாதிகள் எல்லாம் இடங்கை எனவும் பிரிந்தன.

தாலி நமது கலாச்சாரமா?
தாலி கட்டும் வழக்கமுடைய பின்வரும் சாதிகள், விவசாயத்தில் நில உடைமையாளராகவும், விவசாயத் தொழிலாளராகவும் இருந்துள்ளனர்.

வலங்கை இடங்கைகளின் தோற்றத்துக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டிருப்பினும், மறைந்த மார்க்சிய லெனினியப் போராளி அனுராதா காண்டி சொல்லியிருக்கும் காரணம் பொருத்தமானதாகும். அவர், “11-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட உழைப்புப்பிரிவினை கைவினைஞர்கள், வணிகர்களை நகரங்களை நோக்கி நகர்த்தி இடங்கைகளாகவும், விவசாயம் நில உடைமை சார்ந்த ஆதிக்க சாதிகளை வலங்கைகளாகவும் பிரித்தன, ஒரு நூற்றாண்டுக்குப் பின் இதே உழைப்புப் பிரிவினை வட இந்தியாவில் ஏற்பட்டு கைவினைஞர்கள், வணிகர்கள் எல்லாம் இசுலாமுக்கு மாறியதும் ஏற்பட்டன” என்று கூறியுள்ளார்.

இடங்கைச் சாதிகள் பொருளாதார ரீதியில் கை ஓங்கும்போது சில புதிய பழக்கங்களை, உதாரணமாக தங்களது திருமணத்தில் பல்லக்கு வைத்தல், தோரணம் கட்டுதல் ஆகியவற்றை கொண்டுவர முற்படும்போது வலங்கையினர் தாக்கிக் கலகம் செய்வதும், இவர்கள் திருப்பித் தாக்குவதும் பல நூற்றாண்டுகளாக நடந்துள்ளன. இந்த சர்ச்சைகள் கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை கவர்னரிடம் ஒரு முறை வழக்காக வந்துள்ளது. புதுச்சேரி கவர்னரிடமும் ஒரு பிராது வந்துள்ளது. தஞ்சாவூரை ஆண்ட சரபோஜியின் மகன் சிவாஜி காலத்தில் ஒரு சர்ச்சை பைசல் செய்யப்பட்டுள்ளது. சிவாஜி காலத்திய பஞ்சாயத்திலும் திருமணத்தில் என்னென்ன உரிமைகள் உள்ளன என்பது பேசித் தீர்க்கப்பட்டுள்ளது.

அதிலிருந்து : “பேரி செட்டி கலியாணத்துக்கு பந்தலுக்கு வெள்ளை செவப்பு கலந்து கட்டி கொள்ளுகிறதும் அல்லாமல் வாழை கூந்தல் நெட்டிமாலை இதுகளும் கட்டி ஆனை அறசாணி வைத்துகொம்பு..தப்பு மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் அபேக்சிச்ச தூயது தரித்துக்கொண்டு கொம்பு தப்பு சங்கீதமேளம் யிதுகளுடன் கல்யாணம் செயிது ஊர்கோலத்துக்கு செகப்பு துதி நா பல்லாக்கு கட்டி இதுகளில் உள்கார்ந்து செகப்பு பாவாடை பிடிச்சு கொண்டு தீவட்டி மத்தாப்பு வாணவித்தையுடன் என்று சாதிவாரியாக திருமண விழாவில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்துப் பேசப்படுகின்றன. ஆனால் தாலி பற்றி இந்தப் பஞ்சாயத்து ஏதும் பேசவில்லை. தாலிக்குப் பெரிதாக முக்கியத்துவம் ஏதும் இல்லை அப்போது.

எந்தெந்த சாதிகளுக்கெல்லாம் தாலி கட்டுதல் வழக்கத்தில் இருந்தன என்பதற்கு இப்போது நமக்குக் கிடைக்கும் ஆவணம், சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் எட்கர் தர்ஸ்டன் தொகுத்த ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ – 7 தொகுதிகள் ஆகும். அத்தொகுப்பில் ஒவ்வொரு சாதியிலும் திருமண முறை எவ்வாறு இருந்தன என்பதை ஆவணப்படுத்தியுள்ளார், தர்ஸ்டன்.

இச்சாதிகளை தாலி கட்டுவோர், கட்டாதோர் எனப் பட்டியலிட்டு அச்சாதிகளின் குலத்தொழிலை ஆராயும்போது ஓருண்மை புலப்படுகின்றது.

தாலி கட்டும் வழக்கமுடைய பின்வரும் சாதிகள், விவசாயத்தில் நில உடைமையாளராகவும், விவசாயத் தொழிலாளராகவும் இருந்துள்ளனர்.

தேவதாசி, உடையார், கொடிக்கால் லெப்பை முஸ்லிம், மாப்ளா, கம்மா, ஒக்கிலியர், பள்ளர், அகமுடையோர், பைதி, தொரெயர், கொங்கு வேளாளர், கன்னடியர்

தாலி கட்டாத பின்வரும் சாதிகள் வேட்டை, வணிகம், கைவினைத் தொழில் போன்றவற்றைத்தான் செய்து வந்தனரே தவிர விவசாயம் சார்ந்த சாதியாக இருக்கவில்லை.

கைக்கோளர், மலையாளக் கம்மாளர், பணிக்கன், ஒட்டர், கெலசியர், கோத்தர் , குறிச்சன், லம்பாடியர், செஞ்சு, செறுமான், சித்தூர் வட்ட ஈழவர்கள், கூடகுலம், தோல்கொல்லன், பளியன்

இந்த ஆவணத்திலிருந்து திருமணத்தில் தாலி கட்டும் உரிமைக்கும், விவசாயத்துக்கும் தொடர்பு உள்ளது என்பதும் அது வலங்கை சாதியின் வழக்கம் என்பதும் புலனாகின்றது.

இவற்றில் சில விதிவிலக்குகளும் உள்ளன. அவற்றுக்குப் பிரத்யேகக் காரணங்கள் உள்ளன. இடங்கை வலங்கைப் பட்டியல் பிறபகுதிகளிலிருந்து குடியேற்றங்கள் இப்பகுதிக்குள் வந்தபோது அச்சாதிகளை எப்பட்டியலில் வைப்பது என்ற சர்ச்சைகள் தலை தூக்கியதுண்டு. புதியதாக வந்தவர்களை இடங்கையில் சேர்ப்போம் எனச்செய்தனர். ஆனால் தாங்கள் வலங்கையர்தான் என்று நிறுவும் முயற்சியில் பல புராணங்களை எழுதி அவற்றை நிலை நாட்டிட முயன்றனர் புதியவர்கள். அதனை ஆதிக்க சாதிகள் ஏற்காமல் கலவரம் செய்துள்ளனர்.

உதாரணம் சிவகாசி கலவரம். ஈழத்திலிருந்து தென்னகத்தில் குடியேறிய சாதிகளில் ஒன்று சாணார் சாதி. அச்சாதியினர் இடங்கையில் வைக்கப்பட்டு கடுமையாக ஒடுக்கப்பட்டனர். ஓலை முடியப்பட்ட தாலியே அவர்களின் வழக்கம். சிறுதெய்வ வழிபாடே பிரதானம். ஆனால் பிரிட்டிஷ் இந்தியாவில் பருத்தி ஏற்றுமதியில் அவர்கள் இறங்கியபின் பொருளாதார வலிமையை அடைந்தனர். அதன் தொடர்ச்சியாக, பெருங்கோவில்கள் கட்டுவதும் அவற்றுக்கு பார்ப்பன பூசாரிகளை நியமிப்பதும் தொடங்கியது. பழைய வலங்கை இடங்கை பூசல் தலைதூக்க, மறவர்கள் ஏனைய வலங்கை சாதிகளைத் திரட்டி வந்து சிவகாசி சாணார்கள் மீது தாக்குதல் நடத்தியதே 1899-ல் நடந்த சிவகாசிக் கலகம்.

