privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

4+3=8 விடுதலை !

-

“நாலும் மூணும் எட்டு” என்ற புதியதொரு கணிதச் சூத்திரத்தின் அடிப்படையில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகளே அல்ல என்று கூறி அனைவரையும் விடுதலை செய்து விட்டார் குமாரசாமி. சட்டம் தெரிந்தவர்கள் மட்டுமல்ல, கூட்டல் கணக்கு தெரிந்தவர்களும் இந்தத் தீர்ப்பைக் கண்டு கதி கலங்கிப் போயிருக்கிறார்கள். நான்கையும் மூன்றையும் கூட்டினால் கிடைப்பது ஏழு என்பது ஆரம்பப் பள்ளி மாணவனுக்குக் கூடத் தெரிந்த விசயமாக இருக்கலாம். இருந்தபோதிலும், கூட்டுத்தொகை எட்டு என ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்திருப்பதால், அதனைப் பரிசீலித்து, இறுதித் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் உச்ச நீதி மன்றத்துக்குத்தான் இருக்கிறதாம். ஆகவே, முயலுக்கு மூணு கால் என்ற இந்த தீர்ப்பு குறித்து உச்சநீதி மன்றம் என்ன சொல்கிறது என்பதைப் பொருத்துதான், முயலுக்கு மூணு காலா, நாலு காலா என்ற புதிருக்கும், ஜெயலலிதா குற்றவாளியா இல்லையா என்பற்கும் விடை கிடைக்குமாம். இதுதான் சட்டத்தின் நிலை.

நாலும் மூணும் எட்டு என்ற குமாரசாமியின் கணக்கு தவறு என்று உச்ச நீதிமன்றத்தில் யார் வேண்டுமானாலும் மேல் முறையீடு செய்துவிட முடியாதாம். அதைக் கேட்பதற்குக் கூட கர்நாடக அரசுக்குத்தான் உரிமை உண்டாம். சு.சாமிக்கும் அன்பழகனுக்கும் உரிமை உண்டா என்பதை உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும். அதிலும் ஒரு நீதிபதி உண்டு என்று சொன்னால், இன்னொரு ஆள் இல்லையென்று சொல்லலாம்.

சிறப்பு அரசு வழக்குரைஞர் ஆச்சார்யா மற்றும் கர்நாடக அரசின் தலைமை வழக்குரைஞர் ரவிவர்மா குமார்
நீதிபதி குமாரசாமியின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதன் அவசியத்தையும், நியாயத்தையும் வலியுறுத்தி வரும் சிறப்பு அரசு வழக்குரைஞர் ஆச்சார்யா மற்றும் கர்நாடக அரசின் தலைமை வழக்குரைஞர் ரவிவர்மா குமார்

அம்மாவின் சூட்கேசுகள் விதிக்கும் தடைகளைத் தாண்டி கர்நாடக அரசை மேல் முறையீடு செய்ய வைத்தாலும், அதனை உச்சநீதி மன்ற நீதிபதிகள் உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. முதலில் நாலும் மூணும் எட்டு என்ற குமாரசாமியின் கணக்கு அப்பீலுக்குத் தகுதியானதுதான் என்று ஆச்சார்யா நிரூபிக்க வேண்டும். மாட்சிமை தங்கிய உச்சநீதி மன்ற நீதிபதிகள், இது மேல் முறையீட்டுக்குத் தகுதியானதுதான் என்று திருப்தியடைந்தால் மட்டும்தான் அப்பீலையே அனுமதிப்பார்கள்.

