privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.க"மேடம் 45 பர்சென்ட்!"

“மேடம் 45 பர்சென்ட்!”

-

சொத்துக்குவிப்பு வழக்கில் ‘நிரபராதி’ என்று ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவர் விடுதலையாகும் நேரத்தில்தான் தமிழகப் பொதுப்பணித்துறையில் நடந்துவரும் ஊழல்-கொள்ளை வெளிவந்து, தமிழகத்தில் நடப்பது அரசாங்கமல்ல, ஜெ. கும்பலின் தீவட்டிக் கொள்ளைதான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

பொதுப்பணித்துறை பேனர்
அம்மா ஆட்சியின் மகிமை : சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட பேனர்.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டைக் கொண்டிருப்பது பொதுப்பணித்துறை. இப்போது ஊழல்தான் அத்துறையின் பொதுப்பணியாகிவிட்டது. அந்தத் துறையில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து 35 முதல் 45 சதவீதம் வரை கமிசனாக ஆளுங்கட்சியினரால் வசூலிக்கப்பட்டு உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை பங்கு பிரிக்கப்படுவதை அம்பலப்படுத்தும் வகையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் 5 இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைத்தனர். திருச்சி மண்டலத்திலும் இவ்வாறு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் தொடங்கி உதவிப் பொறியாளர் வரையிலான 10 பேரின் பெயர்ப்பட்டியலைப் பகிரங்கமாக வெளியிட்ட அச்சங்கத்தினர், கடந்த மே 9 அன்று இலஞ்ச ஒழிப்புத்துறையிடம் இப்பட்டியலுடன் புகார் கொடுத்துள்ளனர். இது மட்டுமின்றி, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் ஒருவரும் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரியும் கொடுக்கல்-வாங்கல் பற்றி தொலைபேசியில் நடத்திய உரையாடலும் “வாட்ஸ்-அப்” மூலம் அப்படியே வெளிவந்து இத்தீவட்டிக் கொள்ளையை தமிழகமெங்கும் நாறடித்துள்ளது. இந்த இலஞ்சப் பணத்தில் சில அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருப்பதும் அம்பலமாகியுள்ளது.

“பொதுப்பணித்துறையில் இலஞ்சம் கொடுக்காத ஒப்பந்ததாரர்களுக்கு எந்தப் பணிகளும் வழங்கப்படுவதில்லை. முன்பு 10 முதல் 30 சதவீதம் வரை இலஞ்சமாகப் பணத்தைக் கொடுத்துத் தொலைத்தோம். இப்போது 45 சதவீத அளவுக்குக் கேட்பதால் எங்களால் கொடுக்க முடியவில்லை. எனவேதான் இந்த அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே எங்களிடம் இலஞ்சம் கேட்ட 10 பொறியாளர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டோம். ஒரு பணியில் 45 சதவீதம் இலஞ்சமாகக் கொடுத்துவிட்டு மீதமுள்ள 55 சதவீத பணத்தைக் கொண்டுதான் பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனில், பணிகள் எந்த அளவுக்கு செய்யப்பட்டிருக்கும் என்பதை நீங்களே ஊகிக்க முடியும்” என்கிறார் தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவர் குணமணி.

பராமரிப்புச் செலவுக்காக அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட தொகை செலவிடப்பட்டதாக அதிகாரிகள் கூறிய போதிலும், அந்தப் பணிகள் முறையாகவோ, முழுமையாகவோ எங்குமே நடக்கவில்லை என்று ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினரே கூறுகின்றனர் என்றால், மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் ஜெ.கும்பலின் ஆட்சியில் சூறையாடப்படுகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சங்கம்
45 சதவீத அளவுக்குக் கமிசன் கொடுக்கப்பட்டதையும், இதற்காக வசூல் வேட்டை நடத்திய 10 பொறியாளர்களின் பெயர்ப்பட்டியலையும் பகிரங்கமாக வெளியிட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சங்க நிர்வாகிகள்.

