privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மேகி நூடுல்ஸ் - பால வித்யா மந்திர் - டி.எஸ்.பி தங்கவேல்

மேகி நூடுல்ஸ் – பால வித்யா மந்திர் – டி.எஸ்.பி தங்கவேல்

-

மூன்று சம்பவங்கள், ஒரு உண்மை!

தொடர்பற்றவை போலத் தோன்றும் விசயங்கள் தொடர்பற்றவையாக இருப்பதில்லை. தனித்தனியானவை போலத் தெரிகின்ற விசயங்கள் வேறு வேறு உண்மைகளைச் சொல்வதுமில்லை. மாகி நூடுல்ஸுக்குத் தடை, பால வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளிக்கு எதிரான பெற்றோர்-ஆசிரியர் போராட்டம், செம்மரக் கடத்தல் மற்றும் கொலையில் ஒரு டி.எஸ்.பி ஈடுபட்டிருப்பது ஆகிய இம்மூன்று செய்திகளும் சென்ற மாதம் வெளியானவை. மேல் தோற்றத்தில் தொடர்பற்றவை போலத் தோன்றினாலும், ஒருங்கிணைந்த முறையில் பார்க்கும்போது, இவை இந்த அரசமைப்பின் தோல்வியை வெவ்வேறு கோணங்களில் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

***

மேகி தடை ஆர்ப்பாட்டம்
நெஸ்லே தயாரிப்பான மாகி நூடுல்ஸை முற்றிலுமாகத் தடை செய்யக் கோரி கொல்கத்தாவில் சி.பி.டி.ஆர் என்ற மனித உரிமை அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டம்.

மாகி நூடுல்ஸ், நெஸ்லே என்ற ஸ்விஸ் பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்பு. இதன் விற்பனை ஆண்டுக்கு சுமார் 2000 கோடி ரூபாய். 2014 மார்ச் மாதம் உ.பி. மாநிலம் பாராபங்கி நகரின் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மாகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளைச் சோதனையிட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் பாதுகாப்புக்கான நிர்வாக அதிகாரி வி.கே.பாண்டே, அதில் அனுமதிக்கப்பட்ட அளவான 2.5 பி.பி.எம்.ஐ விட அதிகமாக, 17.2 பி.பி.எம். அளவிற்கு காரீயம் கலந்திருப்பதைக் கண்டுபிடித்து, இதனை உறுதி செய்யும்பொருட்டு கோரக்பூரிலுள்ள பிராந்திய சோதனைக்கூடத்துக்கு அனுப்பினார். காரீயம் மட்டுமின்றி, சாப்பிடுபவர்களின் நாக்கை அடிமையாக்கும் நச்சு வேதிப்பொருளான மோனோ சோடியம் குளூடோமேட் என்ற அஜினமோட்டோவும் இதில் கலந்திருப்பதாக கோரக்பூர் சோதனைக்கூடம் கூறியது. நெஸ்லே நிறுவனம் இதனை ஏற்க மறுத்து, சென்ற ஜூலை, 2014-ல் கொல்கத்தாவில் உள்ள மத்திய உணவு ஆய்வுக்கூடத்துக்கு மேல் முறையீடு செய்தது. கொல்கத்தா ஆய்வுக்கூடமும் மேற்கூறிய முடிவை உறுதி செய்ததைத் தொடர்ந்து, சென்ற மாதம் உ.பி. மாநிலம் முழுவதும் மாகி பாக்கெட்டுகள் கடைகளிலிருந்த அகற்றப்பட்டன.

ஒரு ஆண்டுக்கு முன்னரே தொடங்கிய இந்தப் பிரச்சினை, இப்போதுதான் வெளியே வந்திருக்கிறது.

“அளவுக்கு அதிகமாக காரீயம் கலந்திருப்பது, அஜினமோட்டோவை சேர்த்து விட்டு, சேர்க்கப்படவில்லை என்று பாக்கெட்டில் அச்சிட்டிருப்பது, மாகி ஓட்ஸ் மசாலா நூடுல்ஸ் – என்ற சோதனைக்குட்படுத்தி ஒப்புதல் பெறப்படாத பொருளை விற்பனைக்கு விட்டது” ஆகிய மூன்று முறைகேடுகளைக் காட்டி, தில்லியில் உள்ள இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), மாகி பாக்கெட்டுகளைச் சோதனைக்கு உட்படுத்துமாறு மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர்களுக்கு அறிவுருத்தியது. மக்களின் கோபத்துக்கு வடிகாலாக, பல மாநில அரசுகள் மாகி பாக்கெட்டுகளை கடைகளிலிருந்து அகற்ற உத்தரவிட்டிருக்கின்றன.