வலங்கை சாதிக்கு உரித்தானதாக இருந்த தாலி அனைவருக்கும் பொதுவானது எவ்வாறு?

கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவைக் கைப்பற்றியபின்னர்தான் இந்த நாட்டுக்கு இந்தியா என்றும் இங்குள்ள மக்களுக்கு இந்து என்றும் நாமகரணம் சூட்டப்பட்டது. இந்து சட்டத் தொகுப்பு எழுதப்பட்டது. மையப்படுத்தப்பட்ட அரசை உருவாக்கினர். இதையொட்டி உருவாகிக் கொண்டிருந்த இந்து தேசியத்துக்குள் பல்வேறு குழுக்களையும் பழக்க வழக்கங்களையும் பார்ப்பனியம் உட்செரித்து ‘எல்லாமே இந்துக் கலாச்சாரம்தான்’ எனச் சாதித்தது.

புதிய வழிபாடுகள், புதுப்பழக்கங்கள் எல்லாம் புகுந்து திருமண முறையில் இருந்து கோவில் வழிபாடுகள் வரை பல கலாச்சார மாற்றங்கள் நடந்தன. அவற்றில் ஒன்றுதான் தாலி பொதுக்கலாச்சாரமாக மாற்றப்பட்ட நிகழ்ச்சிப்போக்கு. வணிக, கைவினை சாதிகளிலும் தாலி 19-ம் நூற்றாண்டில் புகத் தொடங்கியது. இதனால்தான் இன்னமும் பா.ஜ.க கோரும் பொது சிவில் சட்டத்தைப் போல ஒரே வடிவிலான தாலி என்பது இந்துக்கள் அனைவருக்கும் இல்லை. ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தாலி உள்ளது. (தமிழ் சினிமாவில் குளோஸ் அப்பில் காட்டப்படும் தாலி ஆந்திர மாநில சாதிகளில் ஒன்றான ரெட்டி சாதித் தாலியை ஒத்திருக்கிறது)

தாலி என்பது மாப்ளா முஸ்லீமிடமும், சிரியன் கிறித்துவரிடமும், ஏனைய இந்து சாதிகளிடமும் காணக் கிடைக்கும் தென்னிந்திய வழக்கம் என்பதும், இது நில உடைமையின் அடையாளம் என்பதும் தெரிய வருகின்றது.

இதனை வேறு வழியிலும் புரிந்து கொள்ளலாம். தென்னிந்தியாவிலுள்ள பெரும்பாலான சாதிகள் ஒரு காலத்தில் தாய்வழி சமூகமாக இருந்து மெல்ல மெல்ல தந்தைவழிக்கு மாறி வந்துள்ளன. இம்மாற்றமும் சாதிக்கு சாதி வேறுபடக்கூடியது. திருமணத்தில் தாய்மாமனுக்குத் தரப்படும் முக்கியத்துவமும், ‘முதல் பிரசவம் தாய் வீட்டில்தான்’ என்பதும் தாய்வழி சமுதாயத்தின் மிச்ச சொச்சங்களாகும். ஆனால் சில சமூகங்கள் இறுக்கமான தந்தை வழி சமூகங்களாகி விட்டன. அதற்கு சான்று அச்சாதிகளில் நடப்பில் இருக்கும் மதினி மண முறையாகும்.

அஃதென்னவென்றால் ஒரு வீட்டில் சகோதரர்கள் பலரிருக்க, மூத்தவர் இறந்து போனால் அவரின் மனைவியை (மதினியை) கொழுந்தன் மறுமணம் செய்தாக வேண்டும். அதாவது சொத்துடைமை தந்தைவழி இரத்த வாரிசுகள் வழியே செல்வதை இம்மணம் உறுதிப்படுத்துகின்றது. இங்கே சொத்தின் அடையாளமான தாலி கணவனின் மரணத்தின் பிறகும் பெண்ணின் கழுத்தில் ஏறி, சொத்தைக் காப்பாற்றுகிறது. சொத்துடைமையின் அடையாளமே தாலி.

இதில் இந்துக் கலாச்சாரம், கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி என ‘ஒரு தாலியும் கிடையாது’ (கரிசல் வட்டார வழக்கில் ‘ஒரு இழவும் கிடையாது’ என்பதை இவ்வாறும் குறிப்பிடுவர்).

இப்புரிதலோடு செல்லும்போது ஒரு கேள்வி எழுகிறது. பெண்ணடிமைச் சின்னமல்லவா, தாலி? ஆம், நிச்சயமாக அது அப்படித்தான். நிலவுடைமைச் சின்னத்தில் ஜனநாயகமா இருக்க முடியும்? அச்சமூகம் பெண்ணையே சொத்தாகத்தான் கருதுகின்றது எனும்போது, சொத்துடைமையை ஒழிக்கும் இலட்சியத்தில் உள்ள நாம் தாலியை எவ்வாறு ஆதரிக்க முடியும்?

இன்னொரு வரலாற்றுக் கடமையாகவும் தாலி அகற்றலைக் காணவேண்டும்.

ராசராசன் ஆரம்பித்து வைத்ததுதான் தேவதாசி முறை. அவன் காலத்தில் இருந்துதான் தாலியும் ஆரம்பிக்கிறது. சென்ற நூற்றாண்டில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் செய்த தீவிரமான பிரச்சாரத்தாலும் அரசின் சட்டத்தாலும் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டு விட்டது. ராசராசன் காலத்தில் இருந்து இன்னமும் ஒழிக்கப்படாமல் நீடிக்கிறது, தாலி. அதை ‘அகற்றி’ ஒழித்திடும் கடமையும் நமக்கு உள்ளது.

ஆதாரங்கள்:

  1. தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் – 7 தொகுதிகள் – எட்கர் தர்ஸ்டன்
  2. மராட்டிய மன்னர்களின் மோடி ஆவணங்கள் தமிழ் மொழிபெயர்ப்பு
  3. ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்புகள்
  4. தமிழர் மானுடவியல் – பக்தவத்சல பாரதி

– கற்பக விநாயகம், வசந்தன்.

  1. தாலி என்பது புனிதம் என்ற கருத்தை
    கொண்டுள்ளவர்களுக்கு இந்த கட்டுரை நல்ல புரிதலை தரும்

  2. Sir…. i accept you as a maoist…Leninist…Marxist you say you are against sothudaimai…. but for me this looks like Vadivelu comedy….. where “if we hide comb, marriage will stop ” similarly if there is no Mangal sutra, who said this sothudaimai or whatever you refer will stop…. everyone will have it’s route.

    i accept your struggle against caste creed and religion but focusing on this kind of struggle looks like waste of time….

  3. ண்ல்ல ஆய்வுக் கட்டுரை.ஆனால் வினவு ஏன் இந்து மத மூடநம்பிக்கைகள் பற்றி எளுதுகிரது? இச்லாம் மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகலள் பற்றி எளுதுவது இல்லை?