அப்புறம் வாய்தா ராணியின் சவாலை எதிர்கொண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கை விசாரணைக்குக் கொண்டுவர வேண்டும். அதுவரை ஆச்சார்யாவின் ஆயுள் கெட்டியாக இருக்க வேண்டும். பிறகு மூத்த வழக்குரைஞர்களை அமர்த்தி “நாலும் மூணும் எட்டு அல்ல” என்பதை அவர்களுடைய வாதத் திறமையால் உச்சநீதி மன்றத்தில் நிறுவ வேண்டும். அதன்பிறகுதான் உச்சநீதி மன்றம் இறுதித் தீர்ப்பு அளிக்கும். அதுவரை ஜெயலலிதா நிரபராதிதான். இதுதான் சட்டத்தின் நிலை.

குமாரசாமி அளித்த தீர்ப்பு ஜெயலலிதாவின் வருமானத்தை 14 கோடி ரூபாய் அதிகப்படுத்திக் காட்டியிருக்கிறது என்பதும், அந்தக் கூட்டல் பிழை சரி செய்யப்பட்டாலே ஜெயலலிதா உள்ளே போக வேண்டியிருக்கும் என்பதும் சட்ட அறிவற்ற பாமரனுக்கும் தெரிந்திருக்கும் உண்மை. பளிச்சென்று தெரியும் இந்த விசயத்தை கர்நாடக உயர்நீதி மன்றமோ, உச்சநீதி மன்றமோ தானே தலையிட்டு திருத்தாதாம். இதற்கு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துதான் ‘சரி’ செய்ய வேண்டுமாம். அதற்குள் உச்ச நீதிமன்றத்தை ஜெயலலிதா ‘சரி’ செய்து விடுவார். இதுவரை இப்படித்தான் நடந்திருக்கிறது. 18 ஆண்டு காலம் ஜெயலலிதாவால் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கின் வரலாறு முழுதும் ஜெ.வுக்கு சாதகமான பாரபட்சங்கள் நிரம்பிக் கிடப்பதைத் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறோம்.

பார்ப்பானுக்கு வளையும் நீதித்துறைசட்டமும் சரி, நீதிமன்றங்களும் சரி பணத்துக்கும் பார்ப்பானுக்கும் வளையக்கூடியவைதான் என்பதை ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகள் நிரூபித்திருக்கின்றன. நீதிபதிகளோ, தாங்கள் சொல்வதுதான் சட்டமேயன்றி, சட்டம் என்ற ஒன்றே உண்மையில் இல்லை என்று ஜெயாவுக்கு ஆதரவாக அளித்த பல தீர்ப்புகளின் வாயிலாக நிரூபித்திருக்கிறார்கள். இந்த நாட்டின் நீதித்துறையே தோற்று விட்டது என்ற உண்மையை ஜெயலலிதா பல கோணங்களில் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டி வருகிறார்.

***

சொத்துக் குவிப்பு வழக்கையே எடுத்துக் கொள்வோம். வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சேர்த்த சொத்து ரூ 66 கோடி என்பது வழக்கு. உண்மையில் ஜெ-சசி கும்பல் அடித்த கொள்ளையின் அளவு இதைப்போல பல நூறு மடங்கு என்பதை நாடறியும். இருந்த போதிலும், இண்டு இடுக்குகளில் புகுந்து குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது என்பதற்காகத்தான், மறுக்க முடியாத ஆவணங்களின் அடிப்படையிலான சொத்துக்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு, நுணுகி ஆராய்ந்து போடப்பட்டிருக்கிறது இவ்வழக்கு. இதில் வாதிட்டு தப்பிக்க இயலாது என்ற காரணத்தினால்தான் இந்த வழக்கையே இல்லாமல் செய்யும் நோக்கத்துடன் இதனை இழுத்தடித்தார் ஜெயலலிதா. இறுதியில் அரிதாக வந்த ஒரு தீர்ப்புதான் குன்ஹாவினுடையது. மொத்தத்தில் சட்டபூர்வமான முறையில் ஒரு ஊழல் குற்றவாளியைத் தண்டிப்பதெப்படி என்பதற்கான ஒரு வகைமாதிரி என்று இந்த வழக்கைக் கூறலாம்.