பானி பூரி எச்சரிக்கை - இரட்டை வேடம்
“மாகி நூடுல்ஸ் பிரச்சனை கிடக்கட்டும், டெல்லி தெருக்களில் விற்கப்படும் பானிபூரியில் உள்ள மலம் கலந்த தண்ணீர் டைபாய்டை உருவாக்கும்” எனத் தரநிர்ணய ஆணையம் தனது இணையத்தில் எச்சரிக்கிறது. பொது மக்களின் மீது ரொம்பத்தான் அக்கறை!

இருந்தபோதிலும், தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை நெஸ்லே நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லை. முன்னர் கோக், பெப்சியில் பூச்சி மருந்து அளவுக்கதிகமாக கலந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது, இந்தியாவின் நிலத்தடி நீரிலேயே பூச்சி மருந்து அதிகமிருக்கிறது, அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று அந்நிறுவனங்கள் திமிராகப் பதிலளித்ததைப் போல, இந்தியாவில் விளையும் வெங்காயத்தில் அதிக அளவுக்கு காரீயம் கலந்திருப்பதால், அந்த வெங்காயத்தை மூலப்பொருளாகப் பயன்படுத்தும் மாகியிலும், காரீயம் அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறுகிறது நெஸ்லே. அதுமட்டுமல்ல, அஜினமோட்டோவைப் பயன்படுத்தக்கூடாது என்று இந்திய அரசின் எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறது.

மாகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை கடைகளிலிருந்து அப்புறப்படுத்தியதையே நெஸ்லேக்கு விதிக்கப்பட்ட மாபெரும் தண்டனை போலச் சித்தரித்துக் காட்டி, உணவில் நஞ்சுவைத்த கொடுங்குற்றத்திலிருந்து நெஸ்லே நிறுவனத்தை விடுவிக்கின்றது அரசு. இயல்பிலேயே பன்னாட்டு நிறுவனச் சார்பு கொண்டவையும், நெஸ்லே போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களால் பெரும் ஆதாயம் அடைபவையுமான ஊடகங்கள் இந்த விசயத்தில் அரசுக்கு எதிராகவோ, நெஸ்லேவுக்கு எதிராகவோ கேள்வி எழுப்புவதில்லை.

பாக்கெட் உணவு விளம்பரங்களுக்குப் பலியாகாமல் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்வது பெற்றோரின் பொறுப்பு என்று கூறி சாமர்த்தியமாகப் பிரச்சினையைத் திசை திருப்புகின்றன. இத்தகைய நச்சுப் பொருட்களின் விற்பனையை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் அரசையும், உணவுப் பொருட்களின் தரக்கட்டுப்பாட்டுக்குப் பொறுப்பேற்க வேண்டிய அதிகார வர்க்கத்தையும் குற்றத்திலிருந்து விடுவிக்கின்றன ஊடகங்கள்.

உணவு உற்பத்தியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சிறு தொழிலாகவும், குடிசைத் தொழிலாகவும் நொறுக்குத் தீனிகளைத் தயாரிப்போரைச் சந்தையில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு தரச் சட்டத்தை எதிர்த்து தமிழக உணவுப் பொருள் உற்பத்தியாளர் சங்கம் மதுரையில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

320 கோடி மதிப்புள்ள மாகி பாக்கெட்டுகளை சிமென்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக கொடுத்திருக்கிறது நெஸ்லே. இப்படி செய்வதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை என்பதே உண்மை. இருந்த போதிலும், தங்கள் பொருளில் எந்தக் குற்றமும் இல்லை என்ற போதிலும், வாடிக்கையாளர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றும் பொருட்டு, தாங்கள் செய்திருக்கும் Kதியாகமாக” இதனைச் சித்தரித்துக் கொள்கிறது நெஸ்லே.

***

சென்னை அடையாறில் உள்ள பால வித்யா மந்திர், உயர் நடுத்தர வர்க்கத்தினரின் பிள்ளைகள் படிக்கின்ற சி.பி.எஸ்.இ. பள்ளி. வர்க்கம், போராட்டம் போன்ற சொற்களையே கட்டோடு வெறுப்பவர்களான இந்த வர்க்கத்தினருக்கு, வர்க்க ஏற்றத்தாழ்வு தோற்றுவிக்கும் அவமதிப்பு எத்தகையது என்பதை உணர்த்தியிருக்கிறது இந்தப் பள்ளியின் நிர்வாகம்.