  4. அசாத்திய கட்டுரை, வராற்றில் திருமண /பந்தம் ,முறைகளை மற்றும் சாதிய அமைப்புகளை திரும்பிபார்த்து அலச வைக்கிறது, பார்பனிய கும்பல்கள் போடும் ஆட்டம் பற்றி தெளிவு பெறுகிறது , தோழர்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள், வினவு வாழ்க .

  5. புனிதமான விசயங்களெல்லாம், சிலர் பிழைக்க ஏற்பட்டவையே!

    கடவுள் புனிதம்;
    வேதம் புனிதம்;
    உபனிஷத் புனிதம்;
    புராணம் புனிதம்;
    இதிகாசம் புனிதம்;
    மனு ச்மிருதி புனிதம்;
    கீதை புனிதம்;
    சட்டம் புனிதம் (சட்டத்தை ஆக்கியவர்கள் அல்ல);
    னீதி மன்றம் புனிதம்,நிதி வாங்கி தீர்ப்பளித்தாலும்!
    ஆக மொத்தத்தில் பார்ப்பனர் சம்பந்தப்பட்டது எல்லாம் புனிதம்! வெங்காயம்?

  6. பார்ப்பனர்களை விட பார்ப்பனர் அல்லாத, ஆனால் பார்ப்பனீயத்தை ஆதரிக்கும் நண்பர்கள் தான் அதிதீவிரமாக நம்மோடு மோதுகிறார்கள்.

    • அதுதான் பார்பனீய இந்துமதம்! ரயில் பயணத்தில் பார்த்திருக்கலாம், முன்பதிவு முறை வருவதற்கு முன், புதிதாக வரும் பயணிக்கு, கதவும் திறக்காது, இருக்கையும் கிடைக்காது! முன்னால் ஏறியவர்கள் துண்டு போட்டு, நால்வர் அமரும் இருக்கையில் படுத்து தூங்குவது போல பாசாங்கு செய்வர்! பார்பனர் உட்பட அனைவருக்கும் இதே குணம் ரத்தத்தில் ஊறியது போலும்! அதற்குத்தான் , முன்பதிவு, ரிசர்வேசன் தேவை என்றோம்! முதன் முதலில் ரிசர்வேசன் முறையை கொண்டு வந்த முத்தையாவை மறக்காதீர்கள் அன்பர்களே!

  7. மிக நல்ல கட்டுரை. விரிவான ஆய்வும் விளக்கமும். கூடவே தொடர்புடைய புத்தகங்களை சுட்டிக் காட்டியமைக்கும் நன்றி. இந்த புத்தகங்கள் கீழைக்காற்றில் கிடைக்குமா, இல்லையென்றால் வேறு கிடைக்கும் இடத்தை குறிப்பிட்டால் வாங்கி மேலும் விவரமாக படித்து தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். நன்றி வினவு.

  8. ”தாலி இல்லைன்னா ‘ஒருவனுக்கு ஒருத்தி’ங்கிற கற்பு என்னாகுறது” என்று கேட்கும் பார்ப்பனர்களே! மகாபாரதத்தில் துரௌபதி என்றொருத்தி இருப்பது தெரிந்துதான் பேசுகிறீர்களா?

    கட்டிய புருஷனின் உயிருக்கு ஆதாரம் – தாலி. “விபத்தில் சிக்கி புதுமாப்பிள்ளை பலி!” இதெல்லாம் தெரியாதா மாப்ள?

    தாலி– இந்துக்களின் கலாச்சாரமா?- எனக்குத் தெரிந்து மனுதர்ம சட்டத்தில் தாலிகட்டுவது பற்றி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்து மதத்தின் அத்தாரிட்டி மனுவே தாலி பற்றி பேசாத போது நீங்க ஏய்யா முந்திரி கொட்டை மாதிரி?

    தாலியை முதலில் அணிந்தது தேவரடியார்கள் எனில் தாலி தேவதாசிகளின் அடையாளமாகத்தானே இருக்க வேண்டும். அதே ஏன் நம் குலப்பெண்கள் சுமக்க வேண்டும்?

    தாலி தமிழனின் பாரம்பரிய அடையாளம் எனில் கணவன் இறந்த பிறகு தாலி அறுக்கும் நிகழ்வு எந்த ஒரு பழந்தமிழ் இலக்கியத்திலும் ஏன் இடம் பெறவில்லை?

    பல்லாண்டுகால தமிழனின் வரலாற்றில் எப்போதும் இல்லாது – இடையில் புகுந்த தாலியை பிடித்துத் தாங்கிக் கொண்டிருப்பது தமிழனின் அடையாளத்தையே அழிக்கும் கயமைத்தனம் அல்லவா?

    தாலியைத் துறப்பதே தமிழனின் அடையாளம்!

    செய்வீர்களா?

  9. குழந்தை பிறப்பு முதல், திருமண உறவில் மாமன் வீட்டிற்கு செல்லும் வரை, கொண்டான் – கொடுத்தான் உறவு முறையினர், முக்கியமாக தாய் மாமன் வீட்டார் செய்யும் தங்கத்தினாலான ஓலை, காசு முதலியவற்றை அணிந்து கொள்ளும் வழக்கமே ‘தாலி’ ஆயிற்று! புகுந்த வீட்டார் பறித்துக்கொள்ள முடியாத அணிகலனாக ஆக்குவதற்கு,நடுனாயகமாக, கணவன் வீட்டார் கட்டிய, பரிசப்பணம் பொன்ற, தங்க வில்லையுடன் அணியப்படுகிறது! கணவன் இறந்தாலும் அது அறுத்துகொள்ளப்படுவது கொடுமை! தாலி புகுந்தவீட்டு-பிறந்த வீட்டு பெருமை துலங்க அணியப்படும் வழக்கமே ஒழிய, புனிதம் எனப்பட்டது ஆணாதிக்க சமூகத்தின் பிற்கால ஏற்பாடு! தேவதாசிகள், செல்வந்த் புரவலர்களிடமிருந்து செல்வத்தை பறிக்க கனத்த வைர, வைடூரிய மாலைகளை பரிசாக கேட்டு பெறுவர்! ஆனால், குலமகளிர், சமூக அங்கீகாரம் கருதி, காதோலை, கருகமணி, சீலை இவற்றையே மங்கள சீர்வரிசை பொருளாக பெற்றனர்! திருமண பதிவு சட்டங்களும், சடங்குகளேயில்லாமல் செர்ந்து வாழவும் முடியும் என்றானபின் புனிதமென்பது அர்த்தமற்று போனது! பெண்கள் இனியும் தங்க ஆபரணங்களுடன், ஆபரண ஸ்டாண்டு போல், வலம் வரவேண்டுமா?

  10. //தாலியை முதலில் அணிந்தது அவர்களே..

    அதே போல முகத்தில் மஞ்சள் பூசுவது அவர்களுக்கு மட்டுமான ஒன்றாக இருந்த்து.//

    தமிழகத்தில் தேவதாசி முறை என்பது சரியாக கூறவேண்டுமானால் 10ஆம் நூற்றாண்டுக்கு பிறகு வந்தது, அனால் மஞ்சள் பூசும் பண்பாடு என்பது அதற்க்கு முன்பாகவே இந்த மண்ணில் நிலவியிருக்கின்றது. பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியாரில் கல்வி சிறப்பைப் பற்றி குறிப்பிடும் ஒரு பாடலில் மஞ்சள் பூசுவது பற்றி வருகின்றது..