“பொதுப்பணித்துறை அமைச்சருக்கு 5 சதவீதம், மற்ற துறையில் பணிகள் நடந்தால் அந்தத் துறை அமைச்சருக்கு 5 சதவீதம், கண்காணிப்புப் பொறியாளருக்கு 2 சதவீதம், செயற்பொறியாளருக்கு 7 சதவீதம், உதவிப் பொறியாளருக்கு 7 சதவீதம், பணி ஆய்வாளருக்கு (ஒர்க்கிங் இன்ஸ்பெக்டர்) 3 சதவீதம், அலுவலக ஊழியர்களுக்கு 5 சதவீதம் – என சதவீதப் பங்கு அடிப்படையில் பணம் கொடுக்க வேண்டும் என்பது இந்தத் துறையில் எழுதப்படாத விதியாக உள்ளது” என்கிறார் குணமணி. இதோடு மேலிடத்துக்கு அதாவது, எம்-க்கு (மேடத்துக்கு) தனியாக 5 சதவீதம் கொடுக்க வேண்டுமென வசூலிக்கப்பட்டதாக ஒப்பந்ததாரர்கள் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளனர். ஓய்வு பெற்ற பிறகும் ஆலோசகர் என்ற பதவியில் இருந்த பொறியாளர் ஒருவர், மேலிடத்துக்குப் பணத்தை வசூலித்துக் கொடுப்பதில் கில்லாடி என்று கிசுகிசு ஏடுகளே அம்பலப்படுத்துகின்றன.

இந்தச் செய்திகள் தவறாக இருந்தால் அரசு சார்பில் அப்போதே மறுத்து, இவற்றை வெளியிட்ட பத்திரிகைகள் மீது மான நட்ட வழக்கும் தொடுத்திருப்பார்கள். ஆனால், இன்றளவும் மறுக்கவில்லை. மாறாக, இந்த ஊழல் கொள்ளை ஆதாரங்களுடன் சந்தி சிரித்ததும், ஒப்பந்ததாரர்கள் வைத்த டிஜிட்டல் பேனர்கள்தான் ஊழல் கொள்ளையர்களால் உடனடியாகக் கிழித்தெறியப்பட்டன.

“இன்றைக்கு வேண்டுமானால் இந்த ஊழல் அதிகாரிகள் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், வருங்காலத்தில் இவர்கள் எல்லாம் விசாரணைக் கமிசன் முன்னால் நின்று பதில் சொல்ல வேண்டிய நிலைமை நிச்சயம் உருவாகும்” என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி எச்சரித்தார். “கடந்த 4 ஆண்டுகளில் 36 ஆயிரம் கோடி அளவுக்கு பொதுப்பணித்துறையில் ஊழல் நடந்துள்ளது” என்றும், “ஆளுநர் அனுமதிக்காக காத்திருக்காமல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அப்போதைய முதல்வரான ஓ.பி.எஸ். மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டார் பா.ம.க.வின் ராமதாஸ். காங்கிரசு கட்சியினர் பேரணி நடத்தி, தமிழக அரசின் 25 துறைகளில் நடந்துவரும் ஊழல்கள் அடங்கிய பட்டியலை மாநில ஆளுநரிடம் அளித்து நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

இத்தனைக்கும் பிறகும் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராகவும் முதல்வர் பொறுப்பிலுமிருந்த ஓ.பி.யோ, ‘மக்கள் முதல்வர்’ ஜெயாவோ இதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஊழல் கொள்ளையர்களின் பட்டியலைப் பகிரங்கமாக வெளியிட்டதோடு, ஒப்பந்ததாரர் சங்கத்தினர் முறைப்படி புகாராகக் கொடுத்த போதிலும் இலஞ்ச ஒழிப்புத் துறை அசைந்து கொடுக்கவில்லை. வருமான வரித்துறையினர் சோதனை நடத்த முன்வரவில்லை. தானே முன்வந்து இந்த ஊழல் கொள்ளையை பொதுநல வழக்காக எடுத்து நடத்த நீதித்துறையும் முன்வரவில்லை.