நீதிபதி சிங்காரவேல் கமிட்டி நிர்ணயித்திருக்கும் கட்டணத்தைப் போல மூன்று மடங்குக்கு மேல் கட்டணம் வசூலிக்கிறது இந்தப் பள்ளி. வசூலிக்கும் தொகைக்கு ரசீது தருவதில்லை. தாமதமாகப் பணம் கட்டினால் நாளொன்றுக்கு 500 ரூபாய் அபராதம். 12-ம் வகுப்பு முடித்தவுடன் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நுழைவதற்குத் தயார்படுத்துவதற்காக மெரிட்டஸ் என்றவொரு வகுப்பு – அதற்கு ஆண்டுக்கு 90,000 ரூபாய். பாதியில் வேண்டாமென்று கருதினாலும் 1.8 லட்சத்தையும் கட்டியாக வேண்டும். இப்படிப்பட்ட கொள்ளைகள் எல்லை மீறிப் போகவே, அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்குமாறு பெற்றோர் மத்தியில் கோரிக்கைகள் எழத்தொடங்கின.

உடனே பள்ளி நிர்வாகம், பெற்றோருக்கு கீழ்க்கண்டவாறு சுற்றறிக்கை அனுப்பியது.

“சிங்காரவேல் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தைக் கட்டும் பெற்றோர், கட்டணத்தை பள்ளிக்கு வந்து வரிசையில் நின்று கட்டவேண்டும். அந்த மாணவர்களுக்கு அரைநாள்தான் வகுப்பு நடத்தப்படும். கேன்டீனில் சாப்பிட முடியாது. கழிவறை பயன்படுத்தவும் கட்டுப்பாடு உண்டு. விளையாட்டுப் பயிற்சி கிடையாது.”

நிர்வாகம் சொல்கின்ற கட்டணத்தை செய்லுத்தும் பெற்றோர் கியூவில் நிற்க வேண்டியதில்லை. ஆன்லைனில் பணம் கட்டலாம். மாலை 3.40 வரை வகுப்பு உண்டு. அம்மாணவர்களுக்கு கேன்டீன், கழிப்பறை வசதி உண்டு. விளையாட்டு, நடனப் பயிற்சியுடன், 59 வகை கல்விச் சேவைகள் வழங்கப்படும்.”

சினிமா கொட்டகைகளின் பெஞ்சு டிக்கெட்டை விடவும், ஓட்டல்களில் போடப்பட்ட ஜனதா சாப்பாட்டை விடவும் கேவலமான முறையில் மாணவர்களை இழிவுபடுத்திய இந்த சுற்றறிக்கையை அந்தப் பள்ளியின் ஆசிரியர்களாலேயே சீரணிக்க முடியவில்லை. வித்யா மந்திர், டி.ஏ.வி. பத்மா சேஷாத்ரி போன்ற பள்ளிகளை அக்கிரகாரங்கள் – மேட்டுத்தெருக்களாகவும், அரசுப் பள்ளிகளைச் சேரிகளாகவும் மாற்றியிருக்கும் கல்வி தனியார்மயம் என்ற புதிய வருணாசிரமக் கொள்கையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்களான இப்பள்ளி மாணவர்களின் பெற்றோர், வர்க்க ரீதியான அவமதிப்பின் அநாகரிகத்தைப் பட்டுத் தெரிந்து கொண்டார்கள். பால வித்யா மந்திரை நடத்தும் பிராமணோத்தமர்கள், கல்வி வியாபாரிகளாக அவதரித்திருக்கும் சாராய வியாபாரிகளைப் போலவே ரவுடித்தனமாக நடந்து கொள்வதை அதிர்ச்சியுடன் எதிர்கொண்டார்கள்.

பால வித்யா மந்திர் ஆர்ப்பாட்டம்
அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வாங்கக் கோரிய மாணவர்கள் – பெற்றோர்களைக் கீழ்த்தரமாக அவமதித்த பால வித்யா மந்திர் நிர்வாகத்தைக் கண்டித்து பெற்றோர்களும், அப்பள்ளி ஆசிரியர்களும் பள்ளியின் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டம்.