    “குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
    மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
    நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
    கல்வி அழகே அழகு”.

    பொருள்:- தலை மயிராய் சீர்ப்படுத்தி முடிப்பதால் வரும் அழகும்,முந்தானையில் கரையிட்ட அழகும்,மஞ்சள் பூசுவதால் உண்டாகும் அழகும் உண்மை அழகல்ல. மனத்தளவில் உண்மையாக நடந்துக் கொள்கிறோம் என்னும் நடுவு நிலையாம் ஒழுக்க ஒழுக்க வாழ்கையை தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகாம்.

    இது மட்டுமல்லாது 9 நூற்றாண்டை சேர்ந்த பட்டினத்தடிகளும் பெண்களை குறிப்பிட்டு பாடும் பல இடங்களில் மஞ்சளை பற்றி கூறியுள்ளார்.

    //தாலியை முதலில் அணிந்தது அவர்களே..//

    இதுவும் விவாததிற்குரியது, தாலி என்பது ஆணாதிக்கத்தின் குறியீடா இல்லையா என்பது வேறு விடயம். அதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால் தாலி என்பது சங்க இலக்கியத்தில் குறிக்க பட்டுள்ளனவா என்றால். தாலி என்பது சங்க இலக்கியத்தில் இருக்கிறது என்பது தான் உண்மை.

    தாலி பெயர் வர காரணம்

    தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல.

    முதலில் மிகப் பழமையான புறநானூற்றைப் பார்ப்போம். புறநானூற்றில் 127-ம் பாட்டில்,

    “ஈகை அரிய இழையணி மகளிரொடு
    சாயின் றென்ப ஆய் கோயில்”

    என வருகிறது. ஈகை அரிய இழையணி என்பதற்கு பழைய உரைகாரர் ‘பிறிதோர் அணிகலமும் இன்றிக் கொடுத்தற்கரிய மாங்கலிய சூத்திரத்தை அணிந்த மகளிருடனே’ என்று உரை கூறியிருக்கிறார்.

    இந்தப் பாடலைப் பாடியவர் ஏணிச்சேரி முடமோசியார்; பாடப்பட்ட தலைவன் ஆய் என்ற வள்ளல்.

    ஆய் வள்ளலின் வள்ளல் தன்மையைக் கூற வந்த புலவர், அவன் மட்டுமல்ல; அவனுடைய இல்லத்து மகளிரும் அவனுடைய வள்ளல் தன்மைக்கு உறுதுணை செய்தனர் என்று கூறுகிறார். அதாவது ஆய் வள்ளலின் விருப்பத்திற்கேற்ப அம்மகளிர் தாம் அணிந்துள்ள அணிகளுள் பிறர்க்குக் கொடுக்க முடியாத ஓர் இழையாகிய தாலியை மட்டும் அணிந்து கொண்டு பிற நகைகளை எல்லாம் கழற்றி இரவலர்களாக வந்த பாணர்க்குப் பரிசாகக் கொடுத்துவிட்டனர். இவ்வாறு அணிகளைக் கழற்றிக் கொடுத்து விட்ட பின் கோலத்தில் அவர்கள் முன்னைய ஒளி குன்றி இருந்தனர் என்பது பாட்டின் பொருள்.

    இங்கே உரையின் படி பார்க்கும் போது ‘ஈகை அரிய இழை’ என்பது கொடுத்தற்கரிய தாலியாகிய இழை எனப் பொருள்படுகிறது. எனவே இழை என்பது இங்கே தாலிக்கயிறு என்று குறிக்கப்படுவது காண்க.

    புறநானூற்றின் 224-ம் பாட்டு கரிகாற் பெருவளத்தானைப் பற்றியது. அவன் இறந்த போது அவனது மனைவி என்னும் உரிமை பெற்ற மகளிர் தமது திருமணச் சின்னமான தாலியைக் களைந்தனர் என பாடல் குறிப்பிடுகிறது.

    “அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்:
    இறந்தோன் தானே; அளித்து இவ் உலகம்!
    அருவி மாறி, அஞ்சு வரக் கருகி,
    பெரு வறங் கூர்ந்த வேனில் காலை,
    பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார்,

    பூ வாள் கோவலர் பூவுடன் உதிரக்
    கொய்து கட்டு அழித்த வேங்கையின்,
    மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே.”

    என்பது அப்பாடலில் வரும் வரிகள். இங்கேயும் இழை என்ற சொல் தாலிக் கயிற்றைக் குறிப்பிடுவது காண்க.

    சங்க இலக்கியத்தில் ஒன்றான நெடுநல்வாடையில், நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன் போருக்குச் சென்றிருந்த போது அவனுடைய மனைவியான கோப்பெருந்தேவி அடைந்த துயரை நக்கீரர் படம் பிடித்துக் காட்டுகிறார். மன்னன் கூட இருந்த போது முத்துமாலை அப்பெருந்தேவியின் மார்பில் அணி செய்திருந்தது மாறி இப்போது அவள் மார்பில் தாலி நாண் ஒன்று மட்டும் தாழ்ந்து தொங்குகிறது என்ற பொருள்பட,

    “ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்துப்
    பின்னமை நெடுவீழ் தாழத் துணை துறந்து”

    என்று பாடல் கூறுகிறது. பின் என்பது பிடரி; பிடரியைச் சுற்றி மார்பில் தாலி தொங்குதல் தாலி ‘பின்னமை நெடுவீழ்’ எனப்பட்டது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ‘குத்துதல் அமைந்த நெடிய தாலி நாண்’ என்று உரை எழுதினார்.

    சங்க இலக்க்யத்தில் கையாள பட்ட எவ்வளவோ அருமையான சொற்கள் இப்பொழுது மறைந்து விட்டன எ.கா. சங்க இலக்கியங்கள் அனைத்திலும் நாய் என்ற சொல்லை காணமுடியாது அதற்க்கு பதிலாக “ஞமலி” என்றுத் தான நாய் என்னும் விலங்கினை குறிப்பார்கள். அதே போன்று கடல் என்பதனை குறிக்க முந்நீர் எட்ன்றே கூறுவார்கள். இதுப் போல் ஏராளம் உள்ளன. ஆகவே, தாலி என்பது பிற்காலத்தில் ஏற்ப்பட்ட ஒரு சொல், அந்த சொல் சங்க இலக்கியங்களில் கையாளப்படவில்லை என்பதனால் பெண்ணின் கழுத்தில் அணியப்படும் தாலி என்னும் அணி இல்லை என்பதற்கு கூறுவதற்கில்லை.

    அடுத்து அகநானூற்றிலும் இந்த இழை என்ற சொல்லால் தாலி குறிக்கப்படுவது அறிதற்குரியது.

    அகநானூற்றுப் பாடல் 86 ஒரு திருமண நிகழ்ச்சியைக் கூறுவது. இன்னொரு பாடலான 136-ஆம் பாடலும் தமிழ்த் திருமண நிகழ்ச்சியை விவரிக்கும் பாடலே.

    இதில் முதலில் கூறிய 86-ஆம் பாட்டில் நான்கு மகளிர் மணப்பெண்ணை மங்கல நீராட்டு செய்வது கூறப்படுகிறது. அப்போது நீராட்டுச் செய்யும் அந்த நான்கு மகளிரும் சுமங்கலிகளாக இருக்க வேண்டும் என்பதைத் தமிழர்கள் கடைப்பிடித்த வழக்கம் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    “வாலிழை மகளிர் நால்வர் கூடி”

    என்பது அப்பாடல் வரி. அதில் வரும் இழை மகளிர் என்பது தாலிக் கயிறணிந்த பெண்கள் நால்வர் என்று பொருள்படுவது காண்க.

