privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபயங்கரவாதிகளை ஆதரிக்கும் மோடி அரசு – அரசு வழக்கறிஞர்

பயங்கரவாதிகளை ஆதரிக்கும் மோடி அரசு – அரசு வழக்கறிஞர்

-

மோடி அரசை அம்பலப்படுத்தும் அரசு வழக்கறிஞர் ரோகிணி சாலியன்.
மோடி அரசை அம்பலப்படுத்தும் அரசு வழக்கறிஞர் ரோகிணி சாலியன். (படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்)

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு நினைவிருக்கிறதா? 2008-ம் ஆண்டு ரம்ஜான் மாதத்தில் மகாராஷ்டிர மாநில, நாசிக் மாவட்ட நகரமான மாலேகானில் வெடித்த குண்டு நான்கு முஸ்லீம்களைக் கொன்றது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக இந்துமதவெறியர்கள் கைது செய்யப்பட்டு சேர்க்கப்பட்டனர். அந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர், ரோகிணி சாலியன்.

மோடி அரசு பதவியேற்றதும், இந்த வழக்கை நடத்தும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), “இந்த வழக்கில் தீவிரமாக வாதாடாமல் மென்மையாக நடந்து கொள்ளுங்கள்” என்று கேட்டுக் கொண்டதாக ரோகிணி சாலியன் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

2008, 26/11-ல் நடந்த மும்பை தாக்குத்தலையொட்டி அமைக்கப்பட்டதுதான் இந்த தேசிய புலனாய்வு அமைப்பு. பிறகு இவ்வமைப்பு, 2006 மாலேகான் குண்டு வெடிப்பு (31 பலி, 312 காயம்), 2007 அஜ்மீர் குண்டு வெடிப்பு ( 3 பலி, 15 காயம்), 2007 ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு ( 9 பலி, 58 காயம்) மற்றும் 2007 சம்ஜுத்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பு ( 68 பலி, 13 காயம்) ஆகிய வழக்குகளை விசாரித்து நீதிமன்றத்தில் வழக்காடும் பணியை ஏற்றுக் கொண்டது.

மேற்கண்ட குண்டு வெடிப்புகளுக்கு பிறகு நடந்த மாலேகான் 2008 குண்டு வெடிப்பு (நான்கு பலி, 79 காயம்) விசாரணையில்தான் இப்பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டு பிடித்தார்கள். ஆரம்பத்தில் முசுலீம்கள்தான் இத்தாக்குதலுக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

ஆனால் மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு படையைச் சேர்ந்த ஹேமந்த் கார்கரே எனும் நேர்மையான போலிசு அதிகாரிதான் இவ்வழக்கை விசாரித்து இந்தூரைச் சேர்ந்த இந்து பயங்கரவாதிகளே இதற்கு காரணம் என்பதை கண்டு பிடித்தார். (இவ்வழக்கு குறித்து வினவில் நிறைய கட்டுரைகள் வெளியாகியுள்ளன).

அதன்படி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித் முதலானோர் உட்பட 12 காவி பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அதில் நான்கு பேர் தற்போது பிணையில் வெளியே வந்துவிட்டனர்.

இந்த வழக்கின் கண்டுபிடிப்பிற்கு பிறகே முன்னர் கண்ட மற்ற குண்டுவெடிப்புகளிலும் அதே போன்றதொரு காவி பயங்கரவாதிகள் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதே நேரம் இதை கடும் எதிர்ப்புக்கிடையே கண்டுபிடித்த அதிகாரி ஹேமந்த் கார்கரே மும்பை 26/11 தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அப்போதிருந்தும், குறிப்பாக மோடி அரசு பதவியேற்ற பின்னரும் காவி பயங்கரவாதிகளை விடுவிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

இரண்டாம் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றி வந்த ரோகிணி இதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். மோடி அரசு வந்த உடனேயே தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ரோகிணியை நேரில் சந்தித்திருக்கிறார். தொலைபேசியில் கூட பேசவேண்டாம் என்று நேரில் வந்த அந்த அதிகாரி, “ உங்களுக்கு ஒரு செய்தி இருக்கிறது. இந்த வழக்கில் தீவிரமாக வாதாட வேண்டாம்” என்று ஆணையிட்டிருக்கிறார்.

பிறகு இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி வழக்கின் விசாரணை நாளன்று, அதே அதிகாரி மீண்டும் வந்து “மேலிடத்தின் விருப்பப்படி இந்த வழக்கில் நீங்கள் வாதாட வேண்டாம். உங்களுக்கு பதில் வேறு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடுவார்” என்று வெளிப்படையாகவே மிரட்டியிருக்கிறார்.

கோபமடைந்த ரோகிணியும், “நல்லது, ஏற்கனவே நீங்கள் சொல்லியிருப்பதால் இதைத்தான் எதிர்பார்த்தேன். எனது கணக்கு வழக்குகளை முடியுங்கள். மேலும் இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிப்பதாக அறிவித்தால்தான் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு எதிரான வழக்குகளில் – இந்த வழக்கில் அல்ல – ஈடுபட முடியும்” என்று  முகத்தில் அடித்தாற் போல கூறியிருக்கிறார். அதற்குப் பிறகு அந்த அதிகாரி மற்றும் புலனாய்வு அமைப்பிலிருந்து யாரும் பேசவில்லை.