ஆம். மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு காட்டக்கூடாது என்று கூறிய பள்ளியின் தலைமை ஆசிரியர், தலைமை நிர்வாக அதிகாரி மட்டுமின்றி, 8 ஆசிரியர்களும் அங்கிருந்து பள்ளியின் வேறு கிளைக்கு தூக்கியடிக்கப்பட்டார்கள். ஒரு வார காலம் போராட்டம் தொடர்ந்ததன் விளைவாக சிங்காரவேல் கமிட்டியும் சி.பி.எஸ்.இ. அதிகாரிகளும் தலையிட நேர்ந்ததாலும், தவிர்க்கவியலாமல் பள்ளி நிர்வாகம் ஊடகங்களில் அம்பலமாகிவிட்டதாலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிப்பதாக நிர்வாகம் ஒப்புக்கொள்ள நேர்ந்தது.

இருப்பினும், இதன் பிறகு பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்திருக்கும் பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர் சி.எச்.ராம், “அரசு சொல்லும் கட்டணத்தை வசூலிப்போம். அதே நேரத்தில் இந்தக் கட்டணக் குறைப்பின் காரணமாக, ஆசிரியர்களைக் குறைப்போம். அவர்களுடைய சம்பளத்தைக் குறைப்போம். சிறப்பு வகுப்புகளைத் தனியே நடத்துவோம்” என்று கூறியிருக்கிறார். முடிவில் வெற்றி பெற்றிருப்பது தனியார் பள்ளியா, அரசின் மேலாண்மையா?

***

ம்பூருக்கு அருகிலுள்ள பாலூரைச் சேர்ந்த செம்மரக் கடத்தல் பேர்வழியான பா.ம.க. வைச் சேர்ந்த சின்னபையன் என்பவரை மிரட்டி, அவரிடமிருந்து 7 டன் செம்மரக் கட்டைகளைப் பிடுங்கியது மட்டுமின்றி, அவரைக் கூலிப்படையை அமர்த்திக் கொலையும் செய்திருக்கும் பலே கிரிமினல், வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. தங்கவேல் என்பது அம்பலமாகிவிட்டது.

செம்மரக் கடத்தல் டி.எஸ்.பி தங்கவேலு
செம்மரக் கடத்தல் மற்றும் கொலைக் குற்றங்களுக்காக் கைது செய்யப்பட்டுள டி.எஸ்.பி தங்கவேலுவை அரசு வி.ஐ.பி. போல அழைத்துச் செல்லும் தமிழக போலீசு.

“டி.எஸ்.பி. தங்கவேலுதான் செம்மரங்கள் எப்போது வரும் என்பது பற்றியும், அவற்றை வெளியே அனுப்புவது பற்றியும் எங்களுக்குச் சொல்வார். சின்னப்பையன் கொலை விசயத்திலும் டி.எஸ்.பி. சொன்னதைத்தான் செய்தோம்” என்று இந்தக் கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருக்கும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நாகேந்திரன் மற்றும் அவரது மனைவி ஜோதிலட்சுமி ஆகியோர் ஆம்பூர் போலீசிடம் வாக்குமூலம் தந்திருக்கின்றனர்.

இந்தத் தகவலை உடனே தங்கவேலுவுக்கு சொல்லி, தலைமறைவாவதற்கு ஏற்பாடு செய்து விட்டு, முன் ஜாமீனுக்கும் மனுப்போட்டு விட்டு, குற்றவாளியை வலைவீசித் தேடுவதாக அறிவித்தது ஆம்பூர் போலீசு. 12 நாட்களுக்கு மேல் இந்த நாடகத்தை நடத்த முடியாமல் போகவே, வேறு வழியின்றி தங்கவேலு கைது செய்யப்பட்டார்.

தங்கவேலுவின் முகம் பத்திரிகை காமெராக்களில் பதிவாகிவிடக் கூடாது என்பதற்காகத் திட்டமிட்டே இரவு நேரத்தில் அவரை நீதிபதி வீட்டுக்கு ஆட்டோவில் கொண்டு வந்து இறக்கிய ஆம்பூர் போலீசு, நீதிபதியின் வீட்டைச் சுற்றி விளக்கை அணைத்து இருட்டாக்கியது. வாசல் வழியாக நுழையாமல் கொல்லைப்புறமாக நுழைந்தது. ஒரு கான்ஸ்டபிள் தயாராக குனிந்து நிற்க, அவர் முதுகில் பச்சைக்குதிரையேறி காம்பவுண்டு சுவரைத் தாண்டிக் குதித்த தங்கவேலுவை, தயாராக நின்ற இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றது போலீசு. இருப்பினும் இத்தனையும் தாண்டி ஊடகங்கள் தங்கவேலுவைப் படம் பிடித்து விட்டன.