மாறாக, ஊழலை அம்பலப்படுத்தியவர்கள்தான் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். அரசு தரப்பிலேயே ஒரு முக்கிய அதிகாரி சமரசப் பேச்சுவார்த்தை மூலம் நடத்திய பேரத்துக்கு ஒப்பந்ததாரர் சங்க நிர்வாகிகள் இசையாததால் அடுத்த கட்டமாக, ஒப்பந்ததாரர் சங்கத்தை உடைக்கும் திருப்பணியில் ஜெ.கும்பலின் பினாமி அரசு இறங்கியது. ஜெ.கும்பலின் ஏற்பாட்டின்படி, இச்சங்கத்தின் ஒரு பிரிவினர் போட்டி பொதுக்குழுவைக் கூட்டி புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளைத் தெரிவு செய்து, ஏற்கெனவே சங்கத்தின் நிர்வாகிகளாக இருந்தவர்களைப் பொறுப்பிலிருந்து நீக்குவதாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.

இதுவும் போதாதென்று, இதைப்பற்றி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் எவரும் வாய் திறக்கக் கூடாது என்று எச்சரிக்கும் வகையில் அரசுப் பணியாளர் விதியைக் காரணம் காட்டி வாய்ப்பூட்டு போடும் புதியதொரு மிரட்டலை ஜெ. கும்பல் ஏவியுள்ளது. பொதுப்பணித்துறையில் நடக்கும் ஊழல்கள் பற்றி ஒப்பந்ததாரர் சங்கத்தினர் கூறும் குற்றச்சாட்டுகள் நியாயமானதென்றும், இதனால் பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்குக் கெட்டபெயர் ஏற்பட்டுள்ளதென்றும் கருத்து தெரிவித்த குற்றத்துக்காக தேவராஜ் என்ற பொதுப்பணித்துறை நீர் ஆய்வு நிறுவன செயற்பொறியாளருக்கு அந்நிறுவனத் தலைமைப் பொறியாளர் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

கொலைகார அரசு
கொலைகார அரசு : ஜெ. கும்பலின் ஊழல் கொள்ளைக்கு உடன்பட மறுத்து தற்கொலை செய்து கொண்ட திருவாரூர் மாவட்ட அரசு ஊழியர் முத்துக்கிருஷ்ணன், தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்சித்த கோவையைச் சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் சக்திவேல்.

இத்தனைக்கும் பிறகும் நடுநிலை நாடகமாடும் ஊடகங்களோ இந்த ஊழல் கொள்ளை பற்றி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முன்வரவில்லை. பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சங்கத்தினர் டிஜிட்டல் பேனர் வைத்து ஊழலை அம்பலப்படுத்தியபோது பரபரப்பூட்டிய ஊடகங்கள், அதன் பிறகு இந்த விவகாரத்தைக் கைகழுவி விட்டன. ஊழல் அதிகாரிகள் – அமைச்சர்களுக்கு எதிராக அம்மா சாட்டையை சுழற்றி வருவதாகவும், சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக அம்மா, முதல்வர் பொறுப்பில் இல்லாத நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு நிர்வாகத் திறமை மிக்க அம்மாவை ஒரு கும்பல் ஏமாற்றுவதாகவும், அதனால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், நிர்வாகத்தைச் சீரமைக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஒரு பொயை பார்ப்பன ஊடகங்கள் தொடர்ந்து உருவாக்கி வருகின்றன.

ஆனால், பாசிச-கிரிமினல் ஜெ. கும்பலின் தலைமையிலான கிரிமினல் கொள்ளைக் கூட்டம், என்றைக்குமே ஒரு அரசாங்கமாக இருந்ததில்லை. அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறை அடங்கிய அரசு கட்டமைவின் துணையோடு கொள்ளையடிக்கும் அமைப்பு ரீதியில் திரண்ட கிரிமினல் குற்றக் கும்பல்தான் அது. எந்தெந்த துறைகளில் எத்தனை கோடி தேறும் என்று கணக்கு போட்டுக் கொடுப்பதுதான் அம்மாவின் அருள் பெற்ற ஆலோசகர்களின் வேலை. அதை முறைப்படி வசூலித்து கொடுப்பதுதான் அமைச்சர்களின் கடமை. அவர்கள் இட்ட பணிகளை நிறைவேற்றிக் கொடுப்பதுதான் ஊழல் அதிகாரிகளின் அன்றாடப் பணி. எல்லாம் ஒழுங்காக நடந்தால் அவரவர்களுக்குரிய எலும்புத்துண்டு கிடைக்கும். இல்லையானால் நடப்பதே வேறு. ஜெ. கும்பலால் நிர்வகிக்கப்படும் இந்த ஆட்சியானது, மிகப்பெரிய கொள்ளைக்கூட்ட கம்பெனியாகத்தான் இயங்கி வருகிறது.

உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை ஊழல்கள், போக்குவரத்துத் துறை பணி நியமன ஊழல், டாஸ்மாக் ஊழல், நெல் மூட்டைகளில் கலப்பட ஊழல், மின் வாரிய ஊழல், பத்திரப்பதிவுத்துறை ஊழல், மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலில் ஊழல், பொதுவிநியோகத்துறை ஊழல், சத்துணவுத் திட்டத்தில் முட்டை-காய்கறி -பருப்பில் ஊழல், கனிமவளக் கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை – என்று ஏற்கெனவே ஊழல்கள் அம்பலமாகி ஜெ. கும்பலின் கிரிமினல் கொள்ளைக் கூட்ட ஆட்சியின் மகிமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

அம்மா ஆட்சியில் பல நூறு கோடிக்கு ஆவின் பால் கலப்படக் கொள்ளை அம்பலமானதும், பால்வளத்துறை அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்து, ஜெ. கும்பல் அவரைப் பாதுகாத்தது. ஜெ. கும்பலுக்கு முறையாகக் கப்பம் கட்டிவந்த மாதவரம் மூர்த்தியின் பினாமியாகச் செயல்பட்ட ஆவின் பால் கலப்படக் கொள்ளையன் வைத்தி-க்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று அவனுக்குப் பிணை வாங்கிக் கொடுத்து தப்பிக்க வைத்துள்ளது. பல்லாயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் சுருட்டப்பட்டுள்ள தாது மணற்கொள்ளை விவகாரம் அம்பலமாகத் தொடங்கியதும், இது குறித்து விசாரணை நடத்துவதாக நாடகமாடிய ஜெ.கும்பல், ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி அளித்துள்ள விசாரணை அறிக்கையை இதுவரை வெளியிடாமல் முடக்கி வைத்துள்ளது. பல்லாயிரம் கோடி கிரானைட் கொள்ளை குறித்து விசாரித்துவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொலைமிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.

“இப்படித்தான் செய்வோம்; எங்களை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது” என்று கொக்கரிக்கும் ஜெ.கும்பலின் ஆட்சியில், நெல்லை வேளாண் செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமியின் தற்கொலை மட்டுமின்றி, ஜெ. கும்பலின் ஊழல் கொள்ளைக்கு உடன்பட மறுத்து திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய அரசு ஊழியர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதே போல சென்னை மற்றும் திருவாரூர் மாவட்ட ரேஷன் கடை ஊழியர்கள் தற்கொலை, திருச்சி மருத்துவ அதிகாரி தற்கொலை முயற்சி -என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

1991-96-ம் ஆண்டுகளில் நடந்த ஜெயாவின் ஆட்சி “10 சதவீத கமிசன் ஆட்சி” என்றே அழைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில்தான் ஜெயா-சசி கும்பல் வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி ரூபாய் அளவிற்கு (இதுவும்கூட அடித்த கொள்ளையில் சிறுதுளிதான்) சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இப்பொழுது இந்த கமிசன் 45 சதவீதமாக உயர்ந்துவிட்டதென்றால், ஜெயா-சசி கும்பலிடம் வருமானத்திற்கு அதிகமாக குவிந்துள்ள சொத்து மதிப்பு எத்தனை ஆயிரம் கோடியைத் தொட்டிருக்கும்? சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயா-சசி கும்பல் உச்சநீதி மன்றத்தில் பிணையைப் பெறுவதற்காக தலைமை நீதிபதி தத்துவிற்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு இலஞ்சம் கொடுத்திருக்கிறது என அம்பலமாகியிருக்கும் செய்தி, தமிழகத்தில் ஜெயா-சசி கும்பல் நடத்திவரும் ஊழல் கொள்ளையை உறுதிப்படுத்துகிறது. இந்த இலட்சணத்தில் ஜெயாவும் அவரது பினாமிகளும் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து கர்நாடகா உயர்நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டிருப்பது மாபெரும் கேலிக்கூத்து தவிர வேறென்ன?

– குமார்
____________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2015
____________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க