    அகநானூற்றின் 136-ம் பாட்டும் தாலியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதில் திருமணத்தையே ‘இழையணிச் சிறப்பு’ என்று குறிப்பிடுகிறது.

    “மழைபட்டன்ன மணல்மலி பந்தர்
    இழையணி சிறப்பின் பெயர் வியர்ப்பாற்றி”

    என்பது குறிப்பிட்ட வரிகள்.

    இது போல பதினெண் கீழ்க் கணக்கில் ஒன்றான திணைமாலை நூற்றைம்பதில் 66 – ஆம் பாடலில் இப்படி ஒரு வரி வருகிறது:

    “பவளக் கொழுந்தின் மேல் பெண் தாலி பாஅய்த்
    திகழக் கான்றிட்டன”

    இவ்வாறாக சங்க இலக்கியங்களில் தாலி பற்றி பல இடங்களில் பேசப்படுகிறது.

    இதே போன்று பக்தி இலக்கியங்களில் சைவ சமயிகளின் ஒப்பற்ற நூலாம் திருத்தொண்டர் புராணம் என்னும் 63வர் வாழ்கை வரலாற்றைக் கூறும் பெரிய புராணத்திலும் தாலிப் பற்றி பல குறிப்புகள் இருக்கின்றன. தீர்க்கமாக ஆராய்ந்து வேண்டிய ஒன்று

    • புறநானூறும், அகநானூறும் எழுதப்பட்ட காலத்திற்கும், அதற்கு உரையாசிரியர்கள் உரையெழுதிய பன்னிரெண்டு, பதினான்காம் நூற்றாண்டுக்கும் இடையில் பல நூற்றாண்டு கால இடைவெளி உள்ளது. நச்சினார்க்கினியாரும், அடியார்க்கு நால்லாரும், அவருக்கும் முந்தையவரான அரும்பத உரையாசிரியரும் தங்களது காலத்துக்கு தக்க உரை எழுதினர் என்பதுதான் உண்மை என்பதை மதுரை கு. முதலியார் சான்றுகளுடன் நிறுவிய பாடல்களைத்தான் நீங்கள் உதாரணமாக சொல்லி உள்ளீர்கள். இதைத்தான் 1954ல் மாபொசிக்கு கண்ணதாசன் விளக்கி வகுப்பெடுத்தார். அருங்கலம் என்பதற்கு அரிய நகை என்றுதான் பொருள். இடுப்பில் அணியும் மேகலையல்லவா ஆபத்பாந்தவன் என்று கிண்டலும் செய்தார் கண்ணதாசன்.
      இழை என்பது தாலிக்கயிறு என்றால், இழை களைதல் என்று எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா.. தாலியை அறுக்கத்தான் செய்வாரகளே தவிர, களைதல் என்று சொல்வது கிடையாது. அப்படியானால் இழை என்பது தாலிக்கயிறு கிடையாது தானே..
      ’ஆரந் தாங்கிய அலர்முலை யாகத்து பின்னமை நெடுவீழ் தாழத் ..’ என்ற நக்கீரனாரின் பாடலுக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியார் முதன்மையாக நெடுந்தாலி என்றுதான் கூறுகிறார். மேலும் பின்னுதல் அமைந்த மயிர் என்பாருமுளர் என நெடுவீழ் தாழ என்பதற்கு பொருள் எழுதியிருக்கிறார்.. அதாவது முத்துமாலை கிடக்க வேண்டிய முன்புறத்தில் மயிரால் பின்னப்பட்ட சடை வந்து கிடக்கிறதே என்ற கவலை. இதனை சிறுபாணாற்றுப்படையின் 190-91ல் உள்ள ’உரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்து’ என்ற வரிகளும் உறுதிப்படுத்துகின்றன.
      திணைமாலை நூற்றைம்பதில் உள்ள தாலி மணமக்கள் கட்டுக்கொள்ளும் தாலியா, அல்லது வேறு வகையான தாலியா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
      திருத்தொண்டர் புராணத்திலும், பெரிய புராணத்திலும் கூட தாலி வந்தாலும் அங்கேயும் பிரச்சினை உள்ளது.
      பெரிய புராணம் இயற்றப்பட்டது 12 ஆம் நூற்றாண்டு என்ற போதிலும் பாடப்பட்ட 63 நாயன்மார்களும் ஐந்து முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை வாழ்ந்தவர்கள். அப்பர் காலத்து பல்லவ மன்னன், சிறுத்தொண்ட நாயனார் காலத்து வாதாபி படையெடுப்பு, நெடுமாறன்-சாளுக்கியன் போர் என்றெல்லாம் வரலாற்றுணர்ச்சியோடு பாடிய சேக்கிழார் தாலியை தவற விட்டிருக்கிறார். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர், சம்பந்தர், குங்கிலியக் கலய நாயனார் ஆகியோர் ஒரே காலத்தவர்கள். மூவரது திருமணத்தையும் விரிவாக பேசிய சேக்கிழார் சம்பந்தர் திருமணத்தில் மங்கல நூலை குறிக்கவில்லை. ஆனால் குங்கிலியகலய நாயானார் திருமணத்தில் இருப்பதாக சொல்கிறார். இருவரும் பார்ப்பனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியில் குங்கிலியக்கலய நாயனார் மனைவி கழுத்தில் இருந்தது காதலி தாலி என்கிறார். இது அகநானூறு 7 வது பாடலில் உள்ள திருமணத்துக்கு முந்தைய தாலி.

  11. மேற்ப்படி என்னுடைய மறுமொழியை வினவு தளத்திற்கும்,கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கும் நான் முன் வைக்கிறேன். தாங்கள் கூறியதைப் போன்று தாலி மற்றும் மஞ்சள் என்பது 10 நூற்றாண்டில் உருவான தேவதாசிகளின் மூலமாக தான் அறிமுகமானது என்பது தவறான தகவல் என்றே நினைக்கிறன்.ஆகவே தாலி அணியும் பண்பாடு சங்கக் காலம் முதற்கொண்டே இருந்து வருவதாகத் இதன் மூலம் விளங்குகிறது. இது தொடர்பாக கட்டுரை ஆசிரியர் நன்கு பரிசீலிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

    • நாலடியார் பாடல்கள் அனைத்தும் சங்கம் மருவிய நான்காம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு உரை எழுதிய தருமர், மதிவரர் போன்றவர்களும் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றியவர்கள்தான். இன்று கிடைக்கும் அநேக உரைகள் மிகவும் பிற்காலத்தில் 18,19ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவை. பதுமனார் எழுதிய உரையாக இன்று கிடைப்பதும் அநேகமாக இடைச்செருகலாகத்தான் இருக்கின்றது. பதுமனார் சம காலத்திலேயே உரையாசிரியராக இருந்தார் என்பது வள்ளுவரே தான் எழுதிய திருக்குறளுக்கு ஒரு வேளை உரை எழுதினார் என்று கூறினால் எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தமானது தான்.
      நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் பாடல் கல்வயின் சிறப்பு குறித்து பேசுகிறது. ஆணுடைய அள்ளி முடிந்த கூந்தல், இரு பாலரும் அணியும் உடைகள், இத்துடன் மஞ்சள் அழகு என்று ஒரு இடம் வருகிறது. இதில் மஞ்சள் முகத்தில் பூசுவது பற்றிய குறிப்பு என்று எதுவுமில்லை.

