privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகிரீஸ் : பிச்சை எடுப்பதை விட போராடுவதையே விரும்புவேன்

கிரீஸ் : பிச்சை எடுப்பதை விட போராடுவதையே விரும்புவேன்

-

“பன்னாட்டு நிதி நிறுவனங்களுடனான பேச்சு வார்த்தையின் போது பிரதமர் சிலுவையில் அறையப்பட்டார்!”

“பிரதமர் மீது தண்ணீர் அடித்து (water boarding) சித்திரவதை!”

“பிரதமர் மண்டியிட்டு அடிபணிந்தார்!”

greece“நாடாளுமன்றத்தில் மசோதாக்களை தாக்கல் செய்வதற்கு முன்பு எங்களிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்று நிதி நிறுவனங்கள் நிபந்தனை”

“சுமார் ரூ 3.5 லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை நிறுவனங்களை எங்கள் வசம் பிணையாக ஒப்படைக்க வேண்டும். சரியான நேரத்தில் அவற்றை விற்று காசாக்கிக் கொள்வோம் என்று நிதி நிறுவனங்கள் கறார்.”

“எங்கள் விருப்பத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் – நிதி நிறுவனங்கள் அதிரடி.”

“நாட்டின் அனைத்து முக்கிய முடிவுகளும், வெளிநாட்டு தலைவர்களாலும், நிதித்துறை  அதிகாரவர்க்கத்தாலும் எடுக்கப்படும்.”

இவை கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராசுக்கு ஐரோப்பிய மத்திய வங்கியும் ஜெர்மனி தலைமையிலான ஐரோப்பிய நாடுகளும் இழைத்த அவமானம் குறித்து முதலாளித்துவ ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள்.

“ஐ.எம்.எஃப், உலக வங்கி போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டுவிப்பது பல ஆண்டுகளாக நடக்கும் விஷயம். ஆனால், இப்போது கிரீஸ் விஷயத்தில் அந்நாட்டு பொருளாதாரத்தை தாம் கட்டுப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நிதி நிறுவனங்கள் வெளிப்படையாகவே நிபந்தனை போட்டிருக்கின்றன” என்கிறார் கார்டியன் நாளிதழில் சுமாஸ் மில்னே என்ற பத்திரிகையாளர்.

“இவர்களுக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா? இந்த நடவடிக்கைகள் கடுமையானவை என்பதைத் தாண்டி பழிவாங்குவதாகவும், கிரீசின் இறையாண்மையை அழிப்பதாகவும், கிரேக்க பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான எந்த நம்பிக்கையையும் கொல்வதாகவும் உள்ளன. நான் எப்போதுமே போற்றிய, ஆதரித்த ஐரோப்பிய திட்டத்தின் மீது ஒரு பயங்கரமான, அது இறுதியானதாகக் கூட இருக்கலாம், தாக்குதல் நடந்திருக்கிறது” என்று புலம்புகிறார் நோபல் பரிசு பெற்ற பொருளியல் பத்திரிகையாளர் பால் குரூக்மேன்.

கிரீஸ் பிரதம் சிப்ராஸ்
கிரீஸ் பிரதமர் சிப்ராஸ்

“இந்த நடவடிக்கைகள் கடுமையானவை என்று ஒத்துக் கொள்கிறேன். நான் அவற்றை  ஆதரிக்கவில்லை. அவை கிரேக்க பொருளாதாரத்துக்கு உதவும் என்று நான் கருதவில்லை. ஆனால், எனக்கு வேறு வழியில்லை. இதை ஏற்று அமல்படுத்த வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன்” ஜூலை 15-ம் தேதி கிரீஸ் நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டு பேசிய பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸின் சோக வசனம்.

2010-ம் ஆண்டு ஆரம்பமான எலும்பை முறிக்கும் பொருளாதாரச் சுரண்டலை எதிர்த்து கிரீஸ் மக்கள் கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தலில், ‘இடது சாரி’ சிரிசா கட்சியை தேர்ந்தெடுத்தனர். அக்கட்சியைச் சேர்ந்த அலெக்சிஸ் சிப்ராஸ் தலைமையிலான அரசு கடன் மறுசீரமைப்பு, மக்கள் மீதான சுமையை குறைத்தல் ஆகியவற்றுக்கு சர்வதேச கந்து வட்டி கடன் நிறுவனங்களிடம் கடந்த 6 மாதங்களாக பேச்சு வார்த்தை நடத்தியது. இறுதிக் கெடுவாக நிதியாதிக்க கும்பல் முன்வைத்த மேலும் வாழ்வாதார பறிப்பு, வரி உயர்வு, தனியார்மயம் அடங்கிய ஒப்பந்ததை கிரீஸ் மக்கள் ஜூலை 5-ம் தேதி நடந்த நாடு தழுவிய வாக்கெடுப்பில் நிராகரித்தனர்.