இந்த வகைமாதிரியின் மீது காலைத் தூக்கி ஒன்னுக்கடித்திருக்கிறது குமாரசாமியின் தீர்ப்பு. குமாரசாமியின் தீர்ப்பு மட்டரகமானதொரு நீலப் படம் என்றால், அதற்குப் பொருத்தமான கிளைமாக்ஸ் காட்சிதான் 14 கோடி ரூபாய் கூட்டல் பிழை. ஆனால், கூட்டல் பிழையைக் காட்டிலும் கொச்சையான பல காட்சிகள் இந்த நீலப்படத்தில் உள்ளன.

“அரசு ஊழியர்கள் தமது சட்டபூர்வமான வருவாக்கு மேல் பத்து சதவீதம் வரை சொத்து சேர்க்கலாம்” என்று அனுமதித்திருப்பதன் மூலம், ‘இலஞ்சத்தொகை எவ்வளவு’ என்று பார்க்க வேண்டுமேயொழிய, ‘இலஞ்சமே குற்றம்’ என்று பார்க்கக்கூடாது எனத் தனது தீர்ப்பில் வழிகாட்டியிருக்கிறார் குமாரசாமி.

அதோடு நிற்கவில்லை; ஜெயலலிதாவுக்கு அமைச்சர் பெருமக்கள் கட்டியிருக்கும் கப்பத்தை, ‘பிறந்தநாள் அன்பளிப்பு’ என்றும், அது ‘சட்டபூர்வ வருமானமே’ என்றும் அங்கீகரித்து, எதிர்கால லஞ்ச வசூலுக்கு வழியும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். இனி, இத்தீர்ப்பின்படி ஓட்டுநர், நடத்துனர் வேலை நியமனங்கள், மாற்றல்கள் முதல் பொதுப்பணித்துறை காண்டிராக்டுகள் வரையிலான அனைத்துக்கும் அம்மாவுக்குரிய ‘தசம பாகத்தை’ அன்பளிப்பாக போயஸ் தோட்ட உண்டியலில் நேரடியாகப் போட்டு ரசீதும் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

அது மட்டுமல்ல, “எந்தவொரு வருமானத்துக்கும் வருமானவரி கட்டிவிட்டால் அது சட்டபூர்வ வருமானமே” என்று அங்கீகரித்திருப்பதன் மூலம் வங்கிக் கொள்ளையர்கள் முதல் கஞ்சா வியாபாரிகள் வரையிலான அனைவரும் தங்கள் வருமானத்தையும் தொழிலையும் சட்டபூர்வமானதாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கியிருக்கிறார் குமாரசாமி.

அமித் ஷா, சதாசிவம்
பிரஜாபதி துளசிராம் கொலை வழக்கில் புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டியதில்லை என்று அமித் ஷாவிற்கு (இடது) ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி சதாசிவத்திற்குக் கிடைத்த வெகுமதி – கேரள மாநில ஆளுநர் பதவி.

இப்படி சட்டவிரோத வருமானத்தையெல்லாம் சட்டபூர்வ வருமானமாக அங்கீகரித்தும், திருப்பி அடைக்கப்பட்ட வங்கிக் கடன்களையெல்லாம் வருமானமாக வரவு வைத்தும், திராட்சைத் தோட்ட வருவாயைக் கூட்டிக் காட்டி, கட்டுமானச் செலவுகளைக் குறைத்துக் காட்டி, வளர்ப்பு மகன் திருமணச் செலவை சிவாஜி கணேசன் தலையில் கட்டி… இப்படிப் பலவிதமான தகிடுதத்தங்களைக் கவனமாகச் செய்தும், கணக்கை நேர் செய்ய முடியாத சூழ்நிலையில்தான், ‘கூட்டல் பிழை’ என்ற கவனக் குறைவு குமாரசாமிக்குக் கை கொடுத்திருக்கிறது.