  12. அன்பர்கள் சித்தார்த், மணி இவர்களின் கருத்துகள் மிகவும் பயனுள்ளவை! அறிவு சார்ந்த இவர்களின் விவாதங்களை படித்த பின் , தாலி என்பது பொதுவா கழுத்தில் அணியும் மாலை என்று மட்டுமே பொருள் கொள்ள முடியும்! சிறாற்கு அணிவிக்கப்படும் அய்ம்படைத்தாலி முதல், காதலிக்கு தருவதும் , மணநிகழ்ச்சியின்போது மணமகளுக்கு தற்போது அணிவிக்கப்பெறும் தங்கத்தினாலான மாலையும் , பொதுவாக “தாலி” என்று குறிப்பிடலாமே ஒழிய அதில் புனிதம் ஒன்றுமில்லை! அழகுக்காக, அணிகலன் என்பதால் தானே, கணவனை இழந்த பெண்களை மொட்டையடித்து, மூளியாக்கி, அமங்கலி எனமூலையில் உட் கார வைக்கும் போது, கணவன் கட்டிய தாலியையும் பறித்துக்கொள்கிறார்கள்! விதைவை மணத்தை ஏற்றுக்கொண்ட முற்போக்காளர்கள், இந்த “தாலியின் புனித” மறுப்பையும் ஏற்றுக்கொள்வார்கள்!

  13. //இதில் தாலி கட்டுவது தமிழர் திருமணத்தில் எப்போது ஆரம்பித்தது என்பதைப் பற்றி ஒரு விவாதத்தை பேரா.ராசமாணிக்கனார் 1954-ல் நடத்தியுள்ளார். “சங்க காலத்தில் தாலிகட்டு இல்லை” என்பதும், 11-ம் நூற்றாண்டுக்குப் பிந்தைய வழக்கம் அது” என்பதும் அவரின் வாதம்.//

    முதலில் மா.ராசமாணிக்கனார் – மா.பொ.சி. ஆகியோர் கூறிய கருத்துக்களாக ‘தி இந்து’ தமிழ் நாளேட்டில் வந்தவற்றை எடுத்துக் கொள்வோம்.

    மா.பொ.சி. அவர்கள் சிலப்பதிகாரத்தில் மூழ்கி முத்தெடுத்தவர். எனவே அவர் சிலம்பிலேயே தாலி வருகிறது என்று வாதிட்டார். சிலப்பதிகார காலம் சங்கம் மருவிய காலம்; அதாவது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. அக்காலத்திலேயே தாலி தமிழரிடையே இருந்து வந்தது என்றார் ம.பொ.சி. அவர் அதற்கு முந்தைய சங்க காலத்திற்குப் போகவில்லை. எனவே சிலப்பதிகார காலத்தில் தமிழரிடையே தாலி இருந்ததா என்பதை ஆராய்வோம்.

    இதற்கு ம.பொ.சி. காட்டிய சிலப்பதிகார மேற்கோள்கள்:

    1) “மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்”
    2) “அரசெழுந்ததோர் படியெழுந்தன அகலுள் மங்கல அணி எழுந்தது”
    3) “மறுவின் மங்கல அணியே அன்றியும்
    பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்”

    மங்கலம் என்ற சொல்லுக்கு அழகு, கலியாணம் (திருமணம்) என்ற இரு பொருள்கள் உண்டு என உ.வே.சா. பதிப்பில் அரும்பத முதலியவற்றின் அகராதியில் குறிப்பிடுகிறார். அத்துடன் மங்கல அணி என்ற சொற்றொடர்க்கு இயற்கை அழகு, மாங்கலிய சூத்திரம் என்கிற இரு பொருள்களையும் கொடுத்துள்ளார்.

    சிலப்பதிகாரத்தில் வருகிற பதிகம் என்கிற பகுதியில் மங்கல வாழ்த்துக் காதை என வருவதில் மங்கலம், திருமணத்தைக் குறிக்கிறது என்று அடியார்க்கு நல்லார் உரை எழுதி உள்ளார்.

    மங்கல வாழ்த்துப் பாடலில், அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை மங்கல நல்லமளி ஏற்றினர் என்று வருகிறது.

    இதில் முதலில் காட்டப்பட்ட மேற்கோள்; ‘மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்’ என்பது அந்திமாலைச் சிறப்பு செய் காதை என்ற பகுதியில் வருகிறது. அதாவது கோவலன் பிரிவில் கண்ணகி வருந்தி அலங்காரங்கள் எல்லாம் எதற்கு என்று எல்லா அணிகலன்களையும் விலக்கினாலும் மங்கல அணியாகிய தாலியை மட்டும் அகற்றாது இருந்தாள் என்ற செய்தியைச் சொல்லும் இடம் இது.

    இதற்குப் பொருள் சொன்ன மா.ராசமாணிக்கனார் மங்கல அணி என்பது இயற்கை அழகைக் குறிக்குமே ஒழிய தாலியைக் குறிக்காது என்று ம.பொ.சி.யை மறுத்தார். அடியார்க்கு நல்லார் மங்கல அணி என்பதற்கு இயற்கை அழகு என்று தான் குறிப்பிட்டுள்ளார் என்றார். ஆனால் அரும்பத உரை என்று சிலப்பதிகாரத்திற்கு வேறொரு உரை உண்டு. அதில் தான் மங்கல அணி என்பதற்கு இயற்கை அழகு என்று பொருள் கூறப்பட்டுள்ளது. அடியார்க்கு நல்லார் உரையில் மங்கல அணிக்கு மங்கல அணி என்றே உரை கூறப்பட்டுள்ளது.

    இனி, கண்ணகி கோவலனின் பிரிவில் எல்லா அணிகளையும் கழற்றினாள் இயற்கை அழகைத் தவிர என்று மா.ராசமாணிக்கனார் கூறிய பொருள் பொருந்தாத பொருளாக இருக்கிறது. காரணம் அணிகளை எல்லாம் வேண்டாத போது கழற்றிவிடலாம்; ஆனால் இயற்கை அழகு என்பது கழற்றி வைக்க முடியாது. ஆகவே அது கழற்றி வைக்கக் கூடிய அணி அல்ல; இன்னும் இயற்கை அழகு என்பது அணிகலன்களில் ஒன்றும் கிடையாது. எனவே இங்கே மங்கல அணி என்பது நகைகளும் அல்லாமல் அணி அல்லாத இயற்கை அழகும் அல்லாமல் வேறோர் அணி என்பது தெளிவாகிறது. மங்கல அணி என்பதற்கு ஏற்கெனவே மாங்கலிய நூல் என்று ஒரு பொருள் இருப்பதாலும், அரும்பத உரையிலும் வேறோரிடத்தில் மங்கல அணிக்கு தாலி என்றே பொருள் கொள்ளப்பட்டதாலும் இங்கே கண்ணகி தாலியைத் தவிர பிற எல்லா அணிகலன்களையும் கழற்றினாள் என்பதே பொருந்திய பொருளாக இருக்க முடியும். எனவே மா.ராசமாணிக்கனார் சிலப்பதிகாரத்தில் தாலி இல்லை என்று கூறுவது அழிச்சாட்டிய வாதம் என்பது புலனாகிறது.