2010-லிருந்து 25% பொருளாதார சுருக்கம், உழைக்கும் மக்களில் 4-ல் ஒருவருக்கு வேலை இல்லை, இளைஞர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேலையற்றவர்கள் என்ற நிலையில் மக்களை நெருக்கும் நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதன் மூலம் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகமாகும்.

இதனால் கிரீஸ் யூரோ நாணயத்திலிருந்து வெளியேற்றப்படுவது உறுதியாகியிருக்கிறது. எத்தனை நாட்கள், எத்தனை வாரங்கள் அல்லது எத்தனை ஆண்டுகள் என்பதுதான் கேள்வி.

ஆனால், ஐரோப்பிய நிதி நிறுவனங்களுடனான பேச்சு வார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படா விட்டால் யூரோ நாணயத்தை கைவிடுவதற்கான திட்டத்தைக் கூட தயாரித்திருக்கவில்லை சிப்ராஸ் அரசு. எப்படியாவது கிரீசை ஏகாதிபத்தியக் கட்டமைவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இருந்த சிப்ராஸ் பேச்சுவார்த்தையில் அவமானப்படுத்தப்பட்டு அடிபணிய வைக்கப்பட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தின்  உறுப்பினரான கிரீஸ் ஒரு காலனிய அடிமை நாடு போல நடத்தப்பட்டது. அந்நாட்டு மக்கள் நிதி நிறுவனங்களின் கொள்ளைத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்ததற்காக அந்நாட்டு பொருளாதாரம் அழிக்கப்பட்டு வருகிறது.

GreekCrisisImage“கிரீஸின் மொத்தக் கடன், நாட்டின் ஆண்டு உள்நாட்டு உற்பத்தியில் 200%-ஐ தாண்டி விடும். இத்தகைய கடன் சுமையை எந்த நாடும் தாங்க முடியாது. எனவே கடன்களைக் குறைப்பது (ரத்து செய்வது) பற்றி ஐரோப்பிய நாடுகள் பரிசீலிக்க வேண்டும்” என்று கந்து வட்டி கூட்டணியில் பங்கு பெற்றுள்ள ஐ.எம்.எஃப் அறிவுரை கூறியிருக்கிறது. “ரெண்டு காலையும், ரெண்டு கையையும் ஒடைச்சு விட்டால் எப்படி அவன் ஒழைச்சு கடனை அடைப்பான். கொஞ்ச நஞ்சம் உயிரை விட்டு வை” என்று புத்திசாலியாக யோசிக்கிறது, ஐ.எம்.எஃப்.

சிரிசா கட்சியின் 201 உறுப்பினர் கொண்ட மத்தியக் குழுவின் 110 உறுப்பினர்கள் சிப்ராசை கண்டனம் செய்து, இந்தக் கடன் ஒப்பந்ததை நிராகரிக்கும்படி அறிக்கை விட்டனர். கடன்காரர்களின் விருப்பப்படி பதவியிலிருந்து நீக்கப்பட்ட கிரீஸின் முன்னாள் நிதி அமைச்சர் வரோஃபகிஸ், “வாகை சூடிய வெற்றியாளர்களாக தங்களை அடிமை கிரீஸ் அரசு வரவேற்க வேண்டும் என ஐரோப்பிய நிறுவனங்கள் உத்தரவிட்டிருக்கின்றன” என்கிறார்.

அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற சபாநாயகர் ஜோ கான்ஸ்டான்டாபோலோ சிப்ராசின் வேண்டுகோளின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். நிதித்துறை துணை அமைச்சர் நாடியா வலவானி, “இத்தகைய கொடூரமான நடவடிக்கைகளை அமல்படுத்த முனைந்து நிற்கும் அரசாங்கத்தில் தான் தொடர முடியாது” என்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.  நிதி அமைச்சக செயலர் ஜெனரல் மானோர் மானோசாகிசும் பதவி விலகினார்.