அடுத்தமுறை நீதிமன்றத்துக்கு வந்த தங்கவேலு ஒளிந்து மறைந்து வரவில்லை. போலீசாருக்கு, தலைமை தாங்கி செல்லும் தோரணையில், கைகளை, அங்கும், இங்குமாக நீட்டி, ’ஜாலி’யாக பேசியபடி அந்தக் கிரிமினல் நடந்து சென்றதையும், போட்டோவுக்கு போஸ் கொடுத்ததையும், அவர் பின்னால், போலீசார், ’பவ்யமாக’ நடந்து சென்ற காட்சியையும் பத்திரிகைகள் விவரித்தன.

விசாரணையின் போது, 4 அ.தி.மு.க. பிரமுகர்கள், 11 போலீசு அதிகாரிகள், 12 வனத்துறை அதிகாரிகள், 10 கடத்தல்காரர்கள் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக முதலில் சொன்ன தங்கவேலு, அடுத்த சில நாட்களில் போலீசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று சாதித்திருக்கிறார்.

இந்த வழக்கில் பல லட்சம் ரூபாய் கை மாறி தங்கவேலுவைக் காப்பாற்றுவதற்கான வேலைகள் நடைபெறுவதாக வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறார் செம்மரக் கட்டைகள் கடத்தல் பிரிவைச் சேர்ந்த ஆந்திர டி.எஸ்.பி. வெங்கடேஸ்வரன். தங்கவேலுவை விசாரித்து வரும் தனிப்படையினர் யார் தெரியுமா? அவருடன் ஒரே பேட்ச்சில் பயிற்சி பெற்ற, ஒண்ணாக உட்கார்ந்த சரக்கடித்த அங்காளி பங்காளிகள்தான் அவரை விசாரித்து வரும் தனிப்படை!

***

மேற்சொன்ன மூன்று சம்பவங்களிலிருந்தும் தெரியவரும் உண்மைகள் என்ன? உணவுத் தரக் கட்டுப்பாட்டுத் துறையாகட்டும், கல்வித்துறையாகட்டும், போலீசாகட்டும் – அரசின் இந்த உறுப்புகள் எதுவும் தாமே கூறிக்கொள்ளும் நோக்கங்களை இம்மியளவும் நிறைவேற்றுபவையாக இல்லை.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) என்று மிகவும் டாம்பீகமாகப் பெயர் வைத்துக் கொண்டிருந்த போதிலும், நெஸ்லே, பிரித்தானியா போன்ற நிறுவனங்கள் இந்த அமைப்பின் சோதனைச்சாலையில் சான்றிதழ் பெற்றால்தான் பொருளை சந்தைப்படுத்த முடியும் என்று சட்டமே இல்லை. இந்த நிறுவனங்கள் தமது சோதனைச்சாலைகளில் சோதித்துப் பார்த்து விட்டதாகக் கூறி தருகின்ற சான்றிதழுக்கு கீழே இந்த ஆணையம் கையெழுத்து மட்டுமே போடுகிறது.

இந்த அமைப்பிடம் இருப்பவை வெறும் 4 சோதனைச்சாலைகள். மாநில அரசுகளிடமும் போதிய சோதனைச்சாலைகள் கிடையாது. ஒரு ஒப்பீடு சொல்லவேண்டுமானால், சீனாவில் 2 லட்சம் பேருக்கு ஒரு உணவுத்தர சோதனைச்சாலை. இந்தியாவிலோ சுமார் ஒரு கோடிப் பேருக்கு ஒன்று என்ற அளவிலேயே உள்ளது. அதேபோல, Kதங்களது விளம்பரங்கள் உண்மையானவை” என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் உறுதிமொழியை அரசு அங்கீகரிக்கிறதே தவிர, பொய்யான விளம்பரங்களைச் சோதிக்கவோ, தண்டிக்கவோ கூட சட்டங்கள் இல்லை.