    இரண்டாவது மேற்கோளில் தாலி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது கூறப்படுகிறது. இது மங்கல வாழ்த்துப் பாடற் பகுதியில் வருவது. ‘மங்கல அணி எழுந்தது’ என்று வரும் வரிக்கு அரும்பத உரைகாரர் கூட மாங்கலிய சூத்திரம் வலம் செய்தது என்று தான் உரை கூறுகிறார். இதையே அடியார்க்கு நல்லாரும் தனது உரையில் வழிமொழிகிறார். காரணம், இயற்கை அழகு என்பதை எடுத்துச் சென்று ஊர்வலம் வர முடியாது.

    எனவே மா.ராசமாணிக்கனார் சிலப்பதிகாரத்தில் தாலி கூறப்படவில்லை என்று கூறியது உண்மைக்கு முற்றிலும் மாறானது என்பது தேற்றம்.

    உண்மையில் சிலப்பதிகாரக் காலத்தில் திருமணத்தின் முன்னாள் திருத்தாலியை முரசு முழங்க ஊர்வலம் செய்து எடுத்து வந்தனர் என்பதால் அக்காலத்தில் தாலிக்கு எத்துணை மதிப்பு கொடுக்கப்பட்டது என்பதை அறியலாம்.

    அடுத்து மூன்றாவது மேற்கோள் மனையறம் படுத்த காதையில் வருவது. இதில் மங்கல அணி என்ற சொல் வருகிறது. ஆனால் இது தாலியைக் குறிப்பதல்ல; இயற்கை அழகு என்ற பொருளில் வருவது. மங்கல அணி என்றால் இயற்கை அழகு என்றும் பொருள் உண்டு என்று முன்னர் கண்டோம். ஒரு சொல்லுக்கு பல பொருள் இருக்குமானால் அதற்கு இடம் நோக்கித் தான் பொருள் கொள்ள வேண்டும்.

    இங்கு கோவலன் கண்ணகியைப் பார்த்து உனது இயற்கை அழகு இருக்க அதன் மேல் அணிகலன்களை உன் தோழியர் உனக்குப் புனைவதால் ஆவது என்ன என்று கேட்கிறான்.

    ஆக, இந்த இடத்தில் மங்கல அணி என்பதற்கு இயற்கை அழகு என்ற பொருள் கொள்வதையே பொருந்தி வராத வேறிடங்களில் மா.ராசமாணிக்கனார் நீட்டி சிலப்பதிகாரத்தில் தாலியே வரவில்லை என்று சாதிக்க முற்பட்டது வீண்வாதமே அன்றி வேறல்ல.

    //தாலி கட்டுதல் என்பது தென்னிந்தியாவின் பரவலான பழக்கம் எனச் சொல்லலாமே தவிர இந்துக்களின் பழக்கம் என்பது பச்சைப் பொய்.//

    மிக நன்று இதில் இருந்து தெரிவது என்னவென்றால், தாலி என்பது இந்துக்களின் பழக்கமோ அல்லது பார்ப்பனிய பண்பாடோ அல்லவென்பது தெளிவாக விளங்குகிறது. ஆகவே, தாலி என்கிற மங்கள நாண் அணிவித்தல் என்பது தமிழரின் பண்பாடு தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெளிவாகிறது. மேலும். கிறித்துவர்களும் இசுலாமியர்கள் போன்றோரும் தாலி அணிகிறார்கள் என்பது தமிழர் பண்ப்பாட்டின் ஏகதேசம் தானே அன்றி தனியாக வேறொன்றுமில்லை.

    //தக்ணி இசுலாமியர் பிரிவில் தாலிக்கு மாற்றாக கருப்புப் பாசிமணிமாலை அணிவிக்கின்றனர். //

    தக்ணி இசுலாமியர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டை தாண்டி நீங்கள் மற்ற மாநிலங்களில் ( கேரளம் ஆந்திர போன்ற தென்னிந்திய மாநிலங்கள் உட்பட)உள்ள திருமணமான அனைத்து இந்து பெண்களும் கருப்பு பாசிமணி மாலையை தாலியாக அணிவதை காணலாம். மஞ்சள் கயிற்றில் தாலி அணிவதென்பது தமிழகத்தில் மட்டுமே காணக்கூடிய ஒன்று.

    • பாணிக்கிரகனம் செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மங்கல அணி என திருமண சடங்கு, அந்திமாலை சிறப்பு செய் காதை, மனையறம் படுத்த காதை போன்ற மூன்று இடங்களில் வரும் பாடல்களுக்கு பிற்காலத்தில் உரை எழுத வந்த அடியார்க்கு நல்லார் புனையாத அழகு என்று சொல்லி விட்டு, முதலில் வந்த இடத்திற்கு மட்டும் மாங்கலியம் என்பாரும் உளர் என்று சொல்லப் போக அதனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் மா.பொ.சி. அடியார்க்கு நல்லார் அப்படி சொல்ல காரணம் அவருக்கும் முந்தைய காலத்தை சேர்ந்த உரையாசிரியர் அரும்பத உரையாசிரியரே. ஆனால் அது பொருந்தா உரை என்பதுதான் உண்மை. இதனை கு.மதுரை முதலியார் சான்றுகளுடன் நிறுவியிருக்கிறார். மனையறம் படுத்த காதையில் வரும் மங்கல அணிக்கு ந.மு.வெங்கடசாமி நாட்டார் கூட இயற்கை அழகு என்றுதான் பொருள் சொல்கிறார். இயற்கை அழகிருக்க செயற்கை அழகூட்டல் எதற்கு என்பதை இதனைப் போலவே கம்பனும் ’உமிழ் சுடர் கலன்கள் நங்கையுருவினை மறைப்ப தேறார்’ என்று பாடுகிறார். ’மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்’ என்ற அந்திமாலை சிறப்பு செய் காதை வரியில் இளங்கோ அணிகலன்களின் வரிசைகளை மாத்திரம் சொல்லவில்லை. நெற்றி, கண் போன்றவற்றுக்கு அணிகலன்கள் கிடையாது, அதுபோன்ற அவயங்களுக்கு செயற்கையாக அலங்காரம் செய்வதையும் கூடவே சொல்கிறார் இளங்கோ. கழுத்துப்பகுதிக்கு ஒருவேளை தாலிதான் அலங்காரம் என்றால் கூட சோகத்தில் இருந்த கண்ணகி அதனை கழற்றி வைத்திருந்ததாகத்தான் இளங்கோ சொல்கிறார். எனில் அது இன்று புழக்கத்தில் உள்ள தாலியை குறிக்காதே என்று கேள்வி எழுப்புகிறார் கண்ணதாசன்.
      இயற்கை அழகினை கழற்ற முடியாது என்பதை கவிஞன் இளங்கோ சிறப்புறக் கூறுவது தவறு என்று பார்க்கும் பார்வை கோளாறாக இருக்கிறதே..இது கம்பனிடமும் இருக்கிறதே. சீதையின் அழகை குறிப்பிடுகையில் அழகுக்கு அழகு அணி சேர்ப்பதை தேவையற்றதாக சொல்வானே..
      இரண்டாவது தான் கொஞ்சம் யோசிக்க வேண்டியது. அன்றைக்கே அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்த தாலி ஊர்வலம் இன்றும் அது முக்கியத்துவமான சடங்காக இருக்கையில் ஏன் நின்று போனது. அல்லது எப்போதிருந்து நின்று போனது. இளங்கோ இந்த இடத்தில் சொல்வதை வீடு சாட்டுதல் என்று இப்போதும் புழக்கத்தில் உள்ள வழக்கமாக சொல்ல முடியும்.
      மூன்றாவது பாயிண்ட் என்பது கவிஞர்களின் மனதை புரிந்து கொள்வதில் இருந்து உங்களது பக்கச்சாய்வு உங்களைத் தடுக்கிறது என்றுதான் தோன்றுகிறது. அதற்காக நீங்களும் இதைத்தான் பொருளாக எடுப்பேன் என்று அரும்பத உரையாசிரியரின் டிக்சினரிக்குள் புகுந்து கொள்கிறீர்கள்.
      ம.பொ.சி ஐ ஆதாரமாக நீங்கள் எடுத்துக் காட்டுவது என்றால், இதையும் சொல்லி விடுகிறேன். ஏழாம் நூற்றாண்டில் வந்த ஆண்டாளின் நாச்சியார் மொழியில் ஆண்டாள் தனக்கு கனவில் கண்ணன் மாலையிடுவதாக சொல்லும் வாரணம் ஆயிரம் எனத் தொடங்கும் பாடலை இயற்றியிருப்பாள். அதில் சொல்லப்படும் மாலைக்கே தாலி என்று பொருள் சொன்னவர் மா.பொசி

