privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்எல்லை மீறுவதுதான் தீண்டாமைக் கொடுமையா ?

எல்லை மீறுவதுதான் தீண்டாமைக் கொடுமையா ?

-

ந்தக் காலத்தில் இப்படியொரு கொடுமையா என்று நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இந்துவெறி பா.ஜ.க. ஆளும் ம.பி. மாநிலத்தில் நடந்துள்ள தீண்டாமைக் கொடூரம்.

தீண்டாமைக் கொடுமைம.பி.யின் சத்தர்பூர் மாவட்டத்திலுள்ள கணேஷ்புரா கிராமத்தில் கடந்த ஜூன் 13 அன்று, பொதுக் குழாயில் ஒரு தாழ்த்தப்பட்ட சிறுமி தண்ணீர் பிடிக்கச் சென்றபோது, அந்த வழியாகச் சென்ற புரான் யாதவ் என்ற ஆதிக்க சாதிவெறியனது டிபன் பாக்ஸ் மீது அந்தச் சிறுமியின் நிழல் விழுந்ததாம். அதனால் அவனது உணவு தீட்டுப்பட்டுவிட்டதாம். அதைத் தொடர்ந்து, அந்த ஆதிக்கசாதி வெறியனின் மனைவியும் குடும்பத்து பெண்களும் திரண்டு அச்சிறுமியை நடுத்தெருவில் இழுத்துப்போட்டு மிருகத்தனமாகத் தாக்கி, இனிமேல் தண்ணீர் எடுக்க பொதுக்குழாய் பக்கம் வந்தால் உன்னைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இத்தாக்குதலின்போது, அமைதியான பார்வையாளர்களாக இருந்த அப்பகுதிவாழ் ஆதிக்க சாதியினருக்கு இது சமூகக் கொடுமையாகவே தெரியவில்லை. அதன் பிறகு, ஆதிக்க சாதியினரின் அச்சுறுத்தலையும் மீறி அச்சிறுமியுடன் அவரது தந்தை போலீசில் புகார் கொடுத்ததாலேயே இந்த கொடுஞ்செயல் வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது.

இது ஏதோ விதிவிலக்கான விவகாரமல்ல. நாடெங்கும் தொடரும் தீண்டாமைக் கொடுமையின் துலக்கமான வெளிப்பாடுதான் இது. தாழ்த்தப்பட்ட பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவங்கள் கடந்த மே மாதத்தில் உ.பி, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் அடுத்தடுத்து நடந்துள்ளன. மகாராஷ்டிராவின் அஹமத் நகர் மாவட்டத்தின் ஷிரடி நகரில், கடந்த மே மாதத்தில் சாகர் ஷேஜ்வால் என்ற ஒரு தலித் இளைஞர், அம்பேத்கரைப் போற்றும் பாடலை செல்போனின் ரிங்டோனாக வைத்திருந்த குற்றத்துக்காக மராத்தா சாதிவெறியர்களால் அடித்து உதைக்கப்பட்டு, மோட்டார் சைக்கிள் ஏற்றி கொல்லப்பட்டார். உயர் கல்விக்கான இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் நுழைவுத் தேர்வில் தாழ்த்தப்பட்ட கூலித்தொழிலாளியின் இரண்டு மகன்கள் தெரிவு செய்யப்பட்டதைச் சகித்துக் கொள்ள முடியாமல், உ.பி. மாநிலத்தின் பிரதாப்கார் கிராமத்திலுள்ள அவர்களது வீட்டின் மீது ஆதிக்க சாதிவெறியர்கள் கல்லெறித் தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

இவற்றையெல்லாம் அதிர்ச்சியூட்டும் விவகாரமாகப் பார்க்கும் சமுதாயம்தான், கோயில்களில் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருப்பதையும், சவ ஊர்வலத்திற்கு தாழ்த்தப்பட்டோரை பறையடிக்கச் சொல்வதையும், சவ அடக்க வேலைகளை தாழ்த்தப்பட்டோரைச் செய்ய வைப்பதையும், வாடகைக்கு வீடு கேட்டால் நீங்கள் சைவமா, அசைவமா என்று வீட்டு உரிமையாளர்கள் நைச்சியமாக விசாரிப்பதையும் இயல்பான சமூகப் பழக்கவழக்கங்களாக ஆதிக்க சாதி மனோபாவத்துடன் அணுகுகிறது. நவீன காலத்திலும் இத்தகைய சாதியாதிக்கத்தை சகஜமான சமூகப் பழக்கவழக்கங்களாகவும் பாரதப் பண்பாடாகவும் போற்றி, அதனைக் கட்டிக்காக்கும் வேலையை இந்துவெறி ஆர்.எஸ்.எஸ் செய்து வருகிறது.

சாதியத்துக்கும் தீண்டாமைக்கும் எதிராக நிற்க வேண்டிய அரசோ, துப்புரவு வேலைகளை தாழ்த்தப்பட்டோர் மட்டுமே செய்ய வேண்டுமென நிர்பந்திப்பதோடு, மாட்டுக்கறிக்குத் தடைவிதித்து சாதியாதிக்கத்தை மேலிருந்து சட்டபூர்வமாக நிலைநாட்டுகிறது. ஒரு அளவுக்கு மேல் சாதிய அடக்குமுறைகள் போகக்கூடாது என்றும், அந்த அளவைத் தாண்டுவதைத்தான் அதிர்ச்சியூட்டும் தீண்டாமைக் கொடுமையாகவும் அரசும், ஓட்டுக் கட்சிகளும், ஊடகங்களும் பார்க்கின்றன. அளவோடு தொடரும் தீண்டாமையை இயல்பான சமூக பழக்கவழக்கமாக அங்கீகரிக்கும் மனோநிலைக்கு மக்களைப் பழக்கப்படுத்தி, மிதவாத சாதியத்தைக் கட்டிக் காக்கின்றன. இந்நிலையில், தொடரும் தீண்டாமையை இயல்பான சமுதாயப் பழக்கவழக்கமாக அங்கீகரித்துக் கொண்டு, இதனை நாகரிகமிக்க சமுதாயம் என்று நாம் இன்னமும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியுமா?
_____________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2015
_____________________________