அப்படியே இதனை வித்யா மந்திர் விவகாரத்துடன் பொருத்திப் பாருங்கள். சிங்காரவேல் கமிட்டி கூறும் கட்டணத்துக்கு மேல் வசூலிக்காத தனியார் பள்ளி இருக்கிறதா? மழலையர் வகுப்புக்கே ஒரு லட்சம் என்ற அளவுக்கு கல்விக் கொள்ளை சிரிப்பா சிரித்த போதிலும், எந்தப் பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை.

அடுத்து, இந்தக் கமிட்டிகளாலும் ஆணையங்களாலும் கட்டுப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்று சொல்லப்படுவோர்தான், இந்த ஆணையங்களை மறைமுகமாகக்கூட அல்ல, நேரடியாகவே கட்டுப்படுத்துகின்றனர்.

கோலா பானங்களில் பூச்சி மருந்துகளும் நச்சு வேதிப்பொருட்களும் அளவுக்கதிகமாக இருப்பதை, அறிவியல் மற்றும் சுற்றுச் சூழலுக்கான மையம் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, இத்தகைய உணவுப் பொருட்களை சோதிக்கவும் கண்காணிக்கவும் 2006-ல் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் இயற்றப்பட்டு, அதற்கான ஆணையமாக FSSAI உருவாக்கப்பட்டது. உணவு மாதிரிகளைச் சோதிக்கும் குழு, அறிவியல் குழு, விளம்பரக் கண்காணிப்பு குழு போன்ற குழுக்கள் இந்த ஆணையத்தால் நியமிக்கப்பட்டன. அந்தக் குழுக்களில் நிரம்பியிருந்தவர்கள் கோக், நெஸ்லே, யூனிலிவர், ஐ.டி.சி., பிரிட்டானியா போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளின் அதிகாரிகள். அதாவது குற்றவாளிகள்தான் கண்காணிப்பாளர்கள்!

சமச்சீர் பாடத்திட்டம் வேண்டுமா, வேண்டாமா என்று தீர்மானிக்க, தனியார் மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளி நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டதைப் போல! டி.எஸ்.பி தங்கவேலுவை விசாரிக்க ஏ.டி.எஸ்.பி.யோ, எஸ்.பி.யோ நியமிக்கப்பட்டிருப்பதைப் போல!

இவ்வாறு அமைக்கப்படும் குழுக்களின் மூலம் அரசு குற்றவாளிகளை விடுவிக்கின்றது. சட்டப்படி குற்றம் என்று கருதப்பட்டவற்றை இனி சட்டபூர்வமானதென்றும் மாற்றுகின்றது.

சான்றாக, தமிழகத்தில் ஜுன் 1,1976-க்கு முன் மதுரை, சென்னை பல்கலைக்கழகங்களிடம் அங்கீகாரம் பெற்றிருந்த சுமார் 40 மெட்ரிக் பள்ளிகளைத் தவிர, தமிழகத்தில் தற்போது இயங்கும் ஆயிரக்கணக்கான மெட்ரிக் பள்ளிகள் முதல் மழலையர் பள்ளிகள் வரையிலான அனைத்தும் சட்டவிரோதமானவை என்றும், இந்தப் பள்ளிகளை அங்கீகரிப்பதற்காகத் தமிழக அரசு இயற்றியிருக்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கான நெறிமுறைகளும் சட்டவிரோதமானது என்றும், பா.ம.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் வேலுசென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதனை மறுக்க முடியாத தமிழக அரசு, சட்டவிரோத மெட்ரிக் பள்ளிகள் முதல் மழலையர் பள்ளிகள் வரையிலான அனைத்தையும் சட்டபூர்வமாக்கும் வகையில் புதிய சட்டமியற்றுவதற்கு ஒரு ஆண்டு அவகாசம் கேட்டது. நீதிமன்றமும் அவகாசம் வழங்கியிருக்கிறது. (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 19.6.15)

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதே நோக்கம் என்று கூறிக்கொள்ளும் நீதிமன்றம், கல்விக் கொள்ளையைச் சட்டபூர்வமானதாக மாற்றுவதற்கு துணை நிற்கிறது. தனியார் கொள்ளையைத் தடுப்பதற்காக என்று கூறிக்கொண்டு அமைக்கப்பட்ட சிங்காரவேல் கமிட்டி, கொள்ளையர்களின் ஏஜெண்டாக இருந்து ஆண்டுதோறும் அவர்களுடைய கோரிக்கைக்கு ஏற்ப கட்டணத்தை ஏற்றிக் கொடுக்கிறது.