  14. ஆகவே, கி.பி 3ஆம் நூற்றாண்டை சார்ந்த இலக்கியமாகிய சிலப்பதிகாரத்திலேயே தாலி குறித்து சிறப்பாக சொல்லப்பட்டிருகிறது. ஆகவே தாலி என்பது அதற்க்கு முன்பாகவே தமிழர் பண்பாட்டில் இருந்து வரும் ஒன்றாக தான் கருத வேண்டும். தாலி என்பது திடீர் என்று ஒருநாள் தோன்றி சமுகத்தில் ஏற்ப்பட்ட புரட்சிகர சமுக மாறுதல் கிடையாது.

    சங்க காலத்தில் தாலி கிடையாது, பிற்காலத்தில் உரை எழுதியவர்கள் 13ஆம் 14ஆம் நூற்றாண்டை சார்ந்தவர்கள் ஆகவே அவர்கள் காலத்தில் தாலி என்னும் பழக்கம் புழக்கத்தில் இருந்ததால் அவ்வாறு தவறாக உரை எழுதி இருக்கலாம் என்றுக் கூறுவது சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். அவ்வாறு கூறுபவர்கள் எதை ஆதராமாகக் கொண்டு அவ்வாறு கூறுகிறார்கள். அவர்களை விட இன்னும் காலத்தால் முற்ப்பட்ட உரை ஆசிரியர்கள் யாரேனும் இருக்கிறார்களா. அப்படி இருந்தால் அதன் அடிப்படையில் பேசலாம். இதேப் போன்றுதான் 80,90கள் வரை சங்க இலக்கியங்கள் அனைத்தும் மதசார்பற்றவை என்று கூறிக்கொண்டு வந்தார்கள். இதில் பல முற்போக்கு அறிஞர்களும் அடக்கம். அனால், அது உண்மையல்ல என்பது தற்பொழுது நிருபணம் ஆகி விட்டது. சங்க இலக்கியங்கள் மத சார்புடையவை தான் என்பதை புறநானூறு, பரிபாடல், கலித்தொகை போன்ற இலக்கியங்களை நுண்மையாக ஆராய்ந்து வாசித்தவர்களுக்கு இந்த உண்மை விளங்கும். ஆகவே, தாலியும் மஞ்சளும் தமிழர்களின் தொன்றுதொட்ட பண்பாடு என்பதே உண்மை.

    என்னால் முடிந்த அளவிற்கு சில விளக்கங்களை கொடுத்து விட்டேன். இதை எடுத்துக் கொள்வதும் கொள்வதும்,கொள்ளாமல் சங்க காலத்தில் தாலி கிடையாது அது முற்போக்கான காலம் தான் என்று தேற்றி கொண்டு போவதும் அவரவரின் இஷ்டம் .

  15. சித்தார்த், உங்களுக்கு மணி எழுதிய விளக்கத்தினைப் பரிசீலனைச் செய்வதற்கு வேண்டுகோள்.

    ச்

    //நாலடியார் பாடல்கள் அனைத்தும் சங்கம் மருவிய நான்காம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு உரை எழுதிய தருமர், மதிவரர் போன்றவர்களும் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றியவர்கள்தான். இன்று கிடைக்கும் அநேக உரைகள் மிகவும் பிற்காலத்தில் 18,19ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவை. பதுமனார் எழுதிய உரையாக இன்று கிடைப்பதும் அநேகமாக இடைச்செருகலாகத்தான் இருக்கின்றது. பதுமனார் சம காலத்திலேயே உரையாசிரியராக இருந்தார் என்பது வள்ளுவரே தான் எழுதிய திருக்குறளுக்கு ஒரு வேளை உரை எழுதினார் என்று கூறினால் எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தமானது தான்.
    நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் பாடல் கல்வயின் சிறப்பு குறித்து பேசுகிறது. ஆணுடைய அள்ளி முடிந்த கூந்தல், இரு பாலரும் அணியும் உடைகள், இத்துடன் மஞ்சள் அழகு என்று ஒரு இடம் வருகிறது. இதில் மஞ்சள் முகத்தில் பூசுவது பற்றிய குறிப்பு என்று எதுவுமில்லை.
    //

    சிலப்பதிகாரம் ஒரு சமணக் காப்பியம், சங்கம் மருவிய காலத்தில் வந்தது. ஆகவே சிலப்பதிகாரத்தை சங்க காலத்தில் தாலி இருந்தது என்று நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது.

  16. //ஆகவே, கி.பி 3ஆம் நூற்றாண்டை சார்ந்த இலக்கியமாகிய சிலப்பதிகாரத்திலேயே தாலி குறித்து சிறப்பாக சொல்லப்பட்டிருகிறது. ஆகவே தாலி என்பது அதற்க்கு முன்பாகவே தமிழர் பண்பாட்டில் இருந்து வரும் ஒன்றாக தான் கருத வேண்டும். தாலி என்பது திடீர் என்று ஒருநாள் தோன்றி சமுகத்தில் ஏற்ப்பட்ட புரட்சிகர சமுக மாறுதல் கிடையாது. //
    //அப்படி இருந்தால் அதன் அடிப்படையில் பேசலாம். இதேப் போன்றுதான் 80,90கள் வரை சங்க இலக்கியங்கள் அனைத்தும் மதசார்பற்றவை என்று கூறிக்கொண்டு வந்தார்கள்.//

    சங்கம் மத அடிப்படையிலானதுதான். ஆனால் இந்துமதம் என்று இப்போது நிறுவனப்பட்டு இருக்கும் மதம் அன்று. அது தென்மதம். மேலும் சமணம், பொத்தம் முதலான பல சமயங்கள் சங்க இலக்கியங்கலாக உள்ளன.

  17. இப்பதிவில் வல்லம்பன் பற்றி குறிப்பிட்டு இருக்கின்றீர் நேரடி கள ஆய்வுகள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவலா இது
    இது முற்றிலும் பொய் அவ்வாறான பழக்கவழக்கம் எம் இனத்தில் இல்லை.
    உம் போலி வேடத்துக்காக எம் இனத்தை இழிவு செய்யாமல்
    உம் பதிவை திருத்தவும்.

    இல்லையேல் பிரச்சனை பெரிது ஆகும்

Leave a Reply to mani பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க