privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்பொடாவிற்குப் போட்டியாக பசுவதைத் தடைச்சட்டம்

பொடாவிற்குப் போட்டியாக பசுவதைத் தடைச்சட்டம்

-

(புதிய கலாச்சாரம் அக்டோபர் 2003 இதழில் வெளியான கட்டுரை)

சு விவகாரம் என்பது முசுலீம் அடிப்படை வாதத்தை எதிர்க்கும் உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதிதான்” – ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேவேந்திர ஸ்வரூப்.

அமெரிக்காவையும் உள்ளிட்டு உலகமே மாட்டுக்கறியை உண்ணும் போது, முசுலீம் எதிர்ப்பில் மாட்டு விவகாரத்தை எப்படி நுழைக்க முடியும்? இந்து மதவெறியர்களின் இந்திய அனுபவம் உலக அளவிலும் மாட்டு விகாரத்தைக் கொண்டு செல்ல முடியும் என்று அவர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. “இந்துக்கள் புனிதமாக வழிபடும் பசுக்களை முசுலீம்கள் வேண்டுமென்றே கொல்கிறார்கள்” என்ற இமாலயப் பொய் ஒரு நூற்று ஐம்பது ஆண்டுகளுக்குள்தான் புனையப்பட்டிருக்கிறது.

“இந்துக்களில் ஒரு சில பிரிவினர் பசுக்களை வழிபடுவதால் அவற்றை வெட்டக் கூடாது” என்று முகலாய மன்னர்களான பாபரும், அக்பரும் ஆணையிட்டிருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ் என்ற கிறுக்குக் கூட்டம் தங்களை அவதூறு செய்யக் கூடும் என்று அஞ்சி அவர்கள் அதைச் செய்யவில்லை. சாதி இந்துக்களின் நம்பிக்கைகளை மதிப்பதன் மூலம் அவர்களது ஆதரவைப் பெறுவதற்காகவே இதைச் செய்திருப்பார்கள்.

கோபூஜை
கோபூஜை செய்யும் பா.ஜ.க.வின் ராஜ்நாத் சிங் : பசு மாட்டுக் கொம்புகளின் மேல் சுழலும் பா.ஜ.கவின் அரசியல் உலகம்.

காலனிய ஆட்சியில் வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு உதவும் வகையில் இந்திய தேசியவாதிகள் (காங்கிரசையும், இந்து மதவெறியர்களின் மூதாதையரையும் உள்ளிட்டு) பசுவை வைத்து முசுலீம்களை எதிர்ப்பதும், பார்ப்பனீய தேசிய கருத்தியலைப் பரப்புவதும் மெல்ல மெல்ல நடந்தேறியது.

1882-ல் ஆரிய சமாஜத்தின் நிறுவனர் தயானந்த சரஸ்வதியால் பசு காக்கும் சங்கம் முதன்முறையாகத் துவங்கப்பட்டது. வட மாநிலங்களில் மகாராஜாக்கள், காங்கிரசைச் சேர்ந்த பண்ணையார்கள் ஆதரவுடன் பசு பாதுகாப்பு சமிதிகள் பரவத் துவங்கின. இதே காலத்தில் கிழக்கு உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் முதன் முறையாகப் பசுவை வைத்து கலவரங்கள் நடந்தன. 1893-ல் ஜூலை பக்ரீத் பண்டிகையின் போது அசாம்கார் முசுலீம் மக்களை அருகாமை மாவட்டங்களைச் சேர்ந்த இந்து மேல்சாதி வெறியர்கள் தாக்கினர்.

முசுலீம்கள் தமது உயிரையும், உடைமையையும் பாதுகாத்துக் கொள்ள ஒரு ஆவணத்தில் பசுக்களைக் கொல்ல மாட்டோமெனக் கையெழுத்திடுமாறு மிரட்டப்பட்டதால 1893-ல் கோரக்பூர் ஆணையர் எம்.எல்.பெர்ரார் குறிப்பிட்டார். 1917-ல் ‘பசுக் கலவரங்கள் மிக மோசமாய் நடந்தன. பார்ப்பன, ராஜ்புத், பூமிகார் ஆகிய மேல்சாதி இந்து வெறியர்கள் 30,000 பேர் பீகாரின் ஷாபாத் மாவட்ட முசுலீம்களை வேட்டையாடினர். 1947 பிரிவினையின்போது நடந்த கலவரங்களுக்கு பசுப்பிரச்சனை காரணமல்ல என்றாலும் அதன் பின்னும் இன்று வரையிலும் ஏராளமான கலவரங்கள் இப்பிரச்சனையை வைத்து நடந்திருக்கின்றன. பசு என்றொரு விலங்கிற்காக முசுலீம் மக்கள் அஞ்சி வாழ்வது என்ற நிலையைத்தான் இந்து மதவெறியர்கள் ஏற்படுத்தியிருக்கின்றனர்.

பசுவதைத் தடைச்சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வர வலியுறுத்தி 1966-ல் நாடாளுமன்ற முற்றுகையை நிர்வாண சாமியார்கள் நடத்தினார்கள். போலீசு துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் இறக்குமளவு பெரும் கலவரமாய் நடந்தது.

இந்தக் கலவரத்தின் போது காங்கிரசின் அனைத்திந்தியத் தலைவராக இருந்த காமராசரின் வீடும் நிர்வாண சாமியார்களால் தாக்கப்பட்டது. கடந்த ஆண்டு அரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டம் துலினா கிராமத்தில் உயிரோடு பசுவின் தோலை உரித்ததாக வதந்தியைப் பரப்பி, 5 தாழ்த்தப்பட்ட இளைஞர்களை அடித்து உயிரோடு கொளுத்தினர். இதை “மனிதனின் உயிரைவிட பசுவின் உயிர் மேலானது” என்று கூறி இந்துவெறி பாசிஸ்டுகள் நியாயப்படுத்தினர்.

இவ்வாண்டு கூட மத்தியப்பிரதேசத்தின் கான்ஞ்பசூடாவில் ஒரு பசு கொல்லப்பட்டதாக வதந்தியைப் பரப்பி முஸ்லீம்களுக்கெதிராக பெரும் கலவரம் நடந்தது. சட்டமன்றத் தேர்தலில், “பசுவின் புனிதம் காப்பது யார்?” என்று காங்கிரசுக்கும், பா.ஜ.க.விற்கும் அங்கு போட்டி நடக்கிறது. முதலமைச்சர் திக் விஜய் சிங்கோ இந்தியா முழுவதும் பசு வதைத் தடைச் சட்டம் கொண்டுவர பிரதமர் வாஜ்பாயிக்கு கடிதம் எழுதினார். வாஜ்பாய் அரசும் அதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. காங்கிரஸ் தவிர ஏனைய எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பினால் மசோதாவை தற்போது ஒத்தி வைத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டும் கோட்பாட்டுப் பிரிவு 48-ல் பசுவதையைத் தடை செய்வது குறித்து வலியுறுத்தப்பட்டிருக்கிறது. 1958-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பொன்றில் பிரிவு 48-ன் படி தடைச்சட்டம் வேண்டுமெனக் கூறப்பட்டது. 1979 ஜனதா அரசாங்கத்தில் கூட ஒரு தனிநபர் தீர்மானம் விவாதித்து நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், எதிர்ப்பு காரணமாக சட்டமாக வரவில்லை. அதேசமயம் தற்போது 17 மாநிலங்களில் முழுமையாகவோ, பகுதியாகவோ பசுவதைத் தடைச்சட்டம் அமலில் இருக்கிறது. மாடுகளைப் பராமரிக்க முடியாமல் வெட்டியாக வேண்டுமென்ற யதார்த்த நிலை காரணமாக இச்சட்டத்தை அம்மாநிலங்களிலேயே அமல்படுத்த முடியாமலிருக்கிறது.

பா.ஜ.க பசு வதை தடைச் சட்டம்உதாரணமாக, தடைச்சட்டம் இல்லாத கேரள மாநிலத்தில் தென்னிந்திய மாடுகள் அன்றாடம் கொண்டு செல்லப்படுவது வழக்கமாகி விட்டது. இதனால்தான் கேரளம், மேற்கு வங்கத்தில் தடைச்சட்டம் கொண்டு வர வேண்டுமென்ற வினோபா பாவே வலியுறுத்தினார். 1979-ல் எம்.ஜி.ஆர் அரசு பசுக்களை வெட்டவும், இறைச்சி ஏற்றுமதிக்கும் தடை செய்து உத்தரவு போட்டது. இவ்வுத்தரவைச் சட்டமாக மாற்றுவதற்குள் அவர் அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டது. இன்றும் மாடுகளை கேரளாவுக்குக் கொண்டு செல்லுவதை எதிர்த்து தமிழக இந்து மதவெறி அமைப்புகள் அரசு உதவியுடன் அவ்வப்போது தொல்லை செய்கின்றன.

80-களில் ஆர்.எஸ்.எஸ் உடன் இணங்கி வந்த இந்திராகாந்தி, 82-ல் அனைத்து மாநில அரசுகளும் தடைச்சட்டத்தைக் கொண்டு வரவேண்டுமெனக் கடிதம் எழுதினார். இவையெல்லாவற்றையும் விட தற்போது பா.ஜ.க அரசு கொண்டு வர முயலும் சட்டத்தின் விதிகள் பசுவை வைத்து மனிதனை வதைக்கும் பார்ப்பனிய இந்து மதவெறியின் கோர முகத்தைத் தோலுரிக்கிறது.

கடந்த காலத்தில் மாடுகளை மனிதாபிமானமற்ற முறையில் வதைத்து வரும் நிலை இன்றும் தொடருவதாகக் கவலைப்படும் இம்மசோதா, இதனால் மனித-மாடு விகிதத்தில் மாடுகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது குறித்தும் கண்ணீர் வடிக்கிறது. குறிப்பாக, பசுக் கொலையைத் தடுத்து நிறுத்தவும், மாட்டிறைச்சி ஏற்றுமதியைத் தடை செய்யவும் மசோதா கோருகிறது. மேலும், மாநில அரசு, ஊராட்சி அமைப்புகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் பாதுகாப்பற்ற, கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட பசுக்களைப் பராமரிக்க வேண்டுமெனவும் கோருகிறது.