இந்த வழக்கைப் பொருத்தவரை, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஒவ்வொருவர் மீதும், தனித்தனியே வழக்கு போடப்படவில்லை. கூட்டாகத்தான் போடப்பட்டிருக்கிறது. வழக்கில் காட்டப்பட்டுள்ள பணப் பரிவர்த்தனைகளும், உப்புமா கம்பெனிகளின் முகவரியான போயஸ் தோட்டமும் இவர்களைக் கூட்டுக் குற்றவாளிகள் என்று தெளிவாகப் புலப்படுத்துகின்றன.

எனினும், “ஜெயலலிதாவுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்கள்” என்ற குற்றத்துக்காக மற்ற மூவரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டார்களென்று எப்படிக் கூற முடியும் என்று கேள்வி எழுப்பி, அவர்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போலச் சித்தரித்து, ‘கூட்டுச்சதி’ என்ற குற்றப் பிரிவிலிருந்து அவர்களை விடுவிக்கிறார் குமாரசாமி. மற்ற குற்றப் பிரிவுகளைப் பொருத்தவரை, “முதல் குற்றவாளியாகிய ஜெயலலிதாவையே விடுவிக்கின்ற காரணத்தினால் மற்ற மூவரும் விடுவிக்கப் படுகிறார்கள்” என்று கூறி, விடுதலை செய்வதற்கு மட்டும் அவர்களைக் கூட்டு சேர்த்துக் கொள்கிறார் குமாரசாமி.

இந்த வழக்கில் கர்நாடக அரசுதான் எதிர் மனுதாரர். எனினும் கர்நாடக அரசை எதிர் மனுதாரராகச் சேர்க்காமலேயே இந்த வழக்கு நடத்தப் பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, “இந்த மேல் முறையீட்டு விசாரணையே செல்லாது” என்று உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பித்த தனது வாதுரையில் குறிப்பிட்டிருந்தார் ஆச்சார்யா. முறைகேடான இந்த மேல் முறையீட்டு விசாரணையை நடத்தியதற்கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டியவர் குமாரசாமி. கர்நாடக அரசு முதலிலேயே இதனைக் கேட்காமல் ஏன் அக்கறையில்லாமல் இருந்தது என்று தனது தீர்ப்பில் இதற்கு எதிர்க்கேள்வி எழுப்பியிருக்கிறார். “நீ கவனக்குறைவாக இருந்தால் நான் திருடத்தான் செய்வேன்” என்று பேசும் பிக்பாக்கெட் திருடனின் வாதமுறை இது.

கவனக்குறைவினால் விளைந்த கணிதப்பிழையை முட்டாள்தனம் என்று சொல்லலாம். தீர்ப்பில் கவனமாக எழுதப்பட்டுள்ள பகுதிகளோ கிரிமினல்தனமானவை.

***

அப்சல் குரு
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு எதிராகப் போதுமான சாட்சியங்கள் இல்லாத நிலையில், தேசத்தின் மனசாட்சியைத் திருப்திபடுத்துவதற்காக அவரது மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதி மன்றம்.

குமாரசாமியுடைய தீர்ப்பு எள்ளி நகையாடப்பட்டு, அதன் ஒவ்வொரு அம்சமும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. தலைமை நீதிபதி தத்துவின் யோக்கியதையோ சந்தி சிரிக்கிறது. தீர்ப்பு வழங்குவதற்கு சில நாட்கள் முன்பு தலைமை நீதிபதி தத்து நேரடியாகவே பெங்களூரு வந்து, ஜெயலலிதாவை விடுவிப்பதாக தீர்ப்பு இருக்கவேண்டுமென்பதை உத்திரவாதம் செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவதில் தொடங்கி, இடையிடையே வரும் சிக்கல்களைச் சமாளித்து, கடைசியில் வழக்கைச் சாதகமாக முடித்துக் கொடுப்பது வரை ஒரு பேக்கேஜ் ஆக பேசி முடிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்புதான் இது என்று தெரிகிறது.