மோடியின் துணிச்சலான நடவடிக்கை என்பதைப் போல பெரிதும் பீற்றிக் கொள்ளப்படும் மாகி விவகாரத்தில், நெஸ்லேவுக்கு எதிராக அரசு கிரிமினல் வழக்கு ஏதும் தொடுத்திருக்கிறதா என்றால், இல்லை. நுகர்வோரின் சார்பாக தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் (NCDRC) முறையிட்டிருக்கிறது. இதைக்காட்டிலும் அயோக்கியத்தனம் வேறு இருக்க முடியாது.

அதே நேரத்தில், பாக்கெட் உணவுகளில் உப்பு, சர்க்கரை போன்றவை எந்த அளவு இருக்கலாம் என்று தீர்மானிக்க தர நிர்ணய ஆணையம் ஒரு நிபுணர் குழுவை அமைத்திருக்கிறது. இந்திய உணவுப் பொருள் சந்தையில் சிறு, நடுத்தர உற்பத்தியாளர்கள் செல்வாக்கு செலுத்துவதால், உணவுப் பொருட்களைத் தரப்பரிசோதனைக்கு உட்படுத்துதல் என்ற பெயரில், அவர்களை வெளியேற்றுவதும், பன்னாட்டு நிறுவன ஆதிக்கத்தை உத்திரவாதப் படுத்துவதும்தான், மாகி பிரச்சினையைச் சாக்கிட்டு அமைக்கப்பட்டிருக்கும் இந்த நிபுணர் குழுவின் நோக்கமாக இருக்கும் என்று நிச்சயமாக சந்தேகிக்கலாம்.

இத்தகைய சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதத்தில், மாகி நூடுல்ஸ் பிரச்சினை கிடக்கட்டும், “கையேந்தி பவன் பானி பூரியில் உள்ள மலம் கலந்த தண்ணீர் டைபாய்டை உருவாக்கும்” என்று எச்சரிக்கிறது தர நிர்ணய ஆணையத்தின் இணையதளம். மாநகராட்சிக் குழாய்களில் சாக்கடைத் தண்ணீர் வழங்கும் அரசு, கையேந்திபவனில் நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கிறதாம்!

உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம், போலீசு, பள்ளி கல்வித்துறை முதலான துறைகளும் சரி, அவற்றுக்கான நோக்கங்கள், விதிகள், நெறிகள் போன்றவையும் சரி – அனைத்தும் ஆளும் வர்க்கங்கள் தமது நலனுக்கேற்ப வடிவமைத்துக் கொண்டவைதான். இந்த நிறுவனங்களையும் விதிமுறைகளையும் எல்லா மக்களுக்கும் பொதுவானவை என்று பிரச்சாரம் செய்து நம்பவைப்பதன் மூலம்தான் மக்களிமிருந்து ஆள்வதற்கான நியாயவுரிமையைப் பெற்றிருக்கின்றன ஆளும் வர்க்கங்கள்.

ஆனால் அவர்கள், தாங்கள் உருவாக்கிய நிறுவனங்களையும் நெறிகளையும் தாங்களே மீறுகிறார்கள். இந்த அரசமைப்பின் வரம்புக்கு உட்பட்டு, இத்தகைய முறைகேடுகளைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியும், முன்னிலும் பெரிய முறைகேட்டுக்கு வழி வகுக்கிறது. ‘சட்டத்தின் ஆட்சி’ என்ற இடையூறைத் தகர்த்துத் தரைமட்டமாக்கியபடி, மத்திய அமெரிக்காவின் வாழைப்பழக் ‘குடியரசு’களின் நிலைக்கு வழுக்கிச் சரிகிறது ‘இந்திய ஜனநாயகம்’.

அடையாறு மேட்டுக்குடி வர்க்கம் தெருவுக்கு வந்ததும், கொலைக் குற்றவாளி பகிரங்கமாக போலீசின் முதுகில் பச்சைக்குதிரை தாண்டுவதும், உணவில் நஞ்சு கலந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கே தரநிர்ணய அதிகாரம் வழங்கப்படுவதும் இந்த அரசுக் கட்டமைவின் மக்கள் விரோதத் தன்மையை மட்டும் காட்டவில்லை. இந்திய ஆளும் வர்க்கத்தின் தோல்வியையும், அது ஆளும் அருகதை இழந்து நிற்பதையும் வெவ்வேறு கோணங்களில் பறைசாற்றுகின்றது.

– சூரியன்
_____________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2015
_____________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க