அரசு ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் சங்கங்களும் ஏதென்ஸ் தரையடி ரயில் தொழிலாளர்களும், நாடு தழுவிய ரயில்வே தொழிலாளர்களும் 24 மணி நேர வேலை நிறுத்தம் செய்தனர். இந்த ஒப்பந்தம் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்த போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நாடாளுமன்றத்தின் முன் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது கலவர கட்டுப்பாடு சிறப்பு போலீசை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது சிப்ராஸ் அரசாங்கம். இந்தக் கலவர கட்டுப்பாடு சிறப்பு போலீசை கலைப்பதாக வாக்களித்து ஆட்சிக்கு வந்தவர் சிப்ராஸ். தான் எதிர்த்த ஐரோப்பிய பொருளாதார நெரித்தலையே மக்கள் மீது அவிழ்த்து விடும் போது போலீசை ஏவுவதா பெரிய விஷயம்!

38 சிரிசா கட்சி உறுப்பினர்கள் நிதி நிறுவனங்களுடனான இந்த ஒப்பந்தத்துக்கு  நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவிக்க மறுத்து விட்டார்கள்.

இந்தச் சூழலில், ஜனவரி மாதம் தேர்தலில் தோற்றுப் போன, ஜூலை 5-ம் தேதி கருத்துக் கணிப்பில் ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும்படி பிரச்சாரம் செய்த எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் சிப்ராஸ் கிரீஸின் அடிபணிதலை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறார்.

‘தென் அமெரிக்க நாடுகளிலும், தெற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இடது சாரிகள் தேர்தலில் வெற்றி பெற்று வருகிறார்கள். உலகெங்கிலும் அமைதியான வழியில் சோசலிச புரட்சி நடந்து கொண்டிருக்கிறது’ என்று ஆர்ப்பரித்த சாய்வு நாற்காலி அறிவு ஜீவிகள் இப்போது அமைதியாகி விட்டார்கள். கிரீஸில் சிரிசாவாக இருந்தாலும், இந்தியாவில் போலி கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, ஏகாதிபத்திய தாக்குதலால் வெறுப்படையும் மக்களின் வாக்குகளைப் பெற்று ஒரு வேளை அதிகாரத்தைப் பிடித்து விட்டாலும், ஆட்சியில் அமர்ந்த பிறகு முதலாளிகளுக்கும், நிதி மூலதனத்திற்கும் அடிபணிந்து அவர்கள் காலை நக்கித்தான் தீர வேண்டும் என்பதை நடைமுறையில் நிரூபித்து நிற்கிறார் சிப்ராஸ்.

நியூயார்க் டைம்ஸில் பால் க்ரூக்மேன் கட்டுரையில் கருத்து தெரிவிக்கும் JPRasko என்ற ஏதென்சைச் சேர்ந்த இளைஞர் இப்படி சொல்கிறார்.

JPRasko ஏதென்ஸ் July 13, 2015

திரு குரூக்மேன். உண்மைக்கும், நியாயத்துக்கும் இவ்வளவு உறுதியாக போராடுவதற்காக உங்களுக்கு நன்றி. நான் 28 வயதான ஒரு கிரேக்கக் குடிமகன்; அழகான ஒரு 8 மாத குட்டிப்பாப்பாவின் அப்பா. நான் அவளது எதிர்காலத்தை எண்ணி கவலைப்படுகிறேன். அடுத்து என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால், என்னால் சொல்ல முடிவது இதுதான்.

இந்தத் தருணத்தில் கிரீஸ் எதிர்கொண்டிருப்பது ஒரு போர். ஈவு இரக்கமற்ற ஒரு போர்.

கிரீஸ் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது என்னையும், எனது குடும்பத்தையும் இடி போலத் தாக்கும். கடந்த 10 ஆண்டுகளாக எதற்காக நாங்கள் கடுமையாக உழைத்தோமோ அவை அனைத்தும் ஒரே நொடியில் சாம்பலாகிப் போய் விடும்.

ஆனால்…, நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்… இதற்கு மேல் தாங்காது. இந்தக் கணத்தில் என்னுள் கோபம் கொதிக்கிறது. பிச்சை எடுக்கும் ஏழையாக வாழ்வதை விட போராடும் ஒரு ஏழையாக வாழ்வதையே நான் விரும்புவேன்.

உலகெங்கிலுமிருந்தும் இதைப் படிக்கக் கூடியவர்கள் எல்லோரிடமும் ஒரே ஒரு விஷயத்தை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

எங்கள் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட 7000 பேரின் குடும்பங்களுக்காக போராடுங்கள். எங்களது இந்தப் போராட்டத்தில் இணைந்து கொளுங்கள். கிரீசை கைவிட்டு விடாதீர்கள்.

– அப்துல்

மேலும் படிக்க:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க