தலைமை நீதிபதி தத்து, எதிர்த்தரப்பான கர்நாடக அரசுக்குத் தகவல் கூடத் தெரிவிக்காமல் ஜெயலலிதாவுக்குப் பிணை கொடுத்தது, நாரிமன் கேட்காமலேயே உயர்நீதி மன்ற அப்பீல் விசாரணைக்கு தானே முன்வந்து ஏற்பாடு செய்தது, பிணை மனு விசாரணை வேறு நீதிபதியிடம் செல்லாமல் தன்னிடமே பிடித்து வைத்துக் கொண்டது, பவானி சிங் நியமனம் செல்லாது என்று நீதிபதி லோகூர் தீர்ப்பளித்தவுடனே, அதன் மேல்முறையீட்டை விசாரிப்பதற்கான 3 நீதிபதிகள் அமர்வை அவசரம் அவசரமாக செட்டப் செய்தது, ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களே உள்ள கர்நாடக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி வகேலாவை அவசரம் அவசரமாக இடமாற்றம் செய்தது – போன்ற நடவடிக்கைகளில் தத்துவின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது. ஆனால், அவர் கவலைப்படவில்லை. ஐயாயிரம் பேரோடு மொட்டை போட்டுக்கொண்டு கூச்சமே இல்லாமல் பத்திரிகைக்கு போஸ் கொடுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தத்துவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

முன்னாள் நிதிபதி கட்ஜு, தத்து மீது குறிப்பான ஊழல் புகார்களைக் கூறியிருக்கிறார். “நீங்கள் ஜெயலலிதாவிடம் இலஞ்சம் வாங்கியிருப்பதாக குற்றச்சாட்டு இருப்பதால், இந்தப் பிணை வழக்கை நீங்கள் விசாரிக்க கூடாது” என்று டிராபிக் ராமசாமி தத்துவிடமே மனு கொடுத்திருக்கிறார். தத்துவுக்கு எதிராக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் அரசுத்தலைவரிடம் குற்றச்சாட்டு மனு தரப்பட்டிருக்கிறது. இவை எதற்கும் தத்து அசைந்து கொடுக்கவில்லை.

இது, தத்து என்ற ஒரு நீதிபதியின் தனிப்பட்ட குணாதிசயம் மட்டுமல்ல, உயர்நீதி மன்ற, உச்சநீதி மன்ற நீதிபதிகள் பலரின் யோக்கியதை இதுதான். எப்படிப்பட்ட கிரிமினல் குற்றத்தை இழைத்தாலும் தங்களை யாரும் தண்டிக்க முடியாத வண்ணம், ஒரு உரிமையை அவர்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தண்டனையிலிருந்து சட்டம் எனும் இரும்புச் சுவரால் பாதுகாக்கப்பட்டிருப்பதால், நீதிபதிகள்தான் தைரியமான குற்றவாளிகள்.

உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து.
ஜெயாவின் ஏஜெண்ட் : உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி ஊழல் என்பது பிடியாணையின்றி, கைது செய்யத்தக்க ஒரு குற்றம். இருந்த போதிலும், உயர்நீதி மன்ற, உச்சநீதி மன்ற நீதிபதிகள் பகிரங்கமாக பெட்டி வாங்கி கையும் களவுமாக, கைரேகை ஆதாரத்துடன் பிடிபட்டிருந்தாலும், அவர்களைக் கைது செய்ய முடியாது. அதற்கு, தலைமை நீதிபதியின் அனுமதி வேண்டும் என்று 1991-ல் தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

எட்டு தலைமை நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய பிரசாந்த் பூஷணின் வழக்கு ஆண்டுக் கணக்கில் கிடப்பில் இருக்கிறது. ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள். அடுத்த தலைமை நீதிபதியான சதாசிவம், அம்மாவின் அருளாசி பெற்றவர். கொலைகாரன் அமித் ஷாவை விடுதலை செய்ததற்காக கேரள கவர்னர் பதவியைப் பரிசாகப் பெற்றவர். தற்போதைய தலைமை நீதிபதியோ அம்மாவின் அமைச்சரவையில் இடம்பெறும் தகுதியுள்ளவர்.