68 வயது ரோகிணி சாலியன், இதற்கு முன்னரே பல முக்கியமான வழக்குகளில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு திறம்பட பணியாற்றியிருக்கிறார். இருப்பினும் அவரது நேர்மையும், திறமையும் பா.ஜ.க ஆதரிக்கும் பயங்கரவாதத்தை தண்டித்து விடும் என்பதால் மோடி அரசு வெளிப்படையாகவே அவரை நீக்கியிருக்கிறது.  அதன்படி அவர்கள் சொன்னதற்கு மாறாக நடந்து கொண்டால் எந்த பயனும் கிடையாது என்பதை சுட்டிக் காட்டுகிறார்கள். இதன்படி இனி அரசு வழக்கறிஞர்கள் மோடி அரசுக்கு ஜால்ரா போட்டால்தான் பணி கிடைக்கும். இல்லையேல் துரத்தப்படுவார்கள்.

மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் படி மாலேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பதிவு செய்திருப்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்று ஏப்ரல் 15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி விசாரணை நீதிமன்றம் விசாரித்து பிணை அளிக்கலாம் என்றும் கொடி காட்டியது. பிறகு குற்றவாளிகள் நான்கு பேர் விசாரணை நீதிமன்றத்தில் பிணை பெற்று ஒரு மாதத்தில் வெளியே வந்தார்கள்.

கூடவே உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவின்படி இந்த வழக்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைத்து ஆரம்பத்திலிருந்து விசாரிக்கப்பட வேண்டுமாம். மீண்டும் “அ”விலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்கிறார் ரோகிணி.

இனி இந்த வழக்கு எப்படி போகும்?

“ஒரு புதிய வழக்கறிஞருக்கு இதை விசாரித்து வாதாடுவது சிரமம். அவர் எதுவும் செய்ய முடியாது. இந்த வழக்கை வாபஸ் பெற முடியாது என்பதால்  அரசுத் தரப்பு தோற்றே ஆக வேண்டும் என்பதையே அவர்கள் (அரசு) விரும்புவார்கள்” என்று கூறுகிறார் ரோகிணி.

1975-ம் ஆண்டு நெருக்கடி நிலையின் போது ஜனநாயகத்தை நெரித்து விட்டார்கள் என்று திருவாளர் மோடி கவலைப்பட்டிருக்கிறார். அவசர நிலை காலத்தின் 40-ம் ஆண்டு முடிவை ஒட்டி அன்னாரது ஜனநாயக காதல் டிவிட்டரில் வெளிப்பட்டிருக்கிறது. அந்த நாற்பதில் 2002 குஜராத்தெல்லாம் வராது போலும்.

இருந்தாலும் இன்று பா.ஜ.க அரசு பதவியேற்று ‘வளர்ச்சிப்’ பாதையில் மக்களை அடக்கி முதலாளிகளை போற்றி சென்று கொண்டிருக்கும் போது கூடவே தனது ஜனநாயக கடமையையும் மறக்கவில்லை.

அமித்ஷா விடுதலை, விடுதலை செய்த சதாசிவத்திற்கு கேரள கவர்னர், லலித் மோடி கொள்ளைக்கும் அந்த கொள்ளைக்கு ஆதரவளித்த அமைச்சர்கள், முதலமைச்சருக்கு ஆதரவு என்று பீடை நடை போட்டு வருகிறது மோடி அரசு.

இப்போது சட்டப்படி அவசர நிலை இல்லை. ஆனால் ஒரு அரசு வழக்கறிஞரை மிரட்டி இந்து பயங்கரவாதிகளை சட்டப்படியே காப்பாற்றுகிறார்கள். எனில் இது என்ன நிலை?

இனி, ‘மாலேகான் வழக்கில் நாங்கள் குற்றவாளிகள் இல்லை என்று நீதிமன்றமே விடுவித்திருப்பதாக’ அரவிந்த நீலகண்டன் ஐ.ஐ.டி கூட்டத்தில் பேசுவார். ‘இவ்வழக்கில் ஆர்.எஸ்.எஸ்தான் குற்றவாளி என்று கூறப்படும் கான்ஸ்பிரசி தியரிகளுக்கெல்லாம் நான் பதிலளிக்கப் போவதில்லை’ என்று கிழக்கு பதிப்பக பத்ரி எழுதுவார். ‘சும்மா மோடியை குற்றம் சாட்டி எழுதி அழுவதைக் காட்டிலும் தொழில் நுட்ப புரட்சியை அவர் எப்படி திறமையாக பயன்படுத்துகிறார் என்று எதிர்க்கட்சிகள் உணர்வது சாலச்சிறந்தது’ என்று தமிழ் இந்துவில் சமஸ் கட்டுரை தீட்டுவார்.

தந்தி டி.வியில் பாண்டே எப்படியெல்லாம் பேசுவார் என்பது இக்கட்டுரையின் வரம்பிற்கு அப்பாற்பட்டது.

1975 காங்கிரசு அவசர நிலையைக் காட்டிலும் கொடுரமான காவி அவசர நிலை வந்து விட்டது. என்ன செய்யப் போகிறோம்?

மேலும் படிக்க