அடுத்து, இந்தத் தடைச் சட்டம் பசுவுக்கு மட்டுமல்ல, காளைகளுக்கும் பொருந்தும். ஆனால், எருமைகளைக் கொல்லத் தடை இல்லை. எண்ணிக்கையில் பசுவை விடக் குறைவாக இருந்த போதும் இந்திய பால் உற்பத்தியில் பெரும்பகுதியை வழங்கும் ‘கோமாதா’ எருமைதான். எனினும் தோலின் நிறம் கருப்பு என்பதால் சட்டத்தில் ஆரிய நிறவெறி எருமைக்கு காட்டவில்லை.

இச்சட்டத்தின்படி மாடுகளைக் கொல்வது மட்டுமல்ல, காயம் ஏற்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். அதாவது, சித்திரவதை செய்வது, தெரிந்தே கைவிடுவது, தெரிந்தே நோயுடன் வாழ விடுவது ஆகியவையும் குற்றங்களே. இதன்படி மாட்டைக் கம்பு, சவுக்கால் அடிப்பது, மாட்டைக் கவனிக்காமல் அலையவிடுவது ஆகியவையும் குற்றமாகக் கருதப்படும். இச்சட்டத்திற்கு உட்பட்டு மாடுகளை வைத்திருப்போர் பொறுப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பசு வதை தடைச்சட்டம்
தடைச்சட்டம் இல்லாத கேரள மாநிலத்தில் தென்னிந்திய மாடுகள் அன்றாடம் கொண்டு செல்லப்படுவது வழக்கமாகி விட்டது.

சட்டத்தை மீறுவோருக்கான தண்டனை விவரங்கள் இச்சட்டத்தின் முக்கியமான பகுதியாகும். இதன்படி மாடுகளைக் கொல்பவருக்கும், கொலை செய்யத் தூண்டுபவருக்கும் 2 வருடம் முதல் 7 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனையும், கொல்லப்படும் ஒவ்வொரு மாட்டுக்கும் ரூ 10,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம். மாட்டுக்குக் காயம் ஏற்படுத்துபவருக்கும் ரூ 5,000 அபராதம் விதிக்கப்படும். இச்சட்டத்தின் கீழ் வழக்கு போடவும், நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை உதவி ஆய்வாளருக்குக் குறையாத அதிகாரிகளுக்கும், அல்லது அரசு பரிந்துரை செய்யும் எந்த ஒரு நபருக்கும் அதிகாரம் உண்டு. அதாவது, அரசு அதிகாரிகள் மட்டுமல்ல; இந்து முன்னணி, “கோ ரட்சண சமிதி” போன்றவற்றைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் காலிகளை அரசு பரிந்துரை செய்தால், இச்சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் அவர்களுக்கும் வழங்கப்படும்.

இவர்கள் மாடு தொடர்பாக எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நுழையவும், சோதனை செய்யவும், வண்டிகளை பரிசோதிக்கவும், மாடுகள் வெட்டுக்குப் போவதாகச் சந்தேகித்தால் அவற்றைக் கைப்பற்றவும் அதிகாரம் உண்டு. இச்சட்டத்தின்படி இவர்கள், ‘நல்லெண்ணத்துடன்’ எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து இவர்கள் மீது வழக்கோ, ஏனைய நீதித்துறை நடவடிக்கைகளோ மேற்கொள்ள முடியாது.

ஆக, இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வரும்போது மத மாற்றத் தடைச் சட்டம் போல பார்ப்பன இந்துமத வெறியர்கள் தங்களை எதிர்ப்பவர்களை ஏதோ ஒரு பொய் அல்லது அற்ப காரணத்தைச் சொல்லி சிறை வைக்க முடியும். மாடு – விவசாயம், பால், தொழில் என – பல்வேறு தொழில்களோடு சம்பந்தப்பட்டிருப்பதால் போலீசுக்கு மாமூல் வருவாய் பெருகும். காக்கி – காவி கூட்டணி உறுதிப்படும். முக்கியமாக, இச்சட்டத்தின்படி முழு இந்திய சமூகத்தையும் தண்டிக்க முடியும்.

பால்சுரக்க ஊசிபோடும் பால்காரர், மாட்டுக்கு வைத்தியம் பார்க்க வசதியில்லாத விவசாயி, வண்டி மாடுகளை அடிக்கும் வண்டிக்காரர், அடிமாடுகளை விற்கும் விவசாயிகள், வாங்கி விற்கும் வியாபாரிகள், வெட்டும் தொழிலாளிகள், கறிக்கடைக்காரர்கள், தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டிருப்போர் ஆகியோர் அனைவருமே கண்காணிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளாகி விடுவார்கள்.

பசுவதைத் தடைச்சட்டம் என்பது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒத்திருப்பதை எண்ணி வியப்படையத் தேவையில்லை. இரண்டிற்கும் பெயர்தான் வேறு; இலக்கு ஒன்றுதானே!

– பாலன்

– அக்டோபர் 2003, புதிய கலாச்சாரம்