"பண்ணையார் சொல்வதும் பார்ப்பான் சொல்வதும்தான் சட்டம்"இதுதான் உச்சநீதி மன்ற நீதிபதிகளின் யோக்கியதை. சல்மான் கான், சத்யம் ராஜு, மோடி, அமித் ஷா, வன்சாரா, மாயா கோத்னானி போன்ற பல வழக்குகளில் பார்ப்பன மதவெறியர்களுக்கும், பணக்காரர்களுக்கும் தெண்டனிட்டு சேவகம் செய்யும் தீர்ப்புகளை வழங்கியிருக்கும் உச்சநீதி மன்றம், ஆதாரமே இல்லாமல் அப்சல் குருவைத் தூக்கில் ஏற்றியிருக்கிறது. டான்சி வழக்கில் பொதுச்சொத்தைத் திருடிய ஜெயலலிதாவின் தண்டனையை ரத்து செய்து விட்டு, அவரது மனச்சாட்சிக்கு வேண்டுகோள் விடுத்த நீதிமன்றம், சாட்சியமே இல்லாத நிலையிலும், ‘தேசத்தின் மனச்சாட்சியைத் திருப்திப்படுத்துவதற்காக’ என்று கூறிக்கொண்டு அப்சல் குருவுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. இத்தகைய அநீதிகள், முறைகேடுகள், ஊழல்கள் ஆகிய அனைத்தையும் நீதிபதிகள் நியாயப்படுத்திக் கொள்ள ஏற்ற வகையில்தான் சட்டம் இருக்கிறது.

“பண்ணையார் சொல்வதும், பார்ப்பான் சொல்வதும்தான் சட்டம்” என்றொரு காலம் இருந்தது. தங்களது தீர்ப்பு குறித்தும், அதன் நியாயம் குறித்தும், அவர்கள் எந்த விதத்திலும் மக்களுக்கு விளக்கம் சொல்லக் கடமைப் பட்டவர்களாக இல்லை. நீதிபதிகளும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள்.

சாதிச்சார்பு, மதச்சார்பு முதல் இலஞ்சம் வரை என்ன விதமான காரணத்துக்காகவும் முறைகேடான தீர்ப்பை ஒரு நீதிபதி வழங்கலாம். அவரை ஒன்றும் செய்ய முடியாது என்பதே நிலைமை.

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளில் மட்டுமல்ல, பன்னாட்டு முதலாளிகள், தரகுமுதலாளிகளுக்கு எதிரான வழக்குகளிலும், பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு எதிரான வழக்குகளிலும் இதுதான் நடந்தது. இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.

குமாரசாமி தீர்ப்பின் பித்தலாட்டங்களை, திரைமறைவுச் சதிகளை விவரித்துவிட்டு, இதற்கு எதிராக தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருப்பதாக உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதியிருக்கும் கருணாநிதி, “நீதியின் ராஜபாட்டையில் எத்தனை தடைக்கற்களைக் குவித்தாலும் அவற்றைப் படிக்கற்களாக்கிக் கொண்டு இறுதியில் நீதி விண்ணுயர எழுந்து நிற்கும்! வெற்றி முரசும் ஒலிக்கும்!” என்று நம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு குறிப்பிடுகிறார்.

இதனைப் படிக்கின்ற ஜெயலலிதா, “அம்பாள் என்றைக்கடா பேசினாள்? அறிவு கெட்டவனே!” என்ற பராசக்தி வசனத்தையே தனது பதிலாக கருணாநிதியிடம் சொல்லக்கூடும்.

– தொரட்டி
____________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2